வெவ்வேறு

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

ஹெச்.ஜி.ரசூல்


அணில்களும் சிட்டுக்குருவிகளும்
அடிக்கடி வந்துபோகும் ஜன்னல்
கொஞ்சகாலமாய் மூடியேகிடந்தது
மீண்டும் திறந்தபோது
அணில்களும் சிட்டுக்குருவிகளும்
வெளியேபோவது தெரிந்தது
வெவ்வேறு ஜன்னல்வழி

கடலோரம் நின்று
கடலை தன் அலகால்
கொத்திக் கொண்டிருந்தது
வலியச் சென்று பேசினேன்
என்ன செய்து கொண்டிருக்கிறாய்
கடல் நீரையெல்லாம்
வெளியேற்றிவிட்டு
அதனடியிலிருந்து
தொலைந்து போன
என் குஞ்சுக் குருவியைக்
காப்பாற்றப் போகிறேன்.

உறைந்துப் போயிருக்கும்
உன்னுடலோடு அலைந்துதிரிகிறேன்
வனமெங்கும் காற்றாக
நீந்தி நீந்திப் பார்த்தும்
கரைஏறமுடியாமல் தவிக்கிறாய்
எத்தனை முறை அலையடிக்கிறது
இருளுக்கும் இரவுக்கும்
ஏற்படாததொரு திருப்தியைத் தேடி
துழாவிக் கொண்டிருக்கிறோம்.

பறவையின் பெயர் கேட்டேன்
மெளனம்
மெளனத்தை மொழிபெயர்த்தேன்
பெயர் சொல்லிப் பறந்தது பறவை
—————————————-
mylanchirazool@yahoo.co.in]

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்