Sister True Emptiness (கத்தோலிக்க அரசை எதிர்த்த ஒரு பெளத்த மாணவியின் கதை)
1963 ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிகாலையில், ராணுவத்தின் சில சிறப்புப் படைகள், நாடு முழுவதும் இருந்த பெளத்த இயக்கத்தின் முக்கியமான இடங்களைச் சுற்றி வளைத்தன. சுமார் 2000த்துக்கும் மேற்பட்ட துறவிகளையும் கன்யாஸ்திரிகளையும் அந்தந்தக் கோவில்களிலேயே வைத்து கைது செய்தார்கள். பெளத்தமதத்தைச் சார்ந்த முக்கியமான குடும்பத்தினரையும் அவர்கள வீடுகளிலேயே கைது செய்தார்கள். என் நண்பர்களும் கைது செய்யப்பட்டார்கள். சைகோனில் இருந்த க்ஸா லோய் கோவில், அன் க்வாங் பகோடா போன்ற முக்கியமான இன்னும் பல கோவில்களை போலீஸ் உடைத்து தூள்மட்டமாக்கியது. க்ஸா லோய் கோவிலில் இருந்த ஒரு துறவியை, சிறப்பான பேச்சாளரான தாய் கியாக் டுக் என்ற துறவியாக நினைத்து, அந்தக் கோவிலிலேயே அடித்துக் கொன்றது.
அந்த இரவு, 12 போலீஸ்காரர்கள் என் அக்காவான ஙா அவர்களது வீட்டுக்குச் சென்றது. அங்குதான் நான் 1962இலிருந்து வாழ்ந்து வருகிறேன். இருவர் கூரையில் ஏறினார்கள். இருவர் பின் கதவை மறித்து நின்று கொண்டார்கள். இருவர் உள்ளே வந்து வீட்டின் தலைவரைப் பார்க்க வேண்டும் என்றார்கள். ஒருவர் ‘இங்கே இருக்கும் கம்யூனிஸ்ட் தொல்லைக்காரனான மிஸ்டர் காவோ ஙோக் ஃபுங் அவர்களை கைது செய்ய வந்திருக்கிறோம் ‘ என்றார். என் அக்காளின் கணவர் ‘இங்கே யாரும் கம்யூனிஸ்ட் தொல்லைக்காரர்கள் இல்லை. மிஸ்டர் காவோ ஙோக் ஃபுக் அவர்களும் இல்லை. இங்கே காவோ ஙோக் ஃபுவாங் இருக்கிறாள். இவள் என் மைத்துனி. இவள் சைகோன் அறிவியல் கலைக்கூடத்தில் படிப்புச் சொல்லிக்கொடுக்கிறாள். எங்கள் குடும்பம் மிகுந்த மதிப்புவாய்ந்தது. நான் ங்குயென் ட்ருங் ஙோன். நான் சிவில் ஏரோனாடிக்ஸ் பிரிவில் அரசாங்கத்தில் தலைமைப் பொறியாளராக இருக்கிறேன். என் சகோதரன் ஙுயென் ட்ருங் ட்ருவாங், உள்நாட்டு அமைச்சகத்தில் சைகானில் உள்ள எல்லா போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும் தலைவராக வேலை செய்கிறான் ‘ என்றார். இரண்டு போலீஸ்காரர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு ‘நமது தலைவர் ‘ என்று சொன்னார்கள். மன்னிப்புக் கேட்டார்கள். என் சகோதரன் அவர்களை வாசல்வரை சென்று வழியனுப்பி வைத்தான். கூரையிலிருந்து இருவர் குதித்துஇறங்குவதையும் இன்னும் எட்டுபேர் வீட்டின் பல கோனைகளிலிருந்து வருவதையும் பார்த்தேன்.
மாலையில், அரசாங்க ஏஜெண்டுகள் என் நண்பர்களிடம் நான் தான் அவர்களைக் கம்யூனிஸ்ட்கள் என்று காட்டிக் கொடுத்து கைது செய்ய வைத்தேன் என்று சொன்னார்கள். அவர்கள் தங்களது நம்பிக்கைக்குரிய நண்பரான காவோ ஙோக் ஃபுவாங்-ஆல் காட்டிக்கொடுக்கப்பட்டதை நினைத்து அவர்கள் எவ்வளவு வருத்தமும் கோபமும் அடைந்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். எங்களை பிரித்து எங்களை கஷ்டப்படுத்த அரசாங்கம் பயன்படுத்தும் சாதாரண உபாயம் தான் இது. பிறகு போலீசுக்கு லஞ்சம் கொடுத்து என் நண்பர்களை விடுவித்த பின்னர், என் நண்பர்கள் என்னை தவிர்க்க முயற்சி செய்வதைக் கண்டேன். கத்தோலிக்க ஜனாதிபதி தியம் அவர்களது அரசாங்கம் கவிழ்ந்த பின்னரே அரசாங்கம் செய்த இந்த சதியை நான் அறிந்து கொள்ள முடிந்தது. எனது மிகவும் நெருங்கிய நண்பி நான் குற்றம் செய்திருக்க மாட்டேன் என்றும், ஒரு வேளை என் சகோதரியோ அல்லது என் சகோதரியின் கணவரோ என் நண்பர்களை காட்டிக் கொடுத்திருக்கலாம் என்றும் சொன்னதாகச் சொன்னார்கள். இது என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி என்னை மிகவும் காயப்படுத்தியது. நான் என் வேலைகளை கவனமாகவும், என் குடும்பத்தினரின் வேலைகளை கவனித்தும் வந்திருக்கிறேன். என் குடும்பத்தினர் யாரேனும் பயத்தையோ, அல்லது அரசாங்கத்துடன் ஏதேனும் பிரச்னையோ இருந்திருந்தால், நான் நிச்சயம் அறிந்திருப்பேன். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் எனது போராட்டத்துக்கு முழு மனதாக ஆதரவு தெரிவித்திருந்தார்கள்.
பல துறவிகள், கன்யாஸ்திரிகள் மற்றும் பெளத்த நண்பர்களது கைதுகளைக் கேள்விப்பட்டு, என்னுள் துக்கம் பொங்கியது. நானும் சிறைக்குப் போகவோ அல்லது மற்றவர்கள் போல என்னைக் கொளுத்திக் கொள்ளவோ விரும்பினேன். எனது எல்லா மதிப்புக்குரிய ஆசிரியர்களும், நண்பர்களும் சிறையில் இருந்தார்கள். நான் கண்களில் கண்ணீருடன் நகரத் தெருக்களில் மோட்டார் பைக்கில் சுற்றினேன். மாலையில், நான் என் பரிசோதனைச் சாலைக்குச் சென்று, என் பேராசிரியரான ஹொவோங் ஹோ அவர்களைப் பார்த்தேன். நான் எனது புத்தகங்களையும், உயிரியல் தீஸிஸையும் கிழித்துப் போட்டுவிட்டு நான் என்னை எரித்துக் கொள்ளப்போகிறேன் என்று சொன்னேன். கண்களில் கண்ணீருடன், ‘தாங்கள் நம்பும் நம்பிக்கைகளை வாழ்வதற்கு சுதந்திரம் மட்டும் கேட்ட இந்த ஆயிரக்கணக்கான பெளத்தத் துறவிகளையும், கன்யாஸ்திரிகளையும் பெளத்த நண்பர்களையும் ஏன் கைது செய்தார்கள் ? ‘ என்று கேட்டு அழுதேன். அவர் மெளனமாக நான் சொல்வதைக் கேட்டார். அவருக்கு வியத்நாமில் நடக்கும் மனித உரிமைகள் மறுப்பு பற்றி ஏதும் தெரிந்திருக்கவில்லை. அவர் ஒரு அறிவியலறிஞராக, மரங்களிலும், செடிகளிலும், அல்கேக்களிலுமே ஆர்வம் செலுத்திவந்தார். ஆனால் அவர் உண்மையிலும் ஆர்வமாக இருந்தார். அவர் மனித உரிமை மீறல்களை தடுக்கும் படிக்கு கேட்டு அரசாங்கத்துக்கு ஒரு மனு தயார் செய்தார். அவர் 79 பல்கலைக்கழக பேராசிரியர்களிடமிருந்து கையெழுத்தும் பெற்றார். கையெழுத்துப் போட்ட அனைவருக்கும், கையெழுத்துப் போட்டதற்காக, தாங்களும் கைது செய்யப்படலாம் என்று தெரிந்திருந்தது. ஆகஸ்ட் 21ஆம் தேதி நாங்கள் அந்த மனுவை ஜனாதிபதி தியம் அவர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் அளித்தோம். அதே நாள், ஜனாதிபதி தியம், மந்திரிசபை கூட்டத்தில் ‘எல்லா கம்யூனிஸ பெளத்தர்களும் கைது செய்யப்பட்டார்கள் ‘ என்று அறிவித்ததும், வெளிநாட்டு உறவு மந்திரியாக இருந்த வு வான் மவ் கோபத்துடன் வெளியேறினார். மூன்று நாட்களுக்குப் பின்னர், அவர் கண்டனம் தெரிவிப்பதற்காக, தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டார்.
எல்லா பெளத்தத் துறவிகளும் கன்யாஸ்திரிகளும் சிறையில் இருந்ததால், பல்கலைக்கழக மாணவர்களும், பள்ளிக்கூட மாணவர்களும் எதிர்ப்பு இயக்கத்தில் இறங்கினார்கள். இவர்கள் ‘ வியத்நாமில் மனித உரிமைகளை மதிக்கக் கோரும் குழு ‘ (Committee to Work for the Respect of Human Rights in Vietnam) என்ற ஒன்றை உருவாக்கினார்கள். ஆகஸ்ட் 25ஆம் தேதி நூற்றுக்கணக்கான மாணவர்கள், தியன் ஹோங் கடைவீதியில் கூடி பேரணி நடத்தியபோது, போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தது. இதில் ஒரு 16 வயதுப்பெண் க்வாச் தி ட்ராங் இறந்தாள். பயமும் சோகமும் எங்கள் மீது இறங்கியது. மக்கள் தாங்கள் அடக்குமுறைக்குள்ளாவதாக உணர்ந்தார்கள்.
1963 செப்டெம்பர் 9 ஆம் தேதி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் தெருவுக்குச் சென்று, தியம் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். க்ஸா லோய் கோவிலின் வாசல் படியில், மெள துயெத் அன் என்ற 18 வயதுப் பெண், ஜனாதிபதி தியம் அவர்களுக்கு அர்ப்பணிப்பதற்காக, தன் இடது கையை வெட்டினாள் என்ற செய்தி எங்களை இன்னும் போராட வைத்தது. அவள் சிறிய அழகான பெண். எங்களது இளம் பெளத்தர்கள் இயக்கத்தில் இருந்தவள். அவளது இடது கையை வெட்ட தூக்கிய கோடாரியை தூக்கக்கூட அவளது வலது கைக்கு சக்தி கிடையாது. அவள் அதிகமாக ரத்தம் பெருக்கெடுத்து மயக்கம் போட்டாள். ஜனாதிபதி தியம் அவர்களுக்கு அவள் எழுதிய கடிதத்தில், மக்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ள ஜனாதிபதிக்கு அவள் கொடுக்கும் பரிசு என்று தன் கையை குறிப்பிட்டு எழுதினாள். இது மக்களை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது. மெள துயெத் அன் செய்த செயல், மக்களை தங்களது அறியாமையிலிருந்து விழிப்புற முயற்சி செய்த உன்னதமான தியாகம்.
மெள துயெத் அன் அவர்களது தியாகத்துக்குப் பின்னர், எனது பேராசிரியர் என்னைப் பார்த்து ‘நீ நாட்டை விட்டு போக விருப்பமா ? நீ பாரீஸில் உள்ள பல்கலைக்கழகத்துக்குச் சென்று அங்கு உனது தீஸிஸை முடிக்கலாம். பேராசிரியர் போரெல்லி அவர்களுக்கு நான் அறிமுகக் கடிதம் தருகிறேன். அவர் நல்லநீர் அல்கே துறையில் நிபுணர். பேராசிரியர் ஃபெல்ட்மேன் அவர்களும் உனக்கு உதவுவார்கள். நீ உன் வேலையை முடிக்கலாம் ‘ என்றார். நான் என் பேராசிரியருக்கு நன்றி கூறி, நான் இதைப் பற்றி சிந்தித்து பதில் கூறுவதாகச் சொன்னேன். சில மணிநேரங்களில் எனக்கு ஒரு கருத்து தோன்றியது. நான் பாரீசுக்குப் போய் அங்கு பத்திரிக்கையாளர் கூட்டம் ஒன்று நடத்தப்போகிறேன். வு வான் மு செய்தது போல என் தலையை மொட்டை அடித்து, என் நீண்ட கருங்கூந்தலை ஜனாதிபதி தியம் அவர்களுக்கு பரிசாக அளிக்கப்போகிறேன். உலக பத்திரிக்கையாளர்களுக்கு வியத்நாமில் நடக்கும் மனித உரிமை மீறல்களைப் பற்றிச் சொல்லலாம். பெளத்த இயக்கத்தில் உள்ள எல்லோரையும் அரசாங்கத்தார் கைது செய்து வருவது எனக்குத் தெரிந்ததுதான். நான் வெளிநாட்டுக்குச் சென்றால், எந்த அளவுக்கு வியத்நாமில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன என்பதைச் சொல்லலாம். நான் என் கூந்தலை மொட்டை அடிக்கப்போவதைச் சொன்னதும், என் அம்மா எனக்கு ஒரு கம்பளி குல்லாய் பண்ணித்தந்தாள். பாரீஸ் குளிர்காலத்தில் என் தலையை சூடாக வைத்துக்கொள்வதற்காக. நான் சைகோன் பல்கலைக்கழகத்தில் பரிசோதனைச்சாலை உதவியாளராக, அரசாங்கத்தில் வேலை செய்யும் வேலையாளாக, இருப்பதால் எனக்கு உடனே விசா கிடைத்தது. நான் ஃப்ரான்சுக்கு அக்டோபர் 23, 1963இல் கிளம்பினேன்.
இவ்வளவு காலமும் தாய் ன்ஹாத் ஹான் நியூயார்க்கில் இருந்தார். (இவர் வியத்நாமிய பெளத்த மாணவர் சங்கத்தை க்ஸா லோய் கொவிலில் துவக்கியவர்). கொலம்பியா பல்கலைகழகத்தில் பாடம் நடத்திவந்தார். அவர் வியத்நாமிலிருந்து வரும் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவைகளை ‘ஐக்கிய நாடுகள் ‘(United Nations) சபைக்கு கொடுத்து வந்தார். ஐக்கிய நாடுகள் சபை வியத்நாமில் மனித உரிமைகள் மீறல் பற்றி விவாதித்த நாளன்று அவர் நியூயார்க் கோவிலில் உட்கார்ந்து விரதம் இருந்து பிரார்த்தனை செய்தார். ஐக்கிய நாடுகள் சபை வியத்நாமில் மனித உரிமைகள் மீறல் பற்றி ஆராய வியத்நாமுக்கு ஒரு குழுவை அனுப்ப முடிவு செய்தது.
நவம்பர் 1ஆம் தேதி, நான் பத்திரிக்கையாளர் கூட்டம் கூட்டுவதற்கு சிலநாட்கள் முன்னால், தியம் அரசாங்கம் வீழ்ந்தது. ஜனாதிபதி ஙோ தின் தியம் அவர்களும், அவரது சகோதரரான ஆர்ச் பிஷப்பும் கோபம் கொண்ட ஒரு ராணுவ ஆஃபீசரால் கொல்லப்பட்டனர். அவர்களது ஆதரவாளர்களால் பாரீஸில் இருந்த கத்தோலிக்க சர்ச்சில் நடத்தப்பட்ட இரங்கல் கூட்டத்துக்கு சென்றேன். இவர்கள் இவ்வளவு சோகத்துக்கும் காரணமாக இருந்தாலும் எனக்கு அவர்கள் மீது வெறுப்பு இல்லை. வியத்நாமைப் பற்றி இவர்கள் கொண்டிருந்த தவறான கருத்துக்களுக்கு இவர்களே பலியானார்கள் என்று எனக்குத் தெரியும். அஹிம்சை வழியில் நின்ற பெளத்தர்களின் தியாகங்கள், அரசாள்பவர்களுக்கு நல்வழியைக் காட்ட வேண்டும் என ஆசைப்பட்டேன். தியம் சகோதரர்களின் வாழ்க்கை இறந்த காலமாகி விட்டது. ஆனால் அது ஒரு நல்ல பாடமாக நிரந்தரமாக இருக்கிறது. முக்கியமாக லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்கும் மனிதர்கள் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதை அவர்கள் காண்பித்தார்கள். நாம் நமது கருத்துக்களை எப்போதும் ஆராய வேண்டும். அவைகள் உண்மையோடு ஒத்துப் போகிறதா என சரிபார்த்து திருத்திக் கொள்ள வேண்டும். நமது அறிவைப் பற்றி அகங்காரம் கொள்ளக்கூடாது. நாம் அடக்கத்துடன் புதிய கருத்துக்களை அராயவும், ஒவ்வொரு நாளும் புதியதாக ஒன்றையாவது கற்றுக்கொள்ளவும் வேண்டும்.
பின்னால், தியம் அரசாங்கத்தை கவிழ்க்க வாஷிங்டன் கட்டளை இட்டதாக கூறும் பெண்டகன் காகிதங்கள் வெளியிடப்பட்டன. ஹனோய்(வட வியத்நாம்)க்கு சீனாவும் சோவியத் ரஷ்யாவும் ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்ததால், தென் வியத்நாம் அரசாங்கம் மக்கள் வெறுப்புக்குள்ளானால் கம்யூனிஸ்ட்கள் அரசாங்கத்தை ஆக்கிரமித்து விடுவார்கள் என வியத்நாமை நேசித்த தேசீய வாத ராணுவ அதிகாரிகள் பயந்தார்கள். அதனால் அவர்களுக்கு அமெரிக்காவின் உதவி தேவையாக இருந்தது. ஆனால் அமெரிக்காதான் தியம் அரசாங்கத்தை கவிழ்த்தது என உரிமை கொண்டாடுவது மிகவும் கொச்சையானது. ஜனாதிபதி ஙோ தின் தியம் அவர்களும், அவரது குடும்பத்தாரும் தங்களைத் தாங்களே கவிழ்த்துக் கொண்டார்கள்; அவர்களது குறுகிய எண்ணத்தாலும், புரிந்து கொள்ளாத மனத்தாலும், மக்களது விருப்பங்களை கேட்க முடியாமல் போனதாலும்.
தியம் அரசாங்கம் கவிழ்ந்தது தெரிந்ததும் நான் என் தலையை மொட்டை அடித்துக் கொள்ளவுமில்லை, நான் பத்திரிக்கையாளர் கூட்டத்தை கூட்டவுமில்லை. நான் எனது தீஸிஸில் கவனம் செலுத்தினேன். ஒரு நாள் தாய் ந்ஹாத் ஹான் என்னை தொலைபேசியில் கூப்பிட்டார். நான் பாரீஸ் வந்ததுமே, வியத்நாமில் நடந்த விஷயங்களை விளக்கி அவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். (வியத்நாமுக்குள் இருந்து கொண்டு அந்தக் கடிதத்தை நான் எழுதியிருக்க முடியாது. எல்லா கடிதங்களும் தணிக்கை செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. என் குடும்பத்தாரும் என் நண்பர்களும் அதனால் இன்னும் கஷ்டத்துக்குள்ளாகும்படி ஆகியிருக்கும்.) நான் நடத்துவதாக இருந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தைப் பற்றியும் சொல்லியிருந்தேன். ஆகவே அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி ‘நீ உன் தலையை மொட்டை அடித்துக் கொண்டுவிட்டாயா ? ‘ என்பதுதான். நான் இல்லை என்று சொன்னதும் அவர் சந்தோஷப்பட்டார். வியத்நாமுக்கு அவர் திரும்பிப் போவதைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பதால் அவருக்கு ஆலோசனை சொல்ல அவர் என்னை நியூயார்க்குக்கு ஒரு வாரமாவது வரவேண்டி என்னை அழைத்தார். அவரைப் போன்ற அறிவுஜீவிகள் வியத்நாமுக்குச் செல்வதுஆபத்தானது என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மேலாளர் கருதியதால் அவரை அங்கேயே இருந்து கொண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வியத்நாமிய படிப்புகள் பிரிவு ஒன்றை உருவாக்கவும் அது சம்பந்தமாக வேலைகளும் செய்யச் சொன்னார். ‘நான் நியூயார்க்கிலேயே தங்கிவிட்டால், பெளத்தமதத்தை புனருத்தாரணம் செய்ய விரும்பும் என் வேலைகளுக்கு தடை போடும் பழங்காலத்துச் சிந்தனை மிகுந்த பெளத்தத் துறவிகளோடு போராட முடியாது ‘ என்று தாய் சொல்லவில்லை; ஆனால் நான் அந்த வார்த்தைகளைக் ‘கேட்டேன் ‘. நான் அவரது வேலைகளின் மீது நம்பிக்கை வைத்த இளம் தலைமுறையின் பிரதிநிதி. எனவே நான் நியூயார்க் வர ஒப்புக்கொண்டேன். பெளத்த மதத்தைப் புனருத்தாரணம் செய்வதற்கும், வியத்நாமில் சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும் அவரது திட்டங்களை விவாதிக்க அவருக்கு வாக்களித்தேன். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததற்கும் சந்தோஷப்பட்டோம்.
எல்லா ஃப்ரெஞ்ச் உணவுவிடுதிகளிலும் கிடைத்த அதே உருளைக்கிழங்கு மாவுதான் நியூயார்க்கிலும் கிடைக்கும் என்று அனுமானித்திருந்த எனக்கு, தாய் எனக்காக தயாரித்திருந்த பீன் கட்டியும், காளான்களுமான வியத்நாம் உணவு ஆச்சரியத்தை அளித்தது. நியூயார்க்கில் இருந்த காலத்தில், தாய் எனக்கு எப்படி சைவ உணவு தயாரிப்பது என்று சொல்லித்தந்தார். தாய் மற்றும் அவரது அறை நண்பரான ஸ்டாவ் அவர்களும் என்னோடு இரவில் வெகுநேரம் விழித்திருந்து இரவின் அமைதியிலும் சந்தோஷத்திலும் பேசிக்கொண்டிருந்தோம். சிலசமயம் நாங்கள் ஃப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலப்பாடல்களைச் சேர்ந்து பாடினோம். தாய் இந்த இரண்டு வாரங்களில் ‘தங்க வயல்களின் மீது வண்ணத்துப் பூச்சிகள் ‘ என்ற கவிதையை எழுதி என்னிடம் தந்தார்.
தங்க வயல்களின் மீது வண்ணத்துப் பூச்சிகள்
பத்து வருடங்களாக
எங்களிடம் ஒரு அழகான பச்சைத்தோட்டம் இருந்தது
இருபது வருடங்களாக
எங்கள் வீட்டுக்கூரையில் சூரியன் எப்போதும் ஒளிர்ந்தது
என் அம்மா வெளியே வந்து என்னை வீட்டுக்கு கூப்பிட்டார்கள்
நான் வீட்டு முன்னர் வந்து
சமையலறைக்கு அருகில்
என் கால்களைக் கழுவுவதற்காக
என் கைகளை அடுப்பில் காட்டி சூடாக்கிக் கொள்வதற்காக
இரவுச் சாப்பாட்டுக்குக் காத்திருக்க வந்தேன்
இரவு எனும் படுதா
எங்கள் கிராமத்தில் மெல்ல இறங்கியது
நான் வளரவே மாட்டேன்
நான் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும்.
நேற்றுத்தான், நான் பார்த்தேன்
தங்க வண்ணத்துப் பூச்சிகள் எங்கள் தோட்டத்தின் மீது படபடப்பதை.
பச்சை எள் செடிகள் திடாரென்று வெளிச்சமான மஞ்சள் பூக்களாய் வெடிப்பதை.
அம்மா, அக்கா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள்.
மாலையில் வரும் தென்றல் காற்று உங்கள் மூச்சு.
நான் ஏதோ தூரத்து எதிர்காலத்தைப் பற்றி கனவு காணவில்லை.
நான் காற்றைத் தொட்டு உங்கள் இனிய பாடலைக் கேட்கிறேன்.
நேற்றுத்தான் நீங்கள் என்னிடம் சொன்னது போல,
‘ஏதேனும் ஒரு நாள், நீ எல்லாம் அழிக்கப்பட்டதை கண்டால்,
உன் இதயத்தின் ஆழத்தில் என்னை தேடிப்பார் ‘
நான் திரும்பி வருகிறேன். யாரோ பாடுகிறார்கள்.
என் கை பழைய வேலிக்கதவை தொடுகிறது,
நான் கேட்கிறேன், ‘உதவிக்கு நான் என்ன செய்ய வேண்டும் ? ‘
காற்று பதில் சொல்கிறது,
‘சிரி. வாழ்க்கை ஒரு அதிசயம்.
ஒரு பூவாக இரு.
மகிழ்ச்சி செங்கற்களாலும் கற்களாலும் கட்டப்பட்டதல்ல ‘
எனக்குப் புரிகிறது. நாம் ஒருவருக்கொருவர் துன்பத்தை இழைத்துக்கொள்ள விரும்பவில்லை.
நான் உன்னை பகலும் இரவும் தேடுகிறேன்.
புயலடிக்கும் இரவில் மரங்கள் ஒன்றை ஒன்று பற்றிக்கொள்ள விரும்புகின்றன.
வெடிக்கும் மின்னல் அவைகளுக்கு ஆறுதல் தருகிறது.
அவைகள் ஒன்றுக்கொன்று அருகில் இருக்கின்றன.
என் சகோதரனே, சுவருக்கருகில் இருக்கும் மலராக இரு.
அற்புதமான உலகத்தின் பகுதியாக இரு.
நான் உன்னுடன் இருக்கிறேன். தயவுசெய்து இரு.
நமது தாயகம் நமக்குள்ளே இருக்கிறது.
நாம் குழந்தைகளாக இருந்தபோது போலவே,
இப்போதும் நாம் ஒன்று சேர்ந்து பாடலாம்.
இன்று காலை, நான் எழுந்து கண்டுபிடித்தேன்,
சூத்திரங்களை தலையணையாக பயன்படுத்திக் கொண்டிருந்திருக்கிறேன் என்பதை.
உலகத்தை மீண்டும் கட்டுவதற்காக தயார்படுத்திக்கொள்ளும்
துருதுருவென்ற தேனீக்கள் சரசரவென ஒலியெழுப்புவதைக் கேட்கிறேன்.
அன்பானவர்களே, மீண்டும் கட்டும் வேலைக்கு
ஆயிரக்கணக்கான ஆயுட்காலங்கள் எடுக்கலாம்,
ஆனால் அதுவும் சற்று முன்னரே
கட்டிமுடிக்கப்பட்டது.
நம்மை சுமந்து கொண்டு
சக்கரம் சுற்றுகிறது.
என் கையைப் பிடித்துக் கொள், சகோதரனே, நீ தெளிவாகப் பார்ப்பாய்
நாம் எப்போதுமே இணைந்திருப்பதை
ஆயிரமாயிரம் ஆயுட்காலங்களாக.
என் அம்மாவின் கூந்தல் சுத்தமானது, நீளமானது.
அது அவர்களின் காலடியைத் தொடுகிறது.
என் சகோதரியின் உடை காயப்போடப்பட்டிருக்கிறது
இன்னும் எங்களது பச்சைத் தோட்டத்தின்
காற்றில் நீந்துகின்றது.
இலையுதிர்காலத்துக் காலைநேர
மெல்லிய பூங்காற்று.
நான் வீட்டின் பின்புறத்தில் நின்றுகொண்டிருக்கிறேன்
கொய்யா மரங்கள், பழுத்த மாம்பழங்களின் இனியநறுமணம்
சிவப்பு மாப்பிள் இலைகள் தரையெங்கும் சிதறிக்கிடக்கின்றன
சின்னக்குழந்தைகள் நம் காலருகில் இருப்பதுபோல.
ஆற்றின் அக்கரையிலிருந்து பாடல் தவழ்ந்து வருகின்றது.
பட்டுப்போன்ற தங்க வைக்கோல் போர்கள்
மூங்கில் பாலத்தில் கடக்கின்றன.
என்ன நறுமணம்!
மூங்கில்களின் மீது
சந்திரன் எழுகிற பொழுது
வீட்டின் வேலிக்கதவின் அருகே
நாம் விளையாடுகிறோம்.
நான் கனவு காணவில்லை.
இது நிஜமான அழகான ஒரு நாள்.
நாம் இறந்த காலத்துக்கு திரும்பிச் சென்று
அங்கு கண்ணாமூச்சி விளையாட விரும்புவோமா ?
நாம் இங்கு இருக்கிறோம்.
நாளையும் இங்கு இருப்போம்.
இது உண்மை.
வா, நீ தாகமாக இருக்கிறாய்.
நாம் இணைந்து நடப்போம்,
புத்தம் நீரின் ஓடைக்கு.
யாரோ சொன்னார்கள், மனிதர்கள் எழுந்து நின்று உதவிசெய்ய
கடவுள் ஒப்புக்கொண்டுவிட்டார் என்று.
நாம் கையோடு கைசேர்த்து
அனாதிகாலந்தொட்டு சேர்ந்து நடந்திருக்கிறோம்.
நீ வலிக்குள்ளாகி இருக்கிறாயென்றால், அது
நீ ஒரு இலை, ஒரு பூ என்பதை
மறந்துவிட்டதாலேயே.
ஊமத்தைப் பூ உன்னைப்பார்த்து புன்னகைக்கிறது.
உன் கைகளை மணலிலும் சிமெண்டிலும் செருகாதே.
விண்மீன்கள் தங்களுக்காக சிறைச்சாலைகளைக் கட்டிக்கொள்வதில்லை.
நாம் பூக்களோடும், காலைநேரப்பறவைகளோடும் பாடுவோம்.
நாம் முழுமையாக இன்று இருப்போம்.
நீ இங்கு இருக்கிறாய் என்பதை உன் கண்களை நான் பார்க்கும்போது தெரிகிறது
உன் கைகள் ஊமத்தைப் பூ போல அழகானவை.
அவைகள் பற்சக்கரங்களாகவும், கொக்கிகளாகவும், கயிறுகளாகவும்
மாற விட்டுவிடாதே.
ஏன் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டிய அவசியம் ?
நீ நீயாக இரு.
நீ வேறொன்றாக மாற வேண்டிய அவசியமில்லை.
எனது ஒப்புமையை நான் சேர்க்கிறேன்.
நான் ஒரு கொப்பளிக்கும் நீரோடை எனக் கருதி
நான் சொல்வதைக் கேள்.
அம்மாவைக் கூட்டிக்கொண்டு வா, நான் அவர்களைப் பார்க்க விரும்புகிறேன்.
நான் உனக்காகப் பாடுவேன், என் அருமைச் சகோதரி,
உன் கூந்தலும் அம்மாவின் கூந்தல் போல நீளமாக வளரும்.
நான் வந்த மறுநாள், தாய் ந்ஹாட் ஹான் அவர்களுக்கு தாய் ட்ரி க்வாங் அவர்களிடமிருந்து ஒரு தந்தி வந்தது. (தாய் ட்ரி க்வாங் அவர்களே கத்தோலிக்க கிரிஸ்தவ ராஜ்யத்தை எதிர்த்து ஹ்யூ நகரத்தில் போராட்டம் ஆரம்பித்த முதல் துறவி) பெளத்த மதத்தை புனருத்தாரணம் பண்ணுவதற்கு உதவும் படி அவரை மீண்டும் வியத்நாமுக்கு அழைத்தது அந்த தந்தி. முன்பு, தாய் ந்ஹாட் ஹான் அவர்களுக்கு பெளத்த மத குருமார்கள், முக்கியமாக தாய் ட்ரி க்வாங் அவர்கள், எந்த வித ஆதரவும் அளிக்க வில்லை. சில நாட்களுக்குப் பிறகு, தாய் ட்ரி குவாங் அவர்களிடமிருந்து இன்னொரு கடிதம் வந்தது. அதில், ‘எனக்கு மிகவும் வயதாகி விட்டது. இந்த புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு நான் பழமை வாதத்தில் மூழ்கிக்கிடக்கிறேன். தயவு செய்து இங்கு வந்து எனக்கு உதவுங்கள் ‘ என்று இருந்தது. தீவிர சிந்தனையோடும், உணர்ச்சிவசப்பட்டும், தாய் ந்ஹாட் ஹான் அவர்கள் தன் கையில் அந்தக் கடிதத்தை பார்த்துக்கொண்டு நெடு நேரம் இருந்தது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. பின்னர், தாய் என்னிடம் பேசும் போது, நிலையாமை எவ்வளவு அற்புதமானது என்று சொன்னார். உதாரணத்துக்கு, கடந்த காலத்தில், தாய் ட்ரி குவாங் அவர்கள் எப்படி ஒரு பழமைவாதத்தின் பெரும் தூணாக நின்று தனது வேலைகளுக்கு பெரும் தடையாக இருந்தார் என்பதை நினைவு கூர்ந்தார். இப்போது, தாய் டிரி குவாங் அவர்களது ஆதரவோடு, அவர் எப்போதும் செய்ய விரும்பிய வேலையை இப்போது செய்ய ஆர்வத்துடன் இருந்தார். நானும் இவரோடு கூட சேர்ந்து வேலைகள் செய்ய ஆர்வமாக இருந்தேன். தாய் வியத்நாமுக்குத் திரும்பியதும், நானும் அவரோடு வெகு விரைவிலேயே இணைவேன் என்று அவருக்கு உறுதி கூறினேன். இப்போதைக்கு நான் பாரீசுக்குச் சென்று என் தீஸிஸை முடிக்கப்போகிறேன் என்று சொன்னேன்.
தாய் வியத்நாமுக்குத் திரும்பி வருவதாக, தாய் ட்ரி குவாங் அவர்களுக்கு பதிலெழுதினார். அவர் வியத்நாமுக்குச் செல்லும் வழியில் பாரீஸில் ஒரு வாரம் இருந்து என்னையும் பெளத்த நண்பர்களையும் பார்த்து பேசினார். தன்னுடன் ஒரு கன்யாஸ்திரியையும் கூட்டிக்கொண்டு வந்து பாரீஸில் ஒரு சொற்பொழிவு ஆற்றினார். பின்னர் 1963, டிஸம்பர் 16ஆம் தேதி அன்று வியத்நாமுக்குச் சென்றார்.
Source: www.prajnaparamita.com/newpage11.htm
- கொலுசுகள்.
- ‘கன்யாகுமரி ‘.ஏன் நம்மை சீண்டவேண்டும் ?
- ஏன் இந்துக்கள் பசுவைக் கொல்வதில்லை ?
- சுடர்ப் பெண்கள் சொல்லும் இரகசியம்.
- புகழின் நிழல்
- என் விடுமுறை
- விடியல்
- பழக்கமாகும்வரை…
- தோற்றுப்போகாதே….
- பசிக்கிறது!
- இருவர்
- ஜனநாயக அராஜகம்
- ஏன் இந்துக்கள் பசுவைக் கொல்வதில்லை ?
- நகர்வாசமும் வீடுபெறலும்
- அஹிம்சையில் எதிர்ப்பு -2
- இந்த வாரம் இப்படி (ஜெயலலிதா கட்டளை, முஷாரஃப் வருகை,காமராஜர் பிறந்த நாள்)
- தொலைதல்