அணு சோதனையால் மாசுபட்ட மண் – வெளிவரும் சூழலியல் பயங்கரம்

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

தமிழில்: அசுரன்



முன்னர் சோவியத் ஒன்றியத்திலிருந்த கசகஸ்தானில் உள்ள தொழில்மய நகரமான கரகண்டாவில் பிறந்த கைசா அட்கனோவா ஒரு உயிரியல் பட்டதாரி. அத்துறையில் முழுநேர ஆய்வில் ஈடுபட்ட அவர் நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய தவளை போன்ற உயிரினங்களில் கதிர்வீச்சால் ஏற்படும் மரபீனி மாற்றங்களைக் குறித்து சிறப்பாக ஆராய்ந்தார்.
சோவியத் ஆட்சியின்போது கசகஸ்தானில் நடத்தப்பட்ட அணு சோதனைகளின் அளவு கிரோசிமாவில் வீசப்பட்டதைப்போன்ற சுமார் 20,000 அணுகுண்டுகளுக்கு சமமாகும். இப்போதும் 23.7 கோடி டன் கதிரியக்கக் கழிவு அங்கு சுமார் 500 இடங்களில் புதைக்கப்பட்டுள்ளது. இத்தகைய கதிர்வீச்சின் விளைவால் கசகஸ்தானிலுள்ள மக்களில் 10 பேரில் ஒருவர் நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அட்கனோவா 1992 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் அடித்தள சனநாயகத்தையும் வலியுறுத்தி எக்கோ சென்டர் என்றழைக்கப்படும் கரகண்டா சுற்றுச்சூழல் மையத்தை நிறுவினார். அயல் நாடுகளில் இருந்து கசகஸ்தானுக்கு அணுக்கழிவுகளை இறக்குமதி செய்து புதைப்பதற்கு எதிராக வெற்றிகரமான பிரச்சாரத்தை மேற்கொண்டதற்காக பசுமை நோபல் பரிசு எனப்படும் கோல்டு மேன் விருதைப் பெற்றார். நியூ சயின்டிஸ்ட் இதழுக்காக அவருடன் ஃபிரட் பியர்ஸ் நடத்திய உரையாடலின் சற்று சுருங்கிய வடிவம் இது.

உங்கள் இளவயதில் மேற்கொள்ளப்பட்ட அணுசோதனைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
நாங்கள் அந்த அணுசோதனை நடைபெற்ற இடத்திலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் வாழ்ந்துவந்தோம். பாலிகான் என்று அழைக்கப்படும் ஸ்டெப்பி புல்வெளிகள் சூழ்ந்த பகுதி அது. அந்த அணுசோதனை செய்யப்பட்டபோது கூரையிலிருந்த விளக்குகள் உடைந்து விழுந்தன, நிலம் சிலமுறை நடுங்கியது. 1963ஆம் ஆண்டு அணுசோதனை தடை ஒப்பந்தம் ஏற்பட்டதன் பின்னர் இத்தகைய நிலத்தடி சோதனைகளுக்குப் பதிலாக வளிமண்டல அணுசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. அது நிலநடுக்கமாக இருக்கலாம் என்று சிலர் கூறினார்கள்.

உண்மையிலேயே என்ன நடந்துகொண்டிருந்தது என்று மக்களுக்குத் தெரியாதா?
வளிமண்டல அணுசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோதுகூட அது இரகசியமாகத்தான் இருந்தது. அணுசோதனைகளின்போது வானில் தோன்றும் மிகப்பெரிய காளான் வடிவ புகைமண்டலத்தை மக்கள் கண்டனர். ஆனால், அங்கே என்ன நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது. சோதனைகளின்போது ஊர்களுக்கு வரும் இராணுவத்தினர் மக்களை வீட்டைவிட்டு தெருவிற்கு வந்து, டவல்கள் அல்லது வெள்ளை அட்டைகளால் தம்மை மறைத்துக்கொண்டு குழிகளுக்குள் பதுங்கியிருக்குமாறும் என்ன நடக்கிறதென்று பார்க்கக்கூடாது என்றும் அறிவுறுத்துவார்கள். என்றாலும் என்ன நடக்கிறதென்று அறிந்துகொள்ளும் ஆவலில் மக்கள் அவற்றைப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.
ஒவ்வொரு சோதனைகள் முடிந்தபின்னரும் இராணுவத்தினர் மக்களுக்கு கொஞ்சம் சிவப்பு ஒயினை வழங்குவார்கள். அது ஒருவேளை கதிரியக்க நச்சு முறிப்பானாகவும் இருக்கலாம். அவர்கள் அம்மக்களிடம் இருந்து சோதனைக்காக குருதி மாதிரிகளை எடுப்பதோடு, தூசிப்படலம் அமரும்வரை சிலநாட்கள் அம்மக்களை ஊரைவிட்டு வெளியே அழைத்துச்செல்வார்கள். ஆனால், அம்மக்களின் கால்நடைகளும் கோழிகள் உள்ளிட்டவைகளும் ஊரிலேயே இருக்கும். அதன்பின்னர் மக்கள் கதிரியக்கமுடைய தமது விலங்குகளோடும் பறவைகளோடும் அந்தக் கதிரியக்க வீடுகளிலேயே வாழவிடப்பட்டனர்.

மக்கள் எப்போது உண்மையை உணர்ந்தார்கள்?
1980களில் பெரிஸ்த்ரோய்கா நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் தான் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று உணர்ந்தார்கள். அதன்பின்னரும் சோதனைகள் தொடர்ந்தன. கடைசி சோதனை 1989ஆம் ஆண்டு நடைபெற்றபோதிலும் அந்த புல்வெளியானது 1991ஆம் ஆண்டுவரை இராணுவத்தால் கைவிடப்படவில்லை.
இது கசகஸ்தான் மக்களுக்கு ஒரு மோசமான அனுபவமாக இருந்தது. அப்பேரழிவின் விளைவுகள் இன்னும் தொடர்கின்றன. சோதனைகளின்போது கருவுற்றிருந்த பெண்களின் கருக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டன. அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் வளர்ந்து இப்போது அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்துள்ளன. கதிர்வீச்சால் ஏற்படும் மரபீனிப் பாதிப்புகளால் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து பாதிக்கப்பட்டு, இப்போதும் நோய்வாய்ப்பட்டு வருகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்னரே எனது தாயும் தந்தையும் புற்றுநோயால் கொல்லப்பட்டனர். எனது சகோதரியும் புற்றுநோய்க்கே பலியானார். இப்போது எனக்கு ஒரேயொரு சகோதரன் மட்டுமே இருக்கிறான். இப்போது உண்மையிலேயே நான் மிகவும் குழம்பிப்போய் இருக்கிறேன். ஏனென்றால், அவனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான். அவன் விரைவில் இறந்துபோய்விடுவான் என்று நான் நம்புகிறேன். அவனை நான் மீண்டும் பார்க்க இயலாது.

குழந்தைப் பருவத்தில் நீங்கள் எப்படி வளர்க்கப்பட்டீர்கள்?
எனது தந்தை கசகஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள பெரிய தொழில் நகரமான கரகண்டாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றிவந்தார். ஆனால், இயற்கையாகவே அந்த இடத்தில் நான் வசதியாக உணர்ந்தேன். நான் பலமுறை ஸ்டெப்பி புல்வெளிக்குச் சென்றுவந்தேன். அது கடலைப்போல பரந்த புல்வெளி. அங்கே சூரியன் மறைவதையும் சந்திரன் எழுவதையும் ஒரே நேரத்தில் காணமுடியும்.
எனக்கு விலங்குகள் மீது விருப்பம் இருந்ததால் நான் ஒரு உயிரியலாளராக ஆனேன். கரகண்டா மாகாண பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர் நான் சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் ஆய்வில் ஈடுபட்டேன். செல்கள் மற்றும் குரோமோசோம்கள் குறித்த மரபீனி ஆய்வில் எனக்கு ஆர்வம் இருந்தது. அதிலும் குறிப்பாக நீர்நில வாழ்விகளான தவளைகள் ஆய்வுக்கு மிகவும் பொருத்தமானவைகளாக இருந்ததால் அவை குறித்து சிறப்புக் கவனம் செலுத்தினேன். அவை பஞ்சு போன்றவை. அவை எல்லாவற்றையும் ஈர்க்கும். அவற்றின்வழியே எல்லாமே கடந்துசெல்லும்.

கதிர்வீச்சுமா?
ஆம். பெரிஸ்த்ரோய்கா நடைமறைப்படுத்தப்பட்ட பின்னர் எங்கள் பகுதியில் அணு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதை அறிந்த நானும் எனது நண்பர்களும் எங்கள் பகுதியில் அதன் விளைவுகளை ஆராய முடிவுசெய்தோம். அப்பகுதியிலுள்ள மக்களும் கானுயிர்களும் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்த விரும்பினோம். இராணுவம் அப்பகுதியைவிட்டு வெளியேறியபின்னர் நாங்கள் செமிபாலாடின்ஸ்கிற்கு அருகிலுள்ள புல்வெளிப்பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொள்ள முடிவுசெய்தோம். எங்களிடத்தில் கதிர்வீச்சை அளவிடும் கருவி இருந்தபோதிலும் முறையான பாதுகாப்பு உடைகள் இல்லை. நாங்கள் சாதாரணமான விளையாட்டு உடை, கையுறை, பூட்ஸ் செருப்புகளையே அணிந்திருந்தோம். முகமூடிகளை அணிந்திருந்ததோடு எங்கள் முடிகளையும் மறைத்திருந்தோம். அப்பகுதியில் முகாம் அமைத்து ஆய்வு மேற்கொண்டோம்.

ஆய்வில் நீங்கள் என்ன கண்டறிந்தீர்கள்?
முதன்முதலில் சென்றபோது நாங்கள் அங்கு இரண்டு மாதங்கள் தங்கியிருந்தோம். அது ஒரு நீண்ட இரவு போல தோன்றியது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் விண்ணிலும் நிலத்தடியிலுமாக சுமார் 500 அணு சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ஹிரோசிமாவில் வீசப்பட்டதைப் போல 20,000 அணுகுண்டுகளுக்கு சமமானதாகும். நாங்கள் முதன்முதலாக அப்பகுதிக்குச் சென்றபோது சோதனைகளின்போது பயன்படுத்தப்பட்ட எண்ணற்ற பழைய இராணுவ வாகனங்களும் கருவிகளும் விமானங்களும் டாங்கிகளும் அங்கு திறந்தவெளியில் கைவிடப்பட்டிருப்பதையும் அவை எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் பார்த்தோம். அது ஒரு திறந்தவெளி குப்பைத்தொட்டி போல காணப்பட்டது.
அப்பகுதியிலுள்ள மக்கள் அங்குள்ள கதிரியக்கமுடைய பொருட்களை பழைய இரும்பிற்கு விற்றனர் அல்லது தமது வீடுகளிலோ, பண்ணைகளிலோ பயன்படுத்தினர். அவர்கள் தம்மால் தரமானது என்று நம்பப்பட்டவற்றை பயன்படுத்தினர். நாங்கள் உள்ளூர் பெண் மருத்துவர் ஒருவரை வழிகாட்டியாக அழைத்து சென்றோம். ஒருநாள் நாங்கள் சில தொலைபேசிக் கம்பிகளைக் கடந்துசென்றோம். அவற்றை எடுத்த அவர் அவை தரமானவை என்று கூறினார். அவை படைத் தளபதிகளாலோ பிற உயர் அதிகாரிகளாலோ பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம். எனவே அவற்றை எடுத்துச் சென்ற அவர் அவற்றை தனது வீட்டு தொலைபேசி இணைப்பிற்குப் பயன்படுத்தினார்.
அப்புல்வெளிப் பகுதியில் ஒரு நகரம்போல நிலத்தடியில் பெரிய பதுங்கு குழிகள் காணப்பட்டன. அவற்றைப்பற்றி உள்ளூர் மக்களுக்குத் தெரியும். இராணுவத்தினர் எரிபொருள் போன்றவற்றை அங்கே கைவிட்டுச்சென்றிருப்பதாகக் கூறிய அவர்கள் தமது டிராக்டர்களுக்காக அவற்றை எடுக்கலாயினர். வணிகர்கள் அப்பகுதியிலுள்ள இரும்பு அல்லாத, செம்பு போன்ற உலோகங்களை உருக்க உள்ளூர் மக்களைப் பயன்படுத்தினர். அந்த பதுங்கு குழிகளிலுள்ள இத்தகைய பொருட்களின் மதிப்பு பல இலட்சங்களாகும். கதிர்வீச்சைக் குறைக்கும் வகையில் ஒருமுறை இத்தகைய நிலத்தடி அணு சோதனை சுரங்கங்களை அமெரிக்கர்கள் மூடினர். ஆனால், அவற்றினுள் உள்ள விலைமதிப்புடைய உலோகங்களை எடுப்பதற்காக உள்ளூர் மக்கள் அவற்றைத் திறந்தனர்.

அப்பகுதியில் நீங்கள் என்ன ஆய்வு மேற்கொண்டீர்கள்?
நான் விலங்குகள் மற்றும் அவற்றின் பழக்கவழக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டேன். அணுசோதனைகளின் விளைவாக அவற்றின் செல்களில் என்னவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை அறிய விரும்பினேன். அப்பகுதியில் பின்புலக் கதிர்வீச்சானது ஒரு மணி நேரத்தில் 20,000 மைக்ரோராண்ட்ஜென்டாக இருந்தது. இது சாதாரண நிலையைவிட 2,000 மடங்கு அதிகமாகும். இதன்விளைவாக நீண்டகால நோக்கில் பல தலைமறைகளாக அப்பகுதியில் உள்ள விலங்குகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள எனக்கு அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. மிகச்சிறிதளவு கதிர்வீச்சால்கூட செல்களும் குரோமோசோம்களும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அடைவதை நாங்கள் கண்டறிந்தோம்.
இத்தகைய சோதனைகளுக்கு தவளைகள் மிகவும் சிறந்தவையாகும். ஏனென்றால் அவை கதிர்வீச்சை ஈர்க்கின்றன, அதோடு அவற்றின் குரோமோசோம்கள் அளவில் பெரியவையாகவும் இருப்பதால் பாதிப்பைத் தெளிவாகக் காண முடியும். நான் அணு சோதனை நடைபெற்ற இடத்திலிருந்து- குறிப்பாக நாங்கள் கண்டறிந்த ஒரு அணு ஏரியிலிருந்து தவளைகளைச் சேகரித்தேன். சாகன் ஆற்றின் வறண்ட படுகையான இப்பகுதியில்தான் 1965ல் பெரிய அணுவெடிப்பு சோதனைகள் நடைபெற்றன. அருகிலுள்ள இர்திஸ்க் ஆறானது கதிரியக்க தூசியால் மாசுபடுவதைத் தடுப்பதற்காக சாகன் ஆற்றின் ஓட்டம் தடுத்து அணைகட்டப்பட்டு ஒரு கதிரியக்க ஏரி உருவாக்கப்பட்டது. இராணுவப் பாதுகாப்புடன் இருந்த அந்த ஏரியில் உள்ள மீன்கள் அளவில் மிகவும் பெரிதாக இருந்தன. நாங்கள் அந்த ஏரியிலுள்ள மீன்கள், தவளைகள் மற்றும் ஊர்வனவற்றை சோதனைசெய்தோம்.

இப்படியொரு அணு ஏரி இருப்பது அனைவருக்கும் தெரியுமா?
இராணுவத்தினருக்கு அதுபற்றி தெரியும். ஆனால், நாங்கள் அப்பகுதிக்குச் செல்வது வரையிலும் படைத்துறை சாராத விஞ்ஞானிகளுக்கு அதுபற்றி ஏதும் தெரியாது. உள்ளூர் மக்களுக்கும் அப்படியொரு ஏரி அங்கே இருப்பது தெரியும். ஆனால், அது ஆபத்தானது என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் அதில் நீந்தினர், மீன்பிடித்தனர். அவர்கள் தமது கால்நடைகளை அங்கே மேயவிட்டனர்.
சரியோ தவறோ சோவியத் ஒன்றியம் உடைந்து சிதறிய பிறகு அதுவரையிலும் நாங்கள் செல்லாத பகுதிகளுக்கு எல்லாம் போகமுடிந்தது. ஆனால் குறைந்தளவு நிதி உதவியே இருந்ததால் அது சிக்கலான நேரமாக இருந்தது. கடைசியாக, மேக்ஆர்தர் அறக்கட்டளை மற்றும் ஐரோப்பிய அணு நிறுவனங்களிடமிருந்து பெருமளவு உதவிகள் பெற்றோம். அணு சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட சுழிய தளத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள முர்சிக் என்ற ஊரில் இரண்டு ஆண்டுகாலமாக ஆய்வுகள் மேற்கொண்டோம்.

ஆனாலும் நீங்கள் ஏன் ஆய்வு மேற்கொண்டீர்கள்?
இந்த ஆய்வின் விளைவாக சிறிதுகாலத்திலேயே நான் எண்ணற்ற அறிவியல்பூர்வமான விபரங்களைப் பெற்றேன். அதன்விளைவாக சிறிதளவு கதிர்வீச்சால்கூட மக்கள் பாதிக்கப்படுவதைக் கண்டறிந்தோம். ஆனால், அம்மக்கள் தம்மை சோதனைக்கூட எலிகளாக்கிக்கொண்டனர். சோவியத் ஒன்றியத்தின் குடிமக்கள் என்றவகையில் 70 ஆண்டுகாலமாக அம்மக்களுக்கு அரசிடமிருந்து ஓய்வூதியமும் பிற சமூக நலத்திட்டங்களும் கிடைத்தன. அங்கு அணுசோதனை நிறுத்தப்பட்டு- அந்த இடம் கைவிடப்பட்டதன் பின்னர் தமது உடல்நிலை சீர்கெட்டு வருவதை கண்டு அவர்கள் ஒவ்வொருவராக சிகிச்சைக்கு வருகின்றனர். மாறாக, விஞ்ஞானிகள் அம்மக்களை சோதித்து அறிவியல் தாள்களை எழுதினர். ஆனால், இவை ஏதும் அவர்களின் வாழ்வை மாற்றவேயில்லை. அணு சோதனைகளால் இவர்களின் வாழ்க்கை நச்சாக்கப்பட்டதுடன் அவர்களின் சமூக நிலையும் கேடடைந்தது. ஆனால், யாரும் அவர்களுக்கு உதவவில்லை. எனவே, நான் பொதுப்பணியில் இறங்கி அம்மக்களுக்கு உதவி, அவர்களின் வாழ்வை மாற்றத்தொடங்கினேன்.

நீங்கள் என்ன செய்தீர்கள்?
அவர்கள் வசிப்பதற்கென தூய்மையான நிலத்தைக் கொடுக்க என்னால் முடியவில்லை. எனவே, 1992ஆம் ஆண்டு நாங்கள் சூழல் மையம் என்ற சிறிய அமைப்பை உருவாக்கி மக்கள் தமது சுற்றுச்சூழல் உரிமைகளை பாதுகாத்துக்கொள்ளவும் தமக்கு உதவிகள் கோரவும் ஊக்குவித்தோம். நாங்கள் பயிலரங்குகள் மூலம் மக்களிடம் சட்டங்கள் குறித்தும் தகவல்களை எவ்வாறு பெறுவது என்றும் நிதிக்காக விண்ணப்பிப்பது மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் அதற்காக செயல்படுவது குறித்தும் எடுத்துரைத்தோம்.

மக்கள் ஏன் அந்த புல்வெளியைவிட்டு வெளியேறவில்லை?
அவர்கள் விரும்பவில்லை. இப்போதும் அப்பகுதியெங்கிலும் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் நீண்டகாலமாக அங்கே வசிக்கிறார்கள். அதோடு, கதிர்வீச்சும் எல்லா இடத்திலும் மிகஅதிகமாக இல்லை. அது சுழிய தளத்திற்கு அருகிலும் அணு ஏரிப்பகுதியிலும் மிக மோசமாக இருக்கிறது. பிற இடங்களில் அத்தனை மோசமாக இல்லை.

உங்கள் பணியை அரசு அங்கீகரிக்கிறதா?
அவர்கள் எங்களுக்கு உதவுகிறார்கள். நிதி உதவி அல்ல. அவர்கள் எங்களை தடுக்காமலிருப்பதே முக்கியமான பெரிய உதவிதான்.
அரசுக்குச் சொந்தமான நிறுவனம் உலகம் முழுவதிலும் இருந்து அணுக்கழிவை கசகஸ்தானுக்கு இறக்குமதி செய்ய திட்டமிட்டதற்கு எதிராக பெரியளவில் பிரச்சாரம் செய்தோம். அது இரசியாவிலிருந்து தொடர்வண்டி மூலம் வருவதாக இருந்தது. இந்த நச்சுக்கழிவு இறக்குமதி மூலம் பல்லாயிரம் கோடி ரூபாயை சம்பாதிக்க திட்டமிடப்பட்டது. அதில் ஒரு பகுதியை அக்கழிவை நச்சு நீக்கம் செய்ய பயன்படுத்தப்போவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தோம். முடிவில் நாடாளுமன்றத்தில் அத்திட்டம் முறியடிக்கப்பட்டது.

கசகஸ்தானிலுள்ள மக்களுக்கு இப்போது கூடுதல் சுதந்திரம் உள்ளதா?
ஆம். நாங்கள் சாதித்துள்ளோம். எனது தந்தை தெற்கு கசகஸ்தானிலிருந்து வந்தவர். அவர் இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டவர். ஆனால், போரின் பின்னர் ஸ்டாலின் ஆட்சி காரணமாக அவர் தான் பிறந்த ஊருக்குச் செல்ல விரும்பவில்லை. நிலக்கரி மற்றும் ஸ்டீல் தொழிற்சாலை நிரம்பிய கரகண்டாவிற்கு வந்த அவர் அங்கே எனது தாயாரைச் சந்தித்தார். ஆனால், தனது ஊருக்குச் சென்று உறவினர்களைச் சந்திக்க அவர் விரும்பவில்லை.
எனது வாழ்வில் முதன்முறையாக கடந்த ஆண்டு எனது தந்தை பிறந்த ஊருக்குச் சென்றேன். அங்குள்ள மக்கள் அவரை இன்னமும் நினைவு வைத்துள்ளனர். தனது வீட்டிற்குச் செல்லாமலேயே அவர் இறந்துபோனது எனக்கு மிக வருத்தமாக இருந்தது. எனவே, அவரது கிராமத்திலிருந்து சிறிது தூய மண்ணை எடுத்துவந்து அவரது கல்லறையில் வைத்தேன். அது வடக்கிலுள்ள கதிரியக்க மாசுபட்ட மண் போன்றதல்ல; தூய மண்.
————————————-
(asuran98@rediffmail.com)

Series Navigation

அசுரன்

அசுரன்