விடியும்! -நாவல்- (30)

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


காத்திருப்பது கொஞ்சம் கடினமான காரியந்தான். நேரத்தைப் பார்த்தான் செல்வம். ஏழைந்து. செல்லத்தம்பி மாஸ்றர் சரியாக ஏழரை மணிக்கு வந்து சந்திப்பார். நீங்க கதைக்கிற போது எல்லாரும் நிக்கிறது சரியில்லை. நான் நிமலராஜனைக் கூட்டிக் கொண்டு வெளிய போய் உங்களுக்குச் சாப்பாடும் எடுத்துக் கொண்டு எட்டரை போல வாறன் என்று மூர்த்தி சொல்லிவிட்டுப் போய் பதினைந்து நிமிசமிருக்கும்.

அவர் இருப்பது அரசபடையின் கட்டுப்பாட்டுப்பகுதியில். படிப்பிப்பது விடுதலைப்புலிகளின் பகுதியில். சொன்னால் சொன்ன நேரத்துக்கு வந்திருவார் என்று மூர்த்தி சொல்லிவிட்டுப் போயிருந்தான். வந்தாத்தான் தெரியும். காத்திருக்கும் பரபரப்பில் கடித்ததால் பெருவிரல் நகத்தின் உள்சதையில் இரத்தம் கசிந்தது. மற்ற விரல்களில் கடிப்பதற்கு நகமில்லை. கால் நகத்தைக் கடித்தும் பழக்கமில்லை. மூக்கு வியர்த்தது. எழுந்து ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தான். தூரத்தில் வீட்டு வெளிச்சமொன்று பொட்டுப் போல் தெரிந்தது. மற்றும்படி இருட்டுக் கிராமம். காடு போல மரங்கள் சூழ்ந்த பச்சைக் கிராமம். அதைத் தழுவி வந்த குளிர்ந்த காற்று உடலில் பட்டும் வியர்வை குறையவில்லை. சீதோஷ்ண மாற்றத்தால் சுரக்கும் வியர்வையல்ல இது.

பரீட்சை முடிவைக் காவிவரும் தபால் பியூனை பார்த்திருக்கும் அந்தரத்துடன் அவன் காத்திருந்தான். புதிய இடம், முன்பின் கண்டு பழகியிராத மனிதர்கள். செல்லத்தம்பி மாஸ்றரும் பழக்கமில்லாதவர்தான். அவர் கொண்டு வரும் செய்தி எப்படியிருக்கப் போகிறதோ!

அரசினால் கவனிக்கப் பெறாத பல அநாதரவான பள்ளிக்கூடங்களில் ஒன்றின் தலைமை வாத்தியார் அவர். அந்தப் பகுதிப் பள்ளிகளின் தேவைகள் சாமான்யத்தில் நிறைவேற்றப்படுவதில்லை -அவரது அதிபர்தர உயர்ச்சி உட்பட. பட்டியலில் பெயர் இருக்கிறது என்று கேள்விப்பட்டு மூன்று வருடங்கள் கழிந்துவிட்டன. அது மெய்யோ பொய்யோவென துருவிப் பார்க்க அவர் விரும்பவில்லை. அரச கட்டுப்பாட்டுப் பள்ளிகளில் அவரோடத்தவர்கள் உயர்ச்சி பெற்று இரண்டாம் கையாக வாங்கிய மோட்டார் சைக்கிள்களில் ஓடித் திரிகிறார்கள். அவருக்கு இன்னமும் கல்யாணத்தின் போது வாங்கிய றலீ சைக்கிள்தான் தஞ்சம். அதற்கும் பொறுமை நிறைய – இன்னும் சினக்காமல் ஓடுகிறது.

கவலைதான். ஏற்கனவே கவனிப்புப் பெறாத அந்தப் பகுதிப் பிள்ளைகளின் படிப்பு புறக்கணிக்கப்படக்கூடாது என்பதற்காக அவர் தன் சொந்தக் கவலைகளை மறந்து போகவே விரும்பினார். பிறந்தது சம்பூரில், கட்டினது தம்பலகாமத்தில், சீவிப்பது மூதூரில். சுற்றுப்புறக் காடு களணியெல்லாம் தண்ணி பட்ட பாடு. அவரிடத்தில் படித்த பிள்ளைகள் இயக்கத்திலும் இருக்கிறார்கள், சறுக்கிறதுக்குச் சந்தர்ப்பம் இல்லை. அவருடைய சொல்லு புலிகளிடம் எடுபடும். .. .. .. இவைகள் மச்சான் குணரெத்தினம் அவரைப் பற்றி அளித்திருந்த பயோ டேட்டா.

செல்வம் நம்பிக்கையோடு காத்திருந்தான். அதற்குக் காரணமிருந்தது. இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த மச்சான் குணரெத்தினம், செல்லத்தம்பி மாஸ்றரின் பெறாமகன். செல்லத்தம்பி மாஸ்றருக்கு இருக்கிற மதிப்பைப் பற்றி ஒரு இரவு முழுக்க கொட்டாவி விட்டுக் கொண்டு குணரெத்தினம் சொல்லியிருக்கிறான். தனக்கென்றால் நூறுக்கு 99.9 வீதம் நம்பிக்கை இருப்பதாகவும் கவலைப் படவேண்டாம் என்றும் கூறியிருந்தான். கணித ஆசிரியரானதால் எதையும் தசக் கணக்காக சொல்லிப் பழக்கம்.

அவன் காத்திருந்தான். நீங்க நம்பிக்கையோடு போங்க என்று குணரெத்தினம் கொடுத்த ஊக்கம் ஒரு புறம். சிலவேளைகளில் தம்பியையும் கையோடு கூட்டி வந்திாலும் வந்திருவார் என்று அவன் காட்டிய ஒளிக்கீற்று மறுபுறம். கூட்டி வந்தால்!

செல்வம் இப்போது அதுபற்றி யோசிக்க ஆரம்பித்தான். கனடியன் விசிட் விசாவிற்கு விண்ணப்பம் செய்தால் ஸ்பொன்சர் கேட்பார்கள். சொந்தத் தம்பிக்கு ஸ்பொன்சர் பண்ணினால் அங்கேயே காலூன்றி விடுவான் என்ற சந்தேகம் எழக்கூடும். டானியலை ஸ்பொன்சர் பண்ணச் சொல்லிக் கேட்கலாம்.

விசா விசயத்தில் தூதரகம் இப்போது கெடுபிடி என்ற தகவலும் இருக்கிறது. அப்படியானால் ஸ்டூடன்ற் விசாவிற்கு முயற்சி பண்ணலாம். டானியலுடன் கதைத்து டொறன்டோவிலுள்ள ஒரு கொலிஜ்ஜில் அட்மிசன் எடுத்து அனுப்பச் சொல்ல வேண்டும். படிப்புச் செலவுக்காக காசு கூடுதலாக காட்ட வேண்டி வரும். அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இந்த வழி அநேகமாக வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது. எதற்கும் குறுக்கு வழிகளையும் பார்த்து வைக்க வேனும். ஆளை இந்தியாவுக்கு அனுப்பி பாஸ்போட் முடித்து விசா குத்துவிச்சு அனுப்புவது ஒரு வழி. இல்லாட்டி கொழும்பில் ஏஜன்சியிடம் கதைத்து காசு கட்டி அனுப்பவேனும். இப்ப பத்து லட்சம் போகிறது என்று மூர்த்தி சொன்னான். அது பரவாயில்லை. போகிற வழியில் எங்காவது மாட்டுப்பட்டு நிற்கிற சிக்கலுமிருக்கு. என்ன ஆனாலும் ஒரு நிமிசம் கூட ஆளை இங்க வைச்சிருக்கப்படாது. ஓடித் தப்பிவிட வேனும். காசு பத்தாதென்றால் டானியல் இருக்கிறான்.

எல்லாத் திட்டங்களும் டானியலை நம்பியே வளைய வந்து கொண்டிருப்பதைப் பார்க்கையில் தனது வாழ்க்கையை அவன் ஆக்கிரமித்திருக்கிற அளவு புரிந்தது. வந்ததுக்கு ஒரு தரமென்றாலும் டெலிபோன் எடுத்துக் கதைக்காதது பற்றி கவலையும் வந்தது. வீட்டுக்கு வந்தபின் கனடாவை மொத்தமாக மறந்து போனது உண்மைதான்.

தெரு நாயொன்று யாரோ இருட்டில் கல்லெறிந்ததில் மிரண்டோடியதைப் போலக் குரைத்தது. நேரம் ஏழு முப்பத்தைந்தாகிவிட்டது. அவனுக்கு விசர் பிடிக்கத் தொடங்கிற்று. அரை மணிக்கொரு தரம் வருகிற பஸ் கொஞ்சம் பிந்தினாலே அவனுக்கு ஒன்றுக்கு முடுக்குவதைப் போலிருக்கும். பொறுமையோடு காத்திருப்பதென்பது முடியாத காரியம். முற்றத்தில் இறங்கினான். வெளிச்சமற்ற முற்றம். வானத்தில் நிலவில்லை. அண்ணாந்து சுற்றிப் பார்த்தான். அமாவாசை இருட்டு.

வாசலில் அசைந்த இருட்டிலிருந்து டிரைவர் சம்சுதீன் வெளிப்பட்டார். சம்சுதீனை வரவேற்கும் மனநிலையில் அவனில்லை. செல்லத்தம்பி மாஸ்டர் வருகிற நேரத்தில் இவர் இருந்தால் தம்பியின் விசயத்தை மனம் விட்டுப் பேச முடியாது, என்ன செய்யலாம் என்ற யோசனையில் வாங்க சம்சுதீன் என்றான்.

இஞ்சினியர் ஐயா இல்லையா என்று கேட்டான் சும்சுதீன்.

“இல்லை சாப்பாடு வாங்கப் போயிற்றாங்க. ஏதும் சொல்ல வேனுமா ? ”

சம்சுதீன் இன்னமும் முற்றத்தில் நின்று கொண்டிருந்தான். வீடு பக்கத்திலிருப்பதால் ஒருவித காரணமும் இல்லாமல் சும்மா வந்திருப்பதாகவே தோன்றியது. உள்ளே வந்து இருக்கச் சொன்னால் மாஸ்டர் வருகிற போது ஆளைக் கிளப்புவது கஷ்டமாகிவிடலாம். ஆனால் முற்றத்தில் வைத்து பேசிக்கொண்டிருப்பது அழகில்லையே!

“வாங்க சம்சுதீன் வந்து உள்ள இருங்க”

இல்லை, போக வேனும் சும்மாதான் பாத்துட்டுப் போகலாமின்னு வந்தேன் என்றவன் சொன்னதற்கு மாறாக உள்ளே வந்தான். கதிரையை இழுத்துப் போட்டான் செல்வம்.

“வசதியெல்லாம் எப்படி ?”

“பரவாயில்லை”

வேறு சாதாரண சந்தர்ப்பமாக இருந்தால், இது போன்ற தட்டத் தனியான நேரத்தில் ஆளை இருத்தி வைத்து எவ்வளவோ பேசலாம். இப்போது எதைப் பேசுவது ?

“இந்தப் பக்கம் பொடியன்கள் வர்றதா ? ”

“நான் காணேல்லை, நம்மாக்கள் கண்டிருக்கிறாங்க”

“உங்க ஆக்களோட எப்படி அவங்க நடந்து கொள்ளுவாங்க ? ”

“முந்தி நல்லாத்தான் இருந்தது. காசு கேட்கத் தொடங்கினாப் பிறகு கொஞ்சம் எட்டத்தில நிக்கிற மாதிரித் தெரியுது”

“ஏன் நீங்க அவங்களை நம்பவில்லையா ? ”

“அப்படின்னு சொல்ல முடியாது. ஆனா அடிக்கடி ஏதாவது பிரச்னை நடக்குது. அதனால நம்பிக்கை குறைஞ்சு கொண்டு போகுது”

“எப்பிடி ? ”

“இவங்க வந்தா எங்களுக்கு கஷ்டம் என்று நம்மாக்கள் அபிப்பிராயப்படறாங்க”

ஏனோ தெரியவில்லை சம்சுதீனுக்கு தன் மனதிலிருப்பதை சொல்ல வேண்டுமென்று எண்ணம் வந்தது செல்வத்திற்கு. அவன் சொன்னான்.

“நீங்க பிழையாக விளங்கா விட்டால் நான் ஒன்றைச் சொல்ல விரும்புறன். இன்று நேற்றல்ல திருகோணமலையில பிறந்து வளர்ந்த காலத்திலிருந்து தமிழர்களும் முஸ்லிம்களும் அண்ணன் தம்பி மாதிரித்தான் இருந்து வந்திருக்கிறம். புட்டுக் குழலில் போடுகிற மாவும் தேங்காய்ப்பூவும் மாதிரி ஒன்றுக்குள் ஒன்றாகத் தான் சீவிச்சுக் கொண்டிருக்கிறம். இனம் மதம் வேறுபட்டாலும் மொழியாலும் பக்கம் பக்கமா ஒன்றாகச் சீவிக்கிற உறவாலும் இணைஞ்சிருக்கிறம். ”

“அதன்டா உண்மைதான்”

“அரசிற்கும் புலிகளுக்கும் இருபது வருசமா போராட்டம் நடந்து கொண்டிருக்கு. தமிழர்களைப் பொறுத்த அளவில் இது ஒரு ஜீவமரணப் போராட்டமாக வந்துவிட்டது. அரசும் புலிகளும் ஒருவரையொருவர் அழிப்பதில் சாத்தியமான அத்தனை வழிகளையும் முயல்கிறார்கள். இந்த உக்கிரமான போரில் இடையில் அகப்படுகிற அப்பாவிப் பொதுமக்கள் கஷ்டப்படுவது தவிர்க்க முடியாதது. இப்படியான ஒரு பயங்கரமான போர்க்காலச் சூழலில், போராட்டத்தில் பங்குபற்றாமல் இடையில் இருக்கிற ஒரு இனத்திற்கு சில இடைஞ்சல்களும் கஷ்டங்களும் உண்டாவது இயற்கை. ஆனால் சமாதானம் என்று வருகிற போது அந்த இடைஞ்சல்கள் எல்லாம் பறந்து போய்விடும்.

சுயகெளரவமுள்ள ஒரு சிறுபான்மை இனத்தில் பெரும்பான்மை இனம் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறையின் அவதிகளை இரத்தமும் சதையுமாக அனுபவித்தவர்கள் பொடியன்கள். அந்த அனுபவம் அவர்களுக்கு கற்றுத் தந்திருக்கும் பாடங்கள் அவர்களை நேர்மையான வழியில் அழைத்துச் செல்லும் என்பதை நான் பரிபூரணமாக நம்புகிறேன். அவர்கள் அடையத் துடிக்கிற சுதந்திரத்தில் இந்த மண்ணிலிருக்கும் அத்தனை பேரும் யாருக்கும் யாரும் குறைந்தவர்கள் இல்லை என்ற சுயகெளரவம் கட்டாயம் இருக்கும். நான் பெரிசு நீ சிறிசு என்ற பேதமில்லாத பெருந்தன்மை நிச்சயம் இருக்கும். இருக்க வேண்டும். அதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. நீங்களும் நிச்சயமாக நம்புங்க சம்சுதீன்.”

“அப்படி நடந்தா எல்லாருக்கும் நல்லந்தானே ஐயா என்று சொன்ன சம்சுதீன், ஐயா வந்தா நான் வந்திட்டுப் போனதா சொல்லுங்க, அப்ப வரட்டா என்று எழுந்தான்.

முஸ்லிம் மக்கள் எங்கள் சகோதரர்கள். காலங்காலமாக நட்பு மாறாமல் வாழ்ந்தவர்கள். அவர்களை ஒதுக்கிவிட்டு அனுபவிக்கிற எந்த சுதந்திரமும் உண்மையான சுதந்திரமாக இராது. சிறுபான்மைக்குள் ஒரு சிறுபான்மையாக இருப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்படுவது சகஜம். அதனைப் போக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் மகனின் கடமை என்று நம்புகிறவன் செல்வம்.

சம்சுதீன் போனபின்னும் செல்லத்தம்பி மாஸ்டர் வரவில்லை. ஒன்றுக்கு வருவது போலிருந்தது. கக்கூசு பின்வளவில் இருக்கிறது, சுற்றி வளைத்து பற்றைகள். இராயிருட்டியில் பாம்பு கீம்பு இருக்கும். முன்முற்றத்து வேலியோரமாக இருட்டின் மறைப்பில் ஒன்றுக்குப் போக நடந்தான். கிடுகுவேலியில் பட்டால் சரசரவெனச் சத்தம் கேட்கும். கொஞ்சம் தள்ளி நின்று சிப்பைக் கழட்டினான். அப்போது பார்த்து ஆரோ வருகிற மாதிரி அசமாத்தம்! மாஸ்றராகத்தான் இருக்கும். வந்ததை டக்கென்று அடக்கிக் கொண்டு திறந்த சிப்பை மேலே இழுத்துவிட்டு வாசலுக்கு வந்தான்.

வந்தவர் லோங்ஸ் போட்டிருந்தார். மாஸ்றராக இருக்க முடியாது. ஒன்றுக்குப் போவதை அந்தரத்தில் நிறுத்தப் பண்ணிய மனிதரை வேண்டாத விருந்தாளியைப் போலப் பார்த்து நீங்க ? என்று கேட்டான்.

“செல்லத்தம்பி”

தலைமை வாத்தியார் வேட்டியில் வரவேண்டும் என்று கட்டாயமா என்ன ? வேட்டியென்றால் கட்டுவதும் காபந்து பண்ணுவதும் கஷ்டந்தான். இடுப்பில் ஒன்றுக்கு நாலு சு;றுச் சுற்ற வேண்டும், இருந்து எழும்ப கெதியில் கசிங்கிப் போகும், அடிக்கடி நீலம் போட்டுத் தோய்க்க வேனும், வேட்டித் தலைப்பு இடையிடையே சைக்கிள் செயினுக்குள் கொழுவிக் கொள்ளும், கிழியும், கறை படும். .. .. வசதி கருதி பல தமிழ் வாத்தியார்கள் இப்போது காற்சட்டைகளுக்கு மாறிவிட்டார்கள்.

“வாங்க சேர்”

“செல்வநாயகம் ?”

“ஓம்”

“எங்க மூர்த்தியைக் காணேல்லை ?”

“சாப்பாடு வாங்க வெளிய போயிற்றினம்”

“நேரத்துக்கு வந்திருப்பன், பக்கத்தில ஒரு செத்த வீடு. அதாலதான் ஒரு சாப்பாட்டுக்குக் கூட உங்களை கூப்பிட முடியேல்லை”

அவன் இருக்கச் சொல்லுமுன்பே சம்பிரதாயம் பார்க்காமல் கதிரையில் இருந்தார். இன்னும் நாலைந்து வருசத்தில் இளைப்பாறுகிற வயசு. தலை முற்றிலுமாகப் பழுத்துவிட்டது. கிராமத்துச் சூழலுக்கு பொருத்தமில்லாத நல்ல நிறம். வெய்யிலில் திரிந்து கொஞ்சம் செம்படை அடித்திருந்தார்.

மூர்த்தி வாங்கி வைத்துவிட்டுப் போன சோடாப் போத்தலை உடைத்தான். கழுவிக் கவிழ்த்து வைத்திருந்த கிளாசை இன்னொரு முறை கழுவினான். சோடாவை ஊற்றினான். வெளிக் கிளாசில் படிந்து வழிந்த தண்ணீரை தன் கைஇலேஞ்சியால் அவர் பார்க்கும்படியாகத் துடைத்து விட்டுப் பக்குவமாகக் கொடுத்தான்.

“குடியுங்க சேர்”

அவராகத் தொடங்கட்டும் என்று காத்திருந்தான். கண்ணாடி எடுத்துப் போட்டுக் கொண்டார்.

“ஓம் ஓம் குடிப்பம்”

“நேற்று இங்க நடந்த விசயம் கேள்விப்பட்டனீங்களோ”

நாடக மேடையில் தொடர்பு விட்டுப் போகும் வசனத்திற்கு பின்னாலிருந்து வரி எடுத்துக் கொடுக்கும் உதவியாளர் போல, வந்த விசயத்தை அவர் தொடங்குவதற்கு ஏதுவாக அந்தக் கேள்வியைச் செருகினான்.

“அங்க போய் தோய்ஞ்சிற்று வரத்தான் கொஞ்சம் செண்டு போச்சு. பாவம் வல்லிபுரம் மூக்கைப் பிடிச்சா வாயைத் திறக்கத் தெரியாத பிறவி. இந்த அநியாயங்களால தானே எங்கட பிள்ளையள் துவக்கைத் தூக்கிக் கொண்டு காட்டுக்குள்ள திரியுதுகள்“

“ஆமி அடையாள அணிவகுப்பு நடத்துவாங்களோ ? ‘

“அணிவகுப்பா ? ஆக்கள் இவ்வளவுக்கும் இடம் மாறாமல் இருந்தாலே பெரிய காரியம்”

அவனே கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் அவர் சொல்கிற பதில்களில் அவனுக்கு இம்மியளவும் சிரத்தையில்லை. அவனுக்கு தம்பியின் முடிவு தெரிய வேண்டும். வருவானா ? இல்லையா ?

“சேர் தம்பீர விசயம்!”

“ஓமோம். முந்தநாள் சம்பூர் போயிருந்தனான். மகளிர் அணிப் பொறுப்பாளரைச் சந்திச்சனான். என்னட்டைப் படிச்ச பிள்ளைதான். ”

“தம்பியைச் சந்திச்சனீங்களா ? ”

“இல்லை”

“நான் இன்டைக்கு வாற விசயம் தம்பிக்குத் தெரியுமா ? ”

“வருவீங்களென்டு தெரியும். இன்டைக்கென்டு தெரியாது”

“தெரிஞ்சா கட்டாயம் வந்திருப்பான் என்னைப் பார்க்க”

அவர் மெளனமாயிருந்தார். சந்தோசத்தை சிலர் உடனே வெளிக்காட்ட மாட்டார்கள். மெளனமாக இருந்து சஸ்பென்ஸ் உண்டாக்கி ஆளைக் குழப்பி பிறகு வெளியிடும் போது சந்தோசம் இரட்டிப்பாக இருக்கும் என்ற எண்ணமாக இருக்கலாம். துக்கத்தை உடனே சொல்லி ஒரேயடியாக ஆளைக் குழப்பியடிக்காமல் மெளனமாக இருந்து மெதுமெதுவாக அவிழ்த்து விடுவது சிலருடைய வழி. இவருடைய மெளனம் எந்த வழி! அந்தரத்தில் இருந்த அவனுக்கு அந்த மெளனம் ஒத்துக்கொள்ளவில்லை.

“பொதுவாக இயக்கத்தில சேத்திட்டால் கழட்டிக் கொள்ளுறது கஷ்டம் என்று சொல்றாங்கள். உண்மையா சேர் ? ”

“எல்லாரோடும் அப்படி நடப்பார்கள் என்று சொல்ல முடியாது. ”

“அப்ப ? ”

“உங்க குடும்ப நிலைமை, அப்பாவுக்கு சுகமில்லாத விசயம், பொம்பிளைச் சகோதரங்கள், நீங்க கனடாவில, அவர்தான் இங்க ஒரு ஆம்பிளைச் சகோதரம் – எல்லாம் சொன்னனான் ”

“என்ன சொல்லிச்சினம் ? ”

“வந்தா கூட்டாற்றுப் போங்க எங்களுக்கு ஆட்சேபனையில்லை என்று சொன்னாங்கள்”

“பிறகு ?”

அவன் அவருடைய கண்களையே உற்றுப் பார்த்தான். எவரொருவர் கண்களை நேராகப் பார்க்காமல் முகட்டையோ நிலத்தையோ பார்த்துப் பேசுகிறாரோ அவர் உண்மை பேசவில்லை என்பது அவன் கணிப்பு. நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் இதய சுத்தமான மனிதர்களின் வெளிப்பாடு. போகவிட்டு பின்னுக்கு நின்று பார்ப்பது, தலையை அசைக்காமல் கண்ணை மட்டும் இடது வலதாக அசைத்துப் பார்ப்பது எல்லாமே கள்ளத்தனமானவை. அவர் அவனை நேராகப் பார்த்துக் கொண்டே தொடர்ந்தார்.

“இயக்கத்தைப் பொறுத்தவரை, விருப்பமில்லாத ஆக்களை வைத்திருக்க மாட்டார்கள். இது விடுதலைக்கான ஜீவமரணப் போராட்டம். இதில் அரைகுறை ஈடுபாடு சரிராது”

“அப்ப ? ”

“உங்க தம்பியோட கதைக்கிற சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கேல்லை,”

“ஏன் ஆள் அங்க இல்லையா ? ”

“அது எனக்குத் தெரியேல்லை. கடிதம் ஒன்று குடுத்து விட்டிருக்கிறார்”

“என்ன கடிதம் ? ”

“உங்களுக்கு எழுதின கடிதம். நான் பார்க்கேல்லை. ”

அவனுக்கு முகம் டக்கென்று கறுத்துப் போயிற்று. கையோடு ஆளைக் கூட்டி வருவார் என்று பார்த்தால் கடிதம் கொண்டு வந்திருக்கிறார். வந்தாக் கூட்டாற்றுப் போங்க என்று அவர்கள் சொன்ன உடனேயே தம்பியை நேர சந்திக்க அவர் முயற்சித்திருக்க வேண்டும். என்னென்றாலும் பிறத்தி பிறத்தி தானே. தன்னுடைய மகனென்றால் விட்டு வந்திருப்பாரா ? குணரெத்தினம் புழுகின அளவிற்கு ஒன்றுமில்லை.

“உலகம் தெரியாத பிள்ளை. ஏதோ ஒரு வேகத்தில எடுபட்டு வந்திற்றான். பெத்த தாய் கண்ணீரும் கம்பலையுமா நிக்கிறா. அவன் வராட்டி மனுசிக்கு என்ன நடக்கும் என்டு தெரியாது. எனக்கு தம்பியை ஒருக்கா சந்திக்கக் கிடைச்சாப் போதும் கையோடு கூட்டிக் கொண்டந்திருவன். உங்களால ஒழுங்க பண்ணேலுமா சேர் ? ”

“எனக்கு உங்கட கஷ்டம் விளங்குது. எதுக்கும் அவருடைய கடிதத்தை ஆறுதலாக வாசிச்சுப் பாருங்க. வாசிச்சவுடன கிளிச்சுப் போட்டிருங்க. நாளைக்குக் காலைல வெளிக்கிட முதல் சொல்லி அனுப்பினா நான் முயற்சி பண்ணிப் பாக்கிறன் ”

அவர் சட்டைப் பையிலிருந்து ஒரு பழுப்பு நிறக்கவரை எடுத்துக் கொடுத்தார். அதில் திரு. செல்வநாயகம் என்று மட்டும் போட்டிருந்தது, தம்பியின் கையெழுத்துத்தான். கடிதத்தைக் கொடுத்துவிட்டு அவர் சொன்னார்.

“ஒன்றை மட்டும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இதில் அக்கறை எடுக்கவில்லை என்று நீங்க நினைக்கக் கூடாது. ஒரு தகப்பனுக்கு இருக்கக்கூடிய கவலை எனக்கும் இருக்கு. பெத்ததுகள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று எனக்குத் தெரியும்.”

அவன் கண்கலங்க அவரை உற்றுப் பார்த்தான்.

“தம்பி வயசான எங்களுக்கு இன்னமும் விளங்காத, விளங்கிக் கொள்ள விருப்பமில்லாத சில முக்கிய விசயங்கள் இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு தெளிவாக விளங்குது”

அவர் எழுந்தார். “நான் அப்ப வாறன் தம்பி. கலவரப்படாம வாசியுங்க. மூர்த்தியைக் கேட்டதாகச் சொல்லுங்க. ”

அவர் நடந்தார். அவன் எதுவும் சொல்லவில்லை. கூடவே வாசல்வரை போய் அவரை விட்டு வருவதுதான் மரியாதை. அது உறைக்காமல் அவர் போவதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவர் கதவடியில் போய் திரும்பி நின்று அவனைப் பார்த்தார். பல் தெரியாமல் சிரித்தார். அடுத்த கணம் இருட்டில் கலந்தார்.

அவன் பதிலுக்குச் சிரிக்கவில்லை. அவருக்காக கிளாசில் ஊற்றி வைத்த சோடா காஸ் இறங்கிப் போய் அப்படியே இருந்ததை அவர் போன பின்தான் கவனித்தான்.

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்