அப்பாவின் சொத்து

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

இளங்கோ மெய்யப்பன்


கல்லுப்பட்டிக்கு புறப்படவேண்டிய வண்டி பேருந்து நிலையத்திலுருந்து நகர ஆரம்பித்தது. சிதம்பரம் அதை கவனித்து சற்றே பதட்டப்பட்டார். 4.50க்கு தானே கிளம்பவேண்டிய வண்டி. 4.15 தானே ஆகிறது. நேரத்தை மாற்றிவிட்டார்களா? சர்பத்தை மடக்மடகென்று வேகமாக குடித்துவிட்டு, சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுத்தார். பதட்டமாக ஐந்து ரூபாய் நோட்டை சர்பத் கடைக்காரரிடம் நீட்டினார். கடைக்காரர் மற்றொரு வாடிக்கையாளரிடம் பேசிக்கொண்டிருந்ததை பொருட்படுத்தாமல், “சீக்கிரம் பாக்கி கொடுப்பா” என்றார். கடைக்காரர் சிதம்பரத்தை பார்க்காமல் அந்த வாடிக்கையாளரிடம் பேசிக்கொண்டே சிதம்பரத்திடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு தனது பணப்பெட்டியில் வைத்து ஒரு ரூபாய் காசை பாக்கி கொடுத்தார். சிதம்பரம் அதை வாங்கிக்கொண்டு விருவிருவென பேருந்தை நோக்கி நடந்தார்.

“என்னப்பா, 4.50க்கு தானே வண்டி? இப்பவே எடுக்குற?” படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த நடுத்துனரைப் பார்த்து கேட்டார்.

“இல்லண்ணே. 2.30 மணி வண்டி அண்ணே. இப்பதான் எடுக்கிறோம்”

“என்னப்பா ஆச்சு?”

“அமராவதிபுதூர் நம்ம ஆனா மெனா வீடு கிட்ட திருப்பம் இருக்கிலண்ணே, அங்க ஆக்ஸிடண்டு ஆயிடுச்சண்ணே”

“திரும்பி வரம்போதா இல்லை போகும்போதாப்பா?”

“வரும்போதுதான் அண்ணே. போகும்போதுதான் பிரச்சனை ஒண்ணுமில்லையேணே. லெவ்ட்தானே எடுக்கணும். வரும்போதுதான் அண்ணே, ஒரே கடையா வந்திருச்சண்ணே. அங்கிட்டுருந்து வர வண்டிங்க சரியா தெரியமாட்டேங்குதண்ணே.”

“ரொம்ப நாளா அப்படித்தானே இருக்கு. என்னமோ புதுசா வந்த மாதிரி சொல்ற. உங்களுக்கெல்லாம் வரவர பொறுமையே இல்லையப்பா. விருட்டுனு தான் எல்லா இடத்திலையும் ஓட்டுறீங்க. சும்மா பழியை ரோடு மேலையும், மக்கள் மேலையும், அரசாங்கம் மேலையும் போடாதீங்கப்பா. நம்ம என்ன செய்தோம், எப்படி மாத்தி செய்யலாம்னு பாருங்கப்பா”

சொல்லிக்கொண்டே பேருந்தில் ஏறி உட்கார்ந்தார் சிதம்பரம். “என்னப்பா, இந்த தடவை ஒழுங்கா கொண்டு போய் ஊர்ல சேத்துவிட்டுருவீங்கள?”

“பதினோரு வருஷமா இதே ரூட்டுதன் அண்ணே ஓட்டுரோம். ஒரு தடவைகூட இப்படி ஆனதில்லண்ணே. நாங்களும் அவ்வளவு பொறுமையாகதான் இருக்கிறோம். ஒரு நாளைக்கு எங்க வேலையை பாருங்கண்ணே. அப்பதான் தெரியும். எவன் ரூல்ஸை பாத்து போறான்? எல்லாம் என்னவோ அவன் வீட்டு ரோடு மாதிரி நினைச்ச இடத்தில நினைச்ச மாதிரிலாம் ஓட்டுரான். ஆக்ஸிடண்டு ஆனா தப்பு யாரு மேலனு எவனும் பாக்கலை. பெரிய வண்டி எதுவோ அதை போட்டு அடிக்கிறான்.”

குறைகள் தான் குறைவாக இல்லாமல் எல்லா இடத்திலும் நிறைவாகவே உள்ளது. தினசரி வாழ்க்கையில் எத்தனை பேர் மீதும் எவ்வளவு குறைகள்? வீட்டில் குறைகள், சொந்தக்காரர்களிடம் குறைகள், வேலையில் குறைகள், நாட்டில் குறைகள். ஒரு வடையை எடுத்தால், நடுவில் இருக்கும் ஓட்டையவா பார்த்து கொண்டிருக்கிறோம்? வடையைதானே பார்த்து, கடித்து, ருசித்து சாப்பிடுகிறோம்? இந்த நாட்டிலும், வீட்டிலும் சுவையானதை ரசிக்காமல், ஓட்டையை வெறிச்சோடி பார்பவர்கள் தான் அதிகம். ஒரு காலத்தில் இந்த நடத்துனர் வேலை இவன் கணவாக இருந்திருக்கும். நினைவானவுடன் அதை ரசிக்காமல், அடுத்த கணவின் மேல் தான் கவனம். மனித இயல்பு.

சிதம்பரம் தன் மகளைப்பற்றி இந்த விஷயத்தில் ரொம்பவும் யோசித்தார். நடத்துனரை சொல்லி என்ன, தன் வீட்டில் பார்வதியும் அப்படித்தானே இருக்கிறாள். பாருவை நினைக்கையில் சிதம்பரம் ஒரு பெருமூச்சு விட்டார்.

பேருந்து கல்லுக்கட்டி கடைத்தெருவைத் தாண்டி டிசோட்டா பேக்கரி வழியாக அமராவதிப்பூதூரை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. பேக்கரி வாசலில் அண்ணாமலை நின்று கொண்டிருந்தார். இதனால்தான் சொந்த மண்ணை விட்டு சிதம்பரத்தால் எங்கும் செல்ல விருப்பம் இல்லை. எங்கு பார்த்தாலும் தெரிந்த கடைகள், தெரிந்த மக்கள், தெரிந்த தெருக்கள், தெரிந்த வீடுகள். இது எல்லாம் எணக்கு தெரிந்தது, என்னுடையதது போன்ற ஒரு உணர்வு. என்னதான் மதுரையில் பாரு வீடு இருந்தாலும், ஒரு பிடித்தம் வரவில்லை சிதம்பரத்துக்கு.

“அண்ணே இறங்கிக்கோங்க”

எந்த ஊரில் கிடைக்கும் இந்த மரியாதை? பேருந்து நிற்குமிடம் பெருமாள் கோயில் என்றாலும் சிதம்பரம் வீடு இருக்கும் தெரு வந்தவுடன் எப்பொழுதும் நடத்துனர் பேருந்தை நிறுத்த சொல்வார். அவருக்கு தெரியும் சிதம்பரம் வீடு இருக்குமிடம்.

“இல்லப்பா. கோயில் கிட்டையே இறங்கிக்கிறேன். 5 மணி தீபத்தை பாத்துட்டு அப்படியே வீட்டுக்குப்போறேன்”

தீபத்தை பார்த்து வீடு திரும்பியதும் சிதம்பரதுக்கு ஒரு அதிர்ச்சி. வீட்டு வாசலில் பாரு. ஒன்றும் புரியவில்லை. எப்பவும் ஒரு போன் போட்டில வருவா? என்ன திடுதிப்புனு?

“என்னமா பாரு? எப்ப வந்த? நீ வரது தெரியாதம்மா, தெரிஞ்சிருந்தா வீட்டிலையே….” மேற்கொண்டு சிதம்பரம் பேசவில்லை. அவள் முகத்தில் இருக்கும் கோபமும், கண்களில் காட்டும் உணர்ச்சியும் புரிந்துவிட்டது. என்னமோ நடந்திருக்கு.

கதவை திறந்து உள்ளே சென்றதும், “வாம்மா வா. என்னமா, என்னாச்சு?”

“நீங்க இப்படி பன்னுவீங்கனு எதிர்பாக்கலைப்பா”

சிதம்பரம் இதை எதிர்பார்ததுதான். இருந்தாலும் அவளாகவே அதை சொல்லட்டும் என்று “எதைம்மா சொல்ற?”

“நல்லதுக்கு காலமே இல்லப்பா. நல்லவளா இருந்து, ஒரு பிள்ளை செய்ய வேண்டியதையெல்லாம் நான் செஞ்சேன். என்னப்பா குறை என் மேல? சின்ன வயசிலிருந்தே அவ தான்ப்பா உங்களுக்கு. கடைசில சொத்தையும் அவளுக்கே கொடுத்தீட்டீங்களேப்பா” அழ ஆரம்பித்தாள் பாரு.

“கஷ்ட்டப்படுறாமா. அவளுக்குதான் அது அதிகமா உதவும்”

“கஷ்ட்டப்படுறானா? யாருனால கஷ்ட்டப்படுறா? அவ கஷ்ட்டத்துக்கு அவதான் காரணம். கல்யாணத்துக்கு முன்னாடி நீங்களும் ஒன்னும் சொல்லமாட்டீங்க. அம்மாவும் ஒரே செல்லம். கிடந்து ஆடினா. போன இடத்தில அவ திமிற அடக்கிடாங்க.”

பாருவுக்கு ஒரே தங்கை. சரசு. கடைக்குட்டி அம்மாவுக்கு செல்லக்குட்டி. சரசு பிறரை கேலி செய்தால் அது நகைச்சுவை. பதிலுக்கு பதில் பேசினால் அது சாமர்த்தியம். அவள் கோபப்பட்டால் நாம் தான் அவள் கோபப்படாதப்படி நடந்துக்கொள்ள வேண்டும். அவள் தப்பு செய்தால், பாவம் அவள் சின்ன பொண்ணு. அவள் அப்படித்தான் என்று கல்யாணத்துக்குமுன் ஏற்று கொண்டவளை கணவன் அவ்வாறு எற்றுக்கொள்ள மறுத்தான். அவள் மாறவேண்டும் என்று எதிர்பார்த்தான். அவளுக்கோ மாறி பழக்கமில்லை. தன்னை மாற்றினால் தன்னையே இழப்பதுப்போல ஒரு பயம். ஆண்டுகள் சென்றன. பிள்ளையும் பிறந்தது. பிள்ளை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று எல்லோரையும் போல் ஒரு நப்பாசை கணவனுக்கு. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? ஐந்தில் வளையாதது பிள்ளை பெற்றால் ஐம்பதில் வளையக்கூடும் என்று சொல்லவில்லையே?

தினம் தினம் கல்யாண வாழ்க்கை கசந்தது. சண்டை போடுவதற்க்கு மட்டும்தான் இருவரும் பேசிக்கொண்டார்கள். அம்மா உயிரோடு இருக்கும் வரை ஒரு சிரிய நூல் இழையில் சரசுவின் திருமணத்தை கோர்த்துவைத்திருந்தாள். அம்மா இறந்த பிறகு நூல் அறுந்தது. சரசு விவாகரத்துப்பெற்றாள். பத்தாண்டு காலம் கவலைக்கிடமாக இருந்ததால்தான் அம்மா இறந்தாள் என பாரு மட்டும் புலம்பினாள்.

சண்டையும் சச்சரவுமாக இருக்கும் சரசு வீட்டிற்கு சிதம்பரம் என்றும் சென்றதில்லை. பாரு வீடுதான் அவருக்கு வீடு மாதிரி. பாரு மகன் சோமு தான் பேரன். விவாகரத்துக்கு பிறகும் சரசுவை காண விரும்பவில்லை. சரசு உலகின் மீதும் வாழ்க்கையின் மீதும் இன்னும் கோபமாகவே இருந்தாள். வேலை எதுவும் என்றும் பார்ததில்லை. செலவுக்கு அப்பாவும் கணவனும் பணம் அனுப்புவார்கள். பாரு அதை பொருட்படுத்தவில்லை. ஆனால் அப்பா இப்ப 80% அவளுக்கும் 20% இவளுக்கும் சொத்து பிரித்ததில் இடிந்து போனாள். அப்படி இருக்கிற அவளுக்கு எப்படி எல்லாம் நடக்குது? அப்ப நானும் ஆடனுமோ? பிடிவாதம் பிடிக்கனுமோ? அப்பா ஏமாத்திட்டாங்களே? நம்ம அப்பாவா? ஏன்? எதுக்கு? பணம் கூட வேண்டாம். ஆனா எனக்கு காரணம் தெரிஞ்சாகனும்.

“நீ நல்லவ. நல்லா இருக்கிற. நல்லா இருப்ப. மாப்பிள்ளை நல்லவுக. சோமுவும் நல்லா வருவான். உன்னை தொட்டு ஒரு கவலையும் இல்லமா. சந்தோஷம்தான் மா. உன் புருஷன் அளவுக்கு புத்திசாலியகவும் பொறுமசாலியாகவும் அவளுக்கு அமையல. இப்ப அவனும் கூட இல்லை. பிள்ளையோட தனியா இருக்கா. எங்கேயும் போறதில்லை. யாரோடையும் பேசறதில்லை. அவ எதிர்காலத்தை நினைச்சா பயமா இருக்குமா. சொத்தைகூட அவ பையன் பேர்லதான்மா எழுதினேன்.”

“என்னமோ எனக்கு மட்டும் எல்லாம் வானத்திலிருந்து விழுந்தமாதிரி பேசுறீங்க. நான் அப்படி ஏற்படுத்திக்கிட்டேன். சந்தோஷம்ங்கிறது நமக்கு கிடைக்கறதை வைத்து இல்லை, கிடைத்ததை வைத்து நாம ஏற்படுத்திகறது. நான் நல்லா இருக்கிறதுல எனாக்கும் பங்கு உண்டுபா. அதான் அதை பாரட்டுற மாதிரிதான் நல்ல பரிசா கொடுத்துட்டீங்களே” அழுதுக்கொண்டே பேசினாள் பாரு.

“சொத்தை சரிபாதி கொடுக்காததினால உன்னை பாராட்டுலைனு நினைக்காதம்மா”

“வேற எப்படிப்பா? நாம செய்றதை வைத்துதான் நம்ம எண்ணங்கள் என்னனு தெரியும். உங்க செயல்கள் தான்பா உங்க முக்கியத்துவங்களை காட்டுது. உங்க மனசில என்னோட முக்கியத்துவம் என்னனு நான் புருஞ்சுகிட்டேன். நான் வரேன்பா” பாரு எழுந்து கதவை நோக்கி நடந்தாள்.

“எனக்கு நீங்க இரண்டு பேரும் நல்லாயிருக்கனும். நீ புருஞ்சுப்பேனு நினைச்சேன்”

“எப்பவும் நான்தானே புருஞ்சுக்கனும்” திரும்பிப்பார்க்காமல் பாரு வெளியேறினாள்.

பாரு அப்பாவை பார்த்து ஆறு மாதம் ஆகிவிட்டது. இவ்வளவு நாட்கள் அப்பாவை பார்க்காமலும் பேசாமலும் இருந்ததில்லை. அவ்வப்பொழுது இரக்கம் வந்தாலும் கோபமும் அழுகையும் தனியவில்லை பாருவுக்கு. மனதுக்கு மாறுதலாக இருக்கட்டுமென்று மீனாட்ச்சியம்மன் கோயிலுக்கு சென்றாள்.

“நல்லாயிருக்கியாமா?”

திரும்பிப் பார்த்தால் அண்ணாமலை அண்ணன். “அண்ணே! நல்லாயிருக்கேன் அண்ணே. நீங்க எப்ப்டியண்ணே இருக்கீங்க?”

“எனக்கென்னமா. சந்தோஷமா மகன் வீட்டுல இருக்கிறேன். ஊருக்கு போறேன்டானா விடமாட்டேங்கிறான். உங்க அப்பா மாதிரி எனக்கும் ஊர்தான்மா பிடிக்கும்”.

“உனக்கு தெரியுமா? நம்ம சோமு காலெஜிலதான்மா என் பேரனும் படிக்கிறான். நேத்தைக்கு வீட்டுக்கு வந்திருந்தான் அவனைப்பாக்க. நான் யாருனு அவனுக்கு தெரியாது. அவனுக்கு அப்புறம் எடுத்து சொன்னேன் எப்படி சொந்தம்னு”

“சொன்னான் அண்ணே. எல்லாரையும் கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க. நாங்க அண்ணாநகர்லதான் இருக்கோம்”

“நீ கூப்பிடறது லேட் மா. சோமு விலாசமெல்லாம் கொடுத்து எங்களை அப்படி கூப்புட்டான்மா. நல்ல பையன்மா உன் பையன். அப்படி ஒரு மரியாதை தெரிஞ்ச பையன். நல்ல குணம். நல்லா பேசி பழகுறான். அப்படியே உங்கப்பாக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கிற மாதிரி இருந்திச்சு. உங்கப்பாவுக்கு பையன் இல்லை. சோமுவைதான் பையன் மாதிரி நினைச்சாரு. லீவுல எல்லாம் அவனோடே இருந்ததுல, சோமு உன் அப்பாவை கவனிச்சு பாத்திருக்கான். சரசு வீட்டு பிரச்சனைனாலே எல்லா கவனமும் நேரமும் சோமுவுக்கே கொடுத்திருக்காரு. சிதம்பரம் அண்ணன்கிட்ட காசு பணம் பெரிசா இல்லைனாலும், அவுககிட்ட இருக்கிற பெரிய சொத்தே அவரோட எண்ணங்களும், பேச்சும், குணமும், பழக்கவழக்கங்களும்தான்மா. எங்க எல்லாத்தையும் அவரோடவே கொண்டுபோய்டுவாரோனு நான் நினைச்சதுண்டு. நல்ல வேளை அத்தனையும் அப்படியே உன் பையன்கிட்ட கொடுத்திருக்காரு”

பாருவுக்கு அப்பாவை பார்க்கவேண்டும்போல் இருந்தது.


ilangomey@yahoo.com

Series Navigation

இளங்கோ மெய்யப்பன்

இளங்கோ மெய்யப்பன்