இரா மதுவந்தி
ஒலிந்திஸ் காலிஸ்தெனஸ் (Callisthenes of Olynthus ) என்ற கிரேக்க வரலாற்றாசிரியர் கிமு (கிரிஸ்துவுக்கு முன்னர் 360-328) இல் வாழ்ந்தவர். இவர் அரிஸ்டாட்டிலின் உறவுக்காரர். அரிஸ்டாட்டிலின் சீடர். இவர் அரிஸ்டாட்டிலின் சிபாரிசின் காரணமாக அலெக்ஸாந்தர் ஆசியாவுக்கு பயணம் செய்யும்போது வரலாற்றை பதிப்பிக்க கூட சென்றவர்.
காலிஸ்தெனஸ் அலெக்ஸாந்தர் கிழக்கு பழக்கங்களை மேற்கொள்வதையும், மனிதர்கள் அவரை நெடுஞ்சாண்கிடையாக வணங்குவதை அலெக்ஸாந்தர் அனுமதிப்பதையும் மிகவும் கடுமையாக கண்டித்தார். இதனால் அலெக்ஸாந்தரால் துரோகக்குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சித்திரவதையாலும் நோயாலும் இறந்தார். அவரது துயர முடிவு அவரது நண்பரான தியோப்ரேஸ்டஸ் என்பவரால் கதையாக (Callisthenes or a Treatise on Grief) எழுதப்பட்டது.
காலிஸ்தெனஸ் அலெக்ஸாந்தரின் பயணம் பற்றி எழுதிய வரலாற்று ஆவணங்கள் போனீசிய போர்கள் வரைக்கும் குறிக்கப்பட்டிருந்தன. அவை அழிந்துவிட்டன.
இவர் எழுதியவற்றிலிருந்து பல கதைகள் பல மாறுதல்களுக்கு உள்ளாகி அலெக்ஸாந்தர் காவியமாக ( Alexander Romance) ஆயின. இந்த அலெக்ஸாந்தர் காவியமே இன்னும் பல உபகதைகள் கொண்டதாக உருமாறி மத்தியக்கிழக்கை டாலமிகள் (அலெக்ஸாந்தரின் படைத்தளபதிகள், பின்னால் அந்த பிரதேசத்தை ஆண்ட அரசர்களாக ஆனவர்கள்) காலத்தில் அதாவது கிபி 3 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டன. ஏஸோபஸ், அரிஸ்டாட்டில், ஆண்ட்ஸ்தெனஸ், ஓன்ஸிகிரெட்டிஸ் ஆர்ரியன் ஆகியோரை இதனை எழுதிய ஆசிரியர்களாக குறிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனை எழுதியதாக பெயர் கூறும் போது, இதனை எழுதியவராக சூடோ காலிஸ்தெனஸ் என்று பெயர் கூறுவது மரபு.
இந்த அலெக்ஸாந்தர் காவியத்துக்கு பல படிவங்கள் இருக்கின்றன. சிற்சில மாற்றங்களுடன், சிரிய படிவம், ஆர்மீனிய படிவம், ஸ்லோவானிக் படிவம் ஆகியவை உண்டு. கிரேக்கத்திலேயே நான்கு படிவங்கள் உள்ளன.
மூன்றாம் நூற்றாண்டு ஆதாரப்பூர்வ படிவ ஆவணங்களை சென்ற நூற்றாண்டில் பலர் மொழி பெயர்த்திருக்கிறார்கள். இவற்றில் அலெக்ஸாந்தரின் வீர தீர சாகசங்கள் எழுதப்பட்டுள்ளன. இவை பரவலான வாசிப்புக்கும் மறு கதை சொல்லலுக்கும் மத்தியக்கிழக்கு பிரதேசத்திலும் ஐரோப்பாவிலும் பயன்பட்டிருக்கின்றன.
காலிஸ்தெனஸ் எழுதிய அதிகாரப்பூர்வமான ஆவணங்கள் பின்னால் வந்த வரலாற்றாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன. அதனால் அவர் உண்மையாக என்ன எழுதினார் என்பதும், அவர் எந்த காரணங்களால் அலெக்ஸாந்தரும் முரண்பட்டார் என்பதும் ஆவணப்படுத்தப்படுகின்றன. பின்னால் வந்த வரலாற்றாசிரியர்கள் காலிஸ்தெனஸை குமு 329க்குப் பிறகு மேற்கோள் காட்டுவதில்லை.
அதிகாரப்பூர்வமான வரலாற்று ஆவணங்கள் பற்றிய இணைய பக்கம்
http://www.livius.org/aj-al/alexander/alexander_z1b.html
அலெக்ஸாந்தர் காவியம்
அலெக்ஸாந்தர் கதாநாயகனாக வரும் அலெக்ஸாந்தர் காவியம், அலெக்ஸாந்தர் செய்ததாக பல மாயக்கதைகளையும் வீரதீர சாகசங்களையும் விவரிக்கிறது. மிகவும் பழைய மூல படிவம் கிரேக்க மொழியில் உள்ளது. பின்னால் எழுதப்பட்ட பல படிவங்கள் இந்த காவியத்தை எழுதியது காலிஸ்தெனஸ் என்று கூறினாலும், நிச்சயமாக காலிஸ்தெனஸ் எழுதியிருக்க முடியாது. இந்த பெயர் தெரியாத ஆசிரியரை குறிக்கவே சூடோ காலிஸ்தெனஸ் (Pseudo-Callisthenes) என்ற பெயர் வழங்குகிறது.
இந்த அலெக்ஸாந்தரின் காவியத்து கதைகளில் பல ·பிர்தௌஸியால் ஷாநாமாவில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிரிய மொழிப்படிவம் கூகுளில் கிடைத்தது.
இந்த மூன்றாம நூற்றாண்டு சிரிய மொழிப்படிவத்தில் அலெக்ஸாந்தர் அடிக்கடி இரண்டு கொம்புகளை கொண்டிருப்பவர் என்று குறிப்பிடப்படுகிறார். அலெக்ஸாந்தரின் தலை பொறித்த கிரேக்க காசுகளில் அவருக்கு கொம்புகள் வரையப்பட்டிருக்கின்றன.