வினை விதைத்தவன்

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

என்.கணேசன்


“பிரதமர் ஆபிசிலிருந்து உங்கப்பா உடல்நிலை விசாரிச்சு இது வரை மூன்று தடவை போன் செய்து விட்டார்கள் கதிரேசா” என்று மனோகரன் தன் நண்பனிடம் தெரிவித்தான்.

“உம்”

“உங்கப்பாவைப் பார்க்க நம்ம மந்திரிகளும், எம்.எல்.ஏக்களும் கீழே காத்துகிட்டிருக்காங்க”

“உம்”

“வெளியே பத்திரிக்கைக்காரங்க அதிகமா, தொண்டர்கள் அதிகமான்னு தெரியலை. அவ்வளவு கூட்டம் இருக்கு. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ்கரங்க திண்டாடறாங்க.”

“உம்”

“சாரங்கன் தன் வெளிநாட்டுப் பயணத்தைப் பாதியில் ரத்து செய்து வந்துட்டார்.”

“என்னது” கதிரேசன் மின்சாரத்தால் தாக்கப் பட்டவன் போல சுறுசுறுப்பானான்.

“விமான நிலையத்திலிருந்து பத்து நிமிஷத்துக்கு முன்னால் தான் போன் வந்தது. என்ன இருந்தாலும் உங்கப்பா மந்திரிசபையில் அவர் தானே நம்பர் ‘டூ’. இந்த மாதிரி நேரத்தில் இங்க இல்லாம இருப்பாரா?”

“அந்த ஆள் வந்ததை நீ ஏன் பத்து நிமிஷம் முன்னாலேயே சொல்லலை, மனோ. எப்பவும் பிரச்சினை தரக் கூடிய தகவல்களை உடனுக்குடன் கேட்டுத் தெரிஞ்சுக்கணும்னு அப்பா அடிக்கடி சொல்வார்” என்ற கதிரேசன் யோசிக்க ஆரம்பித்தான்.

“என்ன யோசிக்கிறாய், கதிரேசா”

“அப்பா இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொள்வார்னு யோசிக்கிறேன் மனோ”

மரணப் படுக்கையில் இருக்கும் கங்காதரனுக்கு மகனை நினைக்கையில் பெருமையாக இருந்தது. தன்னை ஒரு உதாரண புருஷனாய் மகன் எண்ணிப் பின்பற்றுவது எந்த தந்தைக்குத் தான் பெருமையாக இருக்காது. படுத்த படுக்கையாகி பேசும் சக்தியையும் இழந்து விட்டாலும். கண்களைத் திறந்து பார்க்கவும் சுற்றிலும் நடப்பதைப் புரிந்து கொள்ளவும் இன்னமும் அவரால் முடிகிறது.

பேச மட்டும் முடிந்திருந்தால் அவர் மகனுக்கு அறிவுரை சொல்லியிருப்பார். “குளத்தில் வீசப்பட்ட கல்லைப் போலிரு மகனே. தன் இலக்கான அடிமட்டத்தை அடையும் வரை அது எங்கும் எப்பொழுதும் இளைப்பாறுவதில்லை”. இந்த அறிவுரை அவருக்கு மிகவும் பிடித்தமானது. இதை சுமார் முப்பத்திநான்கு வருடங்களுக்கு முன் ஒரு அபூர்வ சித்தர் அவருக்குச் சொன்னார். பக்கத்து கிராமத்திற்கு வந்திருந்த அந்த சித்தருக்கு முக்காலமும் தெரியும் என்று போய் பார்த்து விட்டு வந்த பலரும் சொன்னார்கள். பெரியதாக நம்பிக்கை இல்லா விட்டாலும் போய்த் தான் பார்ப்போமே கங்காதரனும் போனார்.

அந்தக் கிராமத்துக் குளத்தங்கரையில் தான் அவர் அந்த சித்தரை ஒரு மாலைப் பொழுதில் பார்த்தார். தனிமையில் அமர்ந்தபடி ஆகாயத்து சிவப்புச் சூரியனை ஒருவிதக் காதலோடு அந்த சித்தர் பார்த்துக் கொண்டிருந்தார். ஏதோ ஒரு சக்தி காந்தமாய் அவரை அந்த சித்தரிடம் ஈர்த்தது.

ஒடிசல் தேகம், கிழிசல் உடைகள், சீப்பு கண்டிராத தலை முடி, கத்தரிக்கோலைக் காணாத தாடி, இந்த அலங்கோலங்களுக்குச் சம்பந்தம் இல்லாத மிகவும் கூர்மையான காந்தக் கண்கள். அவரது அருகாமையை உணர்ந்து சூரியனிலிருந்து அவர் பக்கம் சித்தர் பார்வையைத் திருப்பினார். கங்காதரன் அப்பார்வையில் சிலையாக நின்றார். அந்தக் கண்களின் அனுமதியில்லாமல் தன் பார்வையை விலக்கிக் கொள்ள முடியாதென்று அவருக்குத் தோன்றியது. அந்தக் கண்கள் அவருக்குள்ளே புகுந்து ஆழ்மனதை ஊடுருவிப் பார்த்தன.

“என்ன வேணும் தம்பி”

“என்ன கேட்டாலும் அதை உங்களால் தர முடியுமா?”

“கொடுக்கிறது நானல்ல தம்பி. கொடுக்கிறவன் மேலே இருக்கான். என்ன வேணும்னு சொல்லு”

“பெரீ…ய ஆளாகணும்”

“கேட்கறப்ப எப்பவுமே தெளிவாய் இருக்கணும் தம்பி. மொட்டையா கேட்டா அவன் சொத்தையா எதாவது தந்துடுவான்”

ஒரு கணம் சிந்தித்து விட்டு கங்காதரன் சொன்னார். “மந்திரியாகணும். முடியுமா?”

“முடியாததுன்னு எதுவுமேயில்லை, தம்பி. மேலே இருக்கிறவன் ஒரு பெரிய வியாபாரி. எப்போதுமே கொடுப்பான்-தகுந்த விலை கொடுக்க நீ தயாராய் இருந்தால். நிஜமாகவே அந்தப் பொருள் தேவை தானா, தரும் விலை சரியானது தானான்னு எல்லாம் நீ தான் தீர்மானிக்கணும்.”

“விலை என்ன சாமி?”

அந்த சித்தர் ஒரு சிறு கல்லைத் தூக்கி குளத்தில் எறிந்தார். “இந்தக் கல் எப்படி குளத்தின் அடிமட்டதை அடைகிற வரை ஓரிடத்திலும் நிற்காதோ அப்படி ஒரு வேகத்தையும், ஒரே இலக்கையும் நீ வைத்துக் கொண்டிருந்தால் உனக்கு எதுவுமே முடியாததில்லை தம்பி”

அந்த வார்த்தைகள் கங்காதரன் மனதில் செதுக்கப்பட்டன.

“ஆனால் ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக் கொள் தம்பி. நீ விதைப்பதை மட்டும் நீ அறுவடை செய்ய முடியும். நீ விதைப்பதை எல்லாம் அறுவடை செய்ய வேண்டியிருக்கும்” என்று ஓரே வாக்கியத்தை இரண்டு விதங்களில் அழுத்தம் திருத்தமாக சித்தர் புன்னகையோடு சொன்னார்.

ஒரு அக்னி விதை கங்காதரன் மனதில் அன்று விதைக்கப்பட்டது. மீதி சரித்திரமாகியது. அன்று முதல் அதிர்ஷ்ட தேவதை நிரந்தரமாக அவருடன் தங்கி விட்டாள். எம்.எல்.ஏ, மந்திரி, முதல் மந்திரி என இலக்குகள் கங்காதரனால் சூறாவளி வேகத்தில் அடையப்பட்டன. கங்காதரன் என்ற சூறாவளி தன் இலக்கை அடையும் முன் பல உயிர்ச் சேதங்களும், பொருட்சேதங்களும் ஆயின. தான் செய்த சேதங்களுக்கு சூறாவளி எவ்வளவு வருத்தப்படுமோ அவ்வளவு தான் அவரும் வருத்தப்பட்டார். அரசியலில் வெற்றியே தர்மம், அதற்கென என்ன செய்தாலும் அது நியாயமானதே என்று உறுதியாக நினைத்தார். பாவம், புண்ணியம், நியாயம், அநியாயம் முதலிய வார்த்தைகள் ஒருவனை சுதந்திரமாக இயங்க விடாதென அவர் உணர்ந்து தெளிந்திருந்தார். அவர் தொட்டதெல்லாம் பொன்னாகி சர்வ வல்லமை படைத்த மனிதரானார். நான்கு முறை தொடர்ந்து முதலமைச்சர் பதவியை அலங்கரிப்பது இந்த மாநில சரித்திரத்தில் அவர் மட்டுமே.

“சமுதாய விடிவெள்ளி சாரங்கன் வாழ்க! தமிழர் தலைவர் சாரங்கன் வாழ்க! அடுத்த முதல்வர் சாரங்கன் வாழ்க” என்று வெளியே ஒலித்த முழக்கங்கள் கங்காதரனை நிகழ்காலத்திற்கு வரவழைத்தன.

“அந்த ஆள் வந்து விட்டார், கதிரேசா. விமான நிலையத்திலிருந்து வீட்டுக்குக் கூடப் போகவில்லை. நேராய் ஆஸ்பத்திரிக்கே வந்து விட்டார், கில்லாடி மனுஷன்” என்று ஜன்னல் வழியே பார்த்து விட்டு மனோகரன் சொன்னான்.

ஒன்றும் பேசாமல் கதிரேசன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

“யோசிக்க என்ன இருக்கு கதிரேசா. கீழே நிற்கிற கூட்டத்தோட அந்த ஆளும் நிற்கட்டும். யாரும் தலைவரை தொந்தரவு செய்யக்கூடாது, அவர் இன்னும் அபாயக் கட்டத்தைத் தாண்டலைன்னு டாக்டர் சொன்னதை அந்த ஆள் கிட்டேயும் சொல்லிடுவோம்.”

“வேண்டாம் மனோ. அந்த ஆளை மட்டும் இங்கே கூட்டிட்டு வா”

“ஏன் கதிரேசா”

“அந்த ஆள் கிட்டே அப்பாவே ஜாக்கிரதையாய் இருப்பார். அதனால் எல்லாரையும் நடத்துகிற மாதிரி அவனை நடத்தக் கூடாது. எப்பவும் எதிரிக்கு நம் மனதில் என்ன இருக்குன்னு தெரியக் கூடாதுன்னும், அவன் நம்மை நம்பற அளவுக்கு யதார்த்தமாக வெளியே தெரியணும்னும் அப்பா எப்பவும் சொல்வார். நீ போய் அந்த ஆளைக் கூட்டிகிட்டு வா”

மனோகரன் ஐந்து நிமிடங்களில் சாரங்கனோடு வந்தான். சாரங்கன் கண்களில் நீர் நிரம்பியிருந்தது.

“அண்ணனுக்கு என்ன ஆச்சு கதிரேசா?”

கதிரேசன் டாக்டர்கள் சொன்னதை விவரமாக சொன்னான்.

“உண்மையாகச் சொல்றேன் கதிரேசா. செய்தியைக் கேட்டவுடன் துடிச்சுப் போயிட்டேன். அவரை எப்பவுமே நான் சொந்த அண்ணனாய் தான் நினைச்சிருக்கேன். அவர் பிழைச்சுக்குவார்னு நான் நம்பறேன்” என்று சொல்லி சாரங்கன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

“உங்கள் நம்பிக்கை உண்மையாகட்டும் சார். டில்லியில் இருந்து ஒரு பெரிய டாக்டர் வரப் போகிறார். அவருடையது தான் கடைசி முயற்சி…”

“நாம் பிரார்த்தனை செய்வோம். கடவுள் கை விட மாட்டார், கதிரேசா. இன்னிக்கு ராத்திரி என் வீட்டில் ஒரு பெரிய ஹோமத்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்கேன். என் தலைவர், என் அண்ணன் தீர்க்காயுசா இருக்கணும்கிறதுக்காக இந்த ஹோமம். அவரில்லாத நம் கட்சி நிலைமையை என்னால யோசிச்சு கூட பார்க்க முடியலை அதனால தான் அமெரிக்காவில் எல்லா நிகழ்ச்சிகளையும் பாதியில ரத்து செய்துட்டு ஓடி வந்திருக்கேன் …”

“எனக்கு தெரியும் சார். உங்க மாதிரி தளபதிகள் தம்பிகளாய் பக்கத்தில் இருக்கும் போது அப்பாவை நெருங்க அந்த எமனுக்குக் கூட தைரியம் வராது”

“உன்னை மாதிரி மகன் கிடைக்கவும் அவர் கொடுத்து வச்சிருக்கார் கதிரேசா. இந்த ஆஸ்பத்திரியில் அப்பா பக்கத்தில் மூன்று நாளாய் பிரியாம நிழல் மாதிரி இருந்துகிட்டு பார்த்துக்கற உன்னை மகனாய் கிடைக்க, அவர் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செஞ்சிருக்கணும்”

கங்காதரனுக்கு உள்ளே பற்றி எரிந்தது. “பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கணுமாம். அப்படியானால் இந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்யவில்லை என்று சொல்லாமல் சொல்கிறான் பார்” என்று மனதிற்குள் வசை பாடினார். சாரங்கன் சோகத்தோடு கண்ணீர் மல்க அவரருகே சிறிது நேரம் நின்றார். அவர் செத்த பிறகு பிணத்தருகே எப்படி நிற்பது என்று சாரங்கன் ஓத்திகை பார்க்கிறாரோ என்று கங்காதரனுக்கு சந்தேகம் வந்தது.

அரசியலில் இது போன்ற பாசாங்குகள் சகஜம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதோ சர்வ சகஜம். அதுவும் இது போன்ற முக்கியமான திருப்பு முனையை ஏற்படுத்த இருக்கும் கட்டங்களில் பொய், பாசாங்கு, சதி, வேஷம் எல்லாம் நியதியே தவிர விதிவிலக்கல்ல.
இது போன்ற விஷயங்களில் கங்காதரன் ஒரு பல்கலைகழகம் என்றே சொல்லலாம். அவர் கற்றுத் தந்து தான் சாரங்கன் உட்பட அனைவரும் கற்றிருக்கிறார்கள். ஆனால் அவரிடமே அந்த வித்தையை அவர்கள் காட்டிய போது தான் அது சகிக்கவில்லை.

“அப்ப நான் கிளம்பறேன் கதிரேசா. இன்னைக்கு ஹோமம் முடிஞ்ச பிறகு திருநீறு குடுத்தனுப்பறேன். அப்பாவுக்கு பூசி விடு. நான் வரட்டுமா?”

“மகனே இவன் பழம் பெருச்சாளி. இவன் கிட்ட சர்வ ஜாக்கிரதையாயிரு” என்று மனதினுள் மகனுக்கு கங்காதரன் அறிவுரை சொன்னார்.

சாரங்கனை வராந்தா வரை சென்று விட்டு வந்த மனோகரன் நண்பனிடம் பரபரப்போடு சொன்னான். “கதிரேசா! இன்றைக்கு சாரங்கன் வீட்டில் ஹோமம் எதற்கு தெரியுமா?”

“எதற்கு?”

“அந்த ஆளு முதலமைச்சராக ஏதோ ஒரு கிரகம் குறுக்கே நிற்குதுன்னு ஒரு ஜோசியன் சொன்னானாம். அதற்கு சாந்தி செய்யத் தான் இந்த ஹோமம்னு நம்ம ஆளுங்க தகவல் தந்தானுங்க”

“சரி அந்த ஆளை விடு. மத்தவங்க எப்படி?”

“மந்திரி முனிரத்தினம் கூட முதலமிச்சர் நாற்காலி மேல் ஒரு கண். இருக்கிற மந்திரிகளில் அவர் தான் ஊழல் குற்றச்சாட்டு எதிலும் சிக்காமல் இருக்கார். திருவாளர் பரிசுத்தமாம். அவர் அதை வைத்து முதலாக்கப் பார்க்கிறார். நேற்று ராத்திரி மணிக்கணக்கில் உட்கார்ந்து உங்கப்பாவிற்கு கண்ணீர் அஞ்சலிக் கவிதை எழுதிகிட்டு இருந்ததாய் அவர் டிரைவர் சொன்னான்”

கங்காதரன் உள்ளே எரிமலையாய் வெடித்தார். “அடப்பாவிங்களா, விட்டால் குழி தோண்டி என்னை உயிரோடு புதைத்து விடுவீர்கள் போல இருக்கிறதே”.

இத்தனை திமிங்கலங்களுக்கு மத்தியில் தன் மகனை விட்டுப் போவதில் அவருக்கு வருத்தம் இருந்தது. தன் ஒரே மகன் மீது அவர் மித மிஞ்சிய பாசம் இருந்தது. சிறு வயதிலேயே தாயை இழந்த அவனை மிகவும் செல்லமாக வளர்த்தார். அவனுக்கும் அவர் ஒன்று சொன்னால் அது வேத வாக்காக இருந்தது. அவரிடம் சொல்லாமல், அனுமதி பெறாமல் அவனும் எதையும் செய்ததில்லை. ஒரே ஒரு முறை மட்டும் விதிவிலக்கு நிகழ்ந்தது. அதுவும் ஒரு மகன் தன் தந்தையிடம் சொல்லக் கூடிய விஷயம் அல்ல என்பதால் அவன் அதை அவரிடம் சொல்லவில்லை. அவன் கல்லூரியில் படிக்கும் போது தன் சக மாணவியை கற்பழித்துக் கொன்று விட்டான். அவ்வளவு தான். அது சம்பந்தமான தடயம் ஒன்று ஒரு பத்திரிக்கை நிருபர் கையில் கிடைத்து விட நிலைமை பூதாகரமாகியது. அந்த இளம் நிருபருக்கு தொழில் தர்மம், நியாயத்திற்காக போராடுவது போன்ற பைத்தியக்காரக் கொள்கைகள் அழுத்தமாக இருந்தன. எந்த விலைக்கும் அவன் படியாமல் போகவே அவனைத் தீர்த்துக்கட்டுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் போயிற்று. அந்தப் பத்திரிக்கை ஆசிரியருக்கும், உரிமையாளருக்கும் பல லட்சங்களையும், சலுகைகளையும் தந்து தடயத்தை அழிக்க வேண்டி வந்தது. அப்போது தான் முதல் முறையாக மகன் மீது அவர் கடுமையாகக் கோபப்பட்டார்.

“உன்னை என் மகன்னு சொல்லிக்கவே எனக்கு வெட்கமாய் இருக்குடா கதிரேசா. ஒரு புத்திசாலி ஆயிரம் அயோக்கியத்தனம் செய்யலாம். ஆனால் அதை முட்டாள்தனமாய் செய்யக் கூடாது. எந்தத் தப்பு செய்தாலும் தடயங்களை விட்டு வைக்கக் கூடாது. அது முடியாத பட்சத்தில் தப்பே செய்யக் கூடாது. இன்னொரு தடவை இப்படி மாட்டிகிட்டு என் கிட்டே வந்து நின்னால் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. ஜாக்கிரதை”

அந்த மாணவியைக் கொன்றதாக ஏற்றுக் கொண்டு வேறு ஒரு மாணவன் போலீசில் சரணடைந்தான். பத்திரிக்கை நிருபர் கொலை வழக்கில் வதந்திகள் தவிர வேறு முன்னேற்றம் இல்லாமல் அது கிடப்பில் போடப்பட்டது. அந்த நிருபரின் விதவைத்தாய் மட்டும் ஒரு பேட்டியில் ஆணித்தரமாய் சொன்னாள்: “தெய்வம் நின்று கொல்லும்”. படித்து விட்டு கங்காதரன் ஏளனமாகச் சிரித்தார். “கொன்னுட்டு போகட்டுமே, இங்க யார் சாசுவதம்”

கதிரேசன் மற்றொரு முறை அது போன்ற முட்டாள்தனம் எதையும் செய்யவில்லை. திறமை உள்ள மாணவனான அவன் வேகமாக பாடங்களைக் கற்று கொண்டு விட்டான். தடயங்கள் விட்டு வைக்காமல் தவறு செய்வதில் வல்லவன் ஆனான். அவனது புத்திசாலித்தனம் அவரைப் பெருமிதப் படுத்தியது. அவனுக்கு எல்லா அரசியல் நுணுக்கங்களையும் அவர் ஒவ்வொனெறாக சொல்லித் தந்தார். அவனுக்கு எதையும் இரண்டாம் முறை அவர் சொல்லித் தரத் தேவையிருக்கவில்லை.

“கையிலே என்ன லிஸ்ட் கதிரேசா”

“மனோ இதில் நம்ம எம்.எல்.ஏக்கள், சாரங்கனோட எம்.எல்.ஏக்கள், முனிரத்தினத்தின் எம்.எல்.ஏக்கள், சைத்தானோட எம்.எல்.ஏக்கள்னு பிரித்து லிஸ்ட் போட்டிருக்கேன்”

“அதென்ன சைத்தானோட எம்.எல்.ஏக்கள்?”

“யார் பக்கமும் சேராத, ஆனால் எப்பவும் எப்படியும் மாறி விடக் கூடியவர்கள்”

மகனின் பேச்சை கங்காதரன் ரசித்துக் கொண்டிருந்த போது டில்லி டாக்டர் மற்ற டாக்டர்கள் பின் தொடர வந்தார். கதிரேசனிடம் வெளிப்படையாகப் பேசினார். “இப்போதைய நிலைமையில் ஒரே ஒரு ஆபரேசன் தான் நம் கடைசி நம்பிக்கை. அதைச் செய்யாமல் இருந்தால் நாம் அவரை நிச்சயமாக இழந்து விடுவோம். செய்தாலோ காப்பாற்ற ஐம்பது சதவீதம் வாய்ப்பு இருக்கிறது. ஆபரேசன் முடிந்து சுமார் பன்னிரண்டு மணி நேரம் அவர் தாக்குப் பிடித்து விட்டால் அவர் கண்டிப்பாய் குணம் ஆகி விடுவார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

கதிரேசன் குரலடைக்கச் சொன்னான். “நீங்கள் ஆபரேசன் செய்யுங்கள் டாக்டர். இத்தனை வருஷம் பதவியில் தாக்குப் பிடித்த அப்பாவுக்கு ஆபரேசன் முடிந்து பன்னிரண்டு மணி நேரம் தாக்குப் பிடிப்பது ஒன்றும் முடியாத காரியம் இல்லை டாக்டர்”

அவனது துக்கத்தையும் மீறி அவன் வார்த்தைகளில் தொனித்த நம்பிக்கையைப் பார்த்த டாக்டர் மனம் நெகிழ்ந்தார். “எல்லாவற்றுக்கும் மேல் கடவுள் இருக்கிறார்” என்று சொன்னார்.

இதைக் கேட்டதும் கங்காதரனுக்கு ஒரு வயதான தாயின் ‘தெய்வம் நின்று கொல்லும்” என்ற நம்பிக்கையும், அந்த சித்தரின் “நீ விதைத்ததை எல்லாம் அறுவடை செய்ய வேண்டியிருக்கும்’ என்ற வாக்கியமும் நினைவுக்கு வந்தது. “இந்தாளு டாக்டரா இல்லை சாமியாரா தேவையில்லாமல் கடவுளை ஞாபகப் படுத்தறான் சனியன்…” என்று மனதிற்குள் பொரிந்து தள்ளினார்.

ஒரு மணி நேரத்தில் ஆபரேசன் தியேட்டருக்கு அவரை அழைத்துப் போனார்கள். ‘அப்பா தாக்குப் பிடிப்பார்’ என்று நம்பிக்கையுடன் மகன் சொன்னதை நினைத்த படியே மயக்க மருந்தால் நினைவிழந்தார். எத்தனையோ நேரம் கழித்து அவர் நினைவு திரும்பிய போது மனோகரனிடம் கதிரேசன் சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

“நம்ம ஆளுங்க மூலம் செய்த பேரம் எல்லாம் நமக்கு சாதகமாய் இருக்கு மனோ. இப்போதைய நிலவரப்படி எனக்குத் தேவையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கு. அனுதாப அலையும் சேர்ந்துடுச்சுன்னா நான் முதலமைச்சர் ஆக எந்த தடையும் இல்லை”

“ஆனா ஆபரேசனும் சக்சஸ் ஆயிடுச்சு, உங்கப்பாவும் தேறிட்ட மாதிரி தான் தோணுது”

“அவர் பிழைக்க மாட்டார் மனோ”

மனோ குழப்பத்தோடு தன் நண்பனைப் பார்த்தான். “நான் கொஞ்ச நேரத்துக்கு அவரோட ஆக்சிஜன் டியூப்பைக் கழற்றி விடப் போகிறேன் மனோ. அவர் இறந்ததுக்குப் பின்னால் இதைத் திரும்ப மாட்டி விடப் போகிறேன். அப்புறம் நான் அழப்போகிறன். நீ நான் அழுது பார்த்ததில்லையே. கொஞ்ச நேரத்தில் பார்க்கப் போகிறாய். எதற்கும் கதவுப் பக்கம் நின்னு யாராவது வருகிறார்களான்னு பார்” என்று நண்பனை அனுப்பி விட்டு அவன் தன் தந்தையை நெருங்கினான்.

மற்ற எல்லாவற்றிற்கும் தயாராக இருந்த கங்காதரன் இதற்குத் தயாராக இருக்கவில்லை. அவன் வார்த்தைகள் டன் கணக்கில் அக்னித் திராவகத்தை அவர் இதயத்தில் ஊற்ற, சகல பலத்தையும் உபயோகித்து கண்களைத் திறந்து மகனை அதிர்ச்சியுடன் பரிதாபமாகப் பார்த்தார்.

“சாரிப்பா” என்று சொல்லி விட்டு அமைதியாக கதிரேசன் ஆக்சிஜன் டியூப்பைப் பிடுங்கினான். இந்த முறை அவன் எந்தத் தடயத்தையும் விட்டு வைக்கவில்லை.

-என்.கணேசன்

நன்றி: நிலாச்சாரல்.காம்

Series Navigation