ராஜா வீடும்…கன்றுக்குட்டியும்!

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

சாய்



ஒரு ஊரில் ஒரு ராஜா. அவருக்கு ஒரே ஒரு ராணி. தினசரி காலையில் தூங்கியெழுந்தது முகம் கழுவுவதற்கு முன், முதல் வேலையாக மாங்கல்யத்தை கண்ணில் ஒற்றிக் கொள்ளத் தவறாத பதிவிரதை. சாந்த சுபாவம். கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வராத அடிமைப் பெண்ணைக் கூட ‘சனியனே” என்ற அளவோடு மட்டும் கடிந்துக் கொள்கிற சாத்வீகியான , அந்த ராணி தான் இப்படி வெடித்தாள் :
” பெத்த பிள்ளையோட ரத்தத்தையே குடிச்சிட்டு எப்படி உங்களாலே இப்படி சாதாரணமாயிருக்க முடியுது ? எந்த முகத்தோட என்னை பாக்க வரீங்க. ? பெத்த வயிறு நெனச்சு நெனச்சி குமுறுதுங்க ”
சவுக்கடி . ராஜாவுக்கு பேச்செழவில்லை.
கழுத்தில் கிடக்கும் முத்து மாலையில் கோர்த்திருக்கும் முத்துப் பரல்களை கை விரல்களால் நிமிண்டியபடி மவுனியாய் பார்வையைத் தாழ்த்தி அமர்ந்திருக்கிறாரென்றால்,
அவர் செய்து விட்டு வந்துள்ள காரியம் அப்படி !

இருப்புக் கொள்ளாமல் எழுந்தார். ராஜா, ” என்னம்மா.. இது. எனக்கும் மாத்திரம் துக்கமில்லையா சொல். என்ன செய்ய. நாட்டோட ராஜா. குடும்பத்தை விட எனக்கு நீதியும் நியாயமும் தான் முக்கியமாய் இருந்தாகணுமில்லையா? ” – என்றவர், படுக்கையில் முதுகை காண்பித்து படுத்திருந்த ராணியின் தலையை வருடிட மெல்ல நகர்ந்தார் , சமாதானம் செய்யும் முயற்சியாக.

அனிச்சையாக உணர்ந்தோ அல்லது தன் கணவர் இதுமாதிரி சந்தர்பங்களில் இப்படியெல்லாம் செய்வார் என்கிற அனுபவ அறிவாலோ சட்டென தலையை முன்பக்கமாக இழுத்து கொண்ட ராணி , அதே வேகத்தில் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். சமாதானமாக விரும்பாதது அவளது வார்த்தைகளிலும் வெளிப்பட்டது :
” என்ன பொடலங்காய் நீதி நியாயம் ! எதோ ஒரு பசு மாடு பிராது கொடுத்ததென்றதுக்காக பெத்த மகனையே இழுத்துட்டு போய் தேர் சக்கரத்திலே நசுக்கி கொன்னுட்டு வர்ரது தான் ஒரு தகப்பனோட நியாயமா? ச்சே ”
சுருக்கென்றது ராஜாவுக்கு. உஷ்ணமானார். ” பேச்சு வரம்பு மீறுது. நல்லாயில்லே. ஆமா.. ”
எதிர் தரப்பிலிருந்தோ பதில் சொல் வரவில்லை. விசும்பல் கூட நின்று விட்டிருந்தது. அலட்சியம் தொனிப்பதாக தோன்றிய அந்த மவுனத்தை நீட்டிக்க விரும்பாமல் ராஜா , உடனடியாக உடைத்தார்.
” கேட்டுக்கோ.. என்னைப் பொருத்த வரைக்கும், எல்லா உயிர்களும் சரிசமானம் தான். மாடோ, மகனோ யார் செஞ்சாலும் செஞ்சாலும் தப்பு தப்பு தான். தண்டனை தான். ”
” ச்சு. இதெல்லாம் பூசிமொழுகிற வேலை. ஆட்டிறைச்சி வறுவலும், கோழிக் குழம்பும் இல்லாம நமக்கு ஒரு நாள் சோறிறங்கி இருக்கா; சுண்ட காய்ச்சின பசும் பால் குடிக்காம தூங்குறோமா? இதெல்லாமென்ன நம்ம அரண்மனை தோட்டத்திலே செடி கொடியிலே விளைகிறவைகளா ! பிறகெதுக்குங்க வறட்டு வேதாந்தம். மனுஜாளும் பிராணிகளும் ஒன்னுன்னு? ”
” இது விதண்டாவாதம். சிறுபிள்ளைத்தனமாக பேச்சு ”
மேற்கொண்டு பேச்சு வளர்க்க விரும்பாத ராணி , ராஜாவை தவிர்ப்பதற்காக படுக்கையிலிருந்து எழுந்து சாளரம் நோக்கி நடந்தாள்.
ராஜாவின் குரல் மட்டும் அவளைத் தொடர்ந்தது. அதில் கண்டிப்பு தொனித்தது.

” பொறுப்பில்லாம கண்டமேனிக்குத் தேரை ஓட்டி, ஒருபாவமும் அறியாத கன்னுக்குட்டியை அநியாயமாய் நம்ம மகன் கொன்னது மன்னிக்க முடியாத குற்றம்.. நாட்டோட தலைவனாய் அந்த பசுமாட்டோட புத்திர சோகத்தை பகிர்ந்து கிட்டு ராஷ நீதியை காப்பாத்த நான் செஞ்சது முழுக்க முழுக்க சரியே ”
” சரி. அப்போ.. அந்த மகனோட தாயோடப் புத்திர சோகத்துக்கு இந்த தலைவர் என்ன செய்ய போறார் ? ” –
மகனை இழந்து தவிக்கும் அந்த தாய் உள்ளத்தின் குமுறலை உணர்ந்திருந்த தகப்பன் இடது கை விரல்களால் மீசையை மெல்லிசாக இழுத்து வருடியபடி அமைதி காத்திருந்தான். அவளோ கொட்டித் தீர்த்தாள்:
” பசு மாடே மெனக்கெட்டு அரண்மனையை தேடி வந்து மணியடிச்சி பிராது கொடுக்க, நீங்களும் ராஷ நீதியை பரிபாலனம் செஞ்சிட்டீங்க. சரி, அப்படியே வெச்சிகிட்டாலும், உங்க மகனை அதே தேர் சக்கரத்திலே நசுக்கி கொன்னு நீங்க நீதியை நிலை நாட்டினது அந்த மாட்டுக்கு தெரியப் போகுதா, இல்லே அப்படி கொன்னதினாலே அதுக்காவது பிரயோஷனம் இருக்கா?
செத்துப் போன அந்தக் கண்ணுகுட்டிக்கு ஈடாய் பத்து கறவை மாடுகளை இனாமாய் கொடுத்திருந்தால் மாட்டோட எஷமானன் கும்பிடு போட்டு சந்தோஜமாய் வாங்கிட்டு போயிருப்பானே ! இப்படி யாருக்குமே பயனளிக்காம நீங்க செஞ்சிட்டு வந்திருக்கிறதுக்கு பேரு தியாகமில்லை. கடைந்தெடுத்த … ” .
வாக்கியத்தை முடிக்க விரும்பாத ராணி ” உங்க யாரையும் பாக்கவே பிடிக்கவில்லை. என்னோட அம்மா வீட்டுக்கு போறேன்…” என்றபடி விருட்டென தனது பிரத்யேக அறைக்குள் சென்று படீரென கதவைத் தாழிட்டுக் கொள்ள, செய்வதறியாது ராஜா விக்கித்து நின்றார்.

***********
இளவரசனின் சயன அறை. “அப்பா…. அப்பா.. வேண்டாம்ப்பா.. என்ன விட்டுடுப்பா.”- அவனது மஞ்சத்தில் ரத்தக்களறியாய் கன்றுக்குட்டி உருண்டு புரண்டு கதறிக் கொண்டிருந்தது. அச்சு அசலாய் இளவரசனின் குரல்.

திடுக்கிட்டெழுந்த ராஜாவுக்கு உடம்பிலும் உள்ளத்திலும் ஏற்பட்ட உதறல் அவ்வளவு சுலபமாய் அடங்கிடவில்லை. அபூர்வமாக வரும் தூக்கமும் இப்படி இம்சிக்கவே வருவதாக இருந்தது. தனிமை தாளித்தெடுத்தது. மனதை அரசனும் தகப்பனுமாக மாறி மாறி பிழிந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள். நிஷங்களை சந்திக்கும் பலம் வற்றி விட்டிருந்தது.
*************
மனிதச் சந்தடிகளைக் கூட கேட்க விருப்பமில்லாதவராக முடங்கி கிட்டத்தட்ட ஒரு வாரகாலமாக ராஷசபைக்கு வராமலிருந்து ராஜா, இன்றைக்கு தான் வந்திருக்கிறார்.
அவர் தான் சில நாட்கள் வராதிருந்தாரே தவிர, ராஜா குடும்பத்திற்கு வேண்டப்பட்டவர்கள், அமைச்சரவைக் குழுவினர், ராணுவ அதிகாரிகள், அவர்களின் சிபாரிசுடன் அனுமதி சீட்டு பெற்ற பிரஷைகள் என்று மற்றவர்கள் சபைக்கு ஆஷராவது தவறவில்லை. ஊர்க் கதைகள் பேசியும், இடையிடையே ராஜா சபைக்கு வராமலிருப்பதற்கு ஆளாளுக்கு காரணங்கள் கூறியும் கலைந்தும் கூடியும் வந்தனர்.
ஒரு கட்டத்தில், ராஜாவுடன் கோபித்துக் கொண்டு மகாராணி தனது தாய் வீட்டுக்கு போய் விட்டாளென்றும் ; குற்ற உணர்ச்சியில் குமைந்து ராஜா உடல் நலம் மோசமாக பாதிக்கப்பட்டு தீவிர வைத்திய சிகிச்சையில் இருக்கிறாரென்றும் பேச்சுகள் கிளம்பிடவே, ராஜா உடனடியாக சபைக்கு வர வேண்டியதாயிற்று.

அமைதியின்றி அரியாசனத்தில் அமர்ந்திருந்தார் ராஜா. சபையோர் எல்லாரும் சொல்லி வைத்தாற் போல் அவரது நீதி பரிபாலனத்தை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
ராஜாவுக்கோ அவர்கள் உள்ளுக்குள் நமட்டுச் சிரிப்புச் சிரிப்பதாகவே பட்டது. சபையின் பேச்சை திசை மாற்ற விரும்பி, ” நாட்டின் உணவு தானிய கையிருப்பு நிலைமை எப்படியிருக்கு? ” என்று ஆரம்பித்த போது தான், எந்த சத்தத்தை கேட்பதற்கு அஞ்சியிருந்தாரோ, அந்த ஆராய்ச்சி மணியின் ஓசை வாயிலில் இருந்து வந்தது. அடிவயிற்றில் பீதி கவ்வியது ராஜாவுக்கு. ஆயிரமாயிரம் பசுமாடுகள் ஒரே சமயத்தில் கதறுவது போலிருந்தது.

சுதாரிப்பதற்குள், சபைக்கு ஓட்டமும் நடையுமாக வந்து வணங்கினான் வாயிற் காப்போன் .
” மணியடித்தது யார்? ” என ராஜா வினவினார், மெல்லியப் பதற்றத்துடன்.
” ஒரு பெண், அரசே ”
” பெண்ணா ! என்ன பிரச்னையாம் ? உள்ளே வரச் சொல் ”
” மன்னிக்கவும் மன்னா. அவள் உள்ளே வர விரும்பவில்லையாம்”
” பிறகெப்படி ? ”
” தங்களை நேரில் பார்க்க விருப்பமில்லை எனக் கூறி எழுத்து மூலமான பிராது மட்டும் கொடுத்தாள். ஒரு அற்ப காரணத்துக்காக கொல்லப்பட்ட தனது மகனின் சாவுக்கு நீதி வழங்க வேண்டுமென தங்களிடம் சொல்லச் சொல்லி விட்டு போய் விட்டாள். இந்தாருங்கள் அவளின் பிராது ”
சிரம் தாழ்த்தி வணங்கித் தந்த பிராதை வாங்கிய ராஜாவின் கைகளில் லேசான நடுக்கம் நெளிந்ததை அவன் கவனித்தானோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் “அரசே. அந்த பெண் அசப்பில் நமது மகாராணியார் சாயலில் இருந்தாள் ” என்று சன்னமாகச் சொல்ல நினைத்தான். அதற்குள் உடம்பெல்லாம் வேர்க்க, அரியாசனத்திலிருந்து ராஜா சரியத் தொடங்கி விட்டார்.

—————————————

( முழுக்க முழுக்க புனைக் கதையான இதன் நோக்கம், முள்கிரீடங்களுக்குள் அமுங்கி கிடக்கும் ‘தகப்பன்’களையும், ‘கணவன்’களையும் காண விழையும் முயற்சியே அன்றி , எந்த மேன்மையையும் மட்டம் தட்டுவதல்ல.)

vee.raj@rediffmail.com

Series Navigation