வேங்கூவர் – கனடா

This entry is part [part not set] of 24 in the series 20021118_Issue

புகாரி


**

வசந்தத்தில் வசந்தம் கேட்டுத்
தவமிருக்கும் உலகில்
வருடமெல்லாம் வசந்தம் காணும்
வேங்கூவர் ஓர் அதிசயம்!

எங்கும் இங்கே
புல்லும் மரமும் பூத்துப்
பூரண சுயாட்சி நடத்தும்
பொற்பருவத் தாண்டவங்கள்!

பேரெழிற் பொற்சிலையாய்
சுற்றிக்கட்டிய
நீர்ப்பட்டுச் சேலைக்குள்
நிமிர்ந்து நாணி நிற்கும்
நிலமகள் இந்த வேங்கூவர்!

O

இயற்கையின்
எழில்வண்ணப் பளபளப்பு
காணும் கண்களிலெல்லாம்
மின்னல்கள் கொளுத்தி
மின்னல்கள் கொளுத்தி
மிடுக்கோடு விளையாடுகிறது!

O

ஆசையின் உந்துதலில்
நடப்பதைக் கைவிட்டு
ஓர் அங்கப்பிரதட்சணம் செய்தால்
இந்த அழகு வீதி அழுக்காகும்
நம் தேகமோ தூய்மையாகும்!
அப்படியோரு சுத்தம்!

அடிக்கடி கொட்டும்
அந்த அமுத மழையும்
விடுப்பெடுத்துவிட்டால்
வானமே கூரையாக
பூமியே கம்பளமாக
ஓர் ஐந்து நட்சத்திர
விடுதியாகிப்போகும் இந்த வேங்கூவர்!

பாருங்களேன் இந்தச் சூரியனை!
இங்கு வந்ததும்
நானும் ஒரு நிலவுதான்
என்று
மஞ்சள் பூசிய மணப்பெண்ணைப் போல
அழகு காட்டிச் சிரிக்கிறது!

மயிலிறகு ஒத்தடம் போல்
நம் மேனியில் பதிக்கிறது
தன் முத்து முத்தங்களை!

இங்கே
இரத்த அழுத்தக்காரனுக்கும்
வியர்வை என்பது
விளங்காத புதிர்தான் என்றால்
தாராளமாக நீங்கள் நம்பலாம்!

O

காலங்காலமாய்ப் பாடுபட்டு
சொர்க்கத்தைக் கட்டி
கிரகப் பிரவேசம் நடத்த
நாள் குறித்துக் காத்திருந்தபோது…

யாரோ எவரோ குறும்புக்காரர்
அதைத் திருட்டுத்தனமாய்க்
கட்டியிழுத்துக்கொண்டுவந்து
இங்கே
இறக்கிவைத்துவிட்டார்கள் போலும்!

O

ஓ…
சொல்ல மறந்துவிட்டேனே!

நம் தமிழ்ப் பெண்கள் இங்கே
வாசல் தெளித்துக் கோலம்போடும்
வழியறியாமல்
செல்லமாய்ச் சிணுங்குவர்!

ஏனெனில்…
வாசலும் தெளித்து
வண்ண வண்ணப் பூக்களால்
கோலமும் போட்டு
தினம் தினம்
வாஞ்சையாய் வந்து நிற்பாள்
வேங்கூவர் வசந்த தேவதை!

O

அட…!
இத்தனை அழகு எப்படி இங்கே
கொட்டிக்கிடக்கிறது என்று
இங்கும் அங்கும் நான்
உற்று உற்றுப் பார்த்தேன்!

சொட்டுச் சொட்டாய்
அமுத அழகு எங்கிருந்தோ
வடிந்தவண்ணமாய்த்தான் இருக்கிறது!

வடிவது சொர்க்கத்திலிருந்தா
என்று எனக்குத் தெரியாது…!
ஆனால்…
வடியும் இந்த இடம் நிச்சயமாக
ஓர் அற்புதச் சொர்க்கம் என்று மட்டும்
நான் எங்கும் எவரிடத்தும்
சத்தியம் செய்வேன்…!

**
அடடா! பருவம் தொட்டு நிற்கும் இளமொட்டு மங்கையைப்போல் மதர்ப்புகளால் சூழப்பட்ட அற்புத நகரம், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அமைந்துள்ள வேங்கூவர்.

2002 மே மாதம் டொராண்டோவிலிருந்து முதன் முறையாக பணி நிமித்தம் நான் அங்கு சென்று, அதன் அழகில் மயங்கி, அதன் பளிங்கு வீதிகளிலெல்லாம் இதயம் தள்ளாட இன்ப உலா வந்தேன்.

ஓர் ஐந்து தினங்கள் சுற்றித் திரிந்துவிட்டு, ஆசைக் காதலியைப் பிரியும் காதல் பித்தனைப்போல் விக்கலெடுக்கும் தொடர் ஏக்கத்தோடு எழில் வேங்கூவருக்கு விடைகொடுத்து நான் விமானத்தில் அமர்ந்தபோது படபடவென்று சிறகடித்துக்கொண்டு என் உள்ளத்தில் வந்து உட்கார்ந்த ஒரு வண்ணத்துக் கவிதைதான் இது.

***
buhari2000@hotmail.com

Series Navigation