ருவாண்டாவின் ரத்த அழிவின் பின்புலத்தில் “ஆரிய” வாதம்

This entry is part [part not set] of 32 in the series 20061116_Issue

அருணகிரி


ஐந்து லட்சம் மக்கள் ஏறக்குறைய நூறு நாட்களுக்குள் படுகொலை செய்யப்பட்ட பரிதாபம் 1994-இல் ருவாண்டாவில் நிகழ்ந்தது. 20-ஆம் நூற்றாண்டின் கொடிய இன அழிப்புகளில் இது ஒன்றாக இருந்தபோதிலும் போதிலும், ரத்த ஆறு ஓடிய அந்த 100 நாட்களும் ஐரோப்பாவும் அமெரிக்காவும் மயான அமைதி காத்தன. ஐரோப்பியக் காலனீயம் செய்த ருவாண்டாவின் வரலாற்றுப்புரட்டலும், விதைத்த இனவேறுபாட்டுக் கற்பிதமும் நூறாண்டுகளுக்குப்பின் அந்த சிறிய நாட்டை பெரிய பிணக்காடு ஒன்றிற்குக் கொண்டு வந்து சேர்த்திருந்தது. கத்தோலிக சாமியாரிணிகள் இருவர் இந்த இனப்படுகொலையைச் செய்த வெறியர்களுக்குத் துணை போனதாகத் தண்டிக்கப்பட்டுள்ள செய்தியைப் படித்தபோது, இனவாதம் அறிமுகமாகாத, ஐரோப்பிய கிறித்துவ மற்றும் காலனீயக் கால்படாத அந்த பழைய நாட்களை ருவாண்டா மக்கள் ஏக்கத்தோடு ஒருவேளை எண்ணிப் பார்த்திருக்கக்கூடுமோ எனத்தோன்றியது.

ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாடு ருவாண்டா. சுற்றிலும் புருண்டி, உகாண்டா, காங்கோ, டான்சானியா போன்ற நாடுகளால் சூழப்பட்ட நிலம்சூழ் பிரதேசம். விவசாயம் மற்றும் கால்நடை மேய்த்தல் இவையே பிரதானத் தொழில்கள். தொழிற்படுத்தலோ யந்திரமயமாக்கலோ இல்லாத ஒரு எளிய சமூகக் கட்டமைப்பை அது கொண்டிருந்தது. பெரும்பான்மை ஹுடுக்களும், சிறுபான்மை டுட்ஸிக்களும், மிகச்சிறுபான்மை த்வாக்களும் பல நூற்றாண்டுகளாக அதன் பூர்வீக குடிகள். இத்தகைய நிலம்சார் சமூக அமைப்பினில் டுட்ஸிக்கள் வசதியான, அதிகாரம் கொண்ட மக்களாகப் பல சமயங்களில் இருந்தாலும், அதிகாரம், செல்வம் ஆகியவற்றின் அடிப்படையில் ஹுடுக்கள் டுட்ஸிக்களாகவும் டுட்ஸிக்கள் ஹூடுக்களாகவும் மாறக்கூடிய ஒரு நெகிழ்வான இயக்க அமைப்பையே சமூக அளவில் அது கொண்டிருந்தது. இதெல்லாம் மேற்கு ஐரோப்பாவின் காலனிப் பார்வை ருவாண்டா மீது இன்னும் விழத்தொடங்காத ஆரம்ப கால ஆப்பிரிக்க யதார்த்தம்.

18-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷார் இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பெற்ற வெற்றிகளும் அது அந்நாட்டிற்குத் தரத் தொடங்கிய மாபெரும் செல்வ வளங்களும் மற்ற ஐரோப்பிய நாடுகளின் கவனத்தைக் கவர்ந்தது. இதன் விளைவாக ஐரோப்பாவிலிருந்து இந்தியத்துணைக்கண்டத்தை நோக்கிய நீர்வழிப்பாதைகள் அனைத்தும் அதிமுக்கியம் பெற்றன. சூயஸ் முதலான ஆப்பிரிக்க நீர்வழி மற்றும் பல துறைமுகங்களின் மீது ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கப்பார்வை படிந்தது. ஐரோப்பாவின் இந்த காலனீய ஏகாதிபத்திய பேராசை ஆப்பிரிக்காவை நோக்கிய பேரோட்டமாக (Scramble for Africa) உருவெடுத்தது. ஆப்பிரிக்காவுக்கு சனியன் பிடித்தது.

இந்த காலனீய சுரண்டல் பந்தயத்தில் முதலில் குதித்தவை இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், ஸ்பெயின், இத்தாலி, நெதர்லாந்து ஆகியவை என்றால், தாமதமாக வந்திணைந்த நாடு ஜெர்மனி. மேற்சொன்ன மற்ற நாடுகளை விட ஜெர்மனி நீர்வழி ஆதிக்கத்தில் பின்தங்கியே இருந்தது. ஜெர்மனியை ஒருங்கிணைத்து ஒரு வலிய அரசை அமைத்த பிஸ்மார்க், இந்தக் காலனிப்பந்தயத்தில் ஜெர்மனியையும் களம் இறக்கினார். யார்வீட்டு உணவையோ யாரோ பங்கிட்ட கதையாய் ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து 1884-85-இல் ஆப்பிரிக்க நாடுகளின்மீதான தங்களது அதிகார எல்லைகளைப் பங்கிட்டுக் கொண்டன. ஜெர்மனிக்கு ருவாண்டா கிடைத்தது. சிறிய, நிலம் சூழ்பிரதேசமான ருவாண்டாவை நேரடி காலனியாக்குவதில் அவ்வளவாக லாபம் இல்லை என உணர்ந்த ஜெர்மனி, ருவாண்டாவில் அரசியல் அதிகாரத்தை அப்போது கைக்குள் வைத்திருந்த சிறுபான்மை டுட்ஸி இனத்தவரைத் தனது பிரதிநிதியாக முன்வைத்தது. தங்களால் “நாகரீகப்படுத்தப்பட்ட” சமுதாயங்கள் அனைத்திற்கும் மேற்குலக காலனியாதிக்கம் தந்து சென்ற கொடையான இனப்பிரிவு, ருவாண்டாவையும் ருசிபார்க்கத் தொடங்கியது.

‘இனமேன்மை ஓர் இயற்கை நிஜம்’ என்பது அன்றைய ஐரோப்பாவில் மிகப்பிரபலமாய்ப் பரவிக்கொண்டிருந்த ஒரு தத்துவம் . இதற்கு ஊற்றுக்கண்ணாக விளங்கியதும் உத்வேகம் கொடுத்ததும் விவிலியத்தின் மீதான ஐரோப்பாவின் வெறித்தனமான குருட்டு நம்பிக்கை. விவிலியத்தின் பெருவெள்ளத்தில் தப்பிய நோவாவிற்கு ஜாபத், ஷெம், ஹாம் என்று மூன்று மகன்கள். இவர்களே உலகின் அனைத்து உயர் இனங்களுக்கும் தோற்றுவாய் என்ற விவிலியக்கருதுகோள் அன்றைய ஆதிக்க ஐரோப்பாவால் அழுத்தமாக நம்பப்பட்டது; இதையொட்டிய கருத்தாக்கங்கள் காலனிநாடுகளில் வரலாறென்ற பெயரில் வலுவாகப் பரப்பப்பட்டன. அச்சு யந்திரங்களின் மூலம் பிரசாரப்பரவல் என்பது காலனியாளர்களுக்கும் கிறித்துவ மதப்பிரசாரகர்களுக்கும் மட்டுமே சாத்தியம் என்ற நிலையும், ஐரோப்பியக் கல்வி நிறுவனங்கள் மீதான அன்றைய சர்ச்சின் ஆதிக்கமும் இதனை எளிதாக நடைமுறைப்படுத்த உதவியது.

ஹாம் கறுப்பினத்திற்கும், ஷெம் அராபிய இனத்திற்கும், ஜாபத் ஐரோப்பிய இனத்திற்கும் தோற்றுவாய் என்ற விவிலிய கிறித்துவ நம்பிக்கையானது புதிய நிலங்களில் காலனியாளர்களாய்ப் புகுந்த ஐரோப்பியருக்கு, அந்நில மக்களைத் தனது நம்பிக்கைகளின் பார்வையில் அடையாளம் பிரிக்கப் பெரிதும் உதவியது. இவ்வகையில், ருவாண்டாவின் அதிகாரவர்க்கமாய் டுட்ஸிக்களைக் கண்ட ஜெர்மனி, அவர்களின் உடற்கூறுகள் சில, பெரும்பான்மை ஹூடுக்களைவிட மேற்கு ஐரோப்பிய காக்கேசிய உடற்கூறுகளுக்கு நெருக்கமாய் இருப்பதாய் அடையாளம் கண்டு அதன் அடிப்படையில் டுட்ஸிக்களே விவிலிய ஹாமின் நேரடித்தோன்றல்கள் என்ற கருத்தாக்கத்தை முன்வைக்கத் தொடங்கியது. தானே நேரடி ஆட்சி செலுத்தாமல் சிறுபான்மை டுட்ஸிக்களை வைத்து பெரும்பான்மை ஹூடுக்களை ஆண்டு வசதியாக அதன் லாபங்களை அனுபவிக்க ஆசைப்பட்ட ஜெர்மனி, தனது கிறித்துவ நம்பிக்கைகளில் தோய்த்தெடுக்கப்பட்ட இனமேலாண்மை என்ற ஈட்டியை ருவாண்டாவின் சமூக அமைப்பிற்குள் பாய்ச்சியது. டுட்ஸிக்கள் ஹாமின் வழித்தோன்றல்கள் என்றும், இனரீதியாக ஹூடுக்களை விட உயர்ந்தவர்கள் என்றும் விவிலியம் வாயிலாகக் கற்பிக்கப்பட்டது. காலனியாளர்களாலும் மதப்பிரசாரகர்களாலும் பாதிக்கப்பட்டு கிறித்துவம் நோக்கி சாயத்தொடங்கியிருந்த டுட்ஸிக்களும் இதனை வசதியாய் ஏற்றுக்கொண்டு ஹூடுக்களை வல்லாண்மை செய்யத்தொடங்கியதுதான் இதில் விளைந்த முதற்பெரும் துரதிர்ஷ்டம். அன்றுவரை நெகிழ்வான பிரிவாயிருந்த டுட்ஸிக்களுக்கும் ஹூடுகளுக்கும் இடையில் இனப்பிரிவு என்ற காலனீய கற்பிதம் எழுந்து இறுகத்தொடங்கியது.

முதல் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்விக்குப்பின், ருவாண்டா பெல்ஜியத்தின் காப்பாளுமையின் கீழ் வந்தது. வேரை மறந்த ருவாண்டாவின் வரலாறு, வெள்ளை ஆண்டைகளால் விதம் விதமாய் எழுதப்பட்டது. ருவாண்டாவில் டுட்ஸிக்கு முன்னர் இருந்த இனம் ஹூடு என்றும், வடக்கிலிருந்து படையெடுத்து அவர்களை வென்று அடிமைப்படுத்திய வல்லினம் டுட்ஸிக்கள் என்றும் எதிரெதிர் இனங்களாக ஒரு நாட்டு மக்கள் வரலாறாக்கப்பட்டனர். ருவாண்டாவின் கறுப்பருக்கு நாகரிகத்தைக் கற்பித்தது வடக்கிலிருந்து வந்து புகுந்த விவிலிய ஹாம் இன வழித்தோன்றல்களான டுட்ஸிக்கள்தான் என்ற ஹாம் இனவாதம் பள்ளிகளிலும் கிறித்துவ செமினாரிகளிலும் பாடமாய்க் கற்பிக்கப்பட்டது. சொந்த வரலாறும், வழிபாடும், கலாசாரமும் மறக்கடிக்கப்பட்ட ருவாண்டாவின் டுட்ஸிக்களும் ஹுடுக்களும் ஐரோப்பியக்கல்வியையும் கலாசாரத்தையுமே உயர்ந்ததென்று கொண்டு, அது புகுத்திய இனவாதத்தையே தங்கள் உண்மைச்சரித்திரமாக நம்பத் தொடங்கினர். ருவாண்டாவின் மக்கள் இனவாரியாய்ப் பிரிக்கப்பட்டு டுட்ஸிக்கள் வென்றவராகவும், ஹுடுக்கள் தோற்றவராகவும் தொடர்ந்து கற்பிதம் செய்யப்பட்டதன் விளைவு, டுட்ஸிக்கள் தங்களை உயர்ந்தவராகவும், ஹூடுக்கள் தங்களை வெளியில் இருந்து வந்தவர்களால் நசுக்கப்பட்டு அடக்கப்பட்டவராகவும் அடையாளப்படுத்தத் தொடங்கினர். நூற்றாண்டுகளாக ஒரே நிலப்பரப்பில் ஒரே சமூக அமைப்பில் ஒரே வரலாற்றுத் தொடர்புடன் வாழ்ந்து வந்த டுட்ஸிக்களும் ஹூட்டாக்களும் விவிலிய இனவாதத்தினால் இவ்வாறாக ஒரே நூற்றாண்டிற்குள் கொடிய எதிரிகளாயினர்.

காலனீய சுரண்டல்களும், கலாசார அழிவுகளும், வரலாற்றுக் கற்பிதங்களும் பின் தள்ளப்பட, பெரும்பான்மை ஹூடுக்களுக்கோ, தமது கஷ்டங்களுக்கான முழுமுதற் காரணம் வசதியாகப் பக்கத்து வீட்டு டுட்ஸியிடமே கிடைத்து விட்டது. சூல்கொண்ட மேகம் போல ஒரு கரிய கோபம் ருவாண்டாவின் ஹூடு மக்களிடையே மெதுவாய்த் திரண்டது. பெல்ஜிய ஆதிக்கத்தின் செயல்கள் இந்த இனப்பிரிவிற்கு தூபம் போட்டு வளர்த்தன. முதல் முறையாக ருவாண்டாவின் மக்களுக்கு இன அடிப்படையில் அடையாள அட்டைகள் வழங்கியது பெல்ஜியம். மேற்படிப்பு வாய்ப்பை டுட்ஸிகளுக்கும், கிறித்துவ மதக்கல்வி கற்க விழையும் ஹூடுக்களுக்கும் மட்டுமே அது வழங்கியது. 20-ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் அரசு அதிகாரத்திற்கு டுட்ஸிக்ககளை அடையாளம் காண உதவிய இந்த அடையாள அட்டைதான் 67-இலும் பிறகு 94-இலும் ஹூடுக்கள் டுட்ஸிகளை அடையாளம் கண்டு மொத்தமாய்ப் படுகொலை செய்யவும் பயன்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்குப்பின் ஜனநாயக ஆதரவு இயக்கங்கள் உலக அளவில் அழுத்தம் பெற, ஐரோப்பிய ஆதரவு ஹூடுக்களின் பக்கம் திரும்பியது. வீசும் காற்றின் போக்கறிந்த பெல்ஜியமும், ருவாண்டாவின் கத்தோலிக்க மதமும் ஹுடுக்களின் பக்கம் சாயத் தொடங்கியது. 1961-இல் தேர்தலில் ஹுடுக்கள் வென்று ஆட்சி அமைத்தவுடன், 10000 டுட்ஸிக்கள் பெல்ஜியத்தின் உதவியுடன் நாட்டை விட்டுத்துரத்தப்பட்டனர். இரு இனங்களாக இறுகி விட்ட டுட்ஸி, ஹூடுக்களுக்கிடையே சிறு சிறு சண்டைகள் புறப்படத்தொடங்கின. முழுதும் அதிகாரம் இழந்த டுட்ஸிக்களுக்கும் புதிய அதிகாரம் கைவரப்பெற்ற ஹுடுக்களுக்கும் இடையேயான புகைச்சல் 1967-இல் பெரிதாய் வெடித்தது. 20,000 டுட்ஸி மக்கள் கொல்லப்பட்டனர். 3 லட்சம் பேர் நாடிழந்து அகதிகள் ஆயினர். இன யுத்தமாய் உருவெடுத்த இந்த சண்டை, மீண்டும் 1994-இல் பெரிய அளவில் வெடித்தபோது நிகழ்ந்த இனஒழிப்புக்கு ஐரோப்பாவில் எதிர்ப்புக்குரலே எழும்பாவண்ணம்,ஹூடுக்களின் நண்பனான கத்தோலிக்க சர்ச் பார்த்துக்கொண்டது. ருவாண்டாவின் வயல்களிலும், தெருக்களிலும் ரத்தம் வழிந்தோடியது. கத்தோலிக்க சர்ச் புண்ணியத்தில் உலக நாடுகள் வேடிக்கை பார்க்க, டுட்ஸிக்களும் அவர்களுக்கு உதவுவதாய்க் காரணம் காட்டப்பட்ட மிதவாத ஹுடுக்களுமாக 5 லட்சம் பேர் ஏறக்குறைய நூறு நாட்களுக்குள் கொல்லப்பட்டனர். பிறகு டுட்ஸிக்களின் ஆயுதப்படை உட்புகுந்து ஹுடுக்களை வெல்ல, இன்று ஜனநாயக அரசு அமைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ஹூடுக்கள் அகதி வாழ்க்கை வாழ்கின்றனர். டுட்ஸிக்கு எதிரான இனப்படுகொலை குறித்த விசாரணை, ருவாண்டாவின் கத்தோலிக்க சர்ச் எவ்வாறு ஹுடுக்களுடன் சேர்ந்து டுட்ஸி இன அழிப்பில் மும்முரமாக ஈடுபட்டது என ஆவணப்படுத்தி உள்ளது.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி கட்டிவைத்துப்போன ஆரிய திராவிட இனவாதக்கற்பிதத்திற்கும் ருவாண்டாவின் காலனீய வரலாற்றுக்கும் ஒற்றுமைகள் பல உண்டு. நோவாவின் ஒரு மகன் ஹாம், டுட்ஸிகளின் மூதாதையென்றது போல், மற்றொரு மகன் ஜாபத் ஆரிய ஐரோப்பியருக்கு மூதாதை என்ற அடிப்படையில் ஆரியப்படையெடுப்பு என்ற கதை ஆங்கிலேயரால் கட்டமைக்கப்பட்டது. விவிலியத்தை வரலாறாக்கி ஜாபத்தைத் தோற்றுவாயாக்கி ஆரியப்படையெடுப்பு என்ற அண்டப்புளுகை இந்திய தொன்மை வரலாறாக அவிழ்த்து விட்டது ஐரோப்பியக் காலனீயம். இங்கும் மாக்ஸ்முல்லர் என்ற ஜெர்மானியர்தான் காலனி இந்தியாவின் இனவாதக்கதையாடலுக்கு அச்சாணியாகத்திகழ்ந்தார். விவிலிய நோவாவின் வெள்ளப்பெருக்கின் அடிப்படையில் ஆரியப்படையெடுப்பு நிகழ்ந்த ஆண்டு கிமு 1500 என “ஆய்வுரை” எழுதி இனவாத “வரலாற்றை” நிறுவிப்போனார். மிஷனரிகளும், விவிலியம் தோய்ந்த அறிவாளிகளும் மட்டுமன்றி இந்தியர்கள் பலரும் இதனை நம்பவும் தொடங்கினர்.

ருவாண்டாவைபோலவே இங்கும் காக்கேசிய உடற்கூறுகள் உள்ளவராக அடையாளம் காணப்பட்ட சிலரை ஆரியர் என்றும் பிறரை திராவிடர் என்றும் இனம் பிரித்து, வடக்கிலிருந்து உள்நுழைந்த வேற்றினம்தான் ஆரியம் என்ற கதையாடல் வரலாறாகப் பரப்பப்பட்டது. டுட்ஸிகளைப்போல் சிலருக்குப் ஆரியர் என்ற போலிப் பெருமை சுகத்தைத் தந்தது. ஹூடுக்களைப்போல் பலருக்கோ அது திராவிடர் என்ற இன அடையாளத்தையும், அவர்களது அவல நிலைக்கான விளக்கமாக அருகில் உள்ள ஆரிய “இனத்தவர்களை”க் காணவும் வைத்தது. காலனியாதிக்க கொடிய சுரண்டல்களையும் அடக்குமுறைகளையும் மறக்கடிக்க , ஆரிய திராவிட இனவாதம் என்ற போதை இந்திய நரம்புகளில் ஏற்றப்பட்டது. இந்த விஷம் இன்னமும் முழுவதும் இறங்கிய பாடில்லை, ஆனாலும், ருவாண்டா போல இந்தியம் இனவெறி மயானமாக ஆகவில்லை என்றால் அதற்கு சில முக்கியக்காரணங்கள் உண்டு.

முதலாக, ஆரிய வாதம் பிராமணர்களையே உயர் ஆரியர்களாகக் காட்ட முயன்றாலும், யதார்த்தத்தில் அவர்கள் கல்வி, இலக்கியம், ஆன்மீகம் இவற்றிலன்றி (ருவாண்டாவின் டுட்ஸிகளைப்போல்) பொருளாதார பேராதிக்க சக்திகளாக இல்லையென்பது கண்கூடாய்த் தெரிந்தது. டுட்ஸிக்கள் ஹுடுகளுக்கெதிரான இன ஆதிக்கத்தினைக் கைக்கொண்டது போல் இந்தியாவில் நிகழவில்லை, மாறாக பல “ஆரியர்கள்” காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் “திராவிடர்களுடன்” இணைந்து உடமை இழந்தனர்; குடும்பம் இழந்தனர்; உயிரை இழந்தனர். திராவிடரின் தொன்மை இலக்கியங்களில் “ஆரியர்” மதிக்கப்பட்டிருந்தனர். திராவிட மொழிகள் என்பவை “ஆரியர்களால்” போற்றிப் வளர்க்கப்பட்டன. ருவாண்டா போல சிறிய நிலப்பரப்பாகவோ சிறு கலாசாரமாகவோ இருந்திருந்தால் ஒருவேளை இன்று வடகிழக்கில் பழங்குடிகளுக்கு நிகழ்வது போல இந்தியாவிலும் இன அழிப்பு நடந்திருக்கலாம். ஆனால் அகன்று விரிந்த பாரதத்தின் வலிமையான தொன்மைக்கலாசாரம் காலனீயத்தின் எளிய இனவாத வரையறைகளுக்குள் சிக்கி சிதறுண்டு போகாது, கம்பீரமாக இணைந்து உறுதியாக நின்றது. ருவாண்டாவைப்போல கிறித்துவமயமாக்கல் மூலம் விவிலிய மூளைச்சலவை செய்வது இந்தியாவில் எளிதில் சாத்தியமாகாமல் போனதும் கூட இனவாதம் ரத்தவெறி பிடித்து வளராமல் போனதற்கு முக்கியக் காரணம். மொகலாயக் கொடுமைகளைப் பலவாறு பார்த்திருந்த இந்து மதம், கிறித்துவத்தை எதிர்கொள்ளத் தயாராகவே இருந்தது. கீதையின் அடிப்படையில் எழுந்த காந்தியடிகளின் இந்து தார்மீகத்தின் முன், கிறித்துவப் பிரச்சாரங்கள் எடுபடாமல் போயின.

19-20 ஆம் நூற்றாண்டுகளின் விவிலிய இனவாதக் கூச்சல்கள் இன்று மதிப்பிழக்கத்தொடங்கி விட்டாலும், அவற்றின் எதிரொலி இன்னமும் முழுவதும் மறைந்தபாடில்லை. இந்திய அரசியலில் ஆரியப்படையெடுப்பு என்ற காலனீயக் கதையாடலின் கனம் இன்னமும் கூட உள்ளது. ருவாண்டா போன்ற நாடுகளிலோ அந்தக் கனம் இன்னமும் கூட ஏராளமான உயிர்களைப் பலி வாங்கிக்கொண்டிருக்கிறது. வீடிழந்து நாடிழந்து உயிரிழந்து நிற்கும் டுட்ஸி மற்றும் ஹூடு மக்களுக்கு இந்த அழிவின் ஆரம்ப இழையானது, காலனீய கிறித்துவ இறையியல் விழுமியங்களில் உள்ளது என்ற புரிதல் ஏற்பட்டால், அது எதிர்கால ருவாண்டாவின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.


arunagiri_123@yahoo.com

Series Navigation