ஸ்ரீதர் சதாசிவன்
–
shridharsadasivan@gmail.com
காலை மணி ஏழு. சனிக்கிழமை என்பதால் அறக்கபறக்க வேண்டாம். குமாரும்,குழந்தை சுவாதியும் தூங்கி கொண்டிருந்தார்கள். நான் மெல்ல எழுந்து மைக்ரோவேவில் காபி போட்டு, கம்ப்யூட்டரை துவக்கினேன்.
வாரம் தவறாமல் அம்மாவும் அப்பாவும் இன்டெர்நெட்டில் ஆஜராகிவிடுவார்கள்.அமெரிக்காவில் இருக்கும் தங்கள் ஒரே மகளுடன் வாரம் ஒரு முறையாவது வீடியோ சாட் செய்ய வேண்டும் அவர்களுக்கு.
“கண் காணாத இடத்துல குடுத்தாச்சு… இப்படியாவது உங்களையும் சுவாதியையும் பாக்க முடியறதே! ” என்று சந்தோஷப்படுவாள் அம்மா.கம்ப்யூட்டரை யார் நன்றாக இயக்குகிறார்கள் என்று அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே போட்டி வேறு.
லாகின் செய்தவுடன் அப்பாவின் மெசேஜ்.
” ஹே! காயத்ரி,எப்படி இருக்க?”
” ஹலோ அப்பா,நல்ல இருக்கேன்”
” எப்படி இருக்கு உங்க புது வீடு” என்றாள் அம்மா.
” நல்ல இருக்குமா.. இன்னமும் சாமானெல்லாம் முழுசா அரேஞ்ச் பண்ணலை.. செட்டில்ஆக டைம் ஆகும்”
” ஆகட்டும்… இப்போ என்ன அவசரம்? வேலைக்கும் போய்கிட்டு, குழந்தையையும் பாத்துகிட்டு.. எவ்வளவு தான் உன்னால முடியும்? இந்தியால இருந்திருந்தா.. நானும் அப்பாவும் கூடமாட ஹெல்ப் பண்ணி இருப்போம்…. ஹம்ம்…” என்று ஆரம்பித்தாள் அம்மா.
” சரிம்மா ..ரிலாக்ஸ் …… குமார் ஹெல்ப் பண்ணறார் … ஒண்ணும் கஷ்டம் இல்லை ” என்று சிரித்தேன் நான்.
“குட்… வீக்கென்ட் என்ன ப்ளான்ஸ் ? நாளைக்கு தானே பார்ட்டி?” – அப்பா.
” ஆமாம்… இங்க நெய்பர்ஸ் எல்லாரையும் கூப்பிட்டிருக்கோம் ….. பழக ஒரு சான்ஸ்”
” அந்த.. எதிர் வீட்டு ஆளுங்களையுமா? ” பதறினாள் அம்மா.
” இல்லம்மா … அவங்கள கூப்பிடல”
” நல்லது…… அந்த கருமம் எல்லாம் நம்ம வீட்டுல வேண்டாம்.. தள்ளியே இரு”
” சரி அத விடு.. பெரியப்பா எப்படி இருக்கார்? உமா வேலை எப்படி போறது?” என்று பேச்சை மாற்றினேன் நான்.
அமெரிக்காவில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ‘பெர்பெக்ட்’ஆன வாழ்கை என்று பலர் எண்ணுவதுண்டு. “உங்களக்கு என்ன அமெரிக்கால இருக்கீங்க” என்று இந்தியாவிலிருக்கும் சொந்தக்காரர்கள் எல்லாம் எப்பொழுது பார்த்தாலும் கிண்டல் செய்வார்கள். அமெரிக்கா வாழ்க்கையில் சில சங்கடங்கள், சஞ்சலங்கள் இருக்கத்தான் செய்கின்றன. கைநிறைய சம்பாத்தியம், கார், வீடு, சுத்தமான காற்று, குடிநீர், பளிச் ரோடுகள் என்று ஒருபுறம் சொகுசான, நிம்மதியான வாழ்க்கை. மறுபுறம் பல கலாச்சார நெருடல்கள்… பத்து வயதானால் போதும் காதல், கல்யாணத்திற்கு முன்பு உறவு, கர்ப்பம், டீன்ஏஜ்ஜில் குழந்தை, விவாகரத்து என்று பல! இவைகளை கண்டும் காணாமல் இருக்க வேண்டும். நமது கலாச்சாரத்திற்கு நேரெதிரான இந்த ஊர் கலாச்சாரத்தில், குழந்தைகளை வளர்ப்பதும் எளிதல்ல. பக்கத்து வீட்டு பத்து வயது பெண் “டேட்”டுக்கு போவதை பார்த்தால்… ‘பக்’கென்று இருக்கும். நாளைக்கு நம் குழந்தை என்ன செய்யுமோ? இது போதாது என்று இங்கு காணப்படும் ஆண்-ஆண் , பெண் -பெண் உறவுகள்! “கலி முத்தி போச்சு போ” என்று அம்மா முனங்குவதில் தவறில்லை.
போன வாரம் இந்த வீட்டிற்கு குடி வந்தபொழுது. “நல்வரவு” என்று சுத்த தமிழில் வாஞ்சையோடு வரவேற்றது எதிர் வீட்டு ரகு. காபி, மபின்ஸ், பழங்கள் என்று ஒரு கூடையுடன். இந்தியர், அதுவும் தமிழ் பேசும் ஒருவர் எதிர் வீட்டில் இருப்பதை அறிந்து எனக்கும் குமாருக்கும் குஷி.
” சொந்த ஊர் எது?” என்று குமார் கேட்க,
” எனக்கு நியூஜெர்சி, நான் அங்க தான் பிறந்து வளர்ந்தேன்… மை பாரண்ட்ஸ் ஆர் ப்ரம் சென்னை” என்றான் ரகு.
” ஓ! நைஸ்… வீட்டுல யாரெல்லாம் இருக்காங்க?” என்றேன் நான்.
” நான், என் பார்ட்னர் ராப் , அண்ட் எங்க டாட்டர் கமலா”
” ராப்..?” சற்று குழப்பம் எனக்கு
” எஸ்.. ராப்.. ராபின்சன்”
“…………”
” ராபுக்கு இந்தியர்கள்னா ரொம்ப இஷ்டம். உங்கள சந்திச்சா ரொம்ப சந்தோஷப்படுவான்……. இன்னிக்கு டின்னருக்கு வாங்களேன்”
எனக்கும் குமாருக்கும் என்ன சொல்லுவதென்று தெரியவில்லை. சிறிது நொடி தர்மசங்கடத்திற்கு பிறகு,” ஓ.. ஓகே ..இன்னொரு முறை.. இன்னிக்கு நெறைய வேலை” என்று சமாளித்தோம்.
இந்த நாட்டிற்கு வந்த பொழுது, இது போன்றவர்களை முதல் முதாலாக சந்தித்த பொழுது ரொம்பவே தர்மசங்கடமாய் இருந்தது. என்ன இது? எப்படி இது சாத்தியம்? ஆணும்- ஆணும், பெண்ணும் -பெண்ணும் … நினைக்கவே அருவெருப்பாய் இருக்கிறதே என்று மனம் கூசியதுண்டு. இப்படிபட்டவர்கள் மனநோயாளிகளோ என்று கூட சந்தேகித்ததுண்டு. பின்பு மெல்ல மெல்ல இது போன்ற பலரை அன்றாட வாழ்கையில், அலுவலகத்தில் கண்ட பிறகு கொஞ்சம் அந்த பயம் விலகியது. இருந்தாலும் எதிர் வீட்டில், தம்பதிகளாய் ரெண்டு பேர்… அதுவும் குழந்தை வேறு… கஷ்ட காலம்!
” இது தெரிஞ்சிருந்த… இங்க வீடே வாங்கியிருக்க மாட்டோம்” குமாருக்கு எரிச்சல்.
” சரிவிடு குமார் …… நமக்கு என்ன… ” என்றேன் நான்.
பேச்சுவாக்கில் அப்பா அம்மாவிடம் குமார் இந்த விஷயத்தை சொல்லி விட்டார். அதிலிருந்து அம்மாவுக்கு வேறு கவலை. ” குழந்தைகள அங்க அனுப்பிடாதே!.. அவங்க வீட்டு பெண்ணோடு சவகாசம் வேண்டாம்” என்று எப்பொழுது பார்த்தாலும் அட்வைஸ். அம்மாவின் கவலை எனக்கும் இருக்கத்தான் செய்தது. எதற்கு தேவையில்லாமல் பழகுவானேன்? இதோ இன்றைக்கு நாங்கள் நடத்தும் “ஹவுஸ் வார்மிங் பார்ட்டி” க்கு கூட அவர்களை கூப்பிடவில்லை.
பார்ட்டி பெரிய சக்சஸ்.அக்கம் பக்கம் எல்லாரும் ஆஜர். அறிமுகம், அரட்டை,சாப்பாடு என்று பொழுதுபோனதே தெரியவில்லை. ‘இந்தியன் புட்’ எல்லோருக்கும் பிடித்திருந்தது.
“மிஸஸ் குமார், யம்மி சமோசாஸ்” என்று ருசித்தாள் ஆண்ட்ரியா. “யூ ஹாவ் எ லவ்லி டாட்டர்” என்று புகழ்ந்தார் மார்க். இரண்டு இந்திய குடும்பம், நான்கு அமெரிக்க குடும்பம், ஒரு சைனீஸ் குடும்பம் என்று அக்கம் பக்கம் எல்லோருமே நன்றாக பழகுபவர்கள்.
” டிட் யூ மீட் ராப் அண்ட் ரகு? தே லிவ் ரைட் அக்ராஸ்…..” என்று கேட்ட ஆண்ட்ரியா அவர்கள் புகழ்பாட தொடங்கினாள். அவர்களையும் பார்ட்டிக்கு கூப்பிட்டிருக்கலாம், ரொம்பவும் நல்ல மனிதர்கள், உதவி செய்யும் எண்ணம் கொண்டவர்கள், ராப் பரிசுபெற்ற எழுத்தாளர், ரகு கம்ப்யூட்டர் எஞ்சினீயர், அவர்கள் பெண் கமலா மிகவும் சுட்டி, ‘ஏ க்ரேட்’ ஸ்டூடன்ட், கறுப்பர் இன பெண், இருந்தாலும் தமிழ் பேசுவாள், பரதநாட்டியம் , கர்னாடக சங்கீத பயிற்ச்சி வேறு……… வாய் ஓயவில்லை ஆண்ட்ரியாவிர்க்கு. எல்லாவற்றிற்கும் பதில் பேசாமல் தலையாட்டிவிட்டு “குமார் இஸ் காலிங்” என்று நழுவினேன் நான்.
ஆண்ட்ரியாவிடமிருந்து தப்பிப்பது எளிதாக இருந்தாலும், எதிர் வீட்டில் வாழும் இருவரை தவிர்ப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. வீட்டு வாசலில் பார்த்தல் ரகுவும் ராபும் அடிக்கடி பேச முயலுவார்கள். வீக்கென்ட் கடைகளுக்கு போனால் அவர்கள் இருவரும் தென்படுவார்கள். இருந்தாலும் நானும் குமாரும் இரண்டு மாதமாய் சாமர்த்தியமாக அவர்களை தவிர்த்து விட்டோம். அந்த பெண் கமலாவும், சுவாதியும் ஒரே ஸ்கூல். ஸ்கூல் ப்ராஜக்ட் சேர்ந்து செய்யட்டுமே என்று ரகு வீட்டுக்கு வந்து கேட்க , சுவாதிக்கு ஏற்கனவே ப்ராஜக்ட் பார்ட்னர் இருக்கு என்று குமார் தவிர்த்துவிட்டான். அது என்னவோ அவர்களை பார்த்தல் ஒரு தர்மசங்கடம். “காயத்ரி, எக்காரணம் கொண்டும் சுவாதியை அவங்க வீட்டு பொண்ணோட பழக விடாதே!” என்று அடிக்கடி சொல்லுவான் குமார்.
ஒரு வெள்ளி சாயங்காலம்.குமார் இன்னமும் ஆபீசிலிருந்து வரவில்லை. சுவாதி ஸ்கூல் முடிந்து,டான்ஸ் கிளாசுக்கு போயிருந்தாள். நான் டி.வி பார்த்துக்கொண்டிருந்தேன். வாசலில் சத்தம். மெதுவாய் எழுந்து கதவை திறந்தேன்.
” மிஸஸ்.குமார், ஹாவ் ஆர் யூ? தொந்தரவுக்கு மன்னிக்கவும்…… உங்க உதவி வேணும்..” பதட்டத்தோடு எதிர் வீட்டு ரகு.
“……………………..”
” ராப் ஆபீசிலிருந்து வரும் போது ஆக்சிடென்ட்…… இப்போதான் கால் வந்தது” அவன் குரல் தழுதழுத்தது.
தூக்கிவாரி போட்டது எனக்கு, ” வாட்? இஸ் ஹீ ஓ.கே?”
“தெரியல.. நான் ஹாஸ்பிடலுக்கு போறேன் … கமலா ஸ்கூல் முடிஞ்சு வருவா.. கொஞ்சம் உங்க வீட்டுல அவளை வெச்சுக்க முடியுமா? ப்ளீஸ்…….. ஆண்ட்ரியா ஊர்ல இல்லை.. இருந்திருந்தா உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்” என்று கெஞ்சினான்.
” கண்டிப்பா ….” யோசிக்காமல் சொன்னேன் நான்.
” தாங்க்யூ மிஸஸ்.குமார்” என்று கைகூப்பினான் அவன்.
” நோ ப்ராப்ளம், ஐ ஹோப் ஹீ இஸ் ஓ.கே”
” ஐ ஹோப் சோ” என்று சொன்ன பொழுது ரகுவின் கண்களில் கண்ணீர்.
கமலா ஸ்கூல் பஸ் வந்த பொழுது நான் போய் அவளை கூட்டி வந்தேன். ரகு எங்கே என்று கேட்டவளிடம், உண்மையை சொல்ல மனம் வரவில்லை. எட்டு வயது குழந்தை, அவளிடம் எப்படி ஆக்சிடென்ட் பற்றி சொல்வது? ஆபீசிலிருந்து கால் வந்தது, போய் இருக்கிறான் என்று சமாளித்தேன். சாப்பிட எதுவும் வேண்டுமா என்று கேட்டதற்கு, வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். ஜூஸ் மட்டும் கொடுத்தேன். சிறிது நேரத்தில் சுவாதி வந்துவிட்டாள். மூவரும் வீட்டு வாசலில், புல்வெளியில் அமர்ந்தோம்.
” ஐ லைக் யுவர் ஹவுஸ்” என்று சிரித்தாள் கமலா, “யூ நோ .. ஐ கேன் ஸ்பீக் தமிழ்”
” அப்படியா”
” ஆமாம்… அப்பா தமிழ் தான் வீட்டுல பேசுவார்…. டாடிக்கு கூட கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்” என்றாள்.
” அப்பா?.. டாடி?” குழம்பினேன் நான்.
” ஓ….. ஐ நோ….. இட்ஸ் கன்ப்யூசிங்……. ரகு இஸ் மை அப்பா.. ராப் இஸ் மை டாடி” என்று அப்பாவியாய் அவள் சொன்னாலும், எனக்கு என்னவோ நெருடலாக இருந்தது.
என்ன குழப்பம் இது? அப்பா,அம்மா என்று பேசவேண்டிய குழந்தை. பாவம்!
” வாட்… டூ டாடி.??.” என்று சத்தம் போட்டு சிரித்தாள் சுவாதி.
” சுவாதி… என்ன இது.. ஸ்டாப்!” என்று முறைத்தேன் நான்.
” ஆமாம்….. எனக்கு ரெண்டு டாடி” என்று கமலா பதில் சொல்ல, சுவாதி நிறுத்தவில்லை.
” நோ .. மம்மி?” என்று தொடர்ந்து சிரித்தாள்.
” அதுக்கு பதிலாத்தான் எனக்கு ரெண்டு டாடி…… ஐ டோன்ட் வான்ட் மை மம்மி , ஐ ஹாவ் டூ டாடி, தே போத் லவ் மீ” என்ற கமலா, அவளது ஸ்கூல்பையை திறந்தாள்.
” மிஸஸ் குமார், திஸ் இஸ் மை ஸ்கூல் ப்ராஜக்ட்” என்று ஒரு நோட்டை என்னிடம் நீட்டினாள்.
“மை பாமிலி” என்ற தலைப்பில் அவள் வரைந்த படங்கள், புகைபடங்கள்,சில குறிப்புகள் என்று அழகாய் தொகுக்கப்பட்டு இருந்தது அந்த புத்தகம்.
” லெட் மீ ஷோ யூ” என்று முதல் பக்கத்தை திருப்பினாள்.அதிலிருந்த புகைப்படத்தை பார்த்தவுடன் எனக்கு அதிர்ச்சி! ஒல்லியாய்.. ஒடுங்கிய உடம்பு,காய்ந்து போன உதடுகள், கிறங்கிய கண்கள், என்று குப்பைதொட்டியில் ஒரு பச்சிளங்க குழந்தை.
” இது தான் என் பர்ஸ்ட் பிக்சர் ……. மார்டிநீக் தீவுல [Martinique Island] என் மம்மி நான் பிறந்தவுடனே என்னை ட்ராஷ்ல போட்டுட்டா,ஷீ வாஸ் வெரி புவர்”
” வாட்…?” என்ன சொல்வதென்று தெரியவில்லை எனக்கு.
” யெஸ்” என்றவள், அடுத்த பக்கத்தை திருப்பினாள்.
” ஸீ……. இது எனக்கு ஒரு வயசு ஆனப்போ, ரகு அப்பா என்னை அடாப்ட் பண்ண மார்டிநீக் வந்தப்போ எடுத்த போட்டோ”, ரகு ஒரு கருப்பு பெண்மணி முன்னால்,அலுவலகத்தில் கையெழுத்து போடும் புகைப்படம்.
அடுத்த பக்கம், “இதுதான் அவங்களோட என்னோட பர்ஸ்ட் போட்டோ”, ரகு கையில் ஒரு வயது குழந்தை கமலா.கமலாவை பார்த்து பூரித்துபோய் பக்கத்தில் சிரிப்பது ராப்.
எவ்வளவு அழகான,அன்பான புகைப்படம்….. நல்லவேளை இவர்கள் கமலாவை தத்தெடுதார்கள், இல்லை என்றாள் என்னவாகியிருக்கும் இந்த குழந்தை!
கமலா மெல்ல மெல்ல பக்கங்களை திருப்பினாள். முதல் பிறந்தநாள், ரகுவின் பெற்றோர்கள், ராபின் சஹோதரி, கமலாவின் முதல் நாள் ஸ்கூல், ரகுவின் பிறந்தநாள் அன்று கமலாவும் ராபும் குடுத்த சர்ப்ரைஸ் பார்ட்டி, அவர்கள் மூவரும் சேர்ந்து டிஸ்னி லாண்ட் போன புகைப்படங்கள் என்று ஒவ்வொன்றாக காண்பித்தாள். “டாடி”,”அப்பா” என்று இருவரை பற்றியும் வாய் ஓயாமல் பேசினாள். அவள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தாலும்.. எனக்கு உள்ளுக்குள் கவலை. கடவுளே…. என்ன ஆயிற்றோ? சீரியசாக இருக்குமோ? பாவம் இந்த குழந்தை! நெஞ்சு குடைந்தது எனக்கு.
போன் சத்தம் போட்டது, எதிர் முனையில் ரகு. ” மிஸஸ் குமார், இஸ் கமலா வித் யூ?”
“அவ இங்கதான் இருக்கா.. ஹவ் இஸ் ராப்?”
” தலைல அடி.. நிறைய ரத்தம் போய்டுச்சு! உடனடியா சர்ஜரி ” என்று சொல்லும்பொழுது ரகுவின் குரல் உடைந்தது.
” ஐயோ… சர்ஜரியா?? ” பதறினேன் நான்.
கமலாவுக்கு எதோ நடக்கிறது என்று புரிந்துவிட்டது.” அப்பா .. இஸ் இட் அப்பா” என்று என்னருகே ஓடி வந்தாள், “அப்பா கிட்ட பேசணும்”
என்னால் மறுக்கமுடியவில்லை.
” அப்பா … என்ன ஆச்சு?” என்றவள் ரகுவின் அழுகுரல் கேட்டவுடன் நடுங்கினாள்.நான் குனிந்து அவளை அணைத்துக்கொண்டேன், போனில் தொடர்ந்து பேசியவள், கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழ தொடங்கினாள். ” டாடி.. ஐ வாண்ட் டு ஸீ மை டாடி” குரல் வீரிட்டு கதறினாள்.
நான் போனை வாங்கி ரகுவிடம் உடனே கிளம்பி ஹாஸ்ப்பிடலுக்கு வருகிறேன் என்று சொன்னேன். குமாருக்கு போன் பண்ணி அவனையும் உடனடியாக ஹாஸ்ப்பிடலுக்கு வர சொல்லிவிட்டு , அவசர அவசராமாய் இரண்டு குழந்தைகளையும் காரில் அழைத்துக்கொண்டு கிளம்பினேன்.
கடவுளே.. எதுவும் கெட்டது நடக்காமல் காப்பாத்து!
நான் ஹாஸ்ப்பிட்டலில் நுழைய, குமாரும் வந்து சேர்ந்தான். இரண்டு பெரும் குழந்தைகளுடன் ரகுவை தேடி விரைந்தோம்.
எமர்ஜென்சி ரூமின் வெளியே உருக்குலைந்து உட்கார்ந்திருந்தான் ரகு. அவனை பார்த்தவுடன் “அப்பா” என்று கதறிக்கொண்டே ஓடினாள் கமலா. ரகு அவளை அள்ளி அணைத்துக்கொண்டான். ” டோண்ட் க்ரை.. அழாத கமலா…. டாடி வில் பி பைன்” என்று அவளை தேற்றினான்.
நானும் குமாரும் அவர்களருகே சென்று செய்வதறியாமல் நின்றோம்.
ரகு குமாரின் கைகளை பிடித்து கதறினான், ” சர்ஜரி……நடந்துகிட்டிருக்கு…… சொந்தகாரங்கள மட்டும் தான் ராப பாக்க அனுமதிப்பாங்க… என்னை பாக்க விடல”
” வாட்…? ” குழம்பினேன் நான்.
” ஆமாம்.. மிஸஸ் குமார்….. நானும் கமாலாவும் சட்டப்படி ராபின் சொந்தம் கிடையாது”
” வாட் ரப்பிஷ் ….” என்று வெகுண்டேன் நான்.
எனது நடவடிக்கைகளை பார்த்து குமாருக்கு சற்று குழப்பம், இருந்தாலும் சமாளித்து கொண்டான். “ஹீ வில் பி பைன், டோண்ட் லூஸ் ஹோப்” என்று ரகுவை சமாதானப்படுத்தினான்.
எனக்குள் பல கேள்விகள், எண்ண அலைகள்!
அது எப்படி ரகுவை இவர்கள் அனுமதிக்காமல் இருக்கலாம்? நமக்கு புரியவில்லை என்பதற்காக இவர்கள் இருவரது உறவு இல்லை என்று ஆகிவிடுமா?
அப்பா, டாடி என்று இந்த எட்டு வயது குழந்தைக்கு புரிகிற உறவு, நமக்கு ஏன் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது?
பொறி தட்டியது எனக்கு… ஆண்-ஆண், பெண்-பெண் என்று இருவரை பார்த்தால், அவர்கள் உறவை வெறும் செக்ஸ் சமந்தப்பட்ட உறவாக மட்டுமே தானே நாம் பார்க்கிறோம்!
அவர்களும் நம்மை போன்று எல்லா உணர்வுகளும், உறவுகளும் கொண்ட மனிதர்கள்தானே! அதை ஏன் நாம் யோசிப்பது இல்லை? அவர்கள் படுக்கைஅறையில் எனன செய்தால் நமக்கென்ன? அதை நினைத்து அவர்களை எடை போடுவது எவ்வளவு கீழ்த்தரமான எண்ணம்? ச்சே!
அம்மா-அப்பா-குழந்தை என்று இருந்தால்தான் குடும்பமா? அன்பும், பாசமும், அரவணைப்பும் நிறைந்த அமைப்புதானே குடும்பம்? இரண்டு அப்பா இருந்தால் எனன தப்பு?
இதோ கமலாவை அணைத்து, ஆறுதல் சொல்லி, அறவணைக்கிற ரகுவிடம் தாய்மை இல்லையா? உயிருடன் போராடிக்கொண்டிருக்கும் ராபின் மேல் ரகுவிற்கு இருப்பது வெறும் செக்ஸ் சமந்தப்பட்ட உறவா? காதல் இல்லையா? அவர்களுக்கு இது சந்தோஷத்தை,அமைதியை,குடும்பம் என்கிற நிம்மதியை தருகிறது என்றால் அதை சரியல்ல என்று தடுப்பதற்க்கும், ஒதுக்குவதற்க்கும் நாம் யார்? இவர்களை வீட எந்த விதத்தில் என் குடும்பம் உயர்ந்தது?
இரண்டு மாதங்கள் கழித்து ….
காலை மணி ஏழு. சனிக்கிழமை என்பதால் அறக்கபறக்க வேண்டாம். குமாரும் குழந்தை சுவாதியும் தூங்கி கொண்டிருந்தார்கள். நான் மெல்ல எழுந்து மைக்ரோவேவில் காபி போட்டு, கம்ப்யூட்டரை துவக்கினேன்.
லாகின் செய்தவுடன் அப்பாவின் மெசேஜ்.
” ஹே! காயத்ரி,எப்படி இருக்க?”
” ஹலோ அப்பா,நல்ல இருக்கேன்”
“வீக்கென்ட் என்ன ப்ளான்ஸ்?” என்று கேட்டாள் அம்மா.
” ராப் இன்னிக்கு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வரார். குமார்,சுவாதி,ரகு,கமலா எல்லாரும் அவரை போய் கூட்டிகிட்டு வருவாங்க.இன்னிக்கு லஞ்சு எல்லாருக்கும் இங்கதான் ” என்று சிரித்தேன் நான்!
—– x —–
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! பரிதி மையத்தில் கரும்பிண்டம் அடைபட்டுள்ளது!(Dark Matter is Trapped at the Centre of Sun)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – தொடர்பாக
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 6
- சமபாத்த்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள்: – (4)
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -25 (இறுதிக் கட்டுரை)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)ஓ இரவே ! கவிதை -32 பாகம் -4
- ஊழ்
- வேத வனம் விருட்சம் 97
- இவர்களது எழுத்துமுறை – 3 அகிலன்
- வால்பாறை
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -1
- சங்ககால விளம்பரக் கருவிகள்
- புதிய மாதவிக்கு
- சிறு ஆவணப்படங்களுக்கான அழைப்பிதழ்
- சிகாகோவில்…. அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் சங்கத்தின் 6வது மாநாடு
- புதிய மாதவிக்கு கால்டுவெல் பற்றி
- நினைவுகளின் சுவடும் விஸ்வரூபமும்
- தேக்கம்
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -1
- பரிமளவல்லி அத்தியாயம் 5. ‘டாக்ஸ்-எய்ட்’
- பி.எம்.டபிள்யு என்ஜின்
- முத்தமிடுங்கள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம்(Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -6
- அடைகாக்கும் சேவல்கள்
- கால்டுவெல்லின் தனித்துவம்
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 3
- முத்தையா முரளிதரனின் சாதனையின் போர்வையில் மறக்கடிப்பட்ட ஆதித் தீ
- முள்பாதை 40
- மொழிவது சுகம்: ஜிகினாக்களற்ற உலகக் கால்பந்துவிழா
- நகரத்தார்களும் ஆன்மீகமும்
- யாரோ ஒரு பெண் தவறவிட்ட யோனி
- பட்டாம்பூச்சி வாழ்க்கை
- மடித்து வைக்கப்படும் விருப்பங்கள் ….!
- நினைவுருகும் மெழுகு!
- மரியாதைக்குரிய தோல்வி