வரிநெடும் புத்தகத்து என்னையும் எழுத வேண்டுவன் அல்லது கோயில் நான்மணிமாலை

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

முனைவர் மு. பழனியப்பன்


வரிநெடும் புத்தகத்து என்னையும் எழுத வேண்டுவன் அல்லது கோயில் நான்மணிமாலை
முனைவர் மு. பழனியப்பன்
, தமிழ் விரிவுரையாளர், மா. மன்னர் கல்லூரி,
புதுக்கோட்டை

கோயில் என்ற பொதுவழக்கு சிதம்பரம் கோயிலைக் குறிப்பதாகும். கோயில் நான்மணிமாலை என்ற பட்டினத்துப் பிள்ளையாரின் பனுவல் சிதம்பரம் திருக்கோயிலை முன்னிறுத்திப் பாடப்பட்டுள்ளது. இது நாற்பது பாடல்கள், நான்கு வகை யாப்பு, நான்குவகை கருப்பொருள் என்ற நிலையில் நன்நான்காகக் கோர்க்கப் பெற்றுள்ளது. மாலை என்ற வடிவிற்கு ஏற்ப அகப்பொருள்சுவையும் இதனுள் இணைக்கப் பட்டுள்ளது. பட்டினத்துப் பிள்ளையார் இதனுள் பயன்படுத்தியுள்ள எளிமையான தத்துவக் கருத்துக்களால் இப்பனுவல் சிறப்பு மிக்க ஒன்றாக விளங்குகின்றது.

இந்நூல் வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா என்ற நான்குவகையான பொதுயாப்புகளில் பாடப்பட்டுள்ளது. இணைகுறள் ஆசிரியப்பா, நேரிசை ஆசிரியப்பா ஆகிய இரண்டும் ஆசிரியப்பாவின் வகைகளாக வந்து சில இடங்களில் அமைந்துள்ளன. இந்நூலுள் நான்கு வகைக் கருப்பொருள்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. அவை பின்வருமாறு ; 1. சிவபெருமானின் பெருமைகள், 2. சிவபெருமானின் ஆடல், 3. அகக் கருத்துகள், 4. தத்துவக் கருத்துகள். இந்நான்கைப் பற்றிய கருத்துகளை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

சிவபெருமானின் பெருமைகள்
சிவபெருமானின் பெருமைகள் என்ற கருத்தின் அடிப்படையில் சிவபெருமானின் உடலழகு, பத்து அங்கங்கள், திருவிளையாடல்கள். சிவன் இருக்கும் இடம் ஆகியன போற்றப் பெறுகின்றன. இவை இந்நூலின் பாடல்களில் பெருமளவில் இடம் பெற்றுள்ளன.

பட்டினத்தடிகள் சிவபெருமானின் புறஅழகைப் பாடல்கள்தோறும் கூறி வியக்கின்றார். அவற்றில் சில பகுதிகள் பின்வருகின்றன. ‘‘சிவபெருமானின் திருவடி ஒன்று மட்டுமே பாதாள உலகின் கீழ் நீள்வது. திருமுடி அண்டங்கள் எல்லாம் கடந்து நிறைவது. திருநீறு நிறைந்த எட்டு தோள்களும் எட்டு திசைகள் கடந்தவை. ’’(பா.6) என்பன பட்டினத்தடிகள் காட்டும் சிவபெருமானின் தோற்றப் பொலிவுகள் ஆகும். ‘வாமத்தி¢லே ஒரு மானை தரித்து ஒரு மானை வைத்தாய்’ (பா.14) என்று மான் ஏந்தியமையையும் , பார்வதியை ஒரு பகுதி ஏற்றியமையையும் அவர் ஒரு சேரப் பாடுகிறார். ‘அலங்கல் மதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப் பையரவு அணிந்த தெய்வநாயக’ என்ற தொடரின் மூலம் சிவபெருமானின் பாம்பணியும் தலையணியும் விளக்கம் பெறுகின்றன. இவை அழகிற்குச் சான்றுகள்.

சிவபெருமான் அணிகின்ற கொன்றைமாலையும் வெண்கொற்றக்குடையும், வெற்றிதரும் விடைக்கொடியும், ஒலிசெய்யும் உடுக்கை என்னும் இசைக்கருவியும், நான்மறைகள் என்று கூறத்தக்க குதிரைகளும், ஆயிரம் ஆயிரம் யானைகளும், மேருமலையும், தில்லைத் திருப்பதியும், பதினாயிரம் திருப்பெயர்களும் போன்ற பத்து அங்கங்களைப் பெருமை கொள்ள ஏற்றுக் கொண்டவர். அவரின் திருமண நாளில் தேவர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது எழுதப்பட்ட பெயரேட்டில் என் பெயரையும் சேர்த்துக் கொள்ள நான் உன்னிடம் வேண்டுகின்றேன். இவ்வாறு செய்தால் நுளம்பும்(கொசுவும்) கருடனாகி விடும் என்ற விதிக்கு ஏற்ப நானும் அடியவரில் ஒருவராவேன்(பா.4) என்று பட்டினத்துப் பிள்ளை வேண்டுகோள் வைக்கிறார். இவ்வேண்டுகோளின் அடிப்படையில் சிவபெருமானின் பத்து அங்கங்களையும் தொண்டர்கள் அறிந்து கொள்ள முடிகின்றது.

சிவபெருமானின் திருவிளையாடல்கள் இம்மாலையின் இறுதிப்பாடலில் தௌ¤வாக்கப் பெற்றுள்ளன. திருமாலுக்குச் சக்கரம்¢ அருளியமை, குபேரனுக்குச் சங்கநிதி பதும நிதி அளித்தமை, மார்க்கண்டேயனுக்கு வாழ்நாள் அளித்தமை, தேவர்க்காக கொடிய நஞ்சு உண்டமை, மன்மதனை எரித்தமை, தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய யானையை அழித்தமை, அருச்சுணனுக்கு ஆயுதம் வழங்கியமை, இராவணனின் செருக்கை அடக்கியமை, சலந்தரனை அழித்தமை, சண்டீசருக்குப் பதம் அளித்தமை, மகனான சீராள தேவனை அரிந்த சிறுத்தொண்டருக்கு அருளியமை, விளக்கைத் தூண்டிய எலிக்கு சக்கரவர்த்தி பதம் தந்தமை, அடி முடி தேட விட்டமை முதலான பல திருவிளையாடல்கள் இப்பாடலில் அட்டவணைப் படுத்தப் பெற்றுள்ளன(பா.40). இவை அனைத்தும் புராணச் செய்திகளும், பெரியபுராணச் செய்திளும்¢ ஆகும். அறிந்த இந்த செய்திகள் தவிர பலரும் அறியாத விளையாடல்களையும் பட்டினத்தடிகள் இப்பனுவலி¢ல் பொதிந்து வைத்துள்ளார். அவ்வகையில் உலகம் அழியும் காலத்தில் உயிர்களைக் காக்கவும், கடல் நிலம் போன்ற பகுதிகளைக் காக்கவும் சேல் மீன் ஆகி உலகை உண்ட திருவிளையாடல் புதிய ஒன்றாகும்.

சிவன் இனிது அமரும் இடம் தில்லையம்பதியாகும். இங்கு அவன் நடனக் கோலத்தில் விளங்குகிறான். தில்லையில் உள்ள இறைவன் ‘பெரியதிற் பெரியை என்றும் அன்றே, சிறியதிற் சிறியை என்றும் அன்றே’ என்னும் அளவில் என்றும் இருப்பவன். ‘‘செய்யவாய், மையமர் கண்டம், நெற்றியில் ஒற்றை நாட்டம், எடுத்த பாதம், தடுத்த செங்கை, புள்ளி ஆடை, நாடகம் மன்றுள் ஆடுபவன் ’’(பா.12) என்று தில்லை இறைவன் இவரால் சிறப்பிக்கப் படுகிறான்.

இவ்வாறு இறைவர் பெருமை ஒரு கருப் பொருளாக நின்று இப்பனுவல் சிறக்கிறது.
சிவபெருமானின் ஆடல்
சொல், பொருள் இரண்டின் அளவையும் கடந்து தம்மை மறந்து சிவனை நினைப்பவர் மனத்திலும் தி¢ல்லையிலும் ஆடல் புரியக் கூடியவர் நடராசப் பெருமான்(பா.4). இவரின் நடத்தால் ஏழு உலகமும் உயிர் பெறுகிறது (பா. 7). இவர் அம்பலத்தே நின்று கூத்து உகந்தவர் (பா. 10). ‘‘ மணிவாய் முகிழ்ப்பத் திருமுகம் வேர்ப்ப அம்மன்றுக் கெல்லாம் அணியாய் அருள் நடம் ஆடும் பிரான் இவர் ’’ (பா.26) என்ற பட்டினத்துப் பிள்ளையாரின் குறிப்புரைகள் கொண்டு சிவபெருமானின் ஆடலை அறிந்து அருள் பெறமுடிகிறது.

அகக் கருத்துகள்
சிவபெருமானுடைய தேர் வரும்போதே பெண்களின் கைகளில் இருந்த வளையல்கள் கழறத் தொடங்கிவிடும்( பா. 17). வாடைக்காற்றும் மேகமும் மழையும் கலந்து வருகின்றன. இதன்மூலம் வரும் சிவபெருமான் மீது கொண்ட காதல் வருத்தத்தைத் தலைவி எவ்வாறு தாங்கிக் கொள்ளப் போகிறாள் (பா. 22) ஊர் அலர் தூற்ற, வாடைக் காற்று வருத்த, பசப்பு நோய் வர இவ்வாறு பற்பலத் துன்பங்களைப் பெற்ற என்மகளைத் தேற்ற உன் கொன்றை மாலையைத் தந்தருள்க (பா.31) என்ற வகையில் பல அகக் கருத்துள்ள பாடல்களை இப்பனுவல் பெற்றுள்ளது.

தத்துவக் கருத்துகள்
எளிமையான தத்துவக் கருத்துக்களைப் பாடுவதில் வல்லவர் பட்டினத்துப் பிள்ளையார். இப்பனுவலிலும் பல தத்துவக் கருத்துகளை எளிமையாகச் சொல்லிச் செல்கின்றார்.

‘‘ பேசு வாழி பேசு வாழி
கண்டன மறையும் உண்டன மலமாம்
பூசின மாசாம் புணர்ந்தன பிரியும்
நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும்
பிறந்தன இறக்கும் பெரியன சிறக்கும்
ஒன்றொன்று ஒருவழி நில்லா அன்றியும்’’(பா. 28)
என்று உலகின் இயல்பை எளிய தத்துவங்களால் எடுத்துரைக்கிறார் பட்டினத்தடிகள்.
உயிரின் இயல்பைத் தத்துவப் பின்னணியோடு பின்வரும் பாடலடிகள் உணர்த்துகின்றன.
‘‘குடும்பப் பாசம் நெடுந்தொடர்ப் பூட்டி
ஐவர் ஐந்திடத்து ஈர்ப்ப நொய்தில்
பிறந்தாங்கு இறந்தும் இறந்தாங்கு பிறந்தும்
கணத்திடைத் தோன்றிக் கணத்திடைக் கரக்கும்
கொப்புட் செய்கை ஒப்பின் மின்போல்
உலப்பில் யோனிக் கலக்கத்து மயங்கியும்’’ (பா. 20)
என்ற இவ்வடிகளில் வரும் ஐந்து புலனாசையினால் அழியும் பிறப்பும் மீளவும் இறப்பும் மீளவும் பிறப்பும் என்பதான சுழற்சியில் சிக்கும் மனித வாழ்வைப் பட்டினத்தடிகள் வெறுக்கின்றார்.
‘‘மக்கள் யாக்கைக்கு
நினைப்பினும் கடிதே இளமை நீக்கம்
அதனினுங் கடிதே மூப்பின் தொடர்ச்சி
அதனினும் கடிதே கதுமென மரணம்
வானாள் பருகி உடம்பை வறிதாக்கி
நாணாள் பயின்ற நல்காகக் கூற்றம்
இனைண தன்மையது இதுவே’’
என யமனின் இயல்பைக் கூறுகிறார் பட்டினத்தடிகள்.

சுருங்கச் சொல்லி தத்துவங்களை விளங்க வைக்கும் சீர்மை இவரின் இலக்கியங்களில் காணத்தகும் சிறப்பாகும். அவ்வழியில் கோயில் நான்மணிமாலையும் இனிய தத்துவக் கருத்துகளை வழங்கிச் சிறக்கின்றது.

muppalam2003@yahoo.co.in

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்