தா. கிஷோர், து. கோபால் ராவ்
இன்றைய அரசியல் அமைப்பில், அரசியல்வாதிகள் அரசியலை பணம் பண்ணும் ஒரு உத்தியாகவே பார்க்கிறார்கள். தேர்தல் காலத்தில் செய்யும் செலவின் பணத்தை முதலீடாகவும், வெற்றி பெற்ற ஐந்து வருட காலத்தில் அவை முதலும் வட்டியுமாக (கந்துவட்டி அளவில்) ஈட்டவுமே இன்றைய அமைப்பு இருக்கிறது.
இன்றைய அரசியல் அமைப்பு போலித்தனத்தை ஆதரிப்பதாக இருக்கிறது. அரசியல்வாதி தன்னலமற்ற மக்கள் தொண்டராக தன்னைக் காண்பித்துக் கொள்ளவும் வேண்டும். அதே நேரம் அவர் அரசியலை பணம் இன்றி நடத்தவும் இயலாது. அரசியல்ரீதியான வேலைகளுக்குத் தேவையான பணத்தை தொழிற்சாலை அதிபர்களிடமிருந்தும், அரசாங்கத்திடமிருந்து அவசியமான அனுமதிகளை பெறவேண்டி இருக்கும் மக்களிடமிருந்தும் லஞ்சமாகப் பெறவும் வேண்டியிருக்கிறது. ஆகவே நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வருவது அவர்களுக்கே நல்லதல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வருவதில்லை. அப்படி வந்தவர்கள் தானும் ஊழல் மயமாகி விடுகிறார்கள். அப்படி ஆக முடியாதவர்கள் வலியை தாங்கிக்கொண்டு அரசியலை விட்டு விலகிவிடுகிறார்கள்.
இன்று அரசாங்கத்தை ஒரு தனியார் கம்பெனி போல நடத்தவேண்டும் என்ற பேச்சு இருக்கிறது. பேச்சு நன்றாகத்தான் இருக்கிறது. அரசாங்கம் ஒரு தனியார் கம்பெனி போல நடத்தப்பட்டால், வீண் செலவுகள் குறைக்கப்பட்டு, எல்லோரும் உருப்படியாக வேலை செய்து, வேகமான முன்னேற்றம் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் நாம் இன்னும், அரசியல்வாதிகள் தமிழ்நாடு என்ற கம்பெனியில் வேலை செய்யும் மானேஜர்களாக, செய்யும் வேலைக்கு கூலியும், மிக நன்றாக செய்த வேலைக்கு போனசும் கிடைக்கும் ஒரு உருப்படியான திட்டத்தை பார்க்க முடியவில்லை. தனியார் கம்பெனியில் வேலை செய்யும் மேனேஜருக்கு நல்ல வேலை செய்தால் போனஸ் கிடைக்கும். அப்படி ஒரு போனஸ் கிடைக்காத நிலையில் எப்படி ஒரு எம்எல்ஏ நல்ல வேலை செய்வார் என்று எதிர்பார்க்க முடியும் ?
எல்லா எம்எல்ஏ, எம்பிகளும் அரசியலில் தன்னலமற்ற சேவை செய்வதற்காக இருக்கிறார்கள் என்று நம்பும் ஏமாளிகளா நாம் ? சும்மா 2000 ரூபாய் சம்பளத்துக்காக முதலமைச்சர்களும், மந்திரிகளும் எம் எல் ஏக்களும் அட்டகாசமான வேலை செய்வார்கள் என்று நாம் நினைக்க என்ன சாத்தியம் ? ஆனால் நம் அரசியலமைப்பு அப்படித்தான் நினைக்கிறது.
தனியார் கம்பெனியில் பங்கு உள்ளவர்களுக்கு அதிக லாபத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் மானேஜர்களுக்கு போனஸ் வழங்கப்படுவதுபோல, எம் எல் ஏக்களுக்கும், மந்திரிகளுக்கும் நல்ல வேலைக்கு நல்ல பணம் போனஸாக வழங்கப்பட வேண்டும்.
இந்தக்கட்டுரை அப்படிப்பட்ட ஒரு அமைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கான முயற்சி. இந்தக்கட்டுரை எந்தரீதியிலும் இந்த விவாதத்தின் இறுதியாக தன்னைக் கருதிக்கொள்ளவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் நல்ல வேலைக்கு நல்ல பணம் வழங்கப்படும் திட்டத்தின் ஆரம்பபுள்ளியாக மட்டுமே இது தன்னைக் கருதிக்கொள்கிறது.
அணுகுமுறை 1
தமிழ்நாடு செயல் குறியீடு (TNPIX) ஒன்று உருவாக்கப்படவேண்டும். இது பங்குச்சந்தையில் இருக்கும், தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சாலைகளின் மொத்த குறியீடு. இது நாஸ்டாக் நிறுவனத்தில் நிறுவப்படவேண்டும் (என் எஸ் ஸி, பி எஸ் ஸி போன்றவைகளை விட நாஸ்டாக்கை வளைப்பது கடினம்)
இந்த குறியீட்டின் உரிமைகளை தமிழ்நாட்டின் முதலமைச்சர், எம் எல் ஏ, எம் பி போன்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஐந்து வருட முடிவில் இந்த உரிமைகளை விற்று பணம் பண்ணிக்கொள்ளலாம்.
அணுகுமுறை 2
ஒரு தொகுதியின் தனியார் வருமான வரியில் அதிகரித்த பணத்தில் ஒரு சதவீதத்தை மீண்டும் எம் எல் ஏ, எம் பி, மந்திரிகள், முதலமைச்சர் போன்றவர்களுக்கு வழங்குவது.
இதை நமது தொகுதி பிரதிநிதி, நம் சார்பில் அரசாங்கத்திடமும், மற்ற தொழிலதிபர்களிடமும், பேசி நம் தொகுதிக்கு வேலைகள் கொண்டுவந்ததற்கான கமிஷன் தொகையாகப் பார்க்கலாம். நம் பிரதிநிதிகள் இந்த வேலைகளைத்தான் செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் அந்த வேலைக்கு கமிஷன் கொடுப்பது என்று இப்போதுதான் பேசுகிறோம்.
உதாரணமாக உழுந்தூர் தொகுதியின் இந்த வருட தனியார் வருமான வரி 50 கோடி ரூபாய்கள் எனக்கொள்வோம். 2002இல் அது 70 கோடியாகிறது என்றும் கொள்வோம். ஆகவே, எம் எல் ஏ, எம் பி, முதலமைச்சர், மந்திரிகள் போன்றோர், உழுந்தூர் தொகுதிக்கு ஏதோ செய்திருக்கிறார்கள். இந்த வேலைக்கு இவர்கள் பணம் கொடுக்கப்பட வேண்டும். ஆகவே அதிகமான 20 கோடியில் 2 சதவீதத்தை எடுத்து (அதாவது 40 லட்ச ரூபாய்கள்) அதில் 60% சதவீதம் எம் எல் ஏவுக்கும், 30% சதவீதம் எம்பிக்கும், 7% சதவீதம் மாநில முதலமைச்சர், மந்திரிகளுக்கும், 3% சதவீதம் மத்திய அரசாங்க பிரதமர், மந்திரிகளுக்கும் கொடுக்கட்டும். சட்ட ரீதியான கமிஷன்!
சுமாராக ஒரு எம் பி தொகுதியில் 5 இலிருந்து 10 எம் எல் ஏ தொகுதிகள் இருக்கின்றன. எனவே எம்பிக்கு கிடைக்கும் 30 சதவீதம் 5 தொகுதியிலிருந்தும் வருவதால் அவருக்கு எம் எல் ஏக்களைவிட அதிகப்பணம் கிடைக்கும். இதே போல், முதலமைச்சருக்கு 234 தொகுதிகளிலிருந்தும் 7% சதவீதம் கிடைக்கும். இது ரொம்பவும் அதிகமான பணம். ஆனால் இது அரசாங்கம் செய்த வேலைக்கு தகுந்த கூலி அல்லது போனஸ். சட்ட ஒழுங்கை நிலைப்படுத்துவது, அரசாங்கத்தை வீண் செலவில்லாமல் நடத்துவது, குற்றங்களை குறைப்பது, கல்வியை அதிகரிப்பது, தொழில்களுக்கு நல்ல சூழ்நிலையை உருவாக்கித்தருவது, தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளம் கொடுப்பதை உறுதிசெய்வது, தொழில்முனைவர்களுக்கு ஆதரவு அளிப்பது, தொகுதிக்கு தொழிற்சாலைகளை கொண்டுவருவது போன்ற அனைத்து வேலைகளும், வருமான வரி அதிகரிப்பில் தெரியும். அந்த வருமான வரி அதிகரிப்பிலிருந்து ஒரு சதவீதத்தை, அவ்வாறு வேலை செய்தவர்களுக்கு அளிப்பது சரியான முறையில் அவர்களுக்கு போனஸ் தருவதாகும்.
கணக்கு வழக்கு குளறுபடிகளைத் தடுக்க, ஐந்து வருடத்துக்கு மொத்தமாக கணக்குப் போடப்பட்டு பணம் சரி பண்ணப்பட வேண்டும்( ஒரு வருடம் குறைந்த சம்பளமும் அடுத்த வருடம் அதே சம்பளத்தையும் காண்பித்து ஊரை ஏமாற்ற முடியும்) ஒவ்வொரு வருடமும் ஒரு தொகுதியில் எவ்வளவு வருமான வரி கட்டப்பட்டு இருக்கிறது என்பது வருமான வரி அதிகாரிகளால் பிரசுரிக்கப்பட வேண்டும்.
(கிராம பஞ்சாயத்துகள், நகர மேயர்களுக்கு இந்தப் பணம் அளிப்பது முறையான விஷயமல்ல என்று நினைக்கிறோம். கிராம பஞ்சாயத்துகள் ஒரு கிராமத்தின் வருமான வரி அதிகரிப்புக்கு நிறைய வேலை செய்யும் வாய்ப்பு இன்று இல்லை. தொழிலதிபர்களிடம் பேசி தொழில்களை தொகுதிக்கு கொண்டுவரும் வாய்ப்பும் அவர்களுக்கு இல்லை. இவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள்வது எம் எல் ஏ மற்றும் எம் பி அவர்களின் வேலை. அவர்கள் எப்படி இவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள்கிறார்கள் என்பது அவர்களது விருப்பம்).
காரணங்கள்:
தமிழ்நாடு குறியீடு 50 அல்லது மேற்பட்ட தமிழ்நாட்டு கம்பெனிகளின் மொத்தக் குறியீடு. எனவே இந்த குறியீடு பொதுவில் விற்று வாங்கப்படும். எல்லோரும் இந்தக் குறியீட்டை வாங்கவும் விற்கவும் செய்யலாம்( கீழே இந்தக்குறியீடு வாங்குவது இதில் உள்ள கம்பெனிகளின் பங்குகளை வாங்குவதும் விற்பதற்கும் சமம்) இந்த குறியீடு இறங்கினால், தமிழ்நாட்டு அரசாங்கம் சரியாக வேலை செய்யவில்லை எனப்பொருள். மேலே சென்றால் தமிழ்நாட்டு அரசாங்கம் நன்றாக வேலை செய்கிறது எனவும் பொருள். எனவே எந்த அரசாங்கமும் தான் நன்றாக வேலை செய்கிறோம் எனப்பீற்றினால், அதை தெளிவாக சரிபார்க்கலாம்.
எதிர்பார்க்கும் விளைவுகள்
திருப்பிக்கொடுக்கப்படும் பணம் வருமான வரி அதிகரிப்பைச் சார்ந்துள்ளதால் (வருமான வரி மொத்தத் தொகையை அல்ல), ஏழ்மையான தொகுதிகளில் அதிகரிப்புக்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ஏழ்மையான தொகுதியை முன்னேற்ற அடிதடி நடக்கும். முன்னேறிய தொகுதிகளில் ஏற்கெனவே நிறைய தொழிலாளர்கள் சம்பளம் வாங்குவதால், அந்த சம்பளத்தில் வரும் சிறு அதிகரிப்பும் அதிக வரியாக பிரதிநிதிகளுக்கு வரும்
பணம் வருவதால், ஒரு எம் எல் ஏ எல்லோருக்காகவும் உழைப்பார். ஜாதி, மத கணக்குகள் இரண்டாம் பட்சமாகி, பணம் முதலாவது குறியாகி எம் எல் ஏ யார் முன்னேறினாலும் கவலைப்படாமல், ஊக்குவிப்பார்.
அரசாங்கம் இன்னும் அதிகமான கம்பெனிகள் பங்குச்சந்தையில் சேர ஊக்குவிக்கும்.
தொழில்களுக்கு நல்ல சூழ்நிலை அமைத்துத்தருவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு உழைக்கும். நல்ல சூழ்நிலையில் தொழிற்சாலைகள் செழிப்பது தமிழ்நாட்டு குறியீட்டை அதிகரிக்கும்.
நல்ல படித்த உழைப்பாளர்கள் தொழிற்சாலைகளுக்கு முக்கியமென்பதால், கல்வி அதிகரிக்கும்.
கீழ்மட்ட வேலைகள் தொழிற்படுத்தப்படும். மதிப்பு அதிகரிப்பு அதிகரிக்கும்.
வருமான வரி அதிகரிப்பு முக்கியமாகக் கருதப்படுவதால், எம் எல் ஏக்களும், எம்பிக்களும் மக்களை வருமான வரி கட்டச்சொல்லி ஊக்குவிப்பார்கள்.
தொகுதிகளுக்கு இடையே தொழிற்சாலைகளை தங்கள் தங்கள் தொகுதிக்குக் கொண்டுவரப் போட்டி இருக்கும். எம் எல் ஏக்களும் எம்பிக்களும் தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க முன்னணியில் இருந்து கேட்பார்கள்.
பிரதிநிதிகள் தொழில்முனைவர்களை ஊக்கப்படுத்தி புது தொழிற்சாலைகளை கட்ட அவர்களை ஊக்குவிப்பார்கள்.
எம் எல் ஏக்களும் எம் பிக்களும் தங்கள் தங்கள் ஊழல் வழிகளை விட்டுவிடமாட்டார்கள். ஆனால் நேரடியான சட்டரீதியான பண வரும்படி என்பது படித்தவர்களையும், விஷயம் தெரிந்தவர்களையும் அரசியலில் ஈடுபடத்தூண்டும்.
இந்தத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள இடைஞ்சல்கள்
1) தமிழ்நாடு குறியீடு அரசாங்க அனுமதி இன்றியே உருவாக்கக்கூடிய ஒன்று. எந்த பெயர் பெற்ற புரோக்கரேஜ் கம்பெனியும் இதை உருவாக்கலாம். எம் எல் ஏக்களும் எம்பிக்களும் இந்த உரிமைகளைப் பெறலாம். ஒரு தனி கம்பெனியைச் சாராமல் இருப்பதால், இது சட்டரீதியானது என்றே கருதுகிறோம்.
2) இரண்டாவது திட்டத்தை அமல்படுத்த இந்திய வருமான வரி சட்டத்தை மாற்றவேண்டும். இது ஒரு பெரிய வேலை. எல்லா எம் எல் ஏக்களும், எம் பிக்களும் இதில் நேரடியாகப் பயன்பெறுவதால், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவது கடினமல்ல. ஆனால் வருமான வரி 25% க்குமேல் எந்தக்காலமும் போகாது என்று சட்டரீதியான உறுதிக்குப் பின்னர் மட்டுமே இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவேண்டும்.
- அடங்குதல்
- பயம்
- Rewarding the politicians financially for their work
- இந்த வாரம் இப்படி , மே, 5, 2001
- கணினி யுகத்திற்கான இன்றியமையாச் சமூகச் சிந்தனை -1
- அரசியல்வாதிகளின் வேலைகளுக்குத் தகுந்த ஊதியம்
- சத்யஜித்ராய் தரும் மனித நம்பிக்கை.
- இந்திய மருத்துவம் சீனாவில் பரவிய வரலாறு- 2
- கரி யார் முகத்தில் ?
- தினம் தினம்
- நூறு நிலவுகள்
- ஒரு பழைய வீடு
- இந்திய மருத்துவம் சீனாவில் பரவிய வரலாறு- 2
- கத்தரிக்காய் புளி கொத்சு
- பால் அவல்
- சத்யஜித்ராய் தரும் மனித நம்பிக்கை.