யு க ங் க ள்

This entry is part [part not set] of 33 in the series 20060714_Issue

ஐ. சாந்தன்


அரைக்கோளமாக வானம் கவிந்து கிடக்கிறது. வெள்ளைப் பிசிறில்லாத நீலம். பச்சைக் கம்பளத்தை மூடி, கம்பளத்தின் மேற்பரப்பு மஞ்சள்மயம். இப்படித் தெட்டத் தெளிவாக, பட்டைபட்டையாக நிறங்கள் சந்திக்குமா? ஓரளவுக்கு செயற்கைத்தன்மை வந்துவிட்டதாகக் கூட இருந்தது இந்த இயற்கைக்கு. பதினொருமணி வெயிலில் இந்த நிறவார்ப்புகள் இப்படியிருந்தன. கோளத்தின் விட்டப்பரப்பின் நடுவில் கறுப்பு நாடாவாகத் தெரு. அதில் கண்ணுக்கெட்டிய து¡ரத்திற்கு ஒரே ஒரு மனுக்கணமாகத் தான்தான் என்பதுகூட உறைக்காதிருந்தது.

இயந்திரம் சீரான லயத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு சைக்கிளிலும் சற்று அதிகப்படி வேகம், கிடங்குகளைத் தவிர்க்க வசதி.

சணல் பூவின் இதமான வாசம் துணையாக வந்து கொண்டிருந்தது. காற்று வழித்துணை வரும் நாயைப்போல கூட வரும். எங்கோ போகும். பிறகும் வரும், கொஞ்ச து¡ரம் மீண்டும் கூட. இப்படி இருந்தாற்போல ஒருக்கால் மக்கிப்புழுதியைச் சுழற்றி முகத்தில் வீசிவிட்டு ஓடியது. இடக்கையால் மூக்கையும் உதடுகளையும் துடைத்துக் கொண்டான். காற்றில்லாமல் வெயில் சுடும் போலிருந்தது. தலையைத் தொட்டுப் பார்த்தான். சுட்டது. ஹெல்மெட்டெல்லாம் மறந்தாயிற்று. அதொன்றுதான் இல்லாத குறை.

நீலமும் பச்சையும் சந்திக்கிற வெட்டவெளி விளிம்பில் பனைகள் நிரைகட்டி நின்றன. இடதுபக்கம் வெகுதொலைவில் அம்மன் கோவிலின் கோபுரமும் தேர்முட்டியும் பொம்மைகளாய்த் தெரிந்தன. ஒட்டித் தெரிந்த சில ஓட்டுக் கூரைகள்.

எதிரே இன்னொரு மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. இரண்டுபேர் வலுவேகமாக புழுதியையும் புகையையும் மணக்கவிட்டு, விறுக்கெனத் தோன்றி மறைந்தார்கள்.

தெருக்கரையில் பழைய காரொன்றின் கோது கறள்கட்டிக் கிடந்தது. இதை யாராவது இன்னும் ஒரமாகத் தள்ளினால் நல்லது. வலப்பக்கம் குட்டையில் இரண்டு கொக்குகள் மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்தன. இன்னும் நீர் இருக்கிறது, இந்த வெயிலிலும்.

‘புர்’ரென்று ஒரு பெரிய கருவண்டு சணல் பூக்காட்டிலிருந்து விடுபட்டு அவன் முகத்தில் மோதுவதுபோல் வந்து திரும்பியது. என்ன நினைத்ததோ, கூடவே கொஞ்ச து¡ரம் மிதந்து வந்து, இன்னொரு வட்டம்போட்டு விலகிப் போனது. ஒரு மடம். அதற்கடுத்தாற் போல வடக்கே ஒரு திட்டி. சாம்பல் மேடு. இன்னுஞ் சற்று தள்ளி சிலுவைப் பாத்தி.

தெரு இப்போது மேடாகியது. கொஞ்சது¡ரத்தில் மதகு. பாதையின் சரிபாதித் து¡ரத்திலிருக்கிற மதகு. பாலமென்றால் இன்னும் பொருத்தம். வலப்புறக் கைப்பிடிச் சுவருக்கப்பால் கட்டுகளும் அணைக்கதவுகளும் வரிசையாய்த் தெரிந்தன.

கடற்காகமொன்று பாலத்தைத் தாண்டிப் பறந்தது. குறுக்கே தெரியாத இன்னொரு கடற்பறவைக் கூட்டம் மிதப்பது போல. சணல் வயல்களைத் தாண்டி சற்றுத் து¡ரத்தில் சில மாடுகள். இந்த இடத்திலிருந்து வயற்காரர்கள் விதைக்காமல் விட்டிருந்தார்கள். கிடைச்சியும், புல்லும், வரம்புமாக இருந்தது. எதிர்ப்க்கத்தில் பனைகள் வளர்ந்துகொண்டு வந்தன.

இயந்திரத்தின் ரீங்காரத்தையும், காற்றின் சுருதியையும் மீறி இன்னுமொன்று புலனிற் தட்டியது. எச்சரிக்கையுற்றவனாய் அண்ணாந்து முன்னால் ஒரு வட்டம் பார்த்தான். அது காகம். என்றாலுங் னேட்டது. பின்னால் திரும்பி…

அற்தா! பின்னால் வலப்புறத்து வான் நடுவில் அது! அந்த அழுக்குப் பச்சைத் தும்பி. தன்னை நோக்கித்தான் வருவதுபோல, சத்தம் இப்போது தெளிவாயிருந்தது. எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டாயிற்று.

துளைக்கும்போது எப்படியிருக்கும். கடவுளே.

வேறு வழியில்லை. கைப்பிடியை பலமாகத் திருகினான். எதிரே பனங்கூடல் பெரிதாகி வந்தது. முகப்பில் இருந்த சிறு கோவில் தெளிவாகத் தெரிந்தது. இயந்திரத்துக்குப் போட்டியாய் இதயம். பின்னால் சத்தம் பலத்துக்கொண்டு வந்தது.


sayathurai@gmail.com
1987

Series Navigation