சிறில் அலெக்ஸ்
இரண்டு பெரிய கட்சிகள். கட்டுக்கோப்பான உட்கட்சி ஜனநாயகம். பெரும்பாலும் இடதும் வலதுமான வாக்காளர்கள், நடுவில் சில கட்சி சார்பற்றவர்கள். முதல் பார்வையில் எளிதாகவும், சிக்கலற்றதாகவும் தெரியும் அமெரிக்கத் தேர்தல் களத்தின் மேல்திரையை விலக்கிப்பார்த்தால் அதன் குழப்பம் மிகுந்த நிலை உலகின் வேறு ஜனநாயகங்களிலிருந்து வேறுபட்டதல்ல என்பதை உணரலாம்.
அமெரிக்காவில் பல அரசியல் கட்சிகள் இருந்தும் குடியரசுக்கட்சி(Republican Party) மற்றும் ஜனநாயகக் கட்சி(Democratic Party) இரண்டும் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டவையாகவும் அமெரிக்க அரசியலை நிர்ணயிப்பவையுமாக உள்ளன.
பொதுவாகக் குடியரசுக் கட்சியை பழமைவாத வலதுசாரிகளின் கட்சியாகவும், ஜனநாயகக் கட்சி இடது சாரிக் கட்சியாகவும் குறிப்பிடலாம். 1854ல் துவங்கப்பட்ட குடியரசுக் கட்சி GOP (Grand Old Party) என்றும் அழைக்கப்படுகிறது. ஆரம்ப நாட்களில் கறுப்பின அடிமைகளின் விடுதலையையும், நவீனமயமாக்கலையும் முன்வைத்து துவங்கப்பட்ட இக்கட்சி தற்போது பரவலாக கிறீத்துவ அடிப்படைவாதிகளின் கட்சியாகிவிட்டது. ஜனநாயகக் கட்சி அமெரிக்காவின் மிகப் பழமையானதும் (1792) அதிக உறுப்பினர்களைக் கொண்டதுமாகும். தற்போதைய அமெரிக்க காங்கிரசில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட்டுள்ளது ஜனநாயகக் கட்சி. இடதுசாரி சமூகக் கொள்கையுடையதாக தற்போதைய ஜனநாயகக் கட்சியை வகைப்படுத்த முடியும். ஜனநாயக் கட்சியின் சின்னம் கழுதை, நிறம் நீலம். குடியரசுக் கட்சியின் சின்னம் யானை, சிவப்பு நிறத்தில் அது குறிக்கப்படுகிறது.
இவ்விரு கட்சிகளையும் வித்தியாசப்படுத்தும் அம்சங்களாக கருக்கலைப்பு, தற்பால் திருமணம், மருத்துவ காப்பீட்டுக் கொள்கை(Healthcare Policies), திறந்த பொருளாதாரக் கொள்கை, குடியேற்றக் கொள்கை(immigration), இராணுவம்/பாதுகாப்புக்கான செலவு குறித்த கொள்கைகள் போன்றவை மீதான நம்பிக்கைகளைக் குறிப்பிடலாம். ஜனநாயகக் கட்சி கருக்கலைப்பு, ஓரினத் திருமணம், நாடுதழுவிய மருத்துவக் காப்பீடு, திறந்த பொருளாதாரக் கொள்கை, திறந்த குடியுரிமைக் கொள்கை, குறைந்த இராணுவ செலவுத் திட்டங்களை பரவலாக ஆதரிக்கிறது. இருப்பினும் இந்தக் கொள்கைகளிலிருந்து பெரிதும் மாறுபடும் உறுப்பினர்களையும் இரு கட்சிகளும் கொண்டுள்ளன. குறிப்பாக இக்கட்சிகளின் வேட்பாளர்களேகூட இவற்றுக்கு மாற்றாய் கொள்கையுடையவராய் இருப்பதுண்டு. இந்த வகையில் இக்கட்சிகள் ஏதேனும் ஒரு தீவிர கொள்கையை உடையவையாக இல்லாமல் பிரச்சனையின் அடிப்படையில் காலத்திற்கேற்ப மாற்றிக்கொள்கின்றன.
குடியரசுக் கட்சி துவங்கிய காலத்தில் கறுப்பினத்தவரின் பலமான ஆதரவுடன் துவங்கியது. அதன் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக கறுப்பின அடிமைகளை விடுவிப்பது விளங்கியது. ஆபிரகாம் லிங்கன் குடியரசுக் கட்சியின் முதல் முக்கிய அதிபர். அவர் கறுப்பின அடிமைகளை விடுவிக்கும் பிரகடனத்தை ஒரு உள்நாட்டுப் போரினூடாக ஏற்படுத்தினார். பின்னர் 1960களில் ஜான் கென்னடியின் காலத்தில் கறுப்பின சமத்துவத்திற்கு ஆதரவாக ஜனநாயகக் கட்சி தீவிரமாக செயல்பட்டதில் கறுப்பினத்தவர் பெரும்பான்மையாக ஜனநாயகக் கட்சிக்கும், தெற்கே கறுப்பின சமத்துவத்தை ஆதரிக்காத அடிப்படைவாத வெள்ளை கிறீத்துவர்கள் குடியரசுக்கட்சிக்குமாய் தங்கள் விசுவாசத்தை மாற்றிக்கொண்டனர். இதேபோல வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்களும் பரவலாக ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கின்றனர். குடியரசுக்கட்சியின் குடியேற்றக் கொள்கைகள் கடுமையானவையாயிருப்பது இதற்கு முக்கிய காரணம்.
அமெரிக்க தேர்தல் முறையின் வியத்தகும் அம்சம் உட்கட்சி ஜனநாயகம். அதிபர் பதவிக்கு பொதுத்தேர்தலில் போட்டியிடத் தேர்வு பெறும்பொருட்டு ஒருவர் தன் கட்சிக்குள் நடக்கும் தேர்வில் வெற்றிபெற்றாக வேண்டும். இது பொதுத்தேர்தலையும்விட நீண்டதாயும் குழப்பம் மிகுந்ததுமான ஒரு தேர்தல் முறையைக் கொண்டுள்ளது. ஜனநாயகக் கட்சியும், குடியரசுக் கட்சியும் தங்கள் உட்கட்சித் தேர்தலை வெவ்வேறு விதங்களில் செயல்படுத்துகின்றனர். ப்ரைமரீஸ்(Primaries) என அழைக்கப்படும் இந்த உட்கட்சி வேட்பாளர் தேர்வுமுறை பொதுத் தேர்தல் நாளுக்கு ஒருவருடத்திற்கு முன்னமே துவங்குகிறது. இதில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பொதுத் தேர்தலுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பே தங்கள் விருப்பத்தை தெரிவித்து பிரச்சாரங்களைத் துவங்குகிறார்கள். 2008 தேர்தலின் தற்போதைய முன்னணி போட்டியாளர்கள் ஹில்லரி ஜனவரி 22, 2007 அன்றும் ஒபாமா பிப்ருவரி 10, 2007 அன்றும், ஜான் மெக்கெய்ன் மார்ச் 1, 2007இலும் தங்கள் பிரச்சாரத்தை துவங்கினர்.
Delegates என அழைக்கப்படும் உட்கட்சி பிரதிநிதிகளின் எண்ணிக்கை மாநிலவாரியாக தீர்மானிக்கப்படுகிறது. ஜனநாயகக் கட்சி ஒரு மாநிலத்திற்கு எத்தனை பிரதிநிதிகள் என்பதை முடிவு செய்ய முந்தையத் தேர்தலில் அந்த மாநிலத்திலிருந்து எத்தனை சதவீத வாக்கு அக்கட்சிக்கு கிடைத்தது என்பதையும், பொதுத்தேர்தலின் முடிவில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள்(Members of the electoral college – MPக்கள் போன்றதொரு முறை) எத்தனைபேர் என்பதையும் அடிப்படையாகக் கொள்கிறது. இதுதவிர வாஷிங்டன் டி.சி(1), ப்யூட்டோ ரிக்கோ(63) உட்பட்ட சில சிறிய பகுதிகளுக்கு முன்நிர்ணயிக்கப்பட்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை வழங்கப்படுகிறது. 2008ல் வெளிநாட்டில் வாழும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கு மொத்தமாக 22 பிரதிநிதிகள் வழங்கப்பட்டது இவர்கள் ஒவொருவருக்கும் தலா அரை ஓட்டுக்கள் உள்ளன.
இப்படி ‘வழங்கப்பட்ட பிரதிநிதிகள்’ (Pledged Delegates) தங்கள் பகுதி மக்கள் எந்த வேட்பாளருக்கு அதிகம் வாக்களிக்கிறார்களோ அவருக்கே கட்சி பொதுக்குழு கூட்டத்தின்போது வாக்களிக்கின்றனர். சட்டபூர்வமாக இவர்கள் அவ்வாறு செய்யத் தேவையில்லை எனினும் மக்களின் தீர்ப்பிற்கேற்ப இவர்கள் வாக்களிப்பதே வழக்கம். இப்படி மாநிலங்களுக்கு வழங்கப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 3253. ஒரு மாநிலத்தின் உட்கட்சித் தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு எத்தனை சதவீத வாக்குகள் கிடைக்கிறதோ அத்தனை சதவீதம் பிரதிநிதிகள் அவருக்கு ஆதரவளிப்பதாக கணக்கிடப்படும்.
மாநில அளவில் நடைபெறும் ஜனநாயகக் கட்சியின் கூட்டத்தில் அந்தந்த மாநிலங்களுக்கு வழங்கப்படும் பிரதிநிதிகளில் கட்சியின் இடஒதுக்கீட்டு கொள்கைகளுக்கேற்ப சிறுபான்மையினர், பெண்களுக்கான பிரதிநிதிகளை பிரிப்பது நடைபெறும்.
ஜனநாயகக் கட்சியில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பிரதிநிதிகளுக்கும் மேலாக கட்சி பிரமுகர்கள் சிலருக்கு வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. இவர்களை Super Delegates(சூப்பர் டெலெகேட்ஸ்) என அழைக்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை 794. இவர்கள் மக்களின் விருப்பத்திற்கேற்ப அல்லாது தங்கள் விருப்பத்துக்கேற்ப வாக்களிக்கலாம்.
மொத்தம் 4047 கட்சிப் பிரதிநிதிகளில் 2025 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றவர் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். தற்போதைய நிலமைப்படி ஹில்லரி கிளிண்டன் 1586 (Super delegates: 255) பிரிதிநிதிகளின் ஆதரவையும் பராக் ஒபாமா 1719(232) பேரின் ஆதரவையும் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கைகள் வெவ்வேறு விதமாக வெளிவருகின்றன என்பதுவே இந்த உட்கட்சித் தேர்தலின் குழப்பமான செயல்முறைக்கு ஆதாரம்.
உட்கட்சித் தேர்தல்கள் மாநிலவாரியாக நடைபெறுகின்றன. சில நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுவதுண்டு. குறிப்பாக ‘சூப்பர் ட்யூஸ்டே’ என அழைக்கப்படும் நாளில் (பொதுவாக பிப்ரவரி மார்ச் மாதங்களில் ஒரு செவ்வய்) பல மாநிலங்களுக்கும் ஒன்றாய் உட்கட்சித் தேர்தல்கள் நடைபெறும். 2008ல் பிருவரி 5ஆம் தேதி சூப்பர் ட்யூஸ்டேயில் 22 மாநிலங்கள் ஒன்றாய் தேர்தலை நடத்தின.
இறுதியாக நடைபெறும் கட்சி பொதுக்குழு கூட்டத்திற்கும்(Party Convention) முன்பாகவே தேவையான பிரதிநிதிகளைப் பெற்று ஒரு வேட்பாளர் முன்நிற்பதும் மற்றவர்கள் போட்டியிலிருந்து விலகிக்கொள்வதும் வழக்கம். எந்த வேட்பாளரும் தனிப்பெரும்பான்மையின்றி பொதுக்குழுவிற்குப் போகும்போது பொதுக்குழுவில் முதல்கட்ட தேர்தல் நடத்தப்படும். இதில் எந்த வேட்பாளருக்கும் தனிப்பெரும் ஆதரவு (ஜனநாயகக் கட்சியில் 2025) கிடைக்கவில்லையென்றால் அதை Brokered convention என அழைக்கின்றனர். ஒரு வேட்பாளர் பெரும்பான்மை பெறும்வரை வாக்கெடுப்பு நடைபெறும். 2008 தேர்தலில் ஜனநாயகக் கட்சி இந்நிலையை அடைவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
குடியரசுக் கட்சியி மாநில அளவில் பிரதிநிதிகளை வழங்கும் முறை இன்னும் குழப்பமானது. முதலில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் 10 பிரதிநிதி வாக்குகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்க செனட்டிற்கு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்காத பகுதிகளான வாஷிங்டன் டி.சி(16), ப்யூட்ட ரிக்கோ(20) போன்ற பகுதிகளுக்கு பத்துக்கும் குறைவான அல்லது அதிகமான எண்ணிக்கையில் பிரிதநித்துவம் அளிக்கப்படுகிறது. அடுத்ததாக மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 3 பிரதிநித்துவங்கள் வழங்கப்படுகின்றன. மாநில கட்சித் தலைவர்களுக்கு 3 வாக்குகள். முந்தையத் தேர்தல்களில் குடியரசுக் கட்சிக்கு தனிப்பெரும்பான்மையாக வாக்களித்த மாநிலங்களுக்கு ஊக்க (Bonus) வாக்குகள் அளிக்கப்படுகின்றன. 2004 அதிபர் தேர்தலில் ஒரு மாநிலம் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மையாக வாக்களித்திருந்தால் 4.5 + .60 x 2004 அதிபர் தேர்தலில் மாநிலத்திற்கு கிடைத்த எலெக்டோரல் காலெஜ் வாக்குகள். உதாரணமாய் அரிசோனா மாநிலத்திலிருந்து, 2004ல் நாடுதழுவிய பொதுத் தேர்தலுக்குப் பின் அதிபரை தேர்ந்தெடுக்கும் எலெக்டோரல் காலெஜ் வாக்குகள் 10 கிடைத்தன. எனவே 2008 தேர்தலில் அவர்களுக்கு 11 ஊக்க வாக்குகள் வழங்கப்படும். இதை அடுத்து அந்த மாநிலத்தின் ஆளுநராக ஒரு குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் 1 வாக்கும், செனட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்காக தலா ஒன்றும், அமெரிக்க பிரதிநிதிகள் அவைக்கு( House of representatives) கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுததற்கு ஓன்றும், மாநிலக்களின் உள்ளாட்சி அவைகளில் ஒன்றிலேனும் குடியரசுக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் இருந்தால் ஒன்றும், எல்லா அவைகளிலும் தனிப்பெரும்பான்மையுடன் இருந்தால் இன்னொன்றுமாய் ஊக்க வாக்குகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு வழங்கப்படும் மொத்த உட்கட்சி பிரதிநிதிகளின் எண்ணிக்கை 2516. முறைகேடுகளுக்காக சில வாக்குகள் பறிக்கப்பட்டதில் எண்ணிக்கை 2380 ஆகக் குறைந்தது.
குடியரசுக் கட்சியின் தேர்தல் முறையும் சற்றே குழப்பமானது. உட்கட்சித் தேர்தலில் சில மாநிலங்கள் மொத்தத்தில் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளருக்கே எல்லா பிரதிநிதிகளின் ஆதரவை அளிக்கலாம். அல்லது வென்ற வாக்கு விகிதத்திற்கேற்ப பிரித்து வழங்கலாம். இரண்டில் ஒரு முறையை தேர்ந்தெடுக்க மாநில கட்சி அலுவலர்களுக்கு அதிகாரம் உள்ளது.
குடியரசுக் கட்சியைப் பொருத்தவரை தனிப்பெரும் பெரும்பான்மையை பெற்று தேவையான 1191க்கும் அதிகமான பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்று ஜான் மெக்கெய்ன் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கபடவுள்ளார்.
உட்கட்சி தேர்தல்கள் இரண்டு முறைகளின்படி நடத்தப்படும். Primary எனப்படும் பாரம்பரிய வாக்குப்பதிவு முறை ஒன்று. Caucus எனப்படும் கட்சி உறுப்பினர்கள் கூடி பாரம்பரிய வாக்குச்சீட்டு (அல்லது மின்னணு வாக்குப் பதிவு) இல்லாமல் கைகளைத் தூக்கியோ, அல்லது குழுக்களாகப் பிரிந்தோ ஆதரவைத் தெரிவிப்பது. உட்கட்சி வாக்குப்பதிவுகள் கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமாகவோ (Closed primaries) அல்லது பொதுவாகவோ(Open) நடத்தப்படலாம். கட்சி உறுப்பினர்களும் எந்தக் கட்சியிலும் சேராத சுயேட்சை வாக்காளர்களும் பங்குபெறும் வாக்குப்பதிவு – Modified Open Primary என வழங்கப்படுகிறது.
இத்தனை குழப்பமாயிருந்தபோதிலும் அமெரிக்க உட்கட்சி தேர்தல்கள் மக்கள் பிரதிநித்துவம் எனும் அதிஉன்னத ஜனநாயகப் பண்பின் வெளிப்பாடாகவே இருக்கின்றன. ஒவ்வொரு வேட்பாளரும் அமெரிக்காவின் பரந்த, பல்கலாச்சார வாக்கு வங்கியின் விருப்பு வெறுப்பிற்கும் இலக்காகிய பின்னரே பொதுத்தேர்தலில் போட்டியிட இயலும். உட்கட்சி தேர்தலின்போதே வேட்பாளர்கள் தங்கள் பொருளாதார, சமூக, அரசியல் கொள்கைகளை தெளிவுற வகுத்துக் கொள்கின்றனர். இவை வெறும் தேர்தல் வாக்குறுதிகளாயில்லாமல் வேட்பாளரின் தலைமையிலான நாளைய அரசின் செயல்திட்டங்களாகவே இருக்கின்றன. இதற்கும் மேலாக தங்கள் கொள்கைகள் குறித்த பொது விவாதங்களிலும் (Public Debates) ஈடுபடுகின்றனர்.
இந்த நீண்ட செயல்முறை வேட்பாளர்களைக் குறித்து பல்தரப்பட்ட மக்களும், குழுக்களும் எடைபோட உதவுகின்றது. அமெரிக்க ஊடகங்கள் வேட்பாளர்களின் வரலாற்றை அவர்களின் பிறப்பிற்கு முன்பிருந்தே கூட தேடிப் பிடித்து வெளிக்காட்டுகின்றன. அவர்களின் அரசியல் பங்களிப்பும், தனி வாழ்வின் நேர்மையும், ஒழுக்கமும் பூதக் கண்ணாடிகளால் பார்க்கப்படுகின்றது. சிறு தவறுகளுக்கும் முழுவதுமாக தெளிவுகளைப் பெற முடிகிறது. பிரச்சாரங்களின்போது மக்களுடன் நேரடியாக உரையாடும் நிகழ்வுகள் ஏராளமாய் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஊடகங்கள் மட்டுமன்றி சாதாரண மக்களும் வேட்பாளர்களை சங்கடமான கேள்விகளையும் கேட்குமளவுக்கும், தவறுகளை சுட்டிக்காட்டுமளவுக்கும் இவை அமைந்துள்ளன.
உட்கட்சித் தேர்தல்களினால் ஜனநாயகப் பண்பு காக்கப்படுகிறதென்றாலும், இதற்காக செலவளிக்கப்படும் பணம் அமெரிக்க பொதுத் தேர்தலுக்கு ஆகும் செலவை விட அதிகம். இதை நன்கொடைகள் மூலம் பெறும்போதே அரசியல்வாதிகள் பெரிய வணிக நிறுவனங்களுக்கும் கடன்பட்டவர்களாகிவிடுவதும் உண்டு. அறுதிப் பெரும்பான்மையற்ற உட்கட்சித் தேர்தல்களில் மக்கள் சலிப்படைவதும், இந்த முறைகளின் மீது சந்தேகம் எழுப்புவதும் 2008 தேர்தலில் காண முடிகிறது. ஜனநாயகக் கட்சியின் சூப்பர் டெலெகேட்ஸ் முறைக்கும் குடியரசுக் கட்சியின் பெரும்பான்மை பெற்றவருக்கே மாநில பிரதிநித்துவம் முழுமையும் வழங்கும் முறையும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் நீடிய பிரச்சாரங்கள் கட்சிக்குள்ளேயே பிரிவினைகளை ஏற்படுத்தும் அபாயமும், உட்கட்சித் தேர்தலின்போது தன் கட்சி உறுப்பினர்களாலேயே ஒரு வேட்பாளர் விமர்சிக்கப்படுவதும் அரசியல் நோக்கில் பிரச்சனைகளாகத் தெரிந்தாலும் ஜனநாயக நோக்கில், தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் மக்களின் உண்மையான பிரதிநிதியாக இருப்பதை இப்படி ஒரு தேர்தல் முறையினாலேயே உறுதி செய்ய இயலும். ஜனநாயகத்தின் மீது தீவிர பக்தியும், , மக்கள் சக்தியின்மீது நம்பிக்கையும் கொண்ட ஒரு அரசியல் களத்திலேயே இது சாத்தியம்.
இந்தியாவில் இது போன்றதொரு தீவிர உட்கட்சி தேர்தல்முறையை உருவாக்குவது பொருளாதார அடிப்படையில் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. இருப்பினும் கட்சிகள் தங்கள் சுய முனைப்பில் இதை செயல்படுத்த முன்வரவேண்டும். பெருமளவிற்கு பொதுமக்களைக் கொண்டில்லாமல்போனாலும் வேட்பாளர்களை உட்கட்சி இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கும் முறையை கொண்டுவருவது சாத்தியமே. கட் அவுட் போஸ்டர் வகையறாக்களுக்கும், கட்சிக் கூட்டங்களுக்கும், மாநாட்டிற்கும் செலவிடும் கோடிகளில் கொஞ்சத்தை ஜனநாயகத்திற்காக செலவிடலாம்.
வாரிசு அரசியலில் ஊறிக்கிடக்கும் இந்திய அரசியலில் மக்கள் பிரதிநித்துவம் என்பது தேர்தல் நேரக் கூத்தாக மட்டுமே இருக்கும்.
“தேர்தலில் தலைசிறந்தவர் ஒருவர் வெற்றிபெற வேண்டுமென நாமெல்லோரும் விரும்புகிறோம். துரதிஷ்டவசமாக அவர் தேர்தலில் நிற்பதேயில்லை.” எனச் சொன்னவரும் ஒரு அமெரிக்கர்தான்(Will Rogers).
cyril.alex@gmail.com
- மே 24, 25ல் கருமையத்தின் நான்காவது நிகழ்வுகள்
- பெயரின் முக்கியத்துவம் பற்றி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வால்மீன்களிலிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ? (கட்டுரை: 29)
- பிரான்சில் தமிழ்த் தாத்தா சிறப்பு நினைவு இலக்கிய விழா
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 7 (சுருக்கப் பட்டது)
- அமெரிக்கத் தேர்தல் களம்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 5
- தெய்வ மரணம்
- பார்வை
- இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்
- தமிழும், திராவிடமும்!
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 11
- தமிழவனின் “வார்சாவில் ஒரு கடவுள்” – கருத்தரங்கம்
- காலம் மாறிப்போச்சு:
- தொ(ல்)லைக்காட்சியின் கதை!
- சேவல் திருத்துவசம்
- எனது பார்வையில் தீபச்செல்வன் கவிதைகள் !
- இல்லத்தின் அமைப்பியல் விதி !
- வேரை மறந்த விழுதுகள்
- தாஜ் கவிதைகள்
- ஊனப்பிள்ளை வேண்டுமா? ஞானப்பிள்ளை வேண்டுமா?
- எழுதி என்னத்தைக் க்கிழிச்சே?!!
- தீபச்செல்வன் கவிதைகள்
- கருணாகரன் கவிதைகள்
- தாகூரின் கீதங்கள் – 30 வேலிக்குள் வரம்புகள் எனக்கு !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 19 மணம் புரிந்த கனவு !
- ஒரு ரொட்டித்துண்டு
- வீதிகளில் உடல்சிதறி மடிவது தான் இந்தியரின் விதியா?
- வார்த்தை மே-2008 இதழில்
- ஜெகத்ஜால ஜப்பான் – ஒமோதிதோ கோசைமசு
- நினைவுகளின் தடத்தில் (9)
- தேடல்
- பட்ட கடன்