அட்மிஷன்

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

ராமச்சந்திரன் உஷா


(அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் தேர்வான கதை)

தீபுவின் திறமையில் நம்பிக்கை இருந்தாலும், செய்தி உறுதியானதும் மகிழ்ச்சியில் மனம் நிறைந்தது. ஸ்டான்போர்ட் யூனிவர்சிட்டியில், எம்.பி. ஏ சீட். மகளை உடனே பார்க்க வேண்டும் என்று உடலும், உயிரும் துடித்தது ஆறுமுகராஜாவுக்கு. ”ஏங் கண்ணு, நாலு நாளு இந்தியா வந்துட்டுப் போகக்கூடாதா?” குரலில் ஏக்கம் வழிந்தது. தீபு மெல்ல சிரிப்பது கேட்டது.

” ஏங் கண்ணு… சரிதான். கோய்ம்தூர் ஸ்லாங்க் திரும்ப வந்துடுச்சா? கமான் டாட்! எவ்வளவு வேலை இருக்குன்னு உங்களுக்கு தெரியாதா?”

”சரி மம்மிக்கு சொல்லிட்டீயா? சேலம் போயிருக்கா. உன் அம்மத்தாவுக்கு நாளைக்கு ஐ ஆபரேஷன்”

”சொல்லி ஆச்சு” என்றாள், ” உங்க புது வேலை எப்படி இருக்கு? ரெண்டே வருஷம், நானும் வந்துடரேன், சென்னைக்கு இல்லே, நேரா பொள்ளாச்சிக்கு. ஏழை குழந்தைகளுக்காக ஒரு இலவச அல்ட்ரா மாடர்ன் ஸ்கூல். ஸ்ரீலதா, ராகவ், ஜான், கெவின்னு எல்லாரும் பக்காவா பிளான் பண்ணிக்கிட்டு இருக்காங்க. உங்க பங்குக்கு எவ்வளவு தருவீங்க?” குரலில் உற்சாகம் வழிந்தது.

”பார்க்கலாம், பார்க்கலாம். நீ மொதல்ல புறப்பட்டு வா”

”எனக்கும் எல்லாரையும் பார்க்கணும் போல இருக்கு. ஐ வில் டிரை. அட்மிஷன் லெட்டர் உங்களுக்கும் ஒரு காப்பி மெயில் பண்ணியிருக்கேன் பாருங்க” என்று சொல்லி போனை வைத்தாள்.

ராஜா அப்படியே உட்கார்ந்திருந்தார்.

குளிரூட்டப்பட்ட அறையின் கண்ணாடி தடுப்புகளைத் தாண்டி, அம்மா அழைக்கும் குரல் கேட்டு நினைவுலகத்து வந்தார். கதவைத் திறந்து எட்டிப் பார்த்தால், மாடிப்படி வளைவில் மூச்சு திணறலுடன் அவரின் தாய் வள்ளி நின்றிருந்தார். வேகமாய் படியில் இறங்கி, தாயின் கையைப் பிடித்து கீழே இறங்கிக் கொண்டே, ”ஆரூம் இல்லியா? நீங்க எதுக்கு மாடி ஏறுனீங்க? இன்னுமா காலிங்பெல் சுட்சு ரிப்பேர் செய்யலே? ரமேஷ் எங்கே?” சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுதே, வாசல் பக்கத்தில் இருந்து, ஐய்யன் குரல் பெரியதாய் கேட்டது.

”ஐயிரு ஒருத்தர், அவரு பேரனுக்கு காலேசு அட்மிசன்னு நேத்தும் வந்திருந்தாரு. நான் பேசி அனுப்பிட்டேன். இன்னைக்கு காலைல இருந்து, கேட்டு வாசல்ல நின்னுக்கிட்டு இருக்காரு. பாவம்! உங்கய்யன் ராவுடி பண்ணிக்கிட்டு இருக்காரு. வெசையா வா”

வேகமாய் வாசல் பக்கம் போனால், கேட்டு கதவைப் பிடித்துக் கொண்டு ஒரு கிழவரும், கூடவே ஒரு பையனும் நின்றிருந்தனர். ஏனோ அவரின் கால்கள் தயங்கின. யோசனையுடன் நடந்தார்.

” காலேஜூ அட்மிஷன் சமாசாரமாம். வூட்டு பக்கம் வரக்கூடாதுன்னா, ரெண்டு நாளாய் வந்துக்கிட்டு இருக்காரு” ஐயனின் குரல் புகார் கூறியது.

ஒல்லியான உருவம். உயரம் காரணமாய், கூன் விழுந்த உடல். கண்களில் ஒளி இல்லாமல், பஞ்சடைத்திருந்தது. கூட இருந்த பையனின் உருவத்திலும், உடையிலும் ஏழ்மை. கிழவனார் தடுமாற்றமாய் கையைக் கூப்பினார்.

ராஜா யோசனையுடன் அவர்களைப் பார்த்தவர், ” முந்தாள் காலைல நீங்க ரெண்டு பேரும் ஆடிட்டர் கோபாலகிருஷ்ணன் வீட்டு வாசல்ல நின்னுக்கிட்டு இருந்தீங்க தானே?” என்றுக் கேட்டார்.

கிழவர் தலையை ஆட்டிக் கொண்டே, ”இவன் என் பேரன். போன வருஷம் ஒரு ஆக்சிடெண்டுல எம்பொண்ணும், மாப்பிள்ளையும் தவறிட்டாங்க. தொண்ணூத்து மூணு பர்சண்டேஜூ வாங்கியிருக்கான். கவர்மெண்ட் கோட்டால உங்க காலேஜ்ல சீட் கெடச்சிருக்கு. ஆனா பணம் போறலை. எனக்கு புரோகிதம்தான் தொழில். அங்க இங்க உதவி கேட்டு, பாதி பணம் பொறட்டிட்டேன். டிட்டர் மிஸஸ்தான், உங்களைப் பார்த்து பேசினா ஏதாவது வழிப் பொறக்கும்னு சொன்னாங்க”

”ஐயிருங்கதான் ஓஹோன்னு இருக்காங்களே. மோபெட் என்னா? மோட்டார் சைக்கிள் என்னான்னு கொழிக்கிறாங்க. நீங்க பஞ்சம் பாடுறீங்க?” ஐய்யன் குரலில் நக்கல் வழிந்தது.

”எனக்கு சமஸ்கிருதம் எல்லாம் தெரியாது. ஏதோ நாலு மந்திரம் உருப்போட்டு, நல்லது கெட்டது செஞ்சி வைப்பேன். வயசாச்சு, யாரும் என்னைக் கூப்பிடுரதில்லை. இவன் அத்தை வீட்டுல இருந்து படிச்சிண்டு இருந்தான். பாவம், அவாளுக்கும் கஷ்ட ஜீவனம். இவன காலேஜ்ல சேர்த்துட்டா என் கடமை முடிஞ்சிது ” கிழவனார் தடுமாறி கீழே விழப்போனார். பேரன் அவரைப் பிடித்து ஓரமாய் உட்கார வைத்தான்.

துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டு, ” இவன் அம்மாவுக்கு பையனை இன்ஜினியர் ஆக்கணும் கொள்ள ஆசை. பாவம்! சொல்லிக்கிட்டே இருந்தா. ஏதோ கடைசியா உங்கக்கிட்ட முயற்சி செஞ்சி பார்க்கலாம்னு கெளம்பிட்டேன். நீங்க ஏதாவது பார்த்து செஞ்சா உண்டு” அப்படியே சாய்ந்து உட்கார்ந்தார்.

”சார்! சிஏ படிக்கலாம்னு இருக்கேன். ஸ்டைஃபண்டும் கிடைக்கும். செலவும் அதிகமில்லை. அப்படியே கரஸ்ல பீகாம் சேர்ந்துடுவேன். உங்கள தொந்தரவு செஞ்சதுக்கு சாரி சார்” பையன் குரலில் தயக்கம். அவன் கையில் இருந்த சான்றிதழ்களை வாங்கிப் பார்த்தார் ராஜா.

கையில் இருந்த செல் பேசியை எடுத்து எண்ணைத் தட்டியவர், ” குமார்! குருபிரசாத்துன்னு பேரூ. நம்ம காலேஜ்ல அட்மிஷன் கிடச்சிருக்கு. ஏழை பையன், ஆர்ஃபன் வேற. ப்ஃரீ சீட்ல அட்மிஷன் போட்டுடு.ஹாஸ்டலும்தான்! பையன் கிட்ட லெட்டர் தரேன்” செல்லை அணைத்தவர், ” ஐயா பெரியவரே, சந்தோஷம்தானே? கொஞ்சம் நேரம் இந்த பெஞ்சுல ஒக்காந்து இருந்துட்டு, நம்ம வண்டியிலேயே காலேஜ்க்கு போய் சேர்ந்துடுங்க. நல்லா படிக்கணும் என்னா?”” என்று பையன் முதுகைத் தட்டிவிட்டு, தாயைப் பார்த்து” பாலு மோரு ஏதாவது குடுங்கம்மா. டிரைவர இவங்களை காலேஜ்க்கு கூட்டிக்கிட்டு போயி, அப்புறம் அவங்க வீட்டுல டிராப் செய்ய சொல்லு. ” என்றார். கிழவனார் கையெடுத்து கும்பிட்டவர், ஆகாயத்தைப் பார்த்தும் வணங்கினார். பையன் முகம் மலர்ந்தது.

வீட்டில் நுழைந்த கவுண்டரின் முகம் கோபத்தில் கொதித்தது. ஆறுமுக ராஜா, தந்தையை சமாதானப்படுத்தும் வகையில் புன்னகைப் பூத்தார்.

”இதெல்லாம் நல்லா இல்லே. பணம் கட்டி சேர முடியலைன்னா, இவுங்களுக்கு எதுக்கு நம்ம காலேஜ்ல ஸ்காலஷிப், ப்ரீ ஹாஸ்டல் எல்லாம்? இந்த காலேஜ் ஆரம்பிச்சதே, நம்ம சாதி சனம் முன்னேறணும்னுதான்னு எம்.எல்.ஏ சொல்லலை? அவுரு காதுல விழுந்தா தப்பா நெனைக்கப் போறாரு”

”நா இந்த காலேஜ் நடத்த முழு பொறுப்பு எடுக்கும்போதே, என்னோட எந்த செயல்லையும் குறுக்கே வர மாட்டேன்னு சொல்லியிருக்காரூ. ஏழையில சாதி எதுங்கையா? அப்படி அவர் ஏதாவது சொன்னா, எம் பணத்துல கொடுக்கிறேன்”

”அப்ப காலக்காலமாய் ஐயிருங்க படிச்சி முன்னேறினா போதுமா?” ஐய்யனின் குரலில் கோபம் குறைந்து, தங்கம் தெரிந்தது.

” ஐயா! படிப்பு எந்த சாதிக்கு மட்டும் சொந்தமானதில்லே. ஆணு பொண்ணு, சாதி, மதம், இனம்னு எந்த பாகுப்பாடும் இல்லை. படிக்கஆர்வம் இருந்தா யாரு வேணா படிக்கலாம். பெத்தவங்க, ஸ்கூலுன்னு ஊக்கம் தந்தா போதும். இப்பத்தான் உங்க பேத்திக்கிட்ட இருந்து போன் வந்துச்சு. அமெரிக்காவுல ஒன் ப் த பெஸ்ட் யூனிவர்சிடில, எம் பி ஏ படிக்க இடம் கெடச்சிருக்கு. இப்ப சொல்லுங்க, படிப்பு சாதி சார்ந்த விஷயமா? அந்த அனாதை பையன் இடத்துல யாரு இருந்தாலும் அதைத்தான் செஞ்ருப்பேன்”

“அப்ப இந்த இட ஓதுக்கீடு வேணாங்கிறீயா? அப்படி இல்லாம இருந்திருந்தா, அந்தக்காலத்துல அண்ணா யூனிவர்சிட்டில சேர்ந்து படிச்சிருக்க முடியுமா?”

”இல்லைன்னு சொல்லலையே. ஐயா, நீங்க எலிமெண்டரி ஸ்கூல்ல ப்யூன், கையெழுத்து போட தெரியும் அவ்வளவுதான் படிப்பு. ஆனா இன்னைக்கு எம் புள்ளைக்கு சாதி பேரு சொல்லி சீட் வாங்குறது சரியா? கையும் காலும் நல்லா இருந்து ஒழைக்க தெம்பும் இருக்கிறவன் பிச்சை எடுத்து சாப்பிடுவதுபோல இருக்கும். இது நான் சொல்லலை, தீபு ஒரு முறை, இந்த இட ஒதுக்கீடு பேச்சு வந்தப்போ சொன்னது’. இட ஒதுக்கீடு ரொம்ப அவசியம். ஆனா, நம்ம மாதிரி நல்லா முன்னேறியவங்க, இன்னும் ஒதுக்கீடு கேட்பது சரியா?”

அவர் பதில் சொல்லவில்லை.

“ஐயா…” அவர் குரல் தழதழைத்தது. ” ரெண்டு நாளு முன்னாடி இவங்க ரெண்டு பேரும் ஆடிட்டர் வீட்டு வாசல்ல நின்னுக்கிட்டு இருந்தாங்க. எதுக்குன்னு அன்னைக்கு தெரியலை. இன்னைக்கு தெரிஞ்சதும், இதே மாதிரிதானே முப்பது வருஷத்துக்கு முன்னாடி, பியூசி ரிசல்ட் வந்ததும் நீங்களும்தானே என்னை இழுத்திக்கிட்டு வீடு வீடா போனீங்க. எல்லா அவமானங்களையும் தாங்கிக்கிட்டு, அம்மா கழுத்துல இருந்த தாலியைக் கூட வித்து என்னை பி.ஈ சேர்த்தீங்க. பி.ஈ க்கு அப்புறம், மேல் படிப்புக்கு அமெரிக்கா போயி, நல்ல வேலைல சேர்ந்து, பணம் அந்தஸ்துன்னு வாழ்க்கையில இந்தளவு உயர்ந்ததுக்கு உங்க முயற்சிதானுங்க காரணம். வயசான காலத்துல உங்க கூட இருக்கணும்னு இருபத்தி அஞ்சு வருஷ அமெரிக்கா வாழ்க்கைய விட்டுட்டு வந்தாச்சு. இன்னைக்கு இவுங்க ரெண்டு பேரையும் பார்த்ததும், ஏதோ முன் ஜென்ம ஞாபகம் மாதிரி பழசு எல்லாம் நினைவுக்கு வந்து மனசு என்னமோ மாதிரி ஆயிடுச்சு” குரல் தழும்பியது.

பிரமைப் பிடித்ததுப் போல இருந்த ஐய்யன், ” வள்ளி, ரெண்டாயிரம் ரூபா பணத்தை எடுத்து அந்த பையன் கைல குடு. காலேஜ்க்குப் போகும்போது, நல்ல பேண்டு சட்டை வாங்கிக்கட்டும்” என்றார்.

“அதை நீங்களே எடுத்து தரக்கூடாதா” எழுந்த வள்ளியம்மை குரலில் ஒரு பெருமிதம்.


ramachandranusha@rediffmail.com

Series Navigation

ராமச்சந்திரன் உஷா

ராமச்சந்திரன் உஷா