லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமின் தமிழ் சேவைக்கு இயல் விருது.

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

அ. முத்துலிங்கம்தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் சீலி மண்டபத்தில் மே 18ம் தேதி மாலை நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது லக்ஷ்மி ஹோம்ஸ்ரோமுக்கு வழங்கப்பட்டது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக நவீன தமிழ் புனைகதைகள், கவிதைகள் ஆகியவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டு தமிழின் சிறப்பை உலகறியச் செய்துவருபவர் இவர். மொழிபெயர்ப்புக்கு வழங்கும் உயரிய விருதான Hutch Crossword Book Award இவருக்கு இருதடவை கிடைத்திருக்கிறது. தொடர்ந்து இங்கிலாந்து இலங்கை இந்தியா கனடா ஆகிய நாடுகளில் மொழிபெயர்ப்புபட்டறைகளும் நடாத்தி வருகிறார்.
தன்னுடைய ஏற்புரையில் லக்ஷ்மி மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் பற்றி பேசினார். உன்னதமான தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் வெளியுலகத்துக்கு தெரியவருவதில்லை என்றும், இந்தக்குறை எதிர்காலத்தில் நீங்கி தமிழின் புகழ் உலகளாவும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இயல் விருதை தொடர்ந்து வேறு விருதுகளும் வழங்கப்பட்டன:
புனைவு இலக்கியப் பிரிவில் ‘யாமம்’ நாவலுக்காக எஸ். ராமகிருஷ்ணனுக்கும், அபுனைவு இலக்கியப் பிரிவில்
‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ நூலுக்காக நாஞ்சில் நாடனுக்கும், கவிதைப் பிரிவில் ‘தொலைவில்’
கவிதை தொகுப்புக்காக வாசுதேவனுக்கும், தமிழ் தகவல் தொழில்நுட்ப சாதனைக்காக முனைவர் கே.கல்யாணசுந்தரத்துக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவுக்கு பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.


Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்