வெறிச்சென்று ஒரு வீதி

This entry is part [part not set] of 8 in the series 20000514_Issue

ஓர் அராபிய நாடகம்

தெளஃபீக் அல்-ஹகீம்


[வெறிச்சிட்ட ஒரு வீதி. ஒரே ஒரு வீடு, வாசலில் ஒரு விளக்கு எரிகிறது. தூரத்திலிருந்து இசை காற்றடிக்கும் போதெல்லாம் விட்டு விட்டுக் கேட்கிறது. நிலா வெளிச்சமற்ற இரவு

மந்திரவாதி ஒரு அடிமைப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு வருகிறான். அவளிடம் விசாரணை நடக்கிறது. )

மந்திர வாதி : அந்த வெளிநாட்டுக் கறுப்பன் உன்னிடம் என்ன சொல்லிக் கொண்டிருந்தான் ?

அடிமைப் பெண் : நகரத்தில் திருவிழாவிற்கு என்ன காரணம் என்று கேட்டுக் கொண்டிருந்தான். ராணி ஷாரஸாத்-ஐக் கெளரவிக்க கன்னிப் பெண்கள் விழா எடுக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

மந்திர வாதி : அதற்கு ஏன் உன் உடம்பு இப்படி நடுங்குகிறது ?

அடிமைப் பெண் : (முணு முணுப்பாக) தெரியவில்லை.

மந்திரவாதி : உனக்கு அடிக்கடி நானும் எச்சரிக்கை செய்து விட்டேன். அந்தக் கிழட்டு அடிமையிடமிருந்து தள்ளியே இரு. அவன் கண்களே கொடூரம்.

அடிமைப் பெண் : (முணுமுணுப்பாக) அவன் ஒன்றும் கிழமில்லை.

மந்திரவாதி : என்ன பிசாசு பிடித்தவள் மாதிரி முணு முணுக்கிறாய் ? கையைப் பிடித்துக் கொள். உள்ளே வா. அவன் அசிங்கமான முகத்தைப் பார்த்து பயந்து விட்டாயாக்கும்.

அடிமைப் பெண் : (முணுமுணுப்பாக) அவன் ஒன்றும் அசிங்கமில்லை,

{இருவரும் வீட்டுக்குள் சென்று மறைகிறார்கள். கறுப்பன் கண்களால் பெண்ணைப் பின்பற்றுபவனாக வருகிறான்.)

கறுப்பன் : என்ன அழகான கன்னிப் பெண். அவள் உடம்பே புகலிடம் போல மனிதனுக்கு.

ஒரு குரல் (அவன் பின்னாலிருந்து ) : பிசாசுக்கோ புகலிடம் ? இல்லை என் கத்திக்குப் புகலிடம் ?

கறுப்பன் : (திரும்பி): ஓ நீயா ?

மரண தண்டனைப் பணியாள் : என்னை சுலபமாய் அடையாளம் கண்டு கொண்டாயே ?

கறுப்பன் : எங்கே உன் கத்தி ?

மரண தண்டனைப் பணியாள் : கனவுகளுக்காக அதை விற்று விட்டேன்.

கறுப்பன் : நேற்று சாராயக் கடையில்; உன் தாராள குணம் இப்போது தான் எனக்குப் புரிகிறது. அந்த வாசனைக் கஞ்சா இன்னும் என் மேல் மணக்கிறது. என்ன தாராளமாய் எனக்காகச் செலவு பண்ணினாய் ?

மரண தண்டனைப் பணியாள் : நம் வெளிநாட்டு விருந்தாளிகளைச் சரியானபடி நடத்த வேண்டுமில்லையா ?

கறுப்பன் : உன் அரண்மனை முதலாளிக்காக நீ என்ன வெல்லாம் பண்ணுகிறாய் ?

மரண தண்டனைப் பணியாள் : எனக்கு வேலை போய் விட்டது. நான் ராஜாவின் மரணதண்டனையை நிறைவேற்றும் வேலைக்காரன் இல்லை இப்போது.

கறுப்பன் : அது தானே பார்த்தேன் .

மரண தண்டனைப் பணியாள் : என்ன பார்த்தாய் ?

கறுப்பன் : இன்று கன்னிப் பெண்கள் விழா எடுக்கிறார்கள் இல்லையா ?

மரண தண்டனைப் பணியாள் : அதேதான். ராஜாவிற்கு இனி மரண தண்டனை வாள் வீச நான் தேவையில்லை.

கறுப்பன் : ( புகழ்ச்சியாக) ஷாரஸாத்தின் உடம்பு செய்த வேலையாக்கும் இது.

மரண தண்டனைப் பணியாள் : இல்லை. ராஜாவிற்கு ஷாரஸாத் மேல் ரொம்பப் பிரியம். அவர் கன்னிப் பெண்களைக் கொல்வதை நிறுத்தியதற்கு அது காரணம் அல்ல.

கறுப்பன் : (காது கொடுத்துக் கேட்பவனாக) அந்தப் பாட்டைக் கேளேன். அழகான விசித்திரமான பாட்டு. யார் வீடு இது ?

மரண தண்டனைப் பணியாள் : (மெல்லிய குரலில் ) மந்திரவாதி வீடு இது. ராஜா ரகசியமாக வந்து அவனிடம் ஆலோசனை கேட்பதுண்டு.

கறுப்பன் : மந்திர வாதி. அந்த அடிமைப் பெண்ணின் அப்பா தானே அவன் ?

மரண தண்டனைப் பணியாள் : அப்படித்தான் சொல்கிறார்கள்.

கறுப்பன் : (மீண்டும் இசையைச் செவி மடுத்த படி ) உனது கத்திக்குத் தப்பிய ஒரு பாடும் பறவை.

மரண தண்டனைப் பணியாள் : (போகத் திரும்பியவனாக) எனக்குத் தப்பினால் என்ன ? பிசாசிடம் சிக்கிக் கொள்ளுமே..

கறுப்பன் : போகாதே. அவசரமாய்ப் போக வேண்டிய வேலை தான் இல்லையே.

மரண தண்டனைப் பணியாள் : ஏதோ போயாக வேண்டும் என்று தோன்றுகிறது. என் உள்ளுணர்வு ஏதோ சிவப்புக் கொடி எச்சரிக்கை செய்கிறது.

கறுப்பன் : இல்லை அது கறுப்புக் கொடியாக்கும். உன் உள்ளுணர்விற்கு நிறக்குருடு.

{ அந்த நிமிடம் வீட்டு ஜன்னலிலிருந்து விசித்திரமான ஒரு முனகல் கேட்கிறது.)

மரண தண்டனைப் பணியாள் : கேட்டாயா அதை ?

கறுப்பன் : என்ன கேட்டாயா ?

மரண தண்டனைப் பணியாள் : ஆந்தை அலறுவது போல.

கறுப்பன் : ஆந்தையா ? எனக்கு ஒன்றும் கண்ணில் படவில்லையே ? வேலையில்லாமல் ஏதாவது கெட்ட சகுனப் பீதியைக் கிளப்பாதே.

மரண தண்டனைப் பணியாள் : (தூர விலகி) செவிடர்களைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

கறுப்பன் : ஒரு நிமிஷம் . போகாதே. அழகான ஷாரஸாதைப் பற்றிச் சொல்லாமல் போய் விடாதே.

மரண தண்டனைப் பணியாள் : இன்னும் என்ன சொல்வது ? நேற்றே தான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேனே. கேட்பவர்கள் நீ அவளுக்காகத் தான் ஆயிரக் கணக்கான மைல் பிரயாணம் செய்து வந்திருக்கிறாய் என்று நினைத்துக் கொள்ளுவார்கள்.

கறுப்பன் : (தூரமாய்க் கையைக் காட்டி, ஆர்வத்துடன் கத்துகிறான் ) அந்த அபார வெளிச்சத்தை பாரேன். வெடியா இல்லை வெளிச்சமா ?

மரண தண்டனைப் பணியாள்: ராஜாவின் இடம் அது.

கறுப்பன் : ராணியும் தானே.

மரண தண்டனைப் பணியாள்: இல்லை ராணியின் இடம் அரண்மனையின் எதிர்ப் பக்கம் இருக்கிறது.

கறுப்பன் : விசித்திரம். ராஜாவிற்கு ராணி விடியும் வரை கதை சொல்ல வேண்டியதில்லை போலிருக்கிறது.

மரண தண்டனைப் பணியாள்: ராஜா பைத்தியமாகிக் கொண்டிருக்கிறான்.

கறுப்பன் : அவள் மேல் பைத்தியமாய் இருக்கிறானாக்கும்.

மரண தண்டனைப் பணியாள் : இல்லை நிஜமாகவே பைத்தியம்.

கறுப்பன் : இருட்டில் அலைபவன், பாவம்.

(விசித்திரமான முனகல் வீட்டு ஜன்னலிலிருந்து – ஒரு நீண்ட ‘ஆ ‘காரம்.)

கறுப்பன் : (திடுக்கிட்டு ) யாரது.

ஜன்னலிருந்து குரல் : உன்னைப் பார்க்க முடிகிறது. உன் கண்களில் மின்னலையும் பார்க்க முடிகிறது.

கறுப்பன் : என்னைத் தெரியுமா உனக்கு.

குரல் : ஆமாம். நீ ரொம்ப முந்திக் கொண்டு வந்து விட்டாய். சூரிய வெளிச்சத்திற்கு வேண்டித் தாகம் உனக்கு.

கறுப்பன் : என் அந்தச் சூரிய வெளிச்சத்தை, அவளைப் பார்க்கப் பொழுது வரவில்லையா இன்னும் ?

குரல் : உனக்கு உயிர் ஆசை இருந்தால், இருட்டிலேயே ஓடிப் போய் விடு, விடிவதற்கு முன்னால்.

கறுப்பன் : ஏன் , என் அருமைப் பெண்ணே ?

குரல் : அந்த ஆள் இன்னும் குழந்தை போலத் தான். கறுப்பனை விட்டு வைக்க மாட்டான்.

கறுப்பன் : என் உயிருக்கு ஆபத்தா ?

குரல் : போ. ராஜாவின் பார்வையில் படுவதற்கு முன்னால் போய் விடு. தன் மனைவியைக் கருப்பனின் மடியில் பார்த்த அந்த நாளை இன்னமும் ராஜா மறக்க வில்லை. தப்பித்துப் போ. மறைந்து போ. இருட்டுக்குள் போய் ஒளிந்து கொள்.

கறுப்பன் : ஒரு வார்த்தை என்னைப் பேசவிடு.

குரல் : சீக்கிரம்.

கறுப்பன் : அவளை நான் பார்க்க வேண்டும்.

குரல் : அவளுக்காகவா நீ வந்தாய் ?

கறுப்பன் : ஆமாம் . அவள் எப்படி என்று நான் பார்க்க வேண்டும்.

குரல் : எல்லாமே அவள் தான். அவளைப் பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாது.

கறுப்பன் : நீ ? உனக்கும் தெரியாதா ?

குரல் : தெரியாது. என்னைக் கேள்வி கேட்டுத் துளைத்தார்கள். என் தலையை வெட்டிக் கேட்டால் அது சொல்லுமோ என்னமோ அவர்களுக்கு ? நீ இப்போது போ.

கறுப்பன் : இன்னும் ஒரு வார்த்தை.

குரல் : போ. போ என்கிறேனே.

கறுப்பன் : தனியாகவா இருக்கிறாய் வீட்டில் ?

குரல் : கடுகெண்ணெயில் நாற்பது நாள் ஊறவைத்த ஒரு ஆளும் என்னுடன் இங்கே இருக்கிறான். வெறும் அத்திப் பழமும் வால்நட் விதையும் தான் அவனுக்கு உணவு என்று தருகிறான் மந்திர வாதி. அவனுக்கு சதையெல்லாம் போய் நரம்பும் தலைக் குடைச்சலும் தான் மிச்சம். இன்று இரவு அவனை வெளியே கொண்டு வந்து காற்றில் வைத்து உலரவிடுவான்.

கறுப்பன் : ஏன் அவன் இப்படியெல்லாம் செய்கிறான் ?

குரல் : கேட்கிற கேள்விக்கு அப்போது தான் பதில் சொல்வானாம்.

கறுப்பன் : கேள்வி யார் கேட்பார்கள் ?

குரல் : ராஜா தான்.

கறுப்பன் : ராஜாவிற்கு என்ன தெரிய வேண்டும் ?

குரல் : அடிமையே போ. இந்த இடத்தை விட்டுத் தொலை. விளக்கை அணைக்க அவர்கள் வருகிறார்கள்.

கறுப்பன் : உன் அப்பாதான் ஏற்கனவே விளக்கை அணைத்து விட்டாரே..

(கன்னிப் பெண் மீண்டும் தன் நீட்டி முழங்கிய ‘ஆ ‘காரத்தை முனகுகிறாள்.)

கறுப்பன் : ஏன் நீ இப்படி விசித்திரமாய்க் குரல் கொடுக்கிறாய் ?

குரல் : இருளில் பச்சை நிற மேகங்கள் உன்னைக் கடந்து போகும் போது ஜஹீதா என்கிற பைத்தியக் காரியை நினைத்துப் பார்.

 

 

  Thinnai 2000 May 14

திண்ணை

Series Navigation

ஓர் அராபிய நாடகம்

தெளஃபீக் அல்-ஹகீம்

ஓர் அராபிய நாடகம்

தெளஃபீக் அல்-ஹகீம்