ஹெச்.ஜி.ரசூல் எழுத்துக்கள் – பதிவுகள்

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

மன்சூர்ஹல்லாஜ்


தற்போது பெறப்பட்டுள்ள கவிஞர் ரசூல் எழுத்துக்கள் மற்றும் பிரச்சினை தொடர்பான பதிவுகள் திண்ணை வாசகர்களுக்காக முன்வைக்கப்படுகின்றன.

திரு.மணா,இணைஆசிரியர் புதிய பார்வை,சென்னை

மதச்சார்பற்றதன்மை என்கிற சொல்லாடலை அடிக்கடி கேள்விக்குட்படுத்திக் கொண்டேயிருக்கிறது இந்திய சமூகம்.
எந்த மதத் தீவிரத்தின் பெயராலும் மனித உரிமைகள் பறிக்கப்படுவதை மதச்சார்பற்ற தன்மையை விரும்புவோர் ஏற்கமுடியாது.
ஹைதராபாத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் வங்கதேச எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரீனைத் தாக்க நடந்த முயற்சிகள் மதப் பிடிவாதங்களையும் குறைந்தபட்சமாக மாற்றுக் கருத்துக்களைப் பரிசீலிக்க மறுக்கும் பொறுமையின்மையையும் வெளிப்படுத்தக்கூடிய சில அடையாளங்கள்.
தமிழகத்தில் ஏற்கெனவே மைலாஞ்சி நூலை எழுதியதற்காக இஸ்லாமிய ஆதரவாளர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பை ஹெச்.ஜி.ரசூல் சந்திக்க வேண்டியிருந்தது. சில ஊடகங்களில் அவை வெளிவந்தன.தற்போது மீண்டும் ரசூல் எழுதியவற்றிற்கான எதிர்வினையாக அவரை ஊர்நீக்கம் செய்திருப்பதை சிறுபான்மை சமூகத்தின் மீது அக்கறை கொண்ட யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
காலவெளிச்சத்திற்கு ஏற்ப பல்வேறுதுறைகளில் கருத்துக்களில் மாற்றங்கள்நிகழ்கின்றன.மரபுரீதியான பழமை படிந்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. இத்தகைய மாற்றங்களைக் காலமும் சமூகமும் வேண்டி நிற்கும் போது பழமையான வாதங்களைத் தூசிதட்டி ஜனநாயகமுறையில் எழும் சில குரல்களை மூச்சடக்க முயல்வதும் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்க முயலும் மதக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதும் ஆரோக்கியமானதல்ல.
அரசுஎந்திரத்தின் ஆதிக்கத்தை மறுக்கிற மாதிரியே மதத்தின் பெயரிலான ஆதிக்கத்தின் விளைவான மீறல்களையும் ஏற்றுக் கொள்ளமுடியாது.

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்
எழுத்து சுதந்திரத்தை பறிக்கும்வகையில் மதசார்பு நிறுவனங்கள் ஹெச்.ஜி.ரசூல் மீது எடுத்துள்ள நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியவை. இஸ்லாம் மதத்தினரை புண்படுத்தும் நோக்கில் அவர் அந்த கட்டுரையை எழுதவில்லை. ஆனால் அவர் மதவிலக்கம்,ஊர்விலக்கம் செய்யப்பட்டுள்ளார். சகஎழுத்தாளான் என்னும் முறையில் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறேன். ஒட்டுமொத்த படைப்பாளிகளின் உணர்வுகளை மதித்து,ரசூலின் மீதான் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கதையாளர் களந்தை பீர்முகமது.
ஹெச்.ஜி.ரசூலின் இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் பற்றிய கட்டுரைக்கான எதிர்விளைவுகள் மிகவும் மனச்சோர்வைத் தருகின்றன. இதுபோன்ற கட்டுரைகளை எழுதுபவர்கள் எவ்வாறு மதத்தின் விரோதிகளாக மாறுகிறார்கள் என்பது புரிபடவில்லை. நம் சமூக வாழ்வின் பல்வேறு கணங்களிலும் மீறிச் செல்கின்ற முஸ்லிம்கள் இருந்து கொண்டே இருக்கின்றனர். நம் திருமணமுறைகள்,வணிக உறவுகள்,அரசியல் தொடர்புகள்,வணக்க வழிபாடுகள் போன்ற அனைத்திலும் மீறல்கள் நிகழ்ந்து கொண்டே வருகின்றன. ஆனால் அதனைப் பதிவு செய்யும் கலைவடிவங்களும்,எழுத்துக்களும் மட்டுமே எப்போதும் கண்டனத்துக்கு உள்ளாகின்றன.தோழர் ரசூலின் கட்டுரையை ஒட்டி நாம் அதிஅற்புதமான விவாதங்களை நிகழ்த்தியிருக்க முடியும்.அதற்கான வய்ப்புகளும் ,மார்க்கத்தின் சட்டங்களை நுணுகி ஆராயும் மேதைகளும் இருக்கையில் விவாதங்களுக்கு முகம் கொடுக்க நாமேன் மறுக்க வேண்டும்?இத்தனைக்கும் பிறகும் குரான், ஹதீஸ்களிலுள்ள எந்தவொரு வரியையும் எழுத்தையையும் நம்மால் மாற்றிவிடக்கூடுமா..?
திறந்த மனப்பாங்குடன் தக்கலை அஞ்சுவன்னம் ஜமாத்தினர் தங்கள் முடிவை மற்றிக் கொள்ளவேண்டுகிறேன்.


mansurumma@yahoo.co.in

Series Navigation