அடையாளம் கடக்கும் வெளி

This entry is part [part not set] of 27 in the series 20020629_Issue

எச். பீர்முஹம்மது


இந்திய அரசியல் சமூகத்தில் வகுப்புவாத கருத்தியல்கள் வேகமாக எழுச்சி பெற்று வருவதன் காரணமாக ‘மொத்த சமூக அளவில் ‘ (Total Society Level) சிறுபான்மை / பெரும்பான்மை குறித்த கருத்தாக்கங்கள் வலுப்பெற்றுள்ளன. உண்மையில் அது சமூக எதார்த்தமாகவும் நடைமுறை ரீதியிலான விளைவையும் ஏற்படுத்தக்கூடியது. உலக அளவில் குறிப்பாக இந்திய சமூகத்தின் வரலாற்று ரீதியான மாற்றங்கள் மீண்டும் மீண்டும் சமூக குழுக்களின் இருப்பையே கேள்விக்குறியாக்குகின்றன. இதனால் சிறுபான்மை என்றும், பெரும்பான்மை என்றும் கருத்தியல் எதிர்வுகள் மறு ஒலிப்பாக ஒலித்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் சமூக தோற்றம் குறித்தும் சமூக மனிதனின் பல்வேறு அடையாளத் தன்மை குறித்தும் மனித உறவுகளின் இயைபு குறித்தும் ஆராய்வது மிக அவசியமாகிறது. ஒன்றின் ஆய்வு முறை என்பது அதனின் தோற்றத்தினை விளக்குவதில் விரிந்து செல்லும் தன்மை கொண்டது. தனி மனிதன் / சமூகம் / குழுக்கள் இவை மூலமாக ஏற்படும் பல்வேறு அடையாள உறவுகளின் வெளிப்பாடு பற்றி காண்பது பொருத்தமாகிறது.

மனிதனின் பல்வேறு அடையாளங்கள் குறித்த பார்வைகள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அறிஞர்களால் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக அடையாளங்களின் முதன்மை தனமான இனக்குழுக்கள் குறித்தும் அதன் வளர்ச்சி குறித்தும் காண வேண்டியதிருக்கிறது. இனக்குழு சமூகங்கள் பொதுவான அடையாளம், குறியீடு இவை இரண்டின் இயங்கியல் ரீதியான உறவின் தன்மையுடனே முன் நிற்கின்றன. இத்தகைய அடையாளங்களின் தோற்றம் பற்றியும் அதன் விவரணைகளின் மூலங்கள் பற்றியும் காண வேண்டியிருக்கிறது. அடையாளங்களை பற்றி ஆராய்ந்த மேற்கத்திய சிந்தனையாளர்களான டெலியூஸ் மற்றும் காட்ட ஆகியோர் மூன்று கருத்துருவங்களை முன் வைக்கின்றனர்.

1. துண்டுபட்ட உடல் (In Organic Body)

2. அங்கங்களற்ற உடல் (Body without Organ)

3. ஆசையின் ஒழுக்குகள் (Leak of Desire)

முதலல் மனித சமூகம் மண்ணோடு இணைந்த அங்கங்களற்ற உடலின் மீது தன் வரைவினை பொறித்து கொள்கிறது.

மேலே குறிப்பிட்டதில் மண் என்பதோடு குறிக்கப்படுகிறது. குழந்தையானது பிறந்தவுடன் எதுவுமற்ற நிலையிலேயே பிறக்கிறது. இதனால் அது பிறந்த வெளியின் அடையாளம் குழந்தைக்கு பொருத்தப்பட்டு விடுகிறது. எனவே அது அந்த மண்ணின் கலாச்சார சூழலோடு தன்னை தகவமைத்து கொள்கிறது.

(உதாரணமாக கேரளாவில் பிறந்த குழந்தையானது அந்த இடத்தின் மொழியையும், கலாச்சாரத்தையும் ஏற்றுக் கொள்ளும். அதனுடைய சைகைகள், உடல் சார்ந்த அசைவுகள் அதனை புலப்படுத்துகிறது.)

பொதுவாக மண் என்ற சொல்லாடல் நம்மிடையே பரவலாக வழங்கப்பட்டு வரும் ஒன்றாகும். (உதாரணமாக கரிசல் மண், தஞ்சாவூர் மண், மதுரை மண், குமரி மண் இவை போன்றன)

மனிதர்கள் தங்கள் உழைப்பின் மூலம் சமூகத்தோடு உறவு கொள்ள ஆரம்பிக்கின்றார்கள். உழைப்பின் செயலூட்டமானது அதிகக்கும் போது அதில் பல படிநிலை வசைகள் ஏற்படுகின்றன. சமூகம் முரண் கொண்டதாக மாற்றமடைகிறது.

இந்த முரண் கொண்ட சமூகமானது தன்னை பயச்சிக்கலுக்கு ஆட்படுத்தி கொள்கிறது. தன்னை அழிக்க வரும் ஒன்று என மற்றதை பார்த்து பயங்கொள்கிறது. அந்த வெளியில் ஆதிக்கம் / அறிவு / அதிகாரம் என்ற கருத்துருவங்கள் தோன்றி விடுகின்றன. இதனை அடையாளப்படுத்தி கொண்ட சமூகங்கள் இருவேறாக படிநிலைப்பட்டு விடுகின்றன. இத்தகைய சமூகங்களில் உரையாடலுக்கு இடமில்லை. மெளனமான ஒரு வழியான உரையாடலே சாத்தியமாகிறது. ஆகவே அந்த தன்மையை கொண்ட ஒடுக்குதலுக்கு உள்ளாகும் மக்களிடம் சில புனைவுகள் போர்த்தப்படுகின்றன. இவைகளின் தர்க்க பூர்வமான உணர்வுகள் மேலோங்கும் போது அவை அந்த ஒடுக்கு முறைக்கான தேடலாக அமைகிறது. சில போது அது எழுச்சி கொள்ளவும் தளர்ச்சியடையவும் செய்யும். இதனை டெல்யூஷ் எழுச்சியும் / தளர்ச்சியும் என்கிறார். அதனுடைய உளப்பூர்வமான நடவடிக்கைகள் மேலோங்கும் போது அது எழுச்சியையும் ஆதிக்க வர்க்கம் மேல் நோக்கி எழும் போது தளர்ச்சியாகவும் ஆகி விடுகிறது.

தனி மனிதன் சமூகத்தோடு உறவு கொள்ளும் போது சாதி / மதம் / வர்க்கம் / பால் / நிறம் / இன போன்ற பல்வேறு திறந்த அடையாளங்கள் ஒட்டிக் கொள்கின்றன. இந்த இடத்தில் சாராம்ச, அடையாளம் என்பது கிடையாது. அவைகள் பல பின்னப்பட்ட திறந்த அடையாளங்களோடு இயங்குகின்றன. (உதாரணமாக இப்ராஹீம் என்ற பெயருடைய நபர் ஓர் ஆணாக, இஸ்லாமியனாக, அந்த மண்ணின் உடைமையாளராக, தமிழனாக, இந்தியனாக இவ்வாறான பல்வேறு திறந்த அடையாளங்களோடு இருக்கிறார்)

சாதி என்பதின் தோற்ற உருவாக்கத்தை பற்றி பல்வேறு அறிஞர்கள் பல்வேறு விதமாக ஆராய்ந்துள்ளனர். லூர்து துய்மோன் என்ற மேற்கத்திய மானுடவியலாளர் சாதியை இந்திய முடியாட்சி சமூகத்தின் மேற்கட்டுமானமாக கண்டார். அதாவது அரசன் முதன்மையானவனாகவும் அவனுக்கு கீழ் உள்ள கைவினை குழுக்கள் வகை நிலையாகவும் வேறுபடுத்தப்பட்டன. இந்த இரண்டின் இயங்கு அமைப்பே சாதியாக உருமாறியது. அரசன் நாட்டை அதிகாரம் என்ற தன்மையை கைக்கொண்டு பிறமக்களை அடக்கி ஆண்டான். அப்பொழுது அவனுக்கு பல்வேறு பணிவிடைகள் செய்வதற்காக மக்கள் சமூகம் பாகுபடுத்தப்பட்டது. எனவே யாகங்கள, சடங்குகள், வழிபாடுகள் போன்ற இறையியல் அம்சத்தோடு தொடர்புடைய செயல்கள் செய்வதற்கு பிராமணனும் போர்படை சாதனங்களுக்கு சூத்திரனும், உற்பத்தி உறவுகளில் ஈடுபட வைசியனும், நாடாள்வதற்கு சத்திரியனுமாக சமூக அமைப்பு பாகுபடுத்தப்பட்டது. இந்த இடத்தில் தான் படிநிலை முறை ஏற்பட்டது. வேலைப் பிவினை, அகமண முறை, போன்றவை தூய்மை தீட்டு என்ற காலச்சார நெறி வகையோடு அடைக்கப்பட்டது. ஆகவே இந்த இடத்தில வேதங்கள் கற்பித்தல், சடங்குகள் புரிதல் போன்ற செயல்களை செய்த ஆதிக்க சாதியினர் பெரும்பான்மையாக கருதப்பட்டனர். ஆதிக்கம் / அறிவு என்பது இயைபு தன்மை சார்ந்தே வெளிப்படுகிறது.

(எனவே தான் இன்று அறிவு நிறுவனங்களும், அறிவாளிகள் என்று கருதப்படும் சமூக நிறுவனங்களை சார்ந்தவர்களும் ஆதிக்க தன்மை கொண்டவர்களாக விளங்குகின்றனர்)

மதம் பற்றிய பார்வைகள் இன்று மேலோங்கியுள்ளன. மதம் என்பது ஆதி சமூகங்கள் தங்களை இயற்கையின் சக்திக்கு குறைந்த ஒன்றாக காட்டி கொண்டதன் விளைவே. கோயில்கள், மடங்கள் போன்றவை வெளி உலக பஞ்சபூதங்கள். (நிலம், நீர், காற்று, தீ, வான்) சார்ந்தே அழைக்கப்பட்டன. உதாரணமாக இன்றும் தீ, நீர், சூரியன் போன்ற இயற்கை சக்திகள் வழிபாடும் அவற்றிற்கான இடங்களும் உள்ளன.)

இந்திய சமூகத்தில் ஆரிய சித்தாந்தத்திற்கு எதிரான சமண, பெளத்த மதங்களின் தோற்றம் அன்றைய சமூக அமைப்பை தலைகீழாக்கியது. சமணம் சார்ந்த பல்வேறு அறிஞர்கள் மதம் சார்ந்த பல்வேறு நூல்களை படைத்தனர். அன்று ஆரியத்தின் வேதமதமே பெரும்பான்மையோடு விளங்கியது. ஆப்வே இதனுடைய வேகமான ஆதிக்க செயற் தாக்கங்கள், மேற்கண்ட மதங்கள் மீது எழுந்ததால் அவைகள் அழிந்தன. (இவற்றில் பெளத்தம் மட்டும் ஒரு சில பகுதிகளில் காணப்படுகிறது.

கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மன்னர்கள், அறிஞர்கள், தலைவர்கள் இவர்களின் வருகையை ஒட்டி அன்று வரை நிலவியிருந்த சமூக அமைப்பை அது தலைகீழாக்கியது. இவ்வாறே மதம் பற்றிய கருத்தாக்கம் வலுவடைந்தது எனலாம்.

வர்க்கம் குறித்த பார்வைகள் தற்போது உலகம் முழுவதும் மேலோங்கி வருகின்றன. மனிதன் புறவயமான எதார்த்தத்தோடு தொடர்பு கொள்கிறான். இதனால் அந்த சக்திகளை தன் கைக்குள் கொண்டு வருகிறான். இதனால் உழைப்பு என்பது சாத்தியமாகிறது உற்பத்தி சக்திகள் பொருளுற்பத்தியை ஏற்படுத்துகின்றன. நிலம் இங்கு முதன்மை படுத்தப்படுகிறது. இதனால் உற்பத்தி உறவுகள் ஏற்படுகின்றன. உற்பத்தி சாதனங்களை உடைமையாக கொண்ட சமூகம் உற்பத்திக்காக உற்பத்தி சக்திகளை ஈடுபட வைக்கிறது. இதில் உற்பத்தி கருவிகள் பிரதான இடம் வகிக்கின்றன. இதனுடைய இணைவு / தகர்வுகளே வர்க்கம் தோன்ற காரணமாகிறது. உழைக்கும் வர்க்கமானது தன்னுடைய உழைப்பிலிருந்தும், பிற மனித சமூகத்தினிடமிருந்தும் அந்நியமாகி தனியுடைமை ஏற்பட்டு விடுகிறது. தொழிலாளி / முதலாளி என்ற இருமை எதிர்வுகள் ஏற்படுகிறது. உற்பத்தியில் ஏற்படும் மாறுதல்கள் சிறு / பெரு என்ற ஆற்றல் சார்ந்த கருத்துருவங்களை வெளிப்பட வைத்து விடுகிறது. வர்க்கம் சார்ந்த சமூகங்களில் சிறுபான்மையானது பெரும்பான்மை மீது ஆதிக்கம் செலுத்துகிறது மேற்கண்ட நிலைக்கு காரணம் உற்பத்தி சாதனங்களை அது உடைமையாக பெற்றிருப்பதே (உதாரணமாக நிலம், பிற உடைமைகள், மூலதனம் போன்றவற்றை பெற்றுள்ளவர் பிறர் மீது ஆதிக்கம் செலுத்துவது இன்றைய நடைமுறையில் நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்.

மனிதன் மற்றொரு முதன்மை அடையாளமான பாஇனம் குறித்த ஆய்வுகள் நிறைய வரப்பெற்றுள்ளன. இதில் பிரெஞ்சு தத்துவ மேதை ழாக் லக்கான் உடைய ஆய்பு முறை மிக முக்கியமானதாகும். உளப்பகுப்பாய்வாளரான லக்கான் தன்னுடைய நூல்களில் பாலின தோற்றம் பற்றி விவரிக்கிறார்.

மானிட பிரக்ஞையின் இயல்பான வளர்ச்சி நிலையே பாலியலை நிர்ணயிக்கிறது. அதாவது நிகழ்வின் தகவு முறையே ஆணாக அல்லது பெண்ணாக அல்லது குழந்தையாக அல்லது சிறுவனாக நிர்ணயமடைய செய்கிறது. ஒன்றன் இருப்பு என்பது மற்றதனால் வரையறுக்கப்படுகிறது. (உதாரணமாக கூட்டுகல்வி நிறுவனங்கள் உணர்வு நிலைகள் என்பது சமூகம் பற்றிய புரிதலாகவும் (ஆண்/பெண்) ஒற்றைகல்வி நிறுவனத்தில் அது முதன்மை சார்ந்ததாகவும் வெளிப்படுகிறது. ஆண் / பெண் இருபாலரும் சேர்ந்து பயிலும் நிறுவனங்களில் உள்ள நடைமுறை உணர்வை நாம் தற்காலத்தில் கண்டகிறோம்.) கலாச்சாரம் புறவெளியிலிருந்து அந்நியப்பட்டு போய் நிற்கிறது. ஆகவே அதன் சார்பு தன்மைகள் இயற்கை சார்ந்து அமைவதில்லை. (இதனால் தான் இன்றைய சமூகத்தில் பாலியல் விஷயங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. இதனால் ஒன்றின் ஆதிக்கம் மேலோங்கி விடுகிறது.)

பாலின விஷயங்களை பொறுத்தவரை சமகாலத்தில் பெண்களை விட ஆண்களே மேலோங்கி ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆகவே அதற்கெதிரான தேடல்கள் இன்று அதிகமாகி உள்ளன. (இப்பொழுது நடைபெற்று வரும் பெண்ணியப் போராட்டங்களை கணக்கிலெடுத்து கொள்ளலாம்)

பாலினங்களின் ஆதிக்கம் என்பது அதன் சமூக உற்பத்தியை சார்ந்தே வெளிப்படுகிறது. அது எவ்வாறு சமூகத்தின் மீது தொடர்பு கொள்ளுகிறது. சமூகத்தின் உற்பத்தியில் அது கொள்ளும் உறவு இவற்றை சார்ந்தே அடைகிறது.

நாம் ஆண் / பெண் நிலைகளை விளக்க இரு தள முறைகளை பார்க்க வேண்டியிருக்கிறது.

1. வாய்ப்பாடு நிலை அல்லது கிடைத்தள நிலை

2. அடுக்குமுறை அல்லது செங்குத்து நிலை

ஆணின் அங்கம் என்பது செங்குத்து நிலையையும் பெண்ணின் அங்கம் என்பது கிடைத்தள நிலையையும் கொண்டது. இதில் செங்குத்து நிலை சார்ந்த ஆணின் நிகழ்வுகள் கிடைத்தளத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. (உதாரணமாக ஆணின் நிகழ்முறைகளாக வீரம், கோபம், கடுமை போன்றவை குறிக்கப்படுகின்றன. பெண்ணின் அடையாளமாக மென்மை, அன்பு, பாசம், தாய்மை போன்றவை குறிக்கப்படுகின்றன.)

இந்த இரு இயங்கியல் இணைவுகளின் மோதல் காரணமாகவே பாலியல் ஒடுக்கு முறைகள் நிகழ ஏதுவாகின்றன. ஆகவே ஏற்கனவே கால / வெளி தளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சமூக மதிப்புகளை தகர்த்தால் மட்டுமே இதற்கான தேடலாக அது அமையும். இந்த இடத்தில் சிறுபான்மை /பெரும்பான்மை என்ற அடையாளம் ஏதுமின்றியே ஒடுக்குதல் நிகழ்கிறது. ஆக அடையாளங்கள் சாராம்சத்திலிருந்து தன்னை விலக்கி கொள்ளுகின்றன.

சிறுபான்மை பெரும்பான்மை குறித்த விஷயங்கள் சமூக / அரசியல் சார்ந்ததாக இன்று உலகம் முழுவதும் வெடித்துள்ளன. இந்திய அரசியலில் இது சற்று பூதாகரமாகவே கிளம்பியுள்ளது. இதில் சிறுபான்மை அடையாளம் எது ? சிறுபான்மை யார் ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சாதி / மதம் / வர்க்கம் / பால் / நிற / இன போன்ற பல்வேறு பின்னப்பட்ட அடையாளங்கள் மீதான அமைப்பு பார்வையாக நாம் அதை கணக்கிலெடுக்கும் போது இதற்குய தீர்வுகள் எட்டி விடும். தென்னாப்பிக்காவில் கருப்பர் – வெள்ளையர் பிரச்சினையும் செர்பியர்கள் மீதான இனப் படுகொலையும், இலங்கையில் நடைபெற்று வரும் தமிழர் / சிங்களர் போராட்டமும், ஈரானில் ஷியா – சுன்னி பிரச்சினையும் பாலஸ்தீன பிரச்சினையும் நம்மை மீண்டும் அக்கருத்துருவத்தின் மீது கவனங்கொள்ள செய்கின்றன. நாம் அக்கவனத்தின் மீது நம் பார்வைகளை தெளிவுப்படுத்தி கொள்ளுவது நல்லது.

**

Series Navigation

எச்.பீர்முஹம்மது

எச்.பீர்முஹம்மது