ரஜினி – ‘ தமிழ் நாட்டின் குழப்பவாதி ‘

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

கோச்சா


ரஜினி – சினிமாவைப் பொறுத்தவரை வசூல் அள்ளித் தந்த படங்களைத் தந்தவர்.

1991-96-ல் ஜெயலலிதா செய்கைகளுக்கு வடிகாலாக இருந்த சில படங்களும் அதில் உண்டு.

96-ல் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அப்போது அவரும் தன் பங்கிற்கு அறிக்கை விட்டார்.

சன் டி.வி தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல், அந்த அறிக்கைக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் தர, ஏதோ அந்த எலெக்ஷன் முடிவே அவரால் தான் வந்தது என்ற எண்ணம் மீடியாவில் விதைக்கப்பட்டது.

ரஜினியும் போதையின் உச்சத்தில் அடுத்து வந்த தேர்தலில் ஆணவமாக கோயமுத்தூர் வெடி குண்டு நிகழ்ச்சி பற்றி , கராத்தே தியாகராஜனும், வெற்றிவேலும் இரு புறம் நிற்க, அறிக்கை விட்டார். அது புஷ்வாணம் ஆனாது தான் மிச்சம்.

அப்போதும் தி.மு.க விழித்துக் கொள்ளாமல், அவரது ஆதரவு கிடைத்தால் போதும், ஜெயித்து விடலாம் என மூப்பனாரை உதாசினப்படுத்தியது.

வந்தது அடுத்த சட்டசபைத் தேர்தல். 96-ல் ‘லூஸ் மோகன் ‘ சொன்னால் கூட தமிழக மக்கள் அதிமுக-விற்கு எதிராக ஓட்டுப் போடும் மன நிலையில் இருந்தார்கள் என்பதும், ரஜினி அறிக்கையும் தேர்தல் முடிவும் ‘குரங்கு உட்கார பனம் பழம் விழுந்த ‘ கதை என்பதும் மறந்து, ரஜினி சரணம் எனும் நிலையை திமுக எடுத்தது. தமிழக மக்கள் ரஜினி சொல்லிட்டா கண்மூடி செய்வார்கள் என திமுக நம்பியது அதன் அரசியல் அறிவைக் காண்பித்தது.

அதிமுக- தமாக இணைய திமுக தோல்வியைத் தழுவியது.

ரஜினியும் போயஸ் கார்டனுக்கு மலர்க் கொத்து அனுப்பினார்.

அதன் பின், காவிரிப் பிரச்சனை வந்தது.

எம்.எஸ்.உதயமூர்த்தி போன்றோர் பல காலமாக காவிரிப் பிரச்சனைக்கு உழைக்க, ரஜினி உண்ணாவிரதம் இருந்து ஒரு கருத்து சொன்னார் – நதிகளை இணைத்தால் காவிரிப் பிரச்சனைத் தீருமாம்.

சன் டி.வியும் மாய்ந்து மாய்ந்து நேரடி ஒளிபரப்பு செய்தது.

காமராஜர் போல் மேக்கப் போட்டு, காலை இட்லிக்கும் , இரவு தூள் விருந்துக்கும் இடைப்பட்ட நேரத்தில் வந்து காத்தாட மெரினாவில் அமர்ந்தார் ரஜினி.

போலாமா வேண்டாமா என எல்லோரும் நினைத்த போது, திமுக-வைச் சேர்ந்த ராதிகா-சரத்-நெப்போலியன் வர சன் டி.வில் பார்த்த மற்ற நட்சத்திரங்களும் வர ஆரம்பித்தனர்.

இவரும் கவர்னரிடம் போய் மனுக் கொடுத்தார். தான் நதிகளை இணைக்க ஒரு கோடி தருவதாகச் சொன்னார்.

நாட்கள் ஓடின-

இருகோடுகள் தத்துவம் போல், நதி நீர் இணைப்பு எனும் பெரிய பிரச்சனையை ரஜினி கிளரி விட்டு காவிரி பிரச்சனையை சின்னக் கோடாக்கினார். என்னே சாதுர்யம்..!!!!

அரசியல் களத்தில் காட்சிகள் மாறின…

பா.ம.க-வை எதிர்ப்பதாக ரஜினி மாபெரும் அறிக்கை..

ஏன்… ?

1. பா.ம.க- 20 ,30 ,50 வருடம் வளர்ந்த மரங்களை வெட்டியதாலா… ?

2. தாழ்த்தப்பட்டவர்களைத் தாக்குவதாலா… ?

3. வன்முறைக் கட்சியாக வளர்வதாலா.. ?

4. ஜாதிய உணர்வைத் தூண்டுவதாலா.. ?

ம்ஹீம்… இவர் பாபா-வை ஓட விடவில்லையாம்…!!!

அடத் தேவுடா…

அப்ப 96-கூட மக்கள் ஜெயலலிதாவால் படும் கஷ்டம் பார்த்து அல்ல .. தனது தனிப்பட்ட ஈகோ-வை தூண்டியதால் தான் போல்…!

இதற்கு சாக்காக, பா.ஜ.க- தான் தேசிய நதி நீர் பற்றித் தேர்தல் அறிக்கையில் சொல்கிறதாம்.

அப்ப, அடுத்த நாள் கருணாநிதி நதி நீர் இணைப்பு பற்றி சொன்னவுடன் தனது நிலைப் பற்றி என்ன முடிவெடுத்தார்…. ? இந்த ரஜினி..!

நல்ல வேளை ஜெயலலிதாவுக்கு மான ரோசம் இருந்தது. ரஜினி படம் போட்டு அதிமுக வோட்டு வேட்டை ஆடத் தேவையில்லை என நிலை எடுத்தார். தமிழ் தலைவர்கள் ஜெயலலிதாவிடமிருந்து இதை கற்றுக் கொண்டால் நல்லது.

ஐயா ஹிஸ் மாஸ்டர் வாய்ஸ் ரஜினியே…!,

இப்போது பிரச்சனை,

காவிரி நதி நீர் பங்கீடு பற்றி…! உங்களுக்கு ராமதாஸிக்கும் உள்ள தனிப்பட்ட விரோதம் பற்றி அல்ல..!!

இன்னைக்கு ஆரம்பித்தால் கூட பல வருடம் ஆகும் நதிகள் இணைக்க .. அது வரை காவிரி டெல்டா மக்கள் என்ன எலிக் கறித் திங்க வேண்டியது தானா… ?

ரஜினி அவர்களே… முடிந்தால் நல்லது பண்ணுங்கள் இல்லை உபத்திரவம் பண்ண வேண்டாம்..!

அதுவுமன்றி நீங்கள் சில கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்-

1. எந்த தமிழ் படங்களும் கர்நாடகாவில் திரையிட முடியாத நிலைக்கு உங்கள் தீர்வு என்ன… ?

அதில் உங்களுக்கு மட்டும் கிடைக்கும் விதிவிலக்கிற்கு காரணம் என்ன… ?

2. அரை குறை ஆடைகள், செயற்கை கதைகள், பெண்கள் இழிவு படுத்தும் காட்சியமைப்பு இல்லா ஒரு தழிழ் படம் தர முடியுமா… ?

3. திறமையுள்ள எத்தனை இளைஞர்களை உங்கள் துறையில் கண்டெடுத்து அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.. ?

4. காவிரிப் பிரச்சனையில் வரம்பு மீறூம் கர்நாடகாவிற்கு உங்கள் பதில் என்ன… ?

5. தமிழகம் சுற்றியுள்ள அனைத்து மாநிலங்களிலும் நீர் உள்ளதென்றால் தமிழகத்திற்கு கொஞ்சம் தந்து, இந்திய ஒருமைப் பாட்டை காப்பாத்த வேண்டியது தானே.. ? அதை விடுத்து தமிழகம் அழிய வேண்டியது தான் தண்ணீர் இன்றி எனும் மிரட்டல் அறிக்கைகள் ஏன்… ?

6. அட போகட்டும், கர்நாடகா தர வேண்டிய உரிமையைக் கொடுக்க நீங்கள் என்ன முயற்சி எடுத்தீர்கள்.. ?

40லட்சம் தமிழர்கள் கர்நாடாகாவில் வாழுகிறார்கள் என தமிழ் தலைவர் தொலைக்காட்சி மூலமே மிரட்டல் விடும் நீங்கள், பல லட்சம் கன்னடர்கள் தமிழகத்தில் உண்டு என்று கிருஷ்ணாவிற்கு உணர்த்தி தண்ணீர் விட வேண்டியது தானே… ?

இழப்பதற்கு தமிழகத்தை விட கன்னடர்களுக்குத் தான் அதிகம் உள்ளது. கர்நாடாகா வன்முறைப்பாதை கண்டால், தகவல் தொழில்நுட்பத்தைச் சார்ந்து வளரும் கர்நாடாகா அழிந்து விடும். அதனால் அவர்களின் பலவீனம் மறைத்து தமிழகத்தை மிரட்டும் உங்கள் செய்கைக்கு காரணம் என்ன… ?

வாய் நிறைய ‘என்னை வாழவைக்கும் தமிழக மக்களே.. ‘ என டயலாக் விட்டு , தமிழக மக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்.

எலிக்கறி தின்னும் நிலையில் உள்ள தஞ்சைத் தழிழன் நிலை காண தஞ்சையில் ஒரு சுற்றுப் பயணப் போனால் என்ன… ?

காவிரிப் பிரச்சனைகுத் தீர்வு கேட்டு அவனவன் கொந்தளித்தால், உண்ணாவிரத ஸ்டெண்ட் எடுத்த உங்களுக்கு, தேவையில்லா முக்கியத்துவம் கொடுத்த கருணாநிதிக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

வாரிசோ என்னவோ, ஒரு நல்ல வேட்பாளரான, தயாநிதி மாறனை எதிர்த்து நீங்கள் அதிமுக-விற்கு மத்திய சென்னையில் வாக்களிக்கப் போவதை நினைத்தால்,

‘சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிப்பு வருது .. ‘ எனும் பாட்டு தான் ஞாபகம் வருது. திமுக-வைப் பார்த்துத் தான் – உங்களைப் பார்த்து அல்ல.

ரஜினி மத்திய சென்னையில் ஜெயலலிதாவின் ‘இரட்டை இலை ‘ சின்னத்தில் – ஒரு வேளை பாலகங்கா சமாதானச் செம்மல் போல – வாக்களிப்பதை நினைத்துப் பார்த்தால், சூப்பரப்புபுபுபு….!!!!

இதில் வேறு பா.ம.க ஜெயிப்பது தோற்பது பற்றிக் கேட்டால், பூர்வ ஜென்ம புண்ணியம் பற்றிப் பிரசங்கம்.

அப்ப முந்தியத் தேர்தலில் தி.மு.க ஜெயித்தது பூர்வ புண்ணிய ஜென்மத்தில் பண்ணிய புண்ணியம் என்றால், அடுத்த தேர்தலில் திமுக தோற்றத்திற்கு அதே பூர்வ ஜென்மத்தில் செய்த பாவமா. ?

என்னா மேன் கன்பியூஸ் பண்றே…!

நீயும் குழம்பி உன் ரசிகரும் குழம்புறது போதாது என்று,

இப்ப மககளையுமா.. ?

தமிழக வாக்களர்களே, நீங்கள் களை எடுக்க வேண்டிய கட்சிகள் உண்டு. உண்மை தான்.

ஆனால், ரஜினி ஒரு நல்ல ஆக்ஷன் பட ஹீரோ தான்.

ஆனால் ஒரு சமூகப் பொறுப்பற்ற நடிகர். அதை அவருக்க உணர்த்துவது எல்லாவற்றிலும் தலையாயது.

அதனால் அவருக்கு ஒரு நல்ல பாடம் புகட்ட அவரின் கோரிக்கையை தயை தாட்சண்யமின்றி நிராகரியுங்கள்…!!

தமிழ் பட ஷீட்டிங்கிற்கும், தமிழர் அவல வாழ்க்கை நிஜத்திற்கும் வேறுபாடின்றி, சொடக்கு போட்டு சவால் விடும் நடிகர்.ரஜினிக்கு மயக்கம் தெளிய அதுவே நல்ல மருந்து.

அது தான் தமிழகத்திற்கும் நல்லது.

—-

பி.கு: தன்னை முழுதாய் அறிய மனிதன் ஞானியாக முயல்வான். இவரோ தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆன்மிகப் பாதைக்கு துடிக்கிறார். அதனால் அதுகண்டும் தடுமாற வேண்டாம்.

gocha2003@yahoo.com

Series Navigation

கோச்சா

கோச்சா