அசோகமித்திரனின் ‘விமோசனம் ‘: ஒரு சிறு குறிப்பு

This entry is part [part not set] of 8 in the series 20000514_Issue

திலீப்குமார்


தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்று ‘விமோசனம் ‘. கதையைப் பற்றிக் கூறும்முன் அசோகமித்திரனின் மொழிநடையைப் பற்றிக் கூறவேண்டும். அசோகமித்திரனின் மொழிநடையின் ஆதார இயல்பு மிகவும் எளிமையானது. வாக்கிய அமைப்புக்களிலும் சொற்பிரயோகங்களிலும் மிகச்சாதாரணமான ஒரு பாணியையே கையாள்பவர் அவர். அவரது எழுத்தின் ஆற்றல் என்பது அவரது மொழிநடைக்கு அப்பாற்பட்டே உள்ளது. அசோகமித்திரன் பிரக்ஞை பூர்வமாக கடைபிடிக்கும் இந்த எளிமை பல சந்தர்ப்பங்களில் ஒரு வாசகனை அலுப்புறச் செய்துவிடும். ஆனால் நுண்ணுணர்வு கொண்ட ஒரு வாசகனுக்கு இந்த எளிமை ஒரு இலக்கிய அனுபவத்தைத் தரக்கூடும். தவிர, ஒரு வாசகன் பெறக்கூடிய இலக்கிய அனுபவம் பெரிதும் இக்கதைகளின் மொழிநடையின் எளிமையையே மறைமுகமாகச் சார்ந்திருக்கிறது.

‘விமோசனம் ‘ என்ற கதை ஒரு பெண்ணின் பார்வையிலிருந்தே சொல்லப்படுகிறது. கீழ்-மத்தியத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சராசரி கணவன் – மனைவி பற்றிய கதை. கணவன் மென்மையான உணர்வுகளற்ற ரொம்பவும் சாதாரணமான ஒரு மனிதன். மனைவியை சிறு-சிறு விஷயங்களுக்காக துன்புறுத்துபவன். தேக ஆரோக்கியமில்லாதவன், பொறுமையற்றவன்; ஏழை. ஒரு பூஜைக்காக ஒரு மகான் தங்கியிருக்கும் ஒரு வீட்டிற்கு இவர்கள் செல்லும் தினத்திலிருந்து கதை சொல்லப்படுகிறது. பூஜைக்குச் சென்ற இடத்தில் அவன் மனைவி குழந்தைக்கு பால் புகட்டும் புட்டியை கொண்டு செல்கிறாள். அவளால் மகானை சந்திக்க முடிவதில்லை. அந்த மகான் இவளைப் பார்த்த சில நொடிகளில் இவளுக்குத் தன் துக்கத்தையெல்லாம் சொல்லிவிடவேண்டும் என்ற துடிப்பு ஏற்படுகிறது. ஆனால் எப்படியோ அவளால் எதுவும் சொல்ல முடியாமல் போகிறது. அவள் திரும்பி வீட்டுக்கு வருகிறாள். அவள் கணவன் அன்று வரவில்லை; பின் எப்போதுமே வரவில்லை. இது ‘விமோசனம் ‘ கதையின் சாராம்சம்.

இந்தக் கதை கணவன்-மனைவி என்ற பேதத்திற்கு அப்பாற்பட்டு மனித இயல்பின் தன்மைகளை பற்றியதாக இருந்தாலும், பிரதானமாக ஒரு இந்தியத் தன்மை மிகுந்த கதை. இக்கதையில் தோன்றும் முரண், இரு மனிதர்களுக்கிடையேயும் தோன்றக்கூடிய ஒன்றுதான்; இருந்தாலும் ஒரு சராசரி இந்திய தம்பதியினர்க்கிடையே வைத்து இந்த முரண் இயங்கும் போது இந்தக்கதை பல பரிமாணங்கள் பெற்று கூர்மையடைந்து விடுகிறது.

பொதுவாகக் கணவன்-மனைவி என்றில்லாமல் இரு தனி நபர்களுக்கிடையேயான உறவுகூட அவர்களது தனித்தனியான மனவார்ப்புகளின் சமநிலையையே பெரிதும் சார்ந்துள்ளது. இந்த மனவார்ப்பின் மூலக்கூறுகளை ஒரு மனிதனுக்கு அவன் சார்ந்திருக்கும் சமூகம்; நடை முறையிலிருக்கும் மதிப்பீடுகள், கலாச்சாரம் பழக்கவழக்கங்கள் இவற்றின் வாயிலாக வழங்குகிறது. ஒருவன் தான் வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகத்தின் நடைமுறையிலுள்ள கலாச்சார மற்றும் மதிப்பீடுகளைக் கொண்டு தன் மனவார்ப்பின் தன்மையை அமைத்துக் கொள்கிறான் என்றாலும், கூடவே தன் அறிவு, அனுபவம் இவற்றிற்கு ஏற்ப சமூகம் அவனிடம் வலியுறுத்தும் மதிப்பீடுகளில் சிலவற்றை அங்கீகரித்து ஏற்கவும், சிலவற்றை நிராகரித்தும் விடுகிறான். இச்செயல்முறையின் மூலம் அவன் தனக்குள், தனக்கே உரிய ஒரு இசைவையும் சமநிலையையும் அடைகிறான். இதுவே அவன் தன் சமூகத்துடனும் சகமனிதனுடனும் உறவு கொள்ள அவனுக்கு உறுதுணையாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மனவார்ப்பு, அச்சமூகத்தின் அறிவு முதிர்ச்சிக்கு ஏற்பவே ஒரு சமநிலையை அடைகிறது. காலமாறுதலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின், ஒரு குறிப்பிட்ட தனி மனிதனின் மனவார்ப்பின் சமநிலை அறவே சமன் இழந்தும் தோன்றக்கூடும்.

ஒரு சராசரி இந்தியக்கணவன்-மனைவிக்கிடையேயான உறவு, முக்கியமாக அவர்களுக்கிடையேயான அன்யோன்யமான கணங்களின் தொகுப்பிலிருந்தே உருக்கொள்கிறது. இந்த அன்யோன்யமான கணங்களின் தொகுப்பானது எத்தனையோ சிறுசிறு உணர்வுகளையும் நிகழ்வுகளையும் உள்ளடக்கியது. அழகு, இருவரது உடலமைப்பின் பரஸ்பர அங்கீகரிப்பு, உடலுறவு, உடலுறவுக்கொள்ளும் பாங்கு, மற்றும் மனநிலை, பேச்சு, சிரிப்பு, வியாதிகள், சாப்பாடு, சாப்பாட்டின் ருசிகள், பொருளாதார நிலை, சமய நம்பிக்கை ஆகியவை. ஒரு கணவனும் மனைவியும் இந்த அன்யோன்யமான கணங்களினூடேதான் ஒருவருக்குள் மற்றவர் பிரவேசிக்கவேண்டியுள்ளது. ஆனால் இந்த பிரவேசமானது ஒரு குறிப்பிட்ட எல்லைவரையே சாத்தியமாகிறது. ஒருவர் மற்றவரது மதிப்பீடுகள், லட்சியங்கள், கற்பிதங்கள் சார்ந்த ஆதாரமான மனவார்ப்பை என்னதான் அன்யோன்யமாக அவர்கள் இருந்தாலும் நெருங்கவே, பாதிக்கவோ முடிவதில்லை. இவர்களுக்கிடையே எத்தனை அன்யோன்யமான உணர்வுகளும் நிகழ்வுகளும் இருந்தாலும்கூட இது சாத்தியமாவதில்லை. இன்னும் சொல்லப்போனால், இவர்களது ஆதார மனவார்ப்பின் சமநிலை பராமரிக்கப்படுவதால்தான் மேற்குறித்த அன்யோன்யமான கணங்களே சாத்தியமாகின்றன. தம்பதியினருள் ஒருவரது ஆதாரமான மனவார்ப்பின் சமநிலை குலைந்து போனாலும்கூட அவர்களுக்கிடையேயான அன்யோன்யம் ஒரு நொடியில் மறைந்துவிடக்கூடும்.

அசோகமித்திரனின் ‘விமோசனத்தில் ‘ நிகழ்வது இதுதான். இக்கதையில் வரும் மனைவி, கணவன் தன்னை துன்புறுத்தும் ஒரு கட்டத்தில் அவனை வழக்கத்துக்கு மாறாக எதிர்க்கிறாள். இப்படி எதிர்ப்பதன் மூலம் அவள் தன் கணவனின் மனவார்ப்பின் சமநிலையை குலைத்துவிடுகிறாள். இது நடந்த உடனேயே, அவர்களுக்கிடையேயான அன்யோன்யம் சுத்தமாய் மறைந்து விடுகிறது. கூடவே, மனைவியும் தன் கணவனை எதிர்த்ததன் மூலம் தானும் தன் மனவார்ப்பின் சமநிலையை இழந்துவிட்டதாக உணர்கிறாள். எத்தனையோ அன்யோன்யமான உணர்வுகளும் நிகழ்வுகளும் இந்த தம்பதியினர்க்கு இடையேயும் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தும்கூட இவர்களது வாழ்க்கை ஒரு இசைவை திரும்பப்பெறுவதேயில்லை. கணவன் தன் மனைவியை விட்டு நிரந்தரமாக பிரிந்துவிடுகிறான்.

‘விமோசனம் ‘ கதையில் வரும் மேற்குறித்த நிகழ்ச்சியில் உள்ள மனோதத்துவப் பரிமாணங்களை தவிர அதற்கிருக்கும் சமூகப் பொருண்மையும் மிக முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. இது ஒரு தனிப்பெண்ணின் எதிர்ப்பாக இல்லாமல், நம் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட கால வரையிலான மொத்தப் பெண்மையின் எதிர்ப்பாகவும் இது சொல்லப்படலாம். மேலும் நம் காலத்துப் பெண்மைக்கு சாத்தியப்பட்ட எதிர்ப்பு இவ்வளவுதான் என்பதையும் இக்கதை வரையிறுத்துச் சொல்கிறது. இதன் விளக்கமாகவே இந்தப் பெண் மீண்டும் தன் கணவனுடன் தனக்கிருந்த உறவை மீண்டும் நிலைப்படுத்திக் கொள்ள தன் கணவனின் காலில் விழுந்து மன்றாடுகிறாள். இச்செய்கையிலுள்ள மனோதத்துவ யதார்த்தத்தைப் போன்றே ஒரு சமூக நிலையின் பிரதிபலிப்பும் உள்ளது. இவள், தன் கணவனோடு தனக்கு ஏற்பட்ட பிணக்கு தீராத ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் அந்த மகானைத் தேடி செல்கிறாள். இக்கதையில் வரும் மகான் ரொம்பவும் இயல்பான ஒரு பாத்திரமாக படைக்கப்பட்டு இருந்தாலும், இப்பெண் அவரை மீண்டும் சந்திக்கச் செல்லும்போது அவர் யதார்த்த உலகிற்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின், ஒரு உணர்வின் குறியீடாக மாறிவிடுகிறார். இந்தப் பெண்ணும் அத்தகைய ஒரு சக்திக்காகவே, தர்க்க அடிப்படையில் அது விவேகமற்றதான ஒரு செயலாகப்பட்டாலும் ஏங்கி நிற்கிறாள். நாம் நினைப்பது போலவே அவளுக்கு அவள் எதிர்பார்த்த ‘விமோசனம் ‘ கிடைப்பதில்லை.

இதில் வரும் கணவன் தன் மனைவியின் செயலுக்குக் காட்டும் எதிர்வினை ஒரு சமூக உண்மையின் பிரதிபலிப்பாக மட்டும் காணப்பட வேண்டிய ஒன்றல்ல. இக்கதையின் நீட்சிக்கான ஆதாரக்கூறுகள் இந்தக்கதையின் சமூக மற்றும் நடைமுறை மதிப்பீடுகளின் மீதான விமர்சனத்தையும் தாண்டி இக்கதையின் மனோதத்துவப் பரிமாணங்களிலேயே உள்ளன என்று நான் சொல்லுவேன்.

உருவ ரீதியாகவும் இக்கதையில் பல சிறப்புகள் உள்ளன. இக்கதையின் சக்தி முழுவதும் இதில் வரும் மனைவி தன் கணவனை எதிர்க்கும் கட்டத்தில் ‘உம் ‘ என்று சொல்லும் ஒலிக்குறிப்பில் தான் மையம் கொண்டிருக்கிறது. இம்மையத்தில் இருந்து ஒரு ரொம்பவும் சாதாரணமான ஒலிக்குறிப்பு வாயிலாக வெளிப்படும் சக்தி, கதையின் ஒவ்வொரு சொல்லையும் உயிர்ந்தெழச் செய்கிறது. அதைத் தாண்டியும் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. அசோகமித்திரன் இக்கதை நெடுகிலும் நாம் எளிதில் அலட்சியப்படுத்திவிடக் கூடிய சிறு சிறு நடைமுறைத் தகவல்களை எவ்வித ஆயாசமும் இன்றி கூறிக்கொண்டே செல்கிறார். இந்தக் கதையில் வரும் கணவன்- மனைவி பாத்திரங்கள் தங்கள் மனவார்ப்பின் சமநிலையை ஒரு கட்டத்தில் இழந்து விடும்போது மேற்குறித்த தகவல்களும், அவை கூறப்பட்டிருக்கும் விதத்தில் காணப்படும் துல்லியமும், அவை கூறப்பட்ட விதமும் திடாரென்று ஒரு விஷேசத்துடிப்புடன் இயங்குவதை பார்க்கமுடியும்.

இன்னொரு முக்கியமான அம்சம். பொதுவாக பெரும்பாலான கதைகளில் வருவதுபோல ஒரு முரண், அதன் இயக்கம், அதற்கொரு தீர்வு என்றில்லாமல் இக்கதையில் அதன் முரணை ஆரம்பத்திலேயே கூறி, அதன் இயக்கத்தை நாம் பொருட்படுத்திவிட முடியாத ஒரு தொணியில் விளக்கி, தீர்வு என்று ஏதும் ஆவேசமாக கூறாமல் கதையம்சத்தின் சுவாரஸ்யத்திலிருந்து விடுவித்து வாழ்க்கையின் பிரத்யட்சங்களை நோக்கி நம்மை அழைத்துவருகிறார் அசோகமித்திரன். கணவன் மனைவி உறவு பற்றி பல நிலைகளிலிருந்தும் நாம் படித்து உணரக்கூடிய கதை ‘விமோசனம் ‘.

***

Series Navigation

திலீப் குமார்

திலீப் குமார்