அடுப்பிலிருந்து வாணலிக்கும் , திரும்பவும்

This entry is part [part not set] of 21 in the series 20020224_Issue

ஜெயமோகன்


ஞாநி யின் தீம் தரிகிட பற்றிய குறிப்பு நான் எழுதியதை விடவும் மாலனுக்கு சிறந்த பதிலாக அமைந்திருப்பது எனக்கு உண்மையில் மகிழ்ச்சியை அளிக்கவில்லை. பிரபல இதழியியலின் முதல்நிலை இதழியலாளர் ஒருவர் என்ன காரணத்தால் சிற்றிதழ் துவங்க விரும்புகிறார் என்றா வினா மிக முக்கியமானது.பல சமயங்களில் இப்படி ஆகிவிடுகிறது.மாலன் இந்தியா டுடே இதழில் ஒருமுறை அறிவுஜீவிகள் மக்கள் விரும்புவதை எற்க மறுப்பதுதவறு என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தர்.அதற்கு அடுத்த பக்கத்திலேயே கனிமொழி சித்தி தொடரை மறுத்து தீவிரமான ஒரு கட்டுரை எழுதியிருந்தார். மறுபக்கங்களை எளிதில் தவிர்க்க முடிவதில்லை இப்போது.

நான் மிக மதிக்கும் இதழாளர்களில் ஒருவர் ஞாநி .பலவருடம் முன்பு ஒருமுறை இளம் இதழாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது இதழாளர் என்ற விசேஷ இனம் இல்லாமல் ஆகிவருவது குறித்து சொன்னேன் .அறிவுத்திமிரும்,அகங்காரமும் ,அராஜகமளவு போகும் சுயேச்சையான போக்குகளும் ,ஒழுங்கற்ற அந்தரங்க வாழ்வும் ,பிறருக்கு அசட்டுத்தனமெனப் படுமளவுக்கு கொள்கைப் பிடிப்பும் இவ்வற்கத்தின் இயல்புகள்.அப்போது பலரும் தமிழில் ஞாநியை பற்றி சொன்னார்கள்.அவர் ஒரு முன்னுதாரணமாக ,ரகசிய இலக்காக பலருக்கும் இருப்பது தெரிந்தது . அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது.ஞாநி யின் தந்தை வேம்பு அய்யர் தமிழின் முக்கியமான இதழாளர்.அவருக்கு கருணாநிதி தலைமையில் ஒரு நிதியளிப்புவிழா நடைபெற்றது,மறுவாரமே ஞாநி கருணாநிதியை கடுமையாக விமரிசிக்கும் கட்டுரை தினமணியில் வெளிவந்தது.இத்தகைய சுதந்திரத்தையே ‘திமிர் ‘ என்றேன். தமிழில் இது மிக அபூர்வமான ஒன்றுதான்.[ ஒரு உதாரணம் கருணாநிதி கவனிக்கிறார் என்ற உடனே மனுஷ்யபுத்திரனின் எழுத்துக்களிலும் காலச்சுவடிலும் வந்த தொனி மாறுதல். ]ஞாநியை எனக்கு அதிகமாக தெரியாது.ஓரிரு தடவை பேசியது தவிர . அவரைப் பற்றிய செய்திகள் அவரை பற்றி மதிப்பிட போதுமானவையாக இருந்தன.

கார்ட்டூனிஸ்ட் சங்கரை இந்திய இதழாளர்களில் முக்கியமான முன்னுதாரணமாகச் சொல்வார்கள் . அத்தனை அரசியல் வாதிகளையும் அவர்கள் வீட்டுப் பெயர் சொல்லி கூப்பிடுமளவுக்கு தெரிந்தவர் ,ஆனால் எவரையுமே அவர் எதற்கும் அணுகியதில்லை. நேருவை மிகக் கடுமையாக கிண்டல் செய்து கார்ட்டூன்கள் வரைந்து தள்ளியவர் சங்கர். அவருக்கு நேரு மார்க்சியத்தை கொச்சைப்படுத்துகிறார் என்று எண்ணம் .ஒரு முறை ஏதோ உலக நிகழ்ச்சிகள் சார்ந்து ஏற்பட்ட கவன நகர்வால் சங்கர் மூன்று வாரம் நேருவை வரையவில்லை .நேரு எழுதிய கடிதத்தில் இது குறித்து குறிப்பிட்டு ‘ ‘என்னை விட்டு விட வேண்டாம் சங்கர் ‘ ‘ என்றாராம் .பின்பு சங்கரின் கார்ட்டூன்கள் நூலாக வந்தபோது அவ்வரியே தலைப்பாக ஆயிற்று –Don ‘t leave me Sangar!. அந்த நூலும் சங்கரின் நெருங்கிய நண்பரானநேருவுக்குத்தான் சமர்ப்பணம் செய்யப் பட்டிருந்தது. .பலவகையிலும் சங்கர் முனுதாரணமானவர் என்பார்கள் அவரை அறிந்தவர்கள் .உலக நிகழ்வுகளை துல்லியமாக அறிந்து வைத்திருக்கும் கவனம் அவரிடம் உண்டு.நுட்பமான இலக்கிய ரசிகர்.அவருக்கு வாழ்க்கையில் ஒரு தனி இலக்கும் இருந்தது .குழந்தைகளுக்காக சங்கர் பெரும் பணச்செலவில் விடாப்பிடியாக நடத்திய சங்கர்ஸ் வீக்லி ஒரு முக்கியமான கலாச்சார சக்தியாக இருந்தது.அதன் ஓவியப் போட்டிகள் பிரபலமானவை.

மலையாளிகளில் ஒரு தலைமுறையை இதழியலுக்கு இழுக்க சங்கரால் முடிந்தது .அவர்களின் மனப்பதிவுகளின்மூலமே சங்கர் இன்று நினைவுகூரப்படுகிறார் .இவர்களில் சிலருடன் எனக்கு நேரடித் தொடர்பு உண்டு .நரேந்திரன் ,கோபாலகிருஷ்ணன் , வி கெ மாதவன் குட்டி, முதலிய இதழாளர்கள் ,ஓ வி விஜயன் , வி கெ என், எம் பி நாராயணபிள்ளை முதலிய பிற்காலத்தில் இலக்கியவாதிகளான இதழாளர்கள் ,கார்ட்டூனிஸ்டுகளான குட்டி அபு ஆப்ரகாம் போன்றவர்கள் என அப்பட்டியல் நீளமானது.இவர்களில் பலர் கேரள இதழியலுக்கு வந்தது கேரள அறிவுத்துறையிலும் ,இலக்கியத்திலும் ,இதழியலிலும் பெரும் மாற்றங்களை கொண்டுவந்தது .சங்கர் அரட்டைகளில் மீண்டும் மீண்டும் நினைவுகூரப் படுவதுண்டு .அவரது அற்புதமான நகைச்சுவை உணர்வும் ,,ஆர்ப்பாட்டமான விருந்தோம்பலும் அடிக்கடி சொல்லப்படும். [சங்கர் ஜோக்குகள் மிகப் பிரபலம் .அவற்றை அச்சில் பதிவு செய்தால் திண்ணை XXX தளம் ஆகிவிடும் .அவற்றில் பாதி நேரு மற்றும் இந்தி நடிகைகள் சம்பந்தமானவை.மிச்சம் தூதரகங்களின் விபரீதத் தேவைகள் சம்பந்தமானவை].சங்கரின் பல குணாதிசயங்கள் சுதந்திரம் ,அராஜகம் ,அரட்டை எல்லாம் இவர்களிலும் உண்டு.கூடவே சங்கரின் விசேஷ குணமான குடியும்.இலக்கியவாதி என்ற அந்தஸ்தை தந்து என்னை இவர்கள் தங்கள் உலகில் அனுமதித்தனர்.சங்கரின் மூன்றாம் தலைமுறையிலும் சங்கரின் பாதிப்பு தொடர்ந்ததை கண்டிருக்கிறேன்.

இவர்கள் நேரடியாகவே வாசக சமூகத்துடன் உரையாடும் அறிவுஜீவிகள் .ஏதாவது பிரசுரத்தின் ஊழியர்கள் அல்ல .அப்பிரசுரங்கள் அவர்களையும் அவர்கள் அப்பிரசுரங்களையும் பயன் படுத்திக் கொண்டார்கள்[தொடர்ந்த சமரங்களை இரு தரப்பும் செய்வதன் வழியாகவே இது நடைபெற்றது என்று சொல்லவேண்டியது இல்லை. ] அவர்களது எழுத்தாற்றலை ,ஆளுமையின் நம்பகதன்மையை தொடர்புகளை இதழ்களால் தவிர்க்க முடியவில்லை .கேரள இதழாளர்களில் இத்தகையோர் மிகப் பெரும்பாலும் மார்க்ஸியர்கள் என்பது இப்போது சற்று பலமாகவே சுட்டி காட்டப்படுகிறது .[ஒரு பத்திரிகை அதிபர் சொன்னாராம் , ‘ சம்பளம் நான் தருவேன் ,வேலை இ. எம் . எஸ் கொடுப்பார் ‘ என்று] அது அன்றைய அறிவுச் சூழலை வைத்துப் பார்த்தால் இயல்பானதுதான்.இவர்களுடைய கருத்துக்கள் இவர்கள் தனியடையாளத்துடன் பிரசுரமாகும்.ஒரு சமீபகால உதாரணம் , அணுகுண்டு சோதனையின் போது கேரள வலதுசாரி இதழான மாத்ருபூமி நாளிதழ் அதை வரவேற்று தலையங்கம் எழுதியது,அதன் செய்தியாளரும் இடதுசாரியுமான வி கெ மாதவன் குட்டி அதை கடுமையாக விமரிசித்து எழுதிய செய்தி அறிக்கையும் அதே இதழில் வெளிவந்தது.

அத்தகைய இதழாளர்கள் சிலர் இங்கும் செயல்பட்டதுண்டு என்பதை கேள்விப்பட்டதுண்டு. உதாரணம் ஏ என் சிவராமன் . ஆனால் அந்த மரபு நான் செய்தி வாசிக்க ஆரம்பித்த பிறகு அதிகம் காணக்கிடைக்கவில்லை.நான் அறிந்த வரை ஞாநி தவிர முக்கியமான திறமையான சில இதழாளர்கள் உண்டு. விசிட்டர் அனந்த் [துக்ளக் ] , மணா [எஸ் டி லட்சுமணன் .முன்பு துக்ளக்கிலும் இப்போது குமுதத்திலும் ] தமிழகத்தின் உள் கிராமங்களை நோக்கி இதழியலின் கணகளை திருப்பியவர் இவர். எம் பாண்டிய ராஜன்[தினமணி] தமிழக சுற்றுச்சூழல் பிரச்சினைகளை தனிக் கவனத்துடன் வெளிகொண்டுவந்தவர் இவர்.சிவக்குமார் [ தினமணி ]இசை ஆய்வாளராகவும் ,மரபு ஆய்வாளராகவும் தினமணி சிறப்பிதழ்களில் இவரது பங்கு முக்கியமானது .ஆனால் இவர்கள் எவருமே தமிழ் சூழலின் அங்கீகாரத்தை பெற்றவர்களாக இதுவரை இல்லை.தங்கள் உள்ளார்ந்த அக உந்துதலினால்தான் இவர்கள் செயல்பட்டார்கள் .இதழ்களின் ஆசிரியர்களாக கி.கஸ்தூரி ரங்கன், மாலன் ,வாசந்தி, சோ. ராமசாமி ஆகியோர் கருத்துக்களை உருவாக்க முயன்றுள்ளார்கள் .ஆனால் இதழாசிரியர்களாக இவர்களின் பங்களிப்பு குறித்து பரவலாக திருப்திஐதழாளர்களிடமில்லை .தங்களை மட்டுமே முன்னிறுத்தினார்கள் என சொல்லப்படுகிறது. பொதுவாக விசுவாசம் பணிவு மட்டுமே தமிழ் ஊடக உலகில் பொருட்படுத்தப் படுகிறது.

இதெல்லாமே தினமணி ,இந்தியா டுடே முதலிய முதல்கட்ட இதழ்களிலும் சற்று இறங்கிவந்தால் விகடன் குமுதம் போன்ற இதழ்களிலும் உள்ள விஷயங்கள் .தமிழக செய்தியுலகின் முக்கால் பங்கினை ஊடகங்களை கையில் வைத்திருக்கும் தினத்தந்தி தினமலர் போன்ற இதழ்களில் ஆசிரியர் என்ற ஆளூமையே இல்லை . தலையங்கமே இல்லை.மற்ற செய்தியாளர்கள் குறித்து சொல்லவேண்டியதே இல்லை .ஒரு நாளிதழ் அவர்கள் ஜாதியை சேர்ந்த இளைஞர்களை மட்டுமே வேலைக்கு வைத்து கொள்ளும் .ஒரு வருடப் பயிற்சி தந்து ஆங்கிலச் செய்திகளை தங்கள் நடையில் எப்படி சுருக்குவது என்று சொல்லித் தருவார்கள் .அவ்வளவுதான் . இவர்களில் பெரும்பாலோர் ஏட்டில் குமாஸ்தாக்கள், பியூண்கள்,டெலிவரி பையன்கள் என்றுதான் பதிவு செய்யப்பட்டிருப்பார்கள்.பச்சாவத் கமிட்டி அறிக்கையின் படி அளிக்கவேண்டிய ஊதியத்தை தவிர்க்க.தமிழக இதழாளர்கள் வெகு சிலர் தவிர பிறர் பெறும் ஊதியம் மாநில அரசின் கடைநிலை ஊழியர் பெறும் ஊதியத்தை விட குறைவு என்பதே இன்றையநிலை. சமீபத்தில் டாட் காம் நிறுவனங்கள் கூடுதல் சம்பளத்துக்கு ஆளை இழுக்க ஆரம்பித்தபோதுதான் பல இதழ்கள் வெளியே சொல்ல தக்க ஊதியத்தை இதழாளர்களுக்கு வழங்கின.இங்கு ஒரு முக்கிய விஷயம் உண்டு தமிழ் ஊடகங்களில் [அச்சு , காட்சி] தமிழ்நாட்டினரல்லாதவர்களின் நிறுவனங்கள் மட்டுமே ஊழியர்களுக்கு ஓரளவாவது நல்ல ஊதியம் அளிக்கின்றன.

இதனால் என்ன ஆகிறது ?முதலில் உண்மையான தரம் இதழியலில் இருப்பதில்லை .தமிழக செய்தித்தாள்களில் மொழிபெயர்ப்பு மட்டுமே நடைபெறுகிறது என்பதுதான் உண்மை .அந்த மொழிபெயர்ப்பு தரம் குறித்து சொல்லவேண்டியதே இல்லை .இரு உதாரணம் சொல்கிறேன் .கடந்த சில மாதங்களாக இதை கவனித்தேன்.சன் டி வியிலும் சரி சன் செய்திகளிலும் சரி செய்தி நாடா கீழே ஓடுவதில் சகிக்க முடியாத எழுத்துப் பிழைகள் .அப்பி ழைகள் திருத்தப் படுவதே இல்லை.உதாரணமாக இதோ இப்போதுகூட ஜார்ஜ் புஸ் என்று ஓடிக் கொண்டிருக்கிறது![என்னதான் அவர் ஓசாமாவை பிடிப்பதில் புஸ் வாணமானாலும்] இதை நான் கவனித்து 15 நாட்களுக்குமேலாகிறது.

இதழாளனின் தன்னம்பிக்கை அந்நிறுவனம் அவனுக்கு அளிக்கும் முக்கியத்துவம் மற்றும் ஊதியம் சார்ந்தது.அந்த ஊதியமிருந்தால்தான் ஒரு முக்கியமாண ஆளுமை அவ்வேலைக்கு வரவும் முடியும். நரேந்திரனைபற்றி ஒரு கதை உண்டு.அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு வேலை செய்யும்போது ஒருமுறை இந்திரா காந்தியைப்பற்றி மிக கடுமையாக எழுதநேர்ந்தது .விமான நிலையத்தில் நரேந்திரனை பார்த்த இந்திரா ‘நான் மட்டும் பிரதமராக இல்லாமல் இருந்தால் உங்களை முகத்தில் அடித்திருப்பேன் ‘ என்றாராம்.உடனே நரேந்திரன் ‘நான் இதழாளனாக இருந்தாலும் திருப்பி அடித்திருப்பேன் ‘ என்றாராம் .சிவந்த முகத்துடன் காருக்கு போன இந்திராவுக்கு அவர் நேருவின் மகள் என்பது நினைவுக்கு வந்திருக்கவேண்டும் .உடனே திரும்பி நரேந்திரனை அழைத்து ‘ அது ஒரு நல்ல பதில் நரேந்திரன். மன்னியுங்கள் ‘என்றாராம்.இந்திராவுடன் நரேந்திரனுக்கு கடைசி வரை நல்லுறவு இருந்தது.

என் நண்பரான பாலசந்திரன் மலையாளமனோரமாவின் கோவை நிருபராக இருந்தபோது தமிழ் நாளிதழ் நிருபர்கள் அவரிடம் செய்தி பெற்று போவதை பலமுறை கண்டிருக்கிறேன். [மற்ற இடங்களில் இந்து நாளிதழின் நிருபரை சார்ந்திருப்பார்களாம்] தமிழ் செய்தியாளர்கள் போக முடியாத இடங்களுக்கு பாலகிருஷ்ணன் போக முடியும் ,சந்திக்க முடியாத நபர்களை சந்திக்கவும் முடியும் . காரணம் பாலசந்திரன் தோரணையாக வருவார் ,ஆங்கிலம் பேசுவார் . அவரது ஊதியமும் சமூக நிலையும் ஒரு மாவட்ட ஆட்சியரைவிட மேலானது. மலையாள மனோரமா தன் ஊழியரை பாதுகாக்க எந்த எல்லை வரைக்கும் போகும் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை. தமிழ் நிருபர்கள் அதே அலுவலக கடைநிலை ஊழியர்கள் போல இருப்பார்கள் .அதை விட முக்கியமாக பலருக்கு வாழ்க்கைக்காக குறைந்த பட்ச வருமானத்துக்காக அந்த அலுவலர்கள் ,அரசியல்வாதிகள் தரும் சிறு பரிசுகள் அவசியமானவை என்பது.தன்னிடம் சில்லறை பெறும் ஒருவனாகவே நம் அரசியல்வாதிகள் தமிழ் இதழாளர்களை அறிந்திருக்கிறார்கள் .ஓர் அரசியல்வாதி என் முன்னிலையில் ஒரு செய்தியாளரிடம் பேசிய தோரணையை இப்போதும் நினைவுகூருகிறேன்.சினிமா வெளியீட்டுவிழாவில் செய்தியாளர்கள் பரிசுத்தொகைக்காக முண்டியடிக்கும் கேவலம் குறித்து ஒரு சினிமா நண்பர் ஒருமுறை நண்பர் குழாமில் சொல்லி சிரிக்க வைத்தார் .

ஆகவே தமிழ் இதழியல் என்பது சந்தை விதிகளால் மட்டுமே இயக்கப்படுகிறது .சந்தையுடன் சமரசமின்றி அது இயங்க முடியாது என்பது உண்மைதான்.ஆனால் இங்கு சந்தைக்கு எதிர்விசையாக செயல்படும் இலட்சியவாத அம்சம் இம்மி கூட இல்லை .சந்தைக்கு தேவையான தொழில் திறன் கூட இல்லை. பிரபல இதழ்களில் பங்கு பெற்ற சிலர் ஆற்றிய பங்களிப்பை மறக்கவில்லை .ஐராவதம் மகாதேவன் ,மாலன் ,கோமல் சுவாமிநாதன், பாவை சந்திரன் வாசந்தி முதலியோரின் தனிப்பட்ட முயற்சியால்தான் தமிழில் தீவிர இலக்கியமென ஒன்று இருப்பது பெருவாரியான வாசகர்களுக்கு அறிமுகமாயிற்று. இன்று தீவிர இலக்கிய நூல்கள் பரவலாக விற்பதும் ,பழைய நூல்கள் மறுபதிப்பு வருவதும் இவர்களினால்தான் என்பது மிகையல்ல . தினமணி ராம சம்பந்தம் எதிர்மறையான சூழலிலும் இலக்கியத்துக்கு அளித்துவரும் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது.

தமிழ் சிற்றிதழ் சூழலின் தளக்குறுகல் மூச்சுத்திணறச் செய்வது.வாசகர்களை கண்டடைந்தே ஆகவேண்டுமென்ற கட்டாயம் எல்லா சிற்றிதழாளர்களுக்கும் உள்ளது .ஆகவே தான் சுந்தர ராமசாமி கூட பிரபல இதழ்களுக்கு வருகிறார் .என் முதல் சிறுகதை தொகுப்பின் முன்னுரையில் நான் ஒருபோதும் பிரபல இதழ்களில் எழுத விரும்பவில்லை என்று சொல்லியிருந்தேன் .கடந்த 10 வருடங்களில் அனேகமாக எல்லா பிரபல இதழ்களும் என்னிடம் எழுதும்படி ஒன்றுக்கு மேற்பட்ட முறை கோரியும் மறுத்தும் வந்துள்ளேன்.ஆனால் இப்போது வேறுவழி தெரியவில்லை.சிற்றிதழ் சார் எழுத்து நவீனத்துவத்தின் குறுகிய, எதிர்மறைத் தீவிரம் கொண்ட தளத்துக்கும் ,சிறிய படைப்புகளுக்கும்தான் சரி.நான் எழுதுவது நவீனச் செவ்வியல் வடிவங்கள் ,கலாச்சாரம் மீது விரிவான எதிர்வினை செய்பவை.எனக்கு பலமுனைப்பட்ட எதிர்வினை தேவை . இதை விஷ்ணுபுர அனுபவம் எனக்கு கற்பித்தது. என் எழுத்தை எல்லா தள மக்களும் படிக்க வேண்டும் என இப்போது அறிகிறேன்.

ஆனால் பிரபல ஊடகங்களில் எந்த அளவுக்கு சமரசம் செய்துகொள்வது ?விஷ்ணுபுரத்தையும் ,பின் தொடரும் நிழலின் குரலையும் இன்றும் கூட எந்த பிரபல இதழிலும் எழுத முடியாது.தமிழ் சராசரி வாசகன் விரும்புவதை எழுதவே பிரபல ஊடகங்கள் எதிர்பார்க்கும்.அதை எழுதினால் பிற்கு எழுதுவதற்கே பொருளில்லை,அது ஒரு பிழைப்புத் தொழில் மட்டுமே .இப்போதைக்கு செய்யக் கூடுவது ஒன்று மட்டுமே கூடிய வரை ஒரு மாற்று எழுத்தை காட்டி சற்று கவனத்தை ஈர்க்கலாம்.அப்படி ஈர்க்கப் படுபவர்களுக்கு அளிக்க தரமாக எழுதலாம். அவ்வளவுதான்.

ஞாநியின் அறிவிப்பு வியப்பூட்டியது .தமிழில் பரவலான அங்கீகாரம் உள்ள இதழாளர். பலமுனைகளிலும் கடுமையாக போராடியவர் . இதழாளர் என்ற அபூர்வ உயிரினத்தில் தமிழ் நாட்டில் எஞ்சும் சில மாதிரிகளில் ஒருவர். அவர் தனக்கு ஊடகம் இல்லை என உணர்ந்தால் ஊடகம் பிறகு யாருக்கு ?

மலையாளப் பழமொழி ஒன்று உண்டு. படையை பயந்து பந்தளத்துக்கு போனால் அங்கே பந்தம் கொளுத்தி படை! தமிழில் இப்படி மொழிபெயர்க்கலாம் .கட்டிக்க துணியில்லை என்று கொழுந்தி வீட்டுக்கு போனாளாம்,அவள் ஈச்சம் பாயை கட்டி கொண்டு எதிரே வந்தாளாம்.

***

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்