விரிவடையும் இஸ்லாமியப் பார்வை (குர்ஆனிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம் – திறனாய்வு)

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

களந்தை பீர்முகம்மது


குர்ஆனிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்
ஹெச்.ஜி. ரசூல்
பக். : 92 விலை: ரூ. 50
முதல் பதிப்பு: ஜூலை 2008
வெளியீடு
கீற்று வெளியீட்டகம்
1-48கி, அழகிய மண்டபம்
முளகுமூடு அஞ்சல் – 629 167
குமரி மாவட்டம்

இஸ்லாம் குறித்து இன்று உலக அளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்களின் அரசியல் அணுகு முறைகள் மற்றும் வாழ்க்கைச் சூழல்கள் குறித்தும் விரிவான அளவில் பேசப்படுகின்றது. அதே சமயத்தில் இஸ்லாத்தின் உட்கூறுகள் பற்றிப் பல்வேறு முஸ்லிம் அறிஞர்களும் குர்ஆனையும் ஹதீஸ்களையும் ஆராய்ந்து வருகின்றனர். தம் மனதிற்குகந்த முடிவுகள் எனில் அதை வரவேற்பதும் ஒப்புக்கொள்ள முடியாத பட்சத்தில் கடும் எதிர்ப்புக் காட்டுவதும் ஒருசேர நடந்துவருகின்றது. மாற்றுக் கருத்துகள் முன்வைக்கப்படுகையில், அதற்கு முகம் கொடுத்துத் தக்க பதில்கள் கூற ஏராளமான வாய்ப்புகளும் உண்டு. ஆனால் அது போன்ற வாய்ப்புகளைச் சமூகம் நிராகரித்துவிடுகின்றது. ஹெச்.ஜி. ரசூல் இது போன்ற விஷயங்களை எதிர்கொள்கிறார்; உடன்பாடாகவோ சற்றே எதிர்மறையாகவோ பதில் கூறுகிறார். ஆனாலும் காலங்காலமாகக் கட்டிவைக்கப்பட்டுள்ள கருத்துகளின் மேல் ஒரு சிறு விலகல் நேர்ந்தாலும் அதை ஒப்புக்கொள்கிற சூழல் இல்லை, விவாதிப்பதும் இல்லை.

‘குர்ஆனிய மொழியாடல்கள் – மீள் வாசிப்பின் தருணம்’ என்பது அவருடைய புதிய தொகுப்பு நூல். முக்கியமான பத்துத் தலைப்புகள் இதில் உள்ளன. மதம் என்றாலே உணர்ச்சிமயமானது. மற்றவர்கள் உணர்ச்சிமயமாய் இயங்குகின்ற தளத்தில், ரசூல் அறிவுபூர்வமாக இயங்குகிறார். கீலீஹ் மி ணீனீ ஸீஷீt ணீ னீusறீவீனீ எனும் இப்னு வராக்கின் நூல் குறித்து ரசூல் கூறும்போது, ‘இஸ்லாத்திற்கு எதிரான இத்தகைய கருத்துப் படிமங்களை இஸ்லாமிய அறிஞர்கள் கருத்தியல் ரீதியில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது; புனிதங்களின் பெயராலோ மரபுவழி குர்ஆனிய ஆய்வு அணுகுமுறைகளாலோ இவற்றை எதிர்கொள்ள முடியாது’ என்றுதான் தன் கருத்தை முன்வைக்கிறார். பின்-நவீன கால நெருக்கடிகளையொட்டி குர்ஆனை ஆழமாக வாசித்துப் புதிய அர்த்தங்களைக் கண்டடைய வேண்டும் என்கிற நோக்கிலேயே அவருடைய இந்தத் தொகுப்பு அமைந்துள்ளது.

‘மௌனங்களைப் பேசவைத்த தப்ஸீர்’ எனும் கட்டுரை விளிம்புநிலை அரசியலுக்கான தேடலை முன்வைக்கின்றது. ‘அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள்; தொழுகையைக் கடைபிடிப்பார்கள்; நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (பிறருக்கு) செலவுசெய்வார்கள் (2:3)’ என்கின்ற இந்த வசனம் இறைவழிபாட்டை முன்னிறுத்தும் அதே அளவிற்குத் தானம் வழங்குதலையும் முன்வைக்கின்றது. தொழுகையை நிறைவேற்ற அனைவரும் தக்க மனநிலை கொண்டவர்கள்தான். ‘ஜகாத்’ எனப்படும் செலவு – ஒருவருடைய வருவாயில் 2.5 சதவிகிதம் மாத்திரமே. ஆனால் நடைமுறையில் ‘தொழுகை’ அளவிற்கு ஜகாத் முன்னிலை பெறுவதில்லை. ஏன் இவ்வாறு ஆக வேண்டும்? அது ஒரு பொருளாதாரம் சார்ந்த பிரச்சினை; தொழுகையைப் போன்ற ஓர் உடல் மொழி அல்ல. ஒரு மனிதனின் தேவை என்ன அளவில் என்பதை எவராலும் நிர்ணயம் செய்ய முடியவில்லை. உலகமயம் குவிக்கும் நுகர்வுப் பொருள்கள் ஒரு மனிதனைப் பித்துறச் செய்கிறது. ஆசைக்கான எல்லைக் கோடுகள் தாமாகவே அழிந்துவிடுகின்றன. இதில் ‘ஜகாத்’ பற்றிய சிந்தனைகள் தாக்குப்பிடிப்பதில்லை. எனவே, ஒருவனின் பொருளாதார நிலை மார்க்கக் கடமையின் மீதான பற்றுதலை ஓரங்கட்டி விடுகின்றது. நம் பொருளாதாரத்தை மீறி ஆன்மிகம் சுடர்விட முடிவதில்லை. இங்கேதான் ஆன்மிக நாட்டத்தையும் பொருளாதார வாழ்வையும் இணைத்துப் பரிசீலித்து, மாற்று வழிகளைத் தேட வேண்டும். இந்தப் புள்ளியில் ரசூலின் பயணம் தொடர்கின்றது; மார்க்க மேதைகளின் பயணம் நின்றுவிடுகின்றது. பயணத்தைத் தொடர்வோர்க்கு எந்த முரண்பாடுகளும் இல்லை; தொடர முடியாமலும் தொடர விரும்பா மலும் நின்றுவிடுவோர்க்கு அதன்பின் சொல்லப்படும் எல்லாக் கருத்துகளும் முரண்படுகின்றன. இந்தத் தேக்கமே உலகளாவிய பல நெருக்கடிகளையும் முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்டு வந்து திணிக்கிறது. இதைக் கடைசி வரையிலும் ஆன்மிகக் கருத்தியல்களுக்கு உள்ளேயே பேசி முடிப்பதால், ‘இஸ்லாமியச் செல்வம்’ பங்கீடு செய்யப்பட முடியாமல் போகின்றது. சவூதி மன்னர்கள் செல்வச் செழிப்பில் மிதக்க, மிக அண்மையிலுள்ள எதியோப்பியாவில் தாய்ப்பாலுக்காகப் பரிதவிக்கும் ஒரு முஸ்லிம் நீக்ரோ குழந்தையைக் கழுகு தன் விருந்தாகத் தூக்கிக்கொண்டு செல்கின்றது.

குர்ஆன் சமூகத்தை நோக்கிய ஒரு பிரகடனம். அந்தக் குர்ஆனியத் தளத்தில் நின்றபடிக்கே வெளியுலகை எட்டிப் பார்க்கலாம். இஸ்லாமியப் பொருத்தப்பாட்டைக் கருதி விவாதம் செய்யலாம். ஆன்மிகக் கருத்திலேயே நின்று உழலும்படி குர்ஆனோ ஹதீஸ்களோ வலியுறுத்துவதில்லை. ஆனால், குர்ஆன் இன்றளவிலும் ஓர் ஆன்மிகப் பிரதியாக மட்டுமே வாசிக்கப்படுகின்றது.

குர்ஆனியத் தத்துவயியலும் சூஃபித்துவமும், பீர்முகம்மது வலியுல்லாவின் குர்ஆனிய உரையாடல் என்கிற இரண்டு கட்டுரைகளும் சூஃபிசத்தின் விரிவைக் காண்பவை. சூஃபித்துவம் உலகளாவிய கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பினும் தமிழ்ச் சிந்தனையின் தனித்த அடையாளமும் கொண்டது என்கிறார் ரசூல். சூஃபித்துவமும் ஆன்மிகக் கருத்தையே பேசுகின்றது. ஆனால் அதன் அடிப்படையை வரையறுக்கக் காரணமாயிருந்தவை அரசியல் கருத்தாக்கங்கள்; லௌகீக வாழ்வில் காணப்பட்ட வெறித்தனமான சுயநலப் போக்குகள்! இறைவழிபாட்டை வெறும் சமயச் சடங்காச்சாரமாக்கியவர்களுக்கு எதிரான கருத்துகள் சூஃபித் துவத்தில் அடங்கியுள்ளன. சூஃபிகள் மக்களுக்குச் சேவையாற்றவும் மனித மனங்களை அன்பால் இணைக்கவுமான செயல்பாடுகளைக் கொண்டவர்கள். மேலும் இஸ்லாமியக் கலை இலக்கியத்தின் விதைகள் சூஃபித்துவத்தின் பயன்களே! இலக்கியம் தழைக்கும்போது மக்கள் நலனுக்கான போராட்டங்களும் தோன்றிவிடுகின்றன அல்லவா? இஸ்லாமிய அரசர்கள் சூஃபித்துவத்தை இதன் காரணமாகவே தான் வெறுத்தார்களோ? பீர்முகம்மது வலியுல்லாவின் ஞானப்புகழ்ச்சியில் வரும் பல வரிகளில் ஏழ்மை, வறுமை, பசி போன்ற சொல்லாடல்கள் இடம் பெறுவது மட்டுமல்லாமல் வித்தார வாழ்வு தருவாய், குறையாத செல்வம் தருவாய் போன்ற வேண்டுதல்களும் இடம்பெற்றுள்ளன. சூஃபித்துவம் ஆன்மிகத்தை மாத்திரமே பேசாமல், மக்களின் வாழ்நிலை பற்றியும் பேசுவதால் அரசர்களின் பீடம் அசைவதற்கான இயக்கு சக்திகள் உண்டாகின்றன. இலக்கிய வடிவங்களை நிராகரிப்பதின் மூலம் இஸ்லாமிய அரசாட்சிகள் வறட்டுத் தன்மையைக் கொண்டுள்ளன. சமூக அவல நிலைகளைக் கண்ணுறும் பீரப்பா, அதிகாரத்திலிருந்து மீட்சிபெறும் வழியைத் தேடுகிறார். அதிகாரத்திலிருந்து மீட்சி பெறுவதை அரசர்கள் விரும்புவார்களா?

இலண்டன் நகரிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பின் காலனியக் கல்வியியல் பேராசிரியராகப் பணியாற்றும் ஜியாவுதீன் சர்தாரின் முக்கியப் பணிகளில் ஒன்று, ஷரீஅத் எனப்படும் இஸ்லாமியச் சட்டத்தைப் புரிந்து கொள்ள உதவும் சிந்தனைகளை முன்வைப்பது. நபிகள் நாயகத்தின் காலத்தில் பள்ளிவாசலில் மக்களோடு கலந்தே பல பிரச்சினைகளுக்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் நவீன கால இஸ்லாமிய ஆட்சிமுறைகளில் இப்படி ஒரு அரசியல் பண்பாட்டைத் தேடிப் பார்க்கவும் முடியாது. மத்திய காலச் சூழலில் இஸ்லாமிய அறிஞர்களால் வரையறைக்குள்ளான ஷரீஅத் ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தின் வடிவமாக வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளதை விவரிக்கும் கட்டுரை ‘மறு சிந்தனையில் இஸ்லாமியக் கருத்தாடல்கள்’ என்பது. சமூகநலன் குறித்து இயங்க வேண்டிய ஷரீஅத், மக்களின் பங்கேற்புக்கு வாய்ப்பு தராமல் சமய அறிஞர்களின் ஒருமித்த கருத்து என்கிற அளவில் சுருக்கப்பட்டுள்ளது. ஜிகாத் என்கிற கருத்தாக்கம் ஒரு முஸ்லிமின் ஆன்மிகம் (மற்றும் உளவியல்) எல்லைக்குள்ளே உலவ வேண்டிய ஒன்று. ஆனால் அதன் பொருள் இஸ்லாமிய வெளிவட்டத்தில் மாற்றுச் சமூகத்தினருக்கு எதிரான சொல்லாடலாக மாற்றம் பெற்றுள்ளது. குர்ஆனின் சில வசனங்களை அதன் தோற்றுவாய்த் தன்மைக்கு மாறாக, நவீன அரசியல் நடவடிக்கைகளுக்கான அர்த்தமாகப் புரிந்துகொள்ளும் போது விகற்பமான செயல்பாடுகள் தோன்றுகின்றன. மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப இஸ்லாமியக் கோட்பாடுகள் இயங்கியல் தன்மையைப் பெற வேண்டும். அவ்வாறு பெறாதுபோனால் அது பொது இழப்பாகும். எனவே ஜியாவுதீன் சர்தாரின் கருத்துகளைச் சமூகம் உள்வாங்கிக்கொள்ள முயல வேண்டும் என்பது அந்தக் கட்டுரையின் நோக்கமாக உள்ளது.

இஸ்லாம் ஏன் உளவியல் பகுப்பாய்வை நிராகரிக்க வேண்டும்? முந்திய கட்டுரையில் சொல்லப்படும் அதே தன்மைகளைக் கொண்டே இந்தக் கேள்விக்கான பதிலையும் காணலாம். சிக்மண்ட் ஃப்ராய்ட் ஒரு யூதர் என்பதால் அவர் வகுத்த உளவியல் கோட்பாடுகளை இஸ்லாம் சமூகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதையும்விட வலுவான காரணம் இன்னொன்று இருக்கின்றது. உளவியல் பகுப்பாய்வு இறுதியில் இறை நிராகரிப்பைச் செய்துவிடும் என்பதான அச்சம். இப்படியொரு அச்சம் சரிதானா? தங்களின் வேதத்தின் மீது முஸ்லிம்களுக்கு இன்னும் உறுதியான நம்பிக்கை ஏற்படவில்லை என்கின்ற நிலைக்குத்தானே இந்நிராகரிப்பு கொண்டு சேர்க்கும்? இந்தக் கட்டுரை இன்னும் விரிவாக எழுதப் பட்டிருக்கலாம்.

‘அதிகார வன்முறைக்கு எதிரான ஜிகாத்’ குடிப் பண்பாடு பற்றிய அவரது கட்டுரையால் உண்டான விளைவுகளைப் பேசுகின்றது. அப்போது உண்டான சலசலப்புக்குரிய காரணங்களையும் குறைபாடான புரிதல்களையும் தன் கட்டுரைக்கு ஆதரவான தரவுகளையும் இக்கட்டுரையில் விவரிக்கிறார். குர்ஆன் உலகப் பொதுமறை என்றே சொல்லப்படுகின்றது. ஆனால் உலகில் பல விசித்திரமான அல்லது கடினமான தொழில் முறைகள் உள்ளன. இந்தத் தொழிலைக் கொண்டே ஜீவிப்பவர்களிடம் உண்டான குடிப் பழக்கம் வெறும் ரவுடித்தனம் அல்லது கெட்ட சகவாசம் அல்லது பொறுப்பின்மை சார்ந்து உருவான பண்பாடல்ல என்று நாம் புரிந்துகொள்ளலாம். அது அவர்களின் வாழ்க்கைமுறை சார்ந்த பொது அம்சம். மலக்கிடங்கைச் சுத்தம்செய்யும் ஒரு தொழிலாளியின் மனநிலையை ஒரு முஸ்லிம் உணர்ந்து அறியாதவரைக்கும், உச்சி வெயிலில் வியர்வை சொட்டச் சொட்டக் கல்லுடைக்கும் ஒரு தொழிலாளியின் போராட்டத்தை உணர்ந்து அறியாதவரைக்கும் இங்கே எதையும் பேசிவிட முடியாது. குர்ஆன்-ஹதீஸ் பற்றிய ஒரு முஸ்லிமின் கருத்து வெற்றுப் பிரமைகளால் உண்டாக்கப்பட்டதாகத்தான் இருக்கும். அவனிடம் உள்ள குர்ஆனியப் பார்வையானது, இஸ்லாமின் மேட்டுக்குடி சார்ந்த, மூளை உழைப்பாளியின் பார்வை சார்ந்த ஒரு குறுகிய தளமாகவே இருக்கும். ஓர் உலகப் பொதுமறை, மலக்கிடங்கைச் சுத்தம் செய்பவனையும் கல்லுடைக்கும் தொழிலாளியையும் அரவணைக்க முடியாமல்தானே போகும்? அறிவுஜீவிகளுக்கு வாய்த்த இஸ்லாம் உலக வாழ்க்கைமுறை சார்ந்து வெளிப்படவில்லை. பொது அரங்கில் தங்களையும் ஒரு தூய முஸ்லிமாகக் காட்ட வேண்டி நிறையப் பேர் அப்போது சின்னச் சின்ன டிராமாக்களை நடத்திக் கொண்டிருந் தனர்-ரசூலுக்கு எதிரானவர்கள் என்னும் போர்வையில்! (முஸ்லிம்களின் வாழ்க்கைமுறையோடு இறுகிப் பிணைந்துள்ள ‘வட்டியும் வட்டி சார்ந்த வருவாய்க்கும்’ எதிரான குர்ஆனிய வாளை அப்போது எந்த இடைக்கச்சில் அவர்கள் சொருகி வைத்திருந்தார்கள் என்பதையே பார்க்க முடியாமல் போயிற்று.) ‘தாராளமய ஷரீ அத்’ கட்டுரையை இன்னும் புரியும் படியாக அவர் விளக்கியிருக்க வேண்டும். சொல்லவந்த கருத்துகளை விட்டுவிட்டு வேகவேகமான ஓட்டம். ஷரீ அத்தைத் தாராளமய நோக்கில் பார்ப்பதற்கு நமக்கு முதலும் முடிவுமாக உதவுவது இந்த காலம் ஜ் வெளி, காலம் ஜ் சூழல் போன்ற தரவுகள்தான். ஓர் அறிவுஜீவியும்கூடக் கடினமான தடைகளைத் தாண்டியே ரசூலின் இந்தக் கட்டுரையைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கும். அக்கட்டுரையை அவர் ஒரு கருத்தரங்கில் வாசித்திருக்கிறார். அப்படியானால் வரிக்கு வரி அவர் இடை நின்று விளக்கம் கொடுத்திருப்பாராய் இருக்கும்.

‘முக்கானத்துன்’ என்னும் அரபிச் சொல் மூன்றாம் பாலினத்தாரைக் குறிக்கிறது. அரவானிகள் குறித்துத் தெளிவான வசனங்கள் குர்ஆனில் இல்லை. ஷான்மாமோன் என்ற பெண் ஆய்வாளர் அரவானிகளைப் பற்றிய ஆய்வைச் செய்துள்ளார். மெக்காவின் கஃபத்துல்லாவின் ஹரம் எல்லையிலும் மெதினாவில் உள்ள நபி முகம்மதுவின் சமாதியிலும் அவர்கள் காவலர்களாகப் பணியாற்றுகிறார்கள். இதைத் தவிர அவர்களுக்குக் கௌரவ மளிக்கும் தகவல்கள் (குர்ஆனிலோ-ஹதீஸிலோ) இல்லை. இப்போது நிலவிவரும் அதே மனப்பான்மைதான் அந்தக் காலத்திலும் நிகழ்ந்துள்ளது. முன்கட்டுரையில் குறிக்கப்பட்டுள்ள காலம் ஜ் வெளி போன்ற தரவுகள், மருத்துவ ஆய்வுகள் இன்னும் இஸ்லாமிய உலகில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது தெரிய வருகிறது. 1984க்குப் பிறகு பாதுகாவல் பணிக்கு மூன்றாம் பாலினத்தாரைச் சவூதி அரசு தேர்வுசெய்யவில்லை. இதெல்லாம் மூன்றாம் பாலினத்திற்கு எதிரான அநீதிகளே.

தொகுப்பில் இடம்பெற்ற கட்டுரைகள் அனைத்துமே இஸ்லாமியப் பார்வையை விரிவுபடுத்தக்கூடியவை. அரேபிய மார்க்கவாதிகளும் மேலை நாட்டு அறிஞர்களும் இஸ்லாத்தைப் பற்றிக்கொள்கிற சாதகமும் பாதகமுமான தகவல்களை உடனடியாகத் தமிழுலகின் கவனத்திற்குக் கொண்டு வருகிற பணியை ஹெச்.ஜி. ரசூல் நீண்டகாலமாகவே செய்துகொண்டிருக்கிறார். முஸ்லிம்கள்மீதும் இஸ்லாத்தின் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்குத் தக்க பதிலடியைத் தருவதிலும் அவர் பின்தங்கியதில்லை.

இந்த நூலை வெளிக்கொண்டு வந்ததில் கீற்றுப் பதிப்பகம் பாராட்டிற்கு உரியது. ஆனால் தமிழப் பதிப்புலகம் கண்டிருக்கும் பாய்ச்சலைக் கீற்றுப் பதிப்பகம் கவனத்தில் கொள்ள வேண்டும். துணைப்பாட நூல்தான் என்றெண்ணும்படியாக அச்சும் அமைப்பும் உள்ளது.

நன்றி

காலச்சுவடு மாத இதழ்

ஜூலை 2009

Series Navigation

author

களந்தை பீர்முகம்மது

களந்தை பீர்முகம்மது

Similar Posts