வெறுமே விதித்தல்

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

ஆனந்த கணேஷ்



இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் மானுடமானது வன்முறை என்பது பற்றிய ஒரு புரிதலை குரங்கானாது ஹோமோ ஸாப்பியனாக மாற ஆரம்பித்தகாலம் முதல் தேடிவருகின்றது.

பெரும்பாலான விளக்கங்கள் பலமுள்ள தனிமனித, மற்றும் குழுக்களினால் காலம் காலமாய் அவற்றின் சொந்த நலத்திற்கு ஏற்ப கொடுக்கப்பட்டுள்ளன.

தற்கால நிலையில் தீவிரவாதத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட ஒரு நண்பரையோ, ஒரு உறவினரையோ பெற்றவராக இருந்துவரும் இந்தியர்களுக்கு, விலைவாசி உயர்வை எப்படிக் கையாளுவது என்கிற கவலையோடு, தீவிரவாதம் என்பது பற்றிய ஒரு வரையறை, ஒரு புரிதல் பற்றிய கவலையும் காலத்தின் கட்டாயமாகிவிட்டது. ஏனெனில், பொதுவான மீடியாக்கள், ஸமூக முற்போக்காளர்கள், அரஸியல்வாதிகளின் உறுதியான நம்பிக்கைக்கு மாறாக மும்பை, கோயம்புத்தூர், கோத்ரா, பெங்களூர் போன்றவை இந்தியாவில் இருந்து தொலைக்கின்றன.

பள்ளிக்குப் போகும் உங்கள் குழந்தைகளும், குடும்ப உறுப்பினர்களும், அன்பு நண்பர்களும், நீங்களும் இங்கேதான் இருந்து தொலைக்கிறீர்கள். உங்களது வீடு, கடைகள், வயக்காடு முதலான அனைத்து உடைமைகளும் இங்கேதான் இருக்கின்றன. சுருக்கமாக, உங்கள் வாழ்க்கை இங்குதான் இருக்கின்றது. அந்த வாழ்க்கையை தாங்கள் எங்கனம் நடத்தப்போகிறீர்கள் என்பதை தற்போது நடந்துவரும் அரஸியல் நிகழ்வுகள்தான் முடிவு செய்கின்றன.
இதுபோன்ற அரசியல் நிகழ்வுகளின் வேர் “எது தீவிரவாதம்?” என்ற வரையறையில் அடங்கியுள்ளது. இது பற்றி ஐ.நா செய்துள்ள வரையறை மாற்றப்படவேண்டும் என்ற ஒரு கருத்து நிலவி வந்தாலும், அதை நடைபெறாமல் செய்ய அல் கொய்தா முதல் அமெரிக்காவரை முன்நிற்கின்றன. காரணம் இவர்கள் அனைவரும் செய்வது தீவிரவாதமே.

தீவிரவாதம் என்பது மக்களை ஆட்சி செய்யாத குழுக்களால் மட்டுமே ஏற்படுத்தப்படுவது என்று வரையறை செய்ய அமெரிக்க மாமா முயல்கிறார். அமெரிக்காவை எதிர்க்கும் குழுக்கள் அமெரிக்காவின் எல்லாச் செயல்களுமே தீவிரவாதம் என்று வரையறுக்க விரும்புகின்றன.

எல்லாத் தீவிரவாத நிகழ்ச்சிகளும் ஏதேனும் ஒரு அரஸியல் காரணத்திற்காகவே நடைபெறுகின்றன. உதாரணமாக 9/11, 7/11, குஜராத் படுகொலைகள், திண்ணியத்தில் நடைபெற்ற அவமானங்கள், மும்பை, கோயம்புத்தூர், பெங்களூர், மதுரை (ஏன் உலகம் முழுவதும்) நடைபெற்றுவரும் அனைத்து தீவிரவாதச் செயல்களும் ஏதேனும் ஒருவித அரஸியல் ஆதிக்கத்திற்கான நிகழ்வுகள்தான். இந்த நிகழ்ச்சிகளில் எது நியாயமானது, எது நியாயமற்றது என்பதை ஒவ்வொருவரும் அவரவர் குழுவின் சார்புகொண்டு வலியுறுத்துகின்றனர். உதாரணமாக, தாராஸிங்கின் மரணத்தை வரவேற்பவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளின்மீது மனிதத்தன்மையோடு நடக்கவேண்டும் என்கிறார்கள். அல்லது நீதிமுறையையே ஸந்தேகத்திற்குள்ளாக்குகின்றனர். வேறு தரப்பினர் பாபர் கட்டிட இடிப்பை நியாயப்படுத்தலாம். இதில் ஒரு பொதுவான வரையறையை கொண்டு வருவது பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிமுக்கிய தேவை.

குழுசாரா மனிதர்களின் வரையறைகள் பின்வருமாறு:

முதலில் எது தீவிரவாதம் என்பது பற்றிய வரையறை:

ஒவ்வொரு அரஸியல் மனிதர்களும், அமைப்புக்களும் தங்களது நிலைப்பாட்டை ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ப மாற்றிக்கொண்டுள்ளன. மாறாமல் இருப்பது பொதுமக்களின் நலன் மட்டுமே.

அந்த வகையில் மாறிக்கொண்டேயிருக்கும் தளத்தில் நடைபெறும் வன்முறைகளை மாறாத வரைமுறைக்குள் அடக்கவியலாது. இந்த இருவேறு தளங்களையும் இருவேறு அணுகுமுறையில் அணுகுவது மனத்தின்மூலம் இயங்கும் மானுடத்தின் பல சிக்கல்கள் தீர வழிவகுக்கும். எனவே, மாறாத தளத்தில் இயங்கும் பொதுமக்கள் நலன் என்பதன் அடிப்படையில் தீவிரவாதமும் வரையறுக்கப்படவேண்டும். மாறிக்கொண்டே இருக்கும் அரஸியல் தளத்திலிருந்து அதை வரையறை செய்ய முடியாது.

அந்தவகையில், பொதுமக்களை நேரடியாக பாதிக்கின்ற எந்த வன்முறையும் தீவிரவாதமே. அரஸியல் தலைவர்களின்மீது நடைபெறும் வன்முறைகளை அரஸியல் வன்முறையாகக் கொள்ளலாமேயன்றி தீவிரவாதமாகக் கருத இயலாது. ஏனெனில், ஸமூக அரஸியல் நிகழ்வுகளை உருவாக்குவதில், மாற்றுவதில் அரஸியல் தலைவர்களே நேரடியாக ஸம்பந்தப்பட்டுள்ளனர். அரஸியல் ரீதியான முடிவுகளை எடுக்கும் பலமும், செயல்படுத்தும் வலிமையும் இவர்களிடம்தான் உள்ளன. பொது மக்கள் பொதுவாகவே ஸம்பந்தமில்லாத, பலமற்ற பொதுவான மக்களே.

இந்த வரைமுறையின்படி அனைத்து காந்திக்களின்மேல் நடந்த வன்முறைகள் தீவிரவாதமாகாது. குஜராத் கலவரங்கள், இந்தியா முழுவதும் நடைபெற்றுவரும் குண்டுவெடிப்பு தீவைப்புக்கள் தீவிரவாத நடவடிக்கைகளாம். ஏனெனில், இவற்றால் பாதிக்கப்பட்டது பொதுமக்களே. அரஸியல்வாதிகள் இல்லை.

இந்த வரைமுறையானது மக்களை ஆட்ஷி செய்துவரும் மனிதர்கள், குழுக்கள், மற்றும் ஆட்ஷிப் பொறுப்பில் இல்லாத குழுக்கள், தனிமனிதர்கள் இரண்டிற்கும் பொதுவானதே.

இத்தகைய நேர்மையான ஒரு விளக்கத்தை அரஸியல்வாதிகளிடமிருந்து எதிர்பார்க்கமுடியாது. ஏனெனில் அவர்களது வரையறை முற்றிலும் எதிரானது. அவர்களின்மீது ஏவப்படுகின்ற வன்முறை மட்டுமே தீவிரவாதம் என்றும், பொதுமக்களின்மேல் நடைபெறுவது வெறுமே வன்முறை என்றும் விளக்க உள்ளூர விரும்புகின்றனர். பொதுமக்களுக்கு எதிரான அரஸியல்வாதிகளின் இந்தப் போக்குக்கூட ஒரு தீவிரவாதம்தான்.

பல அரஸியல்வாதிகள் தாங்கள் பொதுமக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகச் சொல்லிக்கொள்வதுகூட தாங்கள் செய்யும் முடிவுகள், செயல்களின் தீய விளைவுகளை பொதுமக்கள்பக்கம் தள்ளிவிடுவதற்குத்தான்.

அடுத்த வரைமுறை யார் தீவிரவாதி என்பது:

யாரெல்லாம் பொதுமக்களின் மேல் நடைபெற்ற, நடைபெறப் போகின்ற வன்முறைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரிக்கிறார்களோ அவர்கள் எல்லாரும் தீவிரவாதிகள்தான்.

அடுத்த கட்டம் இந்தத் தீவிரவாதிகளை கையாளுவது பற்றியது:

இந்த விஷயத்தில் உலகின் மிகப்பெரிய தீவிரவாதி ஒருவரின் கருத்தே சரியான வழிகாட்டுகின்றது:

“உனது ஆயுதத்தை உனது எதிரியே முடிவு செய்கிறான்”

தீவிரவாதத்திற்கு எதிரான வன்முறை தீவிரவாதமாகாது. ஒருவர் ஒரு கருத்தை எந்த வழியில் வெளிப்படுத்துகிறாரோ, அதே வழியில் அவரைக் கையாள வேண்டும். உதாரணமாக பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் நடைபெறும் போராட்டக்காரர்களோடு பேச்சுவார்த்தை செய்யலாம். பொதுமக்களை கொலை செய்பவர்களோடு எந்த பேச்சுவார்த்தையும் இல்லாமல் அவர்களை விரைவாகக் கொலை செய்யவேண்டும். ஏனெனில், பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்தி, அல்லது மனித உரிமை, உயர் வாழ்வியல் கருதுகோள்கள் என்பவற்றின் அடிப்படையில் இவர்களது நண்பர்கள் இவர்களை விடுவித்துவரும் வேளையில் நீதி மன்றத்தின் மூலம் அளிக்கப்படும் மரண தண்டனை என்பது வெறுமே விதித்தல் என்கின்ற சடங்காக மாறிவிடும் நிலைமை உள்ளது.

வழக்கமான பிற்போக்குவாதமாகிய “அவர்களைப்போல நாமும் செய்தால், நமக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாஸம்?” இத்தகைய விஷயங்களில் ஒத்துவராது. ஏனெனில், இந்த விஷயத்தில் வித்யாஸம் காட்ட நினைத்தால் வேறு எந்த விஷயத்திலும் வித்யாஸம் காட்டமுடியாத நிலைக்கு நம்மை இந்தத் தவறான வாதங்கள் எடுத்துச் சென்றுவிடும்.

தண்டனை வழங்குவது என்பது வெறுமே பழிக்கு பழி வாங்கும் ஒரு செயல் இல்லை. தண்டனையின் நோக்கம் இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாமல் செய்யவிழைவதே. எந்த ஒரு தண்டனை அதிகபக்ஷம் சில கொடிய வேதனையான செயல்கள் முற்றிலும் மீண்டும் நிகழாவண்ணம் நடாதவாறு செய்கிறதோ, அல்லது குறைந்தபக்ஷம் அந்தக் கொடிய செயல்களைக் கட்டுப்படுத்துகின்றதோ அந்தத் தண்டனை குற்றமிழைத்தவருக்கு வழங்கப்படவேண்டும்.

மற்றொரு நாட்டின்மீது போர் என்பதுகூட ஓர்வகை தண்டனை விதிக்கும் செயல்தான். அஃது விழையா சூழ்நிலைகளில் எந்தத் தண்டனை அதிகபக்ஷமாக வழங்க இயலுமோ அதைச் செவ்வனே ஒரு அரஸு செயல்படுத்தவேண்டும்.

நீதியமைப்பு பற்றிய கருத்துக்கள்:

நீதியமைப்பு என்பது தீவிரவாதத்தைப் பொறுத்தவரையில் ஆளுபவர்கள், மற்றவர்கள் என்கின்ற இருவேறு குழுக்களிடமிருந்தும் விலகியதாகவே தன்னைக் கருதவேண்டும். இதற்கு நீதியமைப்பு முழுவதுமோ, அல்லது குறைந்தபக்ஷம் தீவிரவாதத்தை கையாளும் நீதியமைப்பு மட்டுமோ மத்திய தேர்தல் கமிஷன்போல ஸுயச்சார்புடையதாக இருக்கவேண்டும்.

இத்தகைய அமைப்பின்மேல் மக்கள் நம்பிக்கை கொள்ளுவது, அதன் விதிகளை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்வது மிக மிக அவஸியம். இத்தகைய நீதியமைப்பை கேள்விக்குள்ளாக்குவதும் தீவிரவாதத்தை ஆதரிக்கும் செயலே.

மற்றபடி எங்கள் குழுவிற்கு நீதியமைப்பில் இடஒதுக்கீடு வேண்டும் என்றெல்லாம் கூறுவதும் தீவிரவாதம் தன்னுடைய குழுவிலிருந்து வெளிப்படுவதால் நியாயப்படுத்தும் செயலே.

இத்தகைய கருத்துக்களால் மேலும் மேலும் தீவிரவாதம் பெருகுமேயன்றி குறையாது.

காதுள்ளவர் கேட்கக்கடவர்.

Series Navigation