வரையாத ஓவியம்

This entry is part [part not set] of 20 in the series 20011001_Issue

அனந்த்


(வே. ச. அனந்தநாராயணன்)

பல நாட்களாக, பலப் பல நாட்களாக,

என் மனக்கிடங்கில் மண்டி மறைந்திருந்த

ஆசையொன்றின்

மெல்லிய, தீனமான முனகல் ஓசை

இன்று சற்றுத் துல்லியமாகவே கேட்டது.

இரு விரல்களுக்கிடையே அந்த ஆசையைக்

கீழே விழாதபடி தூக்கி,

வெளிச்சத்தில் இட்டு, தூசி தட்டி,

அதன் குரல் கேட்கக் காதருகே கொணர்ந்தேன்:

ஓவியம்! ஓவியம்!

இயற்கையை, இறையை, ஏழையை, ஏந்தலை…

வரை! வரை! வரை!…….

சட்டென்று காதை மூடிக்கொண்டேன்:

மூளையில்லாத என் ஆசையே!

விடியு முதல் இரவு வரை

கணிணிப் பொத்தான்களைத் தூரிகையாகக்

கையில் அழுத்தி அழுத்தி வலித்துப் பழுத்துக்

கரணை கட்டிய என் விரல்கள்

காகிதத்தில், திரைச்சீலையில்,

ஏதும் வரைய இயலாதன என்று அறியாத ஜடமே!

போ மறுபடியும் உன் இருட்டறைக்கு!

Series Navigation

அனந்த்

அனந்த்