ராஜ்தாக்கரேவின் ராஜாபார்ட் நாடகமும் சில உண்மைகளும்

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

புதிய மாதவி


அப்பாடா ஒரு வழியாக நடந்து முடிந்து விட்டது.. உச்சக்கட்ட காட்சி இப்போதோ எப்போதோ என்று தொலைக்காட்சி காமிராக்கள்
இரண்டு நாட்கள் காத்திருக்க.. போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு மீடியாக்கள் செய்திகளை அவரவர் பார்வையில் சொல்ல
.. எப்படியோ எல்லாம் முடிந்து நாடகம் நடந்து முடிந்த கொட்டகைப்போல காட்சி அளிக்கிறது எங்கள் மும்பை. அம்ச்சி மும்பை.. !

விக்ரோலிக்கு ரொம்பவும் அருகில் பல வருடங்களாக குடியிருக்கும்
எனக்கும் என்போலவே நிறைய அம்ச்சி மும்பைக்கர்களுக்கும் விக்ரோலியில் நீதிமன்றம் இருப்பதே இப்போது தான் தெரியவந்துள்ளது.
ராஜ்தாக்கரேவை விக்ரோலி கோர்ட்டுக்குத்தான் அழைத்து வந்தார்கள்.
இரண்டு நாள் தாமதம், இந்த நாடகம் எல்லாமே கூட கொஞ்சம் திட்டமிடப்பட்டு நடந்ததாகவே பத்திரிகைகள் சொல்கின்றன. அதாவது
ராஜ்தாக்கரேவின் செல்வாக்கை வளர்க்கவும் வரப்போகும் தேர்தலை மனதில் கொண்டும் நடத்தப்பட்ட நாடகமாகவே இருக்கலாம்.

வட இந்தியர்களை வெளியேறும்படி கடுமையாகச் சாடியிருக்கும் ராஜ்தாக்கரே கடந்த தேர்தலில் தன் கட்சியில் 15 வட இந்தியர்களுக்கு ஸீட் கொடுத்தார் என்பதும் அந்தப் 15 பேரும் தோற்றுப்போனார்கள் என்பதும் அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிடக்கூடிய செய்தியல்ல.

இந்த நாடகத்தில் சில பலவீனமான காட்சிகள்:

> பெரியவர் பால்தாக்கரே மண்ணின் மைந்தர்கள் உரிமையை தன் கொள்கையாக அறிவித்து (1960) தமிழர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தக் காலக்கட்டமும் இன்று மும்பையின் ஒவ்வொரு பகுதியிலும் உலகமயத்தின் தாக்கம் .. அடிமுதல் முடிவரைப் பரவி இருக்கும் லக்கட்டமும் வேறு.

> பெரியவர் பால்தாக்கரே ஒரு செயல்வீரர் என்பதும் அவர் தான் சொல்கிற ஒவ்வொரு சொல்லையும் உணர்ந்து அதன் முழு அர்த்தத்தையும் உள்வாங்கிக்கொண்டு அதன் நன்மை, தீமைகளை அறிந்தே சொல்லுகிறார். ராஜ்தாக்கரே அப்படிச் சொல்வதில்லை என்றும் அவர் சொல்வதில் பல முன்னுக்குப் பின் முரணாக இருப்பதையும் பற்றி 1/2/2008 ஹிந்துஸ்தான் டைம்ஸ் மும்பை பதிப்பில் ஒரு கட்டுரை ளிவந்துள்ளது. (Imitation Thackeray..Pg 17 .. after stirring a hornet’s nest with his vacuous statement against Amitabh Bachchan and Chath Pujas, he famously turned back on it in a press interview to say Chath pujas are fine but it is actually “they way they are conducted’ that’s so objectionable. Now had the interviewer bothered to ask him what was wrong with the way they were conducted, the odds are he would have jumped a few more squares. Time and again Raj has exposed his poor understanding of his own views).

> கருத்துக்கணிப்பில் ராஜ்தாக்கரேவின் இச்செயல்பாடுகள் அன்றாட வாழ்க்கையில் ஒரு ந்யுசென்ஸ் என்று சொன்னவர்களின் எண்ணிக்கைக்கும் அவர் கருத்தை ஏற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கைக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பதையும்
நினைவில் கொள்ள வேண்டும்.

> orkut -என்ற இணையதளத்தில் அவரை ஆதரித்து எழுதியவர்கள் அதிகம் என்று சொல்லப்படுகிறது. அவரை எதிர்த்து வெளிப்படையாக ரும் எழுதத் துணிய மாட்டார்கள் என்பதும் அப்படி கருத்துக் கொண்டவர்கள் தங்கள் மவுனத்தில் மட்டுமே தங்கள் உடன்பாடின்மையைக் காட்டும் சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பதையும்
கருத்தில் கொள்ள வேண்டும்.

சில காட்சிகளின் எதிரொலிகள்
——————————-
அவருடைய அம்ச்சி மும்பை குரல் பல உண்மைகளை உரத்தக் குரலில் பல கோணங்களிலிருந்தும் எதிரொலிக்கிறது. இந்த எதிரொலிகள் அரசியல் தளத்திற்கு அப்பாற்பட்டு ஒலிக்கும் மராத்திய மண்ணின் மைந்தர்களின் குரல். இந்தக் குரலை எவரும் காதுகளைப் பொத்திகொண்டு உதாசீனப்படுத்தி விட முடியாது.

> மும்பை மராத்திய மாநிலத்தின் தலைநகரம். இந்த மாநிலத்தில் மட்டும் தான் இதன் தலைநகரத்தில் வாழும் இந்த மண்ணின் மைந்தர்கள் அவர்களின் தாய்மொழியான மராத்தியில் மட்டுமே பேசி, வேலைப் பார்த்து வியாபாரம் செய்து வாழ முடியாது. இங்கிருக்கும் மராத்தியர்களும் இந்தி தெரியாமல் ஜீவிக்க முடியாது!

> மும்பையின் ரியல் எஸ்டேட் யாரும் கற்பனையிலும் எண்ணிப்பார்க்க முடியாத கதைகளைக் கொண்டது. ரியல் எஸ்டேட் பிஸினஸில் இருப்பவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அல்ல என்பது மட்டுமல்ல அவர்கள் நிர்ணயிக்கும் விலையில் தங்களுக்கான 10×20 அடி குடியிருப்பைக்கைக் கூட வாங்கும் பொருளாதர நிலையில் இந்த மக்கள் இல்லை என்பது ஒர் அவலம்.

> மும்பையை ஷங்கை ஆக்குவோம், மும்பை நகரத்தைச் சிங்கார சிங்கப்பூராக்குவோம் என்று அங்கங்கே கூட்டங்கள், கருத்தரங்குகள் நடந்த வண்ணமிருக்கின்றன. அப்படி ஒரு கூட்டத்தில் ஒரு மராத்திய சகோதரர் ஒலிவாங்கியை வாங்கி (பிடுங்கி) எங்கள் தலைநகரை மேம்படுத்தும் இந்தக் கருத்தரங்கின் மேடையில் ஒரு மராத்தியர் கூட இல்லை, அழைக்கப்டவில்லை, எங்கள் தலைநகரை எங்கள் மண்ணுக்கும் வாழ்க்கைக்குமான பண்பாட்டு/கலாச்சார அடையாளங்களுடன் அமைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புவது தவறா? என்று கேட்டிருக்கிறார். அவரை அக்கருத்தரங்கிலிருந்து வெளியேற்றி இருக்கிறார்கள்!

> மும்பையில் இருக்கும் வணிகத் தளங்கள், மால்கள், கடைகள் அனைத்திலும் முதலில் மராத்தி மொழியில் பெயர்ப்பலகை இருக்க வேண்டும் என்று அவர்கள் சொல்வதிலும் எதிர்பார்ப்பதிலும் என்ன தவறு?

அம்ச்சி மராத்தி மானுஷ்
————————

வந்தாரை வாழவைக்கும் தமிழகமே!
இந்த வசனத்தை தமிழ்நாட்டில் சொல்லாத மேடைகளே இருக்க முடியாது. ஆனால் உண்மையில் இன்றைக்கு மும்பையைப் போல
“வந்தாரை வாழவைக்கும் மண்ணை” இந்தியாவில் எங்கும் எவராலும் காட்ட முடியாது. இந்த உண்மையைக் காய்த்தல் உவத்தலின்றி எல்லோரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். இங்கு வந்திருக்கும் பிற மாநிலத்தவர்களுடன் சகஜமாக உண்மையாக
நாணயமாக பழகி உறவு வைத்துக்கொள்பவர்கள் தான் அம்ச்சி மும்பை மராத்தி மானுஷ்.

> வேகமாக ஆபீஸ்க்குப் போகும் அவசரத்தில் உங்கள் வீட்டில் பாத்திரம் கழுவி, துணி துவைத்து, உங்கள் குழந்தையைக் கவனித்து
“கண்ணன் உங்கள் சேவகனாக/ கண்ணம்மா உங்கள் வேலைகளைச் செய்வாள்.

> அவசரமாக போன் வந்து அம்மாவோ, மாமியாரோ ஊரில் ஆஸ்பத்திரியில் இருந்தால் உடனே நீங்கள் போய் வரும் வரை
பத்திரமாக உங்கள் குழந்தைகளை பக்கத்து வீட்டு வைசாலியும் சாவந்த்தும் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் கவலைப் படாமல்
நாகர்கோவில் வண்டியைப் பிடித்து போய்வரலாம்.

> உங்கள் ஆபிஸில் ப்யூனாக இருக்கும் பரப் குடித்து விட்டு வீட்டில் ஒழுங்காகச் சம்பளத்தைக் கொடுப்பதில்லை என்பதற்காக நீங்கள் எவ்வளவு திட்டினாலும் கோபப்படமாட்டான். குடிக்காத நாட்களில் நல்ல குடிமகனாக நடந்து கொள்ள அவன் செய்கிற வேலையைப் பார்த்து நீங்களே அசந்து போவீர்கள்…

இந்த எடுத்துக்காட்டுகள் எல்லாம் கட்டுரைக்காக எழுதப்படவில்லை.
இதுதான் உண்மை. இதையும் முறையாக எந்த தொண்டுநிறுவனமாவது புள்ளிவிவரம் எடுத்தால் அவ்வளவுதான்.. ! யாரும் வாய்த்திறக்க முடியாது.

….இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்………..லாஆஆஆஆஆஆஆஆஆம்.
இந்த இடங்களில் எல்லாம் இந்த மும்பை அம்ச்சி மராத்தி மானுஷ் யாராக இருக்கிறார்கள் என்கிற status ஐப் பாருங்கள். அப்போது தான் அவர்கள் பார்வையில் உண்மையின் குரல் நம்மை யோசிக்க வைக்கும்.
இதே நிலைமையை அப்படியே சென்னைக்கோ, மைசூருக்கோ, ஹைதராபாத்துக்கோ, திருவனந்தபுரத்துக்கோ போட்டுப்பாருங்கள். ஒரு தமிழனாக, ஒரு கர்நாடக, ஆந்திர , கேரள மாநிலத்தவனாக மும்பையில் வாழ்பவர்கள் கூட தங்கள் மாநிலத்தின் தலைநகரில் இப்படி ஒரு வாழ்க்கைத்தரத்தை ஏற்றுக்கொள்வார்களா?
மும்பை – சென்னையாக
மும்பையில் இருக்கும் மராத்தியார்கள் சென்னையில் வாழும் தமிழர்களாக ஒரு கற்பனையை விரித்துக் கொள்ளுங்கள்.
கசப்பாக இருக்கிறதல்லவா.
உண்மைகள் கசக்கத்தான் செய்யும். !
ஒரு தமிழனாக ஒரு பிரச்சனைக்கு தமிழ்நாட்டில் ஒரு குரலும் மும்பையில் வேறு குரலும் கொடுக்கும் அரசியல் கூட்டணியல்ல
நம் மனசாட்சி.

மும்பைக்கு ஏன் இந்த நிலைமை?
——————————–

வெள்ளையன் வெளியேறிய பின்னும் அவன் தன் காலனி ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான சில கூறுகளை தன் காலனி ஆதிக்க நிலத்தில் விதைத்துச் செல்கிறான். அப்படி அவன் விதைத்த விளைநிலம் மும்பை.
நெய்தல் நில மக்களுக்குச் சொந்தமான 7 தீவுகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மும்பை நிலம் நேரடியாக மராத்திய மராட்டக்களின் ஆட்சியில் இருந்தக் காலங்கள் குறைவு.
பார்சி இனத்தவர்கள் இந்த நகரத்தின் அருகிலிருக்கும் குஜராத் கடற்கரையோரம் வந்திறங்கி இங்கு குடியேறியவர்கள். பார்சிகள் எந்த மக்களுடனும் வம்புக்கோ அடிதடிக்கோ போவதில்லை. இந்த மாநகரத்தின் வளர்ச்சியில் பெரும்பங்கு அவர்களுடையது என்பதை
மறுப்பதற்கில்லை.
அண்டை மாநிலமான குஜராத்தி மக்கள் பெரும்பாலும் வணிகத்தை நம்பியே வாழ்பவர்கள். வணிகத்தில் திறமை மிக்கவர்கள்.
ஐந்தைப் பத்தாக்கும் வல்லமை இன்றுவரை அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அவர்களுக்கான வணிகச்சந்தையாக மிகவும் அருகில் இருக்கும் மும்பை நகரம் அமைந்தது.
ஆங்கிலேயர் காலத்திலிருந்தே மும்பையில் பெருகிய நூற்பாலைகள் பலருக்கு வேலை வாய்ப்பைக் கொடுத்தது. தமிழகத்திலிருந்து பலர் மும்பைக்குக் குடிவந்தது இதனால் தான். அதுமட்டுமல்ல…
மராத்திய மண்ணில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தியவை இந்த நூற்பாலைகள் தான்.
மராத்திய மண்ணில் தோன்றிய தலித் இலக்கியமாகட்டும், தலித் இயக்கங்கள் ஆகட்டும் ,மகர்களின் வாழ்க்கையில் இந்த நூற்பாலைகள் எப்படியான மாற்றங்களை ஏற்படுத்தின என்பதைப் பதிவு செய்திருக்கின்றன. ஒரு பொருளாதர வளர்ச்சி தலித் இலக்கிய, இயக்க வளர்ச்சியின் வலிமையான காரணமாக இருந்தது என்பதை மார்க்சிய பார்வை என்று முத்திரைக் குத்தி எவரும் புறந்தள்ளிவிட முடியாது.
இது பதிவு செய்யப்பட்ட வரலாறு.
ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உழைக்கும் வர்க்கம் தொழிலாளர்கள் என்ற முகவரியைக் கொடுத்த இதே நூற்பாலைகளில் எழுந்த தொழிலாளர்கள் சங்கங்கள், வேலைநிறுத்தங்கள்.. தொழிலாளர்சங்கங்களுக்குள் நடந்தப் போட்டிகள், காட்டிக்கொடுத்தல்,
அடி, தடி, கொலை.. விளைவு.. 99.5% நூற்பாலைகள் நிரந்தரமாக மூடப்பட்டன. தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான
ஓய்வூதிய சலுகைகளும் கிடைக்கவில்லை.
இக்கருத்தை ஃப்ரண்ட்லைன் 2003ல் எழுதியது
(Ever since the 1970s, when the city’s manufacturing sector began a steady decline, the bulk of Mumbai’s population lost the ability to earn a steady income. Thereafter the quality of life declined drastically.)

மொத்தத்தில் மும்பையில் மராத்திய மக்கள் , நூற்பாலைகளை நம்பியிருந்த ஆயிரமாயிரம் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டன.
ஏன் தன் மக்களுக்கு இந்த நிலைமை என்பதையும் அதற்கான காரண காரியங்களையும் ஆய்ந்து தீர்வுகளுடன் இந்த மக்களுக்கு வழிகாட்டும் ஓர் அரசியல் கட்சி, தலைவர் இல்லை .இதெல்லாம் வெறும் கனவாக மட்டுமே இருக்கிறது. தங்கள் தலைநகரின் நூற்பாலைகள் மூடப்பட்ட போதும், சிறுசிறு தொழிற்சாலைகள் மூடப்பட்ட போதும் இங்கே அதற்கான போரட்டமோ
எழுச்சியோ வளர்த்தெடுக்கப்படவில்லை. அதன் பின் நூற்பாலைகள் இருந்த இடங்களில், தொழிற்சாலைகள் இருந்த இடங்களில்
ரியல் எஸ்டேட் தன் கறுப்புப்பணத்தை வீசிப்பிடித்தது. அந்தக் கறுப்பு பணத்தில் தங்கள் கணக்கில் எத்தனை சதவீதம் வாங்கிக் கொள்ளலாம் என்று தான் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் போட்டிப் போட்டுக் கொண்டார்களே தவிர இதன் விளைவுகள் தங்கள் மக்களின், நடுத்தர மக்களின் வாழ்க்கையை எவ்வளவு பாதிக்கும் என்பதைப் பற்றி யோசிக்கவே இல்லை.

கண்கெட்டப் பிறகு சூரிய நம்ஸ்காரம் என்பது போல இன்று ஒவ்வொரு அடி நிலமும் விலைப் பேசப்பட்டு விற்கப்பட்டு அவரவர்க்கான தொகையும் வாங்கிய பிறகு “அய்யய்யோ எங்க ஊரிலே எங்க மக்களுக்கு ஒரடி நிலம் சொந்தமில்லையா” என்று அலறுகிறார்கள்.

இந்தியா எங்கள் நாடு. இந்த நாட்டில் யாரும் எங்கும் தங்கள் விருப்பம் போல வாழலாம். சொத்துக்கள் வாங்கலாம், விற்கலாம்.. (காஸ்மீரைத்தவிர!) கேட்பதற்கும் சொல்வதற்கும் நன்றாகவே இருக்கிறது. இதை மும்பையில் இருந்து சொல்பவர்கள் அனைவரும்
அவரவர் மாநிலத்தின் தலைநகரம் ஒரு மும்பையைப் போலவும் அதில் அவர்கள் மும்பை மராத்தியர்கள் போலவும் இருப்பதை
ஏற்றுக்கொள்வார்களா என்பதை ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

இதற்கிடையில் ராஜ்தாக்கரே பிறமாநிலத்தவர்களுக்கு மராத்திய மொழி கற்பிக்கும் முறையை அறிவித்து குறிப்பிட்ட சில பகுதிகளில் வகுப்புகள் ஆரம்பிக்க இருப்பதை அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. மராத்தியர்களும் தாங்கள் சில துறைகளில் பின் தங்கி இருப்பதற்கான காரணங்களை ஆராய்ந்து தங்களை எதிர்காலத்தின் முன்னேறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தகுதியுடையவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

எது எப்படியோ ராஜ்தாக்கரேவின் அரசியல் சண்டைக்காட்சி முடிந்தப் பின் சில உண்மையான காயங்கள் வெளியில் தெரிந்தன.


puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை