அவதூறுகள் தொடாத இடம்

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

ஜெயமோகன்


‘நெரூதா என்னிடம் சொன்னார் . ‘ நீங்கள் பிரபலமடைகிறீர்கள். உங்களுக்காக காத்திருப்பது என்ன என்று சொல்கிறேன். நீங்கள் எந்த அளவுக்கு பிரபலமடைகிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் தாக்கப்படுவீர்கள். ஒவ்வொரு அங்கீகாரத்துக்கும் ஒன்றோ இரண்டோ அவமதிப்புகள் வரும். என் மனம் நிரம்புமளவுக்கு அவமதிப்புகளும் வசைகளும் அவதூறுகளும் கிடைத்துள்ளன. திருடன், கொலைக்காரன், பொறுக்கி ,வஞ்சகன், வேசியின் கணவன் என்றெல்லாம்… ஆனால் நான் விட்டுக்கொடுத்தது இல்லை… ‘

நெரூதா சொன்னது உண்மையாயிற்று. இன்று என் உள்ளத்தில் மட்டுமல்ல , என் பெட்டிகள் நிறைய அவதூறுகளும் அவமதிப்புகளும் ததும்பும் கட்டுரைகள் குவிந்துள்ளன… ‘ ‘

— லத்தீனமேரிக்க எழுத்தாளர் மரியோ வார்கா லோஸா [ ரிச்சார்டோ எ சோட்டி எடுத்த பேட்டி ]

இந்த மூன்றுமாதங்களில் தமிழில் என்னைப்பற்றி முப்பத்துஎட்டு வசை,அவதூறுக்கட்டுரைகள் வந்துள்ளன என்று ஆய்வுமாணவரான நண்பர் ஒருவர் சொன்னார். ஒருவேளை நவீனத்தமிழின் ஐம்பதாண்டுகால வரலாற்றிலேயே ஒரு எழுத்தாளரைப்பற்றி இந்த அளவுக்கு தாக்குதல்கள் வந்தது இல்லை. தமிழில் இதற்கு முன்பு இத்தகைய கடுமையான கூட்டமான தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என்றால் ஒன்று தமிழ் இலக்கியம் குறித்த தன் காலக்கணிப்பை முன்வைத்தமைக்காக எஸ்.வையாபுரிப்பிள்ளை, புதுக்கவிதை எழுத்தாளர்களை முக்கிய கவிஞர்களாக முன்வைத்தமைக்காக க.நா.சுப்ரமணியம் ஆகியோர் தாக்கப்பட்டமையைத்தான் சொல்லவேண்டும். அவற்றிலும் இலக்கியவிவாத தன்மையை விட அவதூறுகள், தனிப்பட்டவசைகள் ஆகியவையே அதிகம். ஆனால் இம்முறை இந்த ஒட்டுமொத்த கட்டுரைகளிலும் ஒரு இலக்கியவிமரிசன கருத்துகூட இல்லை. என் நாவல்கள், கதைகள் நான் முன்வைத்த விரிவான திறனாய்வுக் கருத்துக்கள் ஆகிய எவையுமே பொருட்படுத்தப்படவில்லை. வெறும்வசை மட்டுமே.

நான் மலையாளத்தை தாய்மொழியாக கொண்டவன் என்ற விஷயம் செம்மலர் முதல் காலச்சுவடு வரை அனைவராலும் மீண்டும் மீண்டும் முக்கிய வசையாக பயன்படுத்தப்பட்டது. அதற்குமேல் ஒரு மனிதனைப்பற்றி வெறுப்புடன் என்னென்ன சொல்லப்பட முடியுமோ எல்லாம் . மனநோயாளி என்று காலச்சுவடு தொடங்கிவைத்த குற்றச்சாட்டு ஏராளமானவர்களால் சொல்லப்பட்டுள்ளது. அது எனக்கு ஓரளவு உற்சாகத்தையே அளித்தது. அதை நான் மறுக்கப்போவது இல்லை. அதன் மூலம் சில செளகரியங்கள் கிடைப்பதை அறிந்திருக்கிறேன். நான் மலையாளி என்பதை என் முதல் நூலின் பின்னட்டையில் அச்சிட்டபடி தமிழில் நுழைந்தவன்நான். என் வாசகர்கள் அதை நன்கறிந்தே என்னை ஏற்றுக்கொண்டார்கள். எந்த கேரள மேடையிலும் என் தாய்மொழி மலையாளமாயினும் என் மனதின் மொழி தமிழ் என்று சொல்லத்தயங்காதவன் நான். தமிழ்ப்பேரிலக்கியங்களை அங்கே அறிமுகம் செய்ய இடைவிடாது முயல்பவன்.எந்த தருணத்திலும் அங்குள்ள எந்த பெரும்புள்ளி தமிழ்ப் பண்பாடு மற்றும் இலக்கியம் குறித்து பொறுப்பற்ற கருத்து சொன்னாலும் அதை மறுக்க தயங்கியவனுமல்ல. அதனாலேயே தமிழ் வெறியன் என்று அங்கே நான் வசைபாடப்பட்டதுண்டு. இப்போது இங்கே நிகழ்வதுபோன்ற பெரும் விவாதம் ஆங்கில ஊடகங்கள் உள்ளிட அங்கே இது குறித்து என்னைச்சார்ந்து நடந்ததும் உண்டு. அனைத்துக்கும் மேலாக என் தலைமுறையில் என்னளவு தமிழ் இலக்கிய அறிமுகமுள்ளவர் மிகச்சிலரே என நான் எண்ணுகிறேன். மலையாளி என்று என்னை சொல்கிற எவருக்கும் என்னைவிட தமிழ் ஞானம் இருக்கவேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்.

இவ்வசைகளை பொருட்படுத்தலாகாது என்ற எண்ணத்துடன் முன்னரே மிக முக்கியமான , மிகப்பெரிய வேலை ஒன்றில் இறங்கி கடந்த மூன்றுமாதமாக தினம் எட்டு மணிநேரம் அதற்காக உழைத்துவருகிறேன். கடுமையான அலுவலகப்பணிகளுக்கு மேலாக இந்த உழைப்பு என்பதனால் தூங்குவதே நான்குமணிநேரம்தான் என்ற நிலையில் செய்தித்தாள்கள் கூட படிப்பது இல்லை. ஆகவே நண்பரிடமே எல்லா கட்டுரைகளையும் சேர்த்து வாங்கி சென்ற நாளில் நாவல் படிப்பதுபோல படித்தேன். மேலாண்மை பொன்னுச்சாமி , அ.மார்க்ஸ், காலச்சுவடு கண்ணன், வளர்மதி , இளையபாரதி என பல தரப்புகளில் இருந்து தீக்கதிர், செம்மலர், கவிதாசரண், காலச்சுவடு , திண்ணை இணையதளம், நக்கீரன், தினகரன் ஞாயிறு இணைப்பு ஆகியவற்றில் இக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

இவற்றில் திறனாய்வு மதிப்பு பூஜ்யம். பெரும்பாலானவர்கள் எந்த திறனாய்வுக்கருத்தும் சொல்ல முற்படவில்லை. சொன்னவர்கள் மேலாண்மைபொன்னுச்சாமி போல சிலரே . உதாரணமாக மேலாண்மை பொன்னுச்சாமி தீக்கதிரில் எழுதுகிறார். ஜெயகாந்தன் சங்கர மடத்தை ஆதரிப்பதனால் அவரை நான் புகழ்கிறேன் என்று . முதலில் ஜெயகாந்தன் சங்கர மடத்தை ஆதரிக்கிறாரா என்பதே சிக்கல். சமீபத்தில் அவர் அங்கேபோய் பேசிய பேச்சு பெரிய பிரச்சினைகளை உருவாக்கியதாக சொல்கிறார்கள். [ ‘ எவரும் இந்துமதத்தைக் காக்கவேண்டியதில்லை. இந்துமதமே நாமனைவரையும் காப்பது. ‘ . ‘ நான் நாத்திகன் ஆனால் இந்து. இதை உங்களால் மறுக்க முடியுமா ? ‘] என் கட்டுரையில் அத்வைதத்தை சங்கரமடத்தில் காணமுற்பட்ட ஜெயகாந்தனின் நோக்கையே அவரது முக்கியமான பலவீனமாகச் சொல்லி கடுமையாக கண்டித்திருக்கிறேன். மேலாண்மை பொன்னுச்சாமி என் கட்டுரையை படித்தே இருக்க மாட்டார். படித்தவர்கள் இதைச் சொல்லிக் காட்டினால் அவருக்கு எந்த வெட்கமும் தயக்கமும் வராது. உடனே அதைவிட பெரிய ஒரு கட்டுரை எழுதி சமாளிக்கவே முயல்வார். இதுதான் தமிழில் வழக்கம். ஆகவே இந்த கட்டுரைகளுக்கு எந்த இலக்கிய முக்கியத்துவமும் இல்லை.

அவதூறுகளில் முக்கியமானது நான் ஆர்.எஸ்.எஸ் அனுதாபி என்பது. நான் பலமுறை சொல்லியிருப்பது போல எனக்கு இன்று எந்த அமைப்பு மீதும், மதம் மீதும் , நிறுவனம் மீதும் ஆர்வமும் இல்லை, நம்பிக்கையும் இல்லை. நான் நாராயணகுருவின் வழிவந்த ஆன்மீக த்தேடல் ஒன்றை என் வழியாக கொண்டவன். அது மதம், கடவுள் ஆகிய இரண்டுக்கும் இடம் இல்லாத ஒன்று. அதேசமயம் நாராயணகுருவின் இயக்கம் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. தனி நபர்களிடம் தொடர்பு உண்டே ஒழிய அமைப்புசார்ந்த செயல்பாடுகளில் நான் பங்கேற்பது இல்லை. இந்திய ஆன்மீக தேட்டம் இறைவன், பக்தி, மதம் , மத அரசியல் ஆகியவற்றால் ஒருபோதும் கட்டுப்படுத்தப்படலாகாது என்ற திடமான நம்பிக்கை கொண்டவர் நித்ய சைதன்ய யதி. இந்திய அளவிலேயே மதவாத அரசியலுக்கு எதிராக மிக அதிகமாக எழுதி துறவி அவரே. என் நிலைபாடு முற்றாகவே அவரை ஒட்டியது. என் நூல்களில் எங்கும் எப்போதும் நிறுவன மதத்தை , அமைப்புகளை கடுமையாக நிராகரித்துத்தான் எழுதியுள்ளேன்.

மத எதிர்ப்பு மதத்தின் அமைப்பை வலிமைப்படுத்தவே உதவும் என்பதே நிதரிசனம். மனிதனின் ஆன்மீக தேட்டத்தை எவருமே குறைத்து மதிப்பிடமுடியாது. ஆன்மீகமான தேட்டங்கள் அனைத்துமே மதம் சார்ந்தவை என்று எளிமைப்படுத்தும் மேலோட்டமான கும்பல்கள் ஆன்மீக தேட்டமானது நிறுவனமதம் சார்ந்துமட்டுமே சாத்தியம் என்ற நிலையை நடைமுறையில்உருவாக்குகிறார்கள். இன்றைய மதஎதிர்ப்பு வெறியானது இங்குள்ள எல்லா மதஅமைப்புகளையும் மேலும்பன்மடங்கு வலிமைபடுத்தி பெரும் அதிகார அமைப்புகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. மதம் நிலைத்துப்போன தேடல்கொண்டது, விடைகளினால் ஆனது. கட்டுப்பாடுகளினால் உருவாக்கப்படுவது. ஆன்மீகம் என்பதுமுடிவற்ற தேடல் . அதில் வினாக்கள் மட்டுமே. விடைகள் அந்தரங்கமானவை , பகிர முடியாதவை. மதத்துக்கு அப்பாற்பட்ட ஆன்மீகம் என்பதே பேரிலக்கியங்களின் , உயர் தத்துவ தரிசனத்தின் , முழுமை நோக்கு கொண்ட அறிவியலின் இலக்காக இருக்க முடியும். அதுவே என் இலக்கும். அத்தகைய ஓர் ஆன்மீகமே மதத்தின் அறிவதிகாரத்தை எத்ர்க்கமுடியும், மாற்றாக அமையமுடியும்.

என் ஆக்கங்களில் உள்ளது அத்தகைய ஆன்மீகத்தேட்டமே. ஒவ்வொரு கருத்தியல் சட்டகத்தையும் மீறி சென்றபடியே இருக்கும் தேடலையே நான் மீண்டும் மீண்டும் எழுதியுள்ளேன். அது என் தேடல். புத்தரோ, ஏசுவோ தங்கள் தனித்துவ அடையாளங்கள் இல்லாமல் தங்கள் ஆன்மீக சாரம் மூலமே சந்திக்கக் கூடிய ஓர் உச்சப்புள்ளி அது. அப்புள்ளிகளில் சிலவற்றை என் நாவல்களில் நான் உருவாக்கியிருக்கிறேன். விஷ்ணுபுரத்தில், பின்தொடரும் நிழலின் குரலில், காடி ‘ல் . இத்தளத்தில் சற்றேனும் மேலெழுந்து சிந்திக்கக் கூடிய எவருமே அவற்றை படித்து உணர முடியும். விஷ்ணுபுரத்தின் சித்தன் எந்த மதமற்ற வெளியில் நிற்கிறானோ அதே வெளியில்தான் பின்தொடரும் நிழலின் குரலில் வரும் கிறிஸ்துவும் நிற்கிறார். தங்கள் மன அமைப்பு காரணமாக இந்த தளத்துக்கு வர சிறிதும் முடியாத ஒரு பெரும் கும்பலிடம் இந்த நுட்பமான விஷயத்தை என்னால் சொல்லி புரியவைக்க இயலவில்லை என்பதே என் சிக்கல். அவர்களுக்கு சாத்தியமான அன்றாட அரசியலை , வெற்றோலங்களை என் மீதுபோடுகிறார்கள். ஆனால் இது என் திறன் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல, கலாச்சாரப் பிரச்சினை, ஆன்மீகமான பிரச்சினை. அதை ஒன்றும் செய்யமுடியாது. என் படைப்புகள் ஒரு கணிசமான வாசகர்களுக்கு உள்வாங்கப்படமுடிபவையாக இருப்பதே ஒருவகையில் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது .

இவ்வசைபாடல்களுக்கு அடிப்படையாக அமைந்தது மு கருணாநிதி அவர்கள் குறித்து நான் சொன்ன சாதாரணமான விமரிசனக்கருத்து. பாரதி குறித்தும் புதுமைப்பித்தன் குறித்தும் மிக எதிர்மறையான கருத்துக்கள் [அல்லது அவதூறுகள்] சென்ற காலங்களில் இங்கே வந்தபோது இங்கே மெளனமே நிலவியது. நாச்சர் மடம் கதைக்கு எதிராக கையெழுத்து போடவைக்கப்பட்டவர்களில் எவரும் இப்போது இவ்வசைகளின் அநாகரீகத்தை[சில எழுத்தாளர்கள் தவிர ] சுட்டி கண்டிக்க முனையவும் இல்லை. ஆக இது ஓர் அடிமைத்தனமன்றி வேறல்ல. அரசியல் நிறுவனம், பிரசுர நிறுவனம் ஆகியவற்றைக் கண்டு பயம் அவ்வளவுதான். அனைத்துக்கும் மேலாக புகழ் பெறுவதற்காக இந்த விவாதம் கிளப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. இக்கட்டுரைகளின் மூலம் கிடைத்துள்ளதுதான் ‘புகழ் ‘ என்றால் இதற்காகவா இந்த பாடெல்லாம் ? எந்த நோக்கம் க.நா.சுப்ரமணியத்தை கல்கியை எதிர்த்து எழுதவைத்ததோ , எந்த நோக்கம் சுந்தர ராமசாமியை அகிலனை எதிர்த்து எழுதவைத்ததோ அதே நோக்கம்தான் இதுவும். எப்போதும் தமிழில் இந்த திடமான ஆனால் தனித்த குரல் கேட்டபடியேதான் இருக்கும்.

**

இவ்வசைபாடல்களில் சிலவற்றுக்கு மட்டும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. காலச்சுவடு இதழில் அதன் உரிமையாளர் கண்ணன் எழுதிய சில குறிப்புகள். அவரது இலக்கியக்கருத்துக்களை எவ்வகையிலும் பொருட்படுத்த வேண்டியது இல்லை என்பதே என் எண்ணம். ஓர் அரசு ஊழியனான நான் ஒர் அவதூறுவழக்கை தொடுப்பது எளிதல்ல என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த அவதூறுகள் எழுதப்படுகின்றன. [தொடுத்தாலும் எத்தனை வழக்குகளை தொடுத்து நடத்தமுடியும் ? 36 வழக்குகளா ?] அதிலும் கண்ணன் மிக நளினமாக ‘சிக்காமல் ‘ எழுதியுள்ளார்.

அவரது முதல் அவதூறு என்னை நானே வேறுபேரில் புகழ்கிறேன் என்பது. என் தலைமுறையில் என் அளவுக்கு விமரிசன அங்கீகாரம் பெற்ற எவரும் இல்லை. என்னைப்பற்றி எழுதப்படாமல் ஒரு மாதம் கூட தமிழில் இல்லை. எந்த இலக்கியக் கூட்டத்திலும் ஒருவாசகர் எனக்காக பேசுவார். காலச்சுவடுக்கு வரும் வாசகர் கடிதங்களில் எனக்கான குரல்கள் எத்தனை என நான் அறிவேன். அவற்றில் பிரபஞ்சன் முதல் சாதாரண வாசகன் வரை எவருடைய குரலும் பிரசுரம் பெறுவதும் இல்லை. என்னைப்பற்றி எழுத நான் தேவையில்லை. இவர் இணையத்தில் எழுதும் சிலரின் பெயர்களை சொல்கிறார். அவர்களில் ஒருவரை நான் முதலில் சந்தித்ததே சுந்தர ராமசாமியின் இல்லத்தில்தான். அவரது நிர்ப்பந்தங்கள் பிரச்சினைகள் இவருக்கு தெரியும். ஆகவே அவரால் இன்று தன்னை வெளிப்படுத்தமுடியாது என்று தெரியும். இதுதான் உத்தி. உதாரணமாக சில வருடங்களுக்கு முன்பு இன்றைய காலச்சுவடு ஆசிரியரான அரவிந்தன் என்னைப்பற்றி வேறு பெயர்களில் [சுப மங்களாவில்] எழுதியபோது இதே பேச்சு கிளப்பபட்டது. அன்று என் மீது கோபம் கொண்ட மாலனை ஆசிரியராக கொண்ட இந்தியாடுடேயின் துணை ஆசிரியராக அவர் இருந்தார் . எழுதுபவர்கள் இங்கே ஒரு சின்னவட்டம். எல்லாரையும் எல்லாருக்கும் தெரியும். சிக்கல்களும் தெரியும். இது ஒரு அவதூறு ஆட்டம்.

அவர் கூறும் அடுத்த குற்றச்ச்சாட்டு இலக்கியதிறனாய்வு மூலம் ஆட்களை தூக்கிவிட எனக்கு பெரும் பணம் வருகிறது என்பது . இதற்கு அவர் உருவாக்கும் முகாந்திரம் எனது கனடா பயணம். நடந்தது இது. என்னை கனடவுக்கு அழைக்க காலம் இதழ் சார்ந்த நண்பர்கள் விரும்பினர். முறைப்படி ஓர் நிறுவனம் அழைக்காமல் எனக்கு அனுமதி கிடைக்காது என்றேன். அதன்படி திரு கனக செல்வநாயகம் டொரொண்டோ பல்கலைகழகம் டிரினிட்டி காலேஜ் சார்பில் ஒரு கூட்டத்துக்காகமுறைப்படி உரிய ஆவணங்களுடன் சட்டபூர்வமாகஎன்னை அழைத்தார். நான் மேலும் சிலகாலம் தங்கவேண்டுமென நண்பர்கள் விரும்பியதனால் நான் இருமாதம் முன்னராகவே கிளம்பிசென்றுவிட்டேன். நான் சென்றதற்கு ஒரு மாதம் முன்புதான் அமெரிக்காவில்இரட்டைகோபுரம் தாக்கப்பட்டது. நான் அங்கிருக்கும் நாட்களில் ஆஃப்கன் போர் மூண்டது.ஆந்த்ராக்ஸ் பீதியால் கல்லூரிகள் நடக்கவில்லை. கடுமையான கெடுபிடிகள். நடமாட்டமே சிக்கலாகி விட்டிருந்தது.அனைத்துநிகழ்ச்சிகளும் மூன்றுமாதம் ஒத்திபோடப்பட்டன, ஆனால் நான் ஏற்கனவே அங்கே இருந்தமையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கூட்டம் பலமுறை முய்ற்சி செய்யப்பட்டது, அனுமதி கிடைக்கவில்லை. பிறகு செல்வம், அ.முத்துலிங்கம், என் கெ மகாலிங்கம் செழியன் சேரன் உட்பட்ட காலம் நண்பர்கள் ஒரு கூட்டமும் புத்தக கண்காட்சியும் மிகுந்த சிரமத்துக்கு இடையே ஏற்பாடு செய்தனர். நான் அங்கே பல நண்பர்கள் வீடுகளிலாக தங்கியிருந்தேன். சிலநாட்கள் சேரனுடன்.என் கூட்டச்செலவுகளுக்காக கூட்டத்திற்கு இருபது டாலர் கட்டணம் வைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.. அக்கட்டணத்தைக் கட்டிவந்த நூறு வாசகர்களே எனது ‘ஸ்பான்ஸர்க்ள் ‘. ஆகவே நான் எவருக்கும் கடன்பட்டவனல்ல. எந்த தனிநபரும் என் செலவுகளை சுமக்கவுமில்லை. அமெரிக்க தமிழ்சங்கங்களின் அழைப்புகளை ஏற்கமுடியாமல் அமெரிக்க பயணத்தை ரத்துசெய்துவிட்டு திரும்பினேன்.

கடந்த இரு வருடங்களாகவே இந்த விஷயத்தை திரித்து தொடர்ந்து காலச்சுவடு அவதூறுகளை புகைமூட்டமாக கிளப்பி வருகிறது. எனக்கு கனடாவில் ஒரு பெரும் நிதி வசூலித்து தரப்பட்டது என்பது முதலில் சொல்லப்பட்டது. பிற்பாடு காலம் எழுத்தாளர்களிடம் பணம்பெற்றுக் கொண்டு அவர்களைப்பற்றிய பற்றி சாதக விமரிசனத்தை நான் உருவாக்குவதாக சொல்ல ஆரம்பித்தார்கள். விமான டிக்கெட்டுக்காக விமரிசனத்தை விற்பது என்று கண்ணன் குற்றம்சாட்டுவது இதையே. இவற்றை நான் புறக்கணித்தேன். இப்போது வெளிநாட்டு நிதிவந்து குவிவதாக சொல்ல ஆரம்பித்துவிட்டிருக்கிறார்கள். நான் ஷோபா சக்தி, கருணாகர மூர்த்தி, ரஞ்சகுமார் , சட்டநாதன் , சேரன் ஆகியோரைப்பற்றி விமரிசனரீதியான பாராட்டுக்களை தெரிவித்திருந்தபோதும் அ. முத்துலிங்கத்தையே ஈழ எழுத்தாளர்களில் முக்கியமானவராக நான் எண்ணுகிறேன். அவரைப்பற்றி விரிவாக காரணகாரியங்களுடன் எழுதியுள்ளேன். கண்ணனின் விஷமப் பிரச்சாரம் இவர்களில் எவரை குறிவைக்கிறது ? பணம் தந்து விமரிசனம் பெற்ற இழிபிறவி இவர்களில் யார் ? இவர்களின் படைப்புகள் தமிழில் வெளிவந்துள்ளன. அ.முத்துலிங்கம் கதைகளின் முழுத்தொகுதியை இப்போது தமிழினி வெளியிடவுள்ளது. வாசகர்கள் அவற்றையெல்லாம் வாசித்துப்பார்க்கலாம். பணம் கொடுத்துமட்டுமே திறனாய்வுகளை பெறவேண்டிய தரமற்ற படைப்பாளிகள்தானா அவர்கள் என்று மதிப்பிடலாம். இங்குள்ள கீழ்த்தர குழுவாதப்போக்குக்கு பிறநாட்டுப் படைப்பாளிகளை இழுத்துப்போடவேண்டிய தேவை உண்டா என்று மனசாட்சியைத் தொட்டு சிலராவது சிந்திக்கவேண்டும்.

இத்தனை தீவிர அவதூறுகள் வசைகள் ஆகியவற்றை மீறி எனக்கு உலகம் முழுக்க தீவிரமான வாசகர்கள் உண்டு என்றால் அது இலக்கியம் என்ற கலையின் வெற்றி. அதை வியாபாரிகள் ஒன்றும் செய்யமுடியாது. என் வாசகர்கள் எனக்கு பரிசுகள் அளிப்பது உண்டு. கோவையில் மிகச்சாதாரணமான தொழிலாளி கூட என் பிறந்த நாளுக்கு சட்டை எடுத்து அனுப்புவது உண்டு. மதிப்பு அதிகமான பரிசு என்றால் அமெரிக்க வாசகரும் நான் இதுவரை பார்த்தே இராதவருமான பாலாஜி என்பவர் அளித்த கணிப்பொறியை சொல்லவேண்டும். அது எனக்கு மிகத்தேவையான, என் எழுத்தையே பெருமளவுக்கு மாற்றிய ஒன்று. இன்றும் நான் என் வாசகர்களிடம் எதையும் கேட்க முடியும். கேட்பது இல்லை. அபூர்வமாக நூல்களை கேட்பது தவிர.

சொல் புதிது தொடங்கப்பட்டபோது மூன்று அமெரிக்க வாசகர்கள், ஒரு ஜெர்மனியஈழ எழுத்தளார் தலா ரூ 5000 அனுப்பி உதவினர். அப்படி பணம் அனுப்பியதனாலேயே அவர் சொல்லில் எதுவுமே எழுதவில்லை. விஷ்ணுபுரம் நாவலுக்கு ‘அகரம் ‘ கதிர் அளித்த ராயல்டி 30000 ரூ சேர்த்து தொடங்கப்பட்டது சொல். இதழ் ஒன்றுக்கு ரூ 2500 மதிப்புள்ள இரு விளம்பரங்கள். விற்றுவரவு அதிகபட்சம் ரூ 8000. முதல் இதழுக்கு 3000 மட்டுமே.. அடக்கசெலவு ரூ 21000 . ஆக இதழுக்கு 8000 ரூ வரை நஷ்டத்தில் சொல் நடந்தது. சூத்ரதாரி நிர்வாகத்தின் அனைத்து செலவுகளையும் -பயணம், கடிதங்கள் உட்பட – தன் சொந்த பணத்தில் செலவிட்டார். சென்னை செலவுகளை செந்தூரம் ஜெகதீஷ் அவரது கைப்பணத்தில் செலவிட்டார். சொல்லை பதிவு செய்ய முடியாததனால் முழுக்க கூரியரிலேயே அனுப்பியதனால் ஏராளமான இழப்பு இருந்தது ஒரு கட்டத்தில் நஷ்டத்தின் ஒரு பகுதியை[ ரூ 15000] திருமதி காஞ்சனா தாமோதரன் அளித்தார். அதில் ஒருபகுதி பதிவுகல் இலக்கியக் கூட்டத்துக்காக அளிக்கப்பட்டது.எழுத்தாளர் கோகுலக்கண்ணன் ரூ 20000 அளித்தார் . கனடாவில் சொல்லுக்கு நிதி என எதுவும் கிடைக்கவில்லை, பெறமுயலவேயில்லை. 11இருவருட சந்தாக்களைதவிர. இதுவே இன்றுவரை நான் இலக்கியத்துக்காக பெற்ற நிதி விவரம். பாஷாபோஷினி மலையாள இதழில் நான் எழுதிய கட்டுரைத்தொடரின் பணத்தில் சொல் நடந்தது. ஊர் ஊராக சென்று வசூலிக்க முடியாத நிலை இருந்தது. ஆகவே பெரும் பண இழப்பில் நிறுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது நஷ்டமாக எஞ்சியது 22000 ரூபாய். ஆனந்தவிகடன் சங்கசித்திரங்கள் மூலம் அதிலிருந்து மீண்டேன். இச்செலவு மற்றும் இழப்புகளை இன்று காலச்சுவடு தவிர மற்ற அனைத்து சிற்றிதழ்களும் கண்டிருக்கும்

பிறகுதான் சொல் புதிதுக்கு உதவ மெளலானா சதக்கத்துல்லாஹ் ஹசநீ முன்வந்தார். இஸ்லாமிய இதழ்கள்பலவற்றை நடத்தியவர் அவர். இஸ்லமிய ஆன்மீகத்தை மதவாத அரசியலில் இருந்து வேறுபடுத்தவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதற்காக போராடுபவர். பிற அறிவுத்துறைகளுடன் இஸ்லாமை உரையாடவைக்கவும் பொதுவாசகர்களுக்காக இஸ்லாமிய ஆன்மீகத்தை அறிமுகம் செய்யவும் ஓர் இதழ் நடத்த அவர் விரும்பினார் .ஆகவே இதழை அவருக்கே கொடுத்துவிட்டேன்.இஸ்லாமிய அறிவியக்க இதழாக சொல் இப்போது வருகிறது. மருதம் இணையஇதழ் இப்போது உயிர்மை இதழின் பொறுப்பில் இருப்பவரான திரு செந்தில்குமார் நிதியளிப்பதாக சொன்னதனால் ஆரம்பிக்கப்பட்டது. உண்மையில் ஓர் இதழுக்கு 3000 ரூ செலவில் அது நடத்தப்பட்டது. ஆனால் செந்தில்குமார் அந்தப் பணம்தரமுடியா சூழலில் சிக்கியதனால் நிறுத்தவேண்டியிருந்தது. இலக்கிய சந்திப்புகள் முழுக்க அருண்மொழிநங்கைக்கு கிடைத்த அலுவலக ஊக்கத்தொகைமூலம் நடத்தப்பட்டவை. அவற்றுக்கு அதிகபட்சம் ஒரு கூட்டத்துக்கு 2000 செலவாகியுள்ளது. மு தளையசிங்கம் கூட்டம் மட்டும் மயிலாடுதுறை வாசகர் பிரபு என்பவரின் நிதியுதவி[ரூ 2500 ] கொண்டு நடந்தது. நிறுத்தமுடிவெடுத்தபிறகு திண்ணை ஆசிரியர் உட்பட் பலர் உதவ முன்வந்தனர் , நான் அவற்றை ஏற்கும் நிலையில் இல்லை என்பதை தெரிவித்தேன். இதுவே என் மொத்த இலக்கிய நிதிக் கணக்கு இதில் வேறு எவருக்கேனும் கணக்கு சொல்ல இருப்பின் சொல்லலாம்.

சொல்லுக்கு நிதி உதவி செய்தவர்களில் காஞ்சனா தாமோதரன், கோகுலக்கண்ணன் ஆகியோர் மட்டுமே எழுத்தாளர்கள் . அவர்கள் எழுத்துக்களை நான் எப்படி கறாராக மதிப்பிட்டிருக்கிறேன் என்பதை அச்சிலேயே இப்போது படிக்கலாம். நிதியுதவி செய்த காரணத்தாலாயே இவர்கள் சொல்லில் எழுத மறுத்தார்கள். நல்ல கதைகளை இணையதளங்களில் இருந்து எடுத்து பிரசுரித்தோம். இவர்களுடைய எழுத்து பணம்கொடுத்து ஆதரவை வாங்குமளவுக்கு போலியானதா, இல்லை இவர்கள் அத்தகைய அசடுகளா என்று வாசகர் மதிப்பிடலாம். என் கணிப்பில் தமிழின் எந்த நல்ல படைப்பாளியும் இத்தகைய உத்திகளில் இன்று ஈடுபடமாட்டார்.இவ்விதழில் என் எழுத்து குறித்து நல்ல கருத்து சொன்ன ஒவ்வொரு படைப்பாளியும் சுயலாபம் கருதி அப்படி சொன்னதாக முத்திரை குத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்டுள்ளார். அய்யனார் என்ற கூலிப்படை சிப்பாய் சென்னையில் நிகழ்ந்த என் நூல்விமரிசனக்கூட்டம் குறித்து எழுதிய குறிப்பை பார்த்தால் போதும். ஜெயகாந்தன் முதல் அனைவருமே விலைபோன நேர்மையில்லாதவர்களாக அசடுகளாக சித்தரிக்கபடுகிறார்கள். ஒரு எழுத்தாளரை அவதூறு செய்யும் நோக்கில் இந்த புத்தகவியாபாரி உண்மையில் எழுத்தாளர்களை ஒட்டுமொத்தமாக , எழுத்துசெயல்பாட்டை ஒட்டுமொத்தமாக அவதூறு செய்வதை நாம் உணரவேண்டும்.என்னுடைய மதிப்பீடுகள் வெளிப்படையானவை , திட்டவட்டமானவை. அவற்றின் காலமதிப்பு எனக்கு தெரியும். அவற்றின் தர்க்கத்தை சந்திக்க முடியாத அசடுகள் உருவாக்கும் இந்த அவதூறு வலை அவற்றை கட்டுப்படுத்தபோவதும் இல்லை.

ஆக இந்த அவதூறு எங்கிருந்து கிளம்புகிறது ?காஞ்சனா நிதியுதவி செய்தவர்களிலேயே மிக அதிகமான நிதியுதவி பெற்றது காலச்சுவடு நிறுவனம் என அவரே எழுதிய பொதுக்கடிதம் தெரிவிக்கிறது. அவர்களைப்பற்றிய இந்த கேவலமான அவதூறு ஏன் எங்கிருந்து முளைத்தது என்பதை எளிதில் உணரமுடியும். காஞ்சனா, அமுத்துலிங்கம் கோகுலக்கண்ணன் ஆகியோரிடம் சுந்தர ராமசாமி குடும்பமே கொண்டிருந்த நெருங்கிய உறவுக்கு அவர்கள் எழுதிய பல குறிப்புகளே ஆதாரம். இப்போது இவர்களின் அடிப்படை நேர்மையையே கேள்விக்கு உரியதாக ஆக்குமளவுக்கு என்ன நேர்ந்தது ? இந்த அவதூறு எல்லாம் தொடங்குவது அங்கிருந்துதான்.

1989 ,90 வாக்கில் சுந்தர ராமசமிக்கு ஏற்பட்ட கடுமையான நிதிநெருக்கடியை நண்பர்கள் அறிவார்கள். காலச்சுவடு நின்றது. தன் காரைக்கூட அவர் விற்கும்நிலை ஏற்பட்டது. கார் பார்க்கிங் வசதி இல்லாத அவரது கடையிருக்கும் தெருவும் ,நாகர்கோவிலில் திறக்கப்பட்டமாபெரும் துணிக்கடைகள் அவரது கடைபோன்ற சிறிய கடைகளை சிதறடித்ததும் காரணங்கள். இந்த பத்துவருடங்களில் அக்குடும்பம் செய்த ஒரே தொழில் காலச்சுவடு இதழ். அதிகபட்சமாக4000 பிரதிகள் அச்சிடும் ஒரு மும்மாத இதழ். வருடத்துக்கு அதிகபட்சம் 15 நூல்கள். எப்படி இன்றைய வளம் உருவாயிற்று ?ஒவ்வொரு தமிழ் வாசகரும் அதை கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கிறார்கள். மாதம் ஊழியர் சம்பளமாக மட்டுமே லட்ச ரூபாய் செலவிடுகிறது இந்த சிற்றிதழ் ! தமிழ் சிற்றிதழின் ஐம்பதாண்டுகால வரலாற்றில் சிற்றிதழே லாபகரமான தொழில் என்று நிறுவிக்காட்டிய வியாபாரி தன்னைப்போல பிறரையும் மதிப்பிட்டு ஒட்டுமொத்த எழுத்தாளர்களையே , எழுத்தியக்கத்தையே அவமதிக்கிறார். இதனைநாம் அனுமதிக்கத்தான் வேண்டுமா ?

சுந்தர ராமசாமியின் நண்பர்களில் இன்று அவருடன் முந்தைய மனநெருக்கத்துடன் இருப்பவர்கள் எத்தனை பேர் என்று மட்டும் பார்த்தால் போதும் என்ன நடந்தது என்று புரியும். ஓர் உதாரணம். பாடபுத்தகங்களை கையால் தொடவே கூசுவதாக எழுதிய மனிதர், ‘மேஸ்திரிகள் ‘ என்று ஓயாமல் கல்வித்துறையினரை தாக்கிவந்த படைப்பாளி சுந்தர ராமசாமி. இன்று அவரது நூல்கள் பிய்த்து பிய்த்து கல்லூரிப்பாடநூல்களாக சாணித்தாளில் சீரழிகின்றன. தமிழில் ஒரு படைப்பை இளங்கலைக்கு பாடமாக்கினால் எத்தனை லட்சம் லாபம் இருக்கும் என நாம் அறிவோம். அதற்கு என்ன செய்வது என்றும் அறிவோம். அதற்கு செய்யவேண்டியவற்றை செய்வதில் உள்ள சுய இழிவின் காரணமாகவே வானதி போன்ற பெரும் பதிப்பாளர்கூட அப்பக்கம் தலைவைத்துப்படுப்பது இல்லை.

காலச்சுவடு எந்த திசையில் செல்கிறது என்பதை காட்ட அதன் ஐம்பதாவது இதழ்நிறைவுவிழா நடந்த லட்சணத்தைமட்டுமே தமிழ்வாசகன் கவனித்தால் போதும். ஒரு கலாச்சார சக்தியாக இருந்திருக்கக் கூடிய இதழ். என் நூல்வெளியீட்டுவிழாவை ஜெயகாந்தன் தலைமை தாங்கியதை அரசவைக் கோமாளியை வைத்து கிண்டல்செய்த இதழ் . அதன் ஐம்பதாவது ஆண்டுவிழாவை தலைமை தாங்கி நடத்துபவர் முன்னாள் அமைச்சர் க.ராஜாராம். எப்பேற்பட்ட இலக்கிய கலாச்சார சக்தி ! பதினைந்துவருடம் முன்பு இதே ராஜாராம் ஆசான் நினைவுப்பரிசை சுந்தர ராமசாமிக்கு வழங்கி அவரைப்பற்றி ஒரு பேருரை ஆற்றியதைப்பற்றி சுந்தர ராமசாமி சொன்னவற்றை நண்பர்கள் இன்னும் நினைவுகூரக்கூடும். [ மரங்களைப்பற்றி அருமையாக எழுதிய இவர் ஒரு மரக்கவிஞர். மரங்கள் மேலே மேலே செல்லும் என்ற அறிவியல் உண்மையை அருமையாக எடுத்துச் சொல்கிறார்..] தன்னை அவமானப்படுத்திவிட்டதாக அவ்வமைப்புக்கு கடிதம் எழுதினார் சுந்தர ராமசாமி. அந்த உரையை தாங்கமுடியாமல் க்ரியா ராமகிருஷ்ணன் எழுந்து ஓடினார் என்றார், மேடையில் இருந்தமையினால் தன்னால் ஓடமுடியாதபடி போனது என்றார். ஐம்பதாவது ஆண்டுவிழாவை நடத்தவந்த கன்னட இலக்கியவாதி அனந்தமூர்த்தி தவிர மொத்த மேடையே கனிமொழி கருணாநிதி அரங்குக்கு வந்தபோது எழுந்து நின்று அவர் அமர்ந்தபிறகு அமர்ந்த கேவலத்தை அனந்தமூர்த்தியே ஒரு கேரள கவிஞருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அவர்களைதவிர பிற அனைத்து பேச்சாளர்களுக்கும் காலச்சுவடின் ஐம்பது இதழ் குறித்துபேச தலா இரண்டு நிமிடம் ஒதுக்கப்பட்டது குறித்து சொன்னார்கள்.

என்ன காரணம் ? சேலம் தமிழ்சங்கம் என்ற அமைப்பின் பெரும்பணம். அதன் அமைப்பாளரான க.வை.பழனிச்சாமி என்ற பெரும்பணக்கார ‘கவிஞர் எழுத்தாளரின் ‘ படைப்புகளைப்பற்றி இவ்விதழ் காலச்சுவடு புகழ்ந்து மகிழ்ந்து எழுதியுள்ளதை வாசகர்கள் வாசிக்கவேண்டும். ஜெயகாந்தனுக்கு அவ்விதழில் ஒரு விமரிசனம் வருவதற்கே தகுதியில்லை என்று சொல்லிக்கொண்ட இதழ். தமிழின் பெரும்படைப்பாளிகளுக்கு கூட போகிறபோக்கில் மதிப்புரை வழங்கும் காலச்சுவடின் இந்தஆழமான மதிப்புரையின்படி புதுக்கவிஞர்களில் இனி முதன்மையான படைப்பாளி க வை பழனிச்சாமிதான். கொடுமை . க.வை.பழனிச்சாமியை கடந்த 20 வருடங்களாக தமிழ் வாசக உலகம் அறியும். அவரது ஏதாவது ஒரு நூலை வாசகர்கள் பத்துவரி படித்துப் பார்க்கவேண்டும். இளையபாரதி குறித்து சொல்லும் காலச்சுவடு க.வை பழனிச்சாமி குறித்து என்ன சொல்கிறது ? இவரது நூல்வெளியீட்டு மேடையிலேயே பிரபஞ்சன் குமுறியதை நாம் அறிவோம். காலச்சுவடு உருவாக்கும் மதிப்பீடுகளின் அடிப்படை, அதன் காரணம் என்ன என நாம் அறிவோம். ஒரு சிற்றிதழ் பத்து வருடங்களில் சும்மா ஒரு பெரும் வணிக அமைப்பாக ஆகிவிடாது. அவர்கள் அதை நியாயப்படுத்த பிறரும் அதையே செய்வதாக சொல்கிறார்கள்

***

என் எழுத்துலக வாழ்க்கையில் என் கருத்துக்கள் எப்போதுமே கடுமையாக வசைபாடப்பட்டுள்ளன. ஆனால் என் நேர்மை ஒரு போதும் ஐயத்துக்குள்ளானது இல்லை. என் நேர்மையை ஐயப்படும் தகுதி எந்த வணிகருக்கும் இல்லை. நான் என் நூல்களை கல்லூரிப்பாடமாக்க அலைந்தது இல்லை.மானியங்கள் பெற்றது இல்லை. நான் கோடிக்கணக்கில் நிதிபெறும்எந்த போலிக் கலாச்சார அறக்கட்டளைக்கும் பங்கு வாங்கியது இல்லை. நூலக உத்தரவுக்கு மேப்லித்தோ தாளில் அச்சிட்ட நூல்களை அளித்து நூலகங்களுக்கு சாணித்தாளில் அச்சிட்டு அனுப்பி மோசடி செய்ததும் இல்லை. மாதச்சம்பளம் வாங்கி மாதக்கடைசியில் கையை பிசையக்கூடியவனாக, தொலைபேசி கட்டணம் செலுத்தக்கூட அலுவலகக் கடன்வாங்கும் மத்தியவற்க எழுத்தாளனாக வாழ்ந்து எழுதி இறப்பேன். எந்த தருணத்திலும் சொந்தசெலவுக்காக எழுதிவரும் பணத்தை செலவிட மாட்டேன். எப்போதுமே அரசு அங்கீகாரங்கள் என்னை நோக்கி வரவும் வராது. ஆனால் வணிகசாம்ராஜ்யங்கள் வாழ்ந்து மறைந்தாலும் என் படைப்புகள் அழியாமலிருக்கும். அந்த நம்பிக்கையே என்னை எழுதச்செய்கிறது.

————————

jeyamohanb@rediffmail.com

(நீக்கங்கள் உண்டு. – திண்ணை குழு)

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்