வருத்தம்
வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்
ஆயுளின் கடைசித் தேசல் இப்போது
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர்வாழும் கானல்
இளிப்பு
தூங்கும் என் செவிப்பறை அதிர
அதிகாலை கத்தும் அந்தப் பறவை,
உண்மையில் கத்தல் அல்ல; இளிப்பு
என்னை நினைத்து
என் அல்லல்களைக் கண்டு
என்னை ஆட்டிக்குலைக்கும் புதைப்பயங்கள் மணந்தறிந்து
என் பிழைப்பின் பஞ்சாங்கம்
வரிவரியாய்ப் படித்தது போல்
அதிகாலை இளிக்கத் தொடங்குகிறது அது.
இருப்பினும் ஒன்று அதற்கு தெரியாது
நான் ஆயுள் காப்பில் பணம் கட்டி வருகிறேன்.
இறப்பின் மூலம் இருப்பவர் பெறும்
மனிதத் திட்டங்கள் பற்றி எதுவும் தெரியாது
அந்த இளிக்கும் பறவைக்கு.
(C) Pasuvaiyya