லாஜ்வந்தி

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

ராகவன் தம்பி


பெரும் பாதகமான படுகொலைகளுக்குப் பின் மனிதர்கள் தங்கள் உடல்களிலிருந்து ரத்தக் கறைகளைக் கழுவிய பின் பிரிவினையால் கிழித்துப் போடப்பட்ட இதயங்களின் மீது கவனத்தைத் திருப்பினார்கள். ஒவ்வொரு தெருவிலும் சிறிய சந்து பொந்திலும் கூட மறுவாழ்வுக் கமிட்டியை அவர்கள் அமைத்தார்கள். துவக்கத்தில் மிகவும் உற்சாகத்துடன் வேலைகள் செய்தார்கள். தொழில் முகாம்கள் வழியாக அகதிகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார்கள். அகதிகளை பண்ணை நிலங்களிலும் வீடுகளிலும் வேலைக்கு அமர்த்திக் கொண்டார்கள். ஆனால் அபகரிக்கப்பட்டு, சீரழிக்கப்பட்டு பின்னர் தாய்நாட்டுக்கு மீட்டு வரப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணி இன்னும் மீதமிருந்தது. இதில் மட்டும் அவர்கள் பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது. மறுவாழ்வு கமிட்டியின் ஆதரவாளர்கள் “”உங்கள் இதயங்களில் அவர்களை மீண்டும் குடியேற்றுங்கள்” என்ற கோஷத்தை எழுப்பினார்கள். ஆனால் நாராயண் பாவா ஆலய வளாகத்தின் அருகே வசித்து வந்தவர்களால் இந்தக் கோஷம் கடுமையாக எதிர்க்கப்பட்டது. ஷக்கூர் முல்லா (தெரு) வாசிகளால் இந்த பிரச்சாரம் துவங்கப்பட்டது. அவர்கள் “இதயங்களின் மறுவாழ்வு கமிட்டி’ யை துவங்கினார்கள். உள்ளுர் வழக்கறிஞர் ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஆனால் அதைவிட முக்கியத்துவம் வாய்ந்ததான செயலர் பதவிக்கு குமாஸ்தா சுந்தர்லால் தேர்ந்தெடுக்கப்பட்டான். அவன் தன் எதிராளியை விட பதினொரு வாக்குகள் அதிகமாகப் பெற்றிருந்தான். பெட்டிஷன்கள் எழுதும் ஒரு கிழவன் மற்றும் அந்தப் பகுதியின் மதிப்புக்குரிய பல குடிமக்கள் அனைவரின் ஒருமித்த கருத்து என்னவென்றால் இந்தப் பதவியில் சுந்தர் லால் தவிர வேறு யாராலும் அவ்வளவு முனைப்புடன் செயல்பட இயலாது. ஏனென்றால், கலவரத்தின் போது கடத்தப்பட்டு, அதுவரை மீட்கப்படாத பல பெண்களில் ஒருத்தி சுந்தர் லால் மனைவி லாஜ்வந்தி.

இதயங்களின் மறுவாழ்வு கமிட்டியினர் ஒவ்வொரு விடிகாலையிலும் தெருக்களில் ஊர்வலம் போனார்கள். செல்லும் வழியில் உரத்த குரல்களில் பாடிக்கொண்டே சென்றார்கள். ரஸôலுவும், நேகி ராமும்,
மனித விரல்கள்
தீண்டினாலே
வாடிப் போகும்
லாஜ்வந்தி இலைகள்…

என்ற வரிகளைப் பாடும்போது சுந்தர் லால் அமைதியாகிவிடுவான். பாடுவதை நிறுத்தி விடுவான். திக்பிரமை பிடித்தவன் போல நடக்கத் துவங்குவான். “”கடவுளே! இந்த லாஜ்வந்தி எங்குதான் போய்த் தொலைந்தாள்? என்னைப் பற்றி எப்போதாவது நினைத்துக் கொள்கிறாளா? எப்போதாவது மீண்டும் திரும்பி வருவாளா?… செங்கல் புதைக்கப்பட்ட அந்தச் சாலையின் சமமான தளத்தில் அவன் கால்கள் இலக்கின்றித் தடுமாறிச் செல்லும்.
லாஜ்வந்தியை மீண்டும் கண்டுபிடிக்கும் அல்லது என்றாவது பார்க்கப்போகும் நம்பிக்கையை முற்றாகத் துறந்திருந்தான் சுந்தர்லால். தன்னுடைய சொந்த இழப்பை பொது இழப்பின் அங்கமாக மாற்றியிருந்தான். சொந்தச் சோகங்களை, பொதுச் சேவைகளில் ஆழ்ந்து மூழ்கடித்தான். இருந்தாலும் அந்த கோஷ்டி கானத்தில் சேருவதற்காகத் தன் குரலை உயர்த்தும் போதெல்லாம் “”இந்த மனித மனம்தான் எத்தனை எளிதில் உடையக் கூடியதாக இருக்கிறது? விரலை அருகில் எடுத்துச் சென்றாலே சுருங்கிப்போகிறதே அந்த லாஜ்வந்தியைப் போல…” என்கிற நினைப்பை அவன் தவிர்க்க இயலாமல் தவித்தான்.
அவன் தன்னுடைய லாஜ்வந்தியிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டு இருந்திருக்கிறான். அவள் செய்த எல்லாக் காரியங்களிலும் அவன் எரிச்சலடைந்திருக்கிறான். அவளது எல்லாக் காரியங்களிலும் எரிச்சல் அடைய தன்னை அவன் அனுமதித்திருந்தான். அவள் எழுவதிலும் உட்காருவதிலும் கூட. அவள் சமைப்பதில், தனக்குப் பரிமாறுவதில், இப்படி எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு காரணம் வைத்துக் குற்றம் கண்டுபிடித்து அவளை அடித்து வெளுத்திருக்கிறான்.
மிகவும் அப்பாவியான அவனுடைய லஜ்ஜோ சவுக்கு மரத்தைப் போல ஒடிசலானவள். திறந்த வெளி மற்றும் சூரிய வெளிச்சம் அவள் தோலை பழுப்படைய வைத்து ஒரு மிருகத்துக்கு இருக்கும் மினுமினுப்பைத் தந்திருந்தது. தன்னுடைய கிராமத்தின் சந்துகளில் இலைகளில் படிந்திருக்கும் பனித்துளிகளில் காணும் மினுமினுப்புடன் வளைய ஓடியிருக்கிறாள். அவளுடைய கெச்சலான தேகத்தில் வலுவும் உடல்கட்டும் ததும்பியிருந்தது. அவளை முதன்முதலாகக் காண நேர்ந்தபோது சுந்தர்லால் சற்று மிரண்டுதான் போனான். ஆனால் அவனுடைய கடுமையான ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் அவள் மிகவும் சரளமாக எடுத்துக் கொண்டபோது அவளை அடிப்பதையும் உதைப்பதையும் இன்னும் சற்று அதிகரித்தான். மனித மனத்தின் சகிப்புத் தன்மையின் எல்லைக்கோட்டினை அறியாதவனாகவும் உணராதவனாகவும் அவன் இருந்தான். லாஜ்வந்தியின் லேசான எதிர்வினைகளுக்கு ஒன்றும் பயனில்லாமல் போயின. மிகவும் வன்மையாக அவன் அடித்து உதைத்தபின்னர் அவன் மெல்ல புன்னகைத்தால் போதும், அவள் பல்லை இளித்துக் கொண்டு, “”இனிமேல் அடித்தால் நான் உங்களோடு எப்போதும் பேசமாட்டேன்” என்று செல்லமாக சிணுங்கிக் கொண்டே அந்தப் புறமாக நடந்து விடுவாள்.
அடித்து, உதைத்து ஓய்ந்ததுமே லஜ்ஜோ எல்லாவற்றையும் மறந்து விடுவாள். எல்லா ஆண்களும் தங்கள் மனைவிமார்களை அடிக்கிறார்கள். அவர்கள் அப்படி செய்யாமல் இஷ்டத்துக்கு விட்டு விட்டால் இந்த பெண்களே சொல்வார்கள் “”என்ன மனிதன் இவன்? இந்தக் கழிசைடைப் பெண்ணை சமாளிக்க முடியாதவனாக இருக்கிறானே” என்று.
ஆண்கள் தங்கள் மனைவியரை அடிப்பதைப் பற்றி அவர்கள் பாடல்களை இட்டுக் கட்டினார்கள். லஜ்ஜோவே, ஏறக்குறைய இந்த அர்த்தம் வரும்படி பாடலை இட்டுக் கட்டினாள் þ
நான் பட்டணத்துப் பையனைக்
கட்ட மாட்டேன் þ
பட்டணத்துப் பையன்
பூட் அணிந்து கொள்வான்
எனக்கு இருப்பதோ
இப்படி சின்னஞ் சிறிதான
பின்புறம்
இருந்தாலும் நகரத்திலிருந்து வந்த ஒரு பையனை முதன்முறையாகக் கண்டதுமே காதலில் விழுந்தாள் லாஜ்வந்தி. அவன்தான் சுந்தர்லால். லாஜ்வந்தியின் சகோதரி திருமணத்துக்கு மணப்பையனுடைய வீட்டாரோடு வந்திருந்தான். அவனுடைய பார்வை லாஜ்வந்தியின் மீது விழுந்தது. சுந்தர்லால், மணமகனின் காதில், “”உன்னுடைய மைத்துனி அள்ளி அள்ளி விழுங்கும் கவளம் மாதிரி இருக்கிறாள். மணப்பெண்ணோ காய்ந்த ரொட்டி மாதிரி இருக்கிறாளே! என்று கிசுகிசுத்தான். அவனுடைய கிசுகிசுப்பு லாஜ்வந்தி காதிலும் விழுந்தது. அவனுடைய வார்த்தைகள் அவளுடைய மண்டைக்குள் நுழைந்து கொண்டது. அவனுடைய வார்த்தை அவளுடைய மண்டைக்குள் நுழையும் போது சுந்தர் லால் மிகப்பெரிய பூட்சு அணிந்திருப்பதை கவனிக்கத் தவறியிருந்தாள். தனக்கு மிகச் சிறிய பின்புறம் இருப்பதையும் அப்போது அவள் மறந்து போயிருந்தாள்.
இப்படியான எண்ணங்கள், ஊர்வலத்துடன் சேர்ந்து பாடிக் கொண்டு போன சுந்தர் லாலின் மனதில் ஊசலாடிக் கொண்டு வந்தன. அவன் தனக்குத் தானே உரக்கச் சொல்லிக் கொள்வான் þ “”இன்னும் ஒரு முறை þ ஒரே ஒருமுறை மட்டும் எனக்கு வாய்ப்பு கிடைத்தால், சத்தியமாக அவளை நான் என் இதயத்தில் மறுவாழ்வு அளித்துக் குடியேற்றி வைப்பேன். எல்லோருக்கும் ஒரு உதாரணமாக நான் திகழ்வேன். எல்லோரிடமும் உரக்க சொல்வேன், இந்தப் பேதைப் பெண்களைப் பழிக்காதீர்கள். அவர்கள் அந்த ஒழுக்கக்கேடான சண்டாளர்களால் பலிகடாவாக ஆக்கபட்டவர்கள். இந்தப் பேதைப் பெண்களை ஏற்றுக்கொள்ளாத ஒரு சமூகம் மீளவே வாய்ப்பில்லாது அழுகிப்போகும். அந்த சமூகத்தை பூண்டோடு அழித்தாலும் தவறில்லை” என்று. அபகரிக்கப்பட்டு மீட்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு அளித்து அவர்களுக்கு ஒரு மனைவி, தாய், மகள், சகோதரி என்னும் ஸ்தானத்தை அவர்களின் வீடுகளில் மீட்டுத்தர அவன் போரடினான். அவர்களுடைய அந்தக் கொடுமையான இறந்த காலம் பற்றி அவர்களுக்கு நினைவு படுத்தவோ சொல்லிக் காட்டவோ கூடாது. அவர்கள் என்றும் விரல் சுட்டினாலே சுருங்கிப்போகும் லாஜ்வந்தி செடியைப் போன்றவர்கள் என்றும் அந்த மீட்கப்பட்ட பெண்களின் வீடுகளில் மன்றாடினான்.
இதயங்களின் மறுவாழ்வு பற்றி பிரச்சாரம் செய்ய முல்லா ஷக்கூர் கமிட்டி விடிகாலை வேளையில் ஊர்வலங்களுக்கு ஏற்பாடு செய்தார்கள். விடியலின் முந்திய நேரம் ஆனந்தமயமாக, அமைதியாக, ஆட்களின் சந்தடிகள் இல்லாமலும், போக்குவரத்து சந்தடிகள் இல்லாமலும் இருந்தது. இரவெல்லாம் காவலுக்கு இருந்த தெருநாய்கள் கூட கதகதப்பான தந்தூரி அடுப்புகளின் அருகாமையில் தீவிர உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும். இந்த ஊர்வலத்தின் பாடலால் எழுப்பட்ட தெருவோரத்தில் படுத்திருப்பவர்கள் கூட ஒரு நொடி எழுந்து பார்த்து “”இந்த விடிகாலை கூப்பாடு” என்று முணுமுணுத்து விட்டு மீண்டும் தங்களின் கனவுகளில் ஆழ்ந்து விடுவார்கள்.
சுந்தர்லாலின் சொற் பொழிவை சிலர் சில வேளைகளில் பொறுமையுடன் கேட்பார்கள். சில நேரங்களில் எரிச்சல் அடைந்து விடுவார்கள். பாகிஸ்தானில் இருந்து இங்கு வருவதற்கு எவ்வித சிரமமும் படாத பெண்கள், எல்லாம் நிறைந்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் அதிகமாக முற்றிய காலிþபிளவர்களைப் போல செழிப்பாக இருந்தார்கள். அவர்கள் வீட்டு ஆண்கள் இவைபோன்ற பாடல்களை உதாசீனம் செய்பவர்களாகவும் சில சமயங்களில் முணுமுணுக்கவும் செய்தார்கள். அவர்கள் வீட்டுக் குழந்தைகள் இந்தப் பாடல்கள் தங்களை மீண்டும் விடிகாலையில் உறங்க வைக்கும் ஒரு தாலாட்டுப்போல பாவிக்கத் துவங்கியிருந்தார்கள்.
விடிகாலையில் ஒருவரின் காதில் சேரும் இந்தப் பாடல் அவருடைய தலைக்குள் சுற்றிச் சென்று உள்ளுக்குள் நயவஞ்சகமான ஒரு உள்நோக்கத்தை கற்பிப்பது போன்ற பழக்கத்தை ஏற்படுத்தி யிருந்தது. இந்தப் பாடலின் பொருள் புரியாத ஒருவன் தன்னுடைய வேலைகளுக்கு நடுவே மற்ற பாடலை முணுமுணுப்பது போல இதையும் முணுமுணுப்பதைக் கேட்க முடிந்தது.
மிருதுளா சாராபாய், கடத்தப்பட்ட பெண்களை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் பரிமாற்றம் செய்து கொள்வது குறித்து ஏற்பாடு செய்த போது ஷகூர் முல்லாவை சேர்ந்தவர்கள் அந்தப் பெண்களை மீண்டும் சேர்த்துக் கொள்வது பற்றி தங்களுடைய சம்மதத்தை தெரிவித்தார்கள். அந்தப் பெண்களின் உறவினர்கள் அவர்களை அழைத்து வர கடைத் தெருவுக்குச் சென்றார்கள். சில நேரங்களில் கடத்தப் பட்ட பெண்களும் அவர்கள் வீட்டு ஆண்களும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்க்க நேர்ந்த போது மிகவும் தர்ம சங்கடமான அமைதியைக் கடைப் பிடித்தார்கள். தங்களுடைய வறட்டு கெüரவத்தைக் கைவிட்டு தங்கள் வீட்டுப் பெண்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களின் குடும்ப வாழ்வை மீண்டும் அமைத்துக் கொடுத்தார்கள். ராஸôலு, நேகி ராம் மற்றும் சுந்தர்லால் அந்தக் கூட்டத்துடன் சேர்ந்து அப்படி மறுவாழ்வு அமைத்துக் கொடுப்பவர்களை உற்சாகப்படுத்தினார்கள். அவர்கள் வீடுகளுக்கு முன் சென்று “”மஹிந்தர்சிங் ஜிந்தாபாத், சோஹன்லால் ஜிந்தாபாத்” என்று தொண்டை கிழிய கோஷமிட்டு அவர்களை வாழ்த்தினார்கள். சில மீட்டு வரப்பட்ட பெண்களின் வீட்டுக்காரர்கள் அவர்களை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். “”அபகரிக்கப் பட்டதுமே இந்தப் பெண்கள் அங்கேயே தங்களை அழித்துக் கொண்டிருக்க வேண்டாமோ? விஷம் குடித்தாவது தங்களுடைய மானத்தையும் கற்பையும் இவர்கள் ஏன் காப்பாற்றிக் கொண்டு இருக்கக் கூடாது? கிணற்றுக்குள் விழுந்து ஏன் தற்கொலை செய்து கொண்டு இருக்கக்கூடாது? இந்தப் பெண்கள் எல்லாம் கோழைகள். எது போனாலும் உயிரை மட்டும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவர்கள் என்று தூற்றத் தொடங்கினார்கள்.
நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பெண்கள், தங்களை மாய்த்துக் கொண்டார்கள். இப்படிப் பட்ட அவமானத்தை சகிப்பதற்குப் பதிலாக சாவைத் தேர்ந்தெடுத்தார்கள். இந்தக் கொடுமையான, இரக்கமே இல்லாத உலகத்தில், தங்களின் மனைவிமார்களை அடையாளம் காண மறுக்கும் கல்மனம் கொண்ட கணவர்கள் வாழும் இந்த உலகினை எதிர்கொள்வதற்கு எவ்வளவு தைரியமும் மன உறுதியும் வேண்டும் என்று தங்களை மாய்த்துக் கொண்ட பெண்களுக்கு என்ன தெரியும்? இந்தப் பெண்களில் சிலர் தங்கள் பெயருக்குப் பின்னால் உள்ள மங்களகரமான அர்த்தத்தை மிகவும் சோகமாக நினைத்துப் பார்ப்பார்கள்.
மிருதுளா சாராபாய், இந்தியர்களால் கடத்தப்பட்ட முஸ்லிம் பெண்களைப் பரிமாற்றம் செய்ய பாகிஸ்தானில் இருந்து ஒரு லாரி நிறைய ஹிந்துப் பெண்களை அழைத்து வந்திருந்தாள். அவர்களில் லாஜ்வந்தி இல்லை. அந்த லாரியிலிருந்து கடைசி ஹிந்துப் பெண் இறங்கும் வரை பொறுமையாகவும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தர்லால். பிறகு மிகவும் பொறுமையாக, கமிட்டியின் மற்ற செயல் பாடுகளில் தன்னை தீவிரத்துடன் மூழ்கடித்துக் கொண்டான். கமிட்டியின் வேலை இரட்டிப்பானது. அவர்கள் காலையிலும் மாலையிலும் ஊர்வலங்கள் ஏற்பாடு செய்து பாடிக் கொண்டு ஊருக்குள் சென்றார்கள். கூட்டங்களை ஏற்பாடு செய்தார்கள். கிழட்டு வக்கீல் கல்கா பிரசாத், இந்தக் கூட்டங்களில் தன்னுடைய கரகரத்த ஆஸ்துமாக் குரலில் மூச்சிறைக்கப் பேசினார். (ராஸôலு பக்கத்தில் கோழை துப்ப எச்சில் துப்பானை தயாராக வைத்திருந்தான்). கல்கா பிரசாத் மைக்கில் பேசும்போது ஒலி பெருக்கியில் பல விசித்திரமான சப்தங்கள் கிளம்பின.
நேகிராமும் சில வார்த்தைகள் பேசினான். ஆனால் அவன் புராணங்களில் இருந்தும் வேதசாஸ்திரங்களில் இருந்தும் காட்டிப் பேசிய மேற்கோள்கள் அவன் சொல்ல நினைத்த கருத்துக்களுக்கு எதிராகவே இருந்தது போல அமைந்தது. தங்கள் போராட்டத்துக்கு எதிராக ஏதேனும் அலை எழும்போது பாபு சுந்தர்லால் எழுந்து தன்னுடைய கருத்துக்களை வேரூன்ற முயற்சித்தான். அவனால் ஓரிரு வார்த்தைகளைக் கூட முழுதுமாக முடிக்க இயலவில்லை. அவனுடைய தொண்டை காய்ந்து போனது. கண்களிலிருந்து நீர் அருவியாகக் கொட்ட ஆரம்பித்தது. அவனுடைய மனது வார்த்தைகளைத் தேடி அலைந்து எதுவும் முடியாமல் அமைதியாகத் தரையில் சரிந்து உட்கார்ந்தான். பார்வையாளர்கள் இடையே ஒரு தர்மசங்கடமான அமைதி நிலவியது. ஆனால் இரண்டே வார்த்தைகள் சொன்னாலும் வலித்த மனதின் அடியாழத்தில் இருந்து வந்ததால் சுந்தர் லாலின் பேச்சு, எல்லாவிதமான புத்திசாலித்தனத்துடனும் வெளிவந்த வக்கீல் கல்கா பிரசாத் பேசியதை விட ஒரு ஆழமான பாதிப்பை உண்டாக்கியது. ஆண்கள் சில சொட்டுக் கண்ணீரை உதிர்த்து இதயங்களை லேசாக்கிக் கொண்டார்கள். தங்களுடைய காலியான மண்டைகளில் எவ்வித சிந்தனையும், யோசனையும் இன்றி அவர்கள் வீடுகளுக்குத் திரும்பினார்கள்.
ஒரு நாள் இதயங்களின் மறுவாழ்வு கமிட்டி பிற்பகலில் கொஞ்சம் சீக்கிரமாகவே தங்கள் ஊர்வலத்தைத் துவங்கினார்கள். மிகவும் ஆச்சாரமான எதிர் வினைகளை உள்ளடக்கிய கோட்டை என்று சொல்லப்படும் கோவில் வளாகத்தின் அருகில் அவர்கள் அத்துமீறி கடந்து சென்றார்கள். அரசமரத்தின் கீழ் கட்டப்பட்ட சிமெண்ட் பெஞ்சில் சில ஆத்திகர்கள் உட்கார்ந்து ராமாயண பிரவசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எதிர்பாராத ஒரு நிகழ்வாக அன்று நாராயண் பாவா விவரித்துக் கொண்டிருந்த இடம் ஒரு வண்ணான் தவறிழைத்த தன் மனைவியிடம் “”இன்னொருவனுடன் பல வருடங்கள் கழித்த மனைவியை ஏற்றுக் கொள்ள நான் ஒன்றும் ஸ்ரீராமச்சந்திரன் இல்லை” என்று சொல்வதைக் கேட்க நேர்ந்த ராமச்சந்திரர் தன்னுடைய மனைவியை குழந்தையோடு அரண்மைனையை விட்டு வெளியேறச் சொன்னார்”
“”ஒழுக்கத்தின் உச்சகட்டத்தை சுட்டிக் காட்ட இதை விடச் சிறந்த மேற்கோள் காட்ட முடியுமா?” என்று நாராயண் பாவா பார்வையாளர்களிடம் கேட்டார். ஒரு ஏழை வண்ணானின் வார்த்தைகளுக்குக் கூட மதிப்புத் தந்து சம உரிமைக்கு எடுத்துக் காட்டாக விளங்கியது. “”இதுதான் இந்த மண்ணின் மீது கடவுளின் ஆட்சி என்பது þ ராம ராஜ்ஜியம் என்பது”.
ஊர்வலம் கோயிலின் அருகில் சற்று நின்று பிரவசனத்தைக் கேட்கத் துவங்கியது. கடைசி வார்த்தையைக் கேட்டு சுந்தர்லால், “”இது மாதிரியான ராமராஜ்ஜியம் நமக்குத் தேவையில்லை” என்று கத்தினான். “”யாரது? சும்மா இருக்கணும். அமைதி…” என்று கூட்டத்தில் இருந்து குரல்கள் வந்தன.
சுந்தர்லால் கூட்டத்துக்கு நடுவில் பீறிட்டுக் கிளம்பி, “”நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது….” என்று கூச்சலிட ஆரம்பித்தான்.
மீண்டும் எதிர்ப்பு அலைகள் வலுத்தன. “”அமைதி. நாங்கள் ஒரு வார்த்தை கூடப் பேச விடமாட்டோம்”. யாரோ ஒரு மூலையில் இருந்து கூச்சலிட்டான். “”கொன்று விடுவோம்”.
நாராயண் பாவா மிகவும் மென்மையான குரலில், “”சுந்தர் லால், வேதத்தின் புனிதமான மரபினை நீ புரிந்து கொள்ளவில்லை” என்றார்.
சுந்தர் லால் காட்டமான பதிலுடன் தயாராக இருந்தான். “”ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. ராம ராஜ்ஜியத்தில் வண்ணான் சொன்னதைக் கூடக் கேட்டார்கள். ஆனால் அதே ராமராஜ்ஜியத்தின் ஆதரவாளர்களால் இந்த சுந்தர் லாலின் குரலைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை”.
சுந்தர் லாலை அடிக்கிறேன் என்று மிரட்டியவர்களை இது தலை குனிய வைத்தது.
“”அவன் பேசட்டும்”, ராஸôலுவும் நேகி ராமும் கத்தினார்கள். “”அமைதி. அவன் பேசுவதையும் நாம் கேட்போம்”.
“”சுந்தர் லால் பேசத் துவங்கினான். “”ராமர் நம்முடைய நாயகன். ஒரு வண்ணானின் பேச்சைக் கேட்டான். ஆனால் அவனால் ஒரு மிகப் பெரிய மகாராணியான தன் மனைவி சொல்வதைக் கேட்க முடியவில்லை”.
“”சீதை அவருடைய சொந்த மனைவி. சுந்தர் லால், உனக்கு இந்த மிக முக்கியமான விஷயத்தை கிரகிக்க முடியவில்லை” என்றார் நாராயண் பாவா.
“”பாவாஜி, இந்த உலகில் என்னால் கிரகித்துக் கொள்ள முடியாத எத்தனையோ விஷயங்கள் உள்ளன. ஆனால் உண்மையான ராஜ்யம் எதுவென்றால், அங்கு மனிதன் எந்தத் தவறும் செய்யாது இருப்பான் அல்லது தனக்கு யாரும் எந்தத் தீங்கும் இழைப்பது பொறுக்காது இருப்பான்”
சுந்தர் லாலின் வார்த்தைகள் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தன. அவன் தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தான். “”ராமர் சீதையை வீட்டை விட்டுத் துரத்தினார். ஏன் என்றால் அவள் தன்னை அபகரித்தவனுடன் இருக்க வேண்டி கட்டாயப் படுத்தப் பட்டாள். அவள் நம்முடைய சொந்தத் தாய்மார்கள், சகோதரிகளைப் போல சூழ்ச்சி மற்றும் வன்முறைக்கு இரையானவள் அல்லவா? இது சீதையின் நெறி தவறியதைக் காட்டுகிறதா அல்லது ராவணனின் தீமைச் செயலைக் காட்டுகிறதா? ராவணனுக்குப் பத்து தலைகள் இருந்தன. ஆனால் கழுதைக்கு மிகவும் பெரிதாக ஒரே ஒரு தலை. இன்று நம்முடைய அப்பாவி சீதைகள் தங்களுடைய வீடுகளை விட்டுத் துரத்தப் படுகிறார்கள். சீதா… லாஜ்வந்தி… சுந்தர் லால் உடைந்து மனம் வெதும்பி அழத் துவங்கினான்.
ராஸôலுவும் நேகி ராமும் தங்கள் கைகளில் இருந்த தட்டிகளை உயர்த்திப் பிடித்தார்கள். பள்ளிச் சிறுவர்கள் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். உரத்த குரலில், “”சுந்தர் லால் பாபு வாழ்க!” என்று உரக்கக் கோஷமிட்டார்கள். கூட்டத்திலிருந்து யாரோ கூச்சலிட்டார்கள் þ “”கற்புக்கரசி சீதை வாழ்க”. வேறு யாரோ கத்தினார்கள் “”ஸ்ரீ ராமச்சந்திரா”…
பல குரல்கள் அமைதி என்று கூச்சலிட்டன. பலர் பிரவசனத்தை விட்டு ஊர்வலத்தில் கலந்து கொள்ளத் துவங்கினர். பல மாதங்களாக நடந்த நாராயண் பாவாவின் பிரச்சாரம் ஓரிரு கணங்களில் முறியடிக்கப் பட்டது. வக்கீல் கல்கா பிரசாத், மனு எழுதும் ஹ÷கம் சிங், போன்றவர்கள் தங்களுடைய கைத்தடிகளை மிகவேகமாகத் தட்டிக் கொண்டு ஊர்வலத்தில் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். சுந்தர் லால் கண்ணீரின் ஈரம் காயாது நடந்து கொண்டிருந்தான். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மிகுந்த சுவைநயத்துடன் பாடிக் கொண்டிருந்தார்கள்…
விரல் பட்டால் சுருங்கும்
லாஜ்வந்தியின் இலைகள்…
ஊர்வலத்தில் செல்பவர்களின் பாடல் முல்லா ஷக்கூர் வாசிகளின் காதுகளை தீவிரமாகத் தாக்கியபோது கீழ்வானம் இன்னும் நரைக்க வில்லை. வீட்டு எண் 414ல் இருந்த விதவை ஒருத்தி தன்னுடைய கால்களை நீட்டி கனத்த ஒரு கனவில் மீண்டும் ஆழ்ந்தாள். சுந்தர் லாலின் கிராமத்தை சேர்ந்த லால் சந்த் மூச்சிறைக்க ஓடி வந்தான். தன்னுடைய சால்வையில் இருந்து கைகளை வெளியில் எடுத்து நீட்டி மூச்சிறைத்துக் கொண்டே, “”வாழ்த்துக்கள் சுந்தர் லால்” என்று கத்தினான்.
தன்னுடைய சிலும்பில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பை கிண்டிக் கொண்டே சுந்தர் லால் கேட்டான், “”எதுக்கு லால் சந்த்?”
“”நான் லஜ்ஜோ அண்ணியைப் பார்த்தேன்”
சிலும்பு சுந்தர் லால் கையில் இருந்து தவறியது. புகையிலை தரையெங்கும் சிதறியது. லால் சந்தின் தோளைப் பற்றியவாறு, “”அவளை நீ எங்கே பார்த்தாய்?
“” எல்லையில்… வாகாவில்…”
சுந்தர் லால், பிடியைத் தளர்த்தி லால் சந்தைப் போக விட்டான். “”அது வேறு யாரோ…” வேகமாகச் சொல்லிவிட்டு இடுப்பை ஊன்றித் தரையில் அமர்ந்தான்.
“”இல்லை அண்ணா. அது லஜ்ஜோ அண்ணிதான்.” திரும்பத்திரும்ப உறுதியுடன் சொல்லிக் கொண்டிருந்தான் லால் சந்த். “”அதே லஜ்ஜோதான்”.
“”உன்னால் அவளை அடையாளம் காண முடிந்ததா?” கையில் புகையிலையைத் தேய்த்துக் கொண்டே கேட்டான் சுந்தர் லால். ராஸôலுவின் சிலும்பைக் கையில் எடுத்துக் கொண்டு தொடர்ந்தான் “”சரி. அவளுடைய முக்கியமான அடையாளம் எல்லாம் சொல்லு”…
“”விசித்திரமான ஆளாக இருக்கிறாயே. அவளை என்னால் அடையாளம் காணமுடியாதா? அவள் தன்னுடைய மோவாயில் பச்சை குத்திக் கொண்டிருந்தாள். பிறகு வலக் கன்னத்தில்.. அப்புறம்…
“”ஆமாம்… ஆமாம்… அதே… அதேதான்… வெடித்த சுந்தர் லால் விவரிப்பை முடித்தான், “”மூன்றாவது… நெற்றியில்…
மண்டியிட்டு அமர்ந்தான். எல்லா சந்தேகங்களையும் நீக்கிக் கொள்ள விரும்பினான். லாஜ்வந்தி குழந்தையாக இருந்த போது உடலில் குத்திக் கொண்ட பச்சைகளை நினைவுக்குக் கொண்டு வர முயற்சித்தான். அவை லாஜ்வந்தி இலைகளின் மீது குத்தப்பட்ட பச்சை போல இலை சுருங்கினால் மறைந்து போகும் புள்ளிகளாக இருந்தன. அவனுடைய லாஜ்வந்தி அதைப் போலவேதான் நடந்து கொண்டாள். அவன் அந்தப் பச்சைப் புள்ளிகளைச் சுட்டிக் காட்டியபோதெல்லாம் மிகுந்த சங்கடத்துடன் நத்தை கூட்டுக்குள் சுருக்கிக் கொள்வது போல, ஏறத்தாழ அவள் நிர்வாணத்தை யாரோ அம்பலப்படுத்தியது போல சுருங்கிப் போவாள். ஒரு விநோதமான ஆசையும் பயமும் சுந்தர் லாலை ஆட்டுவிக்க ஆரம்பித்தது. லால் சந்தின் கையை நடுக்கத்துடன் பிடித்துக் கொண்டு கேட்டான், “”லஜ்ஜோ எப்படி எல்லைக்கு வந்தாள்?”
“”இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அபகரிக்கப்பட்ட பெண்களின் பரிமாற்றம் நடந்தது”
“”என்ன நடந்தது?” சுந்தர் லால் திடீரென்று எழுந்து நின்று பொறுமையிழந்து திரும்பத் திரும்பக் கேட்டான். “”சொல்லு. அப்புறம் என்ன நடந்தது?”
ராஸôலு கட்டிலில் இருந்து எழுந்து நின்று “”லஜ்ஜோ அண்ணி நிஜமாகவே திரும்பி விட்டார்களா?” என்று நம்ப முடியாமல் கேட்டான். லால் சந்த் கதையைத் தொடர்ந்தான். “”எல்லையில் பாகிஸ்தானியர்கள் நம்முடைய பெண்கள் பதினாறு பேரைத் திரும்பக் கொண்டு விட்டு அவர்களுடைய பெண்கள் பதினாறு பேரை திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். நம்முடைய பயல்களில் ஒருவன் ஆரம்பித்தான். அவர்கள் திருப்பித் தரும் பெண்கள் எல்லோரும் வயதானவர்கள் அல்லது நடுத்தர வயதைக் கடந்தவர்கள் அல்லது எந்தப் பிரயோசனமும் இல்லாதவர்கள். பெரிய கூட்டமே அங்கு சேர்ந்தது. வாதம் வலுத்துக் கொண்டே வந்தது. சூடான வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தார்கள். ஒரு பாகிஸ்தானி திடீரென்று நம் லஜ்ஜோ அண்ணியை லாரி மீது ஏற்றி நிறுத்தி சடாரென்று அவள் துப்பட்டாவை உருவி வீசி எறிந்தான். இவளை நீங்கள் வயதானவள் என்று சொல்ல முடியுமா? நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் பாகிஸ்தானுக்கு திருப்பிக் கொடுத்த பெண்களில் யாருக்காவது இப்படி ஒரு உடம்பு உண்டா? லஜ்ஜோ அண்ணி கூச்சத்தால் நெளிந்து தன் பச்சை குத்திய அடையாளங்களை மறைத்துக் கொள்ள ஆரம்பித்தாள். வாக்குவாதம் வலுத்தது. இருதரப்பிலும் கூச்சல் அதிகரிக்க ஆரம்பித்தது. இருவரும் தங்கள் “”சரக்குகளை” திரும்ப எடுத்துச் சென்றுவிடுவோம் என்று மிரட்ட ஆரம்பித்தார்கள். நான் உரக்கக் கூச்சலிட்டேன்… லஜ்ஜோ… லஜ்ஜோ அண்ணி….” அங்கு கூச்சலும் குழப்பமுமாக அமளி துவங்கியது. போலீஸ்காரர்கள் எங்களை மிகவும் ஆக்ரோஷமாகத் தாக்கத் துவங்கினார்கள்”
லால் சந்த் தன் முஷ்டியை உயர்த்தி போலீஸ் தடியடியால் வீங்கிப்போன சதைப் பகுதியைக் காண்பித்தான். ராஸôலுவும் நேகி ராமும் அமைதியாக இருந்தார்கள். சுந்தர் லால் வெற்றிடத்தை உற்று நோக்கியவாறு இருந்தான்.
லஜ்ஜோ திரும்பி வந்ததைக் கேட்டதும் வாகா எல்லைக்குக் கிளம்பத் தயாரானான் சுந்தர் லால். அவளை அங்கு சென்று சந்திப்பதா அல்லது வீட்டுக்கு வரும்போது பார்த்துக் கொள்ளலாமா என்றும் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. எங்காவது ஓடிவிட வேண்டும் என்று தோன்றியது. அங்கு கிடந்த எல்லா பேனர்களையும் தட்டிகளையும் சுற்றிப் பரப்பி வைத்து விட்டு அவற்றின் நடுவில் அமர்ந்து “ஓ’ வென்று கதறி அழுதான். நெஞ்சம் கரையும் வண்ணம் அழுதான். ஆனால் மற்ற எல்லோரையும் போலவே, எதுவும் நடக்காதது போல காவல் நிலையம் நோக்கிப் போனான். திடீரென்று லஜ்ஜோ அவன் எதிரில் நிற்பதைப் பார்த்தான். அவள் மிகவும் பயந்திருந்தாள். சூறாவளிக் காற்றில் அல்லாடும் அரச இலையைப் போல அவள் சிதறிப் போயிருந்தாள்.
சுந்தர் லால் நிமிர்ந்து பார்த்தான். அவனுடைய லாஜ்வந்தி முஸ்லீம் பெண்கள் அணியும் துப்பட்டாவை அணிந்திருந்தாள். முஸ்லிம் பெண்ணைப் போல அந்த துப்பட்டாவை தலையைச் சுற்றி அணிந்திருந்தாள். அவள் முன்பிருந்ததை விட சற்று ஆரோக்கியமாக இருந்தது சுந்தர் லாலுக்கு சற்று ஏமாற்றம் அளித்தது. அவளுடைய நிறம் தெளிந்திருந்தது. எடை சற்றுக் கூடியது போல இருந்தது. அவளிடம் எதையும் பேசக்கூடாது என்று உறுதியளித்தது போல அவன் நின்றிருந்தான். ஆனால், அவள் அங்கு மகிழ்ச்சியாக இருந்த பட்சத்தில் இங்கு திரும்பி வந்தது ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை. அவளுடைய விருப்பத்துக்கு எதிராக அவளை பாகிஸ்தான் அரசு திருப்பி அனுப்பி விட்டதா?
காவல் நிலையத்தில் நிறைய ஆண்கள் இருந்தார்கள். சிலர் தங்கள் வீட்டுப் பெண்களை திரும்ப அழைத்துச் செல்ல மறுத்து விட்டார்கள். “”முஸ்லிம்களால் சப்பி எறியப்பட்ட இந்த எச்சில் பழங்களை நாங்கள் திரும்ப எடுத்துக் கொள்ள மாட்டோம்” என்று சொன்னார்கள். சுந்தர் லால் தன் அருவருப்பான உணர்வை ஒருவாறு சமாளித்துக் கொண்டான். தன் உடல் மற்றும் ஆன்மாவை அந்தக் கணத்துக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொண்டான். அங்கு அவனுடன் எப்போதும் கோஷமிட்டு ஊர்வலங்களில் கலந்து கொண்ட ராஸôலு, நேகி ராம், கிழ குமாஸ்தா, வக்கீல் போன்றோர் இப்போதும் தொண்டை கிழிய கோஷம் போட்டுக் கொண்டு வெளியே நிற்கிறார்கள். சொற்பொழிவுகளுக்கும் கோஷங்களுக்கும் இடையில் லஜ்ஜோவும் சுந்தர் லாலும் தங்கள் வீடு திரும்பினார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த காட்சி மீண்டும் அங்கு அரங்கேறியது. தங்களின் நீண்ட வனவாசத்துக்குப்பின் ஸ்ரீராமச்சந்திர பிரபுவும் சீதா பிராட்டியாரும் அயோத்தியா திரும்பினார்கள். சில மக்கள் தீபம் ஏற்றி அவர்களின் வருகையைக் கொண்டாடிக் கொண்டிருந் தார்கள். அதே நேரத்தில் ஒரு அப்பாவி ஜோடிக்கு தாங்கள் இழைத்த பாவத்தினால் இப்படி ஒரு இக்கட்டு நேர்ந்ததே என்னும் குற்ற உணர்வில் வருந்திக் கொண்டிருந்தார்கள்.
சுந்தர் லால் அதே உற்சாகத்துடனும் முனைப்புடனும் இதயங்கள் மறுவாழ்வு கமிட்டியில் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தான். அவன் தான் எடுத்துக் கொண்ட சபதத்தின் ஒவ்வொரு எழுத்தையும் நிறைவேற்றினான். அவனை வெற்று சவடால் சித்தாந்தவாதி என்று தூற்றிக் கொண்டிருந்தவர்கள் கூட அவன் சித்தாந்தத்துக்குத் தங்களை மாற்றிக் கொண்டார்கள். ஆனால் நடந்து கொண்டிருந்த சம்பவத் திருப்பங்களின் மேல் அதிருப்தி கொண்டிருந்தார்கள். லாஜ்வந்தியை ஒதுக்கி வைத்தவர்களில் வீட்டு எண் 414ல் வாழ்ந்து கொண்டிருந்த விதவை ஒருத்தி மட்டுமே அல்ல.
சுந்தர் லால் இந்த மனிதர்கள் மேல் அதிப்தி கொண்டிருந்தான். அவனுடைய இதயத்தின் அரசி இப்போது வீட்டுக்குத் திரும்பி விட்டாள். ஒரு காலத்தில் நிசப்தமாக இருந்த அவனுடைய கோயில் இப்போது சிரிப்பலைகளால் சூழப்பட்டிருக்கிறது. அவன் தன்னுடைய உள்ளத்தின் கர்ப்பக்கிரகத்தில் வாழும் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து விட்டு வாசலில் காவல் காத்தான். காவல்காரனாக வீட்டு வாசலில் தன்னை இருத்திக் கொண்டான். அவன் லஜ்ஜோவை பெயரிட்டு அழைக்கவில்லை. “”தேவி” என்று அழைத்தான். அவனுடைய பாசத்துக்கு அவள் எதிர்வினை ஆற்ற விரும்பினாள். எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டாள். தான் அனுபவித்தவை எல்லாவற்றையும் அவனிடம் கொட்டி, தன்னுடைய கண்ணீரால் பாவங்களைக் கழுவ வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் சுந்தர் லால் அவள் அதைப் பற்றிப் பேச எத்தனிக்கும் போதெல்லாம் தவிர்த்தான். இரவுகளில் அவனுடைய முகத்தையே அவள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள். அப்படி செய்யும் போது அவனிடம் மாட்டிக் கொள்ளும் பட்சத்தில் அதற்கான விளக்கம் எதையும் தர முடியவில்லை அவளால். களைத்துப்போன சுந்தர் லால் மீண்டும் உறங்கி விடுவான்.
அவள் திரும்பிய முதல் நாள் மட்டுமே சுந்தர் லால் லாஜ்வந்தியிடம் அவளுடைய அந்தக் “கருப்பு’ நாட்களைப் பற்றிக் கேட்டான். “”யார் அவன்?” தன்னுடைய பார்வையைத் தாழ்த்திக் கொண்டு அவள் சொன்னாள் “”ஜ÷ம்மா”. பிறகு அவள் சுந்தர் லால் முகத்தை முழுவதுமாகப் பார்த்து அவன் கண்களில் ஊடுருவி பின்னர் எதையோ சொல்ல வேண்டும் என்று எத்தனித்தாள். ஆனால் சுந்தர் லால் விநோதமான பார்வையை அவளிடம் வீசி விட்டு அவளுடைய கூந்தலை அளைய ஆரம்பித்தான். லஜ்ஜோ மீண்டும் தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள். சுந்தர் லால் அவளிடம் கேட்டான், “”அவன் உனக்கு நன்றாக இருந்தானா?
“”ஆமாம்”
“”உன்னை அடிக்க வில்லையா?”
லாஜ்வந்தி பின்புறமாக சாய்ந்து தன் தலையை சுந்தர் லாலின் மார்பின் மீது இருத்திக் கொண்டாள். “”இல்லை… அவன் என்னை திட்டவில்லை. எப்போதும் அடிக்கவில்லை. ஆனால் அவனிடம் நான் பயந்து போயிருந்தேன். நீங்கள் என்னை அடித்தீர்கள். ஆனால் உங்களிடம் எப்போதும் எனக்கு பயம் இல்லை. நீங்கள் மீண்டும் என்னை அடிக்க மாட்டீர்கள் இல்லையா?”
சுந்தர் லாலின் கண்கள் கண்ணீரால் தளும்பின. வருத்தம் மற்றும் அவமானம் வழிந்த குரலில் அவன் தழுதழுத்தான், “”இல்லை, தேவி… உன்னை இனி எப்போதும் அடிக்க மாட்டேன்…”
“”கடவுளே…” லஜ்ஜோ ஒரு கணம் வார்த்தைகளுக்குத் தடுமாறி பின்னர் பலமாக அழத் துவங்கினாள். அவனுக்கு நடந்தவை எல்லாவற்றையும் சொல்ல விரும்பினாள். ஆனால் சுந்தர் லால் தடுத்து விட்டான். “”நாம் நடந்ததை மறப்போம். நீ எந்தப் பாவமும் செய்யவில்லை. உன்னைப் போன்ற நற்குணமுடைய பெண்களுக்கு ஒரு கெüரவமான இடத்தைத தராத இந்த சமூகம் தான் பாவம் செய்தது. இதனால் உனக்கொன்றும் தீங்கு நேராது. சமூகத்துக்குத்தான் தீங்கு நேரும்”
லாஜ்வந்தியின் ரகசியம் அவளுடைய மார்பகங்களுக்கு உள்ளேயே புதைந்து போனது. பிரிவினை துவங்கியபின் தேவதையின் உடலாக மாறிய அவளுடைய உடலின் பளபளப்பை ஒருமுறை பார்த்துக் கொண்டாள். அது இனி அவளுக்குச் சொந்தமில்லை. அவள் மிகவும் ஆனந்தமாக இருந்தாள். சந்தோஷமாக இருந்தாள். ஆனால் அவளுடைய சந்தோஷம் அவநம்பிக்கையும் குருட்டு நம்பிக்கையும் சேர்ந்த கலவையாக இருந்தது.
பல நாட்கள் இப்படிக் கடந்தன. மகிழ்ச்சியின் இடத்தை சந்தேகம் பிடித்துக் கொண்டது. சுந்தர் லால் அவளை மீண்டும் கேவலமாக நடத்த ஆரம்பித்ததனால் அல்ல. ஆனால் அவளை நன்றாகவும் நடத்தியதனால். லஜ்ஜோ அவனை அன்பும் ஆதரவும் மிக்கவனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள். கேரட்டுக்காக சண்டை போட்டு முள்ளங்கி வாங்கி வந்து தன்னுடன் சண்டை போடும் அதே சுந்தர் லாலுக்காக அவள் ஏங்கினாள். இப்போது சண்டைக்கான வாய்ப்பே இல்லை. சுந்தர் லால், அவளை ஏதோ தொட்டால் உடைந்து நொறுங்கிவிடும் கண்ணாடியைக் கையாளுவது போல கையாண்டான். லஜ்ஜோ எப்போதும் தன்னை நிலைக் கண்ணாடியில் வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருப்பாள். வறண்டதொரு நிழல் விழாப் பொட்டல் வெளியில் தனக்குத் தெரிந்த லஜ்ஜோவை அவளால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. அவளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. ஆனால் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. அவளுடைய கண்ணீரைப் பார்ப்பதற்குக் கண்களும், புலம்பலைக் கேட்கக் காதுகளும் சுந்தர் லாலுக்குத் தேவையில்லை.
…ஆனாலும் சுந்தர் லால் தினமும் காலையில் ஊர்வலத்தில் கலந்து கொண்டான். தன்னுடைய களைத்துப் போன உடலை சன்னலுக்கு அருகில் இழுத்துப்போகும் லஜ்ஜோ யாருக்கும் புரியாத வார்த்தைகளில் அமைந்த அந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருப்பாள்…
மனித விரல்
தீண்டினால்
வாடிப் போகும்
லாஜ்வந்தி இலைகள்…


vadakkuvaasal@gmail.com

Series Navigation