சி. ஜெயபாரதன், கனடா
அண்டவெளி நிலையத்தின் முதல் தோற்றம்.
1961 இல் ரஷ்யாவின் முதல் அகில விமானி, யூரி ககாரின் [Cosmonaut, Yuri Gagarin] விண்வெளியில் பறப்பதற்கு முன்பே ரஷ்யாவும், அமெரிக்காவும் அண்டவெளி நிலையங்களை [Space Stations] உருவாக்கிப் பூமியைச் சுற்றிவரத் திட்ட மிட்டுக் கொண்டிருந்தன. 1969 ஆம் ஆண்டு நிலவுப் போட்டியில் தோற்றுப் போன ரஷ்யா, விண்வெளி நிலைய அமைப்பில் தீவிரமாய் முற்பட்டு வெற்றி அடைந்து, அந்த முயற்சியில் அனைவரையும் முந்திக் கொண்டது! 1971 ஏப்ரல் மாதம் ரஷ்யா தனது முதல் ஸல்யூட் [Salyut-1] விண்ணிலையத்தைப் பூமியைச் சுற்றிவர ஏவியது. ஜெட் விமானப் பயிற்சியின் போது, 1968 இல் மாண்டு போன அகில விமானி, யூரி ககாரினுக்கு மதிப்பளிக்க [Salyut], ஸல்யூட்டை ரஷ்யா அண்டவெளியில் மிதக்க விட்டது. ரஷ்ய மொழியில் ஸல்யூட் என்றால் வந்தனம் என்பது பொருள்.
மீண்டும் மீண்டும் பயன்படும் விண்வெளி மீள்கப்பல்களை அமைத்த பின், நீண்ட காலம் பூஜிய ஈர்ப்பு [Zero Gravity] நிலையில் அண்டவெளியைச் சுற்றி வர வேண்டும் என்னும் குறிக்கோளில் ரஷ்யா, அமெரிக்க ஆகிய இரு நாடுகளும் அண்டவெளி நிலையங்களை நிர்மானிக்க முற்பட்டன. செவ்வாய்க் கோளுக்கு அடுத்து மனிதர் பயணம் செய்ய வேண்டுமாயின், அந்த நீண்ட காலப் பயிற்சி விமானிகளுக்கு மிகவும் தேவைப் பட்டது.
முதலில் சுற்றி வந்த ரஷ்யாவின் அண்டவெளி நிலையங்கள்
19 டன் எடையுடன், ஒற்றைத் தொடுப்பகம் [Single Module] உடைய ஸல்யூட்-1, நிலையம் 3500 cu ft கொள்ளளவு [Volume] கொண்டது. ரஷ்ய அகில விமானிகள் பூமிக்கும் ஸல்யூட் நிலையத்திற்கும், ஸோயஸ் [Soyuz] விண்கப்பல் மூலம் பயணம் செய்தனர். 1971 இல் மூன்று விமானிகள் 23 நாட்கள் ஸல்யூட் விண்வெளி நிலையத்தில் தங்கிப் புதிய விண்வெளி முத்திரையை [New Space Record] ஏற்படுத்தினர். ஆனால் எதிர்பாராத விதமாக அவர்கள் திரும்பிச் சென்ற ஸோயஸ் விண்கப்பல் பூமியின் வாயு மண்டலத்தை நெருங்கும் முன்பே பழுது உண்டாகி, பிராணவாயு கசிந்து வெளியேறி, சுவாசிக்க முடியாது மூச்சு முட்டி மூவரும் மாண்டு போனார்கள். ஸோயஸ் சுயக் கட்டுப்பாட்டில் மூவரது உடலுடன் பூமிக்கு மீண்டது.
அடுத்து [1974-1982] எட்டு ஆண்டுகளுக்குள் ரஷ்யா ஆறு புதிய ஸல்யூட் நிலையங்களைப் பூமியின் சுழல்வீதியில் ஏவியது. அவற்றில் ஸல்யூட்-3,-4 ஆகிய நிலையங்கள் இராணுவ உளவுகள் செய்யப் பூமியைச் சுற்றி வந்தன. நிலையங்கள் ஸல்யூட்-6, -7 விமானிகளின் சுழல்வீதி இல்லமாகிப் [Orbital Home] புதிய விண்வெளி முத்திரைகளை உண்டாக்க உதவின. 1980 இல் ஸல்யூட்-6 விண்கப்பலை இயக்கிய பெண் விமானி வாலரி ரியூமின் [Valerie Ryumin], ஆண் விமானி லியோனிட் பாபாவ் [Leonid Popov] ஆகியோர் இருவரும் விண்வெளியில் 185 நாட்கள் முதல் முறைச் சுற்றி வந்தார்கள். ஸல்யூட்-7 நிலையம் 237 நாட்கள் பூமியைச் சுற்றி வந்து, 1985 இல் நிலையத்தின் மின்சார ஏற்பாடு பழுதாகி முடமானது! அது பிறகு செப்பனிடப் பட்டாலும் பல பிரச்சனைக் குள்ளாகி, 1986 ஆண்டின் இடையே, விண்வெளியில் இறுதியாகக் கைவிடப் பட்டது!
அமெரிக்கா முதலில் அனுப்பிய அண்டவெளி ஆய்வகம்
1973 மே மாதம் அமெரிக்கா தனது முதல் அண்டவெளி ஆய்வகத்தை [SkyLab] ஏவியது. எழுச்சி யானதும் ஓர் அமைப்புப் கோளாறால் [Design Flaw] அது சிதைவுற்றது! ஆய்வக நிலையத்தின் எரிக்கல் தடுப்புறை [Meteoroid Shield] கிழிந்து, விசிறி போன்ற பரிதி இதழ்கள் [Winglike Solar Panels] இரண்டில் ஒன்று உடைந்து, மின்சாரத் தயாரிப்புக் குன்றிப் போனது! செப்பனிடும் மூவர் குழு [பீட்டர் கொன்ராடு, ஜோசப் கெர்வின், பால் வைட்ஸ்] வெப்பவுறை [Sunshield] ஒன்றை நிறுவி, ஆய்வக உள்ளறை உஷ்ணத்தைத் தணித்து, அடுத்த பரிதி இதழை விடுவித்து மின்சாரத்தை மீட்டினர். அதுவும் பின்னால் மின்சாரப் பரிமாற்றம் தவறிப் பயன் படாமல் போனது.
இத்தனைச் சிக்கல்கள் இருப்பினும், விண்வெளி ஆய்வகம் ஒப்பற்ற விஞ்ஞானத் தகவல்களைத் தந்துள்ளது. இருமுறைத் தரை விமானிகள் பிறகும் அபோலோ விண்சிமிழில் [Apollo Spacecraft] பயணம் செய்து, ஆய்வகத்தோடு இணைப்பு [Docking] செய்து, நீண்ட காலப் பயணங்களில் முறையே 56 நாட்கள், அடுத்து 84 நாட்கள் தங்கிப் பயிற்சி பெற்றனர். மனிதர் மருத்துவத் தேர்வுகளும், பல விஞ்ஞானச் சோதனைகளும் செய்யப் பட்டன.
அமெரிக்காவின் முதல் அண்டவெளி ஆய்வகம் போதுமான உதைப்பு [Thrust] விசை உந்தும் திறமை அற்றது. ஆதலால் அது பூமியைச் சுற்றிவரும் சுழல்வீதிச் சிறுகச் சிறுகத் தேய்ந்தது. பூமியின் வாயு மண்டலத்தை அண்டிய போது, உராய்வு வெப்பம் ஆய்வகத்தின் வேகத்தையும், உயரத்தையும் பாதித்து, 1979 ஜூலை மாதம் பூகோள மறு நுழைவின் [Re-entry] போது சிதைந்து, இந்து மகாக் கடலில் விழுந்தது.
ரஷ்யாவின் மாபெரும் மீர் விண்வெளி நிலையம்
உலகச் சமாதானத்தின் சின்னமாக, ரஷ்யா முதன் முதலில் உருவாக்கிய மீர் [Mir] அண்டவெளி நிலையம், மனித இனம் பூமியிலிருந்து மீள்கப்பலில் [Space Shuttle] பயணம் செய்து, விண்வெளியில் பூஜிய ஈர்ப்புச் சூழ்நிலையில் நிரந்தரமாய்க் குடியேற அடிகோலியது. 1986 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ஏவப்பட்ட நிலையம், ரஷ்ய மொழியில் ‘சமாதானம் ‘ [Mir] எனப் பெயர் சூடப் பட்டது. அதற்கு முன்பே முதலில் அமைக்கப் பட்ட ஸல்யூட் [Salyut] நிலையத்தின் அளவிலே நிறுவன மானது, மீர் புது நிலையம். முதலில் ரஷ்ய விண்வெளிக் கப்பல் ஸோயுஸ் [Soyuz] மூலமாக விண்வெளி ஆய்வாளர்கள் பயணம் செய்து, மீர் நிலையத் தோடு இணைக்கப் பட்டு இடம் மாறிக்கொண்டனர். பிறகு அமெரிக்காவின் மீள்கப்பல் அட்லாண்டிஸ் [Space Shuttle, Atlantis] மீர் நிலையத்தோடு இணைப்பு நிகழ்த்தப் பொருத்தமான புதிய காற்றடைப்பு அறை [Airlock Chamber] ஒன்று சேர்க்கப் பட்டது.
விரியும் வசதிள்ள மீர் நிலையம் ஆரம்பத்தில் ஒரு பிரதமத் தொடுப்பகம் [Single Core Module] பெற்றுப், பூமியின் சுழல்வீதியில் [Earth Orbit] சுற்றிவர விடப் பட்டது. இறுதியில் ஏழு தொடுப்பகங்கள் [Seven Modules] இணைக்கப் பட்டு மீர் நிலையம் மிகப் பெரிதாக விரிந்தது. அமெரிக்கா, ஆஸ்டிரியா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், பல்கேரியா, சிரியா, காஸக்ஸ்தான் போன்ற நாடுகளின் விண்வெளி விமானிகள் [Astronauts] விண்கப்பல்களில் பயணம் செய்து, மீர் நிலையத்தில் ரஷ்ய நிபுணர்களுடன் பணியாற்றி யுள்ளனர் என்று அறியும் போது, ரஷ்யா தன் நிலையத்திற்கு சாமாதானம் எனப் பெயரிட்டதற்கு மிகவும் பொருத்தமாகிறது.
ரஷ்ய மீர் நிலையத்தின் அமைப்புகள், தொடுப்பக இணைப்புகள்
ரஷ்யா இறுதியில் அமைத்த மீர் நிலையம் இதுவரை உருவான எல்லா நிலையங்களையும் விடப் பெரியது. அதன் இறுதிக் கொள்ளளவு [Volume] 13,600 cu ft. எடை 130 டன். 62 அடி நீளமுள்ளது. நீளம் 40 அடி, விட்டம் 13.5 அடி, 23 டன் எடை கொண்ட அதன் பிரதமத் தொடுப்பகத்தில் [Core Module] கட்டளைக் கருவிகளும், விமானிகள் தங்குமிடமும் இருந்தன. நான்கு சூரிய இதழ்கள் [Solar Panels] வெப்ப சக்தியை மின்சக்தியாய் மாற்றி நிலையத்திற்குப் பரிமாறின. வால் புறத்தில் சுழவீதியைக் கட்டுப் படுத்த உந்து விசை தரும் இரண்டு பெரும் ராக்கெட் எஞ்சின்கள். அடுத்து நிலையத்தின் நேர், மட்ட, எதிர் [X,Y,Z Axes] அச்சுகளைக் கட்டுப் படுத்த 32 சிறு உதைப்பு எஞ்சின்கள் [Thrusters]. பயணிகளையும் பண்டங்களையும் சுமந்து வரும் விண்கப்பல் இணைய, தொடுப்பகத்தின் இரு முனைகளிலும் ஓர் இணைப்பு நுழைவாயில் [Docking Port]. பின்புறம் உள்ள நுழைவாயில் வழியாக பயணிகள் தங்கும் இடத்தை அணுகலாம். அங்கு சமயலறை, சாப்பிடும் அறை, உடற் பயிற்சி அறை, துயிலும் அறை போன்றவை அமைக்கப் பட்டுள்ளன.
தங்கும் இடத்திற்கு முன்புள்ளது, மீர் நிலைய ஆட்சி அறை. ஆட்சி அறையிலிருந்து முன் வாயிலுக்கும், புதிதாய் பிணைக்க விருக்கும் நான்கு தொடுப்பகத்தின் [Modules] நுழை வாயில்களுக்கும் செல்ல முடியும். அவற்றைப் பூமியிலிருந்து கிளம்பும் விண்கப்பல் சுமந்து முதலில் முன் நுழை வாயிலில் அவை ஒவ்வொன்றாகத் தனியே இணைக்கப் படும். பிறகு தூரக் கையாட்சிக் கரத்தைப் [Robot Arm] பயன்படுத்தி, உரிய முனையில் அவைத் தனியே பிணைக்கப் படுகின்றன.
1987 இல் இணைக்கப் பட்ட 11 டன் எடையுள்ள முதல் குவாண்டம் தொடுப்பகத்தில் [Quantum-1 Module] தொலை நோக்கிகள், உயிர்ப் பாதுகாப்புச் சாதனங்கள் [Life Support Equipment], அண்டவெளிப் பெளதிக ஆய்வகம் [Astro-Physics Lab] இருந்தன. 1989 இல் பிணைக்கப் பட்ட 19 டன் எடையுள்ள இரண்டாம் குவாண்டம் தொடுப்பகத்தில் [Quantum-2 Module] மீர் இயக்கச் சாதனங்கள், அண்டவெளி நீச்சல் [Space Walk] புரியக் காற்றடைப்பு அறை [Airlock Chamber] ஆகியவை இருந்தன. விண்வெளியில் பறப்பதற்கு உதவும், வாயு அழுத்தத்தில் இயங்கும் முதுகுப் பைக்கருவிகள் [Back-Packs] காற்றடைப்பு அறையில் வைக்கப் பட்டிருந்தன. அவற்றை இரு ரஷ்ய விமானிகள் 1990 இல் பயன்படுத்தி, நிலையத்திற்கு அப்பால் முதன் முறையாகப் பயணம் செய்து, பணி புரிந்து மீண்டார்கள்.
1990 இல் அடுத்து பிணைக்கப் பட்ட கிரிஸ்டல் ஆய்வகத் தொடுப்பகத்தில் [Crystal Lab Module] ரஷ்யாவின் மீள்கப்பல் புரான் [Buran] இணைவதற்கு ஒரு தனி இணைப்பு நுழைவாயில் [Special Docking Port] ஆக்கப் பட்டிருந்தது. 1989 இல் முதல் முறைச் சிறப்பாகப் பயணம் செய்த புரான் மீள்கப்பல், 1991 இல் சோவியத் யூனியன் கவிழ்ந்து போனதும், பணமுடையால் அடுத்து மீளாமல் ஓய்வு பெற்றது!
நீண்ட காலம் பூஜிய ஈர்ப்பு [Zero Gravity] நிலையத்தில் பொழுதை போக்கிய விண்வெளிப் பயணிகள், மிகவும் சிரமத்தில் அல்லலுற்று, அவதியுற்று, அடைபட்டுக் கிடந்தனர்! நீண்ட கால எடையற்ற சூழ்நிலை அவரது உடல் நலத்தை நிரந்தரமாய்ப் பாதித்தது! அவற்றில் முக்கியமாக தசைச் சோர்வு [Muscle Atrophy], இருதய ரத்தக் குழாய்ப் பலவீனம் [Cardiovascular Weakness], எலும்புத் தாதுக்கள் இழப்பு [Loss of Bone Minerals], மனவியல் இறுக்கம் [Psychological Stress], மனச்சலிப்பு, தனிமை உணர்ச்சி [Boredom & Isolation] ஆகியவை குறிப்பிடத் தக்கவை.
அமெரிக்க விண்வெளி மீள்கப்பல்கள் ரஷ்ய நிலையத்துடன் இணைப்பு
எண்ணற்ற விண்கப்பல்கள் ரஷ்யாவின் மீர் நிலையத்தோடு இணைந்து, ஒப்பற்ற பணிகள் பல புரிந்துள்ளன. 50 மேற்பட்ட மனிதரற்ற சுய இயங்கிச் சுமைக் கப்பல்கள் உணவு, எரித்திரவம், தண்ணீர், வாயுக்கள், விஞ்ஞானச் சாதனங்கள், உபரி உறுப்புகள் [Spare Parts] போன்றவை 100 டன்னுக்கும் மேலாக எடுத்துச் சென்றுள்ளன. கடைசிப் பத்து ஆண்டுகளாக 11 தடவை மனிதர் இயக்கும் ரஷ்ய ஸோயஸ் [Soyuz] இணைப்புகள், மற்றும் 9 முறை அமெரிக்க மீள்கப்பல் இணைப்புகள், மீர் நிலையத்துடன் நிகழ்ந்திருக்கின்றன. ஏழு அமெரிக்க விண்வெளி விமானிகள் மீர் நிலையத்தில் நீண்ட காலப் பயிற்சியில் ஈடுபட்டு எதிர்காலச் செவ்வாய்ப் பயணத்திற்கு அனுபவம் பெற்றனர். அவர்களில் ஒருவரான ஷானன் லூஸிட் [Shannon Lucid] 1996 இல் 186 நாட்கள் தங்கிச் சகிப்புநிலைச் சோதனையில் ஒரு சிறப்புப் பதிவை [Endurance Record] ஏற்படுத்தினார். பதிமூன்று ஆண்டுகளில் சுமார் 100 ரஷ்ய, அமெரிக்க அண்ட வெளி விமானிகள் மீள்கப்பல்களில் பயணம் செய்து, மீர் நிலையத்தில் தங்கி ஆய்வுகள், பயிற்சிகள் புரிந்துள்ளனர்.
1995 ஆண்டு முதல் அமெரிக்க, ரஷ்ய விண்வெளிப் பயணக் கூட்டுறவுப் பணிகள் ஆரம்பித்தன! அமெரிக்க மீள்கப்பல் அட்லாண்டிஸ் [Space Shuttle, Columbia] ரஷ்ய மீள்கப்பல் புரானின் நுழைவாயிலைப் பயன்படுத்திக் கொண்டு, 1995 ஜூன் மாதம் முதன் முதல் மீர் அண்டவெளி நிலையத்துடன் இணைந்து ஒரு புதிய விண்வெளிச் சரித்திர விந்தை புரிந்தது! அடுத்து 1995 நவம்பரில் அட்லாண்டிஸ் மீர் நிலையத்தோடு எளிதாய் இணைய, ஓர் மாறுபட்ட தொடுப்பை [Attachment] ஏந்திச் சென்று, மீர் நிலையத்துடன் சேர்த்தது. அதுபோல் 1997 இல் புது அமெரிக்க மீள்கப்பல் எண்டவர் [Space Shuttle, Endeavour] மீர் இணைப்பு வாயிலைப் மாட்டிக் கொண்டு, 1998 இல் முதன் முதல் மீர் நிலையத்துடன் இணைந்தது.
அமெரிக்காவின் 1600 பவுண்டு எடையுள்ள விஞ்ஞானச் சாதனங்களை ஏற்றிக் கொண்டு, ஸ்பெக்டிரம் ஆய்வகக் தொடுப்பகம் [Spectrum Lab Module], 1995 மே மாதம் அனுப்பப் பட்டு, மீர் நிலையத்தோடு பிணைக்கப் பட்டது! 1997 இல் மனிதரற்ற விண்வெளிச் சுமைக்கப்பல் [Cargo Ship] ஒன்று, ஸ்பெக்டிரம் தொடுப்பகத்துடன் மோதித் துளையிட்டு விட்டதால், விமானிகள் அதைத் தீண்டாதவாறு தனித்திட்டு ஒதுக்க வேண்டியதாயிற்று!
1996 இல் இணைந்த நேச்சர் ஆய்வகத் தொடுப்பகம் [Nature Lab Module] அமெரிக்க, ஈரோப்பிய நாடுகளின் விஞ்ஞானச் சாதனங்களை ஏற்றிச் சென்றது. அமெரிக்க மீள்கப்பல்களைத் தவிர, மற்ற தொடுப்பகங்கள் யாவும் புரோடான் ராக்கெட் [Proton Rockets] மூலம், ரஷ்யாவின் மாபெரும் காஸக்ஸ்தான் பைகோனர் அகிலக் கூண்டிலிருந்து [Baikonur Cosmodrome, Kazakhstan] ஏவப்பட்டவை. நிலையத்தில் நீண்ட நாட்கள் பயணம் செய்த ரஷ்ய விமானி ஒருவர் 1987 இல் 326 நாட்கள், இருவிமானிகள் 1988 இல் 366 நாட்கள், இறுதியில் ஒருவர் 1995 இல் 438 நாட்கள் தங்கிப் புதுப் புது உலக விண்வெளி முத்திரையை [World Space Record] ஏற்படுத்திப் பின் அதையும் மிஞ்சினர். இதுவரை மீர் நிலையத்தில் சுமார் 16,500 வேறுபாடான விஞ்ஞானச் சோதனைகள் வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் மீர் அண்டவெளி நிலையத்தின் அழிவு காலம்!
பூமியைப் பதிமூன்று ஆண்டுகளாகச் சுற்றி வரும் மீர் நிலையம், 1997 ஆண்டு முதல் அடுத்தடுத்து சாதனச் சீர்கேடுகள் விளைந்து, சிறிது சிறிதாய் செத்துக் கொண்டு வந்தது! சுமார் 1600 பழுதுகளையும், தவறுகளையும் தப்பி, மீர் நிலையம் பலமுறைப் பிழைத்துள்ளது! அதைக் இராப் பகலாய்க் கண்காணித்து வரும் மின்கணனிகள் பலமுறை முடமாகி, அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பி விமானிகளின் நாடித் துடிப்பை மிகைப் படித்தின! ஒருதரம் நிலையத்தில் தீப்பற்றிப் பலரது உயிருக்கு ஆபத்து நேர இருந்தது! அடுத்து, இணைக்க நெருங்கிய மனிதரற்ற விண்கப்பல் ஒன்று, மீர் நிலையத்துடன் மோதிச் சேதம் விளைவித்தது! நிலையத்தின் சில சூரிய இதழ்கள் [Solar Panels] நசுங்கி மின்சக்தித் திறம் குன்றியது! நல்ல வேளை, சில பழுதுகளை அவ்வப்போது பூமியிலிருந்து செப்பனிடும் குழுவினர் பறந்து வந்து, சீர்ப்படுத்த முடிந்தது. இறுதியில் இருந்த இரண்டு ரஷ்ய நபர்களும், ஒரு பிரென்ச் நிபுணரும் கடைசியில் வெளியேறிய நாள், 1999 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27 தேதி!
ரஷ்ய விண்வெளி ஆணையகம் [Russian Space Agency] 2000 ஆண்டு வேனிற் காலத்தில் மீர் நிலையம் சுழல்வீதியிலிருந்து அற்று விடப்பட்டு, பூவாயு மண்டலத்தில் எரிந்து போகத் திட்ட மிட்டது! அப்போது மீர்கார்ப் [Mircorp] என்ற தனியார் கம்பேனி, உதவிக்கு வந்து தற்காலிய மாகக் காப்பாற்றியது. மீர் நிலையத்தை ஒரு வாணிபத் துணிவு முயற்சியாக [Commercial Venture] மாற்ற மீர்கார்ப் முற்பட்டு, அதற்குச் செல்வந்தர் [Investors] யாரும் முன்வந்து ஆதரவு தராததால் தோல்வி யுற்றது!
2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்ய விண்கப்பல் தரைக் கட்டளைக் குழுவினர் [Spacecraft Ground Controllers], தென் பசிஃபிக் கடலின் ஒதுக்குப் புறத்தில் மீர் நிலையம் விழுந்து மூழ்கிப் போக ஆணை யிட்டு அதை நிரந்தரமாகப் புதைத்தார்கள்!
அண்டவெளிப் பயணத்துக்கு ஆகும் பணச்செலவுகள்
பெருமளவில் அண்டவெளி விஞ்ஞான ஆராய்ச்சித் திட்டங்களை ஒழுங்காக உருவாக்க, ஒரு நாட்டின் பொருளாதார நிலைச் சீராக இருக்க வேண்டும். விஞ்ஞானிகளின் தீராத அண்டவெளி வேட்கையைத் தணிக்க, அரசாங்கம் பில்லியன் கணக்கில் டாலர் பணத்தை வாரி வாரி இறைத்துக் கொண்டு வரவேண்டும். தற்சமயம் அத்தகையச் சீரான பணம் கொழித்தச் செல்வநிலை அமெரிக்க நாட்டைத் தவிர வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை! இருபதாம் நூற்றாண்டின் இடையில் பொதுடைமை சோவித் யூனியன் போட்டி போட்டுச் சந்திர மண்டல யாத்திரையில் தோற்ற பின், ரஷ்யாவின் அண்டவெளி முயற்சிகள் தேய்ந்து கொண்டே வந்தன! 1990 ஆண்டுக்குப் பிறகு சோவியத் யூனியன் கவிழ்ந்தபின், ரஷ்யாவில் பெருத்த பணமுடை ஏற்பட்டதும், அதன் திட்டங்கள் யாவும் சுருங்கி, வெறும் அண்டவெளி நிலையத்தை மட்டும் பராமரித்துக் கொண்டிருந்தது! ரஷ்யாவின் செல்வநிலை முடங்கிப் போனதால், விண்வெளியில் பழுதாகிப் போன மீர் நிலையம் சீர்குலைந்து சிதைந்து போனதைச் செப்பனிட முடியாமல் கைவிடப் பட்டது! ஈரோப்பில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகியவை உள்பட 13 நாடுகள் 1975 இல் ஒன்று சேர்ந்து ஈசா என்னும் ஈரோப்பியன் அண்டவெளி ஆணையகத்தைத் [European Space Agency, ESA] துவங்கிச் செலவைப் பங்கிட்டு நாசாவைப் போல் இயங்கி வருகின்றன. ஜப்பான், கனடா, ரஷ்யா ஆகிய நாடுகளும் இப்போது ஈசாவுடன் சேர்ந்து அகில நாடுகளின் அண்டவெளி நிலைய அமைப்பிற்குச் சாதனங்களையும் சோதனைகளையும் அளித்து வருகின்றன.
அபோலோ நிலவுத் திட்டம் [Apollo Moon Program] மட்டும் 1990 ஆண்டு மதிப்பில் 100 பில்லியன் டாலர் பெருத்த செலவில் நிறவேறி யுள்ளது. இப்போது காங்கிரஸ் நாசாவின் செலவைக் குறைத்து, அதன் பணியாளர்களின் எண்ணிக்கை சிறுத்து விட்டது. அமெரிக்கா தொடர்ந்து அண்டவெளி மீது படையெடுக்க ஈரோப்பிய நாடுகளின் ஈசாவுடன் இணைந்து கொண்டு, பணச் செலவைப் பங்கிட்டுக் கொள்ளலாம் என்பது அமெரிக்க விஞ்ஞானிகளின் ஓர் ஆலோசனை. மாபெரும் சாதனங்களான ராக்கெட் எஞ்சின்களையும், விண்வெளிக் கப்பல்களையும் மீண்டும், மீண்டும் பயன்படுத்த அமைக்கப் பட வேண்டும் என்பது அவர்களின் அடுத்த ஆலோசனை! அந்தப் பாதையில் அமெரிக்கா இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு கட்ட மீளும் ராக்கெட் வாகனம் [Single Stage Reusable Space Vehicle] ஒன்றை உருவாக்க முற்பட்டிருக்கிறது.
அகில நாடுகளின் முதல் பிரம்மாண்டமான விண்வெளி நிலைய அமைப்பு
நாசாவின் நீண்ட காலத்திய வேட்கை, பூமியைச் சுற்றிவரும் ஓர் நிரந்தர அண்டவெளி நிலைய அமைப்பு. 1984 ஆண்டில் ஜனாதிபதி ரேகன் [President, Reagan] சுதந்திரம் எனப்படும் விண்வெளி நிலையம் [Space Station, Freedom] அமைக்க அனுமதி அளித்தாலும் அரசியல் எதிர்ப்பும், பணக்கொடை மறுப்பும் இடையூறாய் இருந்து கொண்டிருந்தன. 1993 இல் பல திருத்தலுடன் மாறுபட்டு ரஷ்யா, ஜப்பான், கனடா அமெரிக்கா மற்றும் ஈரோப்பியன் விண்வெளி ஆணை யகத்தின் [European Space Agency] பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, நார்வே, சுவீடன், டென்மார்க், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து அடுத்து பிரேஸில் ஆகிய 16 உலக நாடுகளின் கூட்டுத் துணிவு முயற்சியாய், நாசா அகில நாட்டு அண்ட வெளி நிலயத்தைத் [International Space Station] திட்டமிட்டு அமைக்க முற்பட்டது.
அத்திட்டப்படி முதலில் ரஷ்யா தான் உருவாக்கிய அண்டவெளித் தொடுப்பகம் ஸாரியாவை [Zarya Module] 1998 நவம்பர் 20 ஆம் தேதி ஏவியது. ஸாரியா என்றால் சூரிய உதயம் என்று பொருள். ஸாரியா பரிதி போல் நிலையத்தை இயக்கும் மின்திறனையும், ஓட்டும் உந்து சக்தியையும் [Power & Propulsion] பரிமாறுகிறது. அதே வருடம் டிசம்பரில் அமெரிக்கா தயாரித்து ஏவிய ஐக்கியத் தொடுப்பகம் [Unity Module], ஸாரியாவிலிருந்து நிலயத்தின் மற்ற பாகங்களுக்கு போகும் இணைப்புப் பாதையாய் விளங்குகிறது. அடுத்து ரஷ்யா 2000 ஆண்டு ஜூலையில் மனிதர் உலவிடும் ஸ்வேஸ்டா [Zvezda] பணித் தொடுப்பகத்தை [Service Module] ஏவியது. அதன்பின் நீண்ட விண்வெளிக் குழு [Long Term Space Crew] அந்த ஆண்டு நவம்பர் மாதம் நிலையத்தில் முதலாவதாகக் குடி புகுந்தது.
அகில நாட்டு நிலையத்தை முடிக்க ஆரம்பத் தொகை மதிப்பீடு 40 பில்லியன் டாலர். அமெரிக்க அரசின் கணக்கியல் துறையகம் [Accounting Dept] 60 பில்லியன் டாலர் என்று மதிப்பீடு செய்துள்ளது. ஆகும் மொத்தச் செலவில் அமெரிக்கா மூன்றில் இரண்டு பாகம் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளது.
நூறு விதச் சிறப்புக்களுடன் அமைக்கப்படும் அகில நாட்டு நிலையம், ரஷ்யாவின் மீர் நிலையத்தை விட ஐந்து மடங்கு பெரியது. நாற்பது முறை ஏவிடத் திட்டமிடப் பட்டுள்ள மீள்கப்பல் பயணங்களில், சாதனங்கள் அனுப்பப் பட்டு நிலையம் முழுவதும் கட்டி முடிக்கப்படும். 2006 ஆம் ஆண்டு முடிவதாய்த் திட்டமிடப் பட்டுள்ள அகில நாட்டு அண்டவெளி நிலையம், ஏழு நபர் குழு எப்போதும் பணியாற்றி வர ஏதுவானதாய் அமைக்கப் பட்டுள்ளது. அந்த நிலையம் விஞ்ஞானிகள் புவியைப் பற்றி, மற்ற அகிலக் கோளங்களைப் பற்றி ஆழ்ந்து ஆராயும், உலகின் ஒப்பற்ற ஓர் ஆய்வுக் கூடமாய் விளங்கப் போகிறது. அங்கே விண்வெளியில் நீண்ட காலப் பயணத்தின் விளைவுகள் ஆராயப் படும். மனித இனம், மற்றும் பண்டங்கள் எடையற்ற சூழ்நிலையில் என்ன விளைவுகளைப் பெறும் என்பது அறியப்படும். இறுதியாக அண்டவெளிச் சாதன உற்பத்தி நுணுக்கச் செய்முறைகள் விருத்தி செய்யப்படும். நிலையம் நிறுவன ஆனபின் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் வரை நீடித்துப் பணி புரியும் என்று எதிபார்க்கப்படுகிறது.
************************************************
jayabar@bmts.com
- நிழல் பூசிய முகங்கள்
- திண்ணை அட்டவணை
- திண்ணை என்ன சொல்கிறது ?
- புதிரின் திசையில் – எனக்குப் பிடித்த கதைகள் – 21 (வண்ணநிலவனின் ‘அழைக்கிறவர்கள் ‘ )
- திலீப் குமாருக்கு விருது
- அவனியைப் பல்லாண்டு சுற்றிவரும் அண்டவெளி நிலையங்கள்
- அறிவியல் மேதைகள் கலிலியோ (Galileo)
- பெண்தெய்வம்
- எல்லாவற்றுக்குமாய்…
- அரசியல்வாதி ஆவி
- வெற்றிட பயணம்
- உலக நண்பர்கள் தினம் (ஆகஸ்ட் 4ம் திகதி)
- நான்காவது கொலை !!! (அத்தியாயம் : ஒன்று)
- அச்சம்
- மாதுரி, பிரகாஷை உடனே விடுதலை செய்யவேண்டும்
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 4 2002
- உலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை – 2
- சகிப்புத்தன்மையில்லாத திராவிடர் கழகம்
- இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 7 (அத்தியாயம் 7 – இந்துத்துவ அணுகுண்டு)
- இதயத்தின் எளிமை (Simplicity of the heart)
- நெஞ்சு பொறுக்குதில்லையே..
- வீசும் வரை……
- போதி நிலா
- கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்