வடகொரியாவின் அணுஆயுதச் சோதனையும் கிழக்காசியாவின் ஆயுதப் பரவலும்.

This entry is part [part not set] of 35 in the series 20061012_Issue

திருவடியான்


இன்று காலை (அக்டோபர் 9, 2006) வடகொரியா தனது முதலாவது அணுஆயுதச் சோதனையை வெற்றிகரமாக நடத்தி கிழக்காசியாவின் ஆயுதப் பந்தயத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது. இது வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வாகும். இந்த அணுகுண்டு வெடிப்பு ஏற்கனவே பலமுறை மாற்றியெழுதியாகிவிட்ட அமெரிக்காவின் கிழக்காசியக் கொள்கையை மறுபடியும் மாற்றியெழுதும் வல்லமையைக் கொண்டதாகும். இப்பகுதியில் உள்ள ஜாம்பவான்களான ஜப்பானும் தென்கொரியாவும் இனி அணுஆயுதங்களை வாங்கப்போகிறார்களா அல்லது செய்யப்போகிறார்களா என்று இனிமேல்தான் பார்க்க வேண்டும். வடகொரியாவிற்கு உள்ள தைரியத்தைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். ஏன் என்பதை இக் கட்டுரையின் கடைசியில் சொல்கிறேன்.

சற்றே பின்னோக்கிப் பார்க்கலாம் வடகொரியாவை,, ஒரு 56 வருடங்களுக்குப் பின்னால்.

இரண்டாம் உலகப்போர் முடிந்துவிட்டிருந்த சூழலில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் பனிப்போர் தொடங்கி உக்கிரமாக வியூகங்கள் வகுத்துக் கொண்டிருந்த காலம் அது. போரில் தோற்கடிக்கப்படும் முன் ஜப்பான் கொரியா முழுமையும் தனது காலனியாக்கி வைத்திருந்தது. தோற்கடித்த அமெரிக்கா சீனாவின் மேல் கண்வைத்துக் கொண்டே கொரியாவைத் தான் அடைந்த பரிசாக நினைத்தது. கண்மூடித்திறப்பதற்குள், சத்தமில்லாமல் ரஷ்யா கொரியாவின் வடபகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. விழித்துப் பார்த்த அமெரிக்கா ரஷ்யாவுடன் சண்டையிடத் தயாரில்லை, எனவே சமரசம் உண்டாயிற்று. வடபக்கம் கொரியா கம்யூனிஸ நாடாகவும் தென் கொரியா சோஷலிஸ நாடாகவும் 38 நிலவரைக் கோடு (38th Parallel) என்ற எல்லைக்கோட்டைக் கொண்டு இரண்டாகப் பிரித்துக் கொண்டார்கள். இவ்வாறாக 1942ல் வடகொரியாவும் தென் கொரியாவும் உண்டாயிற்று. ஆனால் இரண்டு பக்கமும் ஒரே குடும்பத்தின் சொந்தக்காரர்கள் இருந்தனர். பிரிவினை பிரிவினை தான், யாரும் யாரையும் பார்க்க முடியவில்லை. மக்கள் ஒன்றுபட்ட கொரியா உருவாகும் என்ற கனவில் இருக்க, ஆட்சியாளர்கள் எல்லைக் கோடுகளில் படையைக் குவிப்பதாக இருந்தனர். அவ்வப்போது ஊடுருவி ஆயிரக்கணக்கில் மறுபக்கத்தினரைக் கைது செய்து போர்க்கைதிகளாக்கி அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தனர் இருதரப்பாரும்.

1949ல் ரஷ்யாவும் அமெரிக்காவும் தத்தம் நிலைகளை விட்டு பின்வாங்கின. ரஷ்யா உள்ளுர் மக்களைக் கொண்ட கம்யூனிச சித்தாந்தத்துடனான ஒரு பலமான இராணுவ அமைப்பை வடகொரியாவில் விட்டுச் சென்றிருந்தது. தென்கொரியாவிலோ அமெரிக்கா ஒரு ஜனநாயக அமைப்பை விட்டுச் சென்றிருந்தது. இதற்கிடையில் 1950ல் ஒரு கொரியப் போர் நடந்தது. வடகொரியா பெருமளவு தென் கொரியாவைக் கைப்பற்றிக் கொள்ள, அமெரிக்காவும் உதவிக்குப் போனது. தன்னால் சமாளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்ட உடன் அமெரிக்கா வழக்கம்போல ஐநா பாதுகாப்புச் சபையை உதவிக்குக் கூப்பிட்டது. ஒரு கூட்டமாக 14 நாடுகள் படைகளைக் கொண்டு வந்தன. போர் நடந்தது. ஒரு கட்டத்தில் உச்சத்தில் இருந்த வடகொரியாவை கூட்டணிப் படைகள் துரத்திச் சென்றன. சீனாவின் எல்லை வரைக்கும் போவதான திட்டத்தை அப்போதைய அமெரிக்க ஜெனரல் மெக்ஆர்தர் முன் வைக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ருமன் சீனாவைத் தேவையில்லாமல் சீண்டுகிறோமோ என்று தயங்கி அனுமதி அளிக்க மறுத்தார். கோபத்துடனிருந்த மெக்ஆர்தர் ஜனாதிபதி ஆணைக்கு எதிராக கருத்துச் சொல்ல அவர் பதவி உடனடியாகப் பறிக்கப்பட்டது.

இதற்கிடையில் சீனா தனது படையினரை எல்லையில் இரகசியமாக குவித்து வைக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் எந்த எதிர்ப்புமில்லாமல் முன்னேறிச் சென்ற அமெரிக்க இராணுவம் திடீரென்று 1,80,000, பேர் கொண்ட சீனப் படையால் சுற்றி வளைக்கப்பட, போட்டது போட்டபடி பல ஆயிரம் உயிர்களை இழந்து அதே 38-நிலவரைக்கோடு வரை அமெரிக்க இராணுவம் திரும்பி ஓடியது. அன்றிலிருந்து இன்று வரை 38-நிலவரைக்கோடே இரண்டு கொரியாக்களுக்கும் எல்லையாகிப் போனது.

இதன்பின் வந்த பனிப்போர்க் காலங்களில் வடகொரியா சீனா, இரஷ்யாவின் செல்லப்பிள்ளையாகவும், தென்கொரியா அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்கத்திய நாடுகளின் செல்லப்பிள்ளையாகவும் வளர்ந்து வந்தன.

பனிப்போர்க்காலம் மறைந்தது.

பல உதவிகள் வடகொரியாவிற்குக் கிடைக்காமல் போயின. ஒரு பக்கம் இராணுவ அச்சுறுத்தல் மறுபக்கம் உள்நாட்டுப் பொருளாதாரச் சூழலை மேம்படுத்த வேண்டிய கட்டாயம். வடகொரியா சமாளித்துத்தான் வந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். சில சமயங்களில் ஆச்சரியமாக தென்கொரியா உணவுப் பொருள்கள் அனுப்பியெல்லாம் உதவி செய்திருக்கிறது. எதிரி நாடு ஆனால் மக்கள் உணவின்றி கஷ்டப்பட்டால் கொடுத்து உதவுவது. சகோதரர்களுக்குள் ஏற்படுகின்ற என்ன என்று புரியாத ஒருவகையான பகை அது.

சரி,. அணு ஆயுதம் தயாரித்த கதையைப் பற்றிப் பார்ப்போமா..

வடகொரியாவிற்கு 1970-80களில் நிறைய நாடுகளுக்கு இருந்த ஆசையைப் போல அணுஆயுதம் தயாரித்தால் தன்னைத் தாக்க யாரும் பயப்படுவார்கள் என்ற எண்ணம் இதற்கு வித்திட்டது. ரஷ்யா இருக்கும் வரை அரசல் புரசலாக தனது ஆதரவு நாடுகளுக்கு அது உதவிக் கொண்டிருந்தது. பிற்பாடு இந்தியா பட்ட சிரமம் போலவே வடகொரியாவிற்கும் அணுவிஞ்ஞானத்தை மேம்படுத்த வெளியிலிருந்து எந்த உதவியும் கிடைக்காமல் போனது. சில குறுக்கு வழிகளெல்லாம் கண்டு பிடித்து இந்தத் தொழில்நுட்பத்தை வளர்க்கலானார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் உண்மையில் இந்த விஷயத்தில் எந்த அளவு வளர்ந்திருக்கிறார்கள் என்று யாராலும் கணிக்க முடியாத அளவிற்கு இரும்புத்திரை கொண்ட நாடாக இருந்தார்கள். அமெரிக்கா எப்படியோ மோப்பம் பிடித்து பொருளாதாரத்தடை அந்தத்தடை இந்தத்தடை என்று விதித்து அணுஆயுத உற்பத்தி என்ற நிலையை அடைவதைத் தடுக்க எல்லா வகையிலும் முயற்சி செய்தது. ஆயினும் இந்த முயற்சி தங்கு தடையில்லாமல் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது. இதில் முக்கிய உதவியாளர் யார் தெரியுமா.. தமது அணுவிஞ்ஞானத் தொழில் நுட்பத்தைத்தான் இந்தியா காப்பியடித்துள்ளது என்ற முஷ்ரப்பிற்கு தப்பான விளக்கம் கொடுத்து வைத்திருக்கும் கறிவாளி திருவாளர் ஏ.க்யூ.கான் தான். அமெரிக்காவின் உளவு நிறுவனங்களின் கண்களில் மண்தூவிவிட்டு இதைச் செய்திருக்கிறார். இதற்காக பாகிஸ்தான் சீனாவிடமிருந்து என்ன கைமாறு பெற்றதோ, யாமறியேன் பராபரமே.

1991-ல் அமெரிக்கா இராக்கை வல்லுண்டியாகப் போய்த் தாக்கியபோது ஒரு இந்திய ஜெனரல் சொன்னார். இராக்கிடம் அணுகுண்டு இருந்திருந்தால் இந்தப் போரே வந்திருக்காது என்று. அது எத்தனை தூரம் சத்தியமான வார்த்தை என்பது, வெளிநாட்டு உளவுத்துறைகளுக்குத் தெரியாமல் அப்துல் கலாம் தலைமையிலான ஒரு குழு போய் அணுகுண்டு வெடித்தபின் தானே நமக்குத் தெரிந்தது. அதே காரணம்தான் தற்போது வடகொரியா அணுகுண்டு வெடித்ததும், ஈரான் தான் தயாரிக்கப் போவதாக மிரட்டுவதும் அதற்காகத்தான்.

எல்லோருக்கும் ஒரு ஆச்சரியம், அதென்ன ஈராக்கை மட்டும் அணுகுண்டு வைத்திருக்கிறது என்று போய்த் தாக்கிய அமெரிக்கா, கண்கூடான ஆதாரங்கள் இருந்தும் வடகொரியாவைத் தாக்கவில்லையே என்பது தான். மிகச்சாதாரண விஷயம். வடகொரியா அணுகுண்டு வைத்திருக்கிறது என்று அமெரிக்கா நம்பியது. ஆனால் ஈராக்கிடம் அணுகுண்டு இல்லை என்று உறுதிபடுத்திக் கொண்டுதான் அந்த நாட்டின்மீதே போர்தொடுத்தது.

வடகொரியாவிற்கு எப்போதும் ஒரு விபரீத ஆசை. இராணுவம் இல்லாத நாடான ஜப்பானை மிரட்டும் வகையில் அதன் கடல் பகுதியில் பலமுறை ஏவுகணைச் சோதனை செய்திருக்கிறது. வடகொரியாவால் தென்கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் தான் அச்சுறுத்தல். ஏற்கனவே தாய்வான் பிரச்சினை பண்ணிக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் வடகொரியாவுடன் வெளித்தெரியாத உறவு மற்றும் உதவிகள் செய்து சீனா அணுக்கமாக இருந்து வருகிறது.

வல்லவன் வகுத்ததுதான் வாய்க்கால், அமெரிக்கா எடுத்த அணுகுண்டு பூச்சாண்டியை எல்லா நாடுகளும் எடுக்கின்றன. பிற்காலத்தில், போரெல்லாம் வந்தால், ஒரு நாளுக்கு மேல் நடக்காது. ஏன் என்றால் எதையும் பார்ப்பதற்கு யாரும் உயிரோடு இருந்தால்தானே.

கிழக்காசியப் பிராந்தியத்தில் வலுமிக்க அமெரிக்க ஆதரவு நாடுகளாக நினைத்துக் கொண்டிருக்கிற ஜப்பான், தென்கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தனது மேலாண்மையை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பதை தலையைப் பிய்த்துக் கொண்டு யோசனை செய்து கொண்டிருக்கின்றன. இது தற்போது ஒரு உடனடியான ஆயுதப் பந்தயத்திற்கு வழிவகுக்கும். ஆக, அமெரிக்க இராணுவ தளவாட நிறுவனங்கள் தனது நவீன விலையுயர்ந்த ஆயுதங்களை செழிப்பாக இருக்கும் கிழக்காசியச் சந்தையில் சந்தைப்படுத்த வழி பிறந்தாயிற்று.

அமெரிக்கா வழக்கம்போல ஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் எதுவும் போடும் முன்பே வடகொரியா அணுகுண்டை வெடித்துவிட யார் யோசனை கூறியிருப்பார்கள் என்று ஊகித்துக் கொள்ளுங்கள். அணுகுண்டு வெடித்தால் போயிற்று அந்த நாட்டை அப்புறம் தாவா செய்து தான் அணுஆயுதப்பரவல் சட்டத்தில் கையெழுத்திடச் செய்யமுடியும். மிரட்டும் வேலையெல்லாம் அமெரிக்கா செய்யாது, லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் ஒரிரு வினாடிகளில் செத்துப் போனதை வீடியோ எடுத்துப் பார்த்து ரசித்தவர்களல்லவா.. அதன் வீரியம் என்ன, விளைவு என்று தெரியாமலா இருக்கும்.

ஆக, இன்றையச் சூழ்நிலையில் அமெரிக்கா என்ற சண்டைக்காரனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் அணுகுண்டு வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு உத்தியாகப் போய் விட்டது.

திருவடியான் – thiruvadiyan@gmail.com

Series Navigation

திருவடியான்

திருவடியான்