லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
—-
‘கொலுப்படி ‘ என்கிற வார்த்தை கேட்டதுமே நம் நாயகனின் காதுகள் விறைத்து, உடம்பு சிலிர்த்ததற்குக் காரணம் இருக்கிறது. அவன் பற்கள் தந்தி அடிக்க ஆரம்பித்தன. ஜுரம் வரும்போல் இருந்தது.
இந்திய வாசகர்களுக்கு இந்தப் படி கட்டுமானப் பணியின் அமெரிக்க தாத்பர்யம் சரியாகப் புரியாது என்பதால் இதைச் சற்றே விலாவாரியாகச் சொல்ல நேரிடுகிறது.
நம் இந்திய வீடுகளில் கள்ளுப்பெட்டி முதல் கண்டாமுண்டான் சாமான்கள் வரை எல்லாமே கொலுப்படி களுக்கு ஆதார ஸ்ருதியாக நிற்கும். ஏகப்பட்டக் கெழ போல்ட் உறவினர்களில் யாரையாவது ஷிஃப்ட் முறையில் படியாக நிற்கச் சொன்னால் கூட அவர்கள் அதைச் சிரமெற்கொண்டு செய்தும் விடுவார்கள். அதைத்தவிர மர ஆசாரிகள், ஆணிகள் ஆங்காங்கே பொத்துக்கொண்டு குத்தினாலும், வெகு சுலபமாக மரப் படிகளைச் செய்து அடுக்கி விட்டும் போய் விடுவார்கள்.
அமெரிக்கக் கதையே வேறு. ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு வீட்டின் விஸ்தார கன பரிமாணச் சதுர அடிகள் வெவ்வேறு. பல இடங்களில் கார்ப்பெட் வேறு கழுத்தை அறுத்து வழுக்கும். ஐஸ் மழை கொட்டும். அல்லது சூறாவளிக் காற்றில், படிகளென்ன, வீடே பறக்கும்.
மேலும், அமெரிக்க அம்மாமிகள் ‘தற்காத்துத் தற்கொண்டான் பிராணனை வாங்கி ‘ அடக்கமாக வாசற்படி மாதிரி மூன்றே மூன்று படி போதும் என்பார்கள். அல்லது ஆகாசம் தொடும்படியாகப் பதிமூன்று படிகள் வரை அடுக்கடுக்காய் வேண்டுமென்றும் படுத்தி மகிழ்வார்கள். அதெல்லாம் அவர்களுடைய அந்தந்த வருஷ மூட், ஆத்துக்காரரின் வேலை இருத்தல்/இல்லாதிருத்தல், பசங்கள் பரீட்சையில் வாங்குகிற/கோட்டை விட்டு விட்ட மார்க், மூத்த பெண் வெள்ளைக்கார பாய்ஃப்ரண்டோடு ஊர் சுற்றுகிறாளா/இல்லையா போன்ற பலவற்றைப் பொறுத்துப் படிகள் குறையலாம், படிகள் வளரலாம். பாடுபடுவது மட்டும் எப்போதும் மாமி பிடித்த பாக்கியசாலியே.
இங்கே ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் -மாண்டேஜ்கள் கலந்த ஃப்ளாஷ்பேக்- போட்டுக் கொள்ளலாமா ? ‘யாரங்கே, திரையில் அந்தக் கருப்பு வெள்ளை கலந்த வட்ட வட்டமான சுருட்களை ஓட விடப்பா ‘
காலம்: இரண்டு வருடங்களுக்கு முந்தைய வசந்த நவராத்திரி
பாத்திரங்கள்: நம் நாயகன், நாயகி, கோணாமாணாவென்று கூறு போடப்பட்ட பிரம்மாண்ட மரப் பலகைகள், ஆணிப் பெட்டிகள், சுத்திகள், டிராயிங் பேப்பர் பண்டில்கள், கலர் பென்சில்கள், டிஞ்சர் பாட்டில்கள், பேண்டேஜ்கள், வீக்கம் தணிக்கப் பல பாத்திரங்களில் ஐஸ்கட்டிகள், தாகம் தணிக்கத் திரவ பதார்த்தங்கள், அவ்வப்போது பசியாறத் தின்பண்டங்கள்.
‘எதுக்குங்க நாம சிரமப்படணும் ? நீங்களோ ‘ஹாண்டிமேன் ‘. உங்களுக்குத் தெரியாததா ? போன தடவை பாத்ரூம் கம்மோடு அடைச்சுக்கிட்டபோது நீங்களே தானே குச்சிய உள்ள விட்டுக் குத்திச் சரி பண்ணினீங்க. உங்க பலம் உங்களுக்கே தெரியாது. நம்ம வீட்டுக்குத் தகுந்த மாதிரி நீங்களே ஒரு கஸ்டம் கொலுப்படி கட்டிடுங்களேன். ப்ளீஸ் ‘
‘உன் பலம் உனக்கே தெரியாது ‘ என்று ஜாம்பவான் ஆஞ்சநேயனிடம் சொன்னதில் வஞ்சப் புகழ்ச்சி இல்லை. இஃது வேறுவகைப்பட்ட புகழ்ச்சி.
தலையை ஒரு சிலுப்பு சிலுப்பிக்கொண்டு நம் நாயகன் அமெரிக்க மரக் கடைகளிலெல்லாம் பேய் முழி முழித்துக்கொண்டு அலைந்து பிரம்மாண்டமான கனடா தேச மரப் பலகைகளைக் கடையில் வாங்குகிறான். ($ 118.40)
சின்னஞ்சிறு காரில் அவற்றை ஏற்ற முடியாமல் பேரவதி. கால் சிராய்ப்பு, ரத்தம். ‘டர் ‘ரென்ற பேண்ட் கிழிப்பு. காருக்குப் பெயிண்ட் சிராய்ப்பு ($ 328.90)
U Haul அல்லது Hertz-ல் வாடகைக்குப் பெரிய லாரி ஒன்று எடுக்கப்படுகிறது. ($ 59.00 + பெட்ரோல் $ 23.00)
பி.க.தே.ம. பலகைகளைக் கடையில் ஏற்றி, வீட்டில் இறக்க, வேலை தேடித் தெருவோரம் பல் குத்திக் குந்தியிருக்கும் மெக்சிகன் தேசத்துப் பணியாட்கள் தற்காலிகப் பணிக்கு அமர்த்தப் படுகிறார்கள். $ (4X20) + டிப்ஸ் $ 20
மரப் பலகைகளை வீட்டுக்குள் கொண்டு வர முடியாமல் வாசற் கதவைப் பலமாக நெத்தியதில் பிற்பாடு டச்சப், பெயிண்டிங் செலவு $ 320
வாங்க மறந்து போய்த் திரும்பத் திரும்பக் கடைக்கு ஓடிச் சேகரிக்கப்படும் பொருட்கள்: அறுவாள், சிற்றறுவாள், சிறு உளி, பேருளி, அரம், ரம்பம், இழைப்புளி ($ 119.75)
க்ளோசப் ஷாட்டில் நாயகன்: மூன்று நாள் ஆபீசுக்குப் போகாத முள்தாடியுடன்.
கையில் பேப்பர், டார்ச் லைட், இஞ்ச் டேப், அழுக்கு ரப்பர், கலர் பென்சில்களுடன் பேய் முழி முழிக்கிறான்.
பின்புலத்தில் கால் மேல் கால் போட்டபடி, சோஃபாவில் சாய்ந்து, புன்முறுவலுடன் நாயகி ஆனந்த விகடன் ஜோக்குக்குச் சிரித்துக் கொண்டிருக்கிறாள்.
‘கொலுப்படி வளர்வதெப்படி ? ‘ சப்டைட்டிலுக்குப் பல இன்சர்ட் ஷாட்டுகள்:
அடுக்கப்பட்ட மரப் பலகைகள் பிரமிட் மாதிரியும், குகை போலும், பனை போலும், ‘பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய் ‘ படத்தின் கடைசிக் காட்சி போலும் பல்வேறாகத் தொங்கியபடி காட்சி அளிக்கின்றன. ஆணி அடிக்க முயன்றதால் அமெரிக்க அட்டைச் சுவர்கள் கிழிந்து பரிதாபம் சொட்டுகின்றன. (இதற்கு இப்போது பட்ஜெட் தேவையில்லை. வேறு மராமத்துக் கணக்கில் 500 டாலராவது பிற்பாடு பழுத்து விடும்.)
ஓரளவுக்கு 7 3/4 படிகளில் கொலுப்படி மாதிரி ஒரு உருவம் நிழலாகப் புலப்படுகிறது. Freeze frame.
கையில் நாயகனுக்குக் காஃபியுடன், சிரித்த முகத்துடன் அவற்றைச் சோதனை செய்ய நாயகி வருகிறாள். மேற் படியின் ‘weight bearing properties ‘ தெரிந்துகொள்ளுமுகமாக அங்கே ஏறி அவள் அமர, அத்தனை படிகளும் அம்மணியின் பின்கனம் தாங்காமல் பக்கவாட்டில் சரிய, அவள் சீறலோடு சிராய்ப்புகளில் அலற, ஹவுஸ்கோட் கண்ட இடங்களில் கிழிய …
இதற்கு மேல் சென்சாரில் வயலென்ஸ்+செக்சுக்காகக் கட் பண்ணி விடுவார்கள். அப்பீலுக்கெல்லாம் துட்டு அழுது அவர்கள் மேல் செல்போனை வீசும்படி ஆகி விடும். வேண்டாம்.
ஃப்ளேஷ்பேக்கிலிருந்து நாயகன் கண்களில் நீர் தளும்ப தற்காலத்துக்கு மீளும்போது, நாயகி நண்பிகளிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாள்: ‘இவருக்கு அதெல்லாம் சரியா வரலைங்கறதுனால, வெறும் அட்டைப் பொட்டிங்களை வெச்சே ‘நானே ‘ போன வருஷம் எல்லாம் சரி பண்ணும்படி ஆயிப்போச்சு. ‘
‘அப்படியா ? போன தடவை வெறும் அட்டைப் பொட்டிங்களை வெச்சேவா பண்ணியிருந்தீங்க ? சூப்பரா இருந்திச்சே. நான் கூட போட்டோ எடுத்து வெச்சிட்டிருக்கேன் ‘ -பச்சைப் பட்டுப் புடவையைக் கடனாக வாங்க வந்திருக்கும் ஒரு சூடிதார் அநியாய ஜால்ரா போட்டது.
‘தேங்க்ஸ் பிங்கி. ஆனாக்க எந்தப் படிய எப்படி ‘நானே கட்டினேன் ‘ங்கற டயக்ராம் தான் எங்கயோ போயிட்டுது ‘
‘வட கொரியாவின் அணு ஆயுத விபரங்கள் ‘ போன்ற மகா ரகசியங்கள் அடங்கிய அந்தப் பேப்பரைச் சென்ற வருடம் நாய் தின்றதை நாயகன் கண்ணாரப் பார்த்து ரசித்திருக்கிறான். ஆனால் அது பற்றி அவன் இப்போது மூச்சு விடுவதாயில்லை.
‘உங்க வீட்டுக்காரர் எஞ்சினியர் தானே. இந்த சுண்டைக்காய் அட்டைப்பெட்டி டயாக்ரம் எல்லாம் அவரே பாத்துப்பார் ‘- பைனாப்பிள் சுண்டல் ரிசிபி கேட்க வந்த மாமிக்கு எதற்கு இந்த வேண்டாத வம்பு ?
நம் நாயகன் என்ன ஷாஜஹானின் கொத்தனாரா ? அவன் தட்டி முட்டிப் படித்ததென்னவோ கம்ப்யூட்டர் எஞ்சினியரிங். கட்டிடக் கலையா அவன் பயின்றான் ?
காது கூசும்படி, கண்களில் அருவி வரும்படி, அக் கண்ணம்மாவிடம் சுடச்சுடக் கேட்டிடத்தான் அவன் நினைத்தான். ‘அடக்கு, அடக்கு ‘ என்கிறது அவன் கூடப்பிறந்த வீரம். அடங்கினான்.
இருந்தாலும் ‘சட்டுப்புட்டென்று இதில் நாம் இப்போதே தலையிடாவிட்டால் பிற்பாடு தன் தலை பலமாக உருட்டப்படும் ‘ என்கிற தற்காப்புணர்வில் நாயகன் பிளிறுவான்: ‘காமேஷ் வீட்ல வெறும் புக்ஸை வெச்சே சமாளிச்சுட்டாங்க. நம்ம வீட்ல திண்டி திண்டியா கம்ப்யூட்டர் மேனுவல்ஸ் நிறைய இருக்கு ‘
புத்தகங்களை வைத்து கொலுப்படி கட்டுவது பாவமாகாதோ ? சரஸ்வதி தேவி கோவித்துக் கொல்ள மாட்டாளோ ?
‘ச. தேவி மாட்டுவாள், மாட்டவே மாட்டாள் ‘ என்கிற பட்டி மன்றத்தின் பாதியில் நாயகன் எஸ்கேப்.
—- —- —-
‘நவராத்திரியும் அதுவுமா, ஆஃபிசில பத்து நாள் டூர் போகச் சொல்றாங்க ‘ போன்ற சமயோசித சால்ஜாப்புப் பொய்கள் எடுபடவில்லை. ‘வயிற்று வலி, ஜுரம், வாந்தி, பயம் ‘ என்றெல்லாம் ஏதேதோ சொல்லிப் பார்த்தான். ம்ஹும்.
‘ஆம்பளையா லட்சணமா ஒரு பதினோரு படி கட்டுங்க, பார்ப்பம். நான் போய் கேராஜ்ல இருக்கற ப்ளாஸ்டிக் பொம்மைங்கள எல்லாம் தொடச்சி வெக்கறேன் ‘
இந்த வருஷமும் இவனே படிக் கட்டுமானக் கொத்தனார் வேலை செய்ய நேர்ந்தது. தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு ராஜராஜ சோழன் சாரப்பள்ளம் என்கிற ஊரிலிருந்து ஒரு சாரம் அமைத்து அதன் மேல் கருங்கற்களை ஏற்றிச் சென்ரதாகச் சொல்வார்கள்.
லிவிங் ரூமில் கொலுப்படி அமைக்கப் பெட் ரூம் சாரப்பள்ளம் ஆகியது.
சித்தாளேதுமில்லாமல் பெரியாள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ‘சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா ? மேஸ்திரிக்குச் சின்ன வீடு புடிக்குமா, பெரிய வூடு புடிக்குமா ? என்று தேஜாஸ்ரீ சிணுங்கிக் கொஞ்சுவதெல்லாம் திரையில் தான்.
‘அய்யோ, இதைக் கொஞ்சம் புடிக்குறியாம்மா ? ‘ என்ற அவன் ஹீனக் குரல்கள் யார் காதிலும் விழாமல் தன்னந்தனியே அவன் தன் தாஜ்மகாலைக் கட்டினான்.
சற்றே அசைந்தாடும் கால்கட்டுப் போடப்பட்ட உடைந்த ஸ்டூல்கள், பளு தூக்கும் பெஞ்ச், கணினிக்கோனார் நோட்ஸ்கள், டெலிபோன் டைரக்டரிகள், தமிழ்-ஆங்கில அகராதிகள், மாமனார் உபய எட்டு முழ வேட்டிகள், அங்கவஸ்திரங்கள் உதவியில்- மரப் பலகைகளே இல்லாமல்- ஏழு படிகளில் இந்த வருஷக் கொலுப்படி தயாராகி இருந்தது.
‘நீங்கதான் உசரமா இருக்கீங்க. அப்படியே அந்த மேல் படிகள்ளல்லாம் பொம்மைங்களை அடுக்கிக் கொடுத்திருங்களேன் ‘. அவள் சொன்னாள். அவன் செய்தான்.
‘இந்தப் பித்தளை வெளக்குங்களைப் புளி போட்டு வெளக்கிக் கொடுத்திடுங்க. நான் ரொம்பப் பூஞ்சை. உங்களுக்குத்தான் நல்லா கை அழுந்தும் ‘ மெல்லியலாள் சொன்னாள். வல்கைவில்லாளன் செய்தான்.
‘வெள்ளிப் பாத்திரங்களுக்கு விபூதி யூஸ் பண்ணுங்க, பளிச்சுன்னு ஆயிடும். புளி போடக் கூடாது ‘ அவனும் இளித்துக்கொண்டே செய்தான்.
‘அப்படியே கடைசிப் படியில சின்னதா ஒரு ஸ்விம்மிங் பூல், மிருகக் காட்சிசாலை செஞ்சுடுங்க. பசங்க வெளையாடும் ‘ குழந்தைகளின் சிறு சிறு பொம்மைகளை வைத்து அவன் வண்டலூர் செய்தான். அவள் ஆலோசனைகள் மட்டும் சொன்னாள்.
‘சக்தி விகடன்ல என்னென்னைக்கு என்ன சுண்டல் பண்ணணும்னு போட்டிருக்காங்க, படிச்சீங்களோ ? இன்னிக்குக் கொண்டக் கடலையயை நீங்களே தண்ணியில ஊறப் போட்டுடுங்க. நான் நாளைக்குத்தானே குளிக்கறேன் ‘
சுடச்சுடச் சுண்டலும் செய்தான், சுடர் மணி விளக்கேற்றினான்,
தினம் தினம் சுலோகங்களும் சொன்னான்.
—- —- —-
புதுப்புது நவராத்திரி டிசைன்களில் கலர் கலரான புடவைகளிலும், பட்டுப் பாவாடைகளிலும் அவன் வீட்டில் பெண்டிர் குழுமியிருந்தார்கள். கீச்சுக்குரலிலும், கட்டைத் தொண்டையிலும், வசூல்ராஜாவிலிருந்தும் வக்காளியம்மன் நளவெண்பாவிலிருந்தும் பாட்டுக்கள் பாடப்பட்டன. ‘க்ஷிராப்தி கன்னிகே ஸ்ரீ மகாலஷ்மி ‘ என்று புரந்தரதாசரை ஒரு மாமி ராகமாலிகையில் அழைத்தால், ‘சரசிஜநாபசோதரி ‘ என்று மற்றொரு பாட்டி முத்துஸ்வாமி தீக்ஷிதரை நாககாந்தாரியில் வினவினாள்.
ஏழாவது படியில் கொலு வீற்றிருந்த அம்மன் இறங்கப் பயந்து எல்லோருக்கும் அங்கிருந்தே அருள் பாலித்தாள்.
எங்கும் ஒரே பெண்டிர். ஏகப்பட்ட குதூகலம்.
‘எல்லாம் நானே தான் செஞ்சேன். அவருக்கு இதுக்கெல்லாம் நேரம் எங்க இருக்கு ? எப்பப் பார்த்தாலும் ஆஃபீஸ், ஆஃபீஸ்னு ஓடிக்கிட்டே இருக்காரு, பாவம் ‘
‘எப்படிங்க நீங்களே தனியா கொலுப்படி கட்டினீங்க ? ‘
‘அய்யோ, அதையேன் கேக்கற, கிரிஜா. நானே ப்ளான் போட்டு, நானே டிசைன் பண்ணி, நானே அட்டைப் பொட்டிங்களை வெச்சே எல்லாத்தையும் கட்டி முடிச்சேன் ‘
‘அட, என்ன ஆச்சரியம்! அட்டைப் பொட்டிங்களை வெச்சே கொலுப்படி கட்டிட முடியும்னு உங்களுக்கு எப்படிங்க தோணிச்சு ? ‘ பேட்டி ஆரம்பித்தது.
‘ஓ, அதுவா ? இதெல்லாம் எர்த்க்வேக் அடிக்கடி வர ஏரியா இல்லியா, அதனால தான் ‘
‘ப்ளீஸ், அந்தப் படி டிசைனை நீங்க தயவுசெஞ்சு காப்புரிமை இல்லாம எங்களுக்குத் தரணும் ‘
‘எப்படி நீங்களே எல்லா பொம்மைங்களையும் அடுக்கினீங்க ? ‘
‘என்னத்தப் பண்றது, பாமா ? வீட்டுக்காரர் ஒண்ணும் சரியில்ல. ரெண்டு வருஷம் முன்னாடி மரத்துல படி கட்டறேன்னு அவர் அடிச்ச கூத்துல நான் பயந்தே போயி, அதான் இப்படி ஒரு ஐடியா. எல்லாம் நானே தான். எல்லாம் நானே தான். எல்லாம் நானே தான். ‘
—- —- —-
பூட்டிய பெட்ரூமில் தன்னந்தனியனாக ஜாவாவுடன் ? ? ? ? முட்டிமோதிப் பிறாண்டிக் கொண்டிருந்த நம் நாயகனுக்கு அந்தக் கணத்தில் தான் அந்த ஞானோதயம் பிறந்தது: ‘நவராத்திரி என்பது அம்பாளைக் கொண்டாடிப் பெண்டிர் நோன்பு நோற்று மகிழும் பண்டிகையே அல்ல. அதை நம்பாதீர்கள். ஆணினத்தை அடிமைப்படுத்தி அவலப்படுத்துவதே இதன் முதற் பெரும் நோக்கம். ‘
‘ஹே லண்டி ‘ என்று பெருங்குரலில் அவன் அலறினான்.
‘என்னங்க சத்தம் உங்க வீட்டு பெட்ரூம்ல ?
‘ஓ, அதுவா ? ஒண்ணுமில்ல. எங்க வூட்டுக்காரர் சுத்த பத்தமா சத்தமா சண்டி பூஜை பண்றாருங்க. ஆம்பளையா லட்சணமா நாம எதுவுமே பண்ணலியேன்னு அவருக்கு ஒரே வெட்கம். அதான் வெளியில வராமா தனியா உட்கார்ந்து பூஜை பண்ணிக்கிட்டிருக்காரு ‘
இப்போது சொல்லுங்கள். என்னுடைய சமூகவியல் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புக்காக எனக்கு நோபெல் பரிசு கிடைக்குமா, கிடைக்காதா ?
-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
- தமிழின் மறுமலர்ச்சி – 6
- பயங்கரவாதமும், பலதார மணமும்
- பெண்சிசுக்கொலைகளும் பிரிட்டிஷ் அரசாங்கமும்
- காஞ்சி சங்கராச்சாரியார் கைது
- ஆளுநர் பதவியும், ஒரு கேலிக்கூத்தும்
- இளித்ததாம் பித்தளை! – துக்ளக் இதழில் குருமூர்த்தி எழுதிய கட்டுரையின் தாக்கம்
- ஜெயேந்திரர் கைது – ஜெயலலிதா அரசின் தொடரும் அராஜகம்
- போரும் இஸ்லாமும்
- செயேந்திரரும் அவரின் சீட கோடிகளும்
- மெய்மையின் மயக்கம்-26
- காணாமல் போன கடிதங்கள்
- தமிழர்களின் அணு அறிவு
- வையாபுரிப் பிள்ளை – செய்ய வேண்டியவை
- ஜெயேந்திரர் கைது பற்றி அறிக்கை
- ஓவியப் பக்கம் ஏழு – இஸாமு நகூச்சி – வெளியை உணர்த்தும் ச்ிற்ப உடல்
- மக்கள் தெய்வங்களின் கதை – 10
- பார்த்திபனின் அமெரிக்கத் தமிழர் பற்றிய பேச்சு
- கடிதம் நவம்பர் 18,2004
- கடிதம் நவம்பர் 18,2004
- ஒடுக்குமுறைக்கு எதிரான அரங்கு – நவம்பர் 21, 2004
- கடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 1. இறுதி நபி
- கடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 2. பர்தா
- கடிதம் நவம்பர் 18,2004 – இயக்குனர் வான் கோவின் குறும்படம்
- ஃபோட்டோ செய்தி: தைரியலஷ்மியின் பக்தர் நேரியல் கட்டி…. கைகட்டி பணிவாக…
- ஆசாரகீனனின் ஏக்கம் தீர்ந்ததென்றால்
- அவளோட ராவுகள் -3
- எலிமருந்துக்காரனின் பகல் சாப்பாட்டு நேரம் – அருண் கொலட்கர்
- அறிவியல் புனைகதை வரிசை 1 : ஐந்தாவது மருந்து
- செக்கென்ன ? சிவலிங்கமென்ன ?
- வெகுண்டு
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -46
- சகுந்தலா சொல்லப் போகிறாள்
- நெஞ்சுக்குள்ளே ஆசை
- நகரில் தொலைந்த நட்சத்திரங்கள்
- கவிதைகள்
- தீ தந்த மனசு
- கவிக்கட்டு 35 – வசந்தகாலங்கள்
- ஞானப் பெண்ணே
- மீரா – அருண் கொலட்கர்
- புரூட்டஸ்
- நன்றி, சங்கரா! நன்றி!!
- பெரியபுராணம் – 18 : 2.தில்லைவாழ் அந்தணர் சருக்கம்
- கீதாஞ்சலி (4) சிறைக் கைதி! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 3- பெண்புகல்பரிசு
- இந்தமுறை
- பாப்லோ நெரூடாவின் கவிதை : மாச்சு பிச்சுவின் மலை முகடுகள்
- அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்
- ஒப்புமை சைகையும், இலக்கமுறை சைகையும்
- பேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா ? இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (9)
- சங்கடமடமான சங்கரமடம்
- அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்