“தோற்றுப்போய்…..”

This entry is part [part not set] of 34 in the series 20080911_Issue

சக்தி இராசையா


எப்போதும் இப்படித்தான் கார்த்திக்… அலுவலகம் விட்டு கார்த்திக் வரும் வரையில் காத்திருப்பது எப்பவும் போல நடப்பது தான் , ஆனாலும் இன்று நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது , இன்னும் காணவில்லை .மனது ஒரு நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்க கைக்கடிகாரம் என்னோடு போட்டி போட்டு கொண்டிருந்தது .
வந்ததும் எதாவது ஒன்று சொல்லி சமாளிக்க அவருக்கு தெரியும் .

பாவம் தான் தன் அலுவலம் முடித்து அவசரமாக வந்து ,ஒரு சிரிப்பில் மன்னிப்பை சொல்லும் போது ,எல்லாம் மறைந்து சந்தோசம் மட்டுமே இருவருக்கும் மிஞ்சும் . அதிலும் பூஜாவைப் பார்த்தால் வேலைப் பழுவின் அலுப்பே தெரியாது … இன்னும் கார்த்திக் வரக் காணோமே என சலித்துக் கொண்டே மணியைப் பார்த்தால் 5 ஆகிறது…பூஜா என்ன செய்கிறாளோ..என மனசு அங்களாய்க்கவும் கார்த்திக் வரவும் சரியாக இருகிறது..

எங்க லேட் ? எப்ப பார்த்தாலும் இப்படித்தான் நீங்க..நானாய் பஸ்ல போறேன் என்றாலும் வேண்டாமென்கிறீங்க..

பூஜா என்ன செய்கிறாளோ , சரியா சாப்பிட்டு தூங்கினாளோ தெரியவில்லை.. எனக் சொல்லிக் கொண்டே பைக் பின்னால் ஏறி இருக்க ,ஸாரி டா ..ராபிக் ஜாம் ல மாட்டிவிட்டன் அதுதான்..ஆமாம் உன்னை யார் வேலைக்கு போ என்று சொன்னது…
நீயாய் போகணும் என்று கிளம்பின.. இப்ப பார் பூஜாவை நினைத்து புலம்பிற்று இருக்கிறாய்.. என கார்த்திக்கும் தொடங்கினார் .

இது எப்போதும் நடக்கும் வாக்குவாதம் தான், அதுவும்கடைசியில் நீ வேலைக்கு ஒன்றும் போக வேண்டாம் ,வீட்டில இருந்து குழந்தையைப் பார், நான் இருக்கிறான் தானே உங்க இரண்டு பேரையும் பார்க்க என்பதோடு முடியும்..

நாம மட்டும் என்றால் கூட பரவாயில்லை..நாளைக்கு நம்ம மகளும் மற்றவர்கள் மாதிரி வாழ வேண்டுமென்றால் கொஞ்சம் கஷ்டப் பட்டால் தான் முடியும், இந்த
சிற்றி லைப்ல உங்க சம்பளத்தை வைத்து எப்படி வாழ்றது..

சரி சரி விடு

எதோங்க ஆயா பாத்துப்பாங்க என்ற நம்பிக்கையில் தான் என்னால நிம்மதியாய் வேலை செய்ய முடியுது . இல்ல பூஜாவை நினைப்பால் ஒரு வேலையும் ஆகாது.

ஏங்க போற வழியில நம்ம பிள்ளாயார் கோவிலுகு ஒரு நிமிசம் போயிற்று போகலாம்…

ஏய் இப்ப தானே லேட் ஆகுது என்று கத்தினாய்..பிறகென்ன ..

இல்லங்க அலுவலகத்தில புரமோசன் கிடைக்கலாம் என பேசுகினம் அதுதான்.. ஒருக்கா போயிற்றுப் போவோம் …

இப்பவே குழந்தையை கவனிக்க நேரம் இல்லாம இருக்கு ..இது வேறயா… சரி சரி முறைக்காத.. நீ போய் கும்பிட்டு வா நான் வெய்ட் பண்ணுறன்..

கோவிலுக்கு போய் திரும்பிகையில்
பூக்காரியாம்மா வழக்கமான சிரிப்புடன்
வாம்மா..இந்தா பூ கொண்டு போமா..
உனக்கு முதல பூ குடுத்தாலே எனக்கு வியாபாரந்தம்மா, உன் கைராசி போல வருமா .. புன்னகையுடன் திரும்புகிறேன்

மனசுக்குள் எதோ பெரிய நின்மதி தோன்றினாப் போல் உணர வீடு அடைகிறோம்..

குழந்தை நல்ல தூக்கத்தில் இருந்தாள்… ஆயாவிடம் சாபிட்டாளா என விசாரித்துவிட்டு கொஞ்சம் பிரஷாகி காபி குடித்து முடிக்கவும் பூஜா எழுந்திருக்கவும் சரியாகிறது..

ஆசையாய் குழந்தையின் அருகில் சென்றால் ,
என்னிடம் வர மறுத்து அழுதபடி , ‘அம்மா’ என அழுது கொண்டு
ஆயாவின் மடியினில் போய் புதைகிறாள்..

முதன் ,முதலாய் விக்கித்து நிற்றேன்
எப்போதும் காதலாய் ‘சபாஷ்’ சொல்லும் கணவனும்..
நீ செய்தால் தப்பாய் இருக்குமா என பாராட்டும் மேல் அதிகாரியும்
என் பெண்ணின் முகத்துக்கு தொட்டதெல்லாம் துலங்கும் என அம்மாவின் பாராட்டும்…
உன் கைராசி தானாம்மா எனச் சொல்லும் பூக்காரியும்..
கண் முன் நிழலாட என் அத்தனை சமர்த்தும் கரைந்து போய்…
தோற்றுப்போய் நிற்கின்றேன் என் மகளிடம்…

சக்தி இராசையா .
சென்னை ,இந்தியா


Snehidhi15@yahoo.co.in

Series Navigation

சக்தி இராசையா

சக்தி இராசையா