அணுவாற்றல் அறிவுதான் விஞ்ஞான அறிவா ?

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

அசுரன்


அணுவாற்றல் குறித்து ஜெயபாரதன் எனக்கு எழுதிய விடையில் பல்வேறு அம்சங்களை ‘வசதியாக ‘ மறந்துவிடுகிறார். அதிகபட்ச ஆபத்தான கூறுகள் இருப்பதால் அணுவாற்றல் வேண்டாம்; அதிலும் இத்தகைய ஆபத்துகளற்ற, மலிவான, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்கள் தாராளமாக இருக்கும் சூழலில் ஏன் அணுவாற்றல் தேவை என்பது ஒரு கேள்வி. இதை மறுக்காத ஜெயபாரதன், இதற்கு ‘திறமைமிக்க விஞ்ஞானிகளும், பொறியியல் நிபுணர்களும், நுணுக்கமான யந்திர சாதனங்களும் இந்தியாவுக்குத் தேவை ‘ என்கிறார். மேலும், ‘அவற்றை உருவாக்க கன யந்திரத் தொழிற் துறைகள் முதலில் அமைக்கவேண்டும் என்றோ, அவற்றை டிசைன் செய்ய ஆழ்ந்த விஞ்ஞானப் பொறியியல் அறிவு அவசியம் என்றோ அசுரன் எப்போது அறிந்துக் கொள்ளப் போகிறார் ? ‘ என்று கேட்கிறார்.

சரி, இப்போது இதற்கு என்ன குறை ?. மனிதனை விண்ணுக்கு அனுப்பப்போகிற, 2020ல் வல்லரசாகப்போகிற ஒரு நாட்டில் இப்போது இவையெல்லாம் இல்லையா, இவற்றை உருவாக்கும் திறன் படைத்தவர்கள் இல்லையா ?. இது ‘பாரத ‘ விஞ்ஞானிகளுக்கு மாபெரும் சவால் அல்லவா ?. பல்லாயிரம் கோடி ரூபாய்களைக் கொட்டி தேசிய நதிகளையெல்லாம் இணைக்கப்போகிற ஒரு நாட்டில் இத்தகைய ‘சின்னச்சின்ன ‘ வேலைகளைச் செய்ய பணம், விஞ்ஞானிகள் எல்லாம் இல்லையா ?.

மேலும், நான் அணுவாற்றல் துறையின் இணையதளத்தைப் படிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார் ஜெயபாரதன். அணுவாற்றல் துறையின் இணைய பக்கங்களைப் படிப்பதற்கும் அக்கருத்துகளை ‘அப்படியே ‘ எடுத்துக்கொள்வதற்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது. அவர்களின் இணைய பக்கங்களில் இருப்பவை மட்டுமே உண்மைகளல்ல. அதற்கு வெளுயேயும் உண்மை இருக்கிறது. வீரப்பனை என்கவுண்டரில் போட்டுத்தள்ளியதை நம்பியவர்களால் மட்டுமே நம் அரசுத்துறைகளின் அறிக்கைகளையும் அப்படியே எடுத்துக்கொள்ளமுடியும்.

‘இன்றைய நாள்வரை (டிசம்பர் 1, 2004) இந்திய அணு உலைகளில் கதிர்வீச்சுத் தீண்டி, ஒருநபர் கூட உயிரிழந்ததில்லை என்பது எனது அழுத்தமான திருவாசகம் ‘ என்கிறார் ஜெயபாரதன். இந்திய அணுஉலைகளில் செர்னோபில் போலொரு விபத்து நடைபெறாததால் உடனடி இறப்பாக எதனையும் நம்மால் சுட்டிக்காட்ட இயலாது. ஆனால், இந்திய அணுஉலைகளின் கதிர்வீச்சால் இறப்புகள் நிகழ்ந்துவருவதான செய்திகளை நாம் அவ்வப்போது அறிய முடிகிறது.

எடுத்துக்காட்டாக ஜெயபாரதனின் நேசிப்பிற்குரிய கல்பாக்கத்தையே எடுத்துக்கொள்வோம். கல்பாக்கத்தில் அண்மையில் பதிவாகிவரும் மல்டிபிள் மைலோமா (multiple myeloma) எனும் புற்றுநோய்வகை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. மெட்ராஸ் அணுமின் நிலையத்தில் பணிபுரிந்துவந்த மோகன்தாஸ், இந்திராகாந்தி அணுவாராய்ச்சி மையத்தில் பணியாற்றிய பொன்னையா ஆகியோரும் கல்பாக்கம் நகரியத்தில் வசித்துவந்த சுந்தரம்மாள், ஆகியோர் இதனால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். கடைசியாக 28.09.2004 அன்று கல்பாக்கம் நகரியத்தைச் சேர்ந்த 66 வயதான இராஜலெட்சுமி என்ற அம்மையாரும் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். இந்நோயைப்பொறுத்தளவில் ஒரு இலட்சம் பேரில் 2.4 பேருக்கு வரலாம் என்பது ஒரு கணக்கு. வெறும் 22,000 பேர் மட்டுமே வசிக்கும் கல்பாக்கத்தில் மட்டும் இதுவரை 4 பேர் இந்நோயால் இறந்திருப்பது கதிர்வீச்சுக்கும் இவர்களின் சாவுக்கும் தொடர்பிருப்பதை மெய்ப்பிப்பதாக உள்ளது. இதனை கல்பாக்கம் விஞ்ஞானிகளும்கூட இப்போது சற்று ‘சீரியசாக ‘ பார்க்கத் தொடங்கியிருப்பதாக கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி தெரிவிக்கிறார். இந்த மல்டிபிள் மைலோமா புற்றுநோய் அதிக கதிரியக்கப் பரவல் காரணமாக வரும் நோய் என இங்கிலாந்தில் உள்ள மருத்துவர்கள் 1986ம் ஆண்டில் நிரூபித்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

2003 ஆம் ஆண்டு நவம்பரில் அணுவாற்றல் ஒழுங்குபடுத்தல் வாரியம் வெளுயிட்டுள்ள அறிக்கையில் இரண்டு பணியாளர்கள் மட்டுமே அதிகளவு கதிரடி வாங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதன்படி, மெட்ராஸ் அணுமின் நிலையத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி 151.3 மில்லி சீவெர்ட் (அனுமதிக்கப்பட்ட அளவு 30 மில்லி சீவெர்ட்) கதிரடி வாங்கியிருப்பதாகவும், நரோரா அணுமின் நிலையத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி 30.97 மில்லி சீவெர்ட் (அனுமதிக்கப்பட்ட அளவு 15 மில்லி சீவெர்ட்) கதிரடியும் வாங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அப்படியே ஏற்றுக்கொள்ள ஜெயபாரதன் தயார். நான் தயாராக இல்லை. ஏனென்றால், எம். செல்வகுமார் என்றப் பணியாளர் குறித்த விபரம் இதில் இல்லை. 15.05.2002 முதல் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றி வந்த இவர் 09.07.2002 ல் பிளாஸ்கில் இருந்து வெளுயே எடுத்து Cotress Spring என்பதைத் தூய்மையாக்கியபோது கதிரடி வாங்கினார். அவரது இரத்த வெளிளையணுக்களின் எண்ணிக்கையைப் பார்த்த கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி இந்தளவுக்கு குறையவேண்டுமானால் அவர் 20 ரெம் அளவுக்கு கதிரடி வாங்கியிருக்கவேண்டும் என்று தெரிவிக்கிறார். அவர் இதுதொடர்பாக தொடர்ந்து துறையைத் தொடர்புகொண்டுவருகிறார். ஆனால், அவரைப் பற்றிய விவரமே AERB அறிக்கையில் இல்லை. இதுதான் இந்திய அணுஉலைகள் கண்காணிக்கப்படும் யோக்கியதை. இவர்களின் அறிக்கைகளைத்தான் ‘திருவாசகமாக ‘ எடுத்துக்கொண்டிருக்கிறார் ஜெயபாரதன்.

நிறுவப்பட்ட 15 ஆண்டுகாலத்தில், 40 மெகாவாட் திறனுடைய கல்பாக்கம் FBTR உலை 2000ஆம் ஆண்டில் 52 நாட்கள் தொடர்ச்சியாக ஓடியதுதான் ‘பெரிய ‘ சாதனை என்பதை எடுத்துரைத்து, இப்படியான ஒரு தோல்விகரமான உலையை மாதிரியாகக் கொண்டு 3000 கோடி ரூபாய் முதலீட்டில் 500 மெகாவாட் திறனுடைய ஒரு உலையை அமைப்பது எந்தவகையில் நியாயம் என்று கேட்டால் (உண்மையில் எவ்வளவு உற்பத்தியாகும் என்று கட்டி முடிக்கப்பட்டு இயங்கிய பின்னர்தானே தெரியும்) ‘அணுவியல் விஞ்ஞான சூன்யமான அசுரன் ‘ இதுகுறித்துப் பேசக்கூடாது என்கிறார் ஜெயபாரதன். வெற்றிகரமான ஒரு திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுவதைத்தான் நாம் சாதாரணமாக எல்லா இடங்களிலும் பார்க்க முடியும், அதற்கு மாறான இத்தகைய முயற்சிகளின் பொருத்தப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்க அணுவியல் அறிவு தேவையில்லை.

உலகளவில் வேக அணு உலைகளின் நிலையைப் பாருங்கள்.

அமெரிக்காதான் முதன் முதலில் வேக அணு உலையை 1951 -ல் நிறுவியது. 1955-இல் கட்டுப்பாடின்றி இயங்கி, மையப்பகுதி உருகி அழிந்தது அந்த உலை. 1963 -இல் ஃபெர்மி என்ற மற்றொரு வேக அணு உலை நிறுவப்பட்டது.1966 அக்டோபர் 5 ஆம் நாள் குளிர்விப்பானில் ஏற்பட்ட அடைப்பால் பெரும் விபத்து ஏற்பட்டது. பின்னர் 1972 வரை தனது திறனில் 15% மட்டுமே இயங்கி மூடப்பட்டது. 1976-ல் கிளிஞ் ரிவர் வேக அணு ஈனுலை கட்டுமானப் பணிகள் தொடங்கி, 1983-ல் பணிகள் கைவிடப்பட்டன. தற்போது அமெரிக்காவில் இரு பரிசோதனை வேக அணு உலைகள் மட்டுமே உள்ளன.

இங்கிலாந்தில் இருந்த இரு வேக அணு உலைகளும் தொடர்ச்சியாகச் சந்தித்து வந்த விபத்துகள் காரணமாக மூடப்பட்டன. பிரான்சில் சிறிய பரிசோதனை உலை முதல் உலகிலேயே பெரிய வப்பர் ஃபீனிக்ஸ் வேக அணு உலை வரை விபத்துகள் சர்வ சாதாரணமாக நடந்தன. 1242 மெகாவாட் திறனுடன் தயாரிக்கப்பட்ட வப்பர் ஃபீனிக்ஸ் அது இயங்கிய 12 ஆண்டுகளில் தயாரித்த மொத்த மின்சாரமுமே சுமார் 600 மெகாவாட்தான்.

ஜெர்மனியும் கல்கார் என்ற இடத்தில் வேக அணு உலையைக் கட்டத்தொடங்கியது. பணிமுடியும் தருவாயில் 1991-ல் உலையில் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படும் சோடியத்தில் தீ பிடித்து பெரும் விபத்து ஏற்பட்டு, கைவிடப்பட்டது. அந்த இடத்தில் இப்போது ஒரு பொழுதுபோக்கு பூங்காதான் இருக்கிறது.

சப்பானில் ஜோயோ என்ற பரிசோதனை வேக அணு உலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அனுபவத்தைக் கொண்டு (நம்மைப் போல) 300 மெகாவாட் திறனுடன் மோஞ்சு வேக அணு உலை கட்டப்பட்டது. 1995-ல் இயங்கத் தொடங்கிய இது சில மாதங்களிலேயே அதன் குளிர்விப்பானாகிய சோடியம் குழாய்களில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூடப்பட்டது.

‘இயற்கையான குறைந்தபட்ச கதிர்வீச்சின் நீண்டகாலப் பாதிப்பு என்ன என்று புள்ளி விவரங்கள் உலகில் இன்னும் சேமிப்பாகவில்லை! ‘ என்கிறார் ஜெயபாரதன். எனவே ஆபத்தை புறக்கணித்துவிடமுடியாது. கேரளத்திலும் குமரிமாவட்டக் கடலோரப்பகுதிகளிலும் உள்ள இத்தகைய கதிர்வீச்சின் பாதிப்பு குறித்து 1990ஆம் ஆண்டிலேயே திரு. வி.ற்றி. பத்மனாபன் ஆய்வுசெய்து அறிக்கை வெளுயிட்டுள்ளார் என்பதை மீண்டும் ஜெயபாரதனுக்கு நினைவூட்டுகிறேன்.

‘திரும்பவும் நான் அசுரனுக்குக் கூறுகிறேன்: செர்நோபிள் அணுமின் உலைபோன்று, இந்திய அணுமின் நிலையங்களில் ஒன்றேனும், மனிதத் தவறாலோ அன்றி யந்திரப் பழுதாலோ வெடித்துக் கதிரியக்கத்தை தாரணி எங்கும் பரப்பாது. அதைப் புரிந்து கொள்பவர் வெறும் அறிவாளியாக மட்டும் இருந்தால் போதாது. ஓரளவு விஞ்ஞான அறிவும், திறந்த மனதும் ஆப்பிள் எது, ஆரஞ்சு எது என்று வேறுபாடு காணும் கூரிய மதியும் வேண்டும் ‘ என்கிறார் ஜெயபாரதன்.

அவர் முதலில் இதுகுறித்து எனக்குப் பாடம் எடுப்பதற்குப் பதிலாக இந்திய அரசுக்கும் அரசுதுறைகளுக்கும் நம்பிக்கையூட்டும் செயல்களில் ஈடுபடலாம். ஏனென்றால் எந்தவொரு காப்பீட்டு நிறுவனமும் அணுஉலை விபத்தால் ஏற்படும் இறப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதில்லை. அதோடு இந்திய அணுஉலைகளை காப்பீடு செய்ய இந்திய அணுவாற்றல் நிறுவனம் மேற்கொண்ட முயற்சியை நியூ இந்தியா அஸ்யூரன்சு நிறுவனம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. ஜெயபாரதன் தனது அணு அறிவியல் அறிவைப் பயன்படுத்தி, இவர்களுக்கு நம்பிக்கையூட்டி, காப்பீடு வழங்கச் செய்யலாம். நமது அரசுத்துறையே ஆப்பிளையும் ஆரஞ்சையும் பிரித்தறியத்தெரியாமல் தவிப்பது எனக்கு பெரும் வருத்தமாக இருக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளில், கார் விபத்தில் மட்டும் அமெரிக்காவில் 2,500,000 மாந்தர் உயிரை இழந்துள்ளனர்! என்று கூறி ஆயினும் கார் உற்பத்தியோ அல்லது கார் ஓட்டுதலோ அமெரிக்காவில் குறைந்துள்ளனவா ? பாமரத்தனமாகக் கேட்கிறார் ஜெயபாரதன். கார் விபத்தில் யாராவது செத்துப்போனால் அது அவர்களோடே யோயிற்று. ஆனால், தலைமுறை தலைமுறையாக பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து உயிர் பறிப்பதல்லவா அணுக்கதிர்வீச்சு!.

உன் குரல் ஓங்கிப் பிறர் காதில் பட வேண்டுமானால், நிச்சயம் கையில் நீளமான ஒரு பிரம்பு தயாராக இருக்க வேண்டும்! என்கிறார் ஜெயபாரதன். ஆனால் அதன்படி தமிழர்கள் குரலெழுப்பினால் ‘ஒட்டு மரங்களில் கூட்டுப் பந்தலாய் நின்று கொண்டிருக்கும் பாரத நாட்டின் குடியரசு, ஒற்றைக் காலைப் பிடிங்கி விட்டால் சரிந்து போய்விடும் ‘ என்று ஒப்பாரி வைக்கிறார் ஜெயபாரதன். ‘அவர்கள் ‘ கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு இதாவது கிடைத்ததே என்று நாம் திருப்திபட்டுக்கொள்ள வேண்டுமாம்ி. என்ன அருமையான ஒருமைப்பாட்டுத் திட்டம்!, வாழ்க பாரதம்!.

நான் புலிக்கொடியைப் புகழ்ந்துரைப்பது பிற்போக்குவாதம்; மூன்றாய் துண்டுபட்ட பின்னரும் ‘பழைய பாரதத்தை ‘ அவர் போற்றுவது மட்டும் தேசபக்தியாம்!.

‘விடுதலை இந்தியாவில் மிகுந்த விஞ்ஞான அறிவு வேண்டாம் என்று கூறும் முதலான பசுமைவாதியும், வெற்று அறிவாளியும் அசுரன் ஒருவராகத்தான் இருக்க முடியும்! ‘ என்று எனக்கொரு முத்திரை குத்தியுள்ளார் ஜெயபாரதன். பாவம், அணுவாற்றல் குறித்த அறிவு மட்டும்தான் விஞ்ஞான அறிவு என்று அவர் நினைத்துக்கொண்டிருந்தால் நாம் என்ன செய்ய முடியும் ?!. ‘யந்திர யுகத்திற்கு வந்துள்ள இந்தியா மீண்டும் பசுமை யுகத்துக்கு மீளாது ‘ என்பது அவரது உறுதியான நிலைப்பாடு. ‘பசுமை ‘ என்பதை அவர் எப்படியாகப் புரிந்துகொண்டிருக்கிறார் என்பதிலேயே இது எனக்கு ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. அணுவாற்றல் இல்லாத உலகம் பசுமை இல்லாத உலகம் என்று அவர் நினைத்துக்கொண்டிருப்பதுதான் பெரும் வேடிக்கை.

கடைசியாக ஒரு செய்தி. நான் இப்போது வாழ்ந்துகொண்டிருப்பது ‘ஓரளவுக்கு ‘ சனநாயக நாடு என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், அணுவாற்றல் துறையினருக்கு அத்தகைய நினைப்பெல்லாம் இல்லை. அதற்கு உதாரணம் கல்பாக்கத்தில் தற்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வேக அணுஉலை. இந்த உலை 3492 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. இதன் கட்டுமானத்தை கடந்த அக்டோபர் 23ஆம் நாள் பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கிவைத்துள்ளார். இதில் என்ன சிக்கல் என்கிறீர்களா ?

இந்த அணு உலை அமைப்பது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் கருத்தறியும் கூட்டங்கள் பல முறை ஒத்திவைக்கப்பட்டு இறுதியாக 2001 சூலை 27 ஆம் நாள் காஞ்சிபுரத்தில் நடத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இராஜாராமன் தலைமையில் மாவட்ட சுற்றுச்வழல் பொறியாளர் ஆர்.கண்ணன் இக்கருத்தரங்கை நடத்தினார். ஒரு அணுஉலை அமைப்பது தொடர்பாக மக்கள் கருத்தறியும் மக்கள் மன்றம் கூட்டப்பட்டது இந்திய வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாகும்.

அப்போது அரங்கமே நிரம்பி வழிந்தது. இந்திராகாந்தி அணு ஆற்றல் மைய இயக்குநர் எஸ்.பி. போஜே, இணை செயலர் சுதா பாவே உள்ளிட்ட சுமார் 20 விஞ்ஞானிகளும் பல்வேறு பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்களும் சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு (ஈ.ஐ.ஏ.) செய்த மெக்கான் நிறுவன விஞ்ஞானிகளும் கல்பாக்கம் உள்ளடங்கிய செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம், கல்பாக்கம் வட்டார மீனவர்கள், விவசாயிகள், அரசுசாரா அமைப்பினர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த சுற்றுச்சூழல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் இதில் அடக்கம்.

முதலாவதாக, அயப்பாக்கம் ஊராட்சி உறுப்பினர் நாகமுத்து பேசினார். அவர், வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் இந்த உலையை வரவேற்கிறேன் என்றார். பின்னர் பேசிய சுமார் 30 பொதுமக்களில் ஆதரித்த ஒரேநபர் அவர் மட்டுமே. சுமார் 10 பேர் பேசிய நிலையில், ‘புரியாமல் பேசிவிட்டேனே, இப்படியெல்லாம் தெரிந்திருந்தால் நான் ஆதரித்துப் பேசியிருக்க மாட்டேனே ‘ என்றார் அவர்.

செங்கல்பட்டுத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (பா.ம.க) திருக்கச்வர் ஆறுமுகம், ‘நான் கல்பாக்கம் உள்ளடங்கிய தொகுதியின் உறுப்பினர். ஆனால், எனக்கே இப்படியொரு மக்கள் கருத்தாய்வு நடத்தப்பட இருப்பது தெரியவில்லை. 2 நாட்களுக்கு முன்பு சில அக்கறையுள்ள சுற்றுச்சூழல் வாதிகள்தான் இது குறித்து என்னிடம் தெரிவித்தனர். இல்லையென்றால் இதில் பங்கேற்கும் வாய்ப்பை நான் இழந்திருப்பேன். கல்பாக்கத்திற்கு அருகிலுள்ள ஒய்யாலிகுப்பம் உள்ளிட்ட சில பகுதிகளில் கடலரிப்பு ஏற்பட்டு வருகிறது. மீனவர்களின் வீடுகளும் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட கடலரிப்பு பகுதியில் எப்படி இந்த அணு உலையை அமைக்கப் போகிறீர்கள் ?. அதிகாரிகள் இப்பகுதி நிலநடுக்க எண் 2-ல் வருவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் எனக்குத் தெரிந்தவரையில் கல்பாக்கம் அணுமின் திட்ட வளாகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நிலநடுக்க அளவுக் கருவிகூட இல்லை ‘ என்றார்.

‘பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர்கள் ‘ அமைப்பைச் சேர்ந்த டாக்டர் இரா. இரமேஷ் பேசுகையில், ‘இந்த உலை தொடர்பாக ‘மெக்கான் ‘ நிறுவனம் அளித்த சூழல்தாக்க மதிப்பீட்டாய்வை விமர்சித்து, அதன் அறிவியல் பூர்வமாக தவறான முடிவுகளை சுட்டிக்காட்டி ‘பிஎஃப்பிஆர்-வாழ்வுக்கு அச்சுறுத்தல் ‘ என்று தான் எழுதிய அறிக்கையை அளித்தார். அதில் சூழல் தாக்க மதிப்பீட்டாய்வின் குறைபாடுகள், போதாமைகள், தவறுகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருந்தன.

இப்படியாக, முழுமையாக எதிர்ப்பை சந்தித்த பின்னரும் அமைக்கப்படுகிறது இந்த உலை.

இப்படி அமைப்பதாக இருந்தால் பின்னர் எதற்காக மக்கள் கருத்தைக் கேட்டார்கள் ?. இதுதான் ‘பாரத் மாடல் ‘ சனநாயகமோ ?.

இதைவிட மற்றொரு வேடிக்கை, மக்கள் மன்றம் கூடிய மறுநாளே கல்பாக்கத்தில் விபத்துகால மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நடத்தப்பட்டது. (தாம் எந்தளவுக்கு தயாராக இருக்கிறோம் என்பதை மக்களுக்கு நிரூபித்துக் காட்டுகிறார்களாம்!). அப்போது பொதுமக்கள் தமது உடல்நலக் கேடுகள் குறித்தும் வேலைவாய்ப்பு குறித்தும் கேட்டு அதிகாரிகளை உலுக்கினர். இப்பகுதிகளிலுள்ள சில இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை அறிக்கை அளிக்கப்படாததால் அவர்கள் வேலைக்காக வெளுநாடு செல்ல இயலாமல் தவிப்பதாகத் தெரிவித்தனர். ‘எங்கள் உடலில் வழக்கத்தைவிட அதிக கதிரியக்கம் இருக்கிறது. யார் வேலை தருவார்கள் ? ‘ என்றார் பன்னீர் செல்வம் என்ற கூலித் தொழிலாளி.

மேலும், இந்த ஒத்திகையின்போது நிலைய இயக்குநரின் ‘வயர்லஸ் ‘ உட்பட பல ‘வயர்லஸ் ‘களும் வேலை செய்யவில்லை. மற்றொருமுறை இப்படி ஒத்திகை நடத்தப்பட்டபோது அறிவிப்புக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே காத்திருக்க அவருக்குச் சொல்லாமலேயே ஒத்திகையை நடத்தி முடித்தார்கள். (மறந்துவிட்டார்களாம்). இதையெல்லாம் பார்த்த மக்களிடம், முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட ஒத்திகையைக்கூட ஒழுங்காக நடத்த இயலாதவர்கள் உண்மையிலேயே விபத்து நடந்தால் நம்மை எப்படிக் காப்பாற்றுவார்கள் என்று சந்தேகம் எழுவதில் என்ன தவறு ?.

மக்களுக்கு அணுவியல் அறிவு இல்லாமல் இருக்கலாம் அதற்காக அவர்களின் வாழும் உரிமையைப் பறிப்பது எவ்வகையில் நியாயம் ?.

படங்கள் உதவி: DOSE

(asuran98@rediffmail.com)

Series Navigation

அசுரன்

அசுரன்