அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள் ‘

This entry is part [part not set] of 2 in the series 20000604_Issue

‘சூரியராஜன் ‘


கொஞ்சம் கிட்ட நெருங்கிப் பார்த்தால் எல்லாவகை புனைகதைகளுமே gossip, புறம் பேசல், பழைய நினைவுகளை அசை போடுதல் என்பது புலனாகும். அசோகமித்திரனும் விதிவிலக்கல்ல! என்ன ஒன்று- ஒரு துறவியின் முணுமுணுப்பு போல பட்டும் படாமல் சற்று விலகி நிற்கும் அவரது எழுத்துக்கள்.

ஈஷிக்கொள்ளாமல் இப்படி விலகி நின்று பார்த்துச் சொல்வது பிரச்னையின் ஆழ அகலங்களைத் தெளிவு படுத்தக்கூடும் என்பது பலம். இந்த ‘தாமரை இலைத் தண்ணீர் ‘ மனப்பான்மை படிக்கிற வாசகனையும் தொத்திக் கொள்ளுமெனில் படைப்பின் செய்தி வாசகனைச் சென்று சேராமல் போய்விடக்கூடிய அபாயம் இதன் பலவீனம். இதையும் மீறி ‘கரைந்த நிழல்கள் ‘ வாசகனின் மனத்தை ஆழமாக பாதிப்பதற்குக் காரணம், ஆசிரியரின் நுட்பமான எழுத்துத் திறமை என்றுதான் சொல்லவேண்டும்.

வாழ்க்கையின் நிஜங்களுக்கு எந்த வகையிலும் மாற்றுக் குறையாத திரைக்குப் பின்னால் உள்ள நிஜங்களைப் பற்றிய படப்பிடிப்பு – ‘கரைந்த நிழல்கள் ‘.

சினிமாவில் புரொடக்ஷன் மானேஜர் என்பவர் அந்தக் காலத்தில் விதிக்கப்பட்ட பத்தினிப் பெண்ணின் இலக்கணத்துக்கு ( ?) எந்தக் காலத்திலும் பொருந்திவர வேண்டியவர். எல்லோருக்கும் பின் தூங்கி முன் எழ வேண்டும். புரொடக்ஷன் மானேஜர் (தயாரிப்பு நிர்வாகி) நடராஜன், அதிகாலை மூணு மணிக்கு ‘ஆறு ஷாட் மொத்தமே நூற்றைம்பது அடி ‘ படமெடுக்கவேண்டிய ஒரு குரூப் சாங்குக்கு வேண்டிய பிரயத்னங்களைப் பரபரப்புடன் பண்ணுவதில் துவங்குகிறது முதல் அத்தியாயம். வெறும் விடிகாலை நேரம் மட்டுமல்ல; தயாரிப்பாளர் ரெட்டியாரின் வீடு அடுத்தவாரம் அட்டாச்மெண்டுக்கு வரப்போகிற நேரம், பின்னால் ரெட்டியார் காணாமல் போய்விடுகிறார். அவரிடம் கடைசி நிலை ஊழியம் பார்த்த சம்பத் டைரக்டராகவோ, தயாரிப்பாளராகவோ உயர்ந்து விடுகிறான். பத்து தயாரிப்பாளர் போனால், 100 பேர் இண்டஸ்டிரிக்கு வருவது சினிமாவின் நிரந்தரம். அதன் உதாரணம் மேற்சொன்ன சம்பவம் என்று சொல்லலாம்.

கரைந்த நிழல்களின் மிகச்சிறப்பான அம்சம் மிகக்குறைந்த வரிகள் கொண்ட வர்ணிப்புகளாலும், சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களின் வாய்ப்பேச்சாக வரும் ஓரிரு வரிகளாலும் உருவாக்கப்பட்டிருக்கும் மறுத்துச் சொல்லமுடியாத ‘வகை மாதிரியான ‘ கதாபாத்திரங்கள்தான். ‘மாமண்டூரில வெத்திலை கிடைக்குமில்லே ? ‘ என்று கேட்கும் ராம்லால். பொங்கலுக்கு பூஜைபோட கோயம்புத்தூரில இருந்து பார்ட்டி வராங்க ‘ என்று சொல்லும், இன்டிபெண்டட்டாக படம் இயக்க இருக்கும் உதவி இயக்குனர் ராஜகோபால். உடையிலும், பாவனையில் எப்போதும் நாசுக்கு காட்டும் சிட்டி (எடிட்டிங் அஸிஸ்டென்ட்) இரண்டு நூறுநாள் படங்கள் கொடுத்த டைரக்டர் ராம்சிங்கைச் சுற்றி நாலைந்து நாற்காலிகள் இருந்தும் யாரும் உட்காராதது. ஸ்டூடியோ போகும் வழியில் தன் உறவினரை ஷூட்டிங் பார்க்க அழைத்துவர அவசரம் காட்டும் சம்பத். தன் வீட்டிலேயே மற்றவர்களுடன் நேராகக் கூட பேச இயலாத ராம ஐய்யங்கார். தான் வசனமெழுதிய படம் பிரபலமானதும் புதிதாக அரை டஜன் பட்டு ஜிப்பாக்கள் தைத்துக் கொண்ட கதாசிரியர். படம் போடச் சொல்ல அழைப்பு மணி இருந்தும் ஆபரேட்டர் ரூமுக்கே ஓடிப்போய் சொல்லிவிட்டு வருகிற பண்டிட்ஜி என்று உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இன்னொன்று, வாழ்க்கையின் ஈவிரக்கமற்ற, விசித்திரமான ரகசியச்சிரிப்பு – மிகவும் நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட்டிருப்பது. ஒரு இளம் நடிகையின் அலட்சியத்தினால் அழிந்த புரொடக்ஷன் கம்பெனி, அந்த கம்பெனியின் ஸ்கிரிப்ட்ஸ் ரிப்போர்ட்ஸ் முதலியவை கரையான்களால் அரிக்கப்பட்டு அரைப்படி தூசாக மக்கிப்போன கதை. ராம ஐயங்காரின் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விளம்பரங்கள் ஏதோ ஒரு மொழி வெறி இயக்கத்தினால் தவிடு பொடியாவது, சம்பத்தின் உயர்வு, நடராஜனின் தாழ்வு இன்னபிற.

அந்தக்காலப் படங்களில் வகுக்கப்பட்ட இலக்கணமாக, கால இடைவெளியைக் குறிக்க fade in, fade out என்கிற உத்தியைக் கடைபிடிப்பார்கள்(இப்போதெல்லாம் வர்ஜா வர்ஜியமில்லாமல் cut to cut தான்) கால நீட்சியை ரஸிகன் தானும் உணரத்தக்க வகையில் அமைந்த கட்டுக்கோப்பு அந்த உத்தி. அதே பாணியில், நான்கு sequenceகளை பத்து அத்யாயங்களாக அமைத்துக் கொண்டு நாவலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். சில அத்யாயங்கள் நாவலுக்கு பொருந்தி வராதது போலத் தோற்றம் காட்டினாலும், ஏதோ ஒரு வகையில் ஆழ்ந்த தொடர்பு கொண்டிருப்பது உன்னிப்பாக பார்க்கும் போது புலனாகும்.

உதாரணமாக ராம ஐயங்காரும் அவரது மகன் பாச்சாவும் பேசிக்கொள்வதும், சற்றே புத்திசாலித்தனம் துருத்திக் கொண்டு தெரியும் ஒற்றைவரி வாதப் பிரதிவாதங்களினால் அமைக்கப்பட்ட ஒன்பதாம் அத்யாயத்தின் முன்பகுதி, கடைசியில் வருகிற கிட்டத்தட்ட மூன்று பக்க அளவுள்ள ராமாஐயங்காரின் அறிக்கை போன்ற நீளமான பேச்சினால் ஈடுகட்டப்பட்டுவிடுகிறது. அது வெறும் லெளகீக வாதியின் விருதாவான அறிவுரை அல்ல! எந்த ஓர் முந்தைய தலைமுறை மனிதனும் தனக்குத்தானே வெற்றியை தேடிக்கொண்டவன் என்ற ஹோதாவில், அடுத்த தலைமுறை மனிதனுக்குத் தன்னை வெளிப்படுத்தி பின்னவன் குறையை குத்திக்காட்டும் மாறாத தீவிரமாகத்தான் தோன்றுகிறது. நாவலின் இறுதியில் நெருடுகிற விஷயங்கள் இரண்டு. ஜெயச்சந்திரிகா, ராஜகோபாலைத் திருமணம் செய்து கொள்வது, நடராஜனின் வீழ்ச்சி. இரண்டுமே கதாபாத்திரங்கள் சம்பந்தப்பட்டவை. முதல் இருவர் தொடர்பான முடிவுக்குக்கூட ‘யாரும் அதிகம் லட்சியம் செய்ய வேண்டியிராத ஒருவனிடம் அசாதாரண கவனம் காட்டுவது ஜெயச்சந்திரிகாவின் இயல்பு ‘ என்று ஆசிரியர் ஒரு இடத்தில் சொல்லியிருக்கும் வர்ணனையிலிருந்து ‘அது அப்படி நேர்ந்திருக்கலாம் ‘ என்று உத்தேசிக்க முடிகிறது. நடராஜன் கதாபாத்திரத்தின் முடிவை ஆசிரியர் வேறு மாதிரி வார்த்திருக்கலாமோ என்றுதான் தோன்றுகிறது.

கதைப்படங்கள் ஒரு டாக்குமெண்டரிப் படச்சூழலிலும், டாக்குமெண்டரிகள் ஒரு கதைப்படத் தொனியிலும் அமைக்கப்படுகிறபோது, ஆழ்ந்த கனம் கூடும் என்ற ட்ரூபோ சொன்னதாக ஞாபகம். அந்தப் பாணியில் நிறைய ‘கதைகள் ‘ ஒரு உலகத்தை எந்தக் கதையுமில்லாமல் படம் பிடித்துக் காட்டியிருப்பது அசோகமித்திரனின் திறமை.

ஸ்டூடியோ சிஸ்டம் பிரபலமாக இருந்த காலகட்டத்தை மையமாகக் கொண்ட நாவல் இது. தற்போது பற்பல மாற்றங்கள் வந்து விட்டன. எந்த சினிமாக் கம்பெனிக்கும் இப்போதெல்லாம் ஸ்டூடியோக்களில் நிரந்தர அலுவலகம் கிடையாது. ஏனெனில் ஸ்டூடியோக்களே நிரந்தரமில்லை (படப்பிடிப்புக்கு) என்கிற அளவு தணித்துப் போய்விட்டது. ஆளாளுக்கு கேமராவை தோள்மீது தூக்கிவைத்துக் கொண்டு வயக்காட்டுப் பக்கம் போய்விடுகிறார்கள். ஆகாத மாமியாரை பார்க்கப்போகும் மருமகள் போல் எப்போதாவது ஒரு தடவை setwork, பேட்ச் வொர்க் என்று தான் ஸ்டூடியோ பக்கம் தலைக்காட்டுக்கிறார்கள். இப்படி மேற்போக்கான மாற்றங்கள் நேரிடினும், அடிப்படையில் கரைந்த நிழல்கள் இன்றும் படிக்கப் புதிதாக இருப்பது அதன் ஆச்சரியம்.

இந்த நாவலில் ஆசிரியர் சினிமா உலகத்தை முழுக்க விண்டு காட்டிவிட்டாரா ? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அது ஆசிரியரின் நோக்கமும் அல்ல.

தனக்கு நேர்கிற அனுபவங்களையும், அதனால் பெறப்படும் சிந்தனைகளையும் சார்ந்து எந்த ஒரு பிரச்னை குறித்தும் தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்து சேர்வது சாத்தியம் என்றே மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால், எந்தவொரு தீர்மான அபிப்ராயங்களுக்கும் இடம் தராதது வாழ்க்கை. அப்படிப்பட்ட கருத்துக்களைக் குறித்து எள்ளை நகையாடி கெக்கலிகொட்டிச் சிரிப்பது வாழ்க்கை. எனில், அதன் மிகச்சிறிய பகுதியான சினிமாஉலகத்துக்கும் இது பொருந்தக்கூடும். கடலுக்கு உண்டான நியாயம் அதன் துளிக்கும் உண்டுதானே ? இதை அறியாதவரா என்ன அசோகமித்திரன் ?

***

 

 

  Thinnai 2000 June 06

திண்ணை

Series Navigation

  • கவிதைகள்
  • அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள் ‘

'சூரியராஜன் '

'சூரியராஜன் '