வாரபலன் டிசம்பர் 30,2004 – தோழர் நிர்பன் , யசோதர – யமுனா, அரசாங்க விருந்து ,கொலைகள் அலைகள்

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

மத்தளராயன்


அதிகாரபூர்வ மார்க்சிஸ்ட் சானல் கைரளியில் செய்தி சொல்லும்போது நூற்றொண்ணு என்றார்கள். அடுத்த நாள் பத்திரிகையில் தொண்ணூற்றொன்பது.

வயது மூன்று இலக்கமோ, இரட்டையோ, அகர்த்தலா தோழர் நிர்பன் சக்ரபொர்த்தி நிறைவாழ்வு வாழ்ந்து இந்த வாரம் மறைந்த இன்னொரு நல்ல மனிதர்.

தெற்கே மார்க்சிஸ்ட் இயக்கத்துக்குக் கண்ணூரும் கோழிக்கோடும் எப்படி முக்கியமோ அப்படிக் கிழக்கே கொல்கத்தாவும் அகர்த்தலாவும்.

ஆனாலும் கொல்கத்தாவின் பத்ரலோக் பாபு மோஷோய்களின் வியாபகம் பெரிசு என்ற காரணத்தால், தோழர் ஜோதிபாசுவும், ஜ்யோதிர்மய் பாசுவும், சோம்நாத் சாட்டர்ஜியும் கம்யூனிஸ இயக்கத்தால் முன் நிறுத்தப்பட்டது போல், நிர்பன் சக்ரபொர்த்தி முக்கியப்படுத்தப்படவில்லை.

கால்பந்து விளையாட்டு தொடங்கி ஹாஃப் டைமுக்கு வெகு நேரம் கழித்துக் களத்தில் இறக்கி விட்ட வீரர் போல், திரிபுரா மாநில முதலமைச்சராக நிர்பன் பதவியேற்றபோது (எழுபதுகளின் இறுதி) அவரும் எழுபது வயது கடந்தவராக இருந்தார்.

இரண்டு கோல் (மந்திரிசபை) கண்ட நிர்பனை, விளையாட்டு முடிய எட்டு நிமிடம் (வருடம்) இருக்கும்போது, கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக விலக்கி வைத்தார்கள் (1996).

வயோதிகத்தில் ஸ்ரீபாத அம்ருத் டாங்கே (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்) தன் மருமகனின் ‘பகவத் கீதை ‘ பற்றிய நூலுக்கு முன்னுரை எழுதினார். ‘தூக்குமர நிழல் ‘ அனுபவப்பட்ட எஸ்.ஏ.பாலன் கிருஷ்ண பக்தரானார். டயலடிக்கல் மெட்டாரியலிசத்துக்கும் சர்வபரித்யாகத்துக்கும் தூரம் அதிகமில்லை என்பதாக இருக்கலாம்.

வாழ்க்கை முழுக்க பிரம்மச்சாரியாக வாழ்ந்த கர்மயோகி தோழர் நிர்பன் கண் மூடும்போது கண்ணனை நினைத்தாரா, மார்க்ஸை தியானித்தாரா என்று தெரியாது. அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.

****

‘அக்ஞாதயுடெ உயராத்த ஸ்மாரகம் ‘.

குழந்தைத்தனமான அறியாமையின் கட்டப்படாத நினைவு மண்டபம் என்ற பொருள் வரும் இது எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய ஒரு புதினத்தின் தலைப்பு.

எம்.டியின் இந்த நாவலிலும், அவரின் ‘நாலுகெட்டு ‘ கதையிலும் வரும் முக்கியமான கதாபாத்திரமான யசோதரை பற்றி அவர் சொல்வது –

‘செண்பக மலரின் செழுமையும், நல்லெண்ணெய் மணக்கும், முழங்கால் வரை நீண்ட அடர்ந்த கூந்தலும், சந்தன சோப்பின் நறுமணமுமாக, மந்தார மலரைச் சூடி வரும் யசோதரா. ‘

இறந்த அன்புக் கணவனின் நினைவுகளோடு சிதிலமடைந்து கொண்டிருக்கும் நம்பூத்ரி மனையில் ஜீவித்திருக்கும் யசோதரையை இலக்கியம் அறிந்த மலையாளிகள் அனைவருக்கும் பரிச்சயம் உண்டு.

என்றால், யசோதரா கற்பனைக் கதாபாத்திரமில்லை, உண்மையிலேயே வாழ்கிற ஒரு பெண், தற்போது வயதால் தளர்ந்த மூதாட்டி என்பதைச் சில ஆண்டுகள் முன் எழுத்தாளர் வி.கே.ஸ்ரீராமன் கண்டறிந்து

அவரைச் சந்தித்து எழுதினார்.

‘எம்.டி சொன்னதெல்லாம் சரிதான்; ஆனால் நான் தலையில் மந்தார மலரைச் சூடவில்லை. நந்தியாவட்டை தான் அது ‘ என்று சொன்னாராம் எழுபத்தொன்பது வயதான யசோதரம்ம.

‘அது மந்தாரப்பூ அல்ல ‘ என்று பெயரிட்டு, காவ்யா மாதவனை யசோதராவாக்கி சினிமா எடுக்கத் தொடங்கி விட்டார்கள். கிட்டத்தட்ட இடிந்து விழுந்து கொண்டிருக்கும் மனையை விட்டு, வாடகை வீட்டுக்குப் போனவாரம் யசோதரா குடி பெயர்ந்தது பத்திரிகையில் முதல் பக்கச் செய்தி.

பக்கத்து மாநிலத்தவரின் இலக்கிய சிநேகத்தில் எப்போதுமே மரியாதை உண்டு என்றாலும், புனைகதைக்குப் பின்னால் போய் பாத்திரத்தைக் கவிழ்த்துப் போட்டுப் பெயர் வெட்டியிருக்கிறதா என்று பார்க்கும் விளையாட்டில் எனக்கு ஈடுபாடு கிடையாது.

ஒரு முறை தஞ்சை போயிருந்தபோது, மறைந்த தஞ்சை பிரகாஷ், மற்ற நண்பரகளோடு பெரிய கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன்.

‘தோழர், இந்தத் தெருவிலே தான் யமுனா இருக்காங்க ‘

ஆர்வமாகச் சொன்ன சிநேகிதரைப் புரியாமல் பார்த்தேன்.

‘தி.ஜானகிராமனோட மோகமுள் கதாநாயகி யமுனா. ‘

அவர் விளக்கினார்.

அர்ச்சனா ஜோக்லோகர் யமுனாவாக நடித்த சினிமா இன்னும் எடுக்கப்படாத அந்தக் காலகட்டத்தில், என் கற்பனையிலும் ஒரு யமுனா உண்டு. (நான் மனதில் உருவகித்திருந்த யமுனா கிட்டத்தட்ட அர்ச்சனா ஜோக்லோகர் மாதிரித்தான் இருந்தார் என்பது வேறு விஷயம். அவர் மட்டுமில்லை, மும்பை தாதரில் பாஸ்ட் லோக்கல் ரயில் பிடிக்க ஓடும் எல்லா மராத்திய இளம்பெண்களிலும் யமுனாவைப் பார்த்திருக்கிறேன். )

‘இது நிஜ யமுனா .. இந்த வீட்டுலே தான் இருக்காங்க. மராட்டிய வீடு இது. ‘

‘இது இல்லேப்பா .. அந்த வீடு ‘

எல்லா வீடும் ஒரே மாதிரித் தெரிந்த அந்தத் தெருவில் எல்லாத் திசையிலும் கைகள் நீள, தெரு முழுக்க யமுனா வாசனை.

‘நீங்க பார்த்திருக்கீங்களா ? ‘

‘ஆசான் (தஞ்சை பிரகாஷ்) பாத்திருக்கார். யமுனாவேதான். கொஞ்சம் காத்துக்கிட்டு இருந்தால் பார்க்கலாம். ‘

‘அது சரி, அப்புறம் பாபு, அவங்க அப்பா, ராஜம், போஸ்ட் ஆபீஸ் கிளார்க், அவங்க ரெண்டாம் சம்சாரத்தோட ஆவி எல்லாத்தையும் காட்டிடுவீங்க போல இருக்கே. அது சரி, மோகமுள் கும்பகோணம் கதையில்லையோ… ‘

‘சும்மா இருங்க. நம்ம ஆசான் தான் சொன்னார் இங்கே இருக்கற பெரியம்மா தான் தி.ஜவின் யமுனாவாகியிருக்கறதாக. தி.ஜாவுக்கு இவங்களை நல்லாத் தெரியுமாம். ‘

எல்லாக் கதவுகளும் அடைத்துக் கிடந்த மதிய நேரத்தில் அந்தத் தெருவில் ஏதோ ஒரு வீட்டுக்குள்ளே இருந்து யமுனா வருவதற்காகக் காத்திருந்தோம்.

பசி வயிற்றைக் கிள்ள, பொழச்சுக் கிடந்து இன்னொரு நாள் வந்தால் பார்த்துக்கலாம் என்று நடையை எட்டிப் போட்டோம். பிரகாஷ் சாதுப் பிராணியாக எனக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதுபோல் ஸ்கூட்டரைத் தள்ளிக் கொண்டு தஞ்சாவூர் தாட் (மராட்டிய சாப்பாடு) பற்றிச் சொல்லியபடி கூடவே வந்தார்.

இரண்டு தலைமுறை எழுத்தாளர்களைப் பரிச்சயம் உடைய அந்த அபூர்வ மனிதர், தி.ஜாவை இன்னும் ஆழ்ந்து படிக்க ‘கதை சொல்லிகள் ‘ வட்ட இளைஞர்களுக்காகச் சும்மா இட்டுக் கட்டிய யமுனாவோ தஞ்சை நண்பர்கள் எனக்குப் பரிச்சயப்படுத்தித்தர முனைந்தது என்று இப்போது தோன்றுகிறது. பிரகாஷ் மறைந்து விட்டார். அவர்களின் இலக்கியத் தேடல் இன்னும் தொடர்கிறது என்று நினைக்கிறேன். யமுனா அவர்கள் கண்ணில் இன்னும் பட்டிருக்கக் கூடாது என்று வேண்டுதலும் உண்டு.

****

‘அடி கொள்ளான் செண்ட, பணம் வாங்கான் மாரார் ‘ என்று ஒரு பழஞ்சொல் உண்டு.

அந்தப்படிக்கு, மீனங்காடி கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி வகுப்பு தொடங்க சர்க்கார் அனுமதி வாங்கித் தருவதற்காக, லீக்காரர்கள் பிஷப்பிடம் லஞ்சப் பணம் கேட்டதாகப் புகார் ஆறு மாதத்துக்கு முன்னால் எழுந்தது. இந்த விஷயத்தில், செண்டை போல எல்லாப் பக்கமும் அடி கொள்கிறவர் கேரள முதல்வர் உம்மன் சாண்டி சார்.

விசாரணைக்குக் கோர்ட் படியேறி, அப்போது காங்கிரஸ் செயலாளராக இருந்த சாண்டி சொன்னது – இது பற்றி எனக்கொண்ணும் தெரியாது.

போன வாரம் கேரள காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் மந்திரியுமான டி.எம்.ஜேக்கப் சொன்னது வேறே மாதிரி – பாதிரியாரிடம் லஞ்சம் கேட்டது உண்மைதானாம். சாண்டி தான் எனக்குச் சொன்னார்.

முதலமைச்சர் ஆகி நூறாவது நாள் கொண்டாடிய கையோடு திரும்பக் கோர்ட் படியேறி, தான் இதற்கு முன்னால் சொன்னது உண்மையா இல்லையா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் உம்மன் சாண்டிக்கு.

ஏற்கனவே கிளிரூர் பெண் வணிகக் கேஸ், குஞ்ஞாலிக்குட்டி தயவில் கோழிக்கோடு ஐஸ்கிரீம் பார்லர் வழக்கு என்று ஐக்கிய முன்னணி சர்க்கார் அலைபாய்ந்து கொண்டிருக்க, எல்லாம் சேர்ந்து வெறுப்பேற்றப் பிய்த்துக் கொண்டு போய் படிக்கட்டில் வந்தமர்ந்த சுப்புராமனைப்போல், தில்லிக்குப் புறப்பட்டுப் போனார் முதல்வர்.

மலையாளப் பத்திரிகை, டிவியெல்லாம் தாடி வச்ச, கனமான ப்ரேம் போட்ட கண்ணாடி மாட்டின பசங்க தாறுமாறாக எழுதி, பேசிக்கிட்டு இருக்கட்டும். தலைநகரிலே, பிரபல இங்கிலீஷ், இந்தி பத்திரிகை நிருபர்களைக் கூப்பிட்டு ஒரு உக்ரன் பார்ட்டி நடத்தி, நம்ம சர்க்காரின் பெருமையை ஆதியோடந்தமாக எடுத்துச் சொல்லுங்க. அடுத்த நாள் காலையிலே தில்லி குளிர்லே இஞ்சி தட்டிப் போட்ட அத்ரக் சாயா குடிச்சுக்கிட்டுப் பத்திரிகையைப் பிரிக்கற யாரும் உங்க முகத்துலே தான் விழிப்பாங்க.

எந்த வல்யேட்டன் உபதேசம் செய்தாரோ, தலைநகர் பத்திரிகையாளர்களுக்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்து கொடுக்க உம்மன் சாண்டி உத்தரவு செய்துபோட்டார். திருவனந்தபுரத்தில் அழைப்பிதழ் அடித்து, தில்லிப் பத்திரிகையாளர்களுக்கு உடனே அனுப்பி, வந்து சேர்ந்ததா என்று கூடவே தொலைபேசியில் விசாரித்து, வராதவர்களையும் ஓபராய் ஓட்டலுக்கு வரச்சொல்லி வரவேற்றவர்கள் சர்க்கார் கேரளா ஹவுஸ் அதிகாரிகள்.

சாப்பாடு மட்டும் போதுமா ? குளிருக்குச் சூடா சாயாவும், கொஞ்சம்போல வேறே எதாவதும் ஊற்றிக் கொடுக்கலாமே விருந்தாளிகளுக்கு என்று இன்னொரு யோசனையும் முதலமைச்சருக்கு முன்னால் வைக்கப்பட, அவரும் சரியென்றார். கொஞ்சம் போல ஊற்றிக் கொடுக்க எடுத்ததில் தான் விவகாரமே.

கள்ளு விஷயத்தில் தாராளமாக்கலைப் பொதுவாகக் கைகொண்டாலும், சர்க்கார் செலவில் மதுபானம், அதுவும் தில்லிக்கார பத்திரிகையாளர்களுக்கு மட்டும் என்பதாலோ என்னவோ, காந்தி பிறந்த நாட்டில், காங்கிரஸ் ஆளும் மாநிலத்தின் முதலமைச்சர் இப்படி கண்ணியக் குறைவாக நடப்பதா எனக் கொதித்துப் போய், ‘பஞ்ச நக்ஷத்ர ஹோட்டலில் கேரள சர்க்கார் மத்ஸ்ய சல்காரம் ‘ என்று போன வாரம் மலையாளப் பத்திரிகைகள் எல்லாம் எட்டுக் காலத்தில் முதல் பக்கத்தில் அலறின.

விருந்து சாப்பிட்டு, குடித்து முடித்துப் புறப்பட்டுப் போன தில்லி இந்தி, ஆங்கிலப் பத்திரிகை நிருபர்கள் கொறிக்க எடுத்து, சட்டைப்பையில் வைத்த மிச்ச முந்திரிப் பருப்போடு விருந்து மயக்கத்தில் இன்னும் தூங்கிக் கொண்டிருப்பதால், தில்லிவாலாக்கள் எவரும் எந்தப் பத்திரிகையில் முதல், இடை, கடைப் பக்கம் எதிலும் கேரள அரசின் பிரதாபங்களைப் பற்றி ஒரு வரி கூட அச்சுப் போட்டு வந்ததைப் படிக்கக் கிடைக்காத துரதிர்ஷ்டம்.

அதிகாரிகள் தொடர்ந்து மும்முரமாக இருப்பதாகத் தகவல். விருந்துச் செலவு மிகவும் குறைச்சல், அதில் பேருக்கு, முகர்ந்து பார்க்கத்தான் கொஞ்சூண்டு மதுபானம் விளம்பப்பட்டது என்று நிரூபிக்க ஓபராய் ஓட்டல் பில் ஒண்ணு விடாமல் நகல் எடுத்து, மலையாளப் பத்திரிகைகளுக்கு ஃபாக்ஸ் அனுப்பியபடி இருக்கிறார்கள் அவர்கள். இதுவும் நேற்றைய பத்திரிகை செய்திதான்.

****

த்ஸுனாமி பதிவுகள் – சென்னை – 26.12.2004

காலை 7:30 மணி

—-

எற்றுக்குறங்கும் பொருளேலொர் எம்பாவாய் என்று நேரம் கழித்து எழுந்து சதாரா மாலதியின் தி

ருப்பாவையில் மூழ்கிக் கொண்டிருந்தபோது, கடகடவென்று என் நாற்காலி ஆடியது.

நேற்று ராத்திரி பானம் செய்த வோட்கா பரமசாது. அப்படியெல்லாம் அடுத்த நாள் காலை பின்

தொடர்ந்து மோடி கிறுக்காது தலையை. இது சும்மா என் மனப் பிராந்திதான் என்று கம்ப்யூட்டர் திரையை வெறித்துக் கொண்டு வேலையில் ஆழ்ந்திருந்தேன்.

‘நில நடுக்கம் இருந்ததே இப்போ.. எல்லோரும் வாசல்லே நின்னு பேசிட்டு இருக்காங்க .. உங்களுக்கு ஒண்ணுமே தெரியலியா ? ‘

வீட்டில் எல்லோரும் வெளியே போய்த் திரும்பி வந்து கேட்கிறார்கள்.

சென்னையில் நில நடுக்கமா ? ஞாயிறு காலையிலா ? எனக்குத் தெரியாதே !

காலை 10:00 மணி

—-

சன் தொலைக்காட்சியில் விடிகாலைச் செய்தியில் நேற்றைய கிரிக்கெட் போட்டி பற்றிச் செய்தி

படித்துக் கொண்டிருந்தவர் கொஞ்சம் ஆடி, அதிர்ந்து எழுந்து, ‘பில்டிங்க் ஷேக் ஆகுது .. பில்டிங்க் ஷேக் ஆகுது ‘ என்று பதறியபடி ஓடியதில் தொடங்கியது (அதை இப்போது மறுபடி ஒளிபரப்பில் பார்த்தேன்).

சன் நியூஸில் நேரடி ஒளிபரப்பாக (விளம்பர இடைவேளை) சென்னை நகரில் கடல் புகுந்த செய்தியாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

திருவல்லிக்கேணியில் நண்பர் வெங்கடேஷுகுத் தொலைபேசிக் கேட்டேன். அவர் பகுதியில் தண்ணீர் புகுந்ததால், வெளியேறியிருப்பதாகக் கூறினார். போர்ஷோர் எஸ்டேட் என்ற பட்டினப்பாக்கத்தில் இன்னொரு நண்பர் ஒருவரைத் தொடர்பு கொள்ளக் காலை எட்டரை மணி முதல் முயல்கிறேன். அங்கே கணிசமாகக் கடல் நீர் புகுந்துள்ளதாகவும், தற்போது வடிந்து வருவதாகவும் தெரிகிறது.

சென்னையில் 23 பேர் பலி என்று சன் நியூஸ் நேரடி ஒளிபரப்பில் செய்தி. கடலூரில் 5000 பேரைக்

காணவில்லை என்று இன்னொன்று. இலங்கையில் நிலநடுக்கத்தில் 150 பேர் பலி என்று மூன்றாவது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் எழும் வதந்திகளைப் பரவவிடாமல் தடுப்பதில் தொலைக்காட்சி,

வானொலி ஊடகங்களின் கடமை கணிசமானது. சன் தொலைக்காட்சி அதைச் சிறப்பாக நிறைவேற்றுவதற்கு நன்றி சொல்ல வேண்டும்.

மாலை 4:50 மணி

—-

தமிழகத்தில் இன்றைய கடற் கொந்தளிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போதைய செய்திப்படி (இந்திய நேரம் பிற்பகல் 4:50 மணி) 2500. இவர்களில் நாகை மாவட்டத்தில் 1500 பேரும் சென்னையி

ல் 150 பேரும் அடக்கம்.

காஞ்சி மாவட்டத்தில் ஒரு தேவாலயம் (மாதா கோவில்) இடிந்ததில் 50 பேர் பலி என்று தெரிகிறது.

கன்யாகுமரியில் விவேகானந்தர் பாறைக்குச் சென்ற நூற்றுக் கணக்கான வேற்று மாநிலச் சுற்றுப் பயணிகள் கடலில் இன்னும் தவித்துக் கொண்டிருப்பதாகவும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாகவும் செய்தி.

சென்னை ராயபுரம் பகுதியிலிருந்து அறுபது படகுகளில் கடலுக்குப் போயிருக்கும் மீனவர்கள், கடற்கரையில் வாக்கிங்க், ஜாகிங் போனவர்கள், ஞாயிற்றுக் கிழமை என்பதால் கடற்கரையில் கிரிக்கெட் விளையாடப் போன பல சிறுவர்கள் – எல்லாரும் பத்திரமாக இருக்கப் பராசக்தியை வேண்டுவோம்.

இரவு 6:20 மணி

—-

கடலூர் மாவட்டத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற 5000 மீனவர்கள் தேடப்படுகிறதாகச் செய்தி.

கன்யாகுமரி விவேகானந்தர் பாறையில் 700 பேர் மீட்கப்படக் காத்திருக்கிறார்கள். இவர்களில் உச்ச

நீதிமன்ற நீதிபதி ஒருவரும் உண்டு.

கடலூரில் அரைமணி நேரம் முன்னால் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் மறுபடி கடல் கொந்தளிப்பு ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரவு 8:20 மணி

—-

தொலைக்காட்சிகள் திரும்பத் திரும்ப ‘இன்னும் இரண்டு நாட்களுக்குள் திரும்பக் கடல் கொந்தளிப்பு

ஏற்படலாம் ‘ என்று அறிவித்துக் கொண்டிருப்பதால், இன்று இரவு சென்னை நகரம் நிம்மதியாக உறங்கும் என்று தோன்றவில்லை. நாளை திருவாதிரை நல்ல பொழுதாகட்டும்.

வேளாங்கண்ணியில் கிறித்துமசுக்காகத் தொழவந்த ஐநூறு பேர் காணவில்லை என்று செய்தி.

இலங்கையில் திரிகோணமலை பகுதி நீரில் மூழ்கியிருப்பதாகவும் நிறைய உயிரிழப்பு என்றும்

சொன்னார்கள்.

தமிழகத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை ஐயாயிரம், மூவாயிரத்து ஐநூறு, ஆயிரத்தைநூறு என்று ஆயிரக் கணக்கில் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் ஏற்றி இறக்கி மின்னல் செய்திகள் நகர்ந்துபோகும்போது ஆயிரம் உயிர்களுக்கு என்ன மதிப்பு இங்கே என்று புரிகிறது.

இருபத்தாறாம் தேதிதான் நிறைய நிலநடுக்கம், கடல் கொந்தளிப்பு போன்ற பெருவிபத்துகள் ஏற்படுகி

ன்றன என்ற விநோதமான ஒரு பார்வையை சன் தொலைக்காட்சியில் முன்வைத்தார்கள்.

27.12.2004 காலையில் வந்த குறுஞ்செய்தி (தட்டிக் கொட்டித் தமிழ் வடிவம்)

—-

பத்தாயிரம் உயிர் விலை கொடுத்து

ஒற்றை வார்த்தை கற்றோம் – த்ஸூனாமி.

ஜப்பான் மொழிபடிக்கக் கட்டணம் அதிகம்.

—-

Series Navigation