விநோத உணர்வுகள்

This entry is part [part not set] of 19 in the series 20020113_Issue

பாரி பூபாலன்


தெரு முனையில் ஒரே கூட்டமாயிருந்தது. கூட நடந்து வந்த தோழனும் நானும் ஆர்வமாய் கூட்டத்தின் காரணத்தை அறிய முயன்றோம். விசாரித்துப் பார்த்தால், யாரோ ஒரு அசலூர்க்காரனை எல்லோருமாய்ச் சேர்ந்து அடித்துக் கொண்டிருப்பதாய்க் கூறினார்கள். ஆனால் யாருக்கும் ஏன் அடிக்கிறார்கள் என சரியாகத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணமாய்க் கூறிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் உடனிருந்த என் தோழனும் கூட்டத்திற்குள் சென்று மறைந்து விட்டான், உள்ளே என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய.

சிறிது நேரத்தில் முகத்தில் ஒரு சாதனை உணர்வுடன் வெளிவந்து என்னிடம் கூறினான், ‘மாப்ளே, யாரோ ஒரு இளிச்சவாயன் மாட்டிகிட்டான். அவனவன் போட்டு சாத்துறாங்க. நானும் ரெண்டு தட்டு தட்டிட்டு வந்தேன், நீன்னா பொயிட்டு வாறியா ? ‘. சர்வசாதாரணமாகக் கூறினான் அவன். ஒரு திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் அவனது வார்த்தைகள் வெளிப்பட்டன.

‘சேச்சே! வேண்டாம். நீ எதுக்கு அடிக்கப் போனே ? அவனை எதுக்காக அடிக்கிறாங்கன்னு உனக்கு நல்லாத் தெரியுமா ? எது எப்படி இருந்தாலும் உனக்கும் அவனுக்கும் என்னா சம்பந்தம் ? நீ ஏன் அவனைப் போட்டு தட்டிட்டு வரே ? பாவம் இல்லே! ‘

‘இதிலென்ன இருக்கு ? ஏதோ ஒரு ஜாலிதான். அவன் என்ன பண்ணானோ ஏது பண்ணானோ தெரியலை. பாவம் மாட்டிகிட்டான். அத்தினி பேர் அடிக்கும் போது நம்மளை எங்கே தெரியப்போகுது ? ‘

சம்பாஷனை தொடர்ந்தது.

அவனது உணர்வுகளையும் செய்த செயலையும் எண்ணிப் பார்த்தேன். என்ன ஒரு விநோதமான உணர்வு அது ? முன்னே பின்னே பார்த்தறியாத ஒருவனை, எதுவும் காரணமில்லாமல் ஒரு தட்டு தட்டி விட்டு வர முடிகிறது. அதனால் அவனுக்குள் ஒரு அற்ப சந்தோஷமும், திருப்தியும் பெருமையும். இது ஒரு வக்கிரமான உணர்வோ ? அல்லது வெறும் விளையாட்டுச் செயலோ ?

இந்த மாதிரி வேறு பல சில்மிஷங்கள் செய்திருப்பதாகவும் அவன் கூறினான். ஊருக்குள் யாராவது புதிதாக சைக்கிளில் வந்து நிறுத்தியிருந்தால், யாருக்கும் தெரியாமல் காற்றைப் பிடுங்கி விட்டிருப்பதாகவும், வேகமாகச் செல்லும் வண்டிகளின் மீது ஏதாவது வீசி எறிந்து விட்டு ஒடி விட்டதாகவும், யாருக்கும் தெரியாமல் சுவற்றில் கிறுக்கிவிட்டு வருவதாகவும், அப்படி கிறுக்கும் வார்த்தைகள் வேறு சிலரைப் பழிப்பதாகவும், கேலி செய்வதாகவும் இருக்குமென்றும் அடுக்கிச் சென்றான்.

சாதாரணமாக அவன் யாரிடமும் சண்டைக்குப் போகிறவன் கிடையாது. அது ஆர்வமின்மையோ அல்லது துணிவின்மையோ அல்லது அமைதியில் விருப்பமோ தெரியவில்லை. ஆனால் இப்படி கூட்டத்தோடு கூட்டமாய் ஒரு தட்டு தட்டி விட வாய்ப்பு கிடைக்கும் போது அதைப் பயன்படுத்தி, அனுபவித்து அவனால் சந்தோஷம் அடைய முடிகிறது. அதுவும் தன்னை அடையாளம் தெரியாத நிலையில் அவனால் ஒரு கிளர்ச்சியுடன் அதை செய்ய முடிகிறது. ஏதெனும் அற்பமாய்ச் செய்து விட்டு, தனது விநோத உணர்வுகளுக்குத் தீனி போட்டு சந்தோஷிக்க வாய்ப்பு கிடைக்கும் பொழுது அதைப் பயன்படுத்தி அற்ப சந்தோஷம் அடைய அவனால் முடிகிறது.

அவனுடன் மேலும் பேசிப் பார்த்ததில், அவன் செய்யும் இந்த செயல்களில் ஏதும் தீமை இருப்பதாய் அவனுக்குத் தோன்றவில்லை. மாட்டிக்கொண்டவனின் விதி அவனை மாட்ட வைத்திருப்பதாகவும், அவன் தட்டிய தட்டு பத்தோடு பதினொன்று என்றும், அப்படி தட்டியதன் மூலம் அவனுக்கு சிறு மகிழ்ச்சி என்றும் விவரித்தான். என்னால் அவனிடம் பேசி மாளவில்லை. இவனும் இப்படி ஒருமுறை மற்றவர்களிடம் பல தட்டுகள் வாங்கினால்தான் புரியும் என கூறியபடி வீடு சென்றடைந்தேன்.

Series Navigation

பாரி பூபாலன்

பாரி பூபாலன்