மலர் மன்னன்
(அம்பேத்கர் ஒரு தேசியத் தலைவர் என்பதாகக் கட ந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு கூட்டத்தில் நான் பேசியதன் சுருக்கம் திண்ணையில் வெளியானதன் விளைவாகக் கூடுதல் விவரம் கேட்டு வந்த சில மின்னஞ்சல்களின் விளைவு, இக்கட்டுரை.)
ஒரு சமூகம் அது பின்பற்றும் சமயத்தின் அடிப்படையில் அடையாளம் காணப் படுவது தவிர்க்க முடியாததுதான். ஆனால் சமயக் கோட்பாடுகள், நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கும் அந்தச் சமயத்தைக் கடைப்பிடிக்கிற சமூகம் வகுத்துக் கொள்ளும் நடைமுறைகளுக்கும் நிச்சயமாக வேறுபாடு உள்ளது. இந்த நடைமுறைகளுக்கு அங்கீகாரம் வேண்டும் என்பதற்காகச் சமூகம், தான் அனுசரித்துவரும் நடைமுறைகளுக்குச் சமயத்தின் முத்திரையைப் பதித்துவிடுகிறது. இதன் விளைவு, சமூகத்தின் நடைமுறைகள் எத்தகையன வாயிருப்பினும் அவற்றுக்குச் சமயம் பொறுப்பாளியாகிவிடுகிறது.
காலப்போக்கில் சமூகமும் சமயமும் பின்னிப் பிணைந்து, சமூகத்தின் நடைமுறைகள் எல்லாம் சமயத்தின் கட்டளைகள் போலவே அதிகாரப் பூர்வமானவையாகிப் போகின்றன. எந்தவொரு சிறு சம்பிரதாயத்தையும் சமயத்தின் பெயரால் வலியுறுத்துவதன் மூலம், அனைவரையும் அதற்கு உடன்படச் செய்வது சமூகத்தின் ஆதிக்க சக்திகளுக்கு எளிதாகிவிடுகிறது. ஊன்றிக் கவனித்தோமானால் சமயங்களின் கோட்பாடுகள் அநேகமாக ஒருபோலத்தான் ஆன்மிக உணர்வை ஊக்குவிப்பனவாக இருக்கும். சமூகங்களின் நடைமுறைகள்தாம் வித்தியாசப்படும். ஆனால் இந்த ஒன்றுக்கொன்று வித்தியாசமான நடைமுறைகள் அந்தந்தச் சமயங்களின் பெயரால் வலியுறுத்தப்படும்போது சமயங்களே வெவ்வேறானவையாகத் தோற்றங்கொள்வது தவிர்க்க முடியாததாகிறது. சமூகங்கள் பின்பற்றிவரும் சில நடைமுறைகள் மனித உரிமைகளுக்கும் இயற்கை நீதிக்கும் முரண்பாடாக இருப்பின் அந்தப் பழியினை சமயங்களே ஏற்க வேண்டியதாகிறது.
சமூகச் சம்பிரதயங்களுக்குச் சமய வண்ணம் அழுத்தமாகத் தீட்டப்படுவதால் வெளிப்பார்வைக்கு எல்லாச் சம்பிரதாயங்களும் சமய நம்பிக்கையின் அடிப்படையில் தோற்றம் கொண்டு, தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரத்தொடங்கிவிடுகின்றன. சமூகச் சமபிரதாயங்களில் எத்தகைய குறைபாடு இருந்தாலும் அது சம்பந்தப்பட்ட சமயத்தின் குறைபாடாகவே விமர்சிக்கப்பட்டு விடுகிறது.
நீண்ட நெடுங்காலமாகத் தலைமுறை தலைமுறையாகக் கோடிக்கணக்கான மக்களால் பின்பற்றப்பட்டுவரும் ஹிந்து சமயம் இவ்வாறாகத்தான் சமூக நடைமுறைகளில் இருக்கக்கூடிய குறைபாடுகளுக்கெல்லாம் தானே பொறுப்பாளியாகப் பழியினைச் சுமந்து வருகிறது.
ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக வெறும் ஒலி வடிவமாகவே தலைமுறைகளைத் தாண்டி வந்த வேதங்கள்தாம் ஹிந்து சமயக் கோட்பாடுகளுக்கான ஆவணம். இந்த ஆவணம் எழுத்துருவில் உத்தரவாதம் பெறுவதற்கே நெடுங்காலம் ஆகியிருக்கிறது. ஒலிவடிவின் விதிமுறைகள் எவ்வளவுதான் சிரத்தையாகவும் விசுவாசமாகவும் கடைப்பிடிக்கப்பட்டிருந்தாலும் எழுத்துருவாக்கம் பெறுகையில் சில பேதங்கள் ஏற்பட்டுவிடுவது இயற்கைதான். சில சம்பிரதாயங்களுக்கு வேதப் பிரமாணம் தந்துவிட்டால் அவற்றுக்கு நிரந்தரமான ஒப்புதல் இருந்துவரும் என்பதற்காக வேண்டுமென்றே சில சம்பிரதாயங்கள் இடைச் செருகலாக அவற்றில் சேர்க்கப் படுவதற்கும் சாத்தியக் கூறு உண்டு. ஆனால் ஹிந்து சமய வேதங்கள் பெரும்பாலும் முரண்பாடுகள் இல்லாமலும் சாரம் குன்றாமலும்தாம் இன்றளவும் இருந்து வருகின்றன. வேதங்கள் பேசும் அடிப்படையான ஜீவாதாரக் கோட்பாடுகள் தெளிவாகப் புலப்படுவதால் அவற்றுக்கு முரண்பாடாக ஏதேனும் அவற்றில் தென்படுமானால் அவை இடைச்செருகல் என அடையாளங் கண்டுகொண்டு, தயை தாட்சண்யமின்றி அவற்றைவிலக்கிவிடலாம். சங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகிய மூவருமே தத்தம் பார்வையில் வேதங்களுக்கு விளக்கம் தந்திருக்கிறார்கள். இந்த மூவருமே வேதங்களில் சமூகத்தின் குறிப்பிட்ட சில பிரிவினர் பிறரைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள் என்பதற்கோ, சிலர் தீண்டத்தகாதவர்கள் என்பதற்கோ பிரமாணம் இருப்பதாகச் சொல்லவில்லை. சில செயல்பாடுகளால் சிலர் தீட்டுப்பட்டுப் போவதாகச் சொல்லப்பட்டாலும், அது குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமின்றி அனைத்துப் பிரிவினருக்குமே பொருந்துவதுதான். எவரும் நிரந்தரமாகத் தீண்டத் தகாதவர்களாகவோ மேல் கீழ் நிலைகளில் இருப்பதாகவோ வேதங்களில் பிரமாணம் இல்லை. உலகப் பிரஜைகள் அனைவரையுமே வஸுதெய்வ குடும்பகம் என ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களாகத்தான் வேதங்கள் அடையாளப்படுத்துகின்றன. ஸர்வ ஜனோ ஸுகினோ பவந்து என அவை அனைவரும் இன்புற்றிருக்கட்டும் என்றுதான் சொல்லுகின்றன.
மானிட ஜாதி முழுவதையும் ஒரு விராட் புருஷனாக, பிரமாண்டமான மனித உடலாக உருவகப்படுத்தும் ஹிந்து கோட்பாடு, இந்த மனித உடல் ஆரோக்கியமாகவும், செயலூக்கங் குன்றாது இயங்கிவருவதற்கும் அத்தியாவசியம் என இயல்பாகவே ஒரு பிரிவு இயங்கு தளங்களை ஒழுங்கு செய்வதற்கான மூளை உள்ளிட்ட புலன்களாகவும், இன்னொரு பிரிவு பாதுகாவலின் பொருட்டு வலுமிக்க புஜங்களாகவும், மற்றொரு பிரிவு ஊட்டம் அளித்து சக்தியூட்டுவதற்கான வயிறாகவும், வேறொரு பிரிவு எல்லாக் கட்டுமானங்களையும் தாங்கிச் செயல்படுவதற்குச் சாத்தியமாகும் பொருட்டு வலுவான கால்களாகவும் அமைந்துள்ளன என்று வகைப்படுத்துகிறது. இவற்றுக்கிடை யே எது உயர்ந்தது, எது தாழ்ந்தது என்று யோசிப்பதற்கே இடமில்லை என்பதோடு பிறப்பின் காரணமாக இப்பிரிவுகள் உண்டாகின்றன என்பதற்கும் வேதப் பிரமாணம் ஏதும் இல்லை.
மனித வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அனுசரிக்கப்படுவதற்கான ஒழுக்கந்தான் ஆசிரமம் எனப்படுகிறது. பிரம்மசரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், ஸந்நியாஸம் இவை நான்கும் உரிய காலகட்டத்திற்கேற்ப அனுசரிக்கப்படுவதற்கான ஆசிரமங்களாகத்தான் வகுக்கப்பட்டுள்ளன. சாதுர் வர்ணம் என்று சொல்லப்படுகிற நான்கு வர்ணங்களுங்கூட வர்ணாசிரமம் என்றுதான் பொதுவாக அழைக்கப்படுகின்றன. மனித வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்தின்போதும் இயல்பாக அமைந்துவிடும் குணாம்சம் என்பதால்தான் இது வர்ணாசிரமம் என்று விளக்கப்படுகிறது. பிறவியின் வாயிலாக இது அமைவதாக இதுகுறித்து வேதப் பிரமாணம் ஏதும் இல்லை என்பதோடு, ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் நிரந்தரமாக ஒரு வர்ணத்திற்கு உரியவர்கள் என்பதற்கும் பிரமாணம் இல்லை. சொல்லப்போனால் வர்ணம் என்பது ஹிந்து சமூகத்திற்கு மட்டுமின்றி, இயல்பாகவே மனித சமுதாயம் முழுமைக்கும் பொருந்துவதுதான். வேதங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை மட்டும் விளித்துப் பேசுவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆதிக்கப் போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாகச் சில சமூகப் பிரிவுகள் கூட்டுச் சேர்ந்து, பலவீனப்பட்டுப்போன பிரிவுகளை அடிமைகொண்டு அதன் நிரந்தரம் கருதி சமயச் சாயத்தையும் அதற்குப் பூசிவிட்ட சாமர்த்தியத்தால்தான் வர்ணாசிரமம் என்பது சாதிப்பிரிவுகளுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் நிலைமை உருவாகிவிட்டது. இந்த அடிப்படையைப் புரிந்துகொள்ளாதவரை வர்ணம், சாதி இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளும் சங்கடம் இருக்கத்தான் செய்யும்.
எதையும் நுணுகி ஆராய்ந்து அதன் பிறகே தமது முடிவுகளைப் பதிவு செய்யும் இயல்புள்ள டாக்டர் அம்பேத்கர் வர்ணாசிரமம் வேறு, சாதிப் பிரிவுகள் வேறு என்பதைத் தெளிவாக அறிந்திருந்தார்.
கீதையில் விவரிக்கப்படும் வர்ணாசிரமம் ஒன்று மற்றதைவிட மேலானாது என்று பாரபட்சம் காட்டவில்லை என்பதோடு, சமூகப் பாகுபாடுகளையல்லாது, குணாம்சத்தைதான் அது அடையாளப்படுத்துவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். தந்தையின் தொழில் மகனுக்கு என்று அது சொல்லவில்லை; அவரவர் குணவியல்புகளுக்கு இணங்கத் தொழில்கள் தேர்ந்துகொள்ளப் படுவதாகத்தான் கீதை விளக்குகிறது என்று சொன்ன அம்பேத்கர், வர்ணாசிரமத்தை சாதிப்பாகுபாடுகளோடு இணைத்துக் குழப்பிக் கொள்வதாக காந்திஜியின் கீதை விளக்கத்தை விமர்சித்தார். கீதை விவரிக்கும் கோட்பாட்டை ஒரு சமூக நடைமுறைக்குரியதாகச் சொல்லி, அந்தச் சமூக நடைமுறைக்கு சமயத்தின் அங்கீகாரத்தை காந்திஜி அளித்து, பழமைச் சம்பிரதாயத்தை வழிமொழிவதாக அம்பேத்கர் குற்றம் சாட்டினார்.
முப்புரினூல் அணிந்து தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் உரிமை முதல் மூன்று பிரிவினருக்கு இருந்தாலும், சூத்திரருக்கு அதனை அணிவிக்கும் அதிகாரம் முதல் பிரிவினரான பிராமணருக்கு உண்டு என்பதைப் பிரமாணத்துடன் எடுத்துக் காட்டிய அம்பேத்கர், ஆனால் சாதி அடிப்படையில் பிறவியின் மூலமாக பிராமணராய்த் தம்மைக் கருதிக்கொள்பவர்கள் இதுபற்றி வாய் திறப்பதில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.
சத்ரபதி சிவாஜி மஹராஜ் பற்றித் தாம் எழுதிய அருமையான கட்டுரையொன்றில் சூத்திரனுக்கு வேள்வி செய்யும் உரிமையைக் கொடுக்கும் அதிகாரம் பிராமணனுக்கு உண்டு; ஆனால் சாதி அடிப்படையில் பிறவியின் மூலம் பிராமண அந்தஸ்தை அனுபவித்து வருகிறவர்கள் அதைச் செய்வதில்லை என்று அம்பேத்கர் கண்டிக்கிறார்.
தீண்டாமைக் கொடுமை ஹிந்து சமூகக் குறைபாடேயன்றி சமயக் கோட்பாடு அல்ல என்பதை அம்பேத்கர் தெளிவாகவே அறிந்திருந்தார். ஆதிக்க சக்திகள் தீண்டாமையின் அங்கீகாரத்திற்காக அதனை சமயக் கோட்பாடுபோல வெளிப்படுத்துவதையும் அவர் அறிந்திருந்தார். அதன் காரணமாகவே அவர் ஹிந்து சமயத்தின் மீதும் தமது சீற்றத்தை வெளியிட நேர்ந்தது.
1936 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற மாபெரும் தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில்தான் அம்பேத்கர் ஹிந்துவாகப் பிறந்த தாம் ஒரு ஹிந்துவாக மரிக்கப் போவதில்லை என்று கோபாவேசத்துடன் பிரகடனம் செய்தார். கவனிக்க வேண்டும்; நானோ என் சாதி மக்களோ ஹிந்துக்கள் அல்ல, ஹிந்துக்களாக்கப் பட்ட ஆதிகுடிகள் என்று அவர் சொல்லவில்லை. நாங்கள் ஹிந்துக்களே அல்ல என்று சில தலித்துகள் வாயிலாகச் சொல்ல வைத்திருப்பது தற்கால மத மாற்ற நோக்கமுடைய விஷமிகளும் அவர்களிடம் கூலி வாங்கிக்கொண்டு பேசும் பிரசாரகர்களும் ஹிந்து சமயத்தின் மீது புதிதாகத் தொடங்கியுள்ள தாக்குதல்தான் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
நாங்கள் ஹிந்துக்களாக நீடிக்கவே விரும்புகிறோம். ஆனால் ஹிந்து சமுதாயம் தீண்டாமையைக் கைவிடுவதோடு எம்மைப் பிற சாதியார் சரி சமமாக நடத்தவும் முன்வர வேண்டும். நாங்கள் ஹிந்துக்களாய் நீடிப்பதற்கு இது ஒரு வழி. இன்னொரு வழி, நாங்கள் எங்களுடைய சுய மரியாதையைக் காத்துக்கொள்வதற்காக ஹிந்து சமயத்திலிருந்து வெளியேறி, வேறு மார்க்கத்தில் இணைவது. முன்னர் சொன்ன வழி அவ்வளவு எளிதில் சாத்தியமாகக் கூடியாதாக இல்லை. இரண்டாவது வழியான வேற்று சமயம் தழுவுதல் வெகு எளிதில் உடனடியாக நிறைவே றக் கூடியது. எனவே இரண்டாவது வழியை நாம் தேர்ந்துகொள்ள வேண்டியதாகிறது என்றுதான் மும்பை மாநாட்டில் அம்பேத்கர் பேசினார். மிகுந்த வருத்தம் தோய்ந்த குரலில்தான் இவ்வாறு அவர் பேசினார். ஆனால் இன்றைக்கு அவர் ஏதோ எச்சரிக்கை விடுவதுபோல முழங்கியதாகச் சிலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஹிந்து சமயத்திலிருந்து வெளியேறி வேற்று சமயம் தழுவுவதாக 1936ல் பேசிய அம்பேத்கர் இருபது ஆண்டுக்காலம் பொறுத்துப் பார்த்திருந்துவிட்டு 1956ல் தான் பவுத்தம் தழுவினார் என்றால் அவர் எச்சரிக்கை விடுக்கும் தொனியில் அன்று பேசியிருப்பாரா என்று யோசிக்கவேண்டும். அந்தக் கால கட்டத்து மஹாராஷ்ட்டிர மாநிலத்து மராட்டிப் பத்திரிகைகளைத் தேடிப் பார்த்துப் படித்து, அவர் எவ்வளவு வேதனையுடன் அப்படியொரு கருத்தை வெளியிட்டார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அம்பேத்கரின் முற்றிலும் நியாயமான கோரிக்கைக்கு ஏற்ப, சட்டத்தின் வாயிலாகத் தீண்டாமையைச் சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக ஏற்றுவிட்டோம். தாழ்த்தப்பட்டோர் பிற பிரிவினருக்குச் சமதையாக முன்னேறிச் சமூகத்தில் மற்றவர்களால் சரி சமமாகக் கருதும் நிலையை உருவாக்கும்பொருட்டு அவர்களுக்குக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் தனிச் சலுகைகளும் கிடைக்கச் செய்திருக்கிறோம். ஆனாலும் என்ன செய்ய, போதிய அளவுக்கு மன மாற்றம் மற்ற பிரிவினரிடையே இன்னமும் ஏற்படவில்லை என்பதை வெட்கத்துடன், தலைக் குனிவுடன் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது. விரைந்தோடும் காலச் சக்கரம், வெகு விரைவில் அம்பேத்கர் விரும்பியது போன்ற சரி சமான சக வாழ்வை ஹிந்துஸ்தானத்தின் எல்லா மூலை முடுக்குகளிலும் தோற்றுவித்துவிடும் என்கிற நம்பிக்கையை நாம் இழக்கத் தேவையில்லை.
ஹிந்து சமூகத்திற்குச் சமய அடிப்படையில் ஒரே தலைமை என்பதாக ஒன்று இல்லாததால் அம்பேத்கர் கருத்திற்கிணங்க தீண்டாமைக்கும் சாதிப் பிரிவுகளுக்கிடையிலான ஏற்றத் தாழ்வுகளுக்கும் விடைகொடுக்கும் பிரகடனத்தைச் செய்து ஒரே வீச்சில் அதனை நடைமுறைப் படுத்துவது சாத்தியமில்லாது போயிற்று. ஆனால் அம்பேத்கர் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் தேசத்தின் எல்லாப் பகுதிகளிலும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. ராமானுஜர், பஸவர், சைத்தன்யர், குரு நானக் எனப் பலரை இதற்கு ஆதாரமாகக் காட்டமுடியும். குரு நானக்கின் கோட்பாடு ஒரு தனிச் சமயமாக கருதப்படத் தொடங்கியது சமீப காலமாகத்தான். ஹிந்து சமயத்தையும் சமூகத்தையும் காக்கும் பட்டாளமாக அரையில் கூர் வாள், மணிக்கட்டில் இரும்புக் கங்கணம், தலையில் சிகை எனச் சபதம் செய்து தோன்றியதுதான் குரு நானக்கிற்குப் பிறகு ஓர் அமைப்பாக உருப்பெற்ற சீக்கியம்.
ஹிந்து சமூகத்தில் ஒரு பிரிவினர் தீண்டத்தகாதவர்களாக இழிவுசெய்யப்படுவதோடு, பலவாறு துன்புறுத்தப்படுவதாலும் அம்பேத்கர் அடக்க மாட்டாத சினங்கொண்டிருந்தது இயற்கைதான். காந்திஜியுங்கூட அம்பேத்கருக்கு உள்ள கோபம் நியாயமானதுதான் என்று சொன்னார். ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த பிரிவினர் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் தாழ்த்தப்பட்டோரின் மன உணர்வுகளைப் புரிந்துகொள்ள இயலாது. தாழ்த்தப்பட்டோர் பிறர் மீது எவ்வளவு கோபப்பட்டாலும் அது தகும் என்று காந்திஜி சொன்னார்.
மும்பை மாநாட்டில் ஹிந்துவாக இறக்க மாட்டேன் என்று அம்பேத்கர் சத்தியம் செய்த போதிலும், தாமும் தம் மக்களும் ஹிந்துவாக நீடிப்பதற்கு நிபந்தனை விதிக்கத் தவறவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இதன் பொருள் ஹிந்து சமயத் கோட்பாடுகளில் அவருக்குக் கருத்து வேறுமையில்லை, ஹிந்து சமூகம் தனது சமயத்தின் போர்வையில் அனுசரித்த மனித நேயத்திற்கு விரோதமான பழக்க வழக்கங்கள் மீதுதான் அவருக்குக் கடும் சினம் இருந்தது என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஹிந்து சமூகத்தைக் கண்டிக்கும்போதெல்லாம்பெரும்பாலும் ஹிந்து சமயத்தையும் சேர்த்தே அவர் கண்டித்த போதிலும், ஸ்ம்ருதிகளிலிருந்து தக்க பிரமாணங்களை எடுத்துக் காட்டித்தான் தீண்டாமை, சாதிகளிடையிலான ஏற்றத் தாழ்வு போன்ற சமூகக் குறைபாடுகளைக் கண்டித்தார். சமூகம் கடைப்பிடித்த இயற்கை நீதிக்குப் புறம்பான நடைமுறைகளுக்கு ஹிந்து சமயத்தின் அங்கீகாரம் இல்லை என்பதைத்தான் இதன் மூலம் அவர் நிரூபணம் செய்தார்.
ஹிந்து சமூகத்தை மிகவும் இழிவாக விவரித்து மிஸ் மேயோ எழுதிய நூலுக்கு மிகக் கடுமையாக மறுப்புத் தெரிவித்துக் கட்டுரை எழுதியவர் அம்பேத்கர். ஹிந்து சமயக் கோபாடுகளுக்கும் ஹிந்து சமூக நடைமுறைகளுக்கும் இருக்கிற வித்தியாசத்தைச் சுட்டிக் காட்டுவதாகவும் அந்தக் அக்கட்டுரை அமைந்தது. ஹிந்து சமூகம் முழுவதும் அனுசரிக்கப் பட்டு வந்த தீண்டாமையை இக்கட்டுரையில் அவர் ஒப்புக்கொண்ட போதிலும் தீண்டாமையை நியாயப்படுத்துகின்ற பிரமாணம் எதுவும் ஹிந்து தத்துவ சாஸ்திரங்களில் இல்லை என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை.
அம்பேத்கரின் உரைகள், கட்டுரைகள் அகியவற்றை முழுவதுமாக ஆற அமர நிதானமாகப் படித்து, ஆழ்ந்து சிந்தித்தோமானால்தான் அவர் ஹிந்து சமூகத்தில் வேரோடிப்போன சில வேண்டாத வழக்கங்களுக்கு எதிராகப் போராடிச் சலித்து, மனம் சோர்ந்த நிலையில் ஹிந்து சமயத்தைவிட்டு விலகினாலன்றி ஹிந்து சமூகம் தம் மக்கள் மீது சுமத்தியுள்ள இழிவுகளிலிருந்து விடுபடுவது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்து தமது அந்திமக் காலத்தில் பவுத்தம் தழுவ நேர்ந்தது என்பது விளங்கும்.
malarmannan79@rediffmail.com
- புரட்சி செய்த சில பதிவுகள்
- மகாத்மா காந்தி செய்யாதது !
- மனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றிப் பாரிஸ் கருத்தரங்கு-1 (IPCC)
- தீபச்சுடரும், நெருப்பும்; விரோதியும், நண்பனும்
- ரியாத் வாழ் தமிழர் விழா
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 7
- பெருஞ்சுவருக்குப் பின்னே (சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும்) – முன்னுரை
- சிலம்பில் உரைநடை
- 30.12.2006 ல் சிங்கப்பூரகத்தில் நடைபெற்ற திரவியதேசம் புத்தக வெளியீடு ஓர் அலசல்
- உரையாடும் சித்திரங்கள் – பெருமாள் முருகனின் “நீர் மிதக்கும் கண்கள்” -(கவிதைத்தொகுப்பு அறிமுகம்)
- கவிமாலையின் 80வது (மாதாந்திர) நிகழ்வு
- புனைவின் கோடுகள் – ராணி திலக்கின் “காகத்தின் சொற்கள்” – ( கவிதைத்தொகுப்பு அறிமுகம் )
- கடித இலக்கியம் – 44
- சிங்கப்பூரகத்தில் நடைபெற்ற தைப்பூசத்திருவிழா
- 1000மாவது கவிதை. வைரமுத்து வாழ்த்து !
- சாகித்திய அகாதமி – எம் கவிதைகள்-கதைகள்-கருத்துக்கள்
- எனது முதல் ‘ஈபுக்’ – சிறுகதைத் தொகுதி
- நித்தம் நடையும் நடைப்பழக்கம்
- “சுப்ரபாரதிமணியன் : படைப்பும், பகிர்வும்” – தொகுப்பு கே பி கே செல்வராஜ்
- அலாஸ்கா கடற் பயணம் – இரண்டாம் பாகம்
- நீர்வலை (10)
- காலனியத்தின் குழந்தை மானிடவியல்: பக்தவத்சல பாரதியின் ‘மானிடவியல் கோட்பாடுகள்’ அறிமுகப்படுத்தும் கோட்பாடுகள்
- இலை போட்டாச்சு! – 14. கறி வகைகள்
- கைத் தொலைபேசி
- புலம் பெயர்ந்த தமிழன் தாலாட்டு
- காதல் நாற்பது (8) உன் காதலில் சிக்கினேன் !
- அமானுஷ்ய புத்ரனின் கவிதைகள்
- ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள்
- கள்ளுக்கொட்டில்
- பெரியபுராணம் -122 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
- புஷ்யமித்திரரும் பிரச்சார படுகொலைகளும்
- காவிரி தீர்ப்பில் கர்நாடகத்தின் நிலைப்பாடுகள்
- அம்பேத்கரின் கண்டனம் சமயத்திற்கா, சமூகத்திற்கா?
- பேராசிரியர் சுபவீயின் நேர்க்காணலை முன்வைத்து சில நேரங்களில் சில மனிதர்கள்……
- சிறப்பு பொருளாதார மண்டலங்கள்- காலனியாதிக்கமா, தொழில் மறுமலர்ச்சியா?
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:4)
- மடியில் நெருப்பு – 24