வெள்ளிக் கரண்டி

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

அ.முத்துலிங்கம்


நான் பிரச்சினையில் இருந்தேன். பெரும் பிரச்சினை. கடந்த ஒருவாரமாக எதிர்பார்த்ததுதான். அன்று காலை மனைவி நித்திரையில் இருந்து எழும்பியதும் முதல் வேலையாக ‘இன்று முழுக்க மழை பெய்யும்’ என்று சொல்வதுபோல ‘இன்று முழுக்க ஞாயிற்றுக்கிழமை’ என்றார். அதன் பொருள் அன்றைய நாளின் ஒவ்வொரு மணித்தியாலத்தையும், ஒவ்வொரு நிமிடத்தையும் அவர் ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருக்கிறார் என்பதுதான். எனக்கு நடுக்கம் பிடித்தது. நான் எங்கே அவர் பார்க்க முடியாது என்று நினைத்து திருமண அழைப்பிதழை ஒளித்து வைத்தேனோ அங்கே அதைக் கண்டுபிடித்துவிட்டார். எப்படியும் அந்த திருமணத்துக்கு போகத்தான் வேண்டும் என்று அடம்பிடித்தார். அவருடைய பள்ளித் தோழியின் மகள் திருமணம். அப்படித்தான் பிரச்சினை ஆரம்பித்தது.
ஒரு திருமணம் என்றால் அது திருமண மண்டபத்தில் நடக்கும். அல்லது விடுதியில் நடக்கும். அல்லது மணமகள் வீட்டில் நடக்கும். யாராவது ஆவிகள் நடமாடும் நான்டக்கற் தீவில் கொண்டுபோய் வைப்பார்களா? நானும் எத்தனையோ தரம் சொல்லிப் பார்த்துவிட்டேன். மனைவியின் மனது கல்லுப்போல மாறிவிட்டது. ‘ஆவியாவது பூதமாவது’ என்றார். நாங்கள் மணமுடித்த புதிதில் ஏ.வி.எம் தயாரித்து வெளிவந்த ‘வேதாள உலகம்’ படத்தை பார்த்துவிட்டு தான் அதை நம்பவில்லை என்று அப்போதே சொன்னவர். சரி என்று ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி படத்தை கூட்டிப்போய் காட்டியபோது அதைப் பார்த்துவிட்டு சிரிசிரியென்று சிரித்தவர். இந்த ஜன்மத்தில் அவரை நல்வழிப்படுத்த முடியாது என்பது கவலையளித்தது.
பிரயாண ஏற்பாடுகளைச் செய்வதற்கு பயண முகவரிடம் சென்றால் அவர் ஆறுதல் வார்த்தை ஒன்றும் சொல்லவில்லை. ‘நான்டக்கற்றா’ என்றார். மரணம் ஆரம்பித்துவிட்டதுபோல முகத்தை வைத்துக்கொண்டு ‘ஒரு திருமணவிழாவுக்கு போகவேண்டும்’ என்று சொன்னேன். அவர் கண்களில் பரிதாபம் தெரிய ‘பேய்கள் உலவும் தீவு’ என்று அதற்கு பெயர் இருக்கிறதே என்றார். பிறகு எட்டு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரைப் பார்ப்பதுபோல என்னைப் பார்த்துக்கொண்டே என்னிடம் டிக்கட்டுகளை நீட்டினார்.
நான்டக்கற் என்பது அட்லாண்டிக் சமுத்திரத்தில் உள்ள ஒரு சிறிய தீவு. அதன் நீளம் 14 மைல், அகலம் 3.5 மைல். ஒரு கரையில் இருந்து மூச்சைப் பிடித்துக்கொண்டு ஓடினால் அடுத்த கரையை அடைந்துவிடலாம். ரோமாபுரி மன்னர்கள் காலத்தில் போட்டதுபோல ரோட்டுக்களில் கற்கள் பதித்திருக்கும். வீதிகளில் சமிக்ஞை விளக்குகள் இருக்காது. ஒரு நூறு வருடத்துக்கு முந்திய காலகட்டத்தை அந்த தீவு நினைவூட்டும் என்றெல்லாம் சொன்னார்கள். அமெரிக்க கரையில் இருந்து நாங்கள் 40 மைல் தொலைவில் இருந்த தீவுக்கு போவதற்காக மிதவைக்கப்பலில் ஏறியபோது என்னைத் தவிர எங்களுடன் பயணம் செய்த மற்ற பிரயாணிகளில் ஒருவர்கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
நாங்கள் தங்கப் போகும் அதே விடுதிக்கு தாங்களும் போவதாகச் சொன்ன ஓர் இளம் தம்பதியினரை மிதவையில் சந்தித்தோம். அவர்கள் அங்கே தேன்நிலவைக் கழிக்க இரண்டு வாரம் போகிறார்களாம். அதைக் கேட்டபோது பெரும் நிம்மதியாக இருந்தது. அந்தப் பெண் ஏற்கனவே தேன்நிலவை ஆரம்பித்துவிட்டவர்போல அந்த ஆடவனுடன் ஒட்டிப்பிடித்தபடி நின்றார். தாராளமான இதழ்களில் தாராளமான புன்னகையை அணிந்திருந்தார். அவனுடைய உடம்பில் எங்கேயெல்லாம் பள்ளம் இருந்ததோ அங்கேயெல்லாம் அவள் உடம்பு வந்து நிரப்பியது. ‘நான்டக்கற் பேர்ச் மரங்களில் ஆவிகள் தொங்குமாமே, உண்மையா?’ என்றேன். அவன் அவளைப் பார்த்தான். அவள் என்னைப் பார்த்து ‘ஆவிகள் பயமுறுத்துவது நல்லதுதான். நாங்கள் இன்னும் நெருக்கமாக இருக்கலாம்’ என்று கலகலவென்று சிரித்தபடியே கூறினாள்.
எங்கள் விடுதியின் மேலாளர் போன்ற ஒரு விநோதமான பிறவியை நான் முன்பு எங்கும் சந்தித்ததில்லை. பல உதவியாளர்களுடன் இந்த விடுதியை அவர் நடத்தினார். சலவை செய்த மடிப்புக் கலையாத ஆடையை நேர்த்தியாக உடுத்தியிருந்தார். முகத்திலே புன்சிரிப்பு என்பது எந்தச் சந்தர்ப்பத்திலும் அவருக்கு தோன்றுவது கிடையாது. நாற்றமான கழிவறையிலிருந்து இப்பொழுதுதான் வெளியே வந்தவர் போன்ற முகம். மேலாளராக இருக்க அவர் விரும்பவில்லை. அமெரிக்க ஜனாதிபதி பதவி கொடுத்தாலும் அதை வேண்டாம் என்று சொல்லுவார் போலவே பட்டது. ஆனால் அவருடைய உதவியாளர்கள் சுறுசுறுப்பாக, யார் கூப்பிட்டாலும் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஒடிக்கொண்டிருந்தார்கள்.
திமிங்கில வேட்டை கப்பல் தளபதி ஒருவர் 19ம் நூற்றாண்டில் கட்டிய மாளிகையில்தான் நாங்கள் தங்கியிருந்தோம். இப்போது அதைச் செப்பனிட்டு விடுதியாக மாற்றியிருந்தார்கள். இதிலே முக்கியமானது, திருத்த வேலைகள் செய்தபோது விடுதியை பழசான தோற்றத்திலேயே வைத்திருந்ததுதான். நவீன வசதிகளான மின்சாரம், குழாய் தண்ணீர் போன்றவை விருந்தினருக்காக இணைத்திருந்தாலும் அந்த மாளிகை பழமை மாறாது, அந்தக் காலத்து திமிங்கில வேட்டைக்காரர்கள் எவ்வளவு செல்வச் செழிப்புடன் ஆடம்பரமாக வாழ்ந்தார்கள் என்பதற்கு அத்தாட்சியாக நின்றது.
விடுதியை அருங்காட்சியகம்போல அனைவரும் சுற்றி வந்து பார்த்தார்கள். முழு மரத்தை கடைந்து நிர்மாணிக்கப்பட்ட பெரிய பெரிய தூண்கள். சுவரிலே நான்டக்கற்றின் புகழ் பெற்ற ஓவியர்கள் வரைந்த படங்கள். நூறு வருடத்துக்கு முன் பிடித்த பாஸ் மீன் ஒன்று பாடம் செய்யப்பட்டு கண்ணாடிப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது; அதன் எடை 33 றாத்தல் என்ற குறிப்புடன். கப்பல் தலைவர் அதைப் பிடித்திருக்கலாம். புகைக்கூட்டு விளிம்புச் சுவரில் மர்மமாக ‘இங்கே வெள்ளிக் கரண்டி கண்டெடுக்கப்பட்டது’ என்று எழுதி வைத்திருந்த தகவல் என்னை யோசிக்க வைத்தது. அந்த மர்மம் விடுபட நான் இரண்டு நாள் காத்திருக்க வேண்டும்.
படுக்கைகளும் வித்தியாசமானவை. பழைய மரத்தில் செய்யப்பட்ட பாரமான கட்டில். துள்ளி ஏறிப் படுக்க வேண்டும். அங்கு வைக்கப்பட்டிருந்த மேசை, நாற்காலிகளும் புராதனமானவையே. மெத்தை, மெத்தை விரிப்பு, விளக்கு என்று சகலதும் 19ம் நூற்றாண்டை ஞாபகப்படுத்துவதாக இருந்தன.
இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்து கலந்துகொண்ட திருமணம் இரண்டே நிமிடத்தில் முடிந்துபோனது. சத்தியப் பிரமாணம் செய்து, மோதிரம் மாற்றியபிறகு மணமகன் அவர்கள் வழக்கப்படி காலினால் ஒரு கிளாஸ் கிண்ணத்தை உடைத்ததோடு திருமணம் நிறைவுக்கு வந்தது. அன்றிரவு விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்தது. பழங்கால கட்டில் என்ற படியால் உடம்பின் ஒவ்வொரு அசைவுக்கும் கட்டில் கிறீச் கிறீச் என்று சத்தமிட்டது. திரும்பிப் படுக்க முடியாது. கைகால்களை அசைக்க முடியாது. ஒரு 19ம் நூற்றாண்டு மனிதனின் நித்திரையை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நல்லெண்ணம். கவி சொன்னதுபோல ‘இரவே என்னை ஒப்படைக்கிறேன்’ என்று கூறிவிட்டு படுத்து எப்படியோ தூங்கிவிட்டேன்.
திடீரென்று விழிப்பு ஏற்பட்டது. நேரம் ஒரு மணி இருக்கும். காற்று அசைந்ததை உணரக்கூடியதாக இருந்தது. வேறு உயிர் ஒன்று அறையில் உலாவியது. முழுவிழிப்பு ஏற்படவில்லை; இன்னும் அரை நித்திரைதான். கறுப்பு பெண், எட்டு ஒன்பது வயதிருக்கும், கட்டிலில் ஏறியது. கட்டில் அசைந்த கிறீச் சத்தம்கூட கேட்டது. உடனேயே நான் எழும்பி உட்கார்ந்து விளக்கைப் போட்டேன். நெஞ்சு படபடவென்று அடித்தது. ஒன்றுமே இல்லை. மறுபடியும் கைகளை ஒடுக்கிக்கொண்டு கட்டிலை தொந்திரவு செய்யாமல் படுத்தேன். நீண்டநேரத்துக்கு பிறகுதான் தூக்கம் வந்தது..
அடுத்தநாள் முழுக்க என்னால் அந்தச் சம்பவத்தை மறக்க முடியவில்லை. மனைவியிடமும் சொல்லத் தயக்கம், சொன்னால் வேதாள உலகம் படத்தை மறுபடியும் நினைவூட்டுவார். நேரத்தை போக்குவதற்காக நான்டக்கற் தீவை சுற்றிப் பார்த்தோம். 17ம் நூற்றாண்டில் இந்த தீவை கைப்பற்றிய வெள்ளைக்காரர்கள் திமிங்கில வேட்டையை தொடங்கினார்கள். இந்த தீவுதான் ஒரு காலகட்டத்தில் உலகத்தின் திமிங்கில வேட்டை தலைநகரமாக விளங்கியது. Moby Dick நாவலில் வரும் திமிங்கிலக் கப்பல்கூட நான்டக்கற் துறைமுகத்தில் இருந்துதான் புறப்பட்டது. எங்கே திரும்பினாலும் பெண்கள் நீச்சல் உடையில் திரிந்ததால் அவர்களுடைய கால்கள் மேலே போய் எங்கே முடிகின்றன என்பதை ஊகிக்க வேண்டிய அவசியமே நேரிடவில்லை.
அன்று இரவும் சரியாக ஒரு மணிக்கு அதே மாதிரி உணர்வு ஏற்பட்டது. யாரோ வெண்சாமரம் வீசியதுபோல காற்று விலகியது. கட்டிலில் ஒரு சிறுமி ஏறி அமர்ந்ததும், கட்டில் அசைந்ததும் ஞாபகம் இருக்கிறது. எழும்பி உட்கார்ந்து விளக்கைப் போட்டால் ஒன்றுமே இல்லை. மார்புக்கூடு சிறுத்ததோ அல்லது இருதயம் பெருத்ததோ தெரியவில்லை. நெஞ்சு படக் படக்கென்று இடித்தது. இரண்டு கரையையும் தொட்டுக்கொண்டு ரத்தம் பாயும் ஓசை துல்லியமாகக் கேட்டது. கழுத்திலே இருந்து ஆரம்பித்த வியர்வை பெருகி நெஞ்சு சட்டையை நனைத்தது. மனைவியை திரும்பிப் பார்த்தேன். அவர் மூக்காலும், வாயாலும் சரிசமமான அளவில் மூச்சு விட்டபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். மெதுவாக கதவைத் திறந்து வெளியே வந்தேன்.
மெல்லிய குளிர் காற்று முகத்தில் அடித்தது. ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் வானத்துக்கு காவலாக நின்றன. தூரத்தில் இருந்த மர இருக்கையில் புதிதாக மணமுடித்த இளம் காதலர் அமர்ந்திருந்தனர். அவன் நேராக இருந்தான். இந்தப் பெண் சரிந்து அவன் நெஞ்சில் தலையை வைத்துக்கொண்டு தன்னை மறந்து காணப்பட்டாள். அவன் என்னவோ மெள்ளச் சொன்னான். அவள் பதில் சொல்லாமல் தலையை அவன் நெஞ்சில் மேலும் கீழுமாக உரசினாள். அதுதான் பதில். அவன் இன்னும் ஏதோ கேட்டான். பிறகும் தலையை மேலும் கீழுமாக உரசினாள். அவளுடைய பதில் எல்லாம் உரசலாகவே இருந்தது. ஒரே ஒருமுறை பக்கவாட்டில் உரசினாள். அவள் இல்லை என்று சொல்கிறாள்.
அவர்களை அப்படிப் பார்ப்பது குற்றமாகப் பட்டது. மறுபடியும் சத்தம் செய்யாமல் அறைக்குள்ளே நுழைந்தேன். மனைவி அதே மாதிரி தூங்கிக்கொண்டிருந்தார். கொஞ்சம் துள்ளி படுக்கையில் ஏறி அமர்ந்தேன். நித்திரை முற்றிலும் விடைபெற்றுவிட்டது. அந்தக் கறுப்புச் சிறுமி மறுபடியும் வந்துவிடுவாளோ என்று பயமாக இருந்தது. தேன் நிலவு தம்பதியினர் நெஞ்சில் கன்னத்தால் உரசிப் பேசிக்கொண்டதை நினைத்துப்பார்த்தேன். அவர்கள் என்ன பேசியிருப்பார்கள்? வெகுநேரம் அப்படியே சாய்ந்து இருந்தேன். மீதி இரவு நித்திரை வரவே இல்லை.
விடிந்ததும் நான் மனைவியிடம் நடந்ததை சொன்னேன். அவர் தான் நன்றாக தூங்கியதாகவும், தனக்கு ஒரு வித சத்தமும் கேட்கவில்லை என்றும் சொன்னார். ‘இது பல நூறு வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட மாளிகை. எத்தனையோ தலைமுறை இந்த வீட்டில் வாழ்ந்திருக்கும். இங்கே என்னென்ன சம்பவங்கள் நடந்திருக்குமோ தெரியாது. இந்தக் கட்டிலில் எத்தனை நூறுபேர் படுத்து எழும்பியிருப்பார்கள்; எத்தனை பேர் செத்திருப்பார்கள். பேயாய்கூட இருக்கலாம்’ என்றேன்.
ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி பார்த்துவிட்டு சிரித்ததுபோல மனைவி சிரிசிரியென்று சிரித்து ‘நீங்கள் நம்புகிறீர்களா’ என்று கேட்டுவிட்டு என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். திருமணமாகி இத்தனை வருடங்களில் இப்படியான ஒரு பார்வையை அவர் என் மீது வீசியதே இல்லை.
அன்று காலையே நாங்கள் அவசரமாகப் புறப்பட்டோம். விடுதிக் காப்பாளருக்கு நல்ல சந்தோசம். அப்போதுகூட மனிதர் புன்னகைக்கவில்லை. புன்னகைத்திருந்தால் அவருடைய முகம் சிரிக்கும்போது எப்படி இருக்கும் என்பதை நாங்கள் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பு கிட்டவில்லை.
இரண்டு வாரம் தங்கப்போவதாகச் சொன்ன இளம் தம்பதிகளும் எங்களுடன் மிதவையில் திரும்பினார்கள். அவர்கள் jigsaw puzzle போல ஒட்டிக்கொண்டு திரிந்ததில் அவர்களை அணுகி எதற்காக தேன் நிலவை பாதியில் முறித்தார்கள் என்ற காரணத்தையும் கேட்க முடியவில்லை. அவள் முகத்தில் அழியாத மென்னகை இருந்தது. இதனிலும் பார்க்க சிறிய சிரிப்பை ஒரு வாய் உண்டாக்க முடியாது. மிதவைக்கப்பல் அட்லாண்டிக் சமுத்திரதைக் கடக்கும் வரைக்கும் அந்தப் பெண் அவனுடைய நெஞ்சில் கன்னத்தால் உரசும் காட்சி என் மனதில் ஏனோ திரும்பத் திரும்ப எழுந்தது.
கரை வந்ததும் சுற்றுலா பயணிகளுக்கான கடை ஒன்றில் ‘நான்டக்கற் ஆவிகள்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் இருக்கக் கண்டேன். உடனேயே காசு கொடுத்து அதை வாங்கி வீடு போகும் வழியிலே பஸ்ஸில் படிக்கத் தொடங்கினேன். இவை எல்லாம் உண்மைக் கதைகள். பலர் தங்கள் அனுபவங்களை தாங்களே எழுதியிருந்தார்கள். அதிலே காணப்பட்ட ஒரு கதையின் சுருக்கம் இதுதான்:

பல நூறு வருடங்களுக்கு முன்னர் நான்டக்கற்றில் ஓய்வுபெற்ற திமிங்கில வேட்டைக் கப்பல் தளபதி ஒருவர் தான் ஈட்டிய பணத்தில் ஒரு பெரிய மாளிகை கட்டினார். தளபதி இறந்தபிறகு அவருடைய மனைவி அந்த மாளிகையில் தனியாக வசித்தார். இவர் கஞ்சத்தனமானவர். அவ்வளவு பணமிருந்தாலும், வேலைக்காரர்களை அமர்த்த அவர் விரும்பவில்லை. ஒரேயொரு கறுப்பு சிறுமியை மட்டும் வேலைக்கு வைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் கிழவி படுக்கைக்கு போக முன்னர் தன்னிடம் உள்ள பணத்தை எல்லாம் வெளியே எடுத்து எண்ணிப் பார்ப்பார். பிறகு அவருடைய வெள்ளிப் பாத்திரங்கள், கரண்டிகள், கத்திகள் என்று சகலதையும் கணக்குப் பார்த்து சரி என்று பட்ட பிறகே தூங்கப் போவார்.
ஒரு நாள் இரவு கிழவி எண்ணியபோது ஒரு வெள்ளிக் கரண்டியை காணவில்லை. எத்தனை தடவை திருப்பி எண்ணியும் அதே தானம்தான் வந்தது. அவர் சம்சயம் வேலைக்காரச் சிறுமி மேலே திரும்பியது. அவளை உருட்டி, மிரட்டிக் கேட்டபோது அவள் தனக்கு தெரியாது என்று சொன்னாள். கிழவிக்கு சிறுமிதான் திருடினாள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஈவிரக்கம் பாராமல் சிறுமியை வேலையைவிட்டு துரத்திவிட்டார். அவளுக்கு புகலிடம் இல்லை; வேறு சொந்தக்காரரும் கிடையாது. யாரும் அவளை வேலையில் சேர்க்க சம்மதிக்கவுமில்லை. பட்டினி கிடந்து அவள் இறந்துபோனாள்.
பல வருடங்களுக்கு பிறகு வீடு கை மாறியது. புதிதாக வீட்டை வாங்கியவர் புகைபோக்கியை சுத்தம் செய்தபோது அதன் விளிம்புச் சுவரில் ஒரு வெள்ளிக் கரண்டியை கண்டெடுத்தார். புதுச் சொந்தக்காரர் அந்த வீட்டிலே பேய் உலாவுவதை தான் பல தடவை கண்டதாக கூறினார். ஒரு கறுப்பு சிறுமி நீண்ட நடை ஓடைகளில் நடந்துபோவாள். ஆனால் அவளுடைய தோற்றம் ஒரு கணத்துக்குமேல் நீடிப்பதில்லை, மறைந்துபோய்விடுமாம்.

இதுதான் நான் படித்த கதை.

என் மனைவியிடம் இந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன். படித்துவிட்டு ஒன்றும் பேசாமல் புத்தகத்தை திருப்பி தந்தார். எப்படி என்று கேட்டேன். மனைவி பதில் பேசாதது மட்டுமல்ல, மூச்சு விடுவதையும் ஒரு நிமிடம் நிறுத்திக்கொண்டார். தொண்டையில் சத்தம் உண்டாக்குவது அவ்வளவு கஷ்டமானதா? பல மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு திருமண அழைப்பிதழ் நான்டக்கற்றில் இருந்து வந்தது. நான் என் மனைவியைப் பார்த்து ‘இதற்கும் போகவேண்டுமா?’ என்று கேட்டேன். ‘செத்தாலும் வரமாட்டேன்’ என்றார் அவர்.


amuttu@gmail.com

Series Navigation