வையாபுரிப்பிள்ளை – 2

This entry is part 8 of 8 in the series 20000103_Issue

வெங்கட் சாமிநாதன்

-தொடர்ச்சி…

நான் சொன்ன சிலப்பதிகாரச் சிறப்புகள், சங்கீதமும் நாட்டியமும் இவர்கள் கருத்தில், மன்னிக்கவும், கருத்தில் அல்ல- கொண்ட கோட்பாட்டில் பார்ப்பனிய உலகைச் சார்ந்தவை. இதற்குக் காரணம், இக்கலைகளைப் பேணுபவர்கள் பார்ப்பனர்கள். இதைவிடக் கொடுமை, பேதமை வேறு இருக்க முடியாது. பார்ப்பனர்கள் மேல் இருக்கும் துவேஷத்தில் தம் மூக்கையே அறுத்துக் கொள்ள வேண்டுமா ?

40-களில் தமிழிசை இயக்கம் பிறந்தது. இதை எதிர்த்தவர்கள் ஒரு பகுதியினர் பிராம்மண சமூகத்தைச் சேர்ந்த கலைஞர்கள், வித்வான்கள். மடத்தனமும், குறுகிய பார்வையும் எங்குதான் இல்லை ? ஆனால் இதன் ஆதரவாளர்களிலும் பிராம்மணர் இருந்தனர். அவர்கள் மிகுந்த செல்வாக்கு உள்ளவர்கள். இந்த இயக்கம் சரித்திர நிர்ப்பந்தம். உண்மையின் பாற்பட்டது. இன்னொரு நோக்கில் தியாகய்யர் தெலுங்கராக இருக்கலாம். தெலுங்கில் கீர்த்தனைகள் இயற்றியிருக்கலாம். இன்னும் பலர், தெலுங்கில் இயற்றியிருக்கலாம். சமஸ்கிருதத்தில் கீர்த்தனைகள் தீக்ஷிதர், சதாசிவப் பிரமேந்திரர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் இருப்பினும், இவர்கள் அனைவரும் தமிழ்க்கலாச்சாரத்தின், தமிழ்நாட்டின் சங்கீதச் சூழலின் பிறப்புகள். பரதரின் நாட்டிய சாஸ்திரத்துக்குப்பின் இன்னொரு மைல்கல்லான சங்கீத ரத்னாகரம் எழுதிய சாரங்கதேவர் தேவார இசை பயின்றவர். தேவாரப் பண்கள் அவர் நூலில் குறிப்பிடப்படுகின்றன என்பதில் எனக்கு கர்வம். கிட்டத்தட்ட 7ம் நூற்றாண்டு வாக்கில் காஞ்சிபுரத்திலிருந்து இரண்டு சங்கீதக் கலைஞர்கள் ஜப்பானுக்குச் சென்றார்கள் என்பது ஜப்பானியர்கள் தரும் செய்தி. எனக்குப் பெருமையாக இருக்கிறது. மாலிக்கபூர் 13ஆம் நூற்றாண்டில் மதுரையிலிருந்து இரண்டு சங்கீதக்கலைஞர்களை அழைத்துச் சென்றான் – சிறைப்படுத்தி அல்ல- என்பது சரித்திரம். அந்தக் காலம் வரை தென்னாட்டின் எப்பகுதியிலிருந்தும் சங்கீதக் கலைஞர்கள் அங்கீகாரம் பெற, புகழ் ஈட்ட, காவிரிக்கரை நோக்கி வந்தார்கள். இன்று சென்னைக்கு வந்து தமிழ்நாட்டில் தம்மை முதலில் ஸ்தாபிதம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது என்பது நமக்குத் தெரியும்.

கர்னாடக சங்கீதம் தமிழனின் சொத்து. பிராமணன் தமிழன் இல்லை என்றால், இதை ஏன் அந்த அன்னியனுக்கு தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும் ? அவன் தமிழன்தான் என்றால் இது தனக்கில்லை என்று இத்துறையில் அவன் மேலாதிக்கத்தை ஏன் அனுமதிக்க வேண்டும் ?

தமிழ்நாட்டிய இயக்கம் ஏன் எதுவும் நிகழவில்லை என்று வையாபுரிப்பிள்ளை அவர்கள் ஓர் இடத்தில் கேட்கிறார். அக்காலத்தில் இது கோவிலைச் சார்ந்ததாக இருந்தது. கோவில் பகுத்தறிவாளர்களுக்கு உவப்பானதல்ல. பார்ப்பனர்கள் கொணர்ந்தது. மேலும் நாட்டியம் தாசிகளின் தொழிலாகவும் இருந்தது. அதில் கலையைக் காணவில்லை. தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை எதிர்த்தவர்கள் -ஆதரித்தவர்கள் – இரு சாராருமே முன் வைத்த வாதங்கள் மடமையின் உச்சத்தை தொடுவதாக இருந்தன. மடமையை, இரு சாராருமே பங்கிட்டுக் கொண்டார்கள். சீர்திருத்தவாதிகள் குழந்தையை குளிப்பாட்டிய அழுக்குத் நீரை மாத்திரமே பார்த்தார்கள், குழந்தையை காணவில்லை. குழந்தையை காப்பாற்றியவர்கள் டி.கே.சி., ஈ. கிருஷ்ணய்யர், ருக்மணிதேவி, திரு.வி.க போன்றோர். கலை பிழைத்தது. இதற்கும் பார்ப்பனிய லேபல் ஒட்டப்பட்டது. இதன் காரணமாகத்தான் ருக்மணிதேவி, பாலசரஸ்வதி ஆகிய இரண்டு மகோன்னதச் சிகரங்கள் தமிழ்நாட்டில் இனம் காணப்படவில்லை. நாம் பெருமைகொள்ளத்தவறிய, கெளரவிக்கத்தவறிய பால சரஸ்வதியை Margot Fontegnம் சத்யஜித்ரேயும் இனம் காணும்போது மனம் ஆறுதல் கொள்கிறது. இவர்கள் எல்லாம் யுக புருஷர்கள். ஒரு சகாப்தத்தின் கலாச்சார அடையாளங்கள். உ.வே.சாமிநாதய்யரையும், பாரதியையும்போல. இவர்கள் பார்ப்பனர்களாகப் பிறந்துவிட்டதில் பெரும்பாலோருக்கு மனவேதனை. யார் பிறப்புக்கு யார் பொறுப்பு ? இவர்களோ வேறு யாருமோ மனுச்செய்து, ரிஜிஸ்தர் செய்து காத்திருந்து, இன்ன சாதி என்று தேர்ந்தெடுத்து பிறக்கவில்லை. தான் பெற இருக்கும் ஆதாயங்களுக்காக சாதியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தவனில்லை பாரதி. மனிதநேயம் என்ற ஆதாரத்திலிருந்து பிறந்தது அவனது ஜாதி எதிர்ப்பு. நமது பிரச்சாரங்களுக்கெல்லாம் பெருமைக்கெல்லாம் இலக்கியத்தைத் துணை தேடும்போது கிடைக்கும் சங்க இலக்கியங்களைத் தேடி காப்பாற்றிக் கொடுத்தது உவேசா. ஒரு மகோன்னத தமிழனாக உவேசா எனக்குத் தோன்றுகிறார். இது பார்ப்பானின் வேலை. இது பற்றிப் பேச வேண்டாம் என்று பலருக்குத் தோன்றுகிறது.

நாற்பதுகளின் தமிழிசை இயக்கம் போன்று அளவிலும் கால நீட்சியிலும் பிரம்மாண்டமான இயக்கம் பக்தி இயக்கம். இதன் நீட்சிக்கும் தாக்குவரவுக்கும் ஈடான ஒரு மக்கள் இயக்கம், இலக்கிய இயக்கம், மறுமலர்ச்சி இயக்கம், இந்திய உபகண்டத்திலேயே வேறு ஒன்று இருந்ததில்லை. கடவுளை மக்கள் சொத்தாக்கிய இயக்கம், வேறு இடைத்தரகர் வேண்டியதில்லை என்று சொன்ன மக்கள் இயக்கம். தமிழுக்கு முதன்மை அளித்த இயக்கம். இந்த இயக்கத்தின் நீட்சியையும் பரவலையும்தான் இந்தியா முழுவதும் டாகூர் வரை நாம் பார்க்கிறோம். இதில் மீரா, கபீர், சைதன்யர், ராம்தாஸ், குருநானக் என அவ்வளவு பேரும் அடக்கம். இந்த பக்தி இயக்கத்தை மறுத்து விட்டால் இந்திய உபகண்டம் முழுவதும் கலைகளும், இலக்கியமும் ஏன் மொழி வளமையும் அற்ற ஒரு பிரம்மாண்ட வறண்ட பாலையைத் தான் காண்போம். அவ்வளவும் தமிழ்நாடு இந்தியாவுக்கு அளித்த கொடை. ஆழ்வார்கள் இல்லையெனில் குறிப்பாக பெரியாழ்வாரின் பாசுரங்கள் இல்லையெனில் தமிழ்நாட்டில் எழுதப்பட்டு வடக்கே எடுத்துச் செல்லப்பட்ட பாகவதம் இல்லை. மீராவின் பாடல்கள் ஆண்டாளின் எதிரொலிகள்தாம். இன்று கதக் நடனம் ஆடுபவர் வெண்ணெய் திருடும் கண்ணனை சித்தரிக்கிறார் என்றால் அது பெரியாழ்வார் அளித்தக் கொடை. திருமங்கை ஆழ்வாரையும் ஆண்டாளையும் படித்த தமிழனுக்கு டாகூர் கவிதை புதிதாக எதையும் சொல்லிவிடவில்லை. பாகவதம் – வல்லபாச்சாரியார்-வித்யாபதி-சைதன்யர் என்று கை மாறி மாறி பெரியாழ்வாரிடமிருந்து பெற்ற கடனைத்தான் டாகூர் நமக்கு அளிக்கிறார். ராஜஸ்தானின் நாத்துவாராவில் உள்ள கண்ணன் கோயிலுக்கு உந்து சக்தி தமிழ்நாட்டு ஆழ்வார்கள். வட இந்திய பேச்சு மொழிகள் அனைத்தும் இலக்கிய வளம் பெற்றது வைஷ்ணவ இயக்கத்தின் காரணமாகத்தான். அந்த இயக்கம் பாகவதம் மூலம் ஆழ்வார்கள் அளித்த கொடை.

இந்த பக்தி இயக்கம்தான் தமிழ்நாட்டின் கோயில் பெருக்கத்திற்கும், கலைச்செல்வ வளமைக்கும், இலக்கியச் சிறப்பிற்கும் பிறப்பிடம். உந்து சக்தி. நடராஜவடிவம் தமிழ் சிற்பக்கலையின் உன்னத சிகரம். இந்த சிகரம் இன்னொரு சிற்பக்கலைச் சிகரமான ஆகஸ்தே ரோடினை (Auguste Rodin) பரவசத்திற்குள்ளாக்கியது. ஒரு சிகரம் இன்னொரு சிகரத்தை அடையாளம் கண்டு கொண்டது. நமது கோயிலின் கலைச் சொத்துக்கள் இப்போது சூறையாடப்படுகின்றன. யாருக்கும் கவலை இல்லை.

இதெல்லாம் மூட கடவுள் நம்பிக்கை விவகாரமாக ஒதுக்கப்படுகின்றன. அதிலும் இன்னும் மோசம், இவை பார்ப்பனக் கடவுள்கள். நமக்கு சங்ககால இலக்கியம் மட்டும் போதும். அதுதான் தமிழனின் இலக்கியம். சங்கத்தமிழன் தான் உண்மையான கலப்படமில்லாத தமிழன். அதுதான் தமிழ்நாகரீகம் என்று கருத்துக்கள் ஆட்சி செய்கின்றன. மற்றவையெல்லாம் தூக்கிக் கடாச வேண்டியவை. இரண்டே இரண்டு இலக்கியப் பிறைகள் நம் வீட்டில். ஒன்றில் சங்க இலக்கியம். இதை அடுத்த பிறையில் ஒரே தாவலில், 18 நூற்றாண்டுகளைப் பாலைவனமாக்கி 20-ம் நூற்றாண்டு பாரதிதாசனை வைத்துள்ளோம்.

தமிழ்மொழி தொன்மையானது. வளம் நிறைந்தது. உண்மை. அதற்கு இருக்கும் தொன்மையே அதற்குப் பெருமை தரும். பொய்யான தொன்மைகள் அதற்கு வேண்டியதில்லை. தமிழ் மொழியின் இலக்கியத்தின் நாகரிகத்தின் வளம், அது நேற்று வரை தன்னை வந்தடைந்த வளமைகலையெல்லாம் பாதிப்புகளையெல்லாம் தனதாக்கி வளமைப்படுத்திக் கொண்டதால்தான். அந்த வளமையையெல்லாம் நாம் மறுத்துக் கொள்ளும்போது நாம் மிகவும் ஏழ்மைப் பட்டுப் போவது மட்டுமல்லாமல், வளர்ச்சி மறுத்துக்கொள்ளவும் செய்கிறோம். In breeding எந்த ஜீவ இயக்கத்தையும் அழித்துவிடும். எனது வீட்டின் ஜன்னல்கள் திறந்திருக்கட்டும். எல்லாத் திக்குகளிலிருந்தும் காற்று வீசட்டும். ஆனால் என் கால்கள் தரையில் ஸ்திரமாகப் பதிந்திருக்கட்டும் என்றார் காந்தி. உலகத்து வளமைகளையெல்லாம் தமிழருக்கு கொண்டு சேர்க்க ஆசைப்பட்டான் பாரதி. தமிழ் இலக்கியத்தின் தொடக்கமே சமணர்களும் பெளத்தர்களும் கொண்டு சேர்த்த கொடைகளினால் வளம் பெற்றதுதான். திருநெல்வேலி மாவட்டத்தில் ஏதோ ஒரு கிராமம் இருக்கிறதாமே – ஒரு ஜாதியினர் வெளித்தொடர்பில்லாமல் தம் உறவுக்குள்ளேயே மணம் செய்து கொண்டு, ஒரு கோட்டைக்குள் அடைந்து கிடப்பதாக. அழிந்து வரும் சமூகம் அது. தமிழ்மொழி, இலக்கியம், கலைகள் அப்படி விதிக்கப்படவேண்டாம்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் ? வையாபுரிப்பிள்ளையைத் தமிழ்த் துரோகி என்று வசைபாடிய சக்திகளின் நோக்கங்கள், இன்று கல்வித்துறை தாண்டி, சமூகத்தின் எல்லாத் துறைகளிலுமே பரவியுள்ளன. வையாபுரிப்பிள்ளையினது ஆராய்ச்சி, எழுத்துக் காலம் 20-களிலிருந்து 50-கள் வரை அவருக்கு எதிர்ப்பு இருந்தது. வசை பாடினார்கள். வாஸ்தவம். ஆனால் அவரால் அன்று செயலாற்ற முடிந்தது. இன்று, ஒரு வையாபுரிப்பிள்ளை கல்வித்துறையில் புகமுடியும்; ஆராய்ச்சி செய்யமுடியும்; தன் கருத்துக்களை, முடிவுகளை வெளியுலகில் வைக்க முடியும் என்று தோன்றவில்லை. இதற்கும் மேலாக வையாபுரிப்பிள்ளை போன்ற மனிதர்களை படைப்பதை கடவுள் நிறுத்தி விட்டார்.

****

நன்றி- புதிய நம்பிக்கை -சூலை 93 ****

Thinnai 2000 January 3

திண்ணை

Series Navigation<< வையாபுரிப்பிள்ளை – 2

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்

வையாபுரிப்பிள்ளை – 2

This entry is part 7 of 8 in the series 20000103_Issue

Series Navigation<< சூரியச்சக்தியில் குளிர்சாதனம்வையாபுரிப்பிள்ளை – 2 >>

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்