அக்கினி மதில்

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

கண்ணப்பு நட்ராஜ்


ஊ….ஊ….ஊ….

பேரிடிச் சத்தமாய் காட்டு மரங்களில் அந்தப் பிளிறல் பட்டு எதிரொலித்தது.

திடுக்கிட்டு எழுந்தான் பொன்னன்.

தலைமாட்டில் கிடந்த ‘ரோச் லைற்றை ‘எடுத்து அதன் வெளிச்சத்தில் பரனில் கிடந்த ஒற்றைக் குழல் துப்பாக்கியை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டான்..

‘என்னப்பா ‘ மனைவியின் கேள்விக்கு

‘அலியன் யானை வந்துட்டுது ‘ என்று பதிலளித்துவிட்டுக் குடிசையைவிட்டு வேகமாக மரவள்ளிக்கட்டைகளினூடு கட்டைகளில் இடறிக்கொண்டு முந்திரிகைப் பந்தைலைக்கடந்து செவ்விளநீர் விளாட்டு மரங்களினூடாய் ஓடி அந்த எல்லைக் கடவையும் தாண்டிஇ காட்டிற்கும் குடியேற்றத்திட்டத்திற்கும் எல்லையாயிருந்த வைரமேறிப்புடைத்துக் காவல் மரம் போலிருந்த அந்த வீரையில் விறு விறுவென்று ஏறி வசதியான உச்சிக்கொப்பில் உறுதியாகச் சாய்ந்தவண்ணம் நின்று தோளில் தொங்கிக் கொண்டிருந்த துப்பாக்கியை எடுத்து உறுதியாய்ப் பிடித்துக்கொண்டான்.

‘இன்னும் நிலம் வெளிக்கேல்ல ‘

எல்லாக் குடியேற்றவாசிகளும் எழும்பிவிட்டார்கள் யானை வராமல் தடுக்கும் முன்நடவடிக்கையாக ஓலைத் தீப்பந்தங்களை ஏந்தியவாறும்இ ‘டமார் ‘ ‘டமார் ‘ ‘டமார் ‘ எனத் தகரப்பேணிகளைத் தட்டியவாறும் பதட்டத்தோடு அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஊ….ஊ….ஊ….

‘இந்த முறை இதைத் தப்பவிடக்கூடாது ‘ பொன்னன் காதைக் கூர்மையாக்கிச் சத்தம் வந்த திசையை நோக்கித் துப்பாக்கியைக் குறிபார்த்துக் கொண்டான்.

ஊ….ஊ….ஊ….

மிக நெருக்கமாக அந்தப்பிளிறல். பொன்னன் தீவிரமானான். துப்பாக்கியை இயக்க அந்த ‘வில்லை ‘ த்தட்டத் தயாரானான்.

மங்கிய இருளை ஊடுருவிய அவன் கண்களில் எதுவும்தென்படவில்லை.

‘ஹோய்.. ‘ ‘ ‘ஹோய்.. ‘ ‘ஹோய்.. ‘ ‘ஹோய்.. ‘ ‘ஹோய்.. ‘ ‘ஹோய்.. ‘ ‘ஹோய்.. ‘

வழமையான குரலெடுத்து அயற் குடியேற்றவாசிகளை உசார்ப்படுத்தினான்.

நிலம் மெல்ல வெளிக்கத் தொடங்கியது.

ஊ….ஊ….ஊ….

இன்று இந்தப்பிளிறல் வழமைக்கு மாறாய் ஆக்ரோஷக்குரலாய் அட்டகாசப் பேரொலியாய் இல்லாமல் ஈனக் குரலாய்..

‘அலியன்அழுகின்றதா ? ‘

ஊ….ஊ….ஊ….

ஆய்ந்து ஆய்ந்து அவன் தீர்மானித்துக் கொண்டான்.

‘அலியன் எங்கோ மாட்டிக்கொண்டுவிட்டது ‘

ஊ….ஊ….ஊ….

அலறல் மிக அண்மையிலுருந்து திலகத்தின் வளவிலுருந்து.

‘திலகம் ‘ ‘திலகம் ‘ ‘திலகம் ‘

அந்தப் பெயரோடு ஒரு இனத்தின் இருளும் எழுச்சியும்இ அவள் சாதாரண பெண்ணல்ல. சரித்திரம். திலகம் இந்தப்பதினைந்து ஏக்கர் காணியில் ஒன்டரை ஆண்டுகளில் ஒருகர்ப்பக வனத்தையே சொல்லாலும் செயலாலும் படைத்துவிட்டாள்.

இப்போது திலகம் இல்லை. இதோ அவளது காணி பாழடைந்து கிடக்கின்றது.

அவள் நினைவுகள் அவன் இதயத்தில் எழுந்துஇ விறு விறுவென்று அவன் இரத்தநாளங்களில் சு+டேற்றுகின்றது.

‘அவள் சாவுக்கு இந்த அலியன் யானையல்லவா காரணம் ? ‘

தனியனாக வந்தாள். எண்பத்தி மூன்றாம் ஆண்டுக்கலவரத்தில் எல்லாம் இழந்துஇ கருகிப்போனவளாய்இ கிளிநொச்சிச் சந்தையில் வந்திறங்கினாள்.

சிங்களம் இந்தத்திலகத்தின் பொட்டைப்பறித்து மொட்டையாக்கியது தமிழ் பேசிய ஒரே காரணத்திற்காய்.

ஊ….ஊ….ஊ….

கண்டியில் பிறந்து கொழும்பில்வளர்ந்த இந்தச் செந்தமிழ்ச்சியை அகதியாய்க்கித்துரத்த்தின சிங்களத்தின் பேரினவாதக் கரங்கள்.

ஊ….ஊ….ஊ….

அலியன் ஈனமாய்ப் பிளிறிக்கொண்டிருந்தது.

ஊ….ஊ….ஊ….

பொன்னன் தான் அவளை இங்கே அடைக்கலம் கொடுத்துக் கூட்டி வந்தான்.

அவள் இவனுக்கு கூடப்பிறவா சகோதரி. ஊருக்கெல்லாம் உறவுக்காரியானாள் விரைவில்.

ஊ….ஊ….ஊ….

தனக்குப் பக்கத்தே தரிசாகக் கிடந்த பதினைந்து ஏக்கர் நிலத்தினை இவளுக்கு எடுத்துக் கொடுத்து காணிக்குச்சொந்தக்காரியாக்கினான்.

அக்கினியாய் எழுந்தாள். அக்காட்டு நிலத்தோடு போராடினாள்.

வாழையாய்இ தோடையாய் எலுமிச்சையாய் தென்னையாய் மாவாய்ப் பலாவாய்… அந்தக் காணி அவள் வியர்வையில் பச்சையாய்க் கூத்தாடியது..

ஊ….ஊ….ஊ….

எத்தனை கனவைச் சுமந்த இந்தத்திலகத்தின் நெஞ்சை மிதித்துக் கொன்றது இந்த அலியன்இ அவள் சந்தையால் திரும்பி வந்தபோதுஇ பிரதான வீதியையும்

அந்தக் குடியேற்றத்திட்டத்தையும் இணைக்கும் மண் ஒழுங்கையில் பெரிய அரசமரத்தினகீழ் இருந்த பிள்ளையார் கோயிலின் முன் உருட்டி உருட்டித் திலகத்தை மிதித்தது. இந்த வெறிபிடித்த அலியன். அவள் நினைவுகள் வர ரத்தம் கொதிக்க எழுந்தான் பொன்னன்

ஊ….ஊ….ஊ….

பொன்னன் படித்தது குறைவுதான்.யாழ்ப்பாணத்திலுருந்தபோது கேட்டவைஇபார்த்தவை ஏராளம்.

‘கண்டி மலை முகட்டிலே கடையப்படும்

உண்டி போடும் உணவுச் சு+ரியர்கள்

வாக்குரிமை இழந்து வண்டிகாய்ந்து

வயிறு எரிந்து நின்றபோதுதான்

கொழும்பைக்கொழுத்தப் புத்தரின் சித்தத்திலே

தீ முளைத்தது ‘

ஒரு பெயரற்ற கவிஞுனின் வரிகளை மீண்டும் மீண்டும் சொல்லுமளவுக்கு

அவனின் இதயம் விரிவாகத் திறந்தே இருந்திருந்தது.

ஊ….ஊ….ஊ….

இப்போது அந்த அலியனின் சத்தம் வருகின்ற இடத்தைப் பொன்னனால் அடையாளப்படுத்தமுடிகின்றது..

‘ஓம் இது திலகத்தின் இடிஞ்ச கிணற்றில்தான் விழுந்து கிடக்குது ‘

திலகத்தின் காணியை நோக்கி மற்றக் குடியேற்றவாசிகளும் ஓடிவருவது தெரிகிறது.

பொன்னன் இறங்கி ஓடுகின்றான்.

திலகத்தின் வளவில் பத்தை எழும்பியிருந்தது. அந்தக் குடிசை சரிந்து பாறிப்போய்க்கிடந்தது.

ஊ….ஊ….ஊ….

‘அதோ அலியன் ‘

ஓற்றைத் தந்தம் முறிந்திருந்திருந்தது.

பின்னங்கால்கள் பள்ளத்துள் புதைந்திருந்தன..

அந்த இராட்சத யானையால் தன் சரீரத்தை பள்ளத்திலுருந்து வெளியே அசைக்கக் கூடமுடியாதிருந்தது.

தும்பிக்கையைத் தூக்கிப்பிளிறியது.

ஊ….ஊ….ஊ….

கூட்டத்தினர் பாதி அச்சத்தோடு வேடிக்கை பார்த்தனர்..

திலகம் இந்தக் கிணற்றை வெட்டி முடிப்பதைத் தன் இலட்சியமாய்க் கொண்டிருந்தாள். எவ்வளவு பாடுகள்இ வெயிலின் தகிப்பிலும் தனியனாய் கடகம் நிறைந்த மண்ணைச் சுமந்து..

‘பதினைஞ்சு முழம்..இண்ணும் பத்து முழத்தில் தண்ணீர் வந்திடும். ‘

இந்தக்கட்டத்தில்தான் இந்த யானை அவள் நெஞ்சில் மிதித்தது.

எல்லோருக்கும் இப்போது திலகத்தின் நினைவு.

பொன்னனின் உடன் பிறவாச் சகோதரி அவள்.

எவரையும் இங்கு அவளுக்குப் பிறகு குடி வர பொன்னன் அனுமதிக்கவில்லை இது அவளின் நினைவுச் சின்னம்.

எல்லாக் காரியங்களிலும்இ நன்மைகள் தீமையிலும் முன்னுக்குநிற்பவன் பொன்னன். அவனை மீற யாரால் முடியும் ?

தூண்போற் துடையும்

சுவர்போல் மார்பும்

நறுக்காத முரட்டு மீசையும்.. வன்னியின் சிங்கம் இந்தப் பொன்னன் வெயிலில் கறுத்து முறுக்கேறிக் கிடந்தான்.

தூக்கி உயரக்கட்டிய சாரம்இ நீட்டிய துப்பாக்கியுடன் வந்து நின்றான் பொன்னன்.

ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….

ஈனமாய்க் கத்தியது அலியன்.

பொன்னன் யானையின் பிடரிக்குக் குறிபார்த்தான்..

‘தம்பி பொன்னன் பொறு ‘

துப்பாக்கியைத் தன் கையால் பிடித்து மேலுயர்த்திய வண்ணமாக வடிவேலுப்பெரியவர்.

திணிசாகவும் கோபத்தோடும் பெரியவரைப்பார்க்கிறான் பொன்னன் .

பார்வையின் அர்த்தம் புரிந்த அந்தப் பெரியவர் அவனின் கோபத்தைத் தணிக்க முனைந்தவராக மன்றாட்ட தொனியில்..

‘தம்பி உயிர்ப்பிச்சை கேட்கிற ஒரு பிராணியைக் கொல்லக் கூடாது ‘

வழக்கமாகவே குறைவாகப் பேசிப்பழக்கப்பட்ட பொன்னன் ‘இது என் தங்கைச்சி திலகத்தைக் கொன்ற கொடிய மிருகம் இந்த ஊரின் அமைதியைக் கெடுத்த மிருகம் கொல்லாமல் விடமாட்டன் ‘

‘தம்பி இது காடாயிருந்த போது இந்த யானைகளின் வீடு இதுதான் நாம் தான் அவற்றிற்குத் துரேகம் செய்து விட்டோம், அவற்றின் கூட்டைக் கலைத்தது பிழையில்லையா ? ‘

‘நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறியள். இந்த அலியனால நாங்கள் நடமாடவே பயப்படுறம் திலகத்தின் மேல் நான் சத்தியம் பண்ணினனான் நான் கொல்லாமல் விடமாட்டன் இதைக் கொன்றால்தான் அவளுக்குச் சாந்தி கிடைக்கும் ‘

‘தம்பி பொன்னன் விழுந்தவனைத் தூக்கிவிடுகிறதும் ஒரு துடிக்கிற பிரானியைக் காப்பாத்திறதும் மனிச கடமை இந்தா பாரு இந்தப் பிரானி எவ்வளவு தூரம் தன்ரை உயிருக்காண்டிப் போராடுது. ‘

ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….ஊ

‘உங்களை இந்த அலியன் திரத்தினதை மறந்து போட்டாங்களோ ? ‘ பொன்னன் கத்தினான் காடு அதிருமாற் போல் இருந்தது.

‘என்னை அடிச்சுக் கொன்றிருந்தாலும் இந்த நிலையில் இதைக் கொல்ல என் ஆத்மா விரும்பாது. ‘ மிக ஆறுதலாக அழுத்தமாக பொன்னனை ஏறெடுத்து வேலுப்பிள்ளை.

ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….

அதன் குறுகிய கண்களிலுருந்து கண்ணீர் தாரை தாரையாய ..தன் தும்பிக்கையைத் தூக்கிக் கெஞ்சியது..

திலகத்தின் கட்டி முடிக்கப்படாத அந்தக் கிணற்றிலே ஒரு ஜுவமரணப்போராட்டம்.

திலகம் அன்று இந்தக் குறிச்சியின் பெரிய விரோதியைக் பொறிவைக்கத்தானா இந்தக் கிணற்றைத் தோண்டினாள் ?

இப்போது எல்லோர் காலடியிலும் வீழ்ந்து கெஞ்சுகிறது.

அது எல்லோருடனும் ஒரு சமாதான ஒப்பந்தத்திற்குத் தன் தலையைச் சாய்க்கிறதா ?

ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….

‘தம்பி காலில விழுந்து கேட்கிறன் இந்த மிருகத்தை ஒன்டும் செய்யாதை ‘

பொன்னனின் இதயம் பெரியவரின் இந்த வார்த்தையால் இளகிவிடவே துப்பாக்கியை எறிந்துவிட்டு வீட்டை நோக்கி நடக்கிறான்.

அந்தத் திலகத்தின் வளவு எல்லையை நோக்கி வேடிக்கை பார்க்கிறவர்கள் தூரத்தேயுள்ள பள்ளிக்கூடத்திலுருந்து மாணவர்கள் வந்து கூடிவிட்டார்கள்.

காட்டுத் திணைக்களத்தைச் சேர்ந்தவர்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டுவிட்டது.

ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….ஊ….

யானை மயிரில் காப்புச் செய்ய சிலர் அதன் மயிர்களைப் பிடுங்க முயலுகிறார்கள்.

பேய் அனுகாதாம்.

வடிவேலு தூரத்தே வந்தவர்களுக்குத் தேநீர் வைக்கத் திலகத்தின் வளவில் அடுப்பு மூட்டுகின்றார்.

காட்டுக் கந்தோர் உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞுர்கள் யானை மீட்டிப்பிலீடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பொன்னன் தலை குனிந்தபடி குடிசைக்குள்ளே நுழைகின்றான்.

அவன் மனைவி வழமைபே ?ல் இயேசுநாதர் கற்பித்த ஜெபத்தை ஏறெடுக்கின்றாள்.

பொன்னனின் காதில்:

‘நாம் எம் கடனாளிகளின் கடன்களை மன்னிப்பது போல் எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியுங்கள் ‘

யானை வெளியே வந்துவிட்டது..

எல்லோரும் விலகுகிறார்கள் தும்பிக்கையைத் தூக்கி ஒரு பெரும் கும்பீடு போடுகிறது. மெதுவாக அசைந்து திலகத்தின் வாசலைக் கடந்து காட்டெல்லைக்குள் செல்கின்றது.

சரிந்த திலகத்தின் குடிசையில் இப்போது சிலர் தேநீர் அருந்துகிறார்கள்.

வடிவேலுப் பெரியார் திலகத்தின் முற்றத்திலுள்ள அவளின் றோஜாச் செடிக்கு

நீர் வார்க்கிறார்.

—-

yknataraj@wanadoo.nl

Series Navigation

கண்ணப்பு நட்ராஜ்

கண்ணப்பு நட்ராஜ்