லா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

ம.ந.ராமசாமி


1954ம் ஆண்டு முதன்முதலாக லா.ச.ரா. அவர்களை நான் சந்தித்தேன். திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலையை ஒட்டிய ஏதோ ஒரு சந்தில் வீடு எடுத்துக் குடியிருந்தார். இலக்கியத்தில் ஆர்வமுள்ள இரு நண்பர்கள் என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். இரவு மணி எட்டு இருக்கும். நாங்கள் சென்றபோது அவர் உணவு அருந்திக்கொண்டு இருந்தார். காத்திருந்தோம். வீட்டில் இருபத்தைந்து வாட்ஸ், நாற்பது வாட்ஸ் விளக்கு ஒளி. உணவு அருந்தி கைழுவி வந்ததும், மேல்துண்டால் துடைத்துக் கொண்டபடி எங்களை மாடிக்கு அழைத்துச் சென்றார்.

மாடியில் வெளிச்சம் இல்லை. மொட்டைமாடி. சாலை விளக்குகளின் லேசான ஒளியில் முகங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஒரே ஒரு நாற்காலி. அதில் அவர் அமர்ந்தார். நாங்கள் எதிரே தரையில் உட்கார்ந்து கொண்டோம்.

நண்பர்கள் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினர். பெயர், ஊர் என்று விசாரித்தார். எனக்குக் குரல் எழவில்லை. நண்பர்கள் லேசாகச் சிரித்தனர். ‘உங்கள்பேரில் இவருக்கு அப்படி ஒரு மதிப்பு’ என்றார் ஒரு நண்பர்.

1946 என்று ஞாபகம். ‘சக்தி’ மாத இதழில் முதல்முதலாக அவருடைய கதையைப் படித்துப் பரவசம் பெற்று இருந்தேன். கதைத்தலைப்பு கவனத்தில் இல்லை. பிக்ஷாடனர் கோலத்தில் சிவபெருமான் ரிஷி பத்தினிகளிடம் பிக்ஷை எடுத்ததை அடிப்படையாகக் கொண்ட கதை. அதன்பின், அவர் கதை எப்போது வெளியாகும் என்று பத்திரிகை பத்திரிகையாகத் தேடியது உண்டு. பேராசிரியர் மா.ரா.போ. குருசாமி அவர்கள் கோவை இலக்கியக் கூட்டம் ஒன்றில் கூறியது கவனத்தில் இருக்கிறது. ‘லா.ச. ராமாமிர்தம் சிறுகதைகளை நீங்கள் வாசிக்க வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் குட்டி ஈனும் யானை. அதுபோல எப்போதாவதுதான் எழுதுபவர் ராமாமிர்தம்.’ என்றார் பேராசிரியர்.

கலைமகள் மாத இதழில் அவருடைய கதைகள் வெளியாகிக் கொண்டிருந்த காலம். ஏதோ ஒரு கதையில் அந்த இதழின் ஆசிரியரோ உதவியாசிரியரோ கைவைத்ததைக் கண்டு, சினம் கொண்டு பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்று, கி.வா. ஜகன்னாதன் அவர்களுடன் சண்டை போட்டிருக்கிறார். லா.ச.ரா அவர்களே இதை என்னிடம் ஒருசமயம் தெரிவித்தார். அந்தச் சண்டைக்குப் பிறகு கலைமகள் இதழில் அவர் எழுதவில்லை.

அதேசமயம் அமுதசுரபி இதழும் அவர் சிறுகதைகளை வெளியிட்டு வந்தது. பஞ்சபூதக் கதைகள் அமுதசரபி இதழ்களில்தான் வெளிவந்தன.

‘இதழ்கள்’ என்பதான ஒரே தலைப்பில் பல சிறுகதைகள் எழுதினார். ஆனந்த விகடன், கல்கி ஏடுகளிலும் அக்கதைகள் வெளிவந்தன. 1956ம் ஆண்டு சுதேசமித்திரன் தீபாவளி மலரிலும் அந்தத் தலைப்பில் அற்புதமான ஒரு கதை வெளிவந்தது. அந்த தீபாவளி மலரில்தான் க.நா. சுப்ரமணியம் அவர்களும், சி.சு. செல்லப்பா அவர்களும் ‘ஆயிரத்தித் தொள்ளாயிரத்து நாற்பதுக்குப் பிறகு நல்ல நாவல், நல்ல சிறுகதைகள் வெளியாகவில்லை’ என்று கட்டுரைகளை எழுதினர். அக் கட்டுரைகள் அன்றைய எழுத்தாளர்களிடையே பெரும் சர்ச்சையைக் கிளப்பின.

சம்பந்தப்பட்ட அந்த ‘இதழ்கள்’ சிறுகதையைப் பாராட்டி சி.சு. செல்லப்பா அவர்கள் விமரிசனம் எழுதினார். மிக நீண்ட விமரிசனம். சுதேசமித்திரன் வார இதழ் இரு வாரங்களாகக் கட்டுரையை வெளியிட்டது.

1962ம் ஆண்டில்தான் லா.ச.ரா. அவர்களை மீண்டும் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அச்சமயம் அவர் சைதாப்பேட்டையில் குடியமர்ந்திருந்தார். நான் மேற்கு மாம்பலத்தில் இருந்தேன். நடந்து சென்றுவரும் தூரம்தான். ஒரு மாலைநேரத்தில் அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசியபிறகு, கூடவே என்னுடன் வந்தார். அன்று இரவு என்னுடன் உணவு உண்டார்.

‘புத்ர’ என்னும் நாவலை எழுதத் தொடங்கி முடிக்காத நேரம் அது. முதல் கையெழுத்துப் பிரதி நோட்டுப் புத்தகத்தை என்னிடம் கொடுத்து, ‘எப்படி இருக்கு பாருங்க’ என்றார். பார்த்தேன். எனக்கு வெகுவான ஏமாற்றம். நாவலை எழுத வெகுவாக மெனக்கிட்டு இருப்பதாகத் தோன்றியது. கையெழுத்துப் பிரதியைத் திருப்பிக் கொடுத்தபோது சொன்னேன். ‘உங்கள் சிறுகதைகளில் இருக்கும் நேர்த்தி இந்த நாவலில் இல்லை’ என்றேன்.

‘புத்ர’ நாவலுக்கு முன்பாக ஒரு நாவல் எழுத முயன்றிருக்கிறார். முயன்றிருக்கிறார் என்று ஏன் சொல்கிறேன் என்றால், அந்த நாவலை அவர் எழுதி முடிக்கவில்லை. சொல்வதானால் தமிழ்மொழிக்கு அது ஒரு பேரிழப்பு.

புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தொ.மு. சிதம்பரரகுநாதன் ஆகியோர் நடத்திய ஒரு சிறப்பான மாத இதழில் இந்நாவல் தொடர்கதையாக வெளிவந்தது. பத்திரிகையின் பெயர் ‘முல்லை’யா ‘சாந்தி’யா என்பது கவனத்தில் இல்லை. ஒரேயொரு பிரதி மட்டும் பின்னாளில் என் கைக்கு வந்தது. அற்புதமான நாவல். நடையழகு கதையழகு இரண்டும் பின்னிப் பிணைந்த நாவல். ஒரு வீணை வித்வானைப் பற்றியது அது. முழங்கால்கள் வரை நீண்ட கருப்புக் கோட்டும், பஞ்சகச்ச சரிகைப்பட்டு வேட்டியும், தலையில் சரிகை மின்னும் தலைப்பாகையும், நெற்றியில் சந்தனகுங்குமப் பொட்டுமாக வித்வான் மாடிப்படியில் மைசூர் மகாராஜா போல இறங்கிவரும் பாங்கை, தோரணையை வைத்தகண் வாங்காமல் வியப்புடன் அவருடைய மருமகள் பார்த்து நிற்பதை லா.ச.ரா வர்ணித்திருப்பது மனதை நிரப்புவதாக இருந்தது. பத்திரிகை நின்றது. நாவல் முடிவு பெறவில்லை.

‘ஏன் லா.ச.ரா., அந்த நாவலை முடிப்பதுதானே?’ என்றேன். முடியாது, என்று சொல்லிவிட்டார்.

மாம்பலம் ரயில் நிலையத்திலும், வழியிலும் நாங்கள் சந்தித்துக் கொள்வது வழக்கம். ஏதோ ஒரு சிறு வங்கியில் அவர் அப்போது பணிபுரிந்து வந்தார். பிற்பாடு அந்த வங்கி ‘பஞ்சாப் நேஷனல் பேங்க்’குடன் இணைக்கப்பட்டது. அவருடைய வீட்டுக்கும் சென்று அடிக்கடி சந்திப்பேன். அப்போது ‘தீபம்’ இதழை நடத்திவந்த நா.பார்த்தசாரதி அவர்கள், அன்றைய அரசியல்போக்கைக் கண்டு மனம்பொறாமல், விவாதிப்பதற்காக ஓர் அமைப்பைத் தொடங்கினார். அநேகமாக எழுத்தாளர்களே பங்குபெறுவதான அமைப்பு. ‘தீபம்’ அலுவலக மாடியில் கூட்டம் நடைபெறும். முதல் கூட்டத்துக்கு நானும் லா.ச.ரா.வும் சென்றுவந்தோம். அப்படியொரு அமைப்பு ஏற்பட இருப்பதை அவர்தான் என்னிடம் சொன்னார்.

பணிநிமித்தம் நான் திருச்சி நகரில் இருந்த காலம். 1978 என்று ஞாபகம். திருச்சி வானொலி நிலைய ப்ரோக்ராம் எக்சிகியூடிவ்வாக இருந்த சந்திரன் அவர்களிடமிருந்து ஃபோன் வந்தது. லா.ச.ரா. அவர்கள் நிலையத்திற்கு வந்திருப்பதாகவும், என்னைக் காண விரும்புவதாகவும் சொன்னார். சென்றேன். வானொலி ஒலிபரப்புக்காக அபி அவர்கள் லா.ச.ரா.வை நேர்காண இருந்தார். நேர்காணல் பதிவு செய்யப்படும் மட்டும் வானொலி நிலையத்தில் இருந்தேன். மிகச் சிறப்பான பேட்டி அது. ஆவணம். வேலை முடிந்ததும், லா.ச.ரா., அபி, நான் மூவரும் அருகே நீதிமன்ற வளாக ஓட்டலில் உணவு அருந்தினோம். லா.ச.ரா. நல்ல சாப்பாட்டு ரசிகர். ஆனால் ஓட்டல் உணவைப் பற்றிக் குறை ஒன்றும் கூறவில்லை. மூன்றாந்தர ஓட்டல் என்றால் அப்படித்தான் இருக்கும், என்று அவருடைய அனுபவம் உணர்த்தியிருக்கக் கூடும்.

அன்று என்னுடன் வீட்டில் தங்கினார். பேசிக்கொண்டிருந்த போது, இல்லிஸ்ட்ரேடம் வீக்லி ஆங்கில வார ஏட்டில் அவருடைய சிறுகதையைப் படித்ததாகவும், அந்தக் கதையை எடுத்து வைத்திருப்பதாகவும் சொன்னேன். ஈசிசேரில் சாய்ந்து இருந்தவர் நிமிர்ந்து எழுந்துவிட்டார். ‘அந்தக் கதை உங்ககிட்ட இருக்கா?’ எனக் கேட்டார். ‘நண்பர் ஒருவர் கேட்டார். என்னிடம் பிரதி இல்லை. நல்லதாகப் போயிற்று. எடுங்க அதை’ என்றார்.

சென்று, பேடில் பல கட்டிங்குகளுக்கு இடையே அதைத் தேடினேன். இல்லை. இலக்கிய நண்பர் எவராவது எடுத்துச்சென்றிருக்க வேண்டும். சொன்னேன். அவருக்கு மிகுந்த ஏமாற்றம். எனக்கு வருத்தம்.

அவரது உறவினர் வீடு திருச்சி கன்டோன்மென்டில் இருந்தது. அங்குவந்து ஒருவாரம் பத்துநாட்கள் அவர் தங்குவது உண்டு. சென்று பார்த்துப் பேசிவிட்டு வருவேன். திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்கம் அச்சமயம் பார்த்து ஒரு பாராட்டுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. லா.ச.ரா.வை நேரில் கண்டதில் அந்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் பெருத்த மகிழ்ச்சி.

‘அபிதா’ நாவல் பற்றி என்னிடம் பேசியிருக்கிறார். தேசபக்தர் சத்தியமூர்த்தி அவர்களின் மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் தூண்டுதல் பேரில் எழுதி முடிக்கப்பட்ட நாவல் அது. தன் கேரளா எஸ்டேட் பங்களாவுக்கு அவரை அழைத்துச்சென்று தங்கவைத்து நாவலை எழுதிமுடிக்க வைத்தவர் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். அந்த அம்மையாரின் ‘வாசகர் வட்டம்’ நாவலை வெளியிட்டது. சிறப்பு என்னவெனில், லா.ச.ரா.வின் ‘அபிதா’வும், தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலும் ஒரே நேரத்தில் ‘வாசகர் வட்டத்’தால் வெளியிடப் பட்டன.

வங்கிப் பணியிலிருந்து ஓய்வுபெற்று அம்பத்தூரில் சொந்தவீடு கட்டி அவர் குடிபோன பிறகு, அவரைச் சந்திக்க முடியவில்லை.

லா.ச.ரா அவர்களின் சிறுகதைகளை அநேகமாக அனைத்தையுமே சேகரித்து வைத்திருந்தேன். சிறிதும் பெரிதுமான பத்திரிகைத் தாள்களைச் சேர்த்து, புத்தகமாகத் தைத்தும் வைத்திருந்தேன்.

தொடக்ககால இளமைக்கால அவரது எழுத்துகளில் மிளிர்ந்த நடையெழிலும் கதையழகும் பிற்பாடு இருக்கவில்லை என்பது என் தாழ்ந்த கணிப்பு. கதையும் நடையும் இயல்பாக ஒட்டிப் பிணைந்து இருந்தன. பின்னாட்களில் அவர் நடைக்கு அதிக மதிப்புக் கொடுக்கத் தொடங்கி, கதையம்சத்தைப் பற்றிக் கவலைப்படாதது காரணமாக இருக்கலாம். ரசிகர்கள் கதையைப் பாராட்டாமல், நடையைப் போற்றியதும் அவருடைய அந்தப் போக்குக்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.

அயர்லாந்து நாட்டு ஆங்கில எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸ் அவர்களின் நடை போன்று இருக்கிறது, என்று விமரிசகர்கள் கூறுவது உண்டு. இதுபற்றி அவரிடம் கேட்டேன். சிரித்துவிட்டு பதில்சொல்லாமல் இருந்தார். ஜாய்சின் ‘டப்ளினர்ஸ்’ சிறுகதைத் தொகுதியை நானும் வாசித்து இருக்கிறேன். சற்று நெருடலான நடை. லா.ச.ரா.வின் எழுத்துநடை தமிழ்மொழிக்கு உரியது. இயல்பான நடை. பிற்காலத்தில் நடைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போக, ஒரு வெளிப்பாட்டைச் சிறப்பாக உணர்த்த, சொற்களைத் தேடியபடி, கதையை முடிக்காமல் இரண்டுநாட்கள் இருப்பது உண்டு என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்.

அவருடைய தந்தையார் சப்தரிஷி அவர்கள் தமிழாசிரியர். அந்தக் காலத்தில் பள்ளிகளில் சம்ஸ்கிருதம் பாடமொழியாக இருந்தது. அநேகமாக பிராமண மாணவர்கள் சம்ஸ்கிருத மொழியைத் தேந்ந்தெடுத்துக் கற்பர். ஆனால் லா.ச.ரா. படித்த காலத்தில் வடமொழியைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று தெரிகிறது. தந்தையார் தமிழாசிரியராக இருந்தது காரணமாக இருக்கலாம். அவருடைய எழுத்துகளில் வடமொழிச் சொற்கள் விரவிக் கிடந்தாலும், ‘சாட்சாத்காரம்’ போன்ற சொற்களை அவர் பயன்படுத்தியது அன்றாடம் அவர்வீட்டில் புழங்கும் சொற்களாக அவை இருந்த காரணமாய் இருக்கலாம்.

கூட்டுக்குடும்பம் அவரது. அவருடைய இளைய சகோதரரும் அவருடன் இருந்தார். கர்நாடக சங்கீதத்தில் ஈடுபாடு கொண்ட குடும்பம். பிரபல வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் அவருக்குத் தந்தைவழி உறவினர்.

என் எழுத்துநடையில் லா.ச.ரா.வின் ‘தென்றல்’ வீசுவதாகச் சொல்பவர் உண்டு. அதை நான் ஏற்பது இல்லை. நாயகர்களாக நாம் போற்றும் எழுத்தாளர்களின் நடை அங்கங்கே நம் எழுத்துகளிலும் புகுந்து மிளிரலாம். நாம் அறியாது நேர்வது அது.

எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று குறிப்பிடுவது உண்டு. லா.ச.ரா. எழுத்தாளர்களின் எழுத்தாளர்.


Series Navigation

ம. ந. ராமசாமி

ம. ந. ராமசாமி