வறுமை என்னும் அணையாநெருப்பு : சுயம்புலிங்கத்தின் கவிதைகள்

This entry is part [part not set] of 24 in the series 20070503_Issue

பாவண்ணன்


நாலு பக்கங்களிலும் பரவி எரித்துச் சாம்பலாக்குகிற நெருப்பைப்போல மனித வாழ்வையே எரித்துச் சாம்பலாக்குகிற வறுமை அணைக்கமுடியாத ஒன்றாக வெப்பத்தை உமிழ்ந்துகொண்டிருக்கிறது. ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் ஒவ்வொரு ஆண்டும் மாறிமாறி உட்கார்ந்து தீட்டுகிற திட்டங்களாலும் செயல்முறைகளாலும் அணைக்கப்படமுடியாத ஒன்றாக உயர்ந்து எரிகிறது. ஒருபுறம் தணிந்து அமைதியுறும் தருணத்தில் இன்னொரு புறத்தில் நெருப்பின் நாக்குகள் நீண்டு இன்னும் சிலரை இழுத்துப் பலியாக்குகிறது. அணையாத நெருப்பான வறுமையின் வெப்பத்தை, அதன் கனல் சற்றும் குறையாதவண்ணம் கவிதையாக மாற்றியிருக்கிறார் சுயம்புலிங்கம். புழங்குதளத்திலிருந்தே அவர் கவனமுடன் எடுத்தாள்கிற சொற்களும் மொழியும் அவர் கவிதைகளுக்குக் கூடுதல் சக்தியை அளிக்கின்றன. எல்லாக் கவிதைகளும் கசப்பு, சோர்வு, ஆற்றாமை, சலிப்பு, இயலாமை, வேதனை, துயரம் படிந்தவை. அனைத்தும் வாழ்க்கையைத் தொலைத்துவிட்ட அல்லது வாழ்க்கையால் விரட்டியடிக்கப்பட்ட எளிய மக்களின் மனக்குமுறல்கள். அடிவயிற்றிலிருந்து எழும் இக்குமுறல்களைக் கேட்கும்போது நம் உடல் நடுங்குகிறது. ஒருவித குற்றஉணர்வும் கூச்ச உணர்வும் நெஞ்சைப் பாரமாக அழுத்துகின்றன. சுயம்புலிங்கம் தம் கவிதைகளில் கட்டியெழுப்பும் சித்திரங்களின்பால் மீண்டும்மீண்டும் நம் கவனம் பதிவதற்கு இதுவும் ஒரு காரணம்.

“மழையே நீ போ” என்பது ஒரு விவசாயி மழையிடம் முன்வைக்கிற கோரிக்கையாக மலர்ந்திருக்கிற கவிதை. அளவுக்கதிகமாகப் பெய்து ஏரி, குளங்கள் நிரம்பி ஊரே நாசமாகிவிடும் சூழலில் முன்வைக்கப்படும் கோரிக்கையல்ல இது. “பெய்யாமலேயே போய்விடு” என்று மன்றாடும் கோரிக்கை. ஐப்பசியில் அடைமழை என்பது பழமொழி. அந்த முதல்மழை மண்ணில் இறங்கியதுமே விவசாயிகள் விதைப்பதற்குத் தோதாக நிலத்தைப் பண்படுத்தத் தொடங்குகின்றனர். மழையினால் உலகத்தில் உள்ள உயிர்களெல்லாம் செழிப்புடன் வாழ்வதால் அம்மழையையே உலகம் அமுதமாகக் கருதுகிறது என்பது வள்ளுவர் வாக்கு. அமுதமாகவும் தெய்வமாகவும் உணரப்படவேண்டிய மழையைத்தான் பொழியாமலேயே போவென்று ஒரு விவசாயி கெஞ்சிக் கேட்டுக்கொள்கிற குரலைத்தான் இக்கவிதையில் கேட்கிறோம். இந்த வருத்தமும் துக்கமும் கசப்பும் ஒருவருடைய நெஞ்சில் படிவற்கான காரணக்கூறுகளை இந்தக் குரல் யோசித்துப் பார்க்கத் தூண்டுகிறது. விவசாயம் செய்வதால்தான் விவசாயி என்கிற பெயருக்குரிய தகுதியை அடைகிறான் ஒருவன். விவசாயம் இடையறாமல் நடைபெறும்போதுதான் விவசாயியின் வாழ்க்கை பொருள்பொதிந்ததாக அமைகிறது. எவ்வளவோ நஷ்டங்களுக்கும் கஷ்டங்களுக்கும் பிறகுகூட விவசாயிகள் ஒருபோதும் மனம் தளர்வதில்லை. மலைபோல நம்பியிருக்கும் விவசாயம் தம்மைக் காப்பாற்றி வளமுள்ளவர்களாக்கும் என்ற ஆழ்ந்த பற்றுடையவர்களாக இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையும் பற்றும் சிறுகச்சிறுக வற்றிப் போகும்படி சூழல் மாறும்போது தன்னை நெருக்கி நசுக்கிக்கொண்டிருக்கும் வறுமையிலிருந்து மீள்வதற்காக எந்தத் தலைமுறை விவசாயியும் செய்யாத ஒரு செயலைச் செய்துவிடுகிறான். விதைநெல்லை அரிசியாக்கிச் சாப்பிட்டுவிடுகிறான். இந்த மண்ணில் உயிர்வாழ்ந்திருக்கவேண்டி ஒருபோதும் யாரும் எப்போதும் செய்யத் துணியாத அச்செயலைச் செய்யும் அளவுக்கு வறுமை து¡ண்டியிருக்கிறது. விதைநெல்லை இழந்தபிறகு எதைவைத்து விவசாயம் செய்வது? அந்த ஆற்றாமையே பெய்யாமலேயே போவென்று மழையின்முன் கோரிக்கையாக வெளிப்படுகிறது. விவசாயத்திலிருந்து வெளியேறி ஒரு கூலித் தொழிலாளிகயாக, வெறும் மனிதனாக மாறும் துயர்மிகுந்த காலகட்டத்தின் குரல்தான் இந்தக் கோரிக்கை. காலத்தால் கைவிடப்பட்டவனாக மாறிப்போய்விட்டான் விவசாயி. மழையுடன் உள்ள உறவை வறுமையின் காரணமாக விவசாயி அறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மழையைத் தொடர்ந்து யாருடைய உறவு எதிர்காலத்தில் அறுபடுமோ தெரியவில்லை. அந்த வினா விடைதெரியாத புதிராக உலகை ஆக்கிரமித்திருக்கும்போதே, உறவு அறுபட்ட விவசவாயி மழையிடம் போய்விடுமாறு கெஞ்சிக் கேட்கிறான். மழை அவனுக்குப் பழைய வாழ்வை நினைவூட்டக்கூடும். அந்த நினைவு ஒருவேளை அதிக மன அழுத்தத்துக்கு ஆளாக்கிவிடவும்கூடும். குற்றஉணர்வையும் தோல்வியுணர்வையும் எழுப்பவும் கூடும். அவற்றைத் தவிர்ப்பதற்காகவே முன்னெச்சரிக்கையாக ஐப்பசியின் முதல்நாளே மழையிடம் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறான். மழையை வேண்டி உருகிஉருகி எழுதப்பட்ட பிரார்த்தனைப் பாடல்களையும் படையல் பாடல்களையும் கேட்டுப் பழகிய நம் மனத்தில் மழையைப் போகச்சொல்கிற இந்தக் கவிதை எழுப்புகிற எண்ண அலைகள் ஏராளம்.

“காக்கை குருவி எங்கள் சாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்ற பாரதியாரின் எழுச்சி வரிகளுக்கு நேர் எதிரானவையாக “குளம்குட்டை எங்கள் பானம் கண்ணீர் வறுமை எங்கள் வாழ்வு” என்னும் சுயம்புலிங்கத்தின் சோர்வும் கசப்பும் பொதிந்த வரிகள் அமைந்துள்ளன. கவிதைக் குரல்களில் எப்படி இந்த மாற்றம் வந்தது என்பது முக்கியமான கேள்வி. முதல் குரல் சுதந்திரத்துக்கு முந்தைய குரல். ஏராளமான நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் சுமந்த நெஞ்சிலிருந்து வெளிப்பட்டது அக்குரல். ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு வெளிப்படும் இரண்டாவது குரல் சுதந்திரத்துக்குப் பிந்தைய குரல். எல்லா நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் நொறுக்கித் தவிடுபொடியாக்கிவிட்டு நாற்காலிக்காரர்களும் உள்நாட்டுப் பணக்காரர்களும் வெளிநாட்டுப் பணக்காரர்களும் நாட்டு வளங்களைப் பங்குபோட்டுத் தின்று கொழிக்கத் தொடங்கிவிட்ட காலத்தில் செவிமடுக்க ஆளின்றி காற்றில் கலந்துபோய்விட்டது அக்குரல். எளிய மனிதர்களை அவர்களுடைய சொந்த நிலையிலிருந்து கீழிறக்கி அலையவிட்டு வேடிக்கை பார்க்கிற சூழலில் சோர்வும் கசப்பும் மட்டுமே எஞ்சுகின்றன.

கசப்பு வெளிப்படும் இன்னொரு கவிதை “நொம்பலப்பட்ட மக்கள்”. சென்னையில் என்னதான் இல்லை என்கிற கேள்வியோடு தொடங்குகிறது இக்கவிதை. லட்சக்கணக்கான மக்கள் வசிப்பதற்கு சுகாதாரமான இடமில்லாமல் பாதையோரங்களிலும் சாக்கடையோரங்களிலும் வசிப்பதைக் குறிப்பால் சுட்டிக்காட்டிவிட்டு அவர்களைத் தொல்லைக்கு ஆளாக்கும் மலேரியாவையும் யானைக்கால் நோயையும்பற்றிய வருத்தமும் முன்வைக்கப்படுகிறது. இறுதியாக சாதாரண கொசுக்களைக்கூட ஒழிக்க இயலாத நகராட்சியும் அரசாங்கமும் எதற்காக இருக்கின்றன என்னும் கேள்வியை எழுப்புகிறது. மிக எளிய மக்கள் தினந்தினமும் தம் உரையாடல்களில் வெளிப்படுத்துகிற கேள்விதான் கவிதையிலும் எதிரொலிக்கிறது. உணவு, உடை, உறையுள் என்னும் மூன்றையும் தம் குடிமக்களுக்குத் தவறாமல் வழங்குவதை அரசாங்கம் முக்கிய கடமையாக நினைத்து செயற்படும் என்னும் சுதந்திர இந்தியாவின் கனவு படிப்படியாகச் சிதறி நொறுங்கிவிட்ட சூழலில் அவற்றை நாடி அவர்களாகவே இடம்பெயர்ந்து சென்று வாழ முற்பட்டுவிட்டார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற மக்கள் அரசால் மக்களுக்கு எவ்விதமான பயனுமில்லை என்பதை உணர்ந்து விலகிவிட்ட மக்கள் நிம்மதியாக ஒதுங்கி இருக்கக்கூட அவர்களால் முடியவில்லை. அந்த அளவுக்குக் கடுமையானதாக இருக்கிறது கொசுத்தொல்லை. அடிப்படை வசதிகளுக்கு வழிசெய்து தரஇயலாத ஓர் அரசு இந்தக் கொசுவைக்கூடவா ஒழிக்கமுடியாமல் போய்விட்டது என்னும் கசப்புதான் ஆற்றாமையோடு கலந்து வெடிக்கிறது.

“நிறமழிந்த வண்ணத்துப்பூச்சிகள் தலைகெறங்கிப் பறக்கிறது” என்னும் இரண்டுவரிகள் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் சித்திரங்கள் ஏராளமானவை. யார் இந்த வண்ணத்துப்பூச்சிகள்? குழந்தைகளா? பெண்களா? முதியவர்களா? அவை நிறமழிந்துபோக என்ன காரணம்? அவை கிறங்கிப் பறக்க என்ன காரணம்? பசியா? ஒரு வண்ணத்துப்பூச்சிக்கு எவ்வளவு உணவு தேவைப்படும்? அந்தச் சிறிய அளவிலான உணவுக்குக் கூடவா இந்த மண்ணில் வழியில்லாமல் போய்விட்டது? மிக எளிய வரிகளென்றாலும் பசியின் வேதனையைக் கூர்மையாக முன்வைப்பதில் வலிமை மிகுந்தவையாக உள்ளன.

“பஞ்சம்” என்னும் கவிதையில் ஒரு வீட்டின் சித்திரம் எழுதிக் காட்டப்படுகிறது. அது ஓர் ஓட்டுவீடு. சாணமிட்டு மெழுகப்பட்ட திண்ணை. வெள்ளையடித்த சுவர்கள். பனை வாரைகளாலான து¡ண்கள். பாதுகாப்பாக வாழ்வதற்கேற்ற வகையில்தான் கட்டப்பட்டிருக்கிறது அந்த ஓட்டுவீடு. கோடைக்காலத்திலும் குளிர்காலத்திலும் அச்சமின்றி வாழத் தகுந்த வகையிலேயே உள்ளது. ஆனால் வீட்டில் நடமாட்டம் இல்லை. குளவிகளும் ஊர்க்குருவிகளும் சிற்றெறும்புகளும் எட்டுக்கால் பூச்சிகளும் வீடுகளின் எல்லாப் பக்கங்களையும் ஆக்கிரமித்திருக்கின்றன. பாதுகாப்பாக இருப்பதற்குக் கட்டிய வீட்டில் வாழ்வதற்கு வகையில்லாமல் பஞ்சம் பிழைப்பதற்காக நகரங்களைநோக்கி அல்லது வெளிமாநிலங்களைநோக்கி மக்கள் நகர்ந்துவிடுகிறார்கள். மனிதர்கள் வசிக்கவேண்டிய இடங்களில் பூச்சிகளும் குருவிகளும் வாழ்கின்றன. தொடக்கக் காலத்தில் காடுதிருத்தி நாடாக்கி, நிலத்தைச் சமப்படுத்தி விளைநிலங்களாக்கி வாழத்தொடங்கிய ஆதி மனிதர்கள் தம் வசிப்பிடங்களுக்காக பூக்களும் குருவிகளும் விலங்குகளும் மண்டிய இடங்களில் அவற்றை அப்புறப்படுத்தி வாழ்ந்தது ஒரு காலம். காலு¡ன்றிய இடத்துக்கு அக்கம்பக்கத்திலேயே அவர்கள் வாழ்வதற்கேற்ற எல்லா வளங்களும் அப்போது மண்மீது அமைந்திருந்தன. இப்போது காலம் மாறிவிட்டது. அந்த வளங்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாகப் போய்விட்டது. ஒரு வேளைச் சோற்றுக்குக்கூட வழியில்லாத இடமாகப் போய்விட்டது ஊர். உண்ண உணவில்லாத சூழலில் ஒரு வீடு வழங்கக்கூடிய பாதுகாப்புக்கு எவ்விதமான பொருளுமில்லை. போட்டது போட்டபடி, வீட்டைவிட்டு, ஊரைவிட்டு கூட்டம்கூட்டமாக சோற்றுக்கு வழி இருக்கிற இடம்தேடி வெளியேறிவிடுகிறார்கள். வெயில் விளையாடும் வீடுகளில் ஒரு காலத்தில் அவர்களால் விரட்டப்பட்ட பூச்சிகளும் குருவிகளும் சுதந்திரமாக நடமாடத் தொடங்குகின்றன. மனித நாகரிகத்தின் இரண்டாவது சுற்றின் தொடக்கம் அவ்வளவு எளிதானதாக இல்லை. இதன் தொடர்ச்சியாகக் காணத்தக்க இன்னொரு கவிதை அக்கரைச் சம்பாத்தியம். இரைதேடிப் போன தாய்ப்பறவைகளின் வருகைக்காக வாய்திறந்து காத்திருக்கும் குஞ்சுப்பறவைகளின் சித்திரத்தை கவிதை காட்டினாலும் அதன் ஆழத்தில் இடம்பெயர்ந்துபோன மனிதர்களையும் அவர்களுடைய குடும்பங்களையும்கூட காணமுடிகிறது. “ஓலை”, “பெரிய எழுத்து”, “பாட்டியின் கடைசி நாட்கள்”, “ஒரு கிழிஞ்ச கூடாரம்” ஆகிய கவிதைகளும் பசிக்கொடுமையின் சித்திரங்களைக் கொண்டவை.

பஞ்சம் பிழைக்க வெளியேறுவதற்கு முந்தைய சில நாட்களின் காட்சிகளாக அமைந்துள்ளன “பனங்காடு”, “எங்க ஊரு மரம்” ஆகிய கவிதைகள். வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்த மரங்கள் அழிந்து மடிவதைப் பார்க்கிற வருத்தம் கிட்டத்தட்ட ஒரு குடும்ப உறுப்பினரின் மரணத்தைக் காண்கிற வருத்தத்துக்கு இணையானது. அவற்றை அழித் து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நெருக்கடிக்கு ஆளாக்கிவிட்ட வாழ்க்கையின் கோலத்தைச் சபித்தபடியே அந்த வருத்தத்தைக் கடந்து செல்கிறார்கள் மனிதர்கள். மனிதர்களை நிலைகுலைய வைக்கிற வறுமையின் கக்திகள் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் மரங்களைச் சாய்த்து ஊரையே வெட்டவெளியாக்கிவிடுகிறது.

ஓர் இளம்பெண்ணின் ஆற்றாமையைச் சொல்கிற கவிதை “ஏழ்மையின் மறுபக்கம்” . சோற்றுக்கோ, கூழுக்கோ அல்லது தண்ணீருக்கோ அவள் வெடிக்கவில்லை. விலக்கான தருணத்தல் தன் உடலிலிருந்து வெளியேறும் ரத்தப்பெருக்கை ஏற்றுக்கொள்ளும் வகையில் கட்டிப் பொருத்த ஒரு கிழிசல் துணிக்குக்கூட வழியில்லாத கோலத்தை மனம்நொந்து சொல்கிறாள்.

“ரசம் அழிந்த கண்ணாடிகள்” கவிதையில் ஒரு நகரத்துக்காட்சி இடம்பெறுகிறது. குப்பையைக் கிளறி உடைந்த பிளாஸ்டிக் சாமான்களையும் பீங்கான் துண்டுகளையும் சேகரித்து விற்றுப் பிழைக்கிற ஒரு தாயின் நடவடிக்கைகளையும் தாயின் அவஸ்தைகள் எதுவுமே புரியாமல் அதே குப்பைமேட்டின் ஓரமாக கைக்குக் கிடைத்த கழிவுகளை எடுத்து விளையாடிக் களிக்கிற குழந்தையின் நடவடிக்கைகளை அருகருகே காட்டும் கவிதையின் முற்றுப்பெறும் தருணம் முக்கியமானது. உடைந்த பீங்கான் துண்டுகளை தாயின் கைகள் தேடிச் சேகரிக்கின்றன. இந்தச் சமூகம் கவனமில்லாமல் கையாண்டதால் உடைந்து நொறுங்கி ரசமிழந்து பயனற்றுப்போய் வீசப்பட்ட பீங்கான் பாத்திரங்களாகவும் கண்ணாடிகளாகவும் இந்த மக்கள் இருக்கிறார்கள். இவர்கள்தாம் ஏதோ ஒரு நிறுவனம் அல்லது மருத்துவமனை அல்லது தொகுப்புவீடுகள் பயனற்றவையென கொண்டுவந்து கொட்டிவிட்டுச் சென்ற குப்பையின் உடைந்த கண்ணாடித் துண்டுகளை அள்ளியெடுக்கிறார்கள். ஒருபுறம் காலம் நொறுக்கிய கண்ணாடி. மறுபுறம் மனிதர்கள் உடைத்துவீசிய கண்ணாடி. ஒரு கண்ணாடி இன்னொரு கண்ணாடியை அள்ளியெடுக்கிறது. இரக்கமே இல்லாத காலம் மனிதர்களைத் தூள்தூளாக நொறுக்கியபடியே நகர்கிறது.

( நிறம் அழிந்த வண்ணத்துப்பூச்சிகள்- மு.சுயம்புலிங்கம். உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை- 18. விலை. ரூ. 100)


paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்