பாலா
சென்னை மாநகரில் ஃப்ளாட் வாங்கும் போது, அதை விற்ற நிறுவனம், ஒரு இனிய அதிர்ச்சி கொடுக்கும் என்று நான் கனவிலும் நினைக்க வில்லை. இடுக்கண் வரும் போதெல்லாம் என்னை மகிழ்விக்கும் மாமருந்தாக அது திகழ்கிறது.
எனது வீடு உருவாகும் தருணங்களில், அடிக்கடி பார்வையிடச் செல்வேன். அப்போது, பல்வேறு நிறங்களில் சுற்றுப் புரங்களில் உலவிக் கொண்டிருந்த அந்த வயதான உயிரினங்களைக் கவனிக்க வில்லை. பிற்காலத்தில், அவையனைத்தும் ஒன்று கூடி, ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி, இப்படி ஒரு நிறுத்தமில்லாக் கொண்டாட்டத்தைக் (non stop entertainment) கொடுக்கும் என்பது அப்போது என் சிற்றறிவுக்கு எட்ட வில்லை. அபார்ட்மெண்ட் அஸோஸியேஷன் என்னும் மாபெரும் ஸ்தாபனத்தின் தூண்கள் இவை.
பொதுவாக இந்த உயிரினங்கள் தனியார் அல்லது பொது நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவை. மூப்பு மற்றும் வியாதிகள் காரணமாக இருக்கும் எரிச்சலை, மற்றவர்கள் மீது திணிப்பதை தமது நிறுவனப் பொறுப்பின் ஒரு பகுதியாக நினைப்பவை. தம் பேரக் குரங்குகள் தவிர மற்ற குரங்குகள் யாவும், மனித குலத்தின் எதிரிகள் என்பதே இவற்றின் நம்பிக்கை. மற்ற குரங்குகளும், இந்நம்பிக்கைத் தீயில் நெய் வார்க்கும் விதமாக, இந்தக் கிழங்களுக்கு, செல்லப் பெயர் இட்டு அழைப்பது, கேட்குந்தோறெல்லாம் காதில் தேன் பாயும் இன்பம் தரக்கூடியது. இந்தக் குழுவில் சேர்த்துக் கொள்ளப்படாத வயதான உயிரினங்கள், எதிர்க்கட்சியாகத் திறம்படச் செயல்படும். இந்த இரண்டு குழுக்களிலும் சேராத ஒன்றிரண்டு விமர்சக உயிரினங்களும் உண்டு.
கல் தோன்றி, முள் தோன்றி, டெக்னாலஜி தோன்றாக் காலத்தில் கட்டப்பட்ட எனது பழைய வீட்டில், சண்டையிடும் வாய்ப்புகள் குறைவு. அஸோஸியேஷனின் வருடாந்திர மற்றும் விஷேஷ நாட்களில் கூட்டப் படும் கூட்டங்களில் மட்டுமே சண்டை சாத்தியம். அந்த விஷேட நாளுக்காக, எதிர்க்கட்சி உயிரினங்கள் தம்மைத் தயார் செய்து கொள்ளும் வழிமுறைகளைப் பின்பற்றினால், இந்தியாவுக்கு ஓரிரண்டு ஒலிம்பிக் மெடல்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. வாலினங்கள் சாலையில் உணவுக்காக அடித்துக் கொள்வது போன்ற சாத்வீகக் கூட்டங்கள் அவை. ஆனால், இங்கே சண்டையிடும் உயிர்களுக்கு வாலில்லை என்பது முக்கிய வேற்றுமை. பணியாற்றிய காலங்களில், அதிகாரிமார்களுக்கு ஆட்டிய வேகத்தில், ஓய்வு பெரும் முன்பே வால் கழன்று விழுந்து விடுவதே முக்கிய காரணம். கையெழுத்துப் பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு உடன் ஓடி விடுவதே உயிர் காக்கும் வழி என்பது போல், ஃப்ளாட்டில் குடியிருக்கும் மற்ற உயிர்கள் பின்னங்கால் பிடறியில் இடிபட ஓடிவிடும்.
ஆனால் என் புதிய வீடு அப்படியில்லை. Technology has improved so much என்பதால், இங்கே ஆன் லைன் அஸோஸியேஷன். எல்லாம் இணைய தளத்தில் நிகழ்கிறது. ஒவ்வொருவரின் கருத்தும் சுடச்சுட இணையத்தில் வெளியாகிறது. தாழ்ப்பாளுக்குப் பின்புலமாக, பாதுகாப்புச் சங்கிலி பொருத்தப் பட்ட வீடுகளுக்குள் இருந்து வெளியாகும் துணிவு மிக்க கருத்துக்கள் புறநானூற்றுப் பாடல்களை நினைவூட்டுபவை. இவர்கள் வெளியேற்றும் சூடான கருத்துக்கள், வளி மண்டலத்தில் மேலெழும்பி, ஓசோன் மண்டலத்தை தாக்குவதே, அதில் ஓட்டை விழுவதற்கு முக்கிய காரணம் என்று புஷ்ஷும், அவர்தம் வெளியுறவு அல்லக்கை காண்டிலீஸாவும் முடிவுக்கு வந்திருப்பதாக CBI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உண்மை போல் தோன்றுகிறது. நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பெட்ரோல் விஷயத்தில் போல் கோட்டை விட்டு விடக் கூடாது.
புது வீட்டு ஆன் லைன் அஸோஸியேஷனில் இப்போது புதிதாக இரண்டு உலகை (உலகு என்றால் தென் சென்னை என்னும் பூகோளப் பகுதி என்று அறியவும்) உலுக்கும் விவகாரங்கள் எழுந்துள்ளன. முதலாவது அங்கே நிறுவப்பட்டிருக்கும் நீச்சல் குளம். வீடு வாங்கும்போதே, பில்டர் சொன்னார், “சார் நீச்சல் குளம் கட்ட பிளான் இருக்கு, ஆனால், சிலர் அது வேண்டாம், அபார்ட்மெண்ட் விலையில் குறைச்சுக்கோங்கோன்னு சொல்றாங்க. நீங்க என்ன சொல்றீங்க??” கட்டாயம் நீச்சல் குளம் வேண்டுமென்று சொல்லிவிட்டேன். (டேய், மாமிகளை, டூ பீஸில் பாக்க அலையாதே! பாத்து கிலியடிச்சிருச்சின்னா, அப்புறம், பாடிகாட் முனீஸ்வரன் கோயிலுக்கு நேர்ந்துக்க வேண்டி வரும்னு நண்பர் ஜெயபிரகாஷ் சொன்னதைப் பொருட்படுத்தவில்லை. புறநானூற்றுப் பரம்பரை; எதையும் தாங்கும் இதயம்; பார்த்து விடுவோம் எனச் சூளுரைத்தேன்!! மேலும், நம்மைப் பாத்து மற்றவர்களுக்கும் கிலியடிக்குமல்லவா?? தானிக்கு தீனி சரியாப் போயிந்தி!!). இப்போது, பிரச்சினை என்னவென்றால், நீச்சல் குளத்தில் குளச் சீருடை என்னவென்பதே. துரதிருஷ்டவசமாக, இது பற்றிய விதிகளை எந்த மறைகளும் கூறுவதில்லை. அதனால், அஸோஸியேஷனின் முக்கிய தூண்களே இந்த மாபெரும் கடமையைச் செய்ய வேண்டியிருக்கிறது. அவர்களும் வருத்தப் பட்டுப் பாவம் சுமக்கத் தயாராகி, ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் குளங்களின் நீச்சல் விதிகளைச் சுட்டு ஒரு விதிமுறைப் பட்டியலை உருவாக்கி வெளியிட்டார்கள். அது வெளியாகிய, இரண்டாவது நிமிடத்தில், எதிர்க்கட்சியிலிருந்து எதிர்ப்பு வந்துவிட்டது இணையத்தில்!
ஆண்கள், மிகச் சிறிதான ஜட்டி மற்றுமே அணிவார்கள். அதைப் பார்த்து பெண்மகவுகள் சங்கோஜப் படலாம். எனவே அவர்கள் லூஸான பெரிய அரை டிரவுசர் போன்ற ஆடை அணியலாம். பெண்கள் non-transparent ஆன உடைகளை அணியலாம் என்று மாற்று யோசனைகள் எதிர்க்கட்சியின் தரப்பில் இருந்து கூறப்பட்டது. இது வெளியான சில நிமிடங்களில், முற்போக்கு மகளிர் தரப்பிலிருந்து கண்டன அறிக்கை வெளியானது. நீச்சல் குளங்களில், நீச்சல் உடைகளே அணிய வேண்டுமென்றும். தேவையின்றி உடை விதிகளை மாற்றினால், அவரவர் இஷ்டத்திற்கு விதிகள் தளர்த்தப் படும் என்று. சரியென்றே தோன்றுகிறது. பின்னே பதினாறு முழப் புடைவையும், இரட்டை வேஷ்டியும் நீச்சலுடைகளாக மாறிவிட்டால், நீச்சல் குளம், மொகஞ்சதாராவின் “public bath” ஆகிவிடாதா?? இதற்கு ஆதரவாக முற்போக்கு ஆண்கள் தரப்பிலிருந்து உடனே ஒரு அறிக்கை வந்துவிட்டது. “நீச்சல் குளத்தில் நீச்சலுக்கு மட்டுமே அனுமதி! சமுதாய ஒழுக்கக் காவல் விதிமுறைகளுக்கு இங்கே இடமில்லை”. பெண் மகவுகளை நீச்சலுடையில் பார்க்கும் பாக்கியத்தைக் கெடுத்து விடுவார்கள் போலிருக்கிறதே என்று துக்கத்தில், கண்களில் நீர் தளும்பிவிட்டது. காலைக் கடன் கழித்து, உடல் தூய்மை செய்து கொள்ளவே நீரின்றித் துயருறும் ஏழை மக்கள் நிரம்பிய சென்னை மாநகரத்தில், இப்படி ஒரு luxury தேவையா என்று இறுதியில், தமிழ் சினிமா போலீஸ் போல, மாநகர அரசியல் காவலர்கள் நுழைந்துவிடுவார்களோ என்று இப்போது கூடுதல் பயம் வேறு.
அல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமானும், மயிலைச் சுடலையாண்டி கபாலீஸ்வரனும் எழுந்தருளி, நீச்சல் குளச் சச்சரவைத் தீர்த்து வைக்கவேண்டுமென்று வேண்டிக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை பராபரமே!
உலகைக் உலுக்கும் அடுத்த விஷயம் கார் ஓட்டுனர்கள். இவர்கள் செய்யும் அக்கிரமங்களைப் பட்டியலிட்டு ஒரு அறிக்கை வெளியாகியது. அதைப் படிக்க நேர்ந்தால், பின் லேடன், சதாம் ஹுஸேன், நீலப் பட டாக்டர், paedophiles, maniacs, எம்.என், நம்பியார், அம்ஜத்கான் என உலகின் அனைத்து நிஜ/நிழல் வில்லன்களும் ஒரே இடத்தில், மாதம் நாலாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்யும் அதிசயம் உங்களுக்குத் தெரியும். அவர்கள் செய்கின்ற அக்கிரமங்களுடன், அவர்கள் செய்யப் போகும் அக்கிரமங்களையும் ரூம் போட்டு யோசிக்கும் அஸோஸியேஷனின் கடமை உணர்வை என்ன சொல்ல?? (ஒருவேளை, நீச்சல் குளத்தை ஒளிந்திருந்து பார்த்து விட்டால்???) CBI/RAW போன்ற நிறுவனங்கள் தமது சென்னை அலுவலகங்களை மூடிவிட்டு, அவ்வேலைகளை, இது போன்ற அஸோஸியேஸன்களிடம் outsource செய்து விடலாம். கார் ஓட்டுனர்கள் செய்யும் இத்தகைய அக்கிரமங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள் பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் வெளி நாட்டினர்களும், கொலஸ்ட்ரால் அதிகமான மென்பொருள் விற்பன்னர்களுமே என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அஸோஸியேஷன் விவகாரங்களின் ஈடுபட்டு, உடல் பொருள் ஆவியை அதற்காக, ஆன்லைனில் செலவழிக்கும் வயோதிக வாலிபர்களின் இல்லங்களில் நம்பவியலாத அளவில் வாழ்க்கைத்தரம் முன்னேறியிருப்பதாக அவர்கள் குடும்பத்தில் வசிக்கும் மனைவி, மக்கள் கூறுகிறார்கள். “அத மெதுவாக் கையப் புடிச்சுக் கூட்டிட்டுப் போயி, ஆன் லைனில் இறக்கி விட்டாப் போதும், திரும்பி வரவே வராது… காலையில எந்திரிச்சதும், பல் வெளக்கினியா?? காப்பி குடிச்சியா?? மூச்சா போனியா?? ஷர்ட் அயர்ன் பண்ணினியா?? என்பது போன்ற கரையான் அரிப்பில் இருந்து பர்மனண்ட் விடுதலை. அது பாட்டுக்கு கம்ப்யூட்டர் ஸ்க்ரீனப் பாத்து சைலண்டா குரைச்சிட்டிருக்கும்” என்கிறார் ஒரு விடுதலை விரும்பி. “அதுல கொஞ்சம் ரிஸ்க்கும் இருக்கு… பலான சைட்டுக்கெல்லாம் போயிட்டு, அதன் தடங்களை எப்படி அழிக்கிறதுன்னு தெரியாம முழிக்கிறார். அத எப்படிச் சொல்லித் தரதுன்னு நாங்க முழிக்கிறோம்” என்கிறது ஒரு விடலைத் தந்தையின் பேரிளம்பெண்.
சென்னை மாநகரத்தில் மக்கள் தொகை அதிகமாகி, பூங்காக்கள், மரம் அடர்ந்த வசிக்குமிடங்கள் எல்லாம் மறைந்து விட்டால், மக்கள் பொழுது போக்க என்ன செய்வார்கள் என்றெல்லாம் ஒரு காலத்தில் முட்டாள்தனமாகக் கவலைப் பட்டிருக்கிறேன். மரம் வைத்தவன் தண்ணி ஊற்றுவான் என்னும் உலக உண்மை தெரியாமல்!
- துய்ப்பேம் எனினே தப்புந பலவே – வாழ்க்கை இதுதான்!
- வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 3
- வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 4
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 17(2) (முற்றும்)
- காற்றினிலே வரும் கீதங்கள் – 25 விலகிச் செல்லாது விதி !
- தாகூரின் கீதங்கள் – 37 மரணமே எனக்குச் சொல்லிடு -2 !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 13 (சுருக்கப் பட்டது)
- திருமதி. “ரத்திகா” அவர்களின் கவிதைநூல் வெளியீடு நிகழ்ச்சி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பேபி பிரபஞ்சத்தைப் பின்னிய அகில நாண்கள் (Cosmic Strings) (கட்டுரை: 32)
- மாயமாய்ச் சூலுற்ற தூயமாது!
- அபார்ட்மெண்ட் அட்டகாசம்!!!
- கவிதைகள்
- Last kilo byte – 18 மும்பை அரங்குகளில் தமிழ்படங்களும், முகங்களும்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 17(1)
- தழல் ததும்பும் கோப்பை
- சீனாவின் ஆக்கிரமிப்பு திட்டங்கள் – நரேந்திரன் கட்டுரை
- Launching of Creative Foundation
- உயிர் எழுத்து இரண்டாம் ஆண்டுத் துவக்கவிழா
- பைரவர்களின் ராஜ்ஜியம்!
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 25. ந.சிதம்பரசுப்பிரமண்யம்
- ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம் – இலக்கிய வடிவங்கள்
- நொக்கியாபோனும் எழுபத்தைந்துரூபா சோடாவும்
- மானுடத்தைக் கவிபாடி…
- பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து நான் தப்பிச் செல்கிறேன்
- தூக்கத்தோடு சண்டை
- தன்னுடலை பிளந்து தந்தவள்