முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி
வோல்டா 1745ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 18ஆம் நாள் இத்தாலி நாட்டின் கோமோ (Como) நகரில் தோன்றினார். தமது 17ஆவது வயதில் பட்டம் பெருகின்ற அளவுக்குக் கல்வியில் சிறந்து விளங்கினார். பட்டதாரியான பின்னர் வோல்டா ஜெர்மனி, ஆலந்து போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று அப்போது புகழுடன் விளங்கிய அறிவியல் அறிஞர்களான லவாசியர் (Lavoisier), பிரீஸ்ட்லி (Priestley), டேவி (Davy) ஆகியோரைச் சந்தித்தார். இத்தாலியின் போலோனா (Bologna) பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் பேராசிரியராக இருந்த கேல்வனி (Galvani) என்பவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் வோல்டாவைப் பெரிதும் கவர்ந்தன. கேல்வனியின் மின்சாரக் கண்டுபிடிப்பு தற்செயலாக நிகழ்ந்த ஒன்று. இறந்துபோன தவளை ஒன்றின் கால்களின் நரம்புகளுக்கிடையே செப்புக் கம்பிகளை இணைத்தபோது, அந்நரம்புகள் முன்னும் பின்னுமாக அசைந்தன; மின்னுற்பத்தியே இவ்வசைவுக்குக் காரணம் என்று கேல்வனி நம்பினார்; தவளைக் கால்களின் ஈரத்தசைகளே மின்னூட்டம் நிகழக் காரணம் என்பதை அப்போது கேல்வனியால் உணரமுடியவில்லை.
ஆனால் வோல்டா இச்சோதனையில் மேலும் தீவிரமாக ஈடுபட்டார். மின்னோட்டம் நடைபெறுவதற்குத் தவளையின் கால்களைச் சிறந்த சாதனமாகக் கருதிய வோல்டா அதன், ஒரு கால் நரம்பை வெள்ளித்தட்டிலும், மற்றொரு கால் நரம்பை செம்புத் தகட்டிலும் கம்பிகளைக் கொண்டு இணைத்தார். அப்போது மின்சாரத்தால் நரம்புகள் இழுக்கப்படுவதைக் கண்ட அவர், மின்னுற்பத்திக்குக் காரணம் தவளையின் கால் நரம்புகள் அல்ல, உலோகத்தகடுகளே என்ற முடிவுக்கு வந்தார். அடுத்து அவர் வெள்ளி, துத்தநாகத் தகடுகள், அட்டைப்பலகை ஆகியவற்றை உப்பு நீரில் அமிழ்த்தி, பின்னர் அத்தகைய முப்பது தக்டுகளை இணைத்து ஓர் அடுக்காக (pile) உருவாக்கினார்; அவ்வடுக்கின் கடைசித் தகட்டையும், மேல் தகட்டையும் ஒரு கம்பி மூலம் இணைத்தார். அப்போது அக்கம்பியில் மின்னோட்டம் உண்டவதை வோல்டா கண்டறிந்தார். மேற்கூறிய அடுக்கு வோல்டா அடுக்கு (Volta pile) என்று அழைக்கப்பட்டது. லண்டன் ராயல் கழகத்திற்கு இக்கண்டுபிடிப்பைப்பற்றி ஒரு கட்டுரை அனுப்பி அதற்காகப் பரிசும், பாராட்டும் பெற்றார் வோல்டா.
அடுத்து, தொடர்ச்சியாக மின்னோட்டம் நடைபெறுவதற்கான சாதனம் ஒன்றைக் கண்டுபிடிக்க வோல்டா முனைந்தார். இதற்காகப் பல கோப்பைகளில் (cups) மின்சாரத்தைக் கடத்தும் திறன் கொண்ட திரவங்களை நிரப்பி அவற்றைப் பயன்படுத்தினார். அதாவது கோப்பைகளில் நீர்த்த கந்தக அமிலம் (dilute Sulphuric acid) அல்லது உப்புக் கரைசலைப் (Salt water) நிரப்பினார். பின்னர் செம்பு அல்லது வெள்ளித் தகடுகளை, கோப்பையின் சுவர்ப்பகுதியைத் தொடாதவகையில், திரவங்களில் பாதியளவு மூழ்குமாறு அமைத்து, அத்தகடுகள் அனைத்தியும் ஒரு கம்பி வழியே இணைத்தார். இவ்வமைப்பில் தொடர்ந்து மின்னோட்டம் நடைபெறுவதை வோல்டா கண்டு பிடித்தார்.
வோல்டாவின் மற்றொரு கண்டுபிடிப்பு மின்கல அடுக்கு ( Electric Battery) ஆகும். இது மின்னுற்பத்தியும், மின்னோட்டமும் ஒருங்கே நடைபெறும் சாதனமாக விளங்குகிறது. மின்கல அடுக்கு என்பது, ஒரு கண்ணாடிக் கொள்கலனில் உப்புக்கரைசல் அல்லது மின்கடத்து திரவத்தை நிரப்பி உருவாக்கப்பட்டதாகும். செம்பு மற்றும் வெள்ளித் தண்டுகள் (rods) மேற்கூறிய திரவத்தில் அமிழ்த்தப்பெற்று, வெளியேயுள்ள அவற்றின் முனைகள் ஒரு கம்பியால் இணைக்கப் பெற்றன. செம்புத் தண்டில் நேர் மின்னேற்றமும் (positive charge), வெள்ளித்தண்டில் எதிர் மின்னேற்றமும் (negative charge) உருவாவதாக அறியப்பட்டது. மின்கல அடுக்கில் நிகழ்ந்த வேதியியல் வினை (chemical reaction) மின்னோட்டம் நடைபெறுவதை உறுதி செய்தது. மின்னோட்டத்தின் திறன் அல்லது விசையை அளக்கவியலும் என்றும் கண்டறியப்பட்டது. அவ்வாறு அளவிடப்படும் மின்விசையின் அலகுக்கு (unit of electromotive force) வோல்ட் என்றே பெயரிடப்பட்டது.
மேற்கூறிய கண்டுபிடிப்பைப் பாராட்டுவதற்காக, வோல்டா ஃபிரெஞ்சு மன்னர் நெப்பொலியனால் பாரிசுக்கு அழைக்கப்பட்டார்; தங்கப்பதக்கம் வழங்கப்பெற்று போற்றப்பட்டார்; மேலும் மெய்யியல் கழகத்தின் (philoso[phical faculty) இயக்குநராகவும் நியமிக்கப்பெற்றார். வோல்டா 1827ஆம் ஆண்டு தனது 82ஆம் வயதில் மறைந்தார்.
***
முனைவர் இரா விஜயராகவன் Dr R Vijayaraghavan
பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி BTech MIE MA MEd PhD
மொழிக் கல்வித்துறை (தமிழ்) Dept. of Language Education (Tamil)
வட்டாரக் கல்வியியல் நிறுவனம் Regional Institute of Education (NCERT)
மைசூர் 570006 Mysore 570006
Email: ragha2193van@yahoo.com
- நிலவு
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது 6
- காலமும் பயணியும்
- உலகம் உன்னை….
- பனி
- வேண்டுதல்
- Europe Movies Festival
- தப்பிக்க இயலாத பொறி (எனக்குப் பிடித்த கதைகள்- 38 -தி.ஜானகிராமனின் ‘கண்டாமணி ‘)
- வெற்றிடத்தை அறிதல் குறித்து
- அணுயுகப் புரட்சி எழுப்பிய ஆஸ்டிரிய மேதை லிஸ் மையிட்னர்[Lise Meitnar](1878-1968)
- அறிவியல் மேதைகள் வோல்டா (Volta)
- இன்று நாமும் குழந்தையும்
- வேதாளம் கேட்ட கதை
- நான் நானாக …ஒரு வரம்
- சர்க்கரை
- தாமதம்
- அப்பா!
- முக்கால் வயது முழுநிலவு
- இவள் அவளில்லை ?.
- கைது செய்யப்பட்ட விபச்சார குற்றம் சாட்டப்பட்ட பெண்களை விடுதலை செய்யவேண்டும்
- கள்ளர் சரித்திரம்
- Europe Movies Festival
- இந்த வாரம் இப்படி (டிஸம்பர் 1, 2002) (எய்ட்ஸ் தினம், ஈராக் விவகாரம், அபு அப்ரஹாம்)
- அநாதை