விரல் சூப்பும் சிறுவனும் வறுத்த கச்சானும்

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

றகுமான் ஏ. ஜெமில்


மூக்கும் ஓடி விரலும் சூப்பியபடியாக
படுக்கையிலும் மூத்திரம் அடித்து
சோறும் பிசைந்து தீத்தச்சொல்லி அடம்பிடித்து
அம்மாவின் சேலைத்தலைப்பில் தொங்கி
சிணுங்கி செல்லம் காட்டும்படியான பராயம்

நட்சத்திரங்களும் சடைத்து பூத்து
நிலாவும் எறிக்கும் அவ்விரவில்
கடற்கரை வெளியில் கால்கள் சோர்ந்தபடியாக
அந்த வறுத்த கச்சான் பைகளை ஏந்தியபடி
கெஞ்சித் திரியும்படியான இன்நேரம்
அம்மாவின் மடியில் தலைவவைத்து துயின்றிருப்பேன்
பேய்க்கதைகள் கேட்டபடியாக

அரிச்சுவடிகளோடு மேயும்
ஏனதின் பிஞ்சு விரல்களானது
இந்த வறுத்தகச்சான் பைகளை காவும்படியான
சாபக்கேட்டை கலவரமொன்றுதான் திணித்தது
என் அப்பாவை செமித்த கணத்தோடு

எனக்கும் மிகுந்த ஆவல்தான்
அதோ அந்த சிறுவாகளாட்டம்
நிலா பழுத்து வெடித்த இரவுகளில்
கடல் அலைகளில் கால்கழுவி பன்னல் கிண்டி
கச்சான் கொட்டையும் சப்பி
காற்றுவாக்கில் அகலவிரித்து உறங்குவதற்கு

ஆனால் அவர்கள் உடைத்துப்போடும்
கச்சான் கொட்டை கோதுகள்மாதிரி
ஏன் கனவுகளும் ஆசைகளும்
இந்த கடல் வெளியில் ஒவ்வொரு நிசியுமாக

இருந்தாலும் மிகுந்த திருப்திதான்
என் அம்மாவிற்கும் தம்பிக்குமாக
இந்த வறுத்த கச்சான் பைகளை ஏந்தியபடி
கடல் வெளிகளை ஒளக்கித் திரிந்த
இந்த பளிங்கு இரவுகளை நினைத்து, நினைத்து

றகுமான் ஏ. ஜெமில், இலங்கை

riyasahame@yahoo.co.uk

Series Navigation