ஹெச்.ஜி.ரசூல்
அரபு மார்க்சியத்தின் புதிய போக்காக குடிமைச் சமூக விவாதங்கள் உருவாகி உள்ளதை மிக்கேல். எல். பிரெளசர் தனது ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளார். சோவியத் யூனியனின் பின்னடைவு உலகின் சோசலிச சக்திகளுக்கு குறிப்பாக அரபு சோசலிசவாதிகள் எதிர்கொண்ட ஒரு வீழ்ச்சியாகும். அரபு தேசியவாதம், சோசலிசம், மார்க்சீயம் பற்றிய அதிகமான அரசியல் உரையாடல்கள் சமூக பொருளாதார நீதியின் பால் கவனத்தை ஈர்த்தன. வெகுசன ஜனநாயகம், புரட்சிகர கட்சி முன்னணி, அரசியல் பன்மைத்துவம் குறித்த தாராளவாத உரையாடலையும், மனித உரிமைகள், குடிமைச் சமூகம் பற்றியும் அக்கறை கொள்ள வைத்தன. சோசலிச அடையாளம் கொண்ட தனி நபர்களும், இயக்கங்களும் அதிகாரத்தில் இருந்ததும், பின்னர் அதிகாரத்தை இழந்ததும் கடந்த மூன்று நூற்றாண்டுகளில் நிகழ்வுற்றது. சமகால யதார்த்த சூழலில் இந்த வகை அடையாளத்தை தக்க வைத்து மறுகட்டுமானம் செய்ய முடியாமைக்கு இருமுக்கிய காரணங்களை சோசலிசவாதிகள் முன்வைக்கின்றனர்.
முதற்காரணி இஸ்லாமியத்துவ இயக்கங்களின் அபரிமித பலமான வளர்ச்சி. ஏறத்தாழ அனைத்து அரபு சமூகங்களிலும் மிகவும் பலம் வாய்ந்த எதிர்க்கட்சி அமைப்பாகவும், பாராளுமன்ற அரசியலுக்கு எதிர்தரப்பாகவும் அவை உருவாகியுள்ளன. இந்த புதிய அரசியல் யதார்த்தச் சூழலில் அரபு சோசலிசம் தன் இருப்பை இழந்துள்ளது. பல சோசலிசவாதிகள் சில நாடுகளில் அரசை ஏற்றுக் கொண்டும் அதே சமயத்தில் இன்னும் சிலர் இஸ்லாமியவாதிகளின் வெகுசன தாக்கத்தால் ஆட்பட்டவர்களாகவும் மாறியுள்ளார்கள்.
அரபு சோசலிசம் அரபு மறுமலர்ச்சி காலத்தின் அறிவார்ந்த அடையாளமாகவும், நவீனமயமாதல் மற்றும் தேசத்தின் கட்டுமானம் தொடர்புடையதாகும். பல அரபு நாடுகளில் அரசு என்பது தனித்த எதேச்சதிகார வடிவத்தை பெற்றுள்ளது. ஈராக்கிய சமூகவியல் அறிஞர் பலஹ் ஏ ஜபார் கூறும்போது அரபு சோசலிசம் ஒரு பிரிவு சிந்தனைக் கோட்பாடாக எகிப்து, அல்ஜிரியா, துனிஷியா உள்ளிட்ட பல நாடுகளில் இடம் பெற்றுள்ளது. சமூக பொருளாதார, சமய, சர்வதேச கொள்கைகளாகவும் வெளிப்பட்டுள்ளன.
ஒன்றுபட்ட அரசு பொருளாதார அமைப்பு வலுவாக உள்ள நாடுகளில் அரபு சோசலிசம் வேறு வடிவமாக மாறியுள்ளது. பொருளாதார தாராளமயம் நோக்கியும், தனியார் மையமான போக்கும், அரசுத்துறையை தனியாருக்கு விற்பனை செய்வதும் நிகழ்வது இதற்கு எதிர்தரப்பிலான நடவடிக்கையாகும்.
மார்க்சீயத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளின் அடிப்படைகளிலும் ஒரு திருப்பு முனை ஏற்பட்டுள்ளது. துனுஷியா, அல்ஜீரிய கம்யூனிஸ்ட் கட்சிகளும் தாரளமயமாதலை உள்வாங்கியுள்ளன. மார்க்சீயம், சோசலிசம் என்பதான அடையாளங்களை தங்கள் கட்சியின் பெயரிலிருந்து நீக்கவும் செய்துள்ளன. இந்த தாராளவாத உரையாடலுக்கு தேசிய, சோசலிச அரசுகள் உடன்பட்டு போயுள்ளமைக்கு காரணம் இஸ்லாமியவாதிகள் இதனை கைப்பற்றி விடுவார்கள் என்பதான பயம் குறித்ததுமாகும். கம்யூனிஸ்ட் மற்றும் அரபு சோசலிஸ்ட் இடது சாரி பிரிவுகளும் இந்நாடுகளின் அரசியல் சித்தாந்தத்தோடு ஒத்துப்போவதான நிலைபாட்டையே மேற்கொண்டுள்ளன.
இஸ்லாமியவாத சக்திகளின் வளர்ச்சி மற்றும் தாக்கத்தின் முடிவுகளில் ஒன்றே பாலஸ்தீன கம்யூனிஸ்ட் கட்சி 1991-ல் தனது கட்சியின் பெயரை பாலஸ்தீன மக்கள் கட்சியாக மாற்றிய சம்பவமாகும். இஸ்ரேலிய தேசிய வாதத்திற்கு எதிராக இயங்க ஆரம்பித்த இதில் இயல்பாக இஸ்லாமிய அடிப்படைவாதமும் ஒன்று கலந்தது.
பலஸ்தீன சோசலிச சமூகவிலாளர் சலிம் தம்ரி புதிதாக பெயரிடப்பட்ட கட்சி கம்யூனிஸ்ட், லெனினிஸ்ட், சோசலிஸ்ட் அடையாளம் இன்றி கட்டமைக்கப்பட்டடுள்ளது குறித்து பேசுகிறார்.
சோவியத் வீழ்ச்சிக்கு பிறகு அரபு இடது அறிவு ஜீவிகள் சோவியத் வகைப்பட்ட அரபு சோசலிச லட்சியத்திலிருந்து மாற்றுவகையான அரபு சோசலிசத்தை கட்டமைக்க முயன்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் பன்மை தன்மை மிக்க தாராளமய உரையாடல்களை நிகழ்த்தினர். மார்க்ஸ் மற்றும் பிற சோசலிச சிந்தனையாளர்களின் கொள்கைகளையும் மறு உரையாடல் செய்தனர். இந்த நிகழ்வுப் போக்கில் இத்தாலிய சிந்தனையாளர் அந்தோனியா கிராம்ஷியை கண்டடைந்தனர்.
1993 செப்டம்பரில் லெபனீய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் துணை செயலாளர் ஜெனரல் கரீம் முருவா மார்க்சீய நிலையை மதிப்பீடு செய்யும்போது ”நமது மார்க்சீய கோட்பாட்டின் எல்லை மார்க்சீயம், லெனினியத்தோடு நின்றுவிடக்கூடாது. காவ்ட்ஸ்கி, ரோஸா லுக்ஸ்ம்பர்க், கிராம்ஷி, மாவோ என விரிவடைந்து செல்லவேண்டும். இந்த உலகை மாற்றுவதற்காக இக்கோட்பாடுகளை உற்றுநோக்கி ஆய்ந்து வளர்த்தெடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
கிராம்ஷியை நோக்கி அரபு அறிவுலகம் தனது கவனத்தை ஈர்த்தமைக்கு முக்கிய இருகாணங்கள் இருந்தன. கிராம்ஷியின் சிந்தனை பழைய நிலைகளிலிருந்து புதிய நிலைகளுக்கான ஒரு ஊடாட்ட ஒருங்கிணைவை வழங்கி கோட்பாட்டு ரீதியான ஒரு புதுப்பார்வையை கொடுத்து அரபு பிரதேசத்திற்கான பின்னை மார்க்சீய சோசலிச கோட்பாட்டை உருவாக்கித் தந்தது. இதன் முதற்காரணமாகும்.
இரண்டாம் நிலையில் அரபு சோஷலிசவாதிகள் குடும்ப அமைப்பு உள்ளிட்ட குடிமைச் சமூகம் பற்றி எதிர்கொண்ட பிரச்சனைகளுமாகும்.
அரபு மார்க்சீயமும், துவக்க காலத்தில் குடிமைச் சமூகத்தை முதலாளித்துவத்தின் தாராளவாத வடிவம் என மதிப்பீடு செய்தது. மார்க்ஸை பொறுத்தமட்டில் குடிமைச் சமூகம் முதலாளித்துவ பொருளாதாரத்திலும் தனி நபர்கள் சார்ந்த உற்பத்தி, நுகர்வாலும் உருவாக்குவதை நோக்கியதாகவே அமையப்பெற்றிருந்தன.
குடிமைச் சமூகத்தின் வடிவம் உள்ளடக்கம் ரெண்டும் முதலாளித்துவத்தால் தீர்மானிக்கப்படுகிறது. மார்க்சீய மரபு வழி சிந்தனை அடிப்படையில் இதனை சோசலிச குடிமைச் சமூகமாக மாற்றியமைத்தலே இது குறித்த முக்கியமான மாற்றுச் சிந்தனையாகும்.
லெபனீய அரசியல் விஞ்ஞானி காஸன் ஸலேம் இதுபற்றி குறிப்பிடுகையில் மத்திய கிழக்கு சிந்தனைக்கு மார்க்சின் குடிமைச் சமூகத்தை மாதிரியாக எடுத்துக் கொள்வதில் பிரச்சினை இருக்கிறது. அரபு, பாரசீக முதலாளித்துவத்தால் அரசுகள் நிறுவப்பட்டதைவிட காலனியாதிக்கத்தால் செயற்கையாக இவவரசுகள் உருவாக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்.
வரலாற்று ரீதியாக அரபு மார்க்சியர்கள் மூன்றாவது அகிலத்தில் முன்வைக்கப்பட்ட லெனினிய கோட்பாட்டை முன்வைப்பவர்களாக இருந்தனர். ஜனநாயக மத்தியத்துவம் மற்றும் அரசியல் திட்டம் புரட்சிகர நடவடிக்கையில் நடுத்தரவர்க்கத்தினரின் பங்கு வர்க்கப் புரட்சி என்பவற்றில் பல நம்பிக்கைகளைக் கொண்டிருந்தனர். போல்ஷிவிக் மாதிரியாக கட்டமைக்கப்பட்ட அரபு சோசலிசம் தொழிலாளி வர்க்க தலைமை என்பதையே மிகவும் பிரதானமாக மையப்படுத்தியிருந்தது. எனவே வெகுசன மக்கள்மயதிரட்டல், விரிந்த அளவிலான மக்கள் பகுதிகளான விவசாயிகள், கைவினைஞர்கள், வணிகர்கள், குடும்ப பெண்கள், தொழில் வினைஞர்கள்களிடையே ஊடுருவுவதில் சிக்கல்கள் நிறைந்திருந்தது.
ஆனால் அண்மைக்கால அரபு சோசலிச வாதிகளின் விவாதத்தில் அரசியல் லட்சியங்களை மக்கள் சார்பு இயக்கங்களிடையாக பரவச் செய்ய முடியுமென்ற அணுகுமுறை உருவாகி உள்ளது.
ஒன்று கிராம்ஷியின் கருத்துக்களை குடிமைச் சமூக உரையாடலின் வாயிலாக சமகால அரபு அரசியல் சிந்தனைகளினூடே பரவச் செய்வது. மற்றொன்று சமகால அரபு குடிமைச் சமூகத்தின் மீதான விமர்சன ரீதியான மதிப்பீட்டையும், கிராம்ஷியின் சிந்தனையின் ஒளியில் அதன் உண்மை நிலையையும் அறிவதற்கான திட்டமிடுதல்களை உருவாக்குவதுமாகும்.
குடிமைச் சமூக விவாதங்களினூடே
அரபு சோசலிசத்தின் தேடல்
கெய்ரோ பல்கலை கழகத்தின் பிரெஞ்சு இலக்கியவாதி அமினா ரஷீத் இரு முக்கிய காரணங்களை கிராம்ஷியின் கவன ஈர்ப்பிற்காக முன்வைக்கிறார்.
முதலில் உலக அளவில் புகழ்பெற்ற முக்கிய சிந்தனையாளர் சோசலிசம் சார்ந்த நமது போராட்ட மரபின் வடிவங்களாகவும், சமகால இருப்பின் விமர்சனங்களாகவும், தமது சிந்தனைகளை வெளிப்படுத்தி உள்ளார். இரண்டாவதாக, அரபு சமூகத்தின் சமகால உண்மை நிலையை அடிப்படையாக புரிந்து கொள்வதற்கு கிராம்ஷியின் போராட்டமாதிரி முன் தேவையாக இருக்கிறது. இது இதாலிய மரபு சார்ந்து உலகளாவிய கருத்தாங்களை அறியவும் உலக வரலாற்று இயக்கங்களை புரிந்து கொள்ளவும் வழி வகுக்கிறது.
தற்கால சூழலில், அரபு சோசலிசவாதிகள் கிராம்ஷியை நோக்கி திரும்புவதையும் மார்க்ஸிய மரபை மீட்டுருவாக்கம் செய்யும் வகையிலும் கவனத்திற் கொள்ளப்படுகின்றனர். அறிஞர் லேபிப் – இது குறித்து விளக்கும்போது உயிர்ப்பு மிகு அறிவு ஜீவிகள், மரபு அறிவு ஜீவிகள் மற்றும் கருத்தியல் மேலாண்மை குடிமைச் சமூகங்களில் பல வடிவங்களில் செயல்படுவதை குறிப்பிடுகிறார். இது மார்க்சியர் மற்றும் மார்க்சியர் அல்லாதவர்களுக்கும் உடன்பாடான ஒன்றாகும்.
துனிஷியா இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர் அல்ஹநெளச்சி கிராம்ஷியின் சிந்தனையை பயன்படுத்தி வெகுசன மக்களின் மனங்களிலும் குடிமைச் சமூகத்திலும் ஊடுருவும் சாத்தியப்பாடுகளை அறிந்திருந்ததாக குறிப்பிடுகிறார்.
லேபிபின் கருத்துப்படி அரபு இடதுகளின் சிந்தனையில் கிராம்ஷி ஏற்கனவே தீவிரமான கருத்தியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதும், லெபனீய மார்க்சீயர் மஹிதி அமில் இத்தாக்கத்தை உள்வாங்கியவர்களில் ஒருவராகவும் குறிப்பிட்டு சொல்லலாம். ஆழ்ந்த கற்றலின் விளைவாக பிரகடனப்படாத கிராம்ஷியிசத்தின் அடையாளமாகவே மஹிதி அமில் திகழ்கிறார்.
கிராம்ஷியின் மார்க்சியத்தின் வடிவங்கள், சமகால அரபு உலகத்திற்கு சோசலிச கட்டுமானத்திற்கான அதன் திட்டங்கள் குறித்து ரசீத் தனது கருத்துக்களை முன்வைக்கிறார். கிராம்ஷியின் புரட்சிகரமான குடிமைச் சமூகத்தை மதிப்பீடு செய்யும்போது மிக முக்கியமான இரு பார்வைகள் மேலெழும்புகின்றன.
1. மார்க்ஸ், ஏங்கெல்ஸ் அனுமானித்தபடி மேற்கத்திய வளர்ச்சியடைந்த தொழில்மயச் சமூகத்தில் புரட்சி ஏற்படாமல் வளர்ச்சியில் பின்தங்கிய ஜார் ரஷ்யாவில் ஏன் ஏற்பட்டது.
2. இதாலியின் வரலாற்று அனுபவங்களிலிருந்து எவ்வாறு புரட்சியை புரிந்து கொள்வது. தொழில் மயமான திசையில் தவித்து கொண்டிருக்கும் வட இதாலியும், வளர்ச்சியடையாத பின்தங்கிய விவசாய சமுதாயமான தென் இத்தாலியும் மரபு வழி சமூகத்தின் கலாச்சார மேலாண்மையை எப்படி உட்செரித்துள்ளன.
அரபு சோசலிசவாதிகளிடம் இந்த இருமுக்கிய கேள்விகள் எழுந்துள்ளன. சோசலிச அரசியல் கோட்பாட்டு வீழ்ச்சி இஸ்லாமியத்தின் தாக்கத்தை வெகுசன மக்களிடையேயும், அரசு நிறுவன வடிவத்திலும் வெளிப்படையாக, மேலாண்மையாக ஜனநாயக மற்றநிலைகளிலும் வெளிப்படுத்துவதைக் காணலாம்.
மரபு வழி மற்றும் உயிர்ப்பு மிகு அறிவு ஜீவிகள்
அரபு சிந்தனையின் அரசியல், சமூக மாற்றத்தில் அறிவுஜீவிகளின் பங்கு குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.
எகிப்திய சோசலிச இலக்கிய விமர்சகர் காலி சுக்ரி தனது அண்மைக்கால ஆக்கமொன்றில் கிராம்ஷி முன்வைத்த உயிர்ப்பு மிகு அறிவு ஜீவிகள் மற்றும் கூட்டு அறிவு ஜீவிகள் என்பதான கருத்தாக்கங்களை விவாதிக்கிறார். எழுபதுகளுக்கு முன்பு அரபு எழுத்துக்களில், மரபு வழி அறிவு ஜீவிகள் குறித்த மாதிரிகள் விவாதத்திற்கு உட்படவில்லை.
சுக்ரி சமகால அறிவு ஜீவிகள் குறித்தும் அவர்களது இயக்கம் சார்ந்த செயல்பாடுகள், ஆளுமை சார்ந்த பிரதிகள், பொருளியல் கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்தும் சார்ந்து மரபு வழி அறிவு ஜீவிகளாக இருப்பதை குறிப்பிடுகிறார்.
நவீன எகிப்திய கட்டுமானத்தில் மரபு வழி அறிவு ஜீவிகளின் இருப்பு குறித்த அமெரிக்க அறிஞர் பீட்டர் கிரேன் கிராம்ஷியின் அணுகு முறையில் இஸ்லாமிய பல்கலைக்கழக தலைவர் ஷேக் அல் அஸ்கரை மரபு வழி அறிவு ஜீவிக்கு உதாரணப்படுத்துகிறார்.
பாலஸ்தீனிய கலாச்சார விமர்சகர் பைசல் தராஜி நிறுவன சமயத்தின் விரிவாக்கமே வெகுசன சமயம் என்றும், இவை இரண்டும் மரபு வழி கலாச்சாரத்தினூடே எவ்வாறு ஒன்றிணைக்கப்படுகின்றன என்றும் விளக்கம் தருகிறார்.
எகிப்திய சமூகவியலாளர் அகமது கமால் அவாடு மரபு வழி அறிவு ஜீவிகள் வெகுமக்களின் பொதுப்புத்தியிலும், பொது நம்பிக்கைகளிலும் ஊடுருவி வினையாற்ற முடிகிறது. ஆனால் உயிர்ப்புமிகு அறிவுஜீவிகளின் பங்களிப்பு அவ்வாறாக இல்லை என மதிப்பிடுகிறார். உயிர்ப்பு மிகு அறிவு ஜீவிகளின் உயிர்ப்பும் மரபு வழி ஜீவிகளின் மரபுவாதமும் உடன்படாத தன்மையோடு செயல்படுவதையும் குறிப்பிடுகிறார். அறிவு ஜீவிகளின் உயிர்ப்புத் தன்மையை கண்டடைதலில் வெகுசன கதையாடல் வெகுசன கலாசாரம் குடிமைச் சமூகம் உள்ளிட்டவற்றில் ஊடுருவிச் செயல்படுதலாகவும் சோஷலிச அறிவு ஜீவிகளைவிட இஸ்லாமியவாதிகள் இதற்கு மிக பொருத்தமுடையவர்களாகவும் இருக்கிறார்கள்.
எகிப்திய அறிஞர் நாஸர் ஹமீத் அபு சையத் சர்ச்சைக்கு உட்பட்டதொரு சிந்தனையாளராகவே வெளிப்பட்டுள்ளார். கெய்ரோ பல்கலைக் கழக அரபு ஆய்வுகளின் வழி மரபுகளின் மீறலோடு நவீன இலக்கிய மாதிரிகளின் துணையோடு சமயப் பிரதிகளை அர்த்தப்படுத்தினார். 1992-ல் இறை தூதர் நிந்தனையாளராக குற்றம் சாட்டப்பட்டு இஸ்லாமியவாதிகளால் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டார். நீதிமன்றத்தில் இவர் ஒரு இறை நிராகரிப்பாளனாக அறிவிக்கப்பட்டு அவரது திருமணம் ரத்து செய்யப்பட்டது. அபுசையத் தனது மனைவியுடன் எகிப்தை விட்டு வெளியேறி நெதர்லாந்தில் அடைககலம் பெற்றார். இது வெகுஜன மதசார்பற்ற கலாச்சாரத்தை இபபகுதியில் நிலைநிறுத்துவதற்கான உறுதியை அளித்தது. அபுசையதின் சிந்தனைமுறைகள் முஸ்லிம் பிரதிகளில் மதசார்பற்ற அணுகு முறையை கண்டறியும் முறையினைக் கொண்டிருந்தது. அபுசையத் ஒரு அரசியலாளராகவோ சோஷலிசவாதியாகவோ வெளிப்பட்டதைவிட கல்வியாளர் என்பதான அடையாளத்தையே பெரிதும் பெற்றிருந்தார். அபு சையத் கிராம்ஷியின் சிந்தனையை எங்கும் வெளிக்காட்டவோ, அவரது மொழியை மேற்கோள் காட்டவோ, பயன்படுத்தவோ செய்யவில்லை. மாறாக இமாம் ஷாபியின் நடுநிலைச் சித்தாந்தத்தை அரசியல் நெறியாக முன்வைத்தார். இமாம்ஷாபி ஸ¤ன்னி இஸ்லாத்தின் மத்ஹபுகள் என்னும் நான்கு முக்கிய மார்க்கப்பள்ளிகளில் ஷாபி மார்க்கப் பணியை நிறுவி பிக்ஹ¤ சட்டங்களை வகுத்தவர். கி.பி. 767-820 காலகட்டத்தில் வாழ்ந்தவர். ஒரு உயிர்ப்பு மிகு அறிவு ஜீவியாக ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் வழி மேலாண்மையை வெளிப்படுத்தியதும், விரைவாக வளர்ந்து கொண்டிருந்த இஸ்லாமிய பேரரசின் சூழ்நிலையில் வேறுபடுத்தப்பட்ட, மறுவிளக்க சிந்தனைகளை உருவாக்கினார். அவரது சிந்தனை வரலாறு மற்றும் சித்தாந்த சூழலை வெகுவாக உள்வாங்கி செயல்பட்டுள்ளது. இது கிராம்ஷிய, மார்க்சிய சிந்தனையை மட்டும் உள்வாங்கிச் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஷேக் அல் ஷாராவி 1911-1998 காலகட்டத்தில் வாழ்ந்தவர். பின்தள்ளப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுசன மக்கள் இவரை தலைவராக ஏற்றுக் கொண்டனர். இவர் ஆளும் அதிகாரத்தையும் ஒப்புக் கொண்டார். இந்தச் சூழலில் சமூக வர்க்கங்களின் உயர்நிலை அறிவு ஜீவியாக உருவாகினார். எகிப்திய மக்களால் நன்கு அறியப்பட்ட சமய பிரச்சாரகரான இவர் அல்-அஸ்கரின் தலைவராகவும், மக்காவின் மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக் கழகத்தின் பட்டப் படிப்பியல் தலைமைப் பொறுப்பையும் சமய அமைச்சகத்தின் அமைச்சராகவும் இருந்துள்ளார். ரேடியோ, தொலைக்காட்சிகளில் முதன் முதலில் தோன்றி புகழ்பெற்றவர். நூர் அலா நூர் (Light on Light) தொலைக்காட்சி விவாதத்திலும் தன்னை பிரபலமாக வெளிப்படுத்தியுள்ளார்.
தராஜின் கருத்துப்படி எகிப்து தற்போது ஒருமைத் தன்மை கொண்ட முதலாளிய வர்க்கமோ அல்லது உழைக்கும் வர்க்கமோ இல்லை. எகிப்திய சமூகம் கலப்புத்தன்மை கொண்டதாக உள்ளது. இதில் இஸ்லாமிய அறிவாளிகளின் பங்கு முக்கியமானது. ஷேக் அல் ஷராவி ஆட்சி அதிகாரத்தின் அறிவு ஜீவியாகவும், மதசார்பற்ற நடவடிக்கைகளை ஆதரிப்பதாகவும், கட்சியில் பன்மைத் தன்மை பேசுபவராகவும் இருந்தார். எனினும் எகிப்தில் இஸ்லாத்தை மேலாண்மை மிக்க சக்தியாக்க அனுமதிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
தராஜ் மற்றும் பெளசியின் ஆய்வுகள், அபுசையதின் பார்வையை விரிவடையச் செய்யும் விதத்தில் வெகுசன கலாச்சாரம், உயர்குடி கலாச்சாரத்திற்கான மாற்றாக வைக்கப்படுகிறது. இது ஒடுக்கப்பட்டவர்களின் உண்மையான அறிவு அல்லது பொதுப்புத்தி கூட்டுச்சிந்தனையாக கருதப்படுகிறது. வெகுசன மக்கள் கலாச்சாரம் அறிவின் புதுவடிவமாகி உண்மையான அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தி மார்க்சியத்தை வெற்றிகரமான உண்மையாக்க முயல்கிறது என்பதை விவரிக்கிறது.
வெகுசன கலாச்சாரம் ஷேக் அல் ஷராவியை ஒரு தொலைக்காட்சி நட்சத்திரமாகவும், சமயத் தலைவராகவும் உருவாக்கி உள்ளது. இவர் மருத்துவத்தையும் மின்சாரத்தையும் பேசுவதினூடே வளைகுடா யுத்தத்தில் அமெரிக்க ராணுவத்தின் தலையீட்டையும் ஆதரித்தவராகவே தென்பட்டதைப் பார்க்கலாம்.
பெளசி ஏற்கனவே நிலைப்பெற்றுள்ள சமய மேலாண்மை மற்றும் சமயத்தின் வெகுஜன ஒப்புதல் குறித்த வித்தியாசங்களையும் பேசினார். இது நவீன மதசார்பற்ற, முற்போக்கான மக்கள்மயதிரளின் உள்ளுணர்ச்சிகளையும், மேலாண்மைக் கருவிகளை கைக்கொள்ளுதலையும் வெகுசன கலாசாரத்திற்கான உலகப் பார்வையை உருவாக்கி அளிக்க உதவி செய்கிறது.
பரிதா அல் நக்குஷ் ஒரு ஆய்வில் குடிமைச் சமூகம் சோசலிசத்திற்கு எதிர்தரப்பா? என்பதாக கேள்வி எழுப்பியுள்ளார். இக்கட்டுரை அகமது பியூப் நிஜிம், சாத் எடின் இபுராகீம், சமீர் அமீன் மற்றும் கிராம்ஷியின் அறிமுகங்களோடு முன்வைக்கப்படுகிறது.
நிஜிம் மற்றும் நக்குஆஷ் அரபு மார்க்சியத்தின் முக்கிய அடையாளமாக அபுதார்அல் கப்பாரியை உதாரணப்படுத்துகின்றனர். இவர் முகமது நபியின் தோழர்களில் ஒருவராவார். கப்பாரி மக்காவின் வணிக உயர்குடியானவருக்கு வழங்கப்பட்ட சலுகைகளுக்கு எதிராக கலகத்தை செய்பவராகவும், சமூக நீதிக்காக போராடுபவராகவும் இருந்துள்ளார். முந்தைய எகிப்திய நாஸரியவாதிகள். மார்க்சியவாதிகள் அரபு சோசலிசத்தின் வேர்களை கப்பாரியின் கற்பித்தல்களிலிருந்து எடுத்துக் கொள்கின்றனர்.
அகமது பியூப் நிஜிம் அரபு மார்க்சியத்தின் முக்கிய கவிஞராகவும், கிளர்ச்சியாளராகவும் இருந்துள்ளார்.
சாத் எடின் இபுராகிம் முன்னாள் அரபு சோசலிச சிந்தனையாளராக இருந்தவர் தீர்மானிக்கப்பட்ட மேற்கத்திய வடிவ தாராள மையத்தை எதிர்கொள்பவராகவும், குடிமைச் சமூக உரிமைகள் குறித்த அக்கறையாளராகவும் வெளிப்படுகிறார்.
நக்குவேஷின் சிந்தனை அரபு சோசலிசவாதிகளின் முற்றுப்பெறாத இயல்பு, கிராம்ஷியின் குடிமைச் சமூக கருத்தாக்கத்தை அரபுச் சூழலில் பொருத்திப் பார்ப்பதை குறிப்பிடுகிறது.
சோசலிச வாதிகளின் செறிவூட்டப்பட்ட குடிமைச் சமூகத்தின் புரட்சிகர நடவடிக்கை, தற்கால அரபு மற்றும் சர்வதேச சூழலில் முக்கியமானதாகப் படுகிறது.
அது ஆதிக்கத்தின் கருவிகளாக அரசியல் சமூகம், அரசு எந்திரம், மற்றும் மேலாண்மையின் கருவிகளான குடிமைச் சமூக நிறுவனங்கள் செயல்படுவதை வேறுபடுத்திக் காட்டுகிறார். சர்வதேச அமைப்புகள், மற்றும் உலகமயமாதலின் சக்திகள் வளர்ச்சியின் இந்த செயல்பாடுகள் வளர்ச்சியின்மை சார்ந்ததாகவே இருந்து வருகிறது.
யுஸ்ரி முஸ்தபா எகிப்திய மனித உரிமைகள் அமைப்பின் ஆய்வியல் இயக்குநர் குடிமைச் சமூக விமர்சன பார்வையை முன்வைக்கிறார்.
கிராம்ஷி, லெனினிய கருத்தாக்கத்தை உள்வாங்கியே செயல்பட்டுள்ளார் என்பதை அவரது அரசு அதிகாரத்தை கைப்பற்றுதல் சமூக மாற்றத்திற்கான கருவிகளான ஆளும் கட்சியின் முன்னணிப் படை அதன் புரட்சிகர நடவடிக்கைகள் என்பவற்றிலிருந்து குறிப்பிட்டுச் சொல்லலாம். மேற்கத்திய சமூகங்களின் உண்மை நிலையிலிருந்து இத்தகையதான வழிமுறைகள் உருவாகின்றன. கிராம்ஷி முன்வைக்கும் புரட்சி மாதிரி அக்டோபர் புரட்சியிலிருந்தும் வேறுபட்ட ஒன்றாகும். யுஸ்ரி முஸ்தபா கிராம்ஸியின் ரஷிய சமூகங்கள் மற்றும் மேற்கத்திய சமூகங்களுக்கு இடையிலான வித்தியாசத்தை சுட்டிக்காட்டுகிறார்.
துனிஷியாவின் சமூகவியலாளர் ஸ¤கேல் எழுபதுகளிலிருந்து கிராம்ஷியின் சிந்தனைகளை உள்வாங்கி எழுதியுள்ளார். அவர் பிரெஞ்சு மொழியில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் கிராம்ஷியின் கருத்தாக்கங்களான வரலாற்று அணி மற்றும் குடிமைச் சமூகம் குறித்து விவாதிக்கிறார்.
விவசாய சீர்திருத்த அடிப்படையில், அல்ஜீரியாவின் பின்காலனிய அரசு விவசாயிகளுக்கு நிலங்களை அளித்தபோது அதை ஏற்க அல்ஜீரிய விவசாயிகள் ஏன் மறுத்தார்கள் என்பதற்கான விடையை கிராம்ஷியின் சிந்தனையின் வழியாக கண்டடைய முயன்றார்.
ஸ¤கேல் வரலாற்று அணி என்பது அடித்தள சமூகக் கட்டுமானத்தின் வர்க்கங்கள் ஒரு புறமும் மேற்கட்டுமானத்தில் கருத்தியல் மற்றும் அரசியல் ரீதியானது என இரு பகுதிகள் மறுபுறமாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். இந்த கருத்தியல் மேற்கட்டுமானம் மக்கள் சமூகத்தின் மனோபாவங்களையும், சித்தாந்த நெறிகளையும் ஒருங்கே கொண்டதாகும். அரசியல் மேற்கட்டுமானம் என்பது அரசியல் சமூகத்தின் நிலைகளையும், அரசு எந்திரத்தின் தாக்கத்¨யும் கொண்டதாகும். ஸ¤கேல் தனது விவாதத்தில் இந்த இரு மேற்கோப்புகளும் ஒன்றுக்கொன்று சுயாதீனமாக இயங்கும் தன்மை கொண்டதாக குறிப்பிடுகிறார். அரசியல் சமூகத்தில் ஏற்படும் தீவிரமான, துரிதமான வளர்ச்சி அல்லது புரட்சி அல்லது சுதந்திரம் அதற்கான இணைவான நிலையில் மொத்தமான, உடனடியான மக்கள் சமூக மனோபாவங்களை பண்பாட்டு நிலைபாடுகளை மாற்றிவிடும் என்பதற்கான உறுதிப்பாட்டை சொல்லமுடியாது.
பழைய ஆட்சியமைப்பின் நிலைபெற்றிருக்கும் மரபுவழி அறிவுஜீவித்தனம் புது மக்கள் சமூகத்தையும் தொடர்ந்து ஊடுருவி பின்னடைவை செய்ய வைக்கும். இந்த வகையில் ஸ¤கைல் விவாதத்தை தொடர்கிறார். புது வரலாற்று அணியால் உருவாக்கப்பட்ட உயிர்ப்பு மிகு அறிவு ஜீவிகள் கூட, மரபுவழிஅறிவுஜீவிகளின் சிந்தனைத் தாக்கத்திலிருந்து விடுபடுவது கடினமாகவே இருக்கிறது.
அல்ஜீரிய விவசாயிகள் அரசால் தங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட நிலங்களை ஏற்க மறுத்தமைக்கு காரணம் ஆளும் அந்த வர்க்கத்தின் தேசிய சித்தாந்த மனோபாவத்தை ஏற்றுக் கொள்வதில் விவசாயிகளுக்கு இருந்த தயக்கங்களே ஆகும்.
அல்ஜீரிய விவசாயிகளுக்கு முன்வைத்த இவ்விவாதத்தை இஸ்லாமிய இயக்கங்களின் செயல்பாட்டிற்கு பொருத்திப்பார்த்தார். பின்னை காலனிய நாடுகளான துனுஷியா, அல்ஜீரியா, மொரோக்காவில் இந்த வகை இயக்கங்கள் விரிவான அளவில் செயல்பட்டன.
எண்பதுகளில் இந்நாடுகளின் இஸ்லாமிய இயக்கங்கள் நாட்டின் நவீனமயமாக்கலையும் கம்யூனிஸ்ட் உட்பட்ட பல கட்சி ஆட்சிமுறைகளை தேர்தலின் மூலம் ஆட்சியையும் ஏற்றிருந்தனர்.
துனீஷிய விடுதலைப் போராட்ட தலைவரும், நாட்டின் முதல் தலைவருமான போர்குபே முக்கியமானவர் அவர்.
பண்பாட்டு நடவடிக்கைகளை நவீனமயப்படுத்தினார். இது சமூக செயல்பாட்டில் சமயத்தின் பங்களிப்பை ஊடுருவலை குறைத்தும் பெண்களுக்கான உரிமைகளுக்கு உத்தரவாதமளித்தும், திருமண மற்றும் சமூக வாழ்வில் சிக்கனத் தன்மையை ஏற்படுத்தவும், செய்தபோதும் பெரும்பகுதி மக்கள் தங்கள் பழம் மரபுகளிலேயே அதிக ஈர்ப்புடன் இருந்தனர்.
காலனிய அதிகாரத்திற்கும், தேசியவாதிகளுக்கும் இடையே உடன்பாடுகள் ஏற்பட்டபோது போர்குபே முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணியும் பழக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டார். துனீஷியர்கள் பிரெஞ்சு குடியுரிமை பெறுவதற்கும் அனுமதியளித்தார்.
துனீஷிய அல்நக்தா இஸ்லாமிய இயக்கத் தவைர் ரஷீத் அல்கான்நெளச்சி – இதற்கு மாறாக போர்குபேவின் நவீனத்துவ மேற்குமயமாதலை சமயத்தின் பெயரால் நிகழ்வதையும், விமர்சித்தார். இதற்கு மாற்றாக புது இயக்கத்தை முஸ்லிம் சூழலில் ஐரோப்பிய மறுமலர்ச்சி சார்ந்த அடிப்படைவாத இயக்கத்திற்கு மாற்றாக முன்வைத்தார்.
சமூக அளவிலான சீர்திருத்தங்களில் இஸ்லாமியர்களின் சமூக நீதி, மனித உரிமைகள், பன்மைத்துவம் அனைத்தும் எதேச்சதிகாரத்திற்கு மாற்றாகவே முன்வைக்கப்படுகிறது. அமெரிக்க முஸ்லிம்களுக்கு அளித்த உரை ஒன்றில் கான்நெளச்சி – நாட்டிற்கு உண்மைத்தன்மையோடு இருக்கவும், மொழி, கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளவும், முஸ்லிம் சமூகம் பிறரிடமிருந்துதனிமைப்பட்டு வாழ்ந்துவிடக்கூடாது என்றும் தெரிவித்தார்.
அல்ஜீரிய சமூகவியலாளர் அலிஇ-ஹென்ஸ் பின்காலனிய நாடுகளின் தோல்வி என்பது அதிகமும் வெளிப்படையாக கிராம்ஷியின் சமூக மேலாண்மை குறித்த கருத்தாக்கமும் புரிந்து கொள்ளாததுமாகும். காலனி ஆதிக்கத்திற்கு எதிரான அரபு உலகத்தின் விடுதலை இயக்கங்களும், மேலாண்மைத் தன்மையின் வெளிப்பாடுகளாகவே இயங்குகின்றன. அல்ஜீரிய தேசிய இயக்கம் கலாச்சார மேலாண்மை குறித்த புரிதலை இழந்ததற்கு தங்களது அறிவாளித்தனத்தை குடிமைச் சமூகத்தில் ஈடுபடுத்தாததாகும் என மதிப்பிடுகிறார்.
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:6) சீஸர் பட்டாபிசேக தினத்தின் காலை
- கீதாஞ்சலி (101) பாடம் புகட்டும் கீதங்கள்!
- மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்.
- இல்லாத இடம் தேடும் …
- குடும்ப வன்முறை பற்றிய கருத்தரங்கம்
- டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் – டிசம்பர் 6, 2006 புதன் கிழமை மாலை ஐந்து மணி
- சங்க இலக்கியப் படைப்பாக்கத்தில் திட்டமிட்ட புறக்கணிப்பு
- கில்காமெஷ் : மரணமின்மையின் இரகசியத்தை தேடிய இதிகாச வீரன் [2]
- வஞ்சமகள்: ஒரு பின்நவீனப் பார்வை (வெளிரங்கராஜனின் இயக்கத்தில் கு.அழகிரிசாமியின் நாடகம்)
- பிரம்மராஜன் – வேறொரு புதுக்கவிதை
- கடித இலக்கியம் – 34
- சிவலிங்கனாரின் – உலகக் கவிதைகள் மொழியாக்கம்
- இலை போட்டாச்சு 4 – பச்சை மோர்
- தலைமுறை இடைவெளி
- தொலைதூர மகளோடு தொலைபேசியில்
- யோகம்
- மாதவி ! ஜானகி ! மேனகி !
- பெரியபுராணம் – 114 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- கேட்டதெல்லாம் நான் தருவேன்
- நமது நாடுதான் நமக்கு!
- அரபு பண்பாட்டு மார்க்சியம்
- நடுவழியில் ஒரு பயணம்!
- விடுதலையின் ஒத்திகை.
- மடியில் நெருப்பு – 14
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 13