ராகு கேது ரங்கசாமி – 2

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/2/

குளத்துப் பக்கம் சபேசன் கடை பரப்பியிருந்தான். சுலோகப் புத்தகங்கள், சந்தியாவந்தனம், திருப்பாவை, திருவெம்பாவை, வேதவாரியாய் அமாவாஸ்யை தர்ப்பணம், சனிப்பெயர்ச்சி, நியூமராலஜி, வாஸ்து சாஸ்திரம், கனவுகளுக்குப் பலன், மோட்டார் ரீவைண்டிங் கண்ணதாசன் தத்துவப் பாடல்கள், கண்ணதாசன் காதல் பாடல்கள், பகவத் கீதை பாகங்கள், திருக்குறள் உள்ளங்கை சைஸ் பதிப்பு…

புத்தகம் வாங்குகிறவர்களை விட வேடிக்கை பார்க்கிற கூட்டமே அதிகம். ஒருவன் வந்து வைரமுத்துவோட ‘இதுவரை நான் ‘ இருக்கா ? – என்று கேட்டான். நீங்க சொன்னீங்கன்னா வாங்கிண்டு வந்து தரேன், என்றான் சபேசன். என்ன அட்வான்சாக் கொஞ்சம் பணங் குடுத்துறணும், போனதடவை ஒருத்தர் ‘கோளறு திருப்பதிகம் ‘ வாங்கிண்டு வரச் சொல்லிட்டு அவரே வர்ல…

கண்ணதாசன் புத்தகங்களை நிறையக் கேட்கிறார்கள். கோவில் வாசல் என்றால் அர்த்தமுள்ள இந்துமதம், நன்றாக விற்கும். பெரிய படங்கள் போட்ட கெட்ட புஸ்தகங்கள் ஜாடையாய்க் கேட்பார்கள். காதில் அந்த சமிக்ஞையைக் கேட்கிறபோதே நடுங்கி விடும். வழுக்கைத் தலையும், வாக்கிங் ஸ்டிக்குமா… படிக்க புஸ்தகம் கேட்கிறதைப் பாரு.

பழைய சினிமாப் பாடல்களை நோட்டம் பார்த்தபடியே ஒருவன் வேட்டி கட்டிக் கொண்டபோது அவனது பர்ஸ் இடுப்பு முடியில் இருந்து நழுவி சபேசனின் பக்கமாய் விழுந்தது. மூட்டைப்பூச்சியாட்டம் முதுகு பெருத்த பர்ஸ். ட்டியெம்மெஸ், சீர்காழி, யேசுதாஸ் என்று பார்த்துக் கொண்டே வந்தவன், எதையும் எடுக்காமல், பர்ஸையும் எடுக்காமல் திரும்பிப் போக ஆரம்பித்தான்.

‘அண்ணா ? ‘ என்று புன்னகையுடன் கூப்பிட்டான் சபேசன். ‘இந்தாங்கோ. வேஷ்டி கட்டிக்கறேன் பேர்வழின்னு பர்ஸைப் போட்டுட்டுப் போறீள்ங்காணும்!… ‘

‘அடடா, அப்பிடியா ? ‘ என்று திரும்ப அவன் வாங்கிக் கொண்டு, பர்ஸைத் திறந்து பார்த்தான். அதில் ஐந்நுாறு, நுாறு, ஐம்பது என்று நிறைய நோட்டுக்கள் இருந்தன. இத்தனை பணமா, என்று சபேசனுக்குத் திகைப்பாய் இருந்தது. ‘நான் மட்டும் பாத்திருக்காட்டி ?… ‘ என்று கேட்டான்.

‘இன்னிக்கு நான் முழிச்ச முழி நல்ல முழி. அதான் பணம் தப்பிச்சது… உங்களை மாதிரி நாலு நல்ல மனுஷங்க இருக்கறதுனாலதான் சாமி நாட்ல மழையே பெய்யுது! சாமி செஞ்சது பெரிய உபகாரம், இந்தாங்க ‘ என்று ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டினான் அவன்.

‘என்னது ?… ஐயோ வேணாண்ணா. உங்க அன்பே போதும்! ‘

‘இந்தக்காலத்துல காசு ஆசை இல்லாத இப்பிடியொரு மனுஷர்! ‘ என்று அவன் ஆச்சரியப் பட்டான். ‘சாமி, காசா வாங்க மாட்டாங்க. அப்ப சரி, வாங்க நல்ல காபியா ஒரு காபி சாப்பிடுவோம்! ‘

காபி என்றதும் மனம் சபலப்பட்டது. இப்பிடி வருந்தி அவனை யாரும் அழைத்ததில்லை.. அவனுக்கு சந்தோஷமாய் இருந்தது. பக்கத்தில் ராசிக்கல் மோதிரம் கடைபோட்டிருந்த சீனுவிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு சபேசன் தெருவில் இறங்கி நடந்தான்.

‘ஸ்வாமி நாமதேயம் என்னவோ ? ‘

‘சபேசன். நீங்க ? ‘

‘ரங்கசாமி. ‘ சபேசன் தலையாட்டிவிட்டு மெல்ல எதோ பாடியபடியே கூட வந்தான். ‘நல்லாப் பாடறீங்களே, பாடம் உண்டோ ? ‘ – சபேசனுக்கு லேசான வெட்கம். ‘ஐய கேள்வி ஞானம்தான்! ‘

‘சாமி ஒரு நிமிஷம்… ‘ என்று நின்றான் ரங்கசாமி. அது ஒரு லாட்டரிச் சீட்டுக்கடை. ‘இன்னிக்கு நல்ல நாளு. நான் சாமிய அறிமுகம் பண்ணிக்கிட்ட நாளு இல்லியா ? சாமி கையால ஒரு லாட்டரிச் சீட்டு எடுத்துக் குடுங்க. அதிர்ஷ்டம் எப்பிடி இருக்குன்னு பாப்பம்… ‘

என்ன இவன், என்மேல் இத்தனை மதிப்பும் மரியாதையும் காட்டுகிறான்… என்று அவனுக்கு ஒருகணம் திகைப்பாய் இருந்தது. அதிர்ஷடத்துக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்… இதுவரை சபேசன் தன் அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்த்ததில்லை. ராசிக்கல் மோதிரம் போட்டதில்லை. இப்போது – எதிர்பாராமல் – ஒரு வாய்ப்பு! அட அதையும் பார்த்துட்டாப் போச்சு.

சட்டென்று அந்தக் கட்டிலிருந்து ஒரு சீட்டை உருவி நீட்டினான். ரங்கசாமி அந்த எண்ணைக் கூட்டிப் பார்த்தான் – ‘ஒத்தப்படை! ‘ என்றான் மகிழ்ச்சியாய். ‘பாப்பம். நாளை மறுநாள் குலுக்கல்! ‘

‘ஹா ஹா – ப்ரைஸ் விழுந்தா நம்மள மறந்துறாதீங்க! ‘

‘மறக்கறதா ?- என்ன சாமி பேசறீங்க ? அப்படியாப்பட்டவன் இல்ல நான். எனக்கு அதிர்ஷ்டம் வந்தா அது உங்க ரூபத்லதான் வரணும்… ஏறக்குறைய வந்தாச்சின்னு வெய்ங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு. பரிசு கிடைச்சா ஆளுக்குப் பப்பாதி! ‘

‘எல்லாரும் அப்டிச் சொல்றதுதான். ஆனா ப்ரைஸ் அடிச்சிட்டா ஆளே காணாமப் போயிருவாங்க! ‘

‘என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியாதில்லையா… போகப் போகப் புரிஞ்சுக்குவீங்கன்னு வெய்ங்க. அடுத்தவன் காசுக்கு ஆசைப்படறது, நம்பினவனைத் துரோகம் செய்யறது… இதெல்லாம் நமக்குப் பிடிக்காது… அப்டி நான் யோக்கியமா வாழறதுனாலதான், இன்னிக்கு சாமியப் பார்த்தேன், என் பணமும் திரும்பக் கெடைச்சது, இல்லீங்களா ? ‘

‘அது சரி, ‘ என ஒத்துக் கொண்டான் சபேசன். ஹோட்டலில் ஏ/சி அறைக்குள் நுழைந்தான் ரங்கசாமி. வெள்ளையும் சொள்ளையுமாய் அவன் போவது நன்றாய்த்தான் இருந்தது. அழுக்கு வேஷ்டி – அழுக்கு ஸ்லாக், என தானும் கூடப் போவது லஜ்ஜையாய் இருந்தது. ‘பரவால்ல வாங்க. உடையா முக்கியம் ? மனசுதான் முக்கியம் ‘ என்று அழைத்துப் போனான் ரங்கசாமி. ‘என்ன சாப்பிடறீங்க ? ‘

‘ஐய காபி போதும்… அதேகூட… நீங்க வற்புறுத்தினதுனால… ‘

‘ஆங். நல்லவேளை ஞாபகம் வந்தது. சாமி நாரதகான சபாவுல யேசுதாஸ் கச்சேரி நாளைக்கு. ஆய்ர ரூபா டிக்கெட். வேணுமா ? ‘

‘ஐய எனக்கு அதுக்கெல்லாம் ஐவேஜ் இல்லை… ‘

‘ஹா ஹா ‘ என்று சிரித்தான் ரங்கசாமி. ‘இந்தாங்க ‘ என்று சட்டென்று மேல்ப்பையில் இருந்து டிக்கெட்டை எடுத்து நீட்டினான். கலைவாணி ஃபைன் ஆர்ட்ஸ். ஆயிரம் ரூபாய் டிக்கெட். ‘போனாலும் போகாட்டியும் நான் டிக்கெட் வாங்கியாகணும். வேஸ்டாத்தானே போவுது. நீங்களாவது அனுபவியுங்களேன்… ‘

நம்பவே முடியவில்லை. ஆயிரம் ரூபாய். முன் வரிசை! யேசுதாஸ்! இது அதிர்ஷ்டம் அல்லாமல் வேறென்னவாக்கும் ?

‘இல்ல பரவால்ல… நீங்க வேற யார்க்கானும்… ‘ எனத் தயங்கினான்.

‘ஐய நீங்க போகலைன்னா இது வீணாப் போகும். போய்ப் பார்த்திட்டு வாங்க ‘ என்று கையில் தந்தான்.

‘தேங்ஸ் ‘ என நெஞ்சு சிலிர்க்க வாங்கிக் கொண்டான்.

பக்கவாத்திய விரல் அசைவுகூடத் துல்லியமாய்த் தெரியும் அருகாமை. மயில்க்கண் வேஷ்டி. மஸ்லின் ஜிப்பா. சபேசன் அப்பவே கச்சேரிக்குத் தயார்!

இரண்டு நாளில் ரங்கசாமி சபேசனைப் பரபரப்புடன் வந்து சந்தித்தான். ‘சாமி நான் சொல்லலே ? உங்க முகத்ல முழிச்ச நேரம் நல்ல நேரம்! ‘

திடாரென்று அவன் தன்னை வீட்டிலேயே வந்து பார்ப்பான் என்று சபேசன் எதிர்பார்க்கவில்லை. அசட்டுச் சிரிப்புடன் அவனை உள்ளேவிடாத பாவனையில் வீட்டு வாசலை மறித்து நின்றபடி ‘என்னாச்சிண்ணா ? ‘ என்று சிரித்தான்.

‘ஒரு நல்ல சேதி… உள்ள கூப்பிட மாட்டாங்களா ? ‘ என்று சிரித்தான் அவன்.

‘சரி வாங்க ‘ என்று இவன் வழி விட்டான்.

‘நீங்க வாங்கிக் குடுத்தீங்கல்ல லாட்ரிச் சீட்டு… அதுக்கு ஐந்நுாறு ரூவா பரிசு விழுந்திருக்கு! ‘

அவனால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. நமக்கா இத்தனை அதிர்ஷ்டக் கை! – ஒருவேளை இவன் நினைக்கிறது நிஜம்தானா! ‘அடேடே, ரொம்ப சந்தோஷம் ‘ என்றான் சபேசன்.

‘இந்தாங்க. ‘

‘என்னது ? ‘

‘நான் பேசினபடி… 250! ‘

சபேசன் பதறிவிட்டான். ‘ஐய இருக்கட்டும். நான் சும்மா ஒரு பேச்சுக்கு… ‘ என இழுத்தான். அவன் சந்தோஷத்தில் திணறிக் கொண்டிருந்தான்.

‘நான் மனசாற நினைச்சதுதான் சாமி இது. உங்களுக்குத் தந்தா இனி மேலும் மேலும் எனக்குப் பெருகும்! அந்த ஈஸ்வரன் அள்ளியள்ளிக் குடுப்பான் எனக்கு. தயவுசெஞ்சு வாங்கிக்கணும் நீங்க ‘ என்று அழுத்தினான்.

‘இருங்க காபி சாப்பிடலாம்… கீதா ? ‘ என்று உள்ளே பார்த்துக் கூப்பிட்டான் சபேசன்.

‘தோ கொண்டு வரேம்ப்பா! ‘

‘என்ன சாமி, வீட்டைச் சுத்தியும் இப்டி பூச்சு பொட்டு அடைய விட்ருக்கீங்களே ? நாளைக்கு ஒரு ஆளை அனுப்பறேன். துப்புரவு பண்ணித் தருவான்… ‘

‘ஐயய்ய அதெல்லாம் ஒண்ணும் வேணாம். பரவால்ல. இருக்கட்டும். ‘

‘நல்லாச் சொன்னீங்க போங்க… சின்னப் பிள்ளைங்க இருக்கிற வீடில்ல. தோ பெரிம்மா வேற இருக்கு. இப்பிடிப் புதர் மண்ட விடக் கூடாது. நீங்க பேசாம இருங்க. காலைல ஆள் அனுப்பறேன். காபி ஏ ஒன். பாப்பா கைமணம்! ‘

‘நாம் போடலை. பாட்டி! ‘ என்றாள் கீதா.

அவன் புறப்பட்டுப் போனதும் பாட்டி வந்து சபேசனிடம் யார் என்ன என்று விசாரித்தாள். ‘பாத்தியா ? ‘ என்று 250 ரூபாயைக் காட்டினான் சபேசன்.

‘உனக்காவது பரிசு விழறதாவது… ‘ என்றாள் பாட்டி. அவனுக்கு ஆத்திரம் குப்பென்று உச்சிமண்டைக்கு ஏறியது. ‘அப்ப இதென்ன ? ‘ என்றான் பணத்தைக் காட்டி.

‘அட பரிசு விழுந்தா அது அவன் அதிர்ஷ்டம்டா. உன் அதிர்ஷ்டம் இல்லை, கேட்டியா ? ‘ என்றாள் பாட்டி. ‘என்னமோப்பா, அவன் பார்வை அத்தனை நல்லா இல்லை… ‘ என்றாள்.

‘என்னை ஒருத்தன் மதிச்சா உங்களுக்கெல்லாம் ஆகாதே! ‘ என்று சபேசன் கத்தினான். ‘நீங்களும் மதிக்கமாட்டேள். மதிக்கறாளையும் நம்ப மாட்டேள். அப்டித்தானே ? அன்னிக்கு யேசதாஸ் கச்சேரிக்கு எனக்கு டிக்கெட் கொடுத்தானே… அது இவன்தான்! ‘

‘இவன்ட்ட ஜாக்கிதரையா இருடாப்பா. அவ்ளதான். அவன் இங்க வரது எனக்குப் பிடிக்கலை. தெரியறதா ? ‘

பாட்டியின் பூஜைக்கு என்று கனகாம்பரைத்தை மட்டும் விட்டுவிட்டு தோட்டக்காரன் வந்து வீட்டைச் சுற்றியும் துப்புரவு செய்து கொடுத்தான். சபேசன் ஒரு பேச்சுக்கு – எவ்வளவு காசு தர வேண்டும், என்று கேட்டான். ‘ஐய அதெல்லாம் ஒரு பைசா வாங்கக்கூடாதுன்னு சொல்லி யனுப்பிச்சிருக்காங்க! ‘ என்று அவன் போய்விட்டான்.

ரங்கசாமியைப் பார்த்தால் அவனுக்கு எதுவும் தப்பாகப் படவில்லை. இவன் நம்மை என்ன ஏமாற்றப் போகிறான், என்றிருந்தது. பாட்டியும் இவளும் சேர்ந்து கொண்டால் பைத்தியம் என்று எனக்குப் பட்டம் கட்டுவதே வேலையாப் போச்சு. அன்னிக்கு நான் அவன் பர்சைக் காப்பாற்றிக் கொடுத்தேன். காபி வாங்கித் தந்தான் அவன் செலவில். லாட்டரியில் 500 விழுந்ததற்கும், அவனாகவே வந்து பாதி தந்தான். இப்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், அன்பின், மரியாதையின் அடிப்படையில் தோட்டத்தை சுத்தம் பண்ணித் தந்திருக்கிறான். என்னால் அவனுக்கு அதிர்ஷ்டம் என்கிறான். ஹா ஹா, அவனால்தான் எனக்கு அதிர்ஷ்டம்!

* * *

ஒரு வெள்ளிக் கிழமை மாலை. பாட்டியும் பாக்கியலெட்சுமியும் கோவிலுக்குப் போயிருந்தார்கள். ரமணியும் கீதாவும் கூட வீட்டில் இல்லை. ரங்கசாமி வந்தான் திடுதிப்பென்று. யாரும் வீட்டில் இல்லை என்பதே சபேசனுக்கு முதல் கட்டமாக ஆசுவாசமாய் இருந்தது. எத்தனை நல்ல மனிதன்! இவனைப் போய் சந்தேகப் படுகிறார்களே ? அவர்களிடம் எடுத்துச் சொல்ல அவனால் முடியாது. அவர்கள் ஒன்றை நினைத்துக் கொண்டால் அதையே பிசாசுப் பிடியாகப் பிடித்துக் கொள்வார்கள். அதை மாற்ற யாராலும் முடியாது. சனியன்கள்!

‘சாமி வீடு இப்ப நல்ல பார்வையா இருக்கு பாருங்க. ஒரு கோட்டிங் வெள்ளையடிச்சிட்டாங்கன்னாப் போதும். அம்சமா ஆயிரும் இல்லியா ? ‘

‘பார்ப்போம் ‘ என்று புன்னகைத்தான் சபேசன்.

‘நான் வேணா ஆள் சொல்லவா ? ‘

‘வேணாம் வேணாம் ‘ என்றான் அவசரமாய். எங்க வீட்டு வேதாளங்களை என்னால் கட்டிப் போட முடியாது. உனக்கு என்ன தெரியும், என நினைத்துக் கொண்டான்.

‘சாமி வெள்ளைக்கிழமையும் அதுவுமா… இந்தாங்க. கைல பிடிங்க. ‘

‘என்னது ? ‘

‘பிடிங்க சொல்றேன்! ‘

‘சொல்லுங்க! ‘ என்று சபேசன் சிரித்தான். அவன் அறிவாளியாக்கும்! எதோ சொல்லி பணம் தரப் போகிறான், என்று சட்டென்று அவனுக்கு உள்ளோட்டம் வந்து விட்டது. எதற்கு எனக்கு என்று தெரியாவிட்டாலும் அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

‘புதுசா ஒரு பிசினெஸ்!… நான் தொடங்கப் போற வேலைல அமோகமா முன்னுக்கு வரணும்னு என்னை ஆசிர்வாதம் பண்ணணும் நீங்க. இந்தாங்க. இதை வெச்சிக்கோங்க. ‘

‘பேஷா! ‘ என்று சபேசன் கைநீட்டி அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டான். ஒரு பை நிறையப் பணம்! திகட்டலாய் இருந்தது. ‘எது கிழக்கு ? கிழக்கப் பார்த்து வாங்கிக்கங்க… நல்ல நேரம்தானா ? ‘

‘இதுல எவ்ள இருக்கு ? ‘

‘பிரிச்சித்தான் பாருங்களேன்! ‘

சபேசன் பிரித்துப் பார்த்தான். நுாறும் அம்பதுமாய், கட்டுக் கட்டாய், கட்டுக் கட்டாய்ப் பணம்! லேசாய் நடுக்கம் கண்டது அவனுக்கு. ‘இதுல எவ்ள இருக்கு ? ‘

‘ஒரு லட்சம்! ‘

‘லட்சமா! ‘ என்று சபேசன் கிட்டத்தட்ட வாயைப் பிளந்தான். அத்தனை பணத்தை ஒருசேர அவன் பார்த்ததே யில்லை.

‘சாமி வெள்ளிக் கிழமை பணத்தை வாங்கலாம். கொடுக்கக் கூடாது… நான் சாமிகிட்ட தரதைப் பத்தி இல்ல. நீங்க தர வேணாம். வெச்சிக்கங்க. நாளைக்கு சனிக்கிழமை, தாங்க. சரிதானா ? ‘

‘ஐயோ இவ்ள பணத்தை எப்பிடி நான் தனியா வீட்ல வெச்சிக்கறது ? ‘ என்று சபேசன் பதறினான்.

‘பரவால்ல சாமி. நான் உங்களை நம்பறேன். பணம் உங்க கிட்டியே இருக்கட்டும்! ‘ ரங்கசாமி கிளம்பிப் போய்விட்டான்.

வீட்டில் யாரும் இல்லை. அவனும் தனியாக அவனிடம் ஒரு லட்ச ரூபாயும்! நடந்ததெல்லாம் அவனால் நம்பவே முடியவில்லை. நான் யார், என்ன இவன், என்னை நம்பி இத்தனை பணத்தை இவன் கொடுத்துவிட்டுப் போகிறான். அந்தக் தகுதி எனக்கு இருக்கிறதா ?

ஐயோ, இது இவளுக்கும் பாட்டிக்கும் தெரிந்தால் ?… என்னவாவது அச்சு பிச்சு என்று உளறுவார்கள். எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறான் என்மேல்! இந்தக் காலத்தில் இப்படியும் ஆட்கள். என் பணம் அவனிடம் இல்லை. அவன் பணத்தை என்னிடம் நம்பி தந்துவிட்டுப் போகிறான். இதில் நம்ம ரிஸ்க் என்ன இருக்கிறது ?… இந்தப் பணம் ஒருநாள் என்னிடம் இருந்தால் வியாபாரம் அமோகமாய்ப் பெருகும் என்பது அவன் நம்பிக்கை… (என்ன வியாபாரம் ? ஏதோவொரு வியாபாரம். அதைப்பற்றி நமக்கென்ன ?)

வீட்டில் மற்றவர்கள் வருவதற்குள், யாரும் பார்த்து விடாமல் பணத்தை எடுத்து வைக்க வேண்டும். பெட்டிக்குள் மயில்க்கண் வேஷ்டி பாச்சா உருண்டை மணத்துக் கிடந்தது. அதற்குள் பணத்தை வைத்து மூடினான். எவ்வளவு பணம்! எத்தனை கட்டுக்கள்! திரும்ப வேஷ்டி முடிச்சை அவிழ்த்து அந்தப் பணத்தைப் பார்த்தான். யப்பா! பயமாய் இருந்தது. மற்றவர்களிடம் சொல்லலாமா ? சொல்லி விடலாமா ?… என்று உள்ளே குரல் கிளம்பியது. ச் வேண்டாம். அவனிடம் காபி சாப்பிட்ட போதும், லாட்டரி டிக்கெட் வாங்கிய போதும் அவர்களுக்கு சுவாரஸ்யமாகப் படவில்லை. அட வந்து பரிசுப் பணத்தில் பாதி தந்தானே ? அப்போதாவது அவனை மதித்தார்களா ? முட்டாள் ஜென்மங்கள். ஏன் இப்பிடி இருக்கிறார்களோ தெரியவில்லை.

வாசலில் சத்தங் கேட்டது. சட்டென்று பெட்டியை மூடி எடுத்து வைத்தான். மனைவியும் பாட்டியும் கோவிலுக்குப் போய்விட்டு வந்தார்கள். அவன் உள்ளூற பரபரப்பாய் இருந்தான். காட்டிக் கொள்ளக் கூடாது என்று பயமாய் இருந்தது. அநியாயத்துக்கு வியர்த்தது. உடம்பு உதறியது. பயம். மடியில் கனம். பணம். ஏராளமாய்ப் பணம். ஒரு லட்சம்! பாக்கியம் நம்மாத்ல ஒரு லட்சம் இருக்குடி, உனக்குத் தெரியுமோ ? பயத்தை மீறி ஒரு பக்கம் சிரிப்பு. அடக்கிக் கொண்டான்.

பேச்சு வரவில்லை. இராத்திரி சாப்பிடக் கூப்பிட்டபோது பசியில்லை என்று மாடியில் படுத்துக் கொண்டான். பக்கத்தில் ரேடியோ. என்னவோ பாடல். எதுவும் மனசில் பதியவில்லை. கண்ணை மூடினான். துாங்க முடியவில்லை.

பணம். ஒரு லட்சம்! எவ்வளவு நம்பிக்கை இருந்தால் என்னிடமே கொடுத்து விட்டுப் போவான் ? நாளைக்கு அவன் வரும்போது, என்னிடம் எப்போ பணங் குடுத்தே, சாட்சி உண்டா… என்று கேட்டு விடலாமா!… சொன்னாப்ல அப்ப கூட நம்ம பக்கத்ல யாருமே கிடையாது!… சீச்சி அவன் எவ்வளவு நம்பிக்கை வைத்துத் தந்துவிட்டுப் போயிருக்கிறான். பணமா முக்கியம். அவனது நம்பிக்கை. அதைக் காப்பாற்ற வேண்டும். சாமி நான் உங்களை நம்பறேன்! – எத்தனை அழகாய்ச் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனான். பணத்தை ஆசிர்வாதம் பண்ணித் தாங்க. புது பிசினெஸ் பண்ணப் போறேன்… என்ன பிசினெஸ் தெரியவில்லை.

ரங்கசாமி. நீ நல்லா வருவே. நல்லவன் நீ. கண்டிப்பா முன்னுக்கு வருவே. உனக்கு ஒரு குறைவும் வராது.

திரும்ப கீழே போய் அவ்வளவு பணத்தையும் பார்க்க வேண்டும் போலிருந்தது. அடக்கிக் கொண்டான். திடுதிப்பென்று யாராவது கீழே பெட்டியைத் திறந்து பார்த்து விடுவார்களோ ?… என்று கூட யோசனை ஓடியது. இங்க வந்து பாருங்களேன்! – என்று ஆச்சர்யக் குரல் கூட வரலாம் என எதிர்பார்த்தான்.

மறுநாள் அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள ரங்கசாமி வரவில்லை.

தொ ட ரு ம்

storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்