விவாதங்களும், வெட்டிக்கவிதைகளும்

This entry is part [part not set] of 31 in the series 20080828_Issue

கே. ஆர். மணி


பஞ்ச பூதங்கள்
மெல்ல சிரித்தன.
ஒரு செல் உயிரோடு
பூமி பிறந்தது.

கலப்படம் பிரபஞ்ச வெடிப்பிலிருந்து தன்
கணக்கை தொடங்கியது.

அவனும் அவளும் கலந்து
அதுவும் அதுவும் கலப்படமாகி
இதுவாகி
வெல்கம் மை பேபி..

தூயவேதங்கள்
மண் கலந்து மநுவாகியது.
மநு மட்கி மனிதமானது.
மனிதன் மட்கி, மற்றவற்றோடு கலந்து
விலையுயர்ந்த பெட்ரோலாகவேண்டும்.

எரிபொருள் தேவை
எதையாவது எரித்து,கலந்து
எரிபொருள் தேவை.
மனிதனாயிருந்தாலும் பரவாயில்லை.

வார்த்தைகள் கலந்தன
மொழியாகியது.
மொழிகள் இறுகி
புத்தகச்சிறை புகுந்தன.
தேவபாசையும், செம்மொழிகளும்..

கலப்பது கலையா தொழிலா
விவாதித்தனர் அந்த கவிதை மன்றத்தில்.

‘எருமைப்பாலில் கொழுப்பு அதிகம்
உடம்புக்கு ஆகாது
உங்களின் மீதான அக்கறை தப்பா?’
குழாயடியின் கீழே நின்றபடி
பால்வியாபாரி கேட்டான்.
தண்ணீரி வழிந்தது – நிறமின்றி.

‘மழைக்காலமில்லயா. ஈரமாயிருக்கும்
அதான் வைச்சேன் ‘
சிரித்தபடி ஆட்டோக்காரன்.
‘அப்போ வெயில்காலத்திற்கு ?’
கோபமாய் நான்.
‘என் வீட்டு சமையலைறையும்
போலிஸ்காரனின் பாக்கெட்டும்
ஈரமாயிருக்கும் ‘
சூடு மீட்டர் சுட்டது, கை விடாவிட்டாலும்.

துணுக்குகள் கவிதையா
துடைத்துவிடு அந்த வார்த்தைகளை
தொடர்ந்தது கவிதை மன்றம்.
*

கலப்பது மட்டுமே
காலத்தின் நியதி.
சரியாய் கலந்தது சரித்திரமானது
தவறான சூத்திரங்கள்
அபார்சனானது.

கவிஞர் இதை இரண்டுமுறை சொன்னார்.
அரங்கம் கவிதையாய் அங்கீகரித்தது.

கலப்பது வேறு.
கலப்படம் வேறா.
இயற்கையாய் செய்தால்
பிரபஞ்ச சிருஸ்டி
மனிதன் முயற்சித்தால்
கலப்பட பட்டம்.
தொடரும் நெருடல்கள்

இளைஞனின் கவிதைக்கு
கைதட்ட ஆளில்லை.
பாவம் அவன் எந்த கட்சிக்காரனுமில்லை.

கலப்பது என்பது காலத்தின் நியதி.
கலப்படம் என்றழைத்தலும் தவறொன்றுமில்லை.
சாயா வாயோடு கவிதாயினி.

**
கலப்பது தூய்மையா இல்லையா
விவாதித்தன அடுத்த கவிதை மன்றத்தில்.

கலப்படம் தேவையானது
தங்கம் சொன்னது.
தூய்மையின் வலியும்
தனிமையான சோகமும்
அதன் பரிசுகளைவிட
பாரமானவை.
உயிரற்றதாய் அதுயிருந்தாலும் அதன்
தத்துவங்கள் உயிர்புடன் வந்தது.

ஓட்டாமல் ஒடிய
அந்த பாதரசம்
தங்கத்தத்துவத்தின் மீது
காறி உமிழ்ந்தது.

யாரிடமும் ஓட்டாமல் ஒட்டி
எதனாலும் மாசுபடாது
நான் பயன்படவில்லையா ?
சோதனைச் சாலையிலிருந்து
வெள்ளைக்கேள்வியாய்
கோபமாய் கேட்டது.

சந்தை விலையை பார்
விலைபோகாத உன்பலம் உனக்கே தெரியும்
தங்கத்தின் பல் சிரித்தது.
அரங்கமும் சிரித்தது.

பாதரசம் அறையிலிருந்து வெளிநடந்தது.
அறையின் விளக்குக்கள் அணைந்தன.
விவாதம் முடிந்தது, தீர்ப்புகளின்று.

**
அந்த சங்கத்தின் எல்லா
கவிதை அறையிலும்
விவாதங்கள், கவிதைகள்
விண்ணைப்பிளந்தன.

எல்லாவற்றிற்கும்
இருபக்கமுண்டு.

ஏன், இரண்டும் இணைந்து
கலப்படமாகி ஒரே பக்கமானால் ?
நடுவர் சட்டைப்பையின்
நாணயம் யோசித்தது.

ஓரே பக்கம் நாணயம்
உதயமானது.

எந்த நாடும் அதை
ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

எல்லா கலப்புகளும், கலப்படங்களும்
எப்போதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை போலும்.

கடைசி மின்வண்டியை கருத்தில் கொண்டு
கவி பட்டிமன்ற நடுவர் சொன்னார்.

“ஆகவே கலப்படம் என்பது சரியே, சரியே..
ஆயினும் தவறே, தவறே ”

____________________________________________________________________
அன்று கலப்படம் தேவையா, இல்லையா என்பதை பற்றி கவிதை
பட்டி மன்றம் மும்பையிலிருந்தது. வாசிக்கவேண்டிய கவிதையை வாசிக்கும் முன் எனக்கு
காட்டியதற்காக அந்த கவிஞர் வருத்தமடைந்திருப்பார். . பெரிய க.நா.சு நினைப்பில்
காட்டமாய் விமர்சனக்குறிப்பை அவரின் கவிதை தாளின் பின்புறத்திலே எழுதி, அடுத்த
நல்ல கவிதைக்கு ஆல் த பெஸ்ட் என்று வேறு கையொப்பமிட்டுவிட்டேன். ஒரு உறுத்தல்,
அதே தலைப்பு என்னால் எப்படி கிறுக்க முடியும் அதே அரங்கத்தில்.. பத்து நிமிடத்தில்
சமைக்கப்பட்ட கவிதை நூடல்ஸ்.. காலக்கொடுமை. நீங்களும் அடுத்த முறை ஆல் த
பெஸ்ட் மின்னஞ்சல் அனுப்பலாம்.


mani@techopt.com

Series Navigation

கே ஆர் மணி

கே ஆர் மணி